Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறதியின்மேல் கட்டமைக்கப்படும் பிம்பங்கள்: காலச்சுவடு கட்டுரை

Featured Replies

மறதியின்மேல் கட்டமைக்கப்படும் பிம்பங்கள் biggerfont.png smallfont.png மு. புஷ்பராஜன்

 

நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெம், பிபிசி தமிழோசைக்கு வழங்கிய நேர்காணலில் பின்வருமாறு குறிப்பிட்டார். “இலங்கையின் சமாதான முயற்சிகளில் பங்குவகித்த நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், யப்பான், நோர்வே ஆகிய நாடுகள் இணைந்து ஒரு சமாதான முயற்சியை 2009 ஜனவரி மாதத்தில் மேற்கொண்டதாகவும் அதன்படி சர்வதேச அமைப்பு அல்லது அமெரிக்கா, இந்தியா அல்லது வேறொரு நாடு, இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு ஒரு கப்பலை அனுப்புவதென்றும் போரில் எஞ்சியிருந்த பொதுமக்கள், விடுதலைப்புலிகள் அனைவரையும் புகைப்படத்துடன் பதிவுசெய்து கொழும்புக்குக் கொண்டுசெல்வதாகவும், பிரபாகரன், பொட்டு அம்மான் தவிர்த்து அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்குவதென்றும் முடிவுசெய்யப்பட்டது. இது குறித்து முடிவெடுப்பதற்காக, புலிகளின் அப்போதைய சர்வதேசச் செயலாளராயிருந்த குமரன் பத்மநாபனை, பாதுகாப்பாக ஒஸ்லோவிற்கு அழைத்து வருவதெனத் தீர்மானிக்கப்பட்டது. பிரபாகரன் இந்தத் திட்டத்தை நிராகரித்துவிட்டதால் எம்மால் எதுவும் செய்ய முடியாது போய்விட்டது. இத்திட்டம் நிறைவேறியிருந்தால், இறுதியில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் நம் மத்தியில் உயிரோடு இருந்திருப்பார்கள்.”

 

 

pushbharajan-article-1.jpgஇந்த அறிக்கை வெளிவந்தவுடன், “எரிக் சொல்ஹெம் தமிழோசையிடம் தெரிவித்ததுபோல் சரணடைவது குறித்த திட்டம் எதுவும் விடுதலைப் புலிகளிடம் எழுத்து மூலம் கொடுக்கப்படவில்லை என்பதனால், அந்த யோசனை நிராகரிக்கப்பட்டது” என நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்தார். இந்தச் சமாதானத் திட்டம் பற்றி, குமரன் பத்மநாபன் வேறு காட்சிகள் அடங்கிய ஒரு திட்டத்தைக் கூறுகிறார். டேய்லி மிரர் நாளேட்டிற்காக டி. பி. எஸ். ஜெயராஜாவுக்கு அளித்த நேர் காணலில் முக்கியமாக இந்த விஷயத்தைச் சொல்கிறார்;

‘விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்களை வெளிநாட்டிற்குப் பாதுகாப்பாக அனுப்பிவைத்து அவர்களைக் கண்காணிப்பது. இந்த வெளிநாட்டுப் பாதுகாப்பில் பிரபாகரனும் பொட்டு அம்மானும் அடக்கம்’. சொல்ஹெம்மின் கூற்றில் பிரபாகரன், பொட்டு அம்மான் தவிர்த்த அனைவருக்கும்தான் பொதுமன்னிப்பு என்று சொல்லப்பட்டிருந்தது. இந்த முரண்பாடு பற்றி டி. பி. எஸ். ஜெயராஜா சுட்டிக் காட்டியபொழுது, “எனக்குத் தெரியும் எரிக் சொல்ஹெம் வேறுமாதிரிச் சொல்கிறார்” என்கிறார் குமரன் பத்மநாபன்.

