Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் இலங்கை தொடர்பான அணுகுமுறையும் தமிழர் தரப்பின் எதிர்பார்ப்புக்களும் - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் இலங்கை தொடர்பான அணுகுமுறையும் தமிழர் தரப்பின் எதிர்பார்ப்புக்களும் - யதீந்திரா

 

சமீபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், இலங்கை தொடர்பான இந்திய அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட வேண்டுமென்று குறிப்பிட்டிருக்கின்றார். இந்தியாவின் ஜ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின்போதே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்திருக்கிறார். விடுதலைப் புலிகள் இருந்தபோது, இந்தியா எத்தகையதொரு கொள்கையை கடைப்பிடித்து வந்ததோ, அதனையே இப்போதும் இந்தியா கைக்கொண்டு வருகிறது. எனவே விடுதலைப்புலிகள் இல்லாத சூழலில், இந்தியா தனது இலங்கை தொடர்பான பழைய கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் சுரேஸ் மேற்படி நேர்காணலில் குறிப்பிட்டிருக்கின்றார். மேலும், இந்தியாவின் பாராமுகமே கொழும்பு, தமிழர்களின் நியாயமான அபிலாசைகளை புறக்கணித்து செயலாற்றுவதற்கான ஊக்கத்தை வழங்குவதாகவும் சுரேஸ் குற்றம் சாட்டியிருக்கின்றார்.
 
இந்தியா தமிழர்களின் பிரச்சனையில் போதிய அக்கறையெடுத்துக் கொள்ளவில்லை என்னும் அபிப்பிராயம் தமிழர் தரப்பில் நிலவுகின்றது. ஆனால் இந்தியாவை குற்றஞ்சாட்டுவதற்கான தார்மீக உரித்து எந்தவொரு தமிழர் தரப்பிற்கும் இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் அத்தகைய உரித்துடன் இந்தியாவை அணுகக்கூடியதொரு வாய்ப்பு, முன்னொரு காலத்தில் இருந்ததும் உண்மை. மேற்படி சுரேஸ் பிரேமச்சந்திரனின் வாதமும் அவ்வாறான அபிப்பிராயங்களில் ஒன்றுதான். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் இலங்கையின் மீது மேலும் சில அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம் என்னும் எதிர்பார்ப்புக்கள் மேலோங்கியிருக்கின்ற சூழலில், மீண்டும் அனைவரது பார்வையும் இந்தியாவின் பக்கமாக திரும்பியிருக்கின்றது. இலங்கை அரசும் இந்தியாவுடனான தனது உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதில் தீவிரம் காட்டி வருகின்றது. ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத் தொடரில், அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையை இந்தியா ஆதரித்திருந்ததன் பின்னணியில், கொழும்பிற்கும் புதுடில்லிக்குமான உறவில் சிறிது விரிசல் ஏற்பட்டிருந்தது. ஆயினும் அந்த விரிசலை மேலும் அகலப்படுத்தும் வகையில் கொழும்பு நடந்து கொள்ளவில்லை.
 
தமிழ் அரசியல் அவதானிகள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருவது போன்று, இலங்கையின் சமீபகால சீனத் தொடர்புகளை இந்தியா தனக்கு அச்சுறுத்தலான ஒன்றாக பார்க்கவில்லை என்றே தெரிகிறது. சீனா சமீபகாலமாக குறிப்பாக விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான போர் நிறைவுற்றிருக்கின்ற பின்னணியில், இலங்கையுடனான தனது பொருளாதார தொடர்புகளை அதிகரித்து வருகின்றது. இது மிகவும் வெளிப்படையான ஒன்று. இந்தியாவின் பார்வையில் இது ஒரு பொருளாதார தொடர்பு மட்டுமே. இந்தியா, இலங்கையுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது போன்று, சீனாவும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. சீனாவின் இலங்கை மீதான வர்த்தக தொடர்புகள் குறித்து, இந்தியாவில் இயங்கிவரும் சில அரசியல் அவதானிகள் அவ்வப்போது எச்சரிக்கை குறிப்புக்களை பதிவு செய்கின்ற போதும், இந்திய மத்திய அரசு இது குறித்து பெரியளவு கலக்கமடையவில்லை என்றே தெரிகிறது. ஆயினும் ஒருவேளை சிலர் குறிப்பிடுவது போன்று, எதிர்காலத்தில் ஒரு சீன-இந்திய யுத்தம் தோன்றுமிடத்து, சீனாவால் முன்னரை காட்டிலும் நெருங்கிவந்து தாக்குதலை மேற்கொள்ள முடியும் என்பதையும் இந்தியா அறியாமலில்லை.
 
