Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகுடி இசையும் பாம்புச் செவியும்

Featured Replies

மகுடி இசைக்குக் கட்டுண்டுதான் பாம்பு ‘படம்’  எடுத்து ஆடுகிறதா? இந்தக் கேள்வி நம்மில் சிலருக்கு இருக்காது.

ஏனெனில் ‘ஆம்’ என்கிற பதிலில் அசைக்கமுடியாத நம்பிக்கை. எனக்குச் சிறுவயது முதல் இக்கேள்வியும் அதற்கான மேற்படி பதிலில் நம்பிக்கையின்மையும் இருந்தது. குடவாசல் பாம்பாட்டி மகுடி கொண்டு வர மறந்து ஒரு முறை பாம்புக்கூடையின் மூடியை திறந்து அதைவைத்து ஆட்டியே பாம்பை படமெடுக்கச் செய்தது முதல்.

 

இதனால் சிறுவயதிலேயே எனக்கு இதற்கு தீர்வு தெரிந்துவிட்டது என்று சொல்லமாட்டேன். இப்பொழுதும் ரேடியோவில் புன்னாகவராளி கேட்கையில் அப்படி இப்படி பார்த்துவிட்டு, காலை நாற்காலி மீது மடித்து வைத்துக்கொள்ளுவேன்.


சரி, அப்ப விடை என்ன?



amrutha-2013-02-arunn-magudi-isai-pambu-



நம்மில் பலருக்கு மகுடி இசையை கேட்டுதான் பாம்பு படம் எடுக்கிறதா என்று சந்தேகம் இருக்கலாம். மகுடி இசை, புன்னாகவராளி என்று இருந்தாலும், இப்படி சந்தேகப்பட்டு வேறு விளக்கம் தேடுவதற்கு மற்றொரு காரணம் பாம்பிற்கு நமக்கு வெளிப்படையாக தெரிகிறார்போல் காது லேது. எப்படி சார் அப்புறம் அது மகுடி இசையெல்லாம் கேக்கும்?

 

அதுதாம்பா பாம்பு காதுங்கறது. நம்ம கண்ணுக்கு தெரியாது. ஆனா அதுக்கு கேக்கும். அண்ணே அண்ணே நாகராஜ் அண்ணேன்னு கூப்டாக்க ராமநாராயணன் படத்துலலாம் ஓடிவருதில்ல.


அதுவரை விளங்காத ஒரு விஷயத்தை விளக்கிக்கொள்ள பல சம சாத்யமுள்ள கருத்தாக்கங்கள் ஏற்படுமாயின், அதில் எது எளிமையானதோ, அதையே முதலில் சரியான விளக்கமாய் தேர்வு செய்யவேண்டும். இது  ‘ஓக்காமின் ஷவரக்கத்தி’ (Occam’s Razor) என்கிற சித்தாந்தம். அறிவியல் என்றில்லாமல், அறிவுத்துறை எதிலும் இச்சித்தாந்தத்தை மேற்படி வகை ‘பல்-விளக்கக்’ குழப்பங்கள் தோன்றுகையில் வழிகாட்டியாய் உபயோகிப்பார்கள். மகுடியும் பாம்புச் செவியும் விஷயத்திற்கு  ‘ஓக்காமின் ஷவரக்கத்தி’யை வைத்து வேறு எளிய விளக்கமும் குடுக்கமுடியும்.

 

ஒருவேளை மகுடியை ஊதுவதால் இல்லாமல், அந்த சாக்கில் பாம்பாட்டி அப்படி இப்படி மகுடியை ஆட்டுவதை கண்ணால் பார்த்து பாம்பு ஆடுகிறதோ. ஒரு தற்காப்பிற்கு எதிரியை (மகுடிய) அப்படியே படம் எடுத்து பயம் காட்டுகிறது என்று வைத்துக்கொள்ளலாமே. அட ஆமா, குடவாசல் பாம்பாட்டி மூடியை ஆட்டியதும் இதுக்குதானா. சரியா வரமாதிரி தான் இருக்கு. அப்ப பாலநாகம்மா, நீயா, வெள்ளிகிழமை விரதம்னு, மகுடி டான்ஸெல்லாம் உடான்ஸா?