 

 

முள்ளிவாய்கால் இரத்தத்தில் மூழ்கடிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இக்காலத்துள் சாட்சியங்கள் இன்றி நடத்தி முடிக்கப்பட வேண்டுமென்ற முன்திட்டத்துடன், முடித்துவைக்கப்பட்ட இப்போரின் பின்னணியில் எந்தெந்த நாடுகள் இருந்ததென்றும் எவ்வகையான உதவிகள் பிராந்திய வல்லரசாலும் உலக வல்லரசுகளாலும் அளிக்கப்பட்டதென்றும் பல தகவல்கள் வெளிவந்திருந்தன. இப்போது யுத்தக் களத்தில் அரசாலும் போராளிகளாலும் சர்வதேசப் போர் விதிகள் மனிதாபிமானமற்ற முறையில் எவ்வாறு மீறப்பட்டது என்றும் மக்களுக்கு நேர்ந்த கொடும் அவலங்கள் பற்றியும் துல்லியமான தகவல்கள் ஃபிரான்ஸிஸ் ஹாரிசனின் Still Counting The Dead (இந்நூல், ஈழம்; சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள் என்னும் தலைப்பில் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது) நூலின் மூலம் பொதுவெளியில் வைக்கப்பட்டுவிட்டது. இந்நூல் முன் மதிப்பீடுகளைத் தகர்க்கக்கூடிய யுத்தகள நிகழ்வுகளைக் கொண்டிருந்த போதிலும், மேற்குறிப்பிடப்படும் சமாதான நிகழ்வுகளின்போது விடுதலைப்புலிகளின் தலைவர் “எவ்வகைப் போர் நிறுத்தப் பேச்சு வார்த்தைகளும் அரசியல் அதிகாரப் பகிர்வு நோக்கி நகர்த்தப்பட வேண்டும் என்று வற்புறுத்தினார்” என்ற தகவலும் அதில் உள்ளடங்கியுள்ளது. அரசியல் பேச்சுவார்த்தைக்கான காலம் கடந்துவிட்டது என்பது பற்றியும் களநிலை யதார்த்தம் பற்றிய எந்த உணர்வும் அவர்களுக்கு இல்லை என இம்முயற்சியில் சம்பந்தப்பட்ட நோர்வே அதிகாரிகள் கருதியது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் பிரபாகரன் வலியுறுத்திய அதிகாரப் பகிர்வு கோரிக்கை குறித்து இந்நூலில் தகவல்கள் இல்லை. முரண்பட்ட செய்திகள் ஒரு குழப்ப நிலையை உருவாக்குகின்றன.

 

 

நான் நினைக்கிறேன், நடந்து முடிந்த இரத்தப் பழியை யார் தலையில் சுமத்துவது என்ற கேள்வி பின்னின்று உதவிய நாடுகள் முன் நிற்கிறதுபோல் இருக்கிறது. இலங்கையின் சமாதானப் பேச்சு வார்த்தைகள் முறிந்துபோவதற்கு இந்தியா எவ்வகையில் காரணமாக இருந்தது என முன்னர் நோர்வே குறிப்பிட்டிருந்தது. விடுதலைப் புலிகள் எந்தக் காலத்திலும் பேச்சுவார்த்தை மேடைக்கு பூரண விருப்புடன் சென்றதில்லை. அவர்கள் நம்பிக்கை அற்றவர்கள் என எல்லோரும் அறிந்த உண்மையை முன்வைத்து, எனது அனுமானத்தை நிராகரிக்க முடியும். ஆனால் இந்த உண்மை ஒரு பக்கத்திற்கு மட்டும் உரியதல்ல.