ஆனால் கொழும்பு சீனாவுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்கின்றது என்னும் ஒரேயொரு காரணத்தை மட்டும் வைத்துக்கொண்டு, இலங்கையின் மீது இந்தியா கடுமையாக நடந்து கொள்ளப் போவதில்லை என்பது வெள்ளிடைமலையாக தெரிகிறது. இங்கு கவனிக்க வேண்டிய பிறிதொரு விடயமும் உண்டு - இன்றைய ஆளும் மகிந்த அரசாங்கம் ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் முதலில் இந்தியாவையே அணுகியது. இந்தியா அதற்கு உதவிசெய்ய மறுத்த நிலையிலேயே சீனாவை நாடியது. இந்தியாவை முழுமையாக பகைத்துக் கொள்வதால் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதை கொழும்பு நன்றாகவே விளங்கி வைத்திருக்கின்றது. அதேபோன்று, இலங்கை அரசாங்கத்தை முழுமையாக வெறுத்தொதுக்கும் வகையில் இந்தியாவும் செயற்படப் போவதில்லை. அமெரிக்காவும் அவ்வாறு செயற்படப் போவதில்லை. இத்தகையதொரு பின்னணியில்தான், இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா எந்தளவிற்கு கரிசனை எடுத்துக் கொள்ள முடியும் என்னும் கேள்வி எழுகிறது.
 
தமிழர் பிரச்சனையில், இந்தியா பாராமுகமாக இருக்கிறது என்பதே தமிழர் தரப்பின் ஆதங்கமாக இருக்கிறது. ஆனால் இது ஒருவகையில் பேருந்தை தவறவிட்டதால் மரநிழலொன்றில் ஒதுங்க வேண்டிய இக்கட்டு நிலைக்கு ஆளான ஒருவர், மீண்டும் பேருந்து வரவில்லையே என்று ஆதங்கப்படுவதற்கு ஒப்பான ஒன்றாகும். ஏனெனில் இந்தியா, இலங்கையின் வடக்கு கிழக்கை தாயகமாகக் கொண்டு வாழ்ந்துவரும் தமிழ் மக்களுக்கு, ஒரு நியாமான தீர்வு கிடைக்க வேண்டுமென்று கரிசனை எடுத்துக்கொண்ட நாட்களில், தமிழர் தரப்பு இந்தியாவின் மீது பாராமுகமாகவே இருந்தது. இன்று மீண்டும் இந்தியாவின் உதவியை தமிழர் தரப்பு எதிர்பார்கின்ற போதும், அதற்குரிய புறச்சூழல் இந்தியளவில் இல்லை. ஆனால் இலங்கை தமிழர் பிரச்சனையில் உரிமையுடன் தலையீடு செய்யக் கூடிய ஆற்றல் இந்தியாவிற்கு மட்டுமே உண்டு. அது இந்தியாவால் மட்டுமே முடியும். இந்த பின்னணியில் சுரேஸ் பிரேமச்சந்திரன் எதிர்பார்க்கும் கொள்கை மாற்றம் சாத்தியப்படுமா?
 
விடுதலைப்புலிகள் தமிழர் அரசியலை ஏகபோகமாக தீர்மானித்த காலத்தில், இந்தியா எட்ட நின்றது என்பது உண்மைதான். ஏனெனில் இந்தியாவைப் பொறுத்தவரையில், பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் அமைப்பானது, அரசியல் ரீதியாக எக்காலத்திலும் அணுக முடியாதவொரு அமைப்பாகவே இருந்தது. விடுதலைப்புலிகள் தமிழர் அரசியலை தீர்மானித்த கடந்த முப்பது வருடங்களில், இந்தியா தமிழர் குறித்து பெரியளவு அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்பதும் உண்மைதான். எனவே இன்று விடுதலைப்புலிகள் இல்லை என்ற நிலையில், இந்தியா முன்னரைப் போன்ற இறுக்கத்துடன் இலங்கை விடயத்தில் தலையீடு செய்யவேண்டும் என்றே சிலர் எதிர்பார்க்கின்றனர்.
 
