Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளியருக்காக காத்திருத்தல்

Featured Replies

வெளியாருக்காகக் காத்திருத்தல் - நிலாந்தன்

 

மறுபடியும், மார்ச் மாதத்தை நோக்கி ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்புக்கள் பெருகத் தொடங்கிவிட்டன. அமைச்சர் பீரிஸின் இந்திய விஜயம் அமெரிக்கப் பிரதானிகளின் இலங்கை விஜயம் என்பவற்றின் பின்னணியில் ஜெனீவாவில் ஏதோ பெரிய திருப்பம் ஏற்படப்போகிறது என்ற விதமாக ஊகங்களை ஊடகங்கள் உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டன. இதில் உண்மையை விடவும் ஊடகங்கள் உருவாக்கும் மாயத்தோற்றமே பெரிதாகிக்கொண்டு வருகிறது. குறிப்பாக, படித்த, பத்திரிகை வாசிக்கின்ற, இணையத் தொடர்புடைய நடுத்தர வர்க்கத்தினர் ஊடகங்களின் தலைப்புச் செய்திகளின் பின் எடுபடத் தொடங்கிவிட்டார்கள்.

 

தமிழர்கள் இப்படியாக வெளியிலிருந்து வரக்கூடிய மீட்சிகளுக்காக காத்திருப்பது என்பது இதுதான் முதற்றடவையல்ல. இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் தமிழர்கள் தாங்கள் இனரீதியாக ஒடுக்கப்படுவதாக நம்பத் தொடங்கியபோது தோன்றிய ஒரு காத்திருப்பு இது. தென்னிலங்கையில் காலத்துக்குக் காலம்  நிகழ்ந்த இன வன்முறையில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் இந்தியாவை நோக்கி காத்திருப்பதிலிருந்து இது தொடங்கியது. பின்னர் ஆயுதப் போராட்டத்தின் எழுச்சியோடு, குறிப்பாக, திருமதி இந்திராகாந்தியின் காலத்தில் இக்காத்திருப்பு ஒரு புதிய வளர்ச்சியை அடைந்தது. இந்தியா ஒரு படை நடவடிக்கை மூலம் பங்களாதேசைப் பிரித்ததுபோல இலங்கைத்தீவிலும் ஒரு படை நடவடிக்கையை மேற்கொள்ளும் என்ற காத்திருப்பு 1987 வரை மிக வலிமையாகக் காணப்பட்டது.

 

ஐ.பி.கே.எவ்.உடனான மோதல் மற்றும் ரஜீவ் காந்திபடுகொலை செய்யப்பட்டமை என்பவற்றின் விளைவாக இந்தியாவின் கதவுகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து மேற்கத்தேய கதவுகள் ஓப்பீட்டளவில் அகலத் திறக்கப்பட்டன. எழுச்சிபெற்று வந்த புலம்பெயர் தமிழ்ச் சமூகமும் அதற்கு முக்கிய காரணம். தொடக்கத்தில் புலம்பெயர் சமூகமானது ஈழப்போரின் காசு காய்க்கும் மரமாகத்தான் காணப்பட்டது. அதன் பின் மூன்றாம் கட்ட ஈழப்போரின்போது அதுவொரு பிரித்துப்பார்க்க முடியாத நிதிப் பின்தளமாக மாறியது. மூன்றாம் கட்ட ஈழப்போரின் முடிவில் மேற்கு நாடுகளின் அனுசரணையுடனான சமமான முயற்சிகளின் பின்னணியில் அது, அபிப்பிராயங்களை உருவாக்கவல்லதும், தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்தவல்லதுமான ஓர் இரண்டாவது பின்தளம் என்று அழைக்கப்படக்கூடிய வளர்ச்சியைப் பெற்றது. இதனால் ஈழத்தமிழர்களின் காத்திருப்பு என்பது மேற்கையும் நோக்கித் திரும்பியது.

