Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நறும்பிழியின் நற்சுவை!!

Featured Replies

பத்துப் பாட்டு நூல்களில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படையில் பாட்டுடைத் தலைவனாக தொண்டைமான் இளந்திரையனைக் கொண்டாடப் படுகிறது. இந்நூலில் உப்பு வாணிகம் செய்பவர்களின் பயண வழியில் அவர்கள் காணும் ஐந்து நில மக்களின் வாழக்கை முறையை கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியுள்ளார். அதில் வலைஞர்  குல மக்களின் வாழ்க்கை முறையை கூறும்போது, அவர்கள் கள்ளு தயாரித்து உண்ணும்  முறையை கூறுகிறார். எளிய செயல்முறைதான் வீட்டில் செய்து பார்க்கலாம் :)

தயாரிப்பு முறையை கவனியுங்கள்..

உரலில் இட்டுக் குற்றாத கொழியல் அரிசியை(சுத்தம் செய்யாத) களியாகச் சமைத்து அதை கூழாக்க வேண்டும். பின்னர் அந்தக் கூழை அகலமான தட்டில் இட்டு ஆறச் செய்து, நல்ல முளை அரிசியை(பாலை நெல்) இடித்து கூழுடன் சேர்த்து கலக்கி இரண்டு இரவும் இரண்டு பகலும் மூடி வைத்து விட வேண்டும். பின்னர் அந்தக் கூழை வெந்நீரில்  வேகவைத்து வடிகட்டியால் வடிகட்ட வேண்டும். சுவையான கள் தயார். இதற்கு "நறும்பிழி" என்று பெயர். 

இந்தக் கள்ளுக்கு தொட்டுக்க என்ன சுவையாக இருக்கும் ?? வடிகட்டிய கள்ளுடன், பச்சை மீனைப் பிடித்து அதைச் சுட்டு சாப்பிட்டால்  எப்பேர்பட்ட உடல்வலியும் காணமல் போய்விடும் எந்த பக்க விளைவுகளுமின்றி..

வாசிக்கும்போதே மண்டை கிருகிருக்குதே !! போதை எரிப்போசோ ??!! :) 

பாடல் இதுதான்

அவையா வரிசி யங்களித் துழலை
மலர்வாய்ப் பிழாவிற் புலரவாற்றிப்
பாம்புபுறை புற்றிற் குரும்பி யேய்க்கும்
பூம்புற நல்லடை யளைஇத் தேம்பட
எல்லையு மிரவு மிருமுறை கழிப்பி
வல்வாய்ச் சாடியின் வாழைச்சர விளைந்த
வெந்நீர் அரியல் விரலை நறும்பிழி
தண்மீன் சூட்டோடு தளர்தலும் பெறுகுவீர் !!  

 

Edited by ஆதித்ய இளம்பிறையன்

சங்க காலத் தமிழர்களும், கள்ளும்

 

பழந்தமிழ் மக்களிடையே மது, கள் அருந்தும் பழக்கம் தனிச் சிறப்புடன் விளங்கியது. அரசன் முதல் புலவர்கள், சான்றோர்கள். குடிமக்கள் வரை ஆண், பெண் அனைவரும் களிப்புடன் கள்ளைப் பருகி மகிழ்ந்த செய்திகளைப் பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூல்களில் காணலாம். போதைக்காகவும், மன மகிழ்ச்சிக்காகவும் உடல் வெம்மைக்காகவும் பழந்தமிழர் பயன்படுத்திய ‘மது’, ‘கள்’ ஆகியன பற்றிய குறிப்புகளை இந்நூல்கள் விரிவாகக் குறிக்கின்றன. உள்நாட்டு மது வகைகளுடன் அயலக மது வகைகளும் பயன்படுத்தப்பட்டன. ‘யவன மது’வை மிக விருப்புடன் மகளிர் அருந்திய செய்தியைப் புறநானூறு குறிப்பிடுகின்றது. மட்டு, மது, நறவு, தேறல், கள் எனப் பல்வகைப் பெயர் பெற்று விளங்கும் குடிவகைகள் தேன், நெல்லரிசி, பழங்கள், பூவகைகள், தென்னை. பனை போன்ற மரங்களிலிருந்து இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டன.

--------------------

தேக்கள் தேறல் :

 

தேனை மூங்கில் குழாய்களில் பெய்து அதனை முதிர்விப்பார்கள். நாட்பட நாட்பட இத்தேனின் சுவை அதிகமாகும். இவ்வாறு பதனப்படுத்திச் சுவையேற்றிய மதுவே தேக்கள் தேறல் எனப்படும். குறவர்கள் இத்தகு ‘தேக்கள் தேறலை’ப் பருகிக் குறிஞ்சிக் கடவுளான முருகனைப் பாடி ஆடுவார்களாம். தேனினை மூங்கில் குழாயில் ஊறல் முறைப்படி முற்ற வைக்கும் இத்’தேக்கள் தேறலை’ப் பற்றிய குறிப்புகள் திருமுருகாற்றுப் படை, மலைபடுகடாம், அகநானூறு ஆகிய நூல்களில் காணப் பெறுகின்றன.

