Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதயன் பணியாளர் மீதான தாக்குதலுக்கு கண்டனக் குரல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

uthayan.jpg

மாவை எம்.பி. குற்றச்சாட்டு

உதயன் மீதான தாக்குதல்கள் தொடர்கின்ற போதும் இதுவரை அரசு தாக்குதல் மேற்கொண்டவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் வடமராட்சிப் பகுதி விநியோகத்தர் நா.பிரதீபன் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவர் கொண்டு சென்ற உதயன் பத்திரிகை ஆயிரக்கணக்கில் அவர் சென்ற மோட்டார் சைக்கிளுடன் சேர்த்துத் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. அச்செயலை நாம் கண்டிக்கின்றோம். 

பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். குறிப்பாக தமிழ் பத்திரிகையாளர்கள் தொடர்ந்தும் தாக்கப்படுகின்றனர். அச்சுறுத்தப்படுகின்றனர். ஆண்டுதோறும் மாதம் தோறும் உதயன் மற்றும் சுடரொளி பத்திரிகையாளர்களும் அந்த நிறுவனமுமே தாக்கப்பட்டு வருகின்றமையைக் குறிப்பிட வேண்டும். 

தமிழ்ப் பத்திரிகைகள் தமிழ்த் தேசியத்தின் பால் அக்கறை கொண்டு எழுதி வருவதையும் செய்தி வெளியிட்டு வருவதையும் பொறுத்துக் கொள்ள முடியாத ஜனநாயக விரோத சக்திகளே பத்திரிகை சுதந்திரத்தை அச்சுறுத்தி, பலியிட்டு வருகின்றனர். 

இனந்தெரியாதோர் என்றால் அவர்கள் கைது செய்யப்படமாட்டார்கள். இலட்சக் கணக்கில் குறிப்பாக வடபகுதியில் குவிக்கப்பட்டிருக்கும் இராணுவமும், காவல்துறையும் வடபகுதியில் பாதுகாத்துக் கொண்டு நிற்கும் நிலையில் இந்தப் பகுதிகளில் தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் நடைபெறுகின்றன. 

தமிழ் மக்களின் உரிமைக்குரலை முற்றாக அடக்கி அழித்து விடுவதே இந்தத் தாக்குதலின் நோக்கமாகும். பத்திரிகையாளர்கள், பத்திரிகை நிறுவனங்களினதும் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். 

அடையாளங்கள் தெரிந்த குற்றவாளிகளே நடமாடவிடப்பட்ட நிலையில் அரசிடம் நியாயத்தை எதிர்பார்க்காது விட்டாலும் ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு உரத்துக் குரல் கொடுத்துப் பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டுமென அறை கூவல் விடுக்கிறோம் என்றுள்ளது.
 


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் விநியோகப் பணியாளர் நா.பிரதீபன் பத்திரிகை விநியோகப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டுள்ளார். 

அவர் எடுத்துச் சென்ற பத்திரிகைளும் அவரது மோட்டார் சைக்கிளும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளது. மற்றுமொரு விநியோகஸ்தரை அச்சுறுத் தும் வகையில் இனந்தெரியாத நபர்கள் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். எனினும் அவர்களது நடவடிக்கையை முன்கூட்டியே அவதானித்தமையினால் அவர் அதிர்ஷ்டவசமாக தாக்குதல்களில் இருந்து தப்பித்துக் கொண்டார். 

காட்டுமிராண்டித்தன மானதும், மிலேச்சத்தன மானதுமான இத்தாக்குதல் சம்பவத்தினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது என அதன் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்க முற்படும் தமிழ்த் தேசத்தின் பல்வேறு துறை சார்ந்தவர்கள் மீது தொடர்ச்சியான அச்சுறுத்தல்களும் கைதுகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. 

இதில் ஊடகத்துறை சார்ந்தவர்கள், மதத்தலைவர்கள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர், அரசியல் பிரமுகர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்கள், பொதுமக்கள் போன்ற தரப்பினர் அண்மைக் காலத்தில் இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கும் விசாரணைகள் மற்றும் கைதுகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளமை அனைவரும் அறிந்ததே.

ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்காத, கருத்துக்களை கருத்துக்களால் வெல்லத் திராணியற்று வன்முறைக் கலாசாரத்திலும் கொலைக் கலாசாரத்திலும் நம்பிக்கை கொண்டுள்ள ஜனநாயக விரோத சக்திகளே இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். 

தமிழ்த் தேசத்தின் இருப்பை அழிப்பதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இன அழிப்புச் செயற்பாடுகள் வெளிவராமல் தடுக்கும் வகையில் தமிழ் மக்களை மரண பயத்தில் தொடர்ந்து வைத்திருக்கும் நோக்கிலேயே இத்தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலானது கருத்துச் சுதந்திரத்திற்கும், ஊடக சுதந்திரத்துக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும். 