சமீபத்திய ஆராய்ச்சி இவ்விஷயத்தில் என்ன சொல்கிறது? மேலே சொன்ன அனைத்தையும் தூக்கியடிப்பது போல, பாம்பிற்கு செவி உண்டு என்கிறது. அமேரிக்க பல்கலைகழக ஆராய்ச்சியாளார்கள் லியோ வான் ஹெம்மன், பால் ஃப்ரெய்டெல் மற்றும் புரூஸ் யங் தங்கள் ஆராய்ச்சி முடிவில் இரை நகர்வதை பாம்பு தன் காதால் கேட்டுதான் துரத்திப்பிடிக்கிறது என்று ருசுவுடன் நிருபிக்கிறார்கள். Auditory localization of ground-borne vibrations in snakes. Physical Review Letters 100, 048701 (2008) என்கிற ஆராய்ச்சிக் கட்டுரையில் தகவலறியலாம்.

 

பாம்பிற்கு வெளியே தெரிகிறார்போல் நம்மைப் போன்ற காதுகளும், மடல்களும் இல்லை. டிம்ஃபானிக் ஜவ்வும், சார்ந்த காதும் (tymphanic ear) கிடையாது எனலாம். ஆனால் நம் உள்நாக்கு போல, அதற்கு உள்காது உண்டாம்.  இந்த உள்காதுடன் பாம்பின் தாடைக்கு எலும்புத்தொடர்பு இருக்கிறது. அருகில் படத்தில் காட்டியுள்ளபடி.


பாம்பின் தாடை நுண்ணியமாக அதிர்கையில், இந்த ஸ்டேப்ஸும் அதிரும். இந்த அதிர்ச்சியை அதன் மூளை ‘கேட்கிறது’. ஸ்டேப்ஸ் என்னும் எலும்பு நம் காதிலும் உண்டு (உடம்பிலேயே மிகச்சிறிய எலும்பு). நமக்கு அது காற்றின் அழுத்த மாற்றங்களை, அதிர்வுகளை உணர்கிறது. ஆனால் இவ்விரண்டு ‘கேட்டல்’ களுக்கும் வித்தியாசம், பாம்பினது பிரதானமாய் நில அதிர்வுகளை உள்வாங்கிக் ‘கேட்கிறது’. நமது காற்றில் ஏற்படும் அழுத்த மாற்றங்களிலானான ஒலி அதிர்வுகளைக் ‘கேட்கிறது’.

 



amrutha-2013-02-arunn-magudi-isai-pambu-



பாம்பு நிலத்தில் ஊர்கையில் தூரத்தில் எலி ஓடினால் போதும். அந்த நுண்ணிய அதிர்வுகளை கூட தாடை உணர்ந்து, தானும் ஆடி, தன்னுடன் ஸ்டேப்ஸையும் ஆட்டி,  மூளைக்கு சிக்னலை விரட்டி, எலியை மாட்டி விடும்.

 

மண் தரையாக இருந்தால் இன்னுமே உத்தமம். எலிமுதல் எது நகர்ந்தாலும் அது குளத்தில் கல் போட்டால் பரவுவது போல நொடிக்கு 50 மீட்டர் வேகத்தில் அதிர்வுகளை மண்ணில் பரப்பும் (இந்த வேகம் மாறுபடும், ஒப்பிட்டுகொள்ள காற்றில் ஒலி அலைகளின் வேகம் நொடிக்கு 330 மீட்டர்). அந்த அதிர்வுகளின் வீச்சு (amplitude) மிகவும் கம்மி; ஒரு மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பாகம். ஆனாலும் அது பாம்பிற்கு கேட்குமாம். பாம்புச்செவி என்று சரியாகத்தான் சொன்னார்கள்.