------------------

தோப்பிகள்:

 

வீடுகளிலேயே தயாரிக்கப்பட்ட கள்ளிற்குத் ‘தோப்பிகள்’ என்று பெயர்.

 

"இல்லடு கள்ளின் தோப்பி பருகி

தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும் "

 

‘தோப்பின நெல்’ என்றொரு நெல் வகையுண்டு. தற்காலத்தும் மதுரை மாவட்டத்தில் ‘தொப்பி’ என்று இது அழைக்கப்படுகின்றது. இந்தத் தொப்பி என்ற அரிசியைக் கொண்டு வீடுகளில் தயாரிக்கப்பட்டகள், ‘தோப்பிகள்’ எனப் பெயர் பெற்றிருக்க கூடும் என்று கருதுவார் டாக்டர் மா.இராசமாணிக்கனார். பன முதலிய மரங்களிலிருந்து மாறுபட்டது இந்தத் தோப்பிகள் என்பதை ‘இல்லடுகள்’ என்ற தொடர் புலப்படுத்துகிறது.

------------------

நறும்பிழி (நெல்லரிசிகள்):

 

தொண்டை நாட்டில் வாழ்ந்த ‘வலையர்’ என்பார் தயாரிக்கும் கள் ‘நறும்பிழி’ எனப்பட்டது. குற்றாத கொழியில் அரிசியைக் களி போல் துழாவிக் கூழாக்குவார்கள். பின் அதனை ஆறச் செய்ய, வாயகன்ற தாம்பாளம் போன்ற தட்டுப் பிழாவில் ஊற்றி ஆற்றுவர். நெல் முனையை இடித்து அக்கூழிற் கலப்பர்; கலந்த இக்கூழினை இரண்டு நாட்கள் சாடியில் ஊற்றி வைப்பர். நன்கு ஊறிய பின்பு விரலாலே அரிப்பர். இவ்வாறு அரிக்கப்படும் கள் மிகுந்த சுவையினை உடையதாக இருக்கும். நறும்பிழி எனப்படும் இக்கள்ளினை வலையர்கள் உண்டு மகிழ்ந்தனர் என்னும் செய்தியினைப் பெரும்பாணாற்றுப் படையில் காணலாம்.

----------------

பெண்ணைப் பிழி (பனங்கள்):

 

காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த பரதவர்கள் பனங்கள்ளைப் பருகிய செய்தி பட்டினப்பாலையில் குறிக்கப்பட்டுள்ளது.

--------------------

நறவு:

 

நன்னனது மலைநாட்டில் வாழும் மக்கள் நடத்தும் விருந்தில் தேக்கள் தேறலையும், நறவு எனப்படும் கள்ளினையும் பரிமாறி உண்டதாகத் தெரிகிறது. ‘நறவு’ என்பது நெல்லரிசி கொண்டு அமைக்கப்பட்ட ‘கள்’ ஆகும்.

------------------------

பூக்கமழ் தேறல்:

 

செல்வந்தர்களின் மாளிகைகளிலும் அரண்மனைகளிலும் இவ்வகை மது பருகப்பட்டது. பொற்கலசங்களில், தேக்கள் தேறல் போன்றவற்றில் இஞ்சி, குங்குமப்பூ போன்ற மணங்கமழும் பூக்களை இட்டுத் தயாரிக்கப்படுவதே ‘பூக்கமழ் தேறல்’ ஆகும். அரசர்கள் இத்தகு தேறலை உண்டு வாழ்ந்த வரலாற்றை மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியில் குறிப்பிடுகிறார்.

