Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“விஸ்வரூபம்” விவாதங்களும் சர்ச்சைகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“விஸ்வரூபம்” விவாதங்களும் சர்ச்சைகளும்–அ,ராமசாமி,ஜமாலன்,கலையரசன்,ராஜன் குறை


 

 

ethuvarai-09-last01-1024x448.jpg


 

“விஸ்வரூபம்” திரைப்படம் தொடர்பாக எழுந்துள்ள கருத்து விவாதங்களும் சர்ச்சைகளும் தொடர்பில், தமிழ்ச் சூழலில் எழுதிவரும் ஆளுமைகளிடம் சில வினாக்களை முன்வைத்து கருத்துக்களை,பார்வைகளை தொகுத்து பதி வேற்றியுள்ளோம்.அ,ராமசாமி,ஜமாலன்,,கலையரசன்,ராஜன் குறை ஆகியோர் தமது கருத்துக்களை இங்கு பதிவு செய்துள்ளார்கள்.


 


 


-அ,ராமசாமி


*”விஸ்வரூபம்” திரைப்படத்தினையொட்டி நடைபெற்று வருகின்ற, படைப்பின் சுயாதீனம், கலைஞனின் உரிமை, படைப்பு சுதந்திரம், கலைஞனுக்குள்ள சமூகப் பொறுப்பு போன்ற விடயங்களை எப்படி பார்க்கிறீர்கள்?


ஏற்கெனவே பலரும் பலவிதமாக விவாதித்த விடயங்கள் தான். இந்த விடயங்களைக் கமல்ஹாசனின் விஸ்வரூபத்தை முன் வைத்து விவாதிக்கிறோம் என்பது கொஞ்சம் வருத்தமாகவே இருக்கிறது. கலையின் அடிப்படைக் கூறுகள் எதனையும் கொண்டிருக்காத வியாபாரச் சினிமாவை முன் வைத்து இதையெல்லாம் தமிழ்ச் சமூகம் விவாதிக்க நேர்வதை எப்படி விளங்கிக் கொள்வது?  என்றாலும் திரும்பவும் விவாதிக்கலாம். ’கலைஞனுக்குள்ள சமூகப் பொறுப்பு’ என்று கடைசியாகக் குறிப்பிட்ட வார்த்தைக் கூட்டத்திலிருந்தே அதற்கு முன்பிருக்கும் சொல்லாடல்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என நினைப்பவன் நான். கலைஞன் என்ற சொல்லுக்குள் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் அற்ற மனிதனின் இருப்பு இருப்பதாக நான் நம்புவது இல்லை. அதனால் அப்படி நம்புகிறவர்களின் கலை இலக்கிய வெளிப்பாடுகள் தான் சரியானவை என நினைப்பவர்களோடு எனக்கு உடன்பாடும் இருந்ததில்லை. இப்படிச் சொல்வதால் அத்தகைய கலை இலக்கிய வெளிப்பாடுகளைத் தடை செய்ய வேண்டும்; ஒதுக்க வேண்டும் என்று வாதிடுபவன் என நினைக்கவும் வேண்டாம். அத்தகைய கலை இலக்கிய முயற்சிகளில் எதிர்மறைக் கூறுகள் இருப்பதைவிட நேர்மறைக்கூறுகள் அதிகம் இருக்கின்றன என்பதால் அவற்றால் ஆபத்துகள் அதிகம் இல்லை என்றும் கூடச் சொல்வேன்.

 

rama-012.jpg

சமூகத்தின் தாக்கம் இன்றிச் சுயாதீனமாகப் படைப்பு உருவாகிறது என்ற அடிப்படையற்ற சொல்லாடலோடு எனக்கு எப்போதும் உடன்பாடு இல்லை. அப்படிச் சொல்பவர்கள் கலையின் தோற்றம், கலைக்கும் கலைஞனுக்கும் உள்ள உறவு, கலைப்படைப்புக்கும் அதன் நுகர்வோர்களுக்கும் உள்ள தொடர்புநிலை, அதனால் விளையும் தாக்கம் பற்றியெல்லாம் புரியாமல் இருக்கிறார்கள். அதையெல்லாம் புரிந்து கொண்டால் அப்படிச் சொல்ல மாட்டார்கள். புரியாமல் பேசுகிறவர்களோடு பேசிப் பயன் எதுவும் ஏற்பட்டு விடப் போவதில்லை. கலைஞனின் உரிமைக்கும் சாதாரண மனிதர்களின் உரிமைக்கும் பெரிய வேறுபாடுகள் இருப்பதாக நான் நம்பவில்லை. அதுவும் இந்தியா போன்ற பன்மைத்துவ சமூகத்தில் ஒவ்வொரு மனிதர்களும் பொறுப்போடு இயங்க வேண்டியதை வலியுறுத்துவதைப் போலக் கலைஞன் எனக் கருதிக் கொள்பவனுக்கும் பொறுப்புகள் இருக்கின்றன. பொறுப்பை உணராத நிலையில் அதனைச் சுட்டிக் காட்ட வேண்டிய கடமையும் இருக்கிறது. அந்தக் கடமையை தடைகளின் வழியாக உருவாக்க முடியாது..


பொறுப்புடனோ, பொறுப்பின்றியோ வெளிப்படும் கலைப் படைப்பை அல்லது ஊடகச் செயல்பாட்டை அல்லது கருத்தைத் தடுத்து விடுவதன் மூலம் அதைப் பற்றிய விமரிசனத்தை –விவாதத்தைத் தடுத்துவிடும் வேலையைச் செய்யக் கூடாது. வெளிப்பாட்டுக்குப் பின்பு தான் அந்த வெளிப்பாடு ஏற்படுத்தக் கூடிய சாதக – பாதகங்களைப் பேச முடியும். வெளிப் படுவதற்கு முன்பே தடுத்து விட்டால், உருவாக்கியவனுக்குச் சாதகமான கருத்துக்களே இங்கு உருவாகும். கமல்ஹாசனின் விஸ்வரூபத்தைத் தடை செய்ததின் தொடர்ச்சியாக அதுதான் நடந்துள்ளது. அந்தப் படத்தின் உள்ளடக்கம், முன் வைத்த மையக்கருத்தின் நோக்கம், அதன் சார்புநிலை, நிகழ்கால இந்தியா மற்றும் உலக நிகழ்வுகளின் மீதான கமல்ஹாசனின் பார்வை ஆகியன முழுமையாக விவாதிக்கப் படக்கூடிய வாய்ப்பை இந்தத் தடையும் தொடர்ச்சியான எதிர்ப்பும் திசைமாற்றியிருக்கின்றன. உன்னைப் போல் ஒருவன் படத்தைப் போல அதிகப் பார்வையாளர்களைச் சென்றடையாமல் ஒதுக்கப்படும் வாய்ப்புடைய ஒரு சினிமாவை பெரும்பான்மையான பார்வையாளர்களும் பார்த்தே ஆக வேண்டிய படமாக ஆக்கப்பட்டிருக்கிறது.


*. முஸ்லீம் அமைப்புகள் இத்திரைப்படம் தொடர்பாக எடுத்த நிலைப்பாடுகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


முஸ்லீம் அமைப்புகள் விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக எடுத்த நிலைப்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டியவை மட்டும் அல்ல. தவறான பாதையும் கூட. அவர்கள் எதிர்பார்த்த விளைவுகளுக்கு எதிரான விளைவுகளை இந்த முன்னெடுப்பு தந்திருக்கிறது. எதிர்பாராத நிலையில் திடீர்த் தாக்குதல் நடத்தும் தீவிரவாதம் போலவே விஸ்வரூபத்திற்குத் தடை வாங்கிய நிகழ்வு பார்க்கப்படும்; பார்க்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில்.  இப்படியொரு கடுமையான போக்கை எந்த ஒரு அமைப்பும் எடுக்கக் கூடாது என்பதே எனது நிலைப்பாடு. சிறுபான்மையினரோ, பெரும்பான்மையினரோ அவர்களுக்குள் இருக்கும் பன்முகத்தன்மையை ஒத்துக் கொள்ள வேண்டும். அவற்றுள் எத்தகைய அடையாளங்கள் நிகழ்காலத்தின் தேவை எனக் கருதி அவற்றை வளர்த்தெடுக்க வேண்டும். அதற்குப் பதிலாகப் பன்முகத்தன்மையை அழித்து ஒற்றைத் தன்மைக்குள் ஐக்கியமாகி விடும் ஆபத்தைச் செய்துவிடக் கூடாது.;


அடிப்படைவாதக் கருத்தியல்கள் எல்லாச் சமய நம்பிக்கைகளுக்குள்ளும் இருக்கவே செய்கின்றன. அடிப்படை வாதம் முற்றித் தீவிரவாதமாக மாறும் போக்கை விமரிசனம் செய்வதை சமயத்தை விமரிசனம் செய்வதாகப் பார்ப்பது சரியான பார்வை ஆகாது.  இசுலாமியர்கள் தீவிரவாத ஆதரவாளர்கள் என்று படம் பேசும் கருத்தியலை மேலும் உறுதி செய்யும் விதமாக அதனைத் தடுக்க முயன்ற இச்சூழலும் ஆகி விட்டது.


*. இத்திரைப்பட விவகாரத்தின்பின் நிகழ்ந்துவரும் உரையாடல்கள் தமிழ் முஸ்லீம் உறவில், அவர்களுக்கிடையிலான புரிதலில் எந்தளவிலான பாதிப்பினை, முரண்களை நிகழ்த்த வாய்ப்புள்ளது ?


முகநூல், தொலைக்காட்சி ஊடகங்கள் போன்றவற்றில் நடக்கும் உரையாடல்களையும் கருத்துப் பதிவுகளையும் பார்த்தால் பாரதூரமான பிளவுகளை உருவாக்கி விடுமோ என அச்சமாக இருக்கிறது. 1990 களுக்குப் பின் எழுந்த தலித்  எழுச்சியின் விளைவைத் தங்களுக்கு எதிரான ஒன்றாகப் பார்க்கும் ஆதிக்கச் சாதிக் கருத்தியலாளர்களைப் போல இசுலாமிய வெறுப்பை விதைக்கும் நபர்களும் இயக்கங்களும் இந்த நேரத்தைச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். நிகழ்காலக் கருத்தியல்களை விவாதிக்கும் கட்டுரைகளைச் சிறுபத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளனாகவும், பல்வேறு பல்கலைக்கழகங்களின் கருத்தரங்குகளில் மாணாக்கர்களையும் ஆசிரியர்களையும் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்த பல்கலைக்கழக ஆசிரியனாகவும் சிலவற்றைச் சொல்ல நினைக்கிறேன்.