குறிப்பாக எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் மீளவும் இலங்கை தொடர்பான விவகாரம் எடுத்துக் கொள்ளப்படும்போது தமிழர் தாயகத்தில் இருந்து, எமது பிரச்சினைகள் தொடர்பான வெளிப்படுத்தல்கள் எதுவும் சர்வதேச சமூகத்தினை சென்றடையக் கூடாது என்பதற்காகவே இவ்வாறான அச்சுறுத்தல்களும் கைதுகளும் தொடர்சியாக மேற்கொள்ளப்படுகின்றன.

இராணுவத்தினரதும், பயங்கரவாதத்தடுப்புப் பிரிவினரதும் கைது வேட்டைகள் மிகத்தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் மேற்படி தாக்குதல் சம்பவமானது இலங்கை அரசுக்குத் தெரியாமல் ஒருபோதும் நடைபெற்றிருக்க வாய்ப்பு இல்லை. 

இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க சர்வதேச சமூகம் இலங்கை அரசின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் எனவும் கோருகின்றோம் என்றுள்ளது.



சிவசக்தி ஆனந்தன் எம்.பி. கண்டனம்

உதயன் பத்திரிகை விநியோகப் பணியாளர் மீதான காட்டு மிராண்டித் தனமான தாக்குதல் மற்றும் பத்திரிகை தீயிட்டுக் கொழுத்தப்பட்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், 

வடக்கில் தமிழர்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறித்து அவர்களைத் தொடர்ந்து அரசியல் அநாதைகளாக தக்கவைக்கவே இத்தகைய மிலேச்சத்தனமான தாக்குதலை ஊடகங்களின் மீது பேரினவாத சக்திகள் மேற்கொண்டு வருகின்றன.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான பாதுகாப்புத் தரப்பினரின் தாக்குதல் சம்பவத்தை விசாரிக்கவும் கண்டறியவும் நேரில் சென்ற உதயன் பத்திரிகை ஆசிரியரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணபவனும் மிரட்டப்பட்டனர்.

உதயன் பத்திரிகையை வடக்கிலும் இலங்கைத் தமிழர் வாழும் இடங்களிலும் தனது பணியை மிகவும் நெருக்கடி மிக்க காலகட்டத்தில் ஆரம்பித்து கடந்த மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்களின் தேசிய அரசியல் சுதந்திரம் மற்றும் சமுக ரீதியான நெருக்கடிகள் தொடர்பில் தனது கருத்துக்களைத் தெட்டத் தெளிவாக வெளியிட்டு அதற்காகக் குரல் கொடுத்து வரும் ஒரு ஜனநாயக நிறுவனமாகும். 

ஆனால் எமது நாட்டில உள்ள முற்போக்கு ஊடகங்கள் மீது அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள அராஜக அடக்குமுறைகளின் ஒரு பகுதியாகவும் தமிழர் தரப்புக் குரல்வளையை நெரித்து அழித்துவிடும் நிகழ்ச்சியாகவுமே உதயன் பத்திரிகையின் மீதான இத்தகைய தாக்குதல்களை நோக்கவேண்டியுள்ளது.

இப்பத்திரிகை தொடங்கிய காலம் முதல் அதன் பணியாளர்கள் மற்றும் நிருபர்கள் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் நிறுவன உடைமைகள் அழித்தொழிக்கப்பட்டும் வந்துள்ளன எனினும் உதயனின் குரல் மட்டும் தொடர்ந்தும் தமிழ் மக்களின் குரலாக ஒலித்தவண்ணமுள்ளதை ஏற்றுக்கொள்ளமுடியாதவர்களின் கையாலாகத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம். என்றார்.



வலி.மேற்கு பிரதேச சபை தலைவர் கண்டனம்

தமிழினத்தின் நீண்ட துயரமான பயணத்தின் விம்பத்தை எடுத்துக்காட்டிவரும் உதயன் பத்திரிகைப் பிரதிகளுக்குத் தீயிட்டுக் கொளுத்தியும், விநியோகப் பணியாளரை மிலேச்சத்தனமாகத் தாக்கியமையும் ஜனநாயகத்தின் ஆணிவேர் கருவறுக்கப்பட்டதைத் தெளிவாகக் காட்டுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார் வலி.மேற்கு பிரதேச சபையின் தலைவர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன்.