-----------------

கட்சுவையும் – பழச்சுவையும்:

 

படைவீரர்கள் கள்ளை விரும்பிக் குடிப்பதால் நாவில் ஏற்படும் புளிப்பு வேட்கைக்குக் களாப்பழமும், துடரிப்பழமும் உண்டனர். அப்படியும் நீர் வேட்கை தணியாமையால், கருநாவல் பழத்தைப் பறித்து உண்டனர். கள் உண்டதால் ஏற்பட்ட நீர் வேட்கையைக் களாப்பழமும், துடரிப்பழமும். கருநாவற் பழமும் தணிவித்ததுடன் உடலுக்கு உரமாகவும் இவை விளங்கின. படை வீரர்கட்கு அளப்பரிய வலிமையையும் இவை அளித்தன. களாப்பழம் உடம்பு வலியைப் போக்குவதுடன் மலையைப் போன்று உடலுக்கு வன்மையை அளிக்கும் குணம் உடையது. கருநாவற்பழம் கள் அருந்துதலால் ஏற்படும் உடல் வறட்சியைப் போக்கி உடலுக்கு உரமளிக்கும் தன்மையுடையது என்பதை மூலிகைக் குணபாடம் வழி அறியலாம். எனவே, கள்ளைப் பருகினாலும், அதன் தீமைகளிலிருந்து உடலைப் பாதுகாக்கும் வகையில் பழ வகைகளையும் அக்காலத்தில் உண்டனர். அதனால் கள் உடலுக்குத் தீமையை உண்டாக்கவில்லை.

--------------------

கண் சிவக்கும் கள்:

 

வையை ஆற்றில் நீராடிய தலைவி உடலின் ஈரம் புலர வெப்பத்தைத் தரும் கள்ளைப் பருகினாள். கள் பருகுவதற்கு முன் நெய்தற் பூவைப் போன்ற கருமையாக இருந்த கண்கள் கள்ளைப் பருகியபின், நறவம் பூவைப் போல சிவந்தனவாம். அவ்வளவு வெப்பத்தினை அளிக்க வல்ல கள்ளைப் பருகி, நீராடிய களைப்பைப் போக்கி மகிழ்ந்தனர் அக்கால மகளிர் என்பதைப் பரிபாடல் உணர்த்தும்.

 

குளிரைப் போக்கும் கள்:

 

தானைத் தலைவன் ஒருவன் போருக்குச் செல்லத் தயாராகின்றான். அப்போது நடுக்கத்தைத் தரும் குளிரிலிருந்து உடம்பைப் பாதுகாக்க நாறால் வடிக்கப்பட்ட ‘நறவு’ என்னும் கள்ளைப் பருகிச் செல்கின்றான். உண்டார்க்கு வெம்மையை அளிக்கும் குணம் நறவு கள்ளுக்குண்டு என்பதைப் புறுநானூற்றுப் பாடல் கருத்து குறிப்பிடுகிறது.

------------------

வழி நடை வலியைப் போக்கிய கள்:

 

பரிசில் பெற வழிநடை சென்ற பாணர்களுக்கு ஏவல் மகளிர் பொன்னாற் செய்த வட்டில் நிறையக் கள்ளினை அளித்தனர். அக் கள்ளினைப் பாணர்கள் பருகி வழிநடையால் ஏற்பட்ட உடல் வலியைப் போக்கிக் கொண்டனர். போதைக்கு மட்டுமின்றி உடல் வலியைப் போக்குவதற்கும் அக்கால மக்கள் கள் பருகியமையை இச்செய்தி உணர்த்தும்.

 

இவ்வாறு பழந்தமிழர் பழக்கத்தில் நிலவிய பலவகை மதுவும், கள்ளும் போதைக்காகவும் உடல் நலத்துக்காகவும் பயன்படுத்தப்பட்டதை அறியலாம். இக்காலத்து, தென்னை, பனை, ஈந்து, அரிசி போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் மது, வயிறு, நுரையீரல் போன்ற உள் உறுப்புகளின் நோய்களுக்கு மருந்தாவதை நோக்கும்போது சங்க காலத்துத் தயாரிக்கப்பட்ட இவ்வகை மதுவும், கள்ளும், உடல்நலத்தைக் கெடுக்கவில்லை என்பதையும், மாறாக இவை குளிர்காலங்களில் உடலுக்கு வெம்மையைத் தந்து, வழிநடையின் பொது வலியைப் போக்கிக் களைப்பையும், நீர் வேட்கையையும் தணித்து உடலுக்கு உரம் அளித்த திறத்தினையும் அறியலாம்.

 