1990 களில் பேசப்பட்ட தலித் கருத்தியல்களை 2000 –க்குப் பின் பேச முடியாத –விவாதிக்க முடியாத சூழல்களை நான் சந்தித்திருக்கிறேன்.கோட்பாட்டளவிலும், சிந்தனைத் தளத்திலும் விளக்கக் கூடியனவற்றை நடப்பு நிலைமைகள் சிதைத்துவிடும் ஆபத்தை நேரடியாக உணர்ந்தவன் நான். தங்களுக்குக் கிடைத்த உரிமையைத் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புகளையே அதிகம் கைக்கொள்ளும்போது எதிர் விளைவுகளே உண்டாகும் என்பதைத் தலித்துகளும் அவர்களை வழி நடத்திய இயக்கங்களும் உணராதபோது எதிர்விளைவுகளைச் சந்தித்தனர். அதன் ஆகப் பெரும் வெளிப்பாடு தான் மருத்துவரால் ராமதாஸால். ஒன்றிணைக்கப்படும் சமூக இயக்கங்களின் கூட்டமைப்பு. அக்கூட்டமைப்பின் எதிர்வாக இருப்பவர்கள் தலித்துகள் என்பதை மறந்து விடக்கூடாது. பிராமணர்கள் – பிராமணரல்லாதார் என ஆதிக்கத்திற்கெதிராக ஒன்றிணைக்கப்பட்டதற்கு மாறாக இன்று தலித்துகள்- தலித் அல்லாதார் என ஒன்றிணைக்கப்படும் சூழல் தோன்றிவிட்டது. ஆனால் இன்றைக்கும் தலித்துகள் ஒடுக்கப்படுபவர்கள் தான். சட்டப் பாதுகாப்பும், சமூகப் பாதுகாப்பும் அற்றவர்கள் என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில் கருத்தியல் ரீதியாக தலித் இயக்கங்கள் தொடங்கி வைத்த விடுதலையை நோக்கிய பயணம், அராஜகம் நோக்கிய பின்னடைவாக ஆனதின் பின் விளைவுகள் என்ற உண்மையைச் சொல்லவும் எனக்குத் தயக்கம் இல்லை. சட்டம் தரும் பாதுகாப்பை எதிர்நிலையில் பயன்படுத்தும்போது இத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதைத் தலித் இயக்கங்கள் உணர வேண்டியக் கட்டாயத்தில் இருக்கின்றன.  அதேபோல் சிறுபான்மைச் சமூகம் என்ற நிலையில் கிடைத்துள்ள உரிமையைச் சரியாகப் பயன்படுத்தாமல் தவற விட்டால் சாதகங்களைவிடப் பாதகங்களே அதிகம் உண்டாகும். விஸ்வரூபத்தால் உண்டாகியுள்ள பாதகம் தொடர்ச்சியான எதிர்நிலைகளையே உருவாக்கும். வெளியில் சொல்லப்படாத காரணங்களுக்காக சிக்கல்களைச் சந்திக்க இருந்த விஸ்வரூபம் படத்திற்குத் தடை கோரியதன் மூலம் மாநில அரசின் கையாட்களாக இசுலாமியர்கள் கருதப்படும் சூழலுக்கும் இடம் தந்து விட்டனர்.  விஸ்வரூபம் அப்படியொரு நிலையை நோக்கி இசுலாமியர்களைத் தள்ளிவிட்டுள்ளது. அதிலிருந்து மீண்ட வர வேண்டும்; அதற்கான உரையாடல்களை இசுலாமியச் சிந்தனையாளர்கள் முன்னெடுக்க வேண்டும்.


* இந்தவிவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்?


விஸ்வரூபம் பிரச்சினை இவ்வளவு விரிவாக விவாதிக்கப்படாத தொடக்க நிலையில் – ஜனவரி 24 ஆம் தேதியில் எனது முகநூல் பக்கத்தில் எழுதிய பதிவொன்றையே இதற்குப் பதிலாகச் சொல்ல விரும்புகிறேன். அந்தப் பதிவின் வரிகள் இவை:


வன்கொடுமைச் சட்டத்திற்காகச் சாதிக்குழுக்களை ஒன்றிணைக்கும் மருத்துவர் ராமதாஸின் போக்கு, இசுலாமியர்களுக்கு எதிரான மனோபாவத்தை உருவாக்குவதில் இந்திய சினிமாத் துறையினரின் போக்கு போன்றவை தடுக்கப் பட வேண்டியவை. ஆனால் இவற்றைச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக மாற்றிக் கட்டமைக்க முயலும் அரசின் போக்கும் ஏற்கத் தக்கதல்ல. ஒவ்வொன்றையும் அதனதன் வழியாகவே அணுக வேண்டும்; தடுக்க வேண்டும். அதுதான் பொறுப்பான அரசு நிர்வாகத்தின் நிலைபாடாக இருக்க முடியும். அப்படிச் செய்யாமல் தடை செய்வதன் மூலம் பொதுச் சமூகத்தின் மன உருவாக்கத்தில் எதிர்மறை விளைவுகளை உருவாக்கப் பார்க்கிறது அரசு


இந்த முகநூல் குறிப்பை அப்போதும் யாரும் கவனிக்கவில்லை; இப்போதும் கவனிக்கவில்லை. எப்போதும் எதிரெதிர் நிலைப்பாடுகளில் ஏதாவது ஒன்றின் ஆதரவான கருத்தை மட்டுமே எதிர்பார்க்கும் நிலையில் பாசிசத் தன்மை கொண்ட அரசுகளின் நுண்ணிய நோக்கத்தை முன் வைக்கும் குறிப்புகளை முகநூல் போன்ற சமூகத் தளச் செயல்பாட்டாளர்கள் கவனப்படுத்த மாட்டார்கள் என்று நான் புரிந்து கொண்டேன். முகநூல் கட்சி கட்டி சண்டை போடும் இடமாக இருப்பது வருத்தமாகவே இருக்கிறது.


தமிழக அரசு பற்றி மட்டுமல்லாமல், மைய அரசு பற்றியும் ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இந்தியாவில் செயல்படும் அரசுகள் – மைய, மாநில அரசுகள் சுதந்திரமானப் பல்வேறு அமைப்புகளின் செயல்பாடுகளைக் கேள்விக் குள்ளாக்குவதன் மூலம் தங்கள் அதிகாரத்தைப் பெருக்கிக் கொள்ளப்பார்க்கின்றன. சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி திரைப்படத் தணிக்கைக் குழுவின் செயல்பாடுகளைக் குலைத்து விட்டால் அதன் பங்களிப்பு அர்த்தமற்றதாகி விடும். அரசின் கொள்கை முடிவு எனச் சொல்லி விட்டால் நீதிமன்றம், வாயைத் திறக்க முடியாமல் ஆகிவிடும். மக்களின் பணத்தை விரயமாக்க முடியாது எனச் சொல்லி கலை இலக்கிய அமைப்புகள், நூலகச் செயல்பாடு போன்றவற்றை நிறுத்தி விட முடியும் என்றெல்லாம் நினைப்பது அரசுகள் வரம்பற்ற அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கின்றன என்பதைத் தான் காட்டுகின்றன. தணிக்கைக் குழு அனுமதித்த படத்தை மாநில அரசு தடை செய்து விட்டது எனக் காரணம் காட்டி மைய அரசு மாநில அரசின் எல்லைக்குள் நுழையப் பார்க்கிறது. ஜனநாயக அமைப்புகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அமைப்பு இருக்கிறது. அந்த எல்லைகள் காக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாமல் அரசதிகாரத்தைப் பயன்படுத்தி எல்லை தாண்ட நினைப்பது நுண்ணிலைத் தீவிரவாதம் தான்.


*இதனுடன் தொடர்பாக மேலும் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?


இசுலாமிய அமைப்புகள் எதிர் நிலை எடுத்துத் தடை கோரியதைத் தவறு எனச் சுட்டிக் காட்டும் அதே நேரத்தில் அவர்களின் எதிர்ப்புணர்வின் நியாயம் பற்றியும் சொல்ல வேண்டும். இந்தியச் சினிமா தொடர்ந்து முஸ்லீம்களை இந்த நாட்டின் இரண்டாம் நிலைக் குடிமக்களாகக் காட்டுவதில் கவனம் செலுத்தி வந்துள்ளது. தமிழ்ச் சினிமாவும் விலக்கல்ல. இசுலாமியக் கதாபாத்திரங்களை அதிகமும் எதிர்நிலையில் நிறுத்தும் போக்கு சுதந்திரத்துக்குப் பிந்திய இந்திய சினிமாவின் மையமான போக்கு.. தமிழ் சினிமாவில் முஸ்லீம்கள் ஒன்றும் தெரியாத அப்பாவியாகச் சித்திரிக்கப் பட்டதைச் சில படங்களில் பார்த்துள்ளேன் அந்த எண்ணிக்கை மிகவும் குறைவு மட்டுமல்ல. அந்தப் படத்தின் மையமாக இல்லாத பாத்திரமாக அது வந்து போயிருக்கும், ஆனால் பொதுச் சமூகம் வெறுத்து ஒதுக்கும் குற்றச் செயல்பாடுகளோடு தொடர்புடையவர்களாகக் காட்டப்பட்ட இசுலாமியப் பாத்திரங்கள் ஏராளம்..  இந்தியா –பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து இசுலாமியர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டியவர்கள் எனப் பேசப்பட்ட அரசியலின் தொடர்ச்சியாகவே இத்தகைய காட்சிகள் திரைப்படங்களில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. ”நாங்கள் பாகிஸ்தானிற்குச் செல்ல வேண்டியவர்கள் அல்ல; இந்தியா தான் எங்கள் நாடு; இந்தியர்களாகவே பிறந்தோம்; வளர்ந்தோம்; எங்கள் முன்னோர்களும் அப்படித்தான் இருந்தார்கள். இசுலாமியர்களாக ஆனதற்கு இன்றுள்ள தனியொரு முஸ்லீம் காரணமல்ல; சமூக நெருக்கடிகளும் வரலாற்றுக் காரணிகளும் இருக்கின்றன” என விளக்கிச் சொன்னாலும்  புரியாதவர்கள் – புரிந்து கொள்ள மறுப்பவர்கள் அந்தக் கருத்தை ஆழமாகப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியொரு புரிதலை உடைய இசுலாமியர்கள் இந்தியாவை விட்டு எக்காரணம் கொண்டும் வெளியேற மாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன். வெளியேற வேண்டிய அவசியமும் இல்லை. அப்படியொரு நிர்ப்பந்தத்தை இந்த நாட்டில் செயல்படும் பல ஊடகங்கள் உருவாக்க முனைப்புக் காட்டுகின்றன. அத்தகைய முனைப்பில், வெகுமக்களின் மனக்கட்டமைப்பை உருவாக்கும் வணிக சினிமாவில் செயல்படுகிறவர்கள் அறிந்தும் அறியாமலும் ஈடுபடுகின்றனர். அறியாதவர்களுக்கு விளங்கச் செய்ய வேண்டும். அறிந்தவர்களுக்கு நிர்ப்பந்தம் தர வேண்டும்.  நீண்டகாலமாகச் செய்யப்பட்டு வரும் இத்தீவினையை உடனடியாகத் தடுத்து நிறுத்தும் விதமாகத் தடைகளை உருவாக்கலாம் என நினைத்தால் உடனடியாகப் பலன் கிடைப்பது போலத் தோன்றலாம். ஆனால் அப்பலன் நீண்ட காலப் பலனாக இருக்காது.