 

பின்னர் நாலாம் கட்ட ஈழப்போர் வெடித்தபோது மேற்படி மேற்கை நோக்கிக் காத்திருத்தல் என்பது உச்ச வளர்ச்சியை அடைந்தது. இடையிடை தமிழ் நாட்டை நோக்கியும் காத்திருப்பு திரும்பியதுண்டு. தோல்விகளின் கடற்கரையை நோக்கி ஒரு பெரிய சவ ஊர்வலம் போல சனங்கள் தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து கொண்டிருந்த காலம் அது. எனவே, பற்றிக்கொள்ள எது கிடைத்தாலும் அதைப் பற்றிக்கொண்டு மீண்டுவிட வேண்டும் எனும் தவிப்பே மேலோங்கியிருந்தது. அத்தகைய ஒரு பின்னணியில் கருணாநிதி மனிதச் சங்கிலிப் போராட்டம் என்றபோதும் தேர்தலில் வெல்வதற்காக ஜெயலலிதா ஈழத்தமிழர்களை தத்தெடுப்பது போலப் பேசியபோதும் சாதாரண ஈழத்தமிழர்கள் தமது நம்பிக்கைகளை மீண்டுமொரு தடவை தமிழ்நாட்டுத் தலைவர்களின் மீது முதலீடு செய்தார்கள்.

 

அதைப் போலவே அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின்போதும் ஓபாமாவிற்கான தமிழர்  அமைப்பின் மூலம் அமெரிக்காவின் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்தலாம் என்றவொரு நம்பிக்கை வன்னிப் பெருநிலத்தில் சாதாரண தமிழ் மக்கள் மத்தியில் பரவலாகக் காணப்பட்டது. ஓபாமாவின் பதவியேற்பு உரையின்போது அவர் ஈழத்தமிழர்களைப் பற்றிக் குறிப்பிடுவார் என்றொரு வதந்தியும் உலவியது. அரச ஊழியரான எனது நண்பர் ஒருவர் அப்பொழுது என்னிடம் வந்து எரிச்சலடைந்தவராகக் கேட்டார். 'ஓபாமாவை ஏன் இப்படி முரட்டுத்தனமாக நம்பவேண்டும்... ஒபாமா என்ன இவர்களுடைய வகுப்பறைச் சகபாடியா...' என்று ஒபாமா பதவிக்கு வந்தார். எதுவும் நடக்கவில்லை. பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கிய வணங்காமண் கப்பலும் வன்னிக் கரைகளுக்கு வந்துசேரவில்லை.

 

முடிவில் எல்லாக் காத்திருப்புகளும் வீண் என்றானபோது நந்திக் கடலை நோக்கி நடக்கத் தொடங்கிய இறுதி நாட்களில் படித்த மற்றும் அபிப்பிராயத்தை உருவாக்கவல்ல தமிழர்களின் மத்தியில் மேலுமொரு காத்திருப்பு மிஞ்சியிருந்தது. அதாவது, சு2P என்று  சுருக்கமாக அழைக்கப்படும் சுநளிழளெiடிடந  வழ Pசழவநஉவ எனப்படுகின்ற ஐ.நா. கோட்பாட்டுக்கமைய ஒரு வெளித்தலையீடு நிகழ முடியும்  என்பதே அது. ஆனால், நிலம் சிறுத்துக்கொண்டே போனது. யூதர்களின் நவீன வரலாற்றை ' 'எக்ஸோடஸ்' என்ற நாவலாக எழுதிய லியன் ஊரிஸ் தனது  நாவலில் கூறியதுபோல, அதிசயங்கள், அற்புதங்களின் காலம் எனப்படுவது எப்பொழுதோ முடிந்துவிட்டிருந்தது. அம்பலவன் பொக்கணை நெடுஞ்சாலை வழியாக கைகளை உயரத்தூக்கியபடி நடப்பதே இறுதித் தெரிவாக இருந்தது.

 

இப்படியாக சுமார் அரைநூற்றாண்டுக்கும் மேலாக ஏதோவொரு வெளிச் சக்திக்காக காத்திருந்த ஜனங்கள் நந்திக் கடற்கரையில் விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு சுமார் 4 ஆண்டுகள் ஆன பின்னும்கூட, மறுபடியும் வெளியிலிருந்து வரக்கூடிய மீட்சி ஒன்றுக்காக காத்திருப்பது  என்பதை எப்படி விளங்கி;கொள்வது?

 

முதலில் மேற்படி காத்திருத்தலின் புவிசார் சமூகப் பண்பாட்டு வேர்களைக் கண்டுபிடிப்போம். அதன் பின் இப்போதுள்ள மேற்கை நோக்கிய காத்திருத்தலின், அரசியல் அடிப்படைகளை ஆராய்வோம். முதலாவதாக மேற்படி காத்திருத்தலின் அரசியல் சமூக பண்பாட்டு அடிப்படை எதுவென்பது?