இதில் மற்றொரு பிரமிப்பு இருக்கிறது. நாம் காற்றில் ஒலி அதிர்வுகளை அரை நொடி, அரைக்கால் நொடி தாமதத்தில் ஒரு காதிலும் அடுத்த காதிலும் விழுவதை வைத்து சத்தம் வரும் திசையை உணர்ந்து திரும்பி, சரேல் என்று வந்த ஆட்டோவில் மோதாமல் தப்பி (வூட்ல சொல்லிகினுவன்டியா, கஸ்…ம்) ரோட்டை கடப்போம். மனித, மிருக, பறவை இனங்கள் அனைத்தும் இப்படிச் செய்யும். இதையும் பாம்பு நிலத்தில் தாடை பதித்து, குறைவான வீச்சிலிருந்தும், சத்தத்தின் திசையை, ஊற்றை, இரையை கண்டுபிடித்துவிடுமாம். இதை பயோமெக்கானிக்ஸ், நேவல் என்ஜினியரிங், நியூரோனல் சர்கிட் என்று பல நிபுணத்துவங்களை வைத்து கணித மாதிரி செய்து ஆராய்ச்சி கட்டுரையில் நிருபிக்கிறார்கள்.

 

சுருக்கமாக, பயோமெக்கானிக்ஸ் தாடையும் ஸ்டேப்ஸும் எப்படி இயங்குகிறது என்பதை அனுமானிக்க; நேவல் இன்ஜினியரிங் மண்ணை திரவமாக கருதி அதன் அலைகளை அனுமானிக்க; நியூரோனல் சர்கிட் நிபுணம் ஸ்டேப்ஸ் அதிர்கையில் அது எவ்வாறு மூளைக்கு சிக்னல் கொடுக்கிறது என்று அனுமானிக்க.


இந்த ஆராய்ச்சியிலிருந்து அறிவது நில அதிர்வுகளை தன் உடலின் அதிர்வுகளாய் உணர்ந்து, தாடைக்கருகில், உட்செவியின் எலும்பில் உணர்ந்து அதை மூளைக்கு அனுப்பி, பாம்பு சப்தங்களை, இரையை, எதிரியை, ‘கேட்கிறது’.

 

இது பாம்புச் செவியைப் பற்றிய ஒரு பகுதி அறிதல்தானே. தான் ஊரும் நிலத்தில் எழும் அதிர்வுகளை நன்றாகக் கேட்கிறது என்பதால் மட்டும் காற்றினால் வந்தடையும் ஒலி அதிர்வுகளை அதனால் கேட்க முடியாது என்பது எப்படி நிச்சயமாகும்?


மனிதர்களைப்போல காற்றின் அழுத்த பேதங்களை ஒலி அலைகளாய் பாம்புகள் நேரடியாய் உள்வாங்குவதில்லை என்று நிரூபணம் ஆகுமாறு ஆராய்ச்சி முடிவுகள் சென்ற வருடம்தான் (2012) வெளியானது. Hearing with an atympanic ear: good vibration and poor sound-pressure detection in the royal python, Python regius, Christian Bech Christensen et al., J. Exp. Biol. 215, 331-342 (2012) என்கிற ஆராய்ச்சிக் கட்டுரையில் தகவலறியலாம்.

 

இங்கு ஒரு தகவலை விளக்கிக்கொள்வோம். ஒவ்வொரு சப்தத்திற்கும், அதன் ஒலி அதிர்வு எண்ணும், அதை எவ்வித டெஸிபல் தீவிரத்தில் வெளிப்படுத்தலாம் என்பதும் இரு வேறு விஷயங்கள். நாம் (மனிதர்கள்) 1000 ஹெர்ட்ஸ் ஒலிஅதிர்வு எண்ணுடன், 30 டெஸிபல்கள் தீவிரத்துடன் வெளிப்படும் சப்தத்தையும், அதனினும் குறைவான 30 ஹெர்ட்ஸ் ஒலிஅதிர்வு எண்ணுடன் ஆனால் 80 டெஸிபல்களில் வெளிப்படும் சப்தத்தையும் ஒரே ‘அளவிலான’ ஒலியாகவே காதுகளில் கேட்போம். அதாவது, அதிர்வு எண் குறைகையில் நமக்கு அவ்வொலியை கேட்கும் திறனும் குறைகிறது. அதனால், குறைவான அதிர்வு எண் ஒலியை அதிகமான டெஸிபல்களில் கொடுத்தால்தான் கேட்க இயலும். நம் பேச்சு ஒலிகள் சாதாரணமாய் 3000 முதல் 4000 ஹெர்ட்ஸ்களில் ஒலிக்கும். நம்மால் 50 ஹெர்ட்ஸ் ஒலி அதிர்வு எண்ணுடன், 30 டெஸிபல் தீவிரத்துடன் வெளிப்படும் சப்தத்தை கேட்கமுடியாது. ஆனால், அதே 30 டெஸிபல் தீவிரத்திற்கு, 200 ஹெர்ட்ஸில் வெளியாகும் சப்தத்தை கேட்கமுடியும். ஒவ்வொரு அதிர்வு எண்ணிற்கும், “குறைந்தபட்ச கேளல்” (threshold hearing) என்பது டெஸிபல் தீவிரத்துடன் பிணைந்துள்ளது.