இந்திய சினிமாவில் ஏற்கெனவே ஆழமாகப் புரையோடிப் போயிருந்த இந்த நிலைப்பாட்டை- இசுலாமியர்களை எதிர்நிலையில் நிறுத்தும் இந்தப் போக்கை – உலக அளவில் வளர்த்தெடுக்கப்படும் இசுலாமிய வெறுப்பு நிலைபாடு கூடுதலாக்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் உலகமெங்கும் தீவிரவாதிகள் இசுலாமிய அடையாளங்களோடு அலைந்து கொண்டிருக்கிறார்கள் எனத் திரைப்படங்களின் வழியாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கம்யூனிச வெறுப்பின் காலம் முடிந்த போன நிலையில் இசுலாமிய வெறுப்பு, காசு பார்க்கும் ஒன்றாக உலகசினிமாவில் வளர்த்தெடுக்கப்படுகிறது.


கமல்ஹாசன் தன்னை எப்போதும் கலைஞன் என்றோ, சுயாதீனமாகப் படைப்பை உருவாக்குகிறேன் என்றோ, கலைஞனுக்கு உரிய உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதம் செய்கிறவரோ அல்ல. அவர் நடிகராக நடித்த படங்கள் முழுமையும் பொழுது போக்கு வகைப்பட்டவை. நடிகர் என்ற எல்லையைத் தாண்டி பட உருவாக்கத்தில் அவரும் பங்கேற்றுச் செய்த பேசும்படம், தேவர் மகன், மகாநதி, ஹேராம், குருதிப் புனல், உன்னைப் போல் ஒருவன், தசாவதாரம் போன்றன சமகாலத் தமிழ்ச் சமூகத்தில் பொதுப்புத்தி நிலையிலும், அறிவார்ந்த தளங்களிலும் விவாதிக்கப்பட்ட கருத்துக்களை விவாதப் பொருளாக்கிய படங்கள். அப்படங்கள் வழியாக வெளிப்பட்ட கருத்துக்களும், தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்திய- ஏற்படுத்தக் கூடிய –விளைவுகள் பற்றி நானே பல தடவை எழுதியிருக்கிறேன். மைய நீரோட்டக் கருத்தோடு ஒத்துப் போகும் நிலைபாட்டை முன் வைப்பவர் என்பதைத் தீவிரமாகச் சினிமாவை அணுகும் பலரும் சுட்டிக் காட்டியுள்ளோம். அதற்கெல்லாம் அவரது ஒப்புதல்களோ, மறுப்புகளோ கிடைத்ததில்லை. அவரது போக்கில் நடித்துக் கொண்டும், படங்களைத் தயாரித்துக் கொண்டும் நகர்ந்து கொண்டே இருந்துள்ளனர். உலக நாயகன், உலகப் படம் எடுக்கும் திறமையுள்ள நபர் என்றெல்லாம் தன்னைக் கருதிக் கொள்ளும் கமல்ஹாசனும் அந்த வியாபாரத்தில் இந்தப் படம் மூலம் இறங்க நினைத்தார். அதனைத் தடுத்து நிறுத்தப் போவதாகக் கருதி இசுலாமிய அமைப்புகள் அவருக்கு உதவி செய்து விட்டார்கள். இந்த எதிர்ப்பின் விளைவாக அவருக்கு ஏற்பட்டது நட்டத்தைவிட லாபமே அதிகம் .


இப்போது அவரது நோக்கம் உலகச் சந்தையில் நுழைவது. அதற்கேற்ற களமாகவும் கருத்தாகவும் நினைத்தது தான் விஸ்வரூபம். படத்தை ஆப்கனிஸ்தான் பின்னணியில் இசுலாமியத் தீவிரவாத உள்ளடக்கத்தோடு எடுத்துள்ளார். முழுமையாக உலகச் சந்தைக்குள் நுழைவதற்கான முயற்சியில் திட்டமிட்டுத் தேர்வு செய்து தொடங்கிய வியாபாரத் திட்டம். இதுவரைத் தமிழக எல்லைக்குள் இயங்கிய அவரது கருத்து நிலையின் நீட்சியாகவே இந்தப் படம் இருக்கும் என்பதில் எனக்கு எப்போதும் சந்தேகம் இருந்ததில்லை. தமிழில் தொழில் நுட்ப ரீதியாகத் திறமைபெற்றுள்ள இயக்குநர்களாலும், பெருஞ்செலவில் வெற்றிப் படங்களுக்கான பங்கீடுகளைக் கலந்து படங்கள் தயாரிக்கிறவர்களாலும் தமிழ்ச் சமூகத்திற்குப் பெரும் பாதங்கங்கள் தான் உருவாக்கப்படுகின்றன. ஜனநாயகப் பாதையிலிருந்து விலகியவர்களாகத் தமிழர்களை ஆக்கும் ஆபத்தான நோக்கங்களை அப்படங்கள் கொண்டிருந்தன. விஸ்வரூபம் அதன் இப்போதைய வரவு என்று சொல்வதோடு தமிழகம் உலக வரைப்படத்திற்குள் நுழைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் சொல்ல வேண்டும். உலகத் தீவிரவாதத்தோடு தொடர்புடைய பூமியாக தமிழகத்தை ஆக்கிக் காட்டியிருப்பதை வேதனையோடு ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இது தமிழர்களுக்கு கமல்ஹாசன் வழியாகக் கிடைத்துள்ள பெருமையெனத் தமிழர்கள் மார்தட்டிக் கொள்ளலாம். எல்லாவற்றையும் மார்தட்டிக் கொண்டாடுவதில் தமிழர்கள் சளைப்பதில்லை தானே?


௦௦௦௦௦௦௦


-ஜமாலன்


“விஸ்வரூபம்” திரைப்படத்தினையொட்டி நடைபெற்று வருகின்ற, படைப்பின் சுயாதீனம், கலைஞனின் உரிமை, படைப்பு சுதந்திரம், கலைஞனுக்குள்ள சமூகப் பொறுப்பு போன்ற விடயங்களை எப்படி பார்க்கிறீர்கள்?


பொதுவாக இத்தகைய விடயங்கள் எல்லாம் அரசியல் வகைத்திணைகள். அதாவது சார்புத்தன்மை வாய்ந்தவை. பொதுவான ஒன்றாக பார்க்கமுடியாது. குறிப்பாக, விஸ்வரூபம் இத்தகைய கேள்விகளுக்கு பொருத்தமான படமே அல்ல. அது ஒரு அமேரிக்க்க அரசியல் பிரச்சாரப்படம் என்றவகையில் மட்டுமே அனுகுத்தக்கது. படைப்பிற்கு சுயாதீனம் உண்டு என்பதை படைப்பு என்பது ஒரு முற்றுமுழுதான பொருள் அல்லது கடவுள் போன்றது என்பதாக புரிந்துகொள்ளக்கூடாது. படைப்பிற்கு உண்மையில் சுயாதீனம் என்ற ஒன்றே இல்லை. காரணம் படைப்பு என்பதே ஒரு சமூகத்தின் மோழியால் நெய்யப்படும் பிரதி என்பதால், அது எப்போதும் வாசிப்பாளன், பார்வையாளன், நுகர்வாளனால் உருவாக்கப்படும் ஒன்று. அது வாசிப்பின் அரசியலைக்கொண்டே பின்னலாக்கப்படுகிறது.


%E0%AE%9C.jpg

 

வாசகன் இல்லாத இடத்தில் பிரதி இல்லை. பிரதியே இல்லை எனும்போது அதற்கு சுயாதீனம் ஏது? கலைஞனின் உரிமை என்பது ஒருவகையில் கலைஞனுக்கான சுதந்திரத்தை கோருவது. அதேசமயம், அது கலைஞனின் அரசியலையும் அடிப்படையாகக் கொண்டது. அவ்வகையில் அதன் அரசியல் பார்வை, கலைஞனின் உரிமையை பின்னுக்கு தள்ளிவிடுகிறது. படைப்பு சுதந்திரம் என்பதில் யாரும் தலையிடமுடியாது. ஆணால், ஒரு படைப்பு சுதந்திரமாக படைக்கப்படுவதில்லை. அதில் அக்க்காலச் சமூகத்தின் குரல்கள், அரசியல்கள், வேட்கைகள் ஊடுபாவாக கொண்டே உருவாகும். அதனால், படைப்பு என்பது படைப்ப்பவனின் நோக்கத்தை மீறி அக்காலத்தின் குரலாக்க மாறிவிடும என்பதால், படைப்பு சுதந்திரம் என்பது, பிரக்ஞையற்ற நிலையில் கட்டுண்டு கிடக்கும் சமூக அரசியல் நிகழ்வே. கலைஞனுக்கு சமூகப்பொறுப்பு அவசியம் என்பதே எனது கலைபற்றிய அரசியல் நிலைப்பாடு. சமூகபொறுப்பற்ற கலைஞனனாக இருந்தாலும், கலைக்குள் அவனை அறியாமல் அவனை பிரதிநிதித்துவப்படுத்திவிடுகிறான். அது தவிர்க்கமுடியாது என்பதால் சமூகபொறுப்பு உள்ள கலைஞன், படைப்பில் தனக்கான சமூகப்பொறுப்பை ஆற்றுபவனாக உள்ளான். விஸ்வரூபம் படம் ஒரு கலை அல்ல என்றாலும், ஒரு சினிமா என்றவகையில் அதன் இயக்குஞர் தனது சமூக பொறுப்பை ஆற்றியே உள்ளார். ஆனால், அப்பொறுப்பு ஒருதலைப்பட்சமானதாக உள்ளது என்பதே அதன் அரசியலாக வெளிப்பட்டு உள்ளது.