 

 

pushbharajan-article-6.jpgவிடுதலைப்புலிகளும் அரசும் என்றுமே ஒருவரை ஒருவர் நம்பியதில்லை. தமிழ் மக்களில் பெரும்பாலானவர்களும் நம்பியதில்லை. ஆட்சியில் அமரும் சிங்கள அரசுகளின் செயற்பாடுகள், எந்த அரசியல் உரிமையையும் தமிழர்களுக்குக் கொடுத்துவிடப் போவதில்லை என்ற உண்மையை உறுதிப்படுத்துபவையாகவே இருந்தன. அதனால் ஆயுதப் போராட்டத்தின் மூலம்தான் உரிமைகளைப் பெற முடியுமென விடுதலைப்புலிகளும் தமிழர்களில் பெரும்பான்மையோரும் நம்பினர்.

 

பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை இரு தரப்பினரும் விரும்பினர். பேச்சுவார்த்தை முறிவடையும்போது பழியை எதிர்தரப்பினர்மீது சுமத்துவதற்கு இரு தரப்பினரும் தீவிரமாக முயன்றனர். தொடர்ந்துவந்த சிங்கள அரசுகளும் பெரும்பான்மைச் சிங்கள மக்களும் விடுதலைப்புலிகளின் அழிவை விரும்பியிருந்தனர்.

 

குறிப்பிடப்படும் சமாதானத் திட்டத்தின் நடைமுறைச் சாத்தியப்பாடு பற்றியும் யாருக்கு இத்திட்டம் சாதகமானது, இதில் பங்குகொண்ட அனைத்துத் தரப்பினரும் ஒப்பந்தத்திற்கு விசுவாசமாகவும் நேர்மையாகவும் இருந்திருப்பார்களா என்பவை முக்கியக் கேள்விகள்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பின் இலங்கை அரசு போராளிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கியிருந்தது. அக்காலத்தில் ஐப்பசி மாதம் 4ஆம் திகதி பருத்தித்துறைக்கு அருகில் படகில் வந்துகொண்டிருந்த விடுதலைப்புலிகளின் பதினேழு முக்கிய உறுப்பினர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் மாவட்டத் தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் ஆகிய இருவரும் அடக்கம். ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன, “அவர்கள் கடத்தல்காரர்கள். ஒப்பந்தத்திற்குள் வரமாட்டார்கள்” என்று அரச தொலைக்காட்சியில் உரையாற்றினார். மறுநாள், “அவர்கள் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு இந்தியாவில் இருந்து திரும்பும்போது பிடிபட்டார்கள்” என்று கூறினார். திருகோணமலையில் நடைபெற்ற சிங்கள மக்களின் கொலை தொடர்பாக அவர்களை விசாரிப்பதற்காக கொழும்பு கொண்டுவரும்படியும் பணிக்கப்பட்டது. இந்திய அமைதிப்படை ஜெனரல் றொட்றிக்ஸ், புலிகளைக் கொழும்புக்குக் கொண்டு செல்வதைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். இறுதியில் எல்லாம் வீணாகி அவர்கள் சயனட் அருந்தியதும் அவர்களின் பலர் மடிந்ததுமாக அந்தச் சோக நாடகம் முடிந்தது. இங்கே சிங்கள அரசு தான் வழங்கியிருந்த பொது மன்னிப்பு குறித்த ஒப்பந்தத்தை முக்கியத் தலைவர்கள் சிலர் அகப்பட்டுக்கொண்டதும் மீறினார்கள் என்பதுதான் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

 

 