உதயன் பத்திரிகையின் விநியோகப் பணியாளர் மீதான தாக்குதலைக் கண்டித்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தமிழர் ஆராய்ச்சி மாநாட்டின் 39 ஆவது ஆண்டு நிறைவு தினத்தில் உதயன் பத்திரிகைப் பணியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை மிக வன்மையாகக் கண்டிப்பதுடன் மட்டுமல்லாது குற்றவாளிகளை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

யதார்த்தங்களையும் உண்மைகளையும் திட்டமிட்டு அழிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் பிறப்பாலும் உணர்வாலும் தமிழர்கள் என்றும் அழிக்கப்பட முடியாதவர்கள், இவ்வாறு அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வலி.தென்மேற்குப் பிரதேச சபைத் தலைவர்

தமிழ் மக்களின் குரலாக வெளிவந்து கொண்டிருக்கும் உதயன் பத்திரிகையின் விநியோகிஸ்தர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலும் பத்திரிகைகள் எரியூட்டப்பட்டமையும் பத்திரிகைச் சுதந்திரத்தை யாழ். குடாநாட்டில் தொடர்ந்தும் கேள்விக்குரிய நிலையிலேயே வைத்திருக்கின்றது. 

இச்செயற்பாடானது ஊடக தர்மத்தை கேள்விக்குரியதாக்கி ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும், விநியோகஸ்தர்களையும் அச்சுறுத்துவது என்பது மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது என வலி.தென்மேற்குப் பிரதேச சபைத் தலைவர் அ.ஜெபநேசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

நேற்று முன்தினம் வட மராட்சியில் இடம்பெற்ற இச் சம்பவத்தை மீண்டும் மக்களை சென்றடையக்கூடிய கருத்துச் சுதந்திரத்தையும், எழுத்துச் சுதந்திரத்தையும் மழுங்கடிக்கும் செயற்பாடாகவே பார்க்கின்றோம். 

இச்சம்பவங்களினூடாக பேனாக்களைக் கூட இப்படித்தான் எழுத வேண்டும், கருத்துக்கள் மக்களை சுயாதீனமாக சென்றடையக் கூடாது என்பதையும், ஊடக தர்மத்தை கேள்விக்குறியாக்குகின்ற நிலையையே தொடரும் இச்சம்பவங்கள் காட்டுகின்றன.

ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாக உள்ள ஊடக சுதந்திரத்தை பாதுகாத்து சுயாதீனமாகவும் தங்கு தடையின்றியும் ஊடகங்கள் இயங்குவதற்குரிய நடவடிக்கைகளை உரிய தரப்பினர் மேற்கொண்டு ஜனநாயக விழுமியங்களை செயல் வடிவாக்க முன்வரவேண்டும் என்றார்.



புளொட் சித்தார்த்தன் கோரிக்கை

உதயன் மீதான தாக்குதலாளிகளை உடன் இனங்காணுமாறு புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வடமராட்சி பகுதியில் இனந்தெரியாதோரால் உதயன் பத்திரிகை விநியோகஸ்தர் மோசமாகத் தாக்கப்பட்டமையையும், இதே நபர்களால், விநியோகத்திற்கிருந்த உதயன் பத்திரிகைகள் எரியூட்டப்பட்டமையையும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) அமைப்பினராகிய நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஜனநாயக சூழல் பேணப்படுவதாக அரசு அடிக்கடி அறிக்கையிட்டு வரும் இக்காலப்பகுதியில்தான் உதயன் பத்திரிகையும் அதன் ஊழியர்களும் அடிக்கடி தாக்குதலுக்குள்ளாவதை அவதானிக்க முடிகிறது. 

பத்திரிகையில் வெளிவரும் செய்திகளையும் கருத்துக்களையும் சகித்துக்கொள்ள முடியாத சக்தியொன்றே இதன் பின்னணியில் இருப்பதென்பது வெள்ளிடை மலை. 

கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்ள திராணியற்ற சக்திகளே இக்கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளது. உரிமைகள், நீதிநியாயங்கள் மீறப்படும்போது வாய்பொத்தி, கைகட்டி அதற்கு ஒத்திசைவாக இருக்கவேண்டுமென அதிகார பலமுள்ள தரப்பு எதிர்பார்க்குமாயின் அங்கு சர்வாதிகார ஆட்சி நடைபெறுகின்ற தென்பதே உண்மையாகும்.

ஊடக சுதந்திரம் மறுக்கப்படும்போது ஒட்டு மொத்த ஜனநாயக உரிமைகளுமே மறுக்கப்படுகிறது. இதனை நாம் மிகவும் வன்மையாக கண்டிப்பதுடன் இத்தாக்குதலில் ஈடுபட்டவர்களை காவல்துறை இனங்கண்டு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என்றுள்ளது.



வலி.வடக்குப் பிரதேச சபைத்தலைவர் சுகிர்தன்

உதயன் பத்திரிகை விநியோகஸ்தர் பிரதீபன் மீதான தாக்குதல் அதிகாரத்தினூடான அடக்குமுறையின் வெளிப்பாடே இவ்வாறு தெரிவித்தார் வலி.வடக்கு பிரதேசசபைத் தவிசாளர் லயன் சோ.சுகிர்தன்.