* முஸ்லீம் அமைப்புகள் இத்திரைப்படம் தொடர்பாக எடுத்த நிலைப்பாடுகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


முஸ்லிம் அமைப்புகளின் நிலைப்பாடு, ஒருவகையில் இப்படம் வெற்றியடைவதற்கான யுத்த தந்திர செயல்பாடாக மாறிவிடக்கூடும் என்கிற எச்சரிக்கை உணர்வோடு எடுக்கப்படவில்லை. இப்படத்தை அமைதியாக அவர்கள் வெளியிட அனுமதித்து, அதன்பின் அதில் உள்ள ஆட்சேபனைகளுக்கு நீதிமன்றத்தை அனுகியிருந்திருக்கலாம். அவர்கள அழைத்து காட்டியபோது, இப்டம் பற்ற்றிய கடுமைய்யான ஆட்சேபனைகளை அவர்க்கள் மக்கள் மன்றத்தில் விட்டிருக்கலாம். அல்லது மக்களிடம் பிரச்சாரமாக எடுத்து சென்றிருக்கலாம். ஒரு தமிழ்சினிமா பார்வையாளன் என்றவகையில், தமிழ்சினிமா ரசிகர்களின் மனோபாவத்தில் எனது கருத்து இப்படம் சாதரணமாக தோல்வியையே தழுவியிருக்கும். இதை வெற்றியடையச் செய்வதற்கான அரசியலில் முஸ்லிம் அமைப்புகள் சிக்க வைக்கப்பட்டுவிட்டார்கள். முஸ்லிம் அமைப்புகள் தங்களுக்கு எதிராக தாங்களே எடுத்துக்கொள்ள வைக்கப்பட்ட நிலைப்பாடுதான் என்றே தோன்றுகிறது. இதன் பலனை முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அடைந்துவிட்டார்கள் தாங்கள் திட்டமிட்டப்படி என்றே தோன்றுகிறது.


* இத்திரைப்பட விவகாரத்தின்பின் நிகழ்ந்துவரும் உரையாடல்கள் தமிழ் முஸ்லீம் உறவில்,அவர்களுக்கிடையிலான புரிதலில் எந்தளவிலான பாதிப்பினை, முரண்களை நிகழ்த்த வாய்ப்புள்ளது ?


குறிப்பாக அடையாள அரசியலின் அடிப்படையாக உள்ள துருவமயமாதல் என்பதில் முஸ்லிம்கள் ஜனநாயக உணர்வு கொண்ட முஸ்லிம் அல்லாதவர்களின் வெறுப்பை சம்பாதித்து உள்ளனர். ஆப்கான் தாலிபான்களும், பின்லாடனும் பங்கரவாதிகள்தானே, அவர்களை இவர்கள் ஏன் முஸ்லிம்களாக கருதுகிறார்க்கள் என்கிற கேள்வி எங்கும் எழுப்பப்பட்டு உள்ளது. உண்மையில் பின்லாடனும், தாலிபானும், அமேரிக்க புஸ்-சின் அரசியலும் ஒன்றுதான். அதாவது முஸ்லிம்கள ஒற்றை அடையாளத்திற்குள் சுருக்குவது. அவர்களது இன, மொழி, கலாச்சார வேறுபாடுகளை கவனத்தில் கொள்ளாமல் ‘முஸ்லிம்” என்கிற ஒற்ற அடையாளத்திற்குள் சுருக்குவது. அதாவது புஸ்ஸை ஆதரிப்பவன் நல்ல முஸ்லிம். எதிர்ப்பவன் கெட்ட முஸ்லிம். பின்லாடனின் நிலைபாடும் அதான். இதைதான் கமலும் இப்படத்தில் பின்பற்றுகிறார். முஸ்லிம் ஓரமைவாக்க அரசியலின் சிக்கலை உரையாடலுக்கு முன்கொண்டு வந்திருக்க வேண்டும். மாறாக, முஸ்லிம்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் அல்ல, ஆனால் பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களாக உள்ளனர் என்ற ரீதியில் இந்த உரையாடல்கள் நீண்டு உள்ளன. இது சரியான திசைவழியிலான உரையாடல்கள் அல்ல. தாலிபான்கள் குரானை ஓதிதான் தலையைய வெட்டுகிறார்கள் என்பதற்காக எந்த இஸ்லாமிய அமைப்பும் தனது கண்டணத்தை தெரிவித்ததாக தெரியவில்லை. இதெல்லாம் முஸ்லிம் அமைப்புகளின் ஜனநாயகமற்ற மதவாத போக்கையே காட்டுவதாக இப்படத்திற்கு பிறகான உரையாடல் நீண்டு உள்ளது.


* இந்தவிவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்?


தமிழக அரசின் நடவடிக்கை என்பது தற்போதைய சூழலில் வாக்கு வங்கியை மனதில் கொண்ட நடவடிக்கையாகவே தோன்றுகிறது. காரணம், எத்தனையோ தடைகளைக்கோரி முஸ்லிம் அமைப்புகள் போராடி உள்ளன. அப்போது எல்லாம் தமிழக அரசு அதை பொருட்படுத்தியதே இல்லை. தமிழக இஸ்லாமியர்களுக்கு எதிரான பல அடக்குமுறைகள் நிகழ்ந்தபோதேல்லாம் மௌனமாகவே இருந்த அரசு, இதற்கு இத்தனை கரிசனம்காட்டுவது என்பது அதன் ஆளும் கட்சி அரசியல் தந்திரமாக மட்டுமே காணப்படுகிறது. தமிழக அரசின் நடவடிக்கை எது நடந்தாலும் அதற்கு நன்மை என்கிறரீதியில் கையாளப்பட்டதே. இரண்டு மதங்களிடமும் அது வாக்குகுகளை தக்க வைக்க முடியும் என்கிற கணக்கீட்டின் அடிப்படையில் நிகழ்ந்ததே.


*இதனுடன் தொடர்பாக மேலும் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?


விஸ்வரூபம் இந்திய தேசியத்திற்கு எதிராக, அமேரிக்க ஆதரவுநிலைப்ப்பாட்டை முன்வைக்கும் ஒரு ஹாலிவுட் சிஐஏ புராஜக்ட் போன்று எடுக்கப்பட்டுள்ள படம். இப்படி பல படங்கள் எடுக்கப்படுகிறது ஹாலிவுட்டில். இப்படம் பிராமணத்துவம் பெண்மையாகவும், தாலிபான் (முஸ்லிம்) பயங்கரவாதம் ஆண்மையாக வீறுகொண்டு எழுவதாகவும் காட்டுவதன் வழியாக, இந்தியா ஒரு பெண் அல்லது தாய் என்கிற இந்துத்துவ கருத்தியலை மீள்கட்டமைவு செய்து, இஸ்லாமிய தீவிரவாதம் என்பது வன்முறையான ஒரு ஆண்மை என்கிற ஒரு பதற்றத்தை வெளிப்படுத்துவதாக உள்ள்து. (இது காந்தியைக் கொன்ற கோட்ஷேவின் உளவியல்.) இது இஸ்லாமிய தாலிபான் அல்லது தீவிரவாத எதிர்ப்பு படம் என்பதைவிட இந்தியா அமேரிக்க மேலாண்மையை ஏற்பதன் வழியாக, தன்னை ஒரு உலகமயப்போரிலிருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும் என்பதை சொல்வதையே நோக்கமாக்க் கொண்டு உள்ளது. அதாவது புஸ்ஸின் பின்னால் நின்று நல்ல முஸ்லிமாக மாறுங்கள் என்பதே. அமேரிக்க மேலாண்மை என்கிற கலாச்சார ஏகாதிபத்தியத்தை கட்டமைக்க, இஸ்லாமிய கலாச்சாரத்தை கலாச்சார தீவிரவாதமாக சித்தரிக்க முனைகிறது.


00000


-கலையரசன்



 

“விஸ்வரூபம்” திரைப்படத்தினையொட்டி நடைபெற்று வருகின்ற, படைப்பின் சுயாதீனம், கலைஞனின் உரிமை, படைப்பு சுதந்திரம், கலைஞனுக்குள்ள சமூகப் பொறுப்பு போன்ற விடயங்களை எப்படி பார்க்கிறீர்கள்?


கமலஹாசன் ஒரு தலைசிறந்த நடிகன் மட்டுமல்ல. ஒரு காலத்தில் உலக சினிமாக்களின் முதல் தர இரசிகனாக இருந்தவர். சிறந்த கலைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற அவா கொண்டிருந்தார். அவரது குணா போன்ற படங்களை சாதாரண இரசிகர்கள் புரிந்து கொள்ள கஷ்டப் பட்டதையும் பார்த்திருக்கிறேன். ஆனால், சொந்தமாக படம் எடுக்க கிளம்பிய பின்னர், தொடர்ந்தும் வணிகப் படங்களாகவே எடுத்துத் தள்ளுகின்றார். தமிழகத்தின் முன்னணி நடிகனாக இருந்த போதும், தான் சேர்த்து வைத்திருந்த கோடிக்கணக்கான பணத்தை வித்தியாசமான கலைப் படங்களில் முதலீடு செய்யாமல், இலாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட வியாபாரி போன்றே செயற்படுகின்றார். ஆகவே, அத்தகைய வியாபார நோக்கம் கொண்ட கலைஞனிடம் சமூகப் பொறுப்பு வாய்ந்த திரைப் படங்களை எதிர்பார்க்க முடியுமா என்பது சந்தேகமே. அமெரிக்க அரசுடன் மோதும் நிலையிலும், தான் சரியென்று நம்பிய கொள்கையை விட்டுக் கொடாத Oliver Stone போன்ற தயாரிப்பாளர்கள் மக்கள் மனதில் உயர்ந்து நிற்கின்றனர். கமலஹாசன் கலைக்கு சேவை செய்யா விட்டாலும் பரவாயில்லை, இந்திய அரசுக்கு சேவை செய்யாமல் இருந்தாலே போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அரசின் வெளிவிவகார கொள்கைக்கு அமையவே, தற்பொழுது விஸ்வரூபம் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார்.