 

இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் தெற்கு மூலையில் தமிழகத்துக்கு கீழே இருக்கும் ஈழத்தமிழர்களின் புவிசார் அரசியல் அமைவிடம்தான் இதற்குரிய அடிப்படைக் காரணம். இவ்வமைவிடம் காரணமாக ஈழத்தமிழர்கள் எப்பொழுதும் தங்களைத் தமிழகத்தின் பின்னணியில் வைத்துச் சிந்தித்து வந்திருக்கிறார்கள். பெரும்பான்மைச் சிங்களவர்கள் மத்தியில் தங்களைச் சிறுபான்மையினராக உணரும்போதெல்லாம், தமிழர்கள் சிங்கள சமூகத்தினரைவிடவும் பெரியதும், வலியதும் ஆகிய தமிழகத்தின் தொடர்ச்சியாக தங்களை அடையாளப்படுத்துவதன் மூலம் இச்சிறு தீவில் தங்களை நிலைநிறுத்த முயன்றுள்ளார்கள்.  இலங்கை - இந்திய உடன்படிக்கையின் விளைவாக ஏற்பட்ட புதிய எதிர்மறையான அரசியற் சூழலில் மேற்படி ஈழ- தமிழக உறவில் குறிப்பாக அரசியற் தளத்தில்  ஓர் இடைவெளி ஏற்பட்டிருந்தாலும்கூட வேர்நிலை உறவில் அதாவது இனத்துவ மற்றும் சமூக கலை பண்பாட்டுத் தளங்களில் பாரதூரமான விரிசல்கள் ஏதும் ஏற்படவில்லை.

 

1990களிலிருந்து புலம்பெயர் தமிழ்ச் சமூகம் ஒரு நிதிப்பலமுடைய பின் தளமாக எழுச்சிபெற்றபோதும் அது ஓர் இரண்டாவது பின்தளமாகத்தான் காணப்படுகின்றது. உடனடியான முதல்நிலைப் பின்தளமாக தமிழகமே தொடர்ந்தும் காணப்படுகின்றது.

 

இத்தகைய ஒரு பின்னணியில்  தமிழகத்துடன் தங்களை இணைத்து அடையாளப்படுத்துவதிலிருந்து தொடங்கியதே இந்தியாவுக்காகக் காத்திருத்தல் என்பது. பிந்திய தசாப்தங்களில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் ஒரு பலமான இரண்டாவது பின்தளமாக மேலெழுந்தபின் மேற்குக்காகக் காத்திருப்பதுமாக மேற்படி காத்திருத்தலானது மைய இடப்பெயர்ச்சிக்கு உள்ளாகியது. இதுதான் ஈழத்தமிழர்களுடைய காத்திருப்பு அரசியலின் பின்னணி.

 

இந்தியாவை நோக்கிக் காத்திருப்பதிலிருந்து தொடங்கியது இப்பொழுது அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளை நோக்கிக் காத்திருப்பதாக மையமாற்றம் கண்டுள்ளது.  கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் தமிழ்ச் சினிமாவில் உச்சக்கட்டத்தை நோக்கிக் காட்சிகள் உணர்ச்சிகரமாகக் கட்டியெழுப்பப்படுவதுபோல, எதிர்பார்ப்புக்கள் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றன.

 

ஆனால், இது தமிழ்ச் சினிமாவைப் பார்பதைப் போன்றது அல்ல. தமிழர்கள் இந்த இடத்தில் நிதானமாகவும், விஞ்ஞானபூர்வமாகவும் சிந்திக்கவேண்டும். இது முழுக்க முழுக்க மேற்கு நாடுகளின் முன் முயற்சிதான். இதில் புலம்பெயர் தமிழர்களுடைய பங்களிப்பென்பது ஒப்பீட்டளவிற்; குறைவு. சாதாரண தமிழர்களில் பலர் நம்புகின்றார்கள் இவையெல்லாம் புலம்பெயர்ந்த தமிழர்களின் முன் முயற்சிகளின் திரட்டப்பட்ட விளைவென்று. ஆனால், அது ஒரு சிறிதளவு உண்மை மட்டுமே. இப்படியொரு தீர்மானத்தைக் கொண்டு வருவது என்பது மேற்கு நாடுககளின் முகவர்களாகத் தொழிற்படும் சில அரச சார்பற்ற  நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மேற்கு நாடுகளின் ராஜதந்திரிகள், கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் எடுக்கப்பட்ட ஒரு முடிவுதான். இதில் தமிழர்கள் வெறும் கருவிகள் மட்டுமே.