இங்கு இந்தியா தமிழர் விவகாரத்தில் தலையீடு செய்ய வேண்டுமென்று எதிர்பார்ப்பவர்கள் ஒரு யதார்த்தத்தை குறித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அது- 87இல் இருந்த காங்கிரஸ் இந்தியா அல்ல இன்றிருக்கும் இந்தியா. அன்று இந்தியா அத்தகையதொரு முடிவை எடுப்பதற்கான புறச்சூழல் இருந்தது. ஆனாலும் மிகவும் காட்டமாக நடந்து கொண்ட சூழலிலும் கூட, இலங்கை மீதான இந்திய அவதானம் என்பது வெறுமனே தமிழர் பிரச்சனையென்னும் ஒரு தனித்த நிகழ்ச்சிநிரலுடன் (Single Agenda) மட்டுப்பட்டிருக்கவில்லை. இந்தியாவின் பிராந்திய நலன் என்னும் பரந்த அக்கறையில் தமிழர் பிரச்சனையும் ஒரு கவனிப்புக்குரிய விடயமாக இருந்தது.
 
ஆனால் அன்று இந்தியா தமிழர் விவகாரத்தில் காட்டிய ஈடுபாட்டை, விடுதலைப்புலிகள் மட்டுமல்ல, அன்றிருந்த மிதவாத அரசியல் தலைமையான தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. இத்தகையதொரு பின்னணியில்தான், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு, வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையை ஒரு வருட காலம் ஆட்சி செய்யக் கூடிய வாய்ப்பையும் பெற்றிருந்தது. வடக்கு கிழக்கை தமிழர்கள் ஆட்சி செய்த ஒரேயொரு சந்தர்ப்பமாகவும் அது அமைந்திருந்தது. அந்த ஒரேயொரு சந்தர்ப்பம் கூட காங்கிரஸ் இந்தியாவினால்தான் சித்தித்தது என்பதை இன்று எவரும் நினைத்துப் பார்ப்பதில்லை.
 
அன்று இந்தியாவின் ஈடுபாடு விடுதலைப்புலிகளால் மட்டுமல்ல, மிதவாதிகள், அதாவது வன்முறையை எக்காலத்திலுமே தீண்டியிராத அமைப்பென்று தங்களை பறைசாற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியினராலும் நிராகரிக்கப்பட்டிருந்தது. அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியில், தமிழரசுக் கட்சியும் ஓர் அங்கமாகவே இருந்தது. எனவே இவ்வாறு அன்று தமிழர் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்திய ஈ.பி.ஆர்.எல்.எப் தவிர்ந்த சகல தரப்பினராலும் நிராகரிக்கப்பட்ட சூழலில்தான், இந்தியா விரல்களை சுட்டுக்கொண்ட அனுபவத்துடன் இலங்கையிலிருந்து வெளியேறியது. இன்று அந்த அனுபவங்களை ஒதுக்கிவிட்டு, மீண்டும் தமிழர் பிரச்சனையில் இந்தியா தலையீடு செய்யவேண்டுமென்று கூட்டமைப்பு எதிர்பார்க்கிறது. இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு. தமிழர் தரப்பு வேண்டுமென்னும்போது வருவதற்கும் வேண்டாமென்றால் ஒதுங்கிக் கொள்வதற்கும் இது கால்பந்தாட்ட அணியில் இடம்பெறுவதுடன் தொடர்புபட்ட பிரச்சனையல்ல. இதனைக் கருத்தில் கொண்டே இந்தியாவின் சமீபகால அணுகுமுறையை நாம் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
 
விடுதலைப்புலிகள் தமிழர் அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்பட்டிருக்கின்ற சூழலில், இந்தியாவை தமிழர் தரப்பு அணுகக் கூடிய வாய்ப்புக்கள் ஏற்பட்டிருப்பது உண்மையாயினும், தமிழர் விவகாரத்தில் தலையீடு செய்வதற்கான வாய்ப்புக்கள் இந்தியாவைப் பொறுத்தவரையில் மட்டுப்பட்டதாகவே இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டே, தமிழர் தரப்பு சிந்திக்க வேண்டியிருக்கிறது. இந்தியாவின் மட்டுப்பட்ட எல்லைக்குள், எத்தகைய விடயங்களை எதிர்பார்க்க முடியும், அதில் இந்தியாவிற்குள்ள பொறுப்பு என்ன என்பதை துல்லியமாக மதிப்பிட்டே தமிழர் தலைமை செயலாற்ற வேண்டும். அத்தகையதொரு சூழலில்தான் இந்தியாவும் தமிழர் தரப்பின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க முயலும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.