உதயன் விநியோகஸ்தர் தாக்கப்பட்டமையைக் கண்டித்து விடுத்துள்ள அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

ஊடகவியலாளர்கள் நமது நாட்டில் அவ்வப்போது தாக்கப்படுகின்றார்கள். உதயன் பத்திரிகை துணிச்சலோடு செயற்படுவதால் பலமுறை தாக்குதலுக்குள்ளானது. அதன் சகோதரப் பத்திரிகையான சுடர் ஒளியும் பலமுறை தாக்கப்பட்டுள்ளது. 

இரண்டினதும் செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள். பத்திரிகை நிறுவனங்கள் தாக்குதலுக்கு இலக்காகின. உதயன் பத்திரிகையின் களஞ்சியம் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டும் இதேபோன்று பத்திரிகை விநியோகிக்கச் சென்ற பாஸ்கரன் என்ற விநியோகஸ்தர் சுடப்பட்டார்.

ஜனநாயக நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் கண்டிக்கப்படத்தக்கவை. மக்களுக்கு  மக்கள் மீதான அநீதிகளுக்கு நடுநிலை தவறாமல் அவர்களின் அடக்குமுறைகளை உதயன் வெளிக்கொணரத் தவறுவதில்லை. இவ்வாறான சம்பவங்கள் ஊடக சுதந்திரத்தை ஒடுக்குகின்ற செயற்பாடுகளாகும்.

தாக்குதலுக்கு இலக்காகிய பிரதீபனுடன் மற்றைய பகுதிக்கு பத்திரிகை விநியோகிக்கச் சென்ற விநியோகஸ்தரையும் இருவர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்துள்ளனர். அவர் நெல்லியடிப் பொலீஸில் முறைப்பாடு பதிவுசெய்யச் சென்றபோது பொலிஸார் அதனை ஏற்க மறுத்துள்ளனர். 

பொலிஸாரின் இவ்வாறான செயற்பாடுகள் மனவருத்தத்தை ஏற்படுத்துகின்றன. சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கின்ற பொலிஸார் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின்முன் நிறுத்தி உரிய தண்டனையை அவர்களுக்கு வழங்கவேண்டும். என்றுள்ளது.



வலி.தென்மேற்குப் பிரதேசசபை தவிசாளர்

உதயன் பத்திரிகை விநியோகஸ்தர் பிரதீபன் மீதான தாக்குதல் ஈவிரக்கமற்ற காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட ஒரு மிலேச்சத்தனமே. இவ்வாறான சம்பவங்கள் மிகவும் கண்டிக்கத்தக்கனவாகும் வலி.தெற்கு பிரதேசசபைத் தலைவர் தி.பிரகாஷ் இவ்வாறு தெரிவித்தார். 

உதயன் விநியோகஸ்தர் தாக்கப்பட்டமையைக் கண்டித்து விடுத்துள்ள அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

பத்திரிகை சுதந்திரமும் நமது நாட்டில் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது. உதயன் பத்திரிகையின் ஆசிரியர் பிறேமானந்த் யாழ்.பல்கலைக்கழகத்தில் வைத்துத் தாக்கப்பட்டுள்ளார்.

ஊடக சுதந்திரம் இங்கு முற்றாக மறுக்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் ஊடகவியலாளர்களைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு அரசுக்கு உள்ளது. அவர்கள் பூரண சுதந்திரத்துடன் செயற்பட வேண்டும். ஆனால், நமது நாட்டில் சகல சுதந்திரங்களும் அடியோடு மறுக்கப்படுகின்றன.

நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கின்ற பொலிஸார் இவ்வாறான சம்பவங்களைக் கண்டும் காணாதிருப்பது வேதனையளிக்கின்றது. ஆர்ப்பாட்டங்கள், கண்டன அறிக்கைகள் என்பவற்றால் எதுவித பலனுமில்லை. 

மனிதாபிமானம், ஜனநாயகம் என்பவற்றைப் புரிந்துகொள்ளும் திறன் கொண்டவனுக்குத்தான் இவற்றின் தாற்பரியத்தை உணர்ந்து, புரிந்து கொள்ளும் தன்மை உண்டாகும். 

புரியாதவனுக்கு, மக்கள் சக்தியென்ற மாபெரும் சக்தியாக எமது மக்கள் பொங்கியெழுந்து மீண்டும் கடுமையான ஒற்றுமையுடைய மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமே இவ்வாறான சூத்திரதாரிகளுக்குத் தகுந்த பாடம் புகட்ட முடியும்.

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=598651761512385130

அறிவியல் ரீதியாக அறிவுரை கூறும் மாண்புமிகு ஒட்டுக்குழு தலைவர் டக்லஸ் என்ற இனவழிப்பாளர் மௌனம் காப்பதும் ஏனோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.