 

அதாவது, மேற்குநாடுகளின் உலகளாவிய நிகழ்ச்சி நிரலின் கருவிகளாக தமிழர்கள் கையாளப்படுகிறார்கள். 1980களில் எப்படி பிராந்தியப் பேரரசின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப தமிழர்கள் கருவிகளாகக் கையாளப்பட்டார்களோ அப்படித்தான் இதுவும். சீனாவை நோக்கிச்சரியும் இலங்கை அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வருவதற்கான நிர்ப்பந்தங்களை பிரயோகிப்பதே மேற்கு நாடுகளின் இறுதி இலக்காகும்.

 

தமிழர்களிற்பலர் நம்புவதைப்போல, இலங்கை அரசாங்கத்தைத் தண்டிப்பது மேற்கு நாடுகளின் முதல்நிலை நோக்கம் அல்ல. கடந்த ஆண்டும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனால் பெரிய திருப்பங்கள் எதுவும் ஏற்படவில்லை. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் 35 வீதத்தை மட்டுமே நிறைவேற்றியிருப்பதாக அரசாங்கம் கூறுகிறது.

 

இந்நிலையில் இவ்வாண்டும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படும். அது கடந்த ஆண்டைவிட சற்றுக் கடுமையாக இருக்கக்கூடும். நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான கட்டமைப்புக்களை உருவாக்குவது, அவற்றுக்கான கால எல்லைகளை உடைய செயன்முறை வரைபடத்தை உருவாக்குவது போன்ற திசைகளிலேயே அதிகம் சிந்திக்கப்படக்கூடும். ஆனால், அரசாங்கம் ஏற்கனவே, இந்தியாவைச் சமாளிக்கும் முயற்சிகளில் இறங்கியிருப்பது தெரிகிறது. இதன் மூலம் வரப்போகும் தீர்மானத்தின் கடுமையைத் தணிக்க அல்லது மேலும் ஒரு கால அவகாசத்தைப் பெற அவர்கள் முயற்சிக்கக்கூடும். மேற்கு நாடுகளைப் பொறுத்த வரை அவர்களுக்கு தெரிவுகள் குறைவாகவே காணப்படுகின்றன. அரசாங்கத்தை வளைப்பதே அவர்களுடைய நோக்கம். முறிப்பது அல்ல.

 

இந்நிலையில், தமிழர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? வரப்போகும் தீர்மானம் உடனடிக்குத் தமிழர்களுக்குச் சாதகமாகவே அமையும். அதன் மூலம் தமிழர்களின் கோரிக்கைகளுக்குச் சர்வதேச அந்தஸ்தும் அங்கீகாரமும் அதிகரிக்கக்கூடும். ஆனால், விவகாரம் அதைவிட ஆழமானது. கடந்த சுமார்  மூன்று தசாப்தங்களுக்கு மேலான தமிழர்களின் காத்திருப்பு அரசியலின் மறுபக்கம் எனப்படுவது அவர்கள் சக்தி மிக்க அரசுகளின் நிகழ்ச்சி நிரல்களின் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள் என்பதே. வெளிச்சக்திகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கும் தமது நிகழ்ச்சி நிரலுக்கும் நடுவே நலன்சார் சமநிலை ஒன்றைக் கண்டு பிடிப்பதன் மூலம் வெளிச்சக்திகளை தமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட வைப்பதில் ஈழத்தமிழர்கள் இன்று வரையிலும் போதிய வெற்றிபை; பெறத் தவறிவிட்டார்கள். இலங்கை அரசாங்கம் தன்னை விடப் பலமான நாடுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கிடையில் எப்படி வெற்றிகரமாகச் சுழித்தோடுகின்றது என்பதை தமிழர்கள் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.

 

அரசாங்கம் இந்தியாவைச் சமாளிக்கும் வேலைகளை ஏற்கனவே தொடங்கிவிட்டது.