இலங்கை அரசின் நிர்வாகத்திற்குட்பட்ட பகுதிகளுக்குள் எத்தனை படுகொலைகள் நடந்தன? வெலிகட சிறைச்சாலைப் படுகொலைகளுக்குப் பின்னரும் சிறைப் படுகொலைகள் தொடர்கின்றன. இத்துடன் பிந்துநுவேவ புனர்வாழ்வு நிலையப் படுகொலைகளையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் சிறுவர் போராளி எனக் கைதுசெய்யப்பட்டுப் புனர்வாழ்வு அளிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டவர்களே கொல்லப்பட்டார்கள். இங்குச் சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அரச நிர்வாக நிறுவனங்களில் நடைபெற்ற கொலைகளை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ்ப் பொதுமனத்தில் அரச படைகள் பற்றிய பிம்பம் என்ன, இந்த அனுபவங்களின் அடிப்படையில் விடுதலைப்புலிகள் இந்தப் பொதுமன்னிப்புத் திட்டத்தை எவ்வகையில் நம்புவார்கள்? அவர்கள் சரணடையும்பட்சத்தில் அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை சர்வதேச உறுதிமொழியின் அடிப்படையில் இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்களுக்கு நிகழ்ந்தவை இலகுவாக நமக்கு உறுதிப்படுத்துகின்றன. பொதுமக்கள் பார்க்கக்கூடிய வகையில் சரணடைந்தவர்களை மட்டுமல்ல, கைதுசெய்யப்பட்டவர்களையும் என்ன செய்யப்பட வேண்டுமென்று முன்கூட்டித் தீர்மானித்திருந்தார்களோ அவற்றையெல்லாம் ரகசியமாக நிறைவேற்றிவிட்டுத் தான் முன்வைக்கும் கருத்திலிருந்துதான் உலகம் அபிப்பிராயம் கூற வேண்டுமென்று இலங்கை அரசு எதிர்பார்க்கிறது, வற்புறுத்துகிறது. இறுதி யுத்தம் ஆரம்பமாவதற்கு முன் இனப் பிரச்சினைக்கு ஆறு மாதங்களில் தீர்வு முன்வைக்கப்படும் எனச் சர்வதேசச் சமுதாயத்திற்கு முன் வாக்குறுதி அளித்து யுத்தத்தை நடத்தியது இலங்கை அரசு. இன்று அந்த வாக்குறுதியும் கேள்விக் குறியாகவே உள்ளது. இவ்வாறு நடந்துகொண்ட அரசு, முன்வைக்கப்பட்ட சமாதானக் கூறுகளை நிறைவேற்றுவார்கள் என இன்று எதிர்பார்த்தல் நடைமுறைச் சாத்தியம்தானா? இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் பார்வையாளர்களாக இருக்கும் என்றாலுங்கூட தமிழர் பிரச்சினையில் அவை தமது வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்பதற்கான எந்த நம்பிக்கையும் நம்முன் இல்லை.

 

 