ஆப்கானிஸ்தானில், தாலிபான் ஆட்சிக் காலத்தில் நடந்த கொடுமைகளை பேசும் திரைப் படங்கள் பல ஏற்கனவே வந்துள்ளன. Osama, The Kite Runner போன்ற சினிமாப் படங்கள், உலக அளவில் சிறந்த கலைப் படைப்புகளாக பேசப் பட்டன. தாலிபான் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த ஆப்கானிய எழுத்தாளர்கள் தமது அனுபவங்களை நூல்களாக வெளியிட்டிருந்ததும், அவையே பின்னர் படமாக்கப் பட்டதும் அறிந்ததே. எல்லா நாடுகளிலும் குறிப்பிட்ட ஒரு அரசியல் இயக்கத்தை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் இருக்கவே செய்வர். அது யதார்த்தம். ஈழத்தில் புலிகளை ஆதரித்த தமிழர்களும், எதிர்த்த தமிழர்களும் இருந்தனர். ஆப்கானிஸ்தானில், தாலிபானை ஆதரித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள், நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் ஊறிய மக்கள் ஆவர். மேற்கத்திய விழுமியங்களுடன் தம்மை அடையாளப் படுத்திக் கொண்ட புத்திஜீவிகள் மட்டத்தில், தாலிபானுக்கு ஆதரவு இருக்கவில்லை. தாலிபானுக்கும் தம்மை விட அதிகமாகப் படித்தவர்களைக் கண்டால் பிடிக்கவில்லை. தாலிபானின் கற்கால ஆட்சியை சகிக்க முடியாமல் புலம்பெயர்ந்த, ஆப்கான் அறிவுஜீவிகள் எழுதிய நாவல்கள், தாலிபானை காட்டமாக விமர்சித்து வந்தன. அது அவர்களது படைப்புச் சுதந்திரம். கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் கீழ் அவற்றிற்கு மதிப்புக் கொடுக்கப் பட்டது. அந்த நாவல்கள் படமாக்கப் பட்ட போது, அந்தக் கதைகள் உலகம் முழுவதும் பரந்து பட்ட மக்களிடம் போய்ச் சேர்ந்தது. அப்போதெல்லாம், படைப்பின் சுயாதீனம், கலைஞனின் உரிமை, படைப்பு சுதந்திரம், கலைஞனுக்குள்ள சமூகப் பொறுப்பு போன்ற விடயங்களை அனைவரும் கவனத்தில் எடுத்திருந்தனர். நிச்சயமாக, தாலிபானுக்கும், அதனை ஆதரித்த சலாபி-இஸ்லாமிய கடும்போக்காளர்களுக்கும் அது உவப்பாக இருந்திராது. தாலிபான் எதிர்ப்பாளர்களை, “துரோகிகள்” என்று திட்டித் தீர்ப்பதை தவிர அவர்களுக்கும் வேறு வழி இருக்கவில்லை.


kalai-01.jpg

 

விஸ்வரூபம் திரைப்படத்தை, ஒரு கருத்துச் சுதந்திர வெளிப்பாடாக கொள்ள முடியாததற்கு, நிறைய காரணங்கள் உள்ளன. முதலில் அது ஒரு கலைப் படைப்பல்ல. வணிக நோக்கில் தயாரிக்கப்பட்ட, பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பிய, வழக்கமான மசாலா படம். மேலும் அது வெளிப்படையாகவே அமெரிக்க அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் படமாக தன்னை காட்டிக் கொள்கின்றது. சுருக்கமாக அது ஒரு அரசியல் பிரச்சாரப் படம். அமெரிக்கா, சில்வஸ்டர் ஸ்டெலோனை “ரம்போ”வாக நடிக்க வைத்து, வியட்நாமுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் அனுப்பி, தனது வெளியுறவுக் கொள்கைக்கு உலகம் முழுவதும் ஆதரவு திரட்டியது. அதே பாணியில், தற்போது தமிழனான கமலஹாசன், இந்திய அரசு சார்பாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்திருக்கிறார். ஒசாமா, தி கைட் ரன்னர் படங்களைப் போன்று, தாலிபான் ஆட்சிக்காலத்தில் நடந்தவற்றைப் பற்றி, விஸ்வரூபம் பேசவில்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. விஸ்வரூபம், அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளால் “விடுதலை செய்யப்பட்ட” ஆப்கானிஸ்தானின் நிலைமையை விளக்கிக் கூறுகின்றது. ஒரு நாட்டின் மீதான எந்தவொரு படையெடுப்பும் மனிதப் பேரவலம் இன்றி நிறைவேறவில்லை. இந்து சமுத்திரத்தில் இருந்து ஏவப்பட்ட Tomahawk ஏவுகணைகள் தாலிபானை மட்டும் கொல்லவில்லை. அப்பாவி குடிமக்களும், பெண்களும் குழந்தைகளும் பலியானார்கள். குறைந்தது இருபதாயிரம் பேரை கொன்ற பின்னர் தான், ஆப்கானிஸ்தான் அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆப்கான் போரை எதிர்த்து, ஆயிரக் கணக்கான மக்கள், மேற்கத்திய நாடுகளின் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அப்போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விட்டு, இப்போது தான் எழுந்தவர் போல, மனிதப் பேரவலத்தை திரைப்படம் என்ற போர்வையால் மூடி மறைப்பதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும்.


ஒரு நாட்டின் மீது அல்லது, சுயாட்சி கோரும் சிறுபான்மை இனத்தின் மீது படையெடுக்கும் ஆக்கிரமிப்பு இராணுவம் எத்தகைய நியாயங்களை முன்வைக்கும் என்பது தெரிந்ததே. 2009 ம் ஆண்டு, “புலிப் பயங்கரவாதிகளிடம் இருந்து தமிழ் மக்களை விடுதலை செய்வதற்காக, வன்னி மீது படையெடுத்ததாக…” ஸ்ரீலங்கா இராணுவம் நியாயம் கற்பித்தது. ஆங்கிலத்தில் “déjà vu” (பிரெஞ்சு மொழியில்: ஏற்கனவே பார்த்து விட்டோம்.) என்று சொல்வார்கள். 2001 ம் ஆண்டு, “தாலிபான் பயங்கரவாதிகளிடம் இருந்து ஆப்கான் மக்களை விடுதலை செய்வதற்காக, அப்கானிஸ்தான் மீது படையெடுத்ததாக…” அமெரிக்க இராணுவம் நியாயம் கற்பித்தது. கமலஹாசன், இலங்கை இராணுவத் தரப்பு நியாயங்களை மட்டும் காட்டும் திரைப்படம் ஒன்றை எடுத்திருந்தால், அதனை “கலைஞனின் உரிமை, படைப்புச் சுதந்திரம்” என்றெல்லாம் காரணம் கூறி அங்கீகரிக்க நாம் தயாராக இருக்கிறோமா? அதனை தடை செய்ய வேண்டுமென ஆக்ரோஷத்துடன் போராட மாட்டோமா? ஆகவே, விஸ்வரூபம் அமெரிக்க ஆக்கிரமிப்பு இராணுவத்தின் ஒரு பக்க நியாயத்தை மட்டுமே பேசுவதால், இதனை ஒரு அரசியல் பிரச்சாரப் படமாகவே கருத வேண்டியுள்ளது. இரு தசாப்தங்களுக்கு முன்னர், வியட்நாம் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும், ஜேம்ஸ் பாண்ட் படங்களை திரையிட தடை விதித்திருந்தது. அரசியல் காரணங்களுக்காக திரைப்படங்களை தடை செய்வது, வியட்நாம் போன்ற “கம்யூனிச சர்வாதிகார” நாடுகளில் மட்டுமே நடக்கும் விடயமல்ல. மார்க்சியத்தை பரப்பி தொழிலாளர்களை எழுச்சி கொள்ள வைத்து விடும் என்ற காரணத்தை கூறி, “பொதெம்கின் போர்க் கப்பல்” (The Battleship Potemkin) என்ற சோவியத் திரைப் படம், ஜெர்மனியிலும் (1933), பிரான்சிலும் (1925) தடை செய்யப் பட்டது.


* முஸ்லீம் அமைப்புகள் இத்திரைப்படம் தொடர்பாக எடுத்த நிலைப்பாடுகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


பல முஸ்லிம் அமைப்புகளைப் பொறுத்த வரையில், இஸ்லாம் என்பது அவர்களது தேசிய அடையாளமாக இருக்கிறது. “யூத (சர்வ)தேசியவாதம்” உருவாகக் காரணமாக இருந்த அடிப்படை கோட்பாட்டை, “இஸ்லாமிய (சர்வ)தேசியவாதம்” கொண்டுள்ளது. தேசியவாத அரசியல் எப்போதும் மொழி சார்ந்திருக்க வேண்டிய கட்டாயமில்லை. “எங்கேயோ இருக்கும் தாலிபானை பற்றி படம் எடுத்தால், எதற்காக இங்கே துள்ளுகிறார்கள்…?” என்று கேட்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. 2008 ம் ஆண்டு, விஸ்வரூபம் பாணியில் ஒரு சிங்களத் திரைப்படம் வெளியானது. சிங்கள இனவெறி இராணுவத்திற்கு நன்றி தெரிவித்து தயாரிக்கப்பட்ட, “பிரபாகரன்” என்ற அந்த திரைப்படம், புலிகளை கெட்டவர்களாகவும், ஸ்ரீலங்கா இராணுவவீரர்களை நல்லவர்களாகவும் சித்தரித்திருந்தது. விஸ்வரூபம் திரைப்படத்தில், “அமெரிக்க படைகள் பெண்களையும், குழந்தைகளையும் ஒன்றும் செய்ய மாட்டார்கள்” என்று காட்டுகின்றனர். பிரபாகரன் படத்தில், “ஸ்ரீலங்கா படையினர், பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பவர்கள்” போன்று சித்தரிக்கப் படுகின்றனர். இவ்விரண்டு திரைப்படங்களுக்கும் இடையில் என்ன வித்தியாசம்?


சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில், பிரபாகரன் படத்தின் டப்பிங் வேலைகள் நடந்து கொண்டிருந்த பொழுது, தமிழ் தேசியக் கட்சிகள் அதை தடுத்து ஆர்ப்பாட்டம் செய்தன. பிரபாகரன் படத்தை தமிழில் டப் செய்து தமிழகத் திரையரங்குகளில் ஓட விட வேண்டுமென, தயாரிப்பாளர் துஷாரா பீரிஸ் நினைத்து நடக்கவில்லை. சென்னையில் வைத்து இயக்குனருக்கு தர்ம அடி விழுந்தது. பிரபாகரன் என்ற சிங்களத் திரைப்படம், புலிகள் அல்லது தமிழர்களை தவறாக சித்தரித்து அவர்கள் மீதான வெறுப்பை சிங்களவர் மனதில் விதைப்பதை குறியாக கொண்டிருந்தது. அதே போன்று, விஸ்வரூபம் என்ற தமிழ்த் திரைப்படம், தாலிபான் மீதும், முஸ்லிம்கள் மீதும் வெறுப்பை விதைத்துள்ளது. பிரபாகரன் திரைப்படத்திற்கு எதிரான தடையையும், போராட்டத்தையும் உங்களால் புரிந்து கொள்ள முடியுமென்றால், விஸ்வரூபம் திரைப்படத்திற்கு எதிரான முஸ்லிம் அமைப்புகளின் போராட்டத்தையும் புரிந்து கொள்ளலாம். முஸ்லிம் அமைப்புகள் இதனை தமது மத நிந்தனை சம்பந்தமான பிரச்சினையாக காட்டும் பொழுது, மறு தரப்பினர் அதையே முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்த ஏதுவாகின்றது. அமெரிக்காவின் மேலாதிக்க போர், ஆப்கான் இனப்படுகொலை, அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான தாலிபானின் போராட்டம், இவற்றை விஸ்வரூபம் மூடி மறைக்கும் அயோக்கியத்தனம் போன்றன பேசப் பட வேண்டும். அதற்குப் பதிலாக, இதனை மதம் சம்பந்தமான பிரச்சினையாக திசை திருப்பியதில், முஸ்லிம் அமைப்புகளுக்கும் பங்குண்டு. அவர்கள் இந்திய/தமிழக அரசுக்களின் மகுடி வாசிப்பிற்கு ஏற்ப ஆடுவதாக எழும் குற்றச் சாட்டுகளையும் மறுப்பதற்கில்லை


*. இத்திரைப்பட விவகாரத்தின்பின் நிகழ்ந்துவரும் உரையாடல்கள் தமிழ் முஸ்லீம் உறவில்,அவர்களுக்கிடையிலான புரிதலில் எந்தளவிலான பாதிப்பினை, முரண்களை நிகழ்த்த வாய்ப்புள்ளது ?