இந்நிலையில், சக்தி மிக்க மேற்குநாடுகளின்  நிகழ்ச்சி நிரலுக்கும் தமது நிகழ்ச்சி நிரலுக்கும் இடையில் ஒரு பொதுப் பரப்பைக் கண்டுபிடித்து அதைப் பலப்படுத்துவதென்றால், தமிழர்கள் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விவகாரம் உண்டு. இப்பொழுது கொழும்புக்கு எதிராக காய்களை நகர்த்துவது போலத்தோன்றும்  பெரும்பாலான மேற்குநாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடை இன்று வரையிலும் அகற்றப்படவில்லை. அதே சமயம், நாடுகடந்த தமிழீழ அரசிற்கு சட்ட ரீதியான சவால்கள் எதுவும் இதுவரை தோன்றவுமில்லை. எனவே, ஈழத்தமிழர்களுக்கான மேற்கு நாடுகளின்செய்தி மிகத் தெளிவானது. அதாவது ஆயுதப் போராட்டம் அல்லது ஆயுதமேந்திய நடவடிக்கை எதற்கும் அவர்கள் ஆதரவு தரப்போவதில்லை. பதிலாக ஜனநாயக விழுமியங்களை அடித்தளமாகக் கொண்ட செயற்பாடுகளுக்குத்தான் ஆதரவுண்டு. இப்போதுள்ள நிலைமைகளின் படி விடுதலைப்புலிகளுக்குப் பின்னரான ஈழத்தமிழ் அரசியல் எனப்படுவது ஜனநாயக அடித்தளத்தின் மீதுகட்டியெழுப்பப்படும் ஒன்றாக அமைந்தால் மட்டும்தான் தமிழர்களின் நிகழ்ச்சி நிரலுக்கும் சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலுக்கும் இடையில் ஒரு நலன் சார் பொதுப்பரப்பை பலப்படுத்த முடியும். இதில் ஈழத்தமிழர்கள் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் அல்லது இதற்கு எதிர்த்திசையில் சிந்திக்கும் ஒவ்வொரு கணமும் அவர்களை அரசியல் அனாதைகளாக்கிவிடும். ஏனெனில் சீனாவை நோக்கிச் சாயும் கொழும்பை வளைத்தெடுப்பதே மேற்குநாடுகளினதும், இந்தியாவினதும் உடனடி இலக்காகும். இது விடயத்தில் சீனாவைக் கைவிடுவது என்ற ஒரு முடிவை கொழும்பு எடுக்குமாயிருந்தால் முழு உலகமுமே ஈழத்தமிழர்களைக் கைவிட்டுவிடும். ஏற்கனவே, நந்திக் கடற்கரையில் கைவிட்டதைப்போல.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/88274/language/ta-IN/article.aspx

 

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
வெளியாருக்காகக் காத்திருத்தல்: பகுதி – 2

நிலாந்தன்


 

கடந்த வாரம் நான் எழுதிய வெளியாருக்காகக் காத்திருத்தல் என்ற கட்டுரையின் மீது சில நண்பர்கள் கேள்விகளைக் கேட்டிருந்தார்கள். அக்கேள்விகளின் சுருக்கம் வருமாறு,


1 வெளியாருக்காகக் காத்திருத்தல் என்பது ஈழத்தமிழர்களின் வேர்நிலை இயல்பா?
2 வெளியாருக்காகக் காத்திருந்து தமிழர்கள் இதுவரை பெற்றது என்ன?
3 ஏன் எந்தவொரு வெளிச்சக்தியும் தமிழர்களைப் பொறுப்பேற்கவோ அல்லது தத்தெடுக்கவோ தயாராகவில்லை.
4 தமிழர்கள் வெளியாருக்காகக் காத்திருப்பதை சிங்கள மக்கள் எவ்வாறு பார்க்கின்றார்கள்?
5 தமிழர்கள் நாட்டை வெளியாருக்கு காட்டிக்கொடுக்கின்றார்கள் என்று சிங்கள மக்கள் கருதமாட்டார்களா?
6 அப்படி கருதுமிடத்து நல்லிணத்திற்கான கதவுகள் திறக்கப்பட முடியாதபடி மூடப்படுமல்லவா?
7 உள்நாட்டில் நல்லிணத்திற்கான கதவுகள் மூடப்பட்ட அதேசமயம், வெளியிலிருந்து யாரும் தமிழர்களை தத்தெடுக்கத் தயாரில்லை என்ற ஓர் நிலையில் தமிழர்களின் எதிர்காலம் எப்படி அமையும்?
 

மேற்படி கேள்விகளுக்கான பதிலாகவே இன்று இக்கட்டுரை அமைகின்றது.