 

amrutha-2013-02-arunn-magudi-isai-pambu-



இதையே பாம்புகளுக்கும் பொருத்தலாம். ஆனால் அவைகளின் கேளல் என்பதே உள்-காது வழியாக தாடை அதிர்வுகளால். காதுகளின் வெளிக்காது ஜவ்வுக்களால் இல்லை. பாம்புகள் நிலத்தில் ஊர்வதால், நில அதிர்வுகள் பொதுவாக குறைவான அதிர்வு எண்களில் தீவிரமாய் வெளிப்படும் என்பதையும் மனதில் கொள்ளுங்கள். இப்போது பாம்புகள் எவ்வாறு கேட்கிறாது என்கிற புதிய ஆராய்ச்சி முடிவுகளை விளக்கிக்கொள்வோம்.

 

பரிசோதனையில் பதினொரு மலைப்பாம்புகளை ஒவ்வொன்றாய் ஒரு கண்ணாடித் தரையில் படுக்கவைத்து, அவைகளின் உட்காதின் ஸ்டேப்ஸ் எலும்பிலிருந்து மூளைக்குச் செல்லும் தண்டில் மின்சாரத்தை அளக்கும் கருவியைப் பொருத்தி (இதுதான் இப்பரிசோதனையில் கடினம், புதுமை), அவைகளின் தலைகளிலும்  தரையிலும், அதிர்வுமானிகளை (வைப்ரோமீட்டர்) பொருத்தி, தரையின் மீது காற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் திருவிழா ’சவுண்ட் செட்’ ஒலிபெருக்கியின் மூலம், 80 முதல் 1000 ஹெர்ட்ஸ் ஒலி அதிர்வு எண் (frequency) மதிப்புகளில், 50 முதல் 110 டெஸிபெல்கள் சப்த அளவுகளில், வகை வகையாய் ஓசைகளை எழுப்பினார்கள். பாம்பினால் கேட்க முடிந்த குறைந்தபட்ச சப்தத்திலிருந்து அதியிரைச்சலான சப்தம் வரை. இரண்டு சாத்தியக்கூறுகளை பரிசோதித்தார்கள். முதலாவது, பாம்புகள் காற்றின் வழி பரவும் ஒலி அழுத்த வேறுபாடுகளை உணரவல்லது என்பது உண்மையா. இரண்டாவது, பாம்புகள் அதிர்வுகளை உணரவல்லது; ஆனால், ஒலி அழுத்த வேறுபாடுகளை உணரயியலா என்பதுதான் உண்மையா.

 

amrutha-2013-02-arunn-magudi-isai-pambu-



பரிசோதனையில் முதலில் தெளிந்தது பாம்பினால் நிச்சயமாய் காற்றின் வழி பரவும் ஒலியலைகளை நேரடியாகக் கேட்கமுடியவில்லை.