pushbharajan-article-4.jpgஇந்தியாவைப் பொறுத்தவரையில் ஆயுதக் குழுக்களுக்கும் அரசுக்குமான போரில் எத்தரப்பும் வெற்றிபெறுவதை ஆரம்ப காலத்தில் அது விரும்பவில்லை. அப்போது வெல்வதற்கான அதிக சாத்தியங்களை இலங்கையே கொண்டிருந்தது. அமெரிக்க சார்பான இலங்கையின் போக்கிற்கு ஒரு நெருக்கடியைக் கொடுப்பதே இந்தியாவின் நோக்கமாக இருந்தது. இந்தப் பின்னணியை அனைத்துப் போராளிக் குழுக்களும் அறிந்தே இருந்தனர். இக்கால கட்டத்தில் தமிழர் பிரச்சினையில், இந்தியாவின் ஆதிக்கம் செறிந்திருப்பதை விரும்பாத குழுக்களுள் விடுதலைப்புலிகள் முதன்மையானது என்பதை இந்தியாவும் அறிந்திருந்தது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்குப் பின்னும் ராஜீவ்காந்தி படுகொலையின் பின்னும் புலிகளின் அழிவையே இந்தியா விரும்பியிருந்தது. இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் புதுதில்லியில் அசோகா விடுதியில் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்திக்கும் விடுதலைப் புலிகளின் தலைவருக்கும் ஒரு ‘கனவான் ஒப்பந்தம்’ ஏற்பட்டதாகவும் அதில் ராஜீவ்காந்தி அளித்த வாக்குறுதி காப்பாற்றப்படாமலே போய்விட்டது எனவும் அன்ரன் பாலசிங்கம் தனது ‘விடுதலை’ என்ற நூலில் கூறுகிறார். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில், பொதுமன்னிப்பு அளிக்கப்பட்ட பதினேழு போராளிகளுக்கு நேர்ந்த சோக முடிவைப் பற்றி முன்னர் குறிப்பிட்டேன். அதில் இந்திய அமைதிப்படை கமாண்டர் றொட்றிக்ஸ்சுக்கும் பிரிகேடியர் ஜயரட்னவுக்கும் இடையில் தொடர்ந்து விவாதங்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்தன. பொதுமக்கள் பலர் பலாலி ராணுவ முகாமிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். இந்தக் கொதிநிலையில் 4:30 மணி அளவில் இந்திய ஜெனரல் றொட்றிக்ஸ் அவர்களுக்கு புதுதில்லியிருந்து வந்த ஒரு தொலைபேசியில் அழைப்பு, ‘இம்முயற்சிகளைக் (கொழும்புக்குப் புலிகளைக் கொண்டுசெல்வதைத் தடுக்கும் முயற்சிகளை) கைவிடுமாறும் நடப்பவற்றை அவற்றின் போக்கில் விட்டுவிடுமாறும் புதுதில்லியில் இருந்து ஒரு தொலைபேசி அறுவுறுத்தல் வந்தது.’ (முறிந்த பனை- பக்; 222) இவ்வாறு கூறியது. ஒப்பந்தத்தில் தனக்கான பொறுப்பில் இருந்து புதுதில்லி அப்போது விலகிக்கொண்டது. ஒப்பந்தத்திலுள்ள வடக்கு, கிழக்கு இணைப்பை இலங்கை அரசு ஒருதலைப்பட்சமாக நீக்கியபோதும் இந்தியா மௌனமாகத்தான் இருந்தது. இறுதி யுத்தத்தை இந்தியாவே பின்னின்று வழிநடத்தியதாகவே கருத்துகள் முன்வைக்கப்பட்டன. நோர்வே குறிப்பிடும் சமாதானத் திட்டத்தில் யாருடைய தேவை முதன்மைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது மறைபொருள் அல்ல. இலங்கை அரசுக்கு முழுப் போராளிகளும் அழிக்கப்பட வேண்டியவர்களாக இருக்கையில் இந்தியாவுக்கு மட்டும்தான் ராஜீவ்காந்தி கொலை வழக்கின் நிமித்தம் பிரபாகரனும் பொட்டு அம்மானும் வேண்டப்படுபவர்களாக இருந்தார்கள். இக்கொலை சம்பந்தமாக பேட்டரி வாங்கிக் கொடுத்தவர்களுக்கே தூக்குத் தண்டைனை அளிக்கப்பட்டு இருப்பதாகச் சொல்லப்படுகையில் இந்தப் பொதுமன்னிப்பை இந்தியா மனதார அனுமதித்திருக்குமா?

 

 

ஐநா செயலாளர் பான் கீ மூன் நியமித்த உள்ளக விசாரணை அறிக்கை இப்பொழுது வெளிவந்துவிட்டது. ‘பயங்கரவாதத்தை ஒழிப்பதாகச் சூளுரைத்துவிட்டு, இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த விடயங்களை அனைத்து நாடுகளும் கண்டும் காணாமல் இருந்துவிட்டன. ஐநா கட்டமைப்புக்குள் ஒரு விடயத்திற்கு மாறாக இன்னொரு விடயத்தை விட்டுக்கொடுப்பது என்ற கலாசாரம் அதிகம் என்றும் இலங்கை அரசின் அச்சுறுத்தலால் பரந்த அளவில் நடைபெற்ற படுகொலைகள் குறித்துக் கருத்து வெளியிட ஐநா அதிகாரிகள் பயந்தார்கள் என்றும் பொது மக்களைப் பாதுகாப்பதற்கு ஐநா பாதுகாப்புச் சபை தெளிவான உத்தரவுகளை வழங்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.