முதலாவது வெளியாருக்காகக் காத்திருத்தல் என்பது தமிழர்களின் அடிப்படை இயல்பா? என்படுவது. இலங்கைத் தீவின் நவீன வரலாற்றைப் பொறுத்த வரை இது ஓரளவிற்கு உண்மைதான். ஒரு மேற்கத்தேய அறிஞரின் கூற்றை இங்கு நினைவு கூரலாம். ‘இலங்கைத் தீவிலுள்ள சிறுபான்மையினர் பெரும்பான்மை உளச்சிக்கலோடு (majority Complex) காணப்படுகின்றார்கள் பெரும்பான்மையினர் சிறுபான்மை உளச்சிக்கலோடு (minority Complex) காணப்படுகின்றார்கள்” என்பதே அது. அதாவது, ஈழத்தமிழர்கள் பெரிய தமிழ்நாட்டின் நீட்சியாக தங்களைக் கருதுவதால் சிறிய இலங்கைத் தீவில் தங்களை பெரும்பான்மையாகக் கருதுகிறார்கள். அதேசமயம் சிங்கள மக்கள் பெரிய தமிழ் நாட்டுடன் தமிழ் மக்களை இணைத்துப் பார்ப்பதால் தங்களை இச்சிறு தீவில் சிறுபான்மையினராக உணர்கிறார்கள். இந்த மைனோறிட்டி கொம்பிளைக்ஸ்தான் இலங்கை இனப்பிரச்சினையின் வேர்நிலைக் காரணிகளில் ஒன்று எனலாம். கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டதுபோல, இலங்கைத் தீவில் தமிழர்கள் வெளியாருக்காகக் காத்திருத்தலின் தொடக்கம் இதுவே.


8929001-world-map-blue-300x150.jpg

 

ஆனால், அரசற்ற தரப்பாகிய தமிழர்கள் வெளியாரைக் கவர்வதற்கும், கையாள்வதற்கும் அடிப்படையான வரையறைகள் உண்டு. அதேசமயம் அரசுடைய தரப்பாகிய பெரும்பான்மையினர் வெளிச் சக்திகளை வெற்றிகரமாக கையாள முடியும். ஏனெனில், அரசிற்கும் – அரசிற்கும் இடையிலான இராஜீய உறவுகளின் மூலம் வெளிச்சக்திகளை வெற்றிகரமாகக் கையாள முடியும். வெளிச் சக்திகளைக் கையாள்வதைப் பொறுத்தவரை அரசற்ற தரப்பை விடவும் அரசுடைய தரப்பு எப்பொழுதும் முந்திக் கொண்டு விடும். இது காரணமாகவே இலங்கைத் தமிழர்கள் எந்தெந்த வெளிச்சக்திகளுக்காக காத்திருந்து வந்தார்களோ அவை அனைத்தையும் இலங்கை அரசாங்கங்கள் வெற்றிகரமாக கையாள முடிந்திருக்கின்றது. இதனால்தான் ஈழத்தமிழர்களின் காத்திருப்பு எந்தப் பயனையும் கொடுக்கவில்லை. மாறாக, எல்லா வெளிச் சக்திகளும் ஈழத்தமிழர்களை தமது நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் கருவிகளாகவே கையாண்டுவிட்டு கடைசியில் காரியம் முடிந்த பின் கைகழுவி விட்டிருக்கின்றார்கள்.


அதேசமயம் தமிழர்கள் தரப்பில் இலட்சியவாதத்தால் சூழப்பட்டு நெகிழ்ச்சியற்றிருந்த நிகழ்ச்சி நிரலும் ஒரு முக்கிய காரணம் தான். ஈழத்தமிழர்கள் யதார்த்தமாகச் சிந்திப்பவர்கள் இல்லை என்றதொரு கருத்து உலகின் சக்தி மிக்க இராஜதந்திரிகளில் கணிசமானவர்கள் மத்தியில் காணப்படுகின்றது. அரசாங்கத்தை ஒரு கட்டத்திற்கு மேல் நெருக்க முடியாது என்றே அவர்கள் கருதுகின்றார்கள். அண்மையில் இலங்கைக்கு வந்த அமெரிக்க பிரதிநிதிகளும் தமிழ் அரசியல் வாதிகளுடனான சந்திப்பின்போது இதை சூசகமாக உணர்த்த முற்பட்டிருக்கின்றார்கள். அதாவது அரசாங்கத்தை ஒரு கட்டத்திற்கு மேல் இறுக்கிப்பிடித்தால் பிராந்திய மட்டத்தில் தமக்குப் பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதே அது.