இந்திய மக்களில் பெரும்பகுதியை சினிமா எனும் மாயை கட்டிப் போடுகின்றது. ஆகவே, மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தும் ஊடகமான சினிமாவை குறைத்து மதிப்பிட முடியாது. ஒரு காலத்தில் குடும்பக் கதை சார்ந்த படங்களுக்கு பேர் போன இந்திய சினிமா தொழிற்துறை, தற்பொழுது நிறைய அரசியல் திரைப்படங்களையும் எடுக்கின்றது. வரவேற்கத் தக்கது தான். ஆனால், அந்தப் படங்கள் அமெரிக்க பாணியில், அரசின் பிரச்சாரப் படங்கள் போல எடுக்கப் படுகின்றன. மணிரத்தினம் ரோஜா படம் எடுத்த பின்னர், காஷ்மீர் போராளிகள் “கெட்டவர்கள்” என்று சாமானியனின் பொதுப் புத்தியில் உறைந்து போனது. அதே மாதிரியான, அல்லது அதிலும் பல மடங்கு தாக்கத்தை விஸ்வரூபம் ஏற்படுத்தலாம். விஸ்வரூபம் என்ற திரைப்படத்தை சுற்றி நடக்கும் கருத்துப் பரிமாற்றத்தில் இருந்தே, சமூகம் எந்தளவு பிளவு பட்டுள்ளது என்பது தெரிகின்றது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற பழமொழி போல, சமூகம் பிளவுபட்டால் பிரித்தாளுவது இலகுவாக இருக்கும். அந்த விடயத்தில் திரைப்படத்தை தயாரித்த கமலஹாசனும், தமிழக அரசும் திறமையாக காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். திரைப்படத்தை எதிர்த்து போராடும் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களும் அதற்கு ஒத்துழைக்கலாம். அவர்களுக்கு பின்னணியில் சி.ஐ.ஏ. ஆலோசனை வழங்குகின்றதா என்று கேட்கத் தோன்றுகின்றது. ஐரோப்பாவில் அது நடந்ததை கண்கூடாகக் கண்டிருக்கிறேன். நெதர்லாந்தில் முஸ்லிம் விரோத படம் தயாரித்த தெயொ வன் கோக், கெர்ட் வில்டர்ஸ் ஆகியோரின் நடவடிக்கைகள், நெதர்லாந்து சமூகத்தில் விரிசலை உண்டாக்கின. அதற்கு எதிர்வினையாக வன்முறைக்கு தூண்டப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் பின்னணியில் புலனாய்வுத்துறையின் கரங்கள் இருந்தமை பின்னர் தெரிய வந்தது. தெயொ வான் கொக்கின் Submission, கெர்ட் வில்டர்சின் Fitna ஆகிய குறும்படங்கள், முஸ்லிம் வெறுப்பை கக்கும் கருத்துக்களை பரப்பி வந்தன. அவை நெதர்லாந்திலும், உலகிலும் ஏற்படுத்திய அதிர்வலைகள் காரணமாக தடை செய்யப் பட்டன. அதே மாதிரியான அதிர்வலைகளை, விஸ்வரூபம் தமிழக சூழலில் ஏற்படுத்த விரும்புகின்றது. ஊடகங்களால் பரப்பப் பட்ட இஸ்லாம் குறித்த அச்சவுணர்வு, அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பாரிய சமூக மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தது. தற்போது தமிழகமும் அந்த அடிச்சுவட்டை பின்பற்றுகின்றது.


*. இந்தவிவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்?


முன்னர் ஒரு தடவை, காற்றுக்கென்ன வேலி என்ற திரைப் படத்திற்கு, திரையிடுவதற்கு முன்னரே தணிக்கை சபை அனுமதி வழங்கவில்லை. அதனால் அந்தப் படம் இந்தளவு பிரச்சினையை கிளப்பவில்லை. மேலும் அண்மையில் வெளியான விஸ்வரூபம், துப்பாக்கி போன்று, வேற்றின மக்களை புண்படுத்தும் காட்சிகள் எதுவும் அந்தப் படத்தில் கிடையாது. விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தணிக்கை சபை சான்றிதழ் கொடுத்த பின்னர், திரையரங்குகளில் வெளியிட நாள் குறிக்கப் பட்ட பின்னர் தான் தமிழக அரசு தடை செய்துள்ளது. இந்த நடவடிக்கையானது, “கலைஞனின் உரிமைக்காக” அவனது “இரசிகர்களும்” போராடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளது. அதாவது, “இந்த தடைக்கு காரணம், இஸ்லாமிய மதவாத அமைப்புகள் என்று பழியை அவர்கள் மேல் போட்டதன் மூலம், இந்து மதவாதிகளை எதிர் அணியில் திரட்டவும் சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது.


*.இதனுடன் தொடர்பாக மேலும் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?


ஒரு சராசரி தமிழ் மகன் அதிகமாக ஆர்வம் காட்டாத, ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பற்றிய கதையை, எதற்காக கமல் தேர்ந்தெடுத்தார்? பெரும்பாலான மக்களுக்கு தெரிந்த காரணம், இது பொதுவாக முஸ்லிம்களை பற்றியது. புலிகளின் மனித உரிமை மீறல்களை மட்டுமே வெளிச்சம் போட்டுக் காட்டி, தமிழர்கள் என்றாலே இரக்கமில்லாத கொடியவர்கள் என்று சித்தரித்த பிரபாகரன் படம், புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த காலத்தில் வெளிவந்தது. அது சராசரி சிங்கள மக்கள் மனதில் எத்தகைய தாக்கத்தை உருவாக்கியது? 2009 ம் ஆண்டு, புலிகளுடன், நாற்பதாயிரம் தமிழ் மக்களும் அழிக்கப் பட்ட போரின் வெற்றியை, சாதாரண சிங்கள மக்களும் இனவெறிக் களிப்புடன் கொண்டாட வைத்தது. அது போன்ற நிலைமையை இந்தியாவில் உருவாக்குவதற்கு, விஸ்வரூபம் குறிப்பிட்டளவு பங்களிப்பை வழங்கலாம். விஸ்வரூபம் தயாரிப்பின் பின்னணியில், அமெரிக்க, இந்திய புலனாய்வுத் துறையினரின் பங்கு எந்தளவு உண்மையாக இருக்க முடியும்? இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை, விஸ்வரூபம் படத்தின் ஒவ்வொரு காட்சியும் பிரதிபலிக்கின்றது.


2014 ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் விலகுவதற்கு நாள் குறிக்கப் பட்டு விட்டது. அமெரிக்கப் படைகள் போனால், அதைத் தொடர்ந்து நேட்டோ படைகளும் விலக்கிக் கொள்ளப் படலாம். அப்போது ஏற்படும் வெற்றிடத்தில், பாகிஸ்தான் நுளைவதற்கு முன்னர், இந்தியா பொறுப்பேற்கத் துடிக்கின்றது. பனிப்போர் காலத்தில், சோவியத் யூனியன் ஆதரித்த நஜிபுல்லாவின் ஆப்கான் அரசை, இந்தியாவும் ஆதரித்தது. அது வீழ்ந்த பின்னர், முஜாஹிதீன் இயக்கங்களும், அவர்களை விரட்டி விட்டு தாலிபானும் ஆட்சியை பிடித்தவுடன், ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் செல்வாக்கு உயர்ந்தது. அமெரிக்க படையெடுப்பின் பின்னர் உருவான கர்சாயின் பொம்மை அரசு, பாகிஸ்தானை உதறி விட்டு இந்தியாவுடன் சேர்ந்து கொண்டது. தற்போது ஆப்கானிஸ்தானில் தாலிபானின் கை ஓங்கி வருகின்றது. அமெரிக்க படைகள் வெளியேற்றப் பட்டால், கர்சாய் அரசை கவிழ்த்து விட்டு, மீண்டும் தாலிபான் ஆட்சி ஏற்படும் சாத்தியக்கூறுகள் உள்ளன. அந்த தருணத்தில், இந்தியா விரைந்து செயற்படத் துடிக்கிறது.


ஒரு காலத்தில், ஈழத்தில் இந்திய அமைதிப் படைகள் இறக்கப் பட்டதைப் போல, ஆப்கானிஸ்தானுக்கு இந்திய அமைதிப் படைகள் சென்றாலும் ஆச்சரியப் பட எதுவுமில்லை. ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் தலையீடு அதிகரிப்பதை, தாலிபானும் உணர்ந்துள்ளது. 2009 ம் ஆண்டு, காபுலில் உள்ள இந்திய தூதரகம் தாலிபானின் தற்கொலைத் தாக்குதலுக்கு உள்ளானது. ஆப்கானிஸ்தானில் இந்திய இலக்குகள் தாக்கப்பட்டது அதுவே முதல் தடவை அல்ல. அதுவே கடைசித் தடவையாகவும் இருக்கப் போவதில்லை. 2009 ம் ஆண்டு, தனது காலின் கீழ் மிதிபட்ட புலிகளை துடைத்தெறிந்த சந்தோஷத்தில் இந்தியா இருந்த நேரத்தில், காபுல் தூதரக குண்டுவெடிப்பு இடியென இறங்கியது. இந்தியாவின் தலையில் உள்ள ஆப்கானிஸ்தானில், தாலிபான்களின் மீள்வருகை, எதிர்காலத்தில் பெரும் தலையிடியைக் கொடுக்கும் என்பது நிச்சயம். ஆப்கானிஸ்தானில் இந்தியா நேரடியாக தலையிடுவதற்கு முன்னர், மக்களை தயார் படுத்த வேண்டியது அவசியம். அந்தக் கடமையை கமலஹாசனின் விஸ்வரூபம் செவ்வனே செய்யும்.