ஒலியலைகளை காற்றில் (ஒலிபெருக்கியில்) பாம்பு படுத்திருக்கும் தரையை நோக்கி, பாம்பிற்கு அருகில் எழுப்புகையில், அவ்வொலி தரையை அதிரவைக்கிறது. இதை தரையில் பொருத்தியிருக்கும் வைப்ரோகிராம் அளக்கிறது. தரையின் அதிர்வை பாம்பின் தாடை அதிர்வினால் உணர்கிறது. இதை பாம்பில் பொருத்தியிருந்த வைப்ரோகிராம் அளக்கிறது. 80 முதல் 160 ஹெர்ட்ஸ் வரையிலான குறைந்த அதிர்வு எண் கொண்ட ஒலியலைகள், தரையிலும், அதன் மூலம் தாடையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியதை விஞ்ஞானிகள் அளந்தார்கள். ஆனால் பாம்பில் நேரடியாக பொருத்தியிருந்த ஆடிவோகிராமில் எவ்வகையிலும் ஒலிகள் பதிவாகவில்லை. இதனால், காற்றில் எழும்பும் ஒலியை நேரடியாக (அதாவது நம்மைப்போல் ஜவ்வு ஆடுவதுமூலம்) பாம்பினால் கேட்கமுடியவில்லை என்பது ருசுவாகியது. அதேசமயம், ஒலி தரையில் ஏற்படுத்தும் அதிர்வை பாம்பினால் கேட்கமுடிவதும் ருசுவாகியது. அதாவது, பாம்பு காற்றில் ஏற்படும் ஒலியை, அது நிலத்தில் அதிர்வாய் பரவினால் கேட்கவியலும் என்பது தெரிகிறது.

 

ஆனால், ஒலி அதிர்வு எண்ணை 160 ஹெர்ட்ஸ் மதிப்பையும் கடந்து, அதிகரிக்கையில், அவ்வொலி தரையில் ஏற்படுத்தும் அதிர்வுகள் குறைந்துவிடும். இதனால், பாம்பின் தாடையிலும் அதற்கேற்றாற்போல் அதிர்வுகள் குறைந்துவிடுகிறது. இதனால் அதிக ஒலி அதிர்வு எண் கொண்ட சப்தங்களை, பாம்பினால் “நில அதிர்வு அதனால் தாடை அதிர்வு” எனும் வழியில் ‘கேட்கும்’ திறன் குறைந்துவிடுகிறது. நாம் பேசும் ஒலிகள் 3000 ஹெட்ர்ஸ் ஒலி அதிர்வு எண் மதிப்பில் என்று ஏற்கனவே பார்த்தோம். நாம் பேசுவதை பாம்புகளால் ‘கேட்க’ முடியாது. ஆனால், எவ்வளவு சப்தப்படுத்தாமல் மெதுவாய் அதன் அருகில் தரையில் நடந்தாலும், கேட்டுவிடும். பாம்புச் செவி.

 

இதில் ஆச்சர்யம், மேலுள்ள முடிவு ஒருவழிப்போக்கில் அமையவில்லை. ஒலி அதிர்வு எண் அதிகரிக்கையில், குறிப்பிட்ட எண்ணிற்கு மேல், அதன் மூலம் நில அதிர்வுகள் ஏற்படுவது மிகக்குறைந்துவிட்டாலும், பாம்பினால் அவ்வொலியை ‘கேட்க’ முடிகிறது என்பதை அதில் பொருத்தியிருந்த மூளைத் தண்டின் மின்சாரத்தை அளக்கும் கருவி சுட்டிக்காட்டியது. அதாவது, காற்றில் எழுந்த ஒலியினால், பாம்பின் உட்காதின் ஸ்டேப்ஸ் வழியாக, அதன் தாடை ஓடும் ஒலியலைகளினால் உந்தப்பட்டு அதிரத்துவங்கி (sound-induced vibration), அவ்வதிர்வுகள் மூளையினால் உணரப்பட்டு, பாம்பினால் ‘கேட்க’ முடிந்தது. நேரடியாக காற்றில் வரும் ஒலிகளை கேட்கமுடியவில்லை. ஆனால், சில அதிர்வு எண்களில் அக்காற்றொலி, மண்டையோட்டில் ஒலி-உந்து-அதிர்வுகளாய் மாறி பாம்பை உணரச்செய்கிறது என்பது புதிய ஆராய்ச்சி முடிவு.