எனவே, வெளிச்சக்திகளின் அழுத்தம் எனப்படுவது அவர்களுடைய நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே இருக்கும் நிச்சயமாக தமிழர்கள் கற்பனை செய்யும் உச்ச எல்லைகளை அது தொடப்போவதில்லை. அதேசமயம் உள்நாட்டிலும் நல்லிணக்கத்திற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இல்லை. இந்நிலையில் தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியல் எப்படி அமையும்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிலைமைகளின் பாரதூரத் தன்மையை விளங்கி வைத்திருக்கின்றதா? கொள்கைத் தீர்மானங்களாலன்றி, டீல்கள் மூலம் நிலைமைகளை கையாள முடியும் என்று அவர்கள் நம்புகின்றார்களா?


இந்த இடத்தில் ஒரு கசப்பான உண்மையை சுட்டிக்காட்ட வேண்டும்;. வெளியாருக்காகக் காத்திருத்தல் என்பது பொதுவான ஓர் ஈழத்தமிழ் மனோநிலை மட்டுமல்ல. அது அநேகமான தமிழ் அரசியல்வாதிகளின் மனோநிலையும்கூடத்தான். போர் முடிவுக்கு வந்தபின்னரான தமிழ் அரசியல் சூழல் எனப்படுவது அவ்வாறுதான் காணப்படுகின்றது. தமிழ் பேரம்பேசும் சக்தியின் கணிசமான பகுதியே அதுவாகத்தான் இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதற்கு விதிவிலக்கல்ல. யுத்தத்தின் வெற்றிகளால் உள்நாட்டில் யாராலும் அசைக்கப்பட முடியாதபடிக்கு, மிகப் பலமாக காணப்படும் ஓர் அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு தீர்வைப் பெறுவதாக இருந்தாலும் வெளி அழுத்தம் அவசியம் என்றே எல்லா தமிழ் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் கருதுவதாகத் தெரிகின்றது. இது ஒரு விதத்தில் இயலாமையின் பாற்பட்டதே. எனினும், இலங்கைத்தீவின் இன யதார்த்தம் அப்படித்தான் இருக்கின்றது. கொழும்பிலுள்ள தலைமைகள் தரக்கூடிய தீர்வு எதையும்; தமிழ்மக்கள் ஏற்கப்போவதில்லை. தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு எதையும்; கொழும்பில் உள்ள தலைமைகள் தரப்போவதில்லை. எனவே, மூன்றாம் தரப்பு அதாவது ஒரு வெளித் தரப்பு தலையிட்டால் தவிர தீர்வுக்கு வழியே இல்லை.


இனப்பிரச்சினைக்குத் தீர்வாக இதுவரையும் எட்டப்பட்ட இரண்டு உடன்படிக்கைகளும் இவ்வாறு வெளிச்சக்திகளின் தலையீட்டின் மூலம் பெறப்பட்டவைதான். இலங்கை – இந்திய உடன்படிக்கைக்குப் பின்னால் இந்தியா நின்றது. ரணில் -பிரபா உடன்படிக்கைக்குப் பின்னால் மேற்குநாடுகள் நின்றன. வெளிசக்திகள் தலையிடக்கூடிய அளவிற்கு ஓர் இன இடைவெளி எனப்படுவது இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் எப்பொழுதும் இருந்து வந்துள்ளது. இந்த இன இடைவெளியின் நேரடி விளைவே வெளியாருக்காகக் காத்திருப்பது அல்லது வெளியாரின் உதவி பெற்று எதிர்தரப்பை தோற்கடிப்பது என்ற மனோநிலையாகும். இந்த இனஇடைவெளி நிலவும் வரை நல்லிணக்கத்திற்கு இடமேயில்லை. இறையாண்மைக்கும் சோதனைகள் இருக்கும்.