0000000


ராஜன் குறை


*”விஸ்வரூபம்” திரைப்படத்தினையொட்டி நடைபெற்று வருகின்ற, படைப்பின் சுயாதீனம், கலைஞனின் உரிமை, படைப்பு சுதந்திரம், கலைஞனுக்குள்ள சமூகப் பொறுப்பு போன்ற விடயங்களை எப்படி பார்க்கிறீர்கள்?


ஆவணப்படம், நிழற்படம் தவிர்த்த பெரும்பாலான கலைப்படைப்புகள் கற்பனை செயல்பாடுகள் என்பது வெளிப்படையானது என்பது மட்டுமன்றி, அடிப்படையாக நாம் கருத்தில் கொள்ளவேண்டியதும் ஆகும். கற்பனை என்பது நிகழ்வுகள் சார்ந்து இருப்பது சமகாலத்தில் ஒரு முக்கிய போக்காகும். இதனால் கற்பனை படைப்புகள் அன்றாட நிகழ்வுகளிலோ, வரலாற்று நிகழ்வுகளிலோ கால்கொள்ளும்போது அவை அந்நிகழ்வுகளை எப்படி சித்தரிக்கின்றன, பிரதிநிதித்துவம் செய்கின்றன என்பது விமர்சனத்திற்கு உள்ளாவது இயல்பானதுதான். ஆனால் விமர்சனம் என்பதையும், தடை செய்வது என்பதையும் நாம் வேறுபடுத்திப் பார்க்கவேண்டும். ஒரு கலைப்படைப்பு அன்றாட மற்றும் வரலாற்று நிகழ்வுகள் சார்ந்து உருவாக்கும்போது கூடியவரை புதிய நுட்பமான பார்வைகளை உருவாக்குவதே படைப்பாளியின் நோக்கமாக இருப்பது விரும்பத்தக்கது. அதற்குப் பதில் தேய்ந்த பிம்பங்களை மீண்டும், மீண்டும் கட்டமைப்பது பாராட்டிற்குரிய செயல் அல்ல. கலையுமல்ல. ஆனால் ஒருவருக்கு தேய்ந்த பிம்பமாகவும், முழுமையற்ற சித்தரிப்பாகவும் தோன்றுவது மற்றொருவருக்கு புதிய சில சிந்தனைகளை எழுப்புவதாக இருக்கலாம். அதன் காரணமாகவே  பல்வேறு கோணங்களில் விமர்சனங்களும், ஆய்வுகளூம், உரையாடல்களும்தான் படைப்பை எதிர்கொள்ளவேண்டுமே தவிர தடைகளும், தண்டனைகளும் அல்ல என்று சொல்லவேண்டியுள்ளது.


* முஸ்லீம் அமைப்புகள் இத்திரைப்படம் தொடர்பாக எடுத்த நிலைப்பாடுகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


சிறுபான்மையினர் நலனில் அக்கறைகொண்டவன் என்ற அளவில் தமிழக முஸ்லீம் அமைப்புகள் சில, விஸ்வரூபம் படம் தொடர்பாக எடுத்த நிலைபாடுகள் சரியானவை அல்ல என்று உறுதியாக நம்புகிறேன். ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமைப்புகள் சித்தரிக்கப்பட்டவிதத்தில் தமிழக முஸ்லீம்கள் மனம் புண்படுவதற்கு நியாயம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஏனெனில், ஆப்கானிஸ்தானின் வாழ்வு அனுபவம் தமிழகத்தில் இருப்போருக்கு கிடையாது. அவர்கள் ஓதும் குரானை நாங்களும் ஓதுகிறோம், அதே கடவுளை, இறைதூதரை வணங்குகிறோம் என்பது சரியான வாதமல்ல. டாவின்சி கோட் என்ற திரைப்படத்தை தமிழக கிறிஸ்துவர்கள் மனம் புண்படும் என்று தடை செய்தது எவ்வளவு அபத்தம் என்பதையும் இந்தத் தருணத்தில் யோசித்துப் பார்க்கவேண்டும். இஸ்லாம், கிறிஸ்துவம் போன்ற சர்வதேச மதங்கள் வெவ்வேறு உள்ளூர்த்தன்மைகளுடன் மட்டுமே பல்வேறு மக்கள் தொகுதிகளிடையே வேர்கொண்டிருப்பது மறுக்க முடியாத உண்மை. அதனால் பதினாறாம் நூற்றாண்டு ஸ்பானிய கிறித்துவர்களை அயோக்கியர்களாகவும், குரூரமானவர்களாகவும் இருப்பதை காட்டினால் தமிழ்நாட்டு கிறிஸ்துவர்கள் மனம் புண்படுவார்கள் என்பதோ, அல்லது டாவின்சி கோட் போல மேற்கத்திய கிறிஸ்துவ மத அமைப்பு ஒன்று நிழலான காரியங்களை செய்வதாக காட்டினால் தமிழ்நாட்டில் மனம் புண்படுவார்கள் என்பதோ மிக தவறான வாதங்கள். டாவின்சி கோட் ஒரு ஹாலிவுட் படம் என்பதால் அந்த தடை பரவலான எதிர்ப்பை சந்திக்காமல் போனது துரதிர்ஷ்டவசமானது. கலைஞர் என்றே அனைவராலும் குறிப்பிடப்படும் அபூர்வ வாய்ப்பை பெற்ற கருணாநிதி அந்த தடையின்மூலம் மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியதை மன்னிக்கமுடியாது.


உதாரணமாக, புகழ்பெற்ற இரானிய இயக்குநர் மக்மல்பஃவ் எடுத்த காந்தஹார் (2001) திரைப்படத்திலும் ஆஃகானிஸ்தானில் சிறுவர்கள் பயிலும் மதறாஸாக்களில் வன்முறை ஊடுறுவியிருப்பது பதிவாகியிருக்கிறது. அவர்கள் துப்பாக்கிகளை மடியில் வைத்துக்கொண்டுதான் மத நூல்களை படிக்கிறார்கள். உலகம் முழுவதும் காண்பிக்கப்பட்ட அந்த படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டால் அந்த காட்சிகளை தணிக்கை செய்து விட வேண்டுமா?


raajankurai-021.jpg

 

கமலஹாசனின் படம் அமெரிக்க சார்பானதாக இருக்கிறது எனலாம். அதனாலேயே அது இஸ்லாமுக்கு எதிரானது என்பது உலக நிகழ்வுகளில் போதிய அக்கறையற்று இருப்பதாகும். சவுதி அரேபியாவும், அமெரிக்காவும் பொருளாதார அளவில் பின்னிப் பிணைந்தவை. அமெரிக்க தொழில்கள், வர்த்தகம் பெறும் முதலீடுகளில் மிகக் கணிசமான அளவு அரேபிய இஸ்லாமிய நாடுகளுடையவை. உண்மையில் அமெரிக்கா அதனை ஆதரிக்கும் இஸ்லாமிய நாடுகளில் நிகழும் மனித உரிமை மீறல்களை குறித்து கவலையே படுவதில்லை. சவுதி அரேபியாவில் ஒரு பால் உறவு மிகக் கடுமையான குற்றமாக அரசால், கவனிக்கவும், அரசால் கருதப்படுகிறது. அதை நாம் மதத்தின் பெயரால் நியாயப்படுத்த முடியுமா? உலகின் பல நாடுகள் ஏன் ஒருபால் உறவை அங்கீகரிக்கின்றன? எத்தகைய விமர்சன சிந்தனைகள், சுதந்திரவாத சிந்தனைகள் அந்த அங்கீகரிப்பை பெற்று தந்துள்ளன என்பதை எளிதில் புறக்கணிக்க முடியாது. இஸ்லாமியர்களின் நலனில் அக்கறை கொள்வதும், இஸ்லாமிய இயக்கங்கள், தலமைகள், அரசுகள், மத அமைப்புகள் போன்றவற்றின் செயல்பாடுகளை ஆதரிப்பதும் ஒன்றல்ல. அமைப்புகளை விமர்சித்தால் அந்த மக்களுக்கு எதிராக இருப்பதாக அர்த்தம் என்றால் அமெரிக்காவையே கூட விமர்சிக்க முடியாது போய்விடும். அமெரிக்க ராணுவத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களும்,ஸ்பானிய அமெரிக்கர்களும் கணிசமாக இருக்கிறார்கள் அல்லவா?


* இத்திரைப்பட விவகாரத்தின்பின் நிகழ்ந்துவரும் உரையாடல்கள் தமிழ் முஸ்லீம் உறவில்,அவர்களுக்கிடையிலான புரிதலில் எந்தளவிலான பாதிப்பினை, முரண்களை நிகழ்த்த வாய்ப்புள்ளது ?


இது ஒரு தவறான முன்னுதாரணம் என்பதுதானே தவிர பெரிய மத நல்லிணக்கத்திற்கு தமிழகத்தில் பெரிய பாதிப்புகள் ஏற்படும் என்று நான் கருதவில்லை. பொதுப்புத்தியில் மத நம்பிக்கையுள்ளவர்களை கெளரவமாக நடத்தும் போக்கே மிகுந்திருப்பதை காணமுடியும். இறை நம்பிக்கையுள்ளவர், மத ஆசாரம் கடைபிடிப்பவர் நல்லவர் என்பது அசைக்க முடியாத பொதுப்புத்தி சார்ந்த பார்வையாகும். அதனால் இந்த ஒரு திரைப்பட பிரச்சினை எளிதில் மறக்கப்பட்டுவிடும் என்றும் தமிழகத்தின் மத நல்லிணக்கம் எந்த பாதிப்பும் இன்றி வலிமையுறும் என்றுதான் நம்புகிறேன். ஆனால் இந்துத்துவ சக்திகள் இந்த விவகாரத்தை முன் உதாரணமாகக் கொண்டு எழுப்பக்கூடிய பிரச்சினைகளை நினைத்தால்தான் எனக்குக் கவலையாக இருக்கிறது. அவர்கள் மனம் புண்பட ஆரம்பித்தால் எத்தனை தடைகள் வருமோ என்று அஞ்சாமல் இருக்க முடியவில்லை.


* இந்தவிவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்?