இப்போது மகுடி இசைக்கு வருவோம்.

 

ஒப்பிடுவதற்கு, நம் இசையில், ‘ஒரு கட்டை’ ஸ்ருதியில், ஷட்ஜம் (ஸ ஸ்வரம்) கிட்டத்தட்ட 261 ஹெர்ட்ஸ்கள்; அடுத்த மேல் ஸ்தாயி (தரஸ்தாயி என்பார்கள்) ஸா ஸ்வரம், கிட்டத்தட்ட 523 ஹெர்ட்ஸ்கள். கீழ் ஸ்தாயி (மந்த்ரஸ்தாயி) ஷட்ஜம் 130 ஹெர்ட்ஸ்.

மேலே குறிப்பிட்ட ஆராய்ச்சி முடிவுகளை பரிசீலிக்கையில், பாம்பினால், காற்றில் எழும் ஒலியலைகளை (மகுதி இசையினால் என்று கொண்டால்), நேரடியாகக் கேட்க முடியாது என்பது புரிகிறது. அவ்வொலிகள் அருகில் நிலத்தில் பட்டு, நில அதிர்வுகளாய் பாம்பின் உட்செவியை அடையலாம். ஆனால், அதுவும் பாம்பினால் நன்றாகக் கேட்பதற்கு, 80 ஹெர்ட்ஸ் முதல் 120 ஹெர்ட்ஸ் வரையில் இருக்கவேண்டும் என்று 2012இல் வெளியாகியுள்ள ஆராய்ச்சி கூறுகிறது. அதாவது, மந்த்ரஸ்தாயி ஸா-விற்கும் குறைவான ஒலி அதிர்வு எண்ணுடனான சப்தம். மகுடியினால் இதை உருவாக்கி வெளிப்படுத்தமுடியாது.

 

அதனால் காற்றில் வரும் மகுடி இசையை அதனால் கேட்கமுடியாது என்று கருதலாம்.


மேலும், உட்காது இருந்தாலும், ஊர்கையில் தான் பாம்பின் அச்செவி நில அதிர்வுகளை உணர்கிறது என்றும் தெரிகிறது. தலையை நிலத்திலிருந்து தூக்கிவிட்டால், பாம்பிற்கு இந்தக் காது பயனற்றுபோய்விடுகிறது. (என்னய்யா படச்சவன் நம்மள இப்டி தல தூக்க வுடமாட்டேங்கறானே என்று பாம்பு(ம்) நொந்துகொள்ளுமோ?)

 

பாம்பாட்டியும் அப்படி குந்திகினு முதலில் காலால் தரையை தட்டி ஊறும் பாம்பின் ‘காதில் விழுவார்’. சரேல் என்று நிமிர்ந்து பார்க்கையில் மகுடி ஊதி, ஆட்டுவார். பாம்பு படமெடுத்து தொடரும். அது படமெடுப்பது, தான் கண்ணால் கண்ட எதிரியை (மகுடியோ, மூடியோ, நாமோ) தற்காப்பிற்காக பயமுறுத்தி தன்னை நெருங்கவிடாமல் செய்வதற்கு.


ஆகையால், கட்டுரையின் முதலில் நாம் ஊகித்த காரணம் சரிதான் என்று நினைக்கத்தோன்றுகிறது.

 

என்னங்க, இவ்ளோ சொல்லிட்டு ‘கேட்கமுடியாது என்று கருதலாம்’, ‘நினைக்கத்தோன்றுகிறது’ இப்படி ஜகா வாங்கறிங்களே என்றால். கட்டுரையை வாசித்துவிட்டு நாளைக்கு நான் சொன்னேன் என்பதற்காக வாசலில் பாம்பாட்டியின் பொழப்பை கெடுத்துட்டீங்கன்னா. சும்மா கிடந்த மகுடிய ஊதிக் கெடுத்தாமாதிரி ஆயிடுமே.

 

ommachi-arunn-3.png

http://www.ommachi.net/archives/3976

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.