 

“இலங்கை அரசு பொதுமக்களைப் பாதுகாப்பதற்கென்று தாமாகவே நிர்மாணித்த பாதுகாப்பு வலையத்திற்குள்தான் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஐநா மூத்த அதிகாரிகள் வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு நிலைமையை அறிவிக்கும் சந்தர்ப்பத்தில் இத்தகவலை வெளிப்படுத்தாமல் இருக்கத் தீர்மானித்தார்கள்.” “ஆச்சரியப்படத்தக்க வகையில் ஐநா அதிகாரிகள் யுத்த வலயத்திற்குள் எவற்றைக் கண்டனரோ அவற்றை வெளிப்படுத்த ஐநா அனுமதிக்கவில்லை.” அத்துடன் “ஐநா சபையால் வெளிப்படுத்தப்பட்ட போரால் பாதிக்கப்பட்டவர்களுடைய எண்ணிக்கையை வைத்து, இலங்கை அரசாங்கத்தால் நிகழ்த்தியிருக்கக்கூடிய போர்க் குற்றங்களை வெளிப்படுத்த நவநீதம்பிள்ளை போராடினார். ஐநாவின் உள்ளகத் தொடர் பாடல்களின்படி பான் கீ மூனின் அப்போதைய ஆலோசனைக் குழுவின் தலைவரான விஜய் நம்பியார், நவநீதம்பிள்ளையை அவரது அறிக்கையின் தீவிரத்தைக் குறைக்கும்படி கேட்டுக்கொண்டார். (The UN's 'grave failure' in Sri Lanka demands an answer - Frances Harrison- The Globe and Mail - 19-11-2012). விஜய் நம்பியாரே சரணடைய வந்த புலிகளுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப் பட்ட தகவல் பரிமாற்றத்தில் முக்கியப் பங்கு வகித்தார். இந்த அறிக்கையின் முக்கியப் பகுதிகள் கறுப்பு மையால் அடிக்கப்பட்டது குறித்து இன்னர் சிட்டி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

 

ஐநா அமைப்பின் பணியாளர்களைப் பாதுகாக்கவும் சில ரகசிய ஆவணங்களைப் பாதுகாக்கவும் மீளாய்வு அறிக்கையில் சில பகுதிகள் தனிக்கை செய்யப்பட்டமை சரியானதே என ஐநா அமைப்பின் உயர் அதிகாரி சுகனா மெல்கொரா தெரிவித்துள்ளார் (உதயன் ஒன் லைன் 05.12.2012) இதில் பாதுகாப்பது என்ற சொல்தான் முக்கியமானது. “நான் மிகவும் வெறுப்படைந்தேன். முழு ஒழுங்குமுறைகளும் தோல்வி கண்டுள்ளன. ஐநா மட்டுமல்ல, முழுச் சர்வதேசச் சமூகமே தோல்வி கண்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சிறிலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்டார்கள். இதுபற்றி உலகம் கண்டும் காணாத மாதிரிப் போய்கொண்டிருந்தது. சாதாரணமாகக் கடந்து சென்றது” (Still Counting The Dead-Francies Harrison) என்றார் ஐநா நிவாரணப் பணியாளர் ஒருவர்.

 