நந்திக் கடலில் பெற்ற வெற்றிகளோடு நாட்டின் இறையாண்மைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் முடிவுக்கு வந்துவிட்டதாக ஒரு நம்பிக்கை கொழும்பில் பலமான ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது உண்மையல்ல. தமிழ் மக்களின் அரசியலானது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தவரை அது நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் என்றே கொழும்பில் கருதப்பட்டது. விடுதலைப்புலிகளைத் தோற்கடித்ததோடு அந்த அச்சுறுத்தல் அகற்றப்பட்டுவிட்டதாகவும் நம்பப்படுகின்றது. ஆனால், விடுதலைப்புலிகள் இருந்த வரை தமிழ் மக்களின் அரசியல் வெளி எனப்படுவது வெளிச் சக்திகளுக்கு மூடப்பட்டதாக இருந்தது. அதில் வெளிச்சக்திகள் இலகுவாக உள்நுழையவோ அல்லது அதைக் கையாளவோ முடியாமலிருந்து. ஆனால், விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதோடு, தமிழ் மக்களின் அரசியல் அரங்கானது முற்றுமுழதாகத் திறக்கப்பட்டுவிட்டது. இப்பொழுது அதை வெளியார் இலகுவாகக் கையாள முடியும்.


கொழும்பின் மீது அழுத்தத்தை பிரயோகிக்க விளையும் எந்தவொரு வெளிச்சக்தியும் மேற்படி திறக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் பரப்பை எளிதாகக் கையாள முடியும். யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் காணப்படும் தடைகள், மேலும் இதை ஊக்குவிக்கும். எனவே, மேற்படி விளக்கத்தின் படி கூறின் நாட்டின் இறையாண்மை பலவீனமான நிலையில் உள்ளது என்பதே சரி. ஜெனிவா மாநாட்டை எதிர்நோக்கியிருக்கும் ஒரு காலச் சூழலில் அமைச்சர் பீரிஸ் இந்தியாவிற்குப் போனமை, அமெரிக்கபிரதானிகள் இலங்கைக்கு வந்தமை மற்றும் மார்ச் மாதத்தை நோக்கி நிகழும் பதட்டம் கலந்த எல்லா காய் நகர்த்தல்களும் இதைத்தான் பிரதிபலிக்கின்றன.


விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரான இலங்கைத் தீவானது ஒப்பிட்டளவில் அதன் இறையாண்மையை இழந்து கொண்டிருக்கின்றது என்பதே உண்மை நிலை. சக்தி மிக்க நாடுகளுக்கிடையில் இந்த அரசாங்கம் வெற்றிகரமாகச் சுழித்தோடுகிறதுதான். எனினும் ஒரு பேரரசிடமிருந்து தன்னைப் பாதுகாப்பதற்காக இன்னொரு பேரரசிடம் பணிந்துபோகவேண்டியிருக்கின்றது. இங்கேயும்இறையாண்;மை இழக்கப்படும். நாட்டுக்குள் சக இனங்களுடன் நல்லிணக்கத்திற்கு வரத் தவறும் போது வெளியாரிடம் பணியவேண்டி ஏற்படுகின்றது. இறையாண்மை எனப்படுவது உள்நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தின் மீதே கட்டியெழுப்பப்படுகின்றது. நல்லிணக்கம் எப்பொழுதும் வென்றவர்களிடமிருந்தே வர வேண்டும். இனங்களுக்கிடையில் வென்றவர் – தோற்றவர் என்ற பிளவு கூர்மையுற்றுக் காணப்படும்போது அது வெளிச் சக்திகளுக்கே வாய்ப்பை கொடுக்கின்றது. அதாவது இறையாண்மை சோதனைக்குள்ளாகிறது. சக்தி மிக்க நாடுகள் இலங்கைத் தீவின் ஒருபிரிவினருடைய அரசியலை கையாள முற்படுகின்றன எனப்படுவது இலங்கைத்தீவின் இறையாண்மை சோதிக்கப்படுகின்றது என்றே அர்த்தம். ஆயின், நந்திக் கடலில் இலங்கை பெற்றது வெற்றியா? அல்லது தோல்வியா?

 

 

http://www.nillanthan.net/?p=82

  • 1 month later...
  • தொடங்கியவர்

இப்பொழுது தமிழர்கள், குறிப்பாக தமிழக மாணவர்கள் வழிகாட்டலில். நாமே எமது தலைவிதியை நிர்ணயிக்கவும் எமது தளத்திலே / பலத்திலே நின்று கோரிக்கைகைகளை முன்னெடுக்கவும் வழி சமைத்து வருகின்றார்கள்.
 
மக்களை இந்த அணியில் சேர்ப்பது எமது ஆய்வாளர்களின் இன / வரலாற்று கடமை !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.