மதுவையும் கள்ளையும் பயன்படுத்திய பழந்தமிழர் இவற்றுடன் களா, துடரி, கருநாவல், இஞ்சி, குங்கும்பூ, இலுப்பைப்பூ போன்ற மருத்துவக் குணமுடைய துணைப் பொருட்களையும் கலந்து உண்ட தால் உடல் வலிமை பெற்றனரேயன்றித், தீமை ஏதும் பெறவில்லை என்பதை அறியலாம். பழந்தமிழர் மதுப்பழக்கம் இக்கால மதுவினின்று முற்றிலும் வேறுபட்டது. இயற்கைப் பொருட்களி லிருந்து அவை தயாரிக்கப்பட்டதால் உடலுக்கு நன்மை அளித்தன. அதனால் தான் ஔவை போன்ற பெண்பாற் சான்றோர்களும் அதனைப் பருகி மகிழ்ந்து போற்றினர். அவ்வகையில் பழந் தமிழரின் நலவாழ்வுக்கு உறுதுணையாகும் வகையில் அமைந்த நலம் தரும் பழக்கங்களில் தலைசிறந்த பழக்கமாக ‘மதுப் பழக்கம்’ இருந்தது. பிற்காலத்தில் சித்தர்கள் பட்டைச் சாராயம் என்னும் பெயரில் தயாரித்த மதுவுக்கும் சங்க கால ‘மது’, ‘கள்’ ஆகியவற்றுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. சங்க கால மதுவின் விரிவான வளர்ச்சியைச் சித்தர்களின் பட்டைச் சாராயத் தயாரிப்பில் காணலாம். அறிவியல் அடிப்படையில் இதனை ஆராய்ந்தால், சங்ககால மக்கள் பருகிய ‘நலம் தரும் நன் மது’வாகப் புதியதொரு மதுவை உருவாக்கலாம். அதன் மூலம் இக்கால ‘தீமை தரும் மது’வை ஒழிக்கலாம்.

---------------------

கருப்பஞ்சாறு:

 

இக்காலத் தமிழக நகர்ப்புற வீதிகள் தோறும் கருப்பஞ்சாறு விற்பதையும் மக்கள் அதனை விரும்பி உண்பதையும் காண்கிறோம். சங்ககாலத்தும் இப்பழக்கம் இருந்ததைக் ‘கரும்பின் தீஞ்சாறு விரும்பினர் மிசைமின’ எனும் பெரும்பாணாற்றுப்படைக் குறிப்பின் வழி அறியலாம்.

---------------

பல்வகைப் பழங்கள் உண்ணும் பழக்கம்:

 

இயற்கை அளித்த இனிய மருந்து ‘பழங்கள்’ என்றால் மிகையன்று. பழங்கள், உடல் வலிமைக்கும், அழகைப் பராமரிக்க உதவும் இயற்கை மருந்தாகும். பருவ நிலைகளுக்கேற்ப தோன்றும் பல்வகைப் பழங்கள் உண்பதால் இயற்கைச் சக்தி உடலில் குன்றாது காக்கப் பெறுவதுடன் பருவ நிலைக்கும் ஏற்ற உடல்நிலையைப் பெற்று நோயணுகாது வாழலாம். அறுசுவையளிக்கும் பழங்கள் இனிய உணவாகவும் இயற்கை மருந்தாகவும் பயன்படுகிறது. பழங்களை உண்ணும் பழக்கம் நல வாழ்வுக்குதவும் நற்பழக்கமாகும். சங்க கால மக்கள் மருத்துவக் குணமுடைய பல்வகைப் பழங்களை உண்ணும் பழக்கத்தினர். மா, பலா, வாழை, முந்திரி, நாரத்தை, நாவல், களா, துடரி போன்ற பழங்களை உண்டனர். தேமாங்கனி எனும் மாம்பழத்தை உண்பதால் பெருங்குடல் புற்று நோய், குடல் இறக்கம், குடல்வாய் அழற்சி போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுவதாக அண்மைக்கால ஆய்வுகள் கூறுகின்றன.

 

உடலுக்குக் காரச் சக்தியைத் தருவதில் வாழை நிகரற்றது. நீண்ட வாழ்நாளைத் தரும் தனிச் சிறப்புடையது நெல்லிக்கனி. நீர் வேட்கையைத் தீர்ப்பது நாவல். வயிற்றுக் கோளாறுகளை வராமல் தடுப்பது நாரத்தை. நரம்புகளுக்கு வலிமை தருவது முந்திரி, முக்கனிகளில் தனிச்சுவையுடைய பலாப் பழம் உடலுக்கு உரமளிக்கும் தன்மை கொண்ட தாகும். கள்ளின் மயக்கத்தைப் போக்க சங்கத் தமிழர் பலாப்பழத்தின் விதையை உண்டனர். உடலின் வலிமைக்கு மட்டுமின்றி ‘காப்பு மருந்தாகவும்’ விளாம்பழத்தை அக்காலத்தில் பயன்படுத்தினர். தயிர் கெடாமல் இருக்கவும் புளித்த நாற்றம் வீசாமல் இருக்கவும் தயிர்த் தாழியில் விளாம்பழத்தைப் போட்டனர். இவ்வாறு பழந்தமிழர் அன்றாட வாழ்வில் பழங்களைப் பயன்படுத்தி ஆரோக்கியத்தைப் பராமரித்தனர்.

 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=19067:2012-03-20-05-15-24&catid=25:tamilnadu&Itemid=137

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.