pushbharajan-article-3.jpg‘மனித உரிமைப் பேரவை தமது பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியுள்ளது என்று கூறப்படுகிறது. இந்தக் கண்டறிவு உலகம் முழுவதிலுமுள்ள எனது பணிகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முதல் நடவடிக்கையாக இந்தப் பரிந்துரைகளைக் கவனமாக ஆராய்ந்து எனக்கு ஆலோசனை கூறுவதற்கு மூத்த அதியாரிகள் குழுவொன்றை நியமிக்கவுள்ளேன்’ (புதினப் பலகை 15.11.2012) என்று பான் கீ மூன் கூறியுள்ளார். இப்படியே இலங்கை அரசைப் போல் எல்லாவற்றிற்கும் விசாரணைக் குழுவைத் தொடர்ந்து நியமித்துக் காலத்தைக் கடத்தவேண்டியதுதான். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி யோர்ஜ் புஸ், ஈராக்கின் மீது படையெடுப்பதற்கு ஐநா பாதுகாப்புச் சபை அனுமதி அளிக்க மறுத்த சந்தர்ப்பத்தில் ஐநா சபையின் பொருத்தப்பாடு சம்பந்தமாகக் கேள்வியை எழுப்பினார். அது அநியாயத்திற்கான கேள்வி. தமிழர்கள்மீதான இத்தனை அழிவுகளையும் முடியும்வரை அனுமதித்த ஐநா சபையின் பொருத்தப்பாடு பற்றித் தமிழர்களும் கேள்வி எழுப்ப வேண்டிய நிலையிலுள்ளனர். இது நியாயத்தின் அடிப்படையிலான கேள்வி.

சமீபத்தில் பாலஸ்தீனத்தில் சமாதானத்தை ஏற்படுத்திய இவர்களால் வன்னியில் ஓர் அரசியல் தீர்வுடன் சமாதானத்தை ஏற்படுத்த முடியாமல் போனதேன்? புலிகள் முற்றிலும் தோல்வியடைந்த நிலையை அரசாங்கம் விரும்பியதுபோல் சர்வதேச வல்லாதிக்க அரசுகளும் விரும்பியிருந்தனவா? மனிதப் படுகொலைகளிலிருந்துதானா இந்தச் சொல்லப்படும் சர்வதேச வல்லாதிக்க நாடுகள் இலாபங்களைப் பெற்றுக்கொள்ள முறைகிறார்கள்? விடுதலைப் புலிகள் இல்லாத இன்றைய வடக்கு கிழக்கில் எந்தெந்த நாடுகள் மூலதனத்துடன் முகாமிட்டுள்ளனர் எனபதை அனைவரும் அறிவர்.

 

இறுதியில் விடுதலைப்புலிகள் எல்லாவற்றையும் மீறி சரணடைந்திருந்தாலும் இந்தப் படுகொலைகள் நடந்துதான் இருக்கும். இது இலங்கை அரசுகளின் பேரவா. தொகையில் சற்று வித்தியாசம் ஏற்படலாம். ஏனெனில் புலிகள் அழிந்த பின்னும் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இன்னமும் கொல்லப்பட்டுக்கொண்ட இருக்கிறார்கள். இலங்கை மத்திய வங்கியின் 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இராஜகிரியவில் உள்ள இலங்கை மத்திய வங்கியின், வங்கிக் கற்கைகளுக்கான நிலையத்தில் 29.09.2010இல் இடம்பெற்ற ‘பொருளாதார முகாமைத்துமும் யுத்தத்தால் கற்றுக்கொண்ட பாடங்களும்’ என்ற பொருளில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ ஆற்றிய உரையில் ஒரு கருத்தை முன்வைத்தார். “அனைத்துத் தமிழர்களும் விடுதலைப்புலிகள் அல்ல. ஆனால் 99 சதவீதமான விடுதலைப்புலிகள் தமிழர்களாவார்” என்பதுதான் அது. பின்னர் முடிவு வேறென்னவாக இருந்திருக்கும்?

 

http://www.kalachuvadu.com/issue-157/page16.asp

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளை முற்று முழுதாக அழிக்கவேண்டும் என்ற ஒரேயொரு காரணத்தால் சர்வதேச நாடுகளும், ஐ.நா. உட்பட பல மனிதநேய அமைப்புக்களும் போர் நடந்த இறுதி மாதங்களில் எல்லாவற்றையும் தெரிந்திருந்தும் தெரியாதமாதிரி நடந்துகொண்டன. தமிழ் மக்கள் இப்போதும் இவர்களிடம் நீதிகோரி நிற்கவேண்டியிருப்பது இன்னும் சோகமான விடயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.