மிகத் தவறான அணுகுமுறை என்று நினைக்கிறேன். ஏனெனில் அரசு என்பது வெறும் நிர்வாக இயந்திரம் அல்ல. அதற்கொரு அரசியல் பார்வை இருக்க வேண்டும் என்பதால்தான் பெரும்பான்மை வாக்குகளை பெற்ற கட்சி தேர்ந்தெடுப்பவர் முதல்வராக இருக்கிறார். வெறும் நிர்வாக இயந்திரம் என்றால் அதிகாரிகளே ஆட்சி செய்து விடலாமே? விஸ்வரூபம் விஷயத்தில் அ.இ.அ.தி.மு.க அரசு, முதல்வர் ஜெயலலிதா எந்த அரசியல் நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என்பதை நாம் கவனிக்கவேண்டும். இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும்; எங்களிடம் போதிய போலீஸ்காரர்கள் இல்லை. ஆகவே நீங்கள் அந்த அமைப்புகளை சமாதானம் செய்யுங்கள் என்று சொல்வது மிகத் தவறான அணுகுமுறை. அதற்குப்பதில் நாங்கள் சிறுபான்மையினரின் உணர்வுகளை மதிக்கிறோம், அதனால் தடை செய்கிறோம் என்று சொல்லியிருந்தால் சரியோ, தவறோ அதில் ஒரு அரசியல் நிலைபாடு இருந்திருக்கும். ஆனால் இஸ்லாமியரின் உணர்வுகளை மதிப்பதுபோல அவர்களை நம்பவைத்து அரசியல் ரீதியாக அந்த நிலைப்பாட்டை எடுக்காமல் தவிர்த்துவிட்டார் முதல்வர். தவிரவும், இப்போது நடந்திருப்பது என்னவென்றால், இஸ்லாமியர்கள் நினைத்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்திவிடுவார்கள் என்று அரசே கருதுகிறது என்று நிறுவப்பட்டுள்ளது. அந்த அச்சத்தாலேயே அவர்களுடன் பேச வேண்டும் என்று அரசு கமலஹாசனை நிர்ப்பந்தம் செய்துள்ளாதாகவே பதிவாகியுள்ளது. அரசுக்கு கருத்து சுதந்திரம் பற்றியோ, சிறுபான்மையினர் சமூக உறவுகள் பற்றியோ எந்த அரசியல் நிலைபாடும் இல்லை. வெறும் நிர்வாகப் பிரச்சினை மட்டும்தான். போலீஸ்காரர்கள் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லை என்பதே முக்கிய காரணம் என்று முதல்வரே தொலைக்காட்சியில் சொன்னார். இது மிகவும் வருந்தத்தக்கது.


*இதனுடன் தொடர்பாக மேலும் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?


தடை விதிக்க சொல்வது, தணிக்கை செய்ய சொல்வது, தண்டிக்க சொல்வது போன்றவையெல்லாம் விமர்சன செயல்பாடாக கருதப்படக்கூடாது. உதாரணமாக அஷிஸ் நந்தி என்ற மிக முக்கியமான சமூகவியல் அறிஞர் தவறான பொருள்படும்படி ஒரு கருத்தை கூறிவிட அவரை கைதுசெய்ய வேண்டும் என அரசியல் தலைவர்கள் சிலர் கோரினார்கள். இது குறித்து பேசும்போது நண்பர்கள் “அவரை கைது செய்ய வேண்டியதில்லை. ஆனால் அவர் கருத்துக்கள் விமர்சனத்திற்குரியவை” என்று சொல்கிறார்கள். இந்த “ஆனால்” என்ற வார்த்தையை நான் கடுமையாக எதிர்த்து வருகிறேன். அந்த படைப்பை தடை செய்யக்கூடாது; ஆனால் அது நல்ல படைப்பல்ல”. என்று நாம் சொல்லக்கூடாது; சிந்திக்கவும் கூடாது. “கைது செய்யப்படக்கூடாது”, ”தடை செய்யக்கூடாது” என்று மட்டும் சொன்னால் ஒரு வேளை நாம் அந்த சிந்தனையாளரையோ, படத்தையோ அதரித்ததாக ஆகிவிடுமோ என்று நினைக்கிறார்கள். விமர்சனத்தையும் தண்டனையையும் பிரித்தறிய வேண்டும். நம்முடைய வாதத்தின் கட்டமைப்பை மாற்றி சொல்லிப்பார்க்கவேண்டும். “ஆஷிஸ் நந்தியின் சிந்தனைகள் விமர்சனத்திற்குரியவை. அதற்காக அவரை கைது செய்வது அந்த விமர்சனங்களை வலிமையற்றதாக்கிவிடும்” என்று சொல்வது முதிர்ச்சியாக இருக்கும். “ஒரு படைப்பு பல பிழையான அர்த்தங்களை தருவதாக இருக்கிறது. அதை தடைசெய்வது அதை விமர்சனரீதியாக எதிர்கொள்ள உதவாது” என்று சொல்லிப் பழகவேண்டும். ஜனநாயக, சுதந்திரவாத மனப்போக்கை விட, பாசிச மனப்போக்கே நம்மை எளிதில் கைக்கொள்கிறது என்பதை நாம் எச்சரிக்கையுடன் புரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் இந்த தடை, தணிக்கை, தண்டனை விழைவுகள் குறைந்து உடனுறைதல் (being-with), உரையாடல் விழைவுகள் அதிகமாகும்.

 

 

http://eathuvarai.net/?p=2776

                                                   இந்திய ராவும் கமலின் ரா நாடகமும்
            
            புதியமாதவி ; திங்கள், 11 பெப்ரவரி 2013   
    
       

இந்தியவிடுதலைக்குப் பின் நேருவின் காலத்தில் சீனா இந்திய எல்லையைத் தாக்கிய
போது இந்தியா அந்தப் போரை எதிர்கொள்ளும் நிலையில் இல்லை.இந்தியாவின் அந்த இக்கட்டான நிலைதான் இந்திய உளவுத்துறை அமைவதற்கான ஓர் உடனடி அவசியத்தை ஏற்படுத்தியது எனலாம்.(Research & Analysis Wing (RAW)) ரா என்ற இந்திய உளவுத்துறை ஆரம்பிக்கும்போது 250 பேருடன் அமெரிக்க டாலர் 400,000 மூலதனத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. இன்று 8 முதல் 10 ஆயிரம் பேர் ராவில் இருப்பதாக
சொல்கிறார்கள். ரா வின் வேலைகளுக்காக ஒதுக்கப்படும் பட்ஜெட் தொகைஅமெரிக்க டாலர் 145 மில்லியன்.


ரா அதிகாரிகள் முழுமையாக பயிற்சி பெற்றது இஸ்ரேலிடம்.ரா அமைப்பில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன.(counter intelligence team - X  and counter intelligence team J)CIT - X பிரிவு பாகிஸ்தான் முதலான அண்டைநாடுகளின் ஒவ்வொருஅசைவுகளையும் கவனிக்கும். CIT J என்ற பிரிவு காலிஸ்தான் போன்ற உள்நாட்டு பிரிவினை சக்திகளைக் கவனிக்கும். இந்த இரண்டு பிரிவுகளும் சேர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானில்  தீவிரவாத சக்திகளை வளர்ப்பதாக பாகிஸ்தானின் இராணுவப்பிரிவு நிபுணர் எழுத்தாளர் ஆயிஷா சித்திக்குவ ( Newsline)சொல்கிறார். ப்ஃரண்ட்லைன் எடிட்டர் பிரவீன் சுவாமி 'பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான கராச்சி, லாகூர் பகுதிகளில் வீரியம்குறைந்த வெடிகுண்டுகள் அவ்வப்போது வெடிக்கத்தான் செய்கின்றன" என்று ஆயிஷா சொல்வதை உறுதி செய்கிறார்.


பொருளாதரத்தில் பாகிஸ்தானை முழுவதுமாக சார்ந்து நிற்க வேண்டிய நிலையில் இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா இதுவரை அளித்திருக்கும் நன்கொடை ரசீதுகளின் பட்டியல் ஒவ்வொரு இந்தியனும் அறிந்து கொள்ள வேண்டியதாகும்.இந்திய இராணுவத்தின் சாலை போக்குவரத்து துறை ஆப்கானிஸ்தானுக்கு சாலை வசதிகளைச் செய்து கொடுத்தது முதல் பாரதப்பிரதமர் மன்மோகன்சிங் ஆப்கானிஸ்தானுக்கு விஜயம் செய்யும் போது நன்கொடை பட்டியலின் தொகை மே 2011ல் அமெரிக்கா டாலர் 2 பில்லியனைத் தாண்டிவிட்டது. இந்த தொகையைக் கொண்டு மும்பை மாநகரைக் குடிசைகளே இல்லாத பெருநகரமாக்கி இருக்க முடியும், ஏன் ஒட்டுமொத்த இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் அத்தியாசவிசயமான தேவைகளைப் பூர்த்தி செய்திருக்க முடியும்.


இத்துடன் மின்சாரம், எண்ணெய் மற்றும் இயற்கை வாயு என்று கொடுப்பதுடன் ஆப்கானிஸ்தான் மாணவனுக்கு உயர்கல்விக்கான ஊக்கத்தொகையை இந்தியா கொடுப்பதும் ஆச்சரியமளிக்கிறது. ஆனால் இந்த அபரிதமான உதவிகளை மனித நேய அடிப்படையிலோ அல்லது அண்டைநாட்டுடன் நல்லுறவு கொள்ளும் நோக்கத்திலோ இந்தியா கொடுக்கவில்லை. இந்தியாவின் ரா , ஆப்கானிஸ்தானை தன் ரகசிய உளவு வேலைகளுக்கான தளமாகவும் இந்தியாவை எப்போதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பாகிஸ்தான், சீன நாடுகளை உன்னிப்பாக கவனிக்கவும் அந்நாடுகளில் உள்நாட்டு கலவரத்தை ஏற்படுத்தவும் வசதியான ஒரு களமாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.


அமெரிக்காவின் சி. ஐ. ஏ, இங்கிலாந்தின் எம் 16 உளவுத்துறைகளைப் போல இந்திய உளவுத்துறை நேரடியாக இராணுவத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை. ரா இந்திய பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டின் இயங்குகிறது.பஞ்சாபில் நடந்த காலிஸ்தான் கிளர்ச்சிகளுக்கும் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் பின்புலமாக செயல்பட்டது பாகிஸ்தான்.பணமும் ஆயுதப்பயிற்சியும் கொடுத்தது. இந்தியா, காஷ்மீர்,பாகிஸ்தான் எல்லைப்பிரச்சனை தீர்ந்தபாடில்லை.பாகிஸ்தானின் இதே வழிமுறையை இந்தியாவும் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் கலவரங்களிலும் கடைப்பிடித்தது. ஜோர்டானின் இளவரசர் ஹசன் பின் டலால் பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த பெண்ணைத் திருமணம் செய்தப் பின் அவர் முன்னிலையில் "இந்தியா பாகிஸ்தானில் பிரச்சனை உண்டாக்குவதை நிறுத்த வேண்டுமானால் பாகிஸ்தான் இந்தியாவின் பஞ்சாப் பிரச்சனையில் தலையிடக்கூடாது ' என்ற ரகசிய உடன்படிக்கையானது.


சோவியத் ஒன்றியத்தின் இராணுவப்பிடியில் ஆப்கானிஸ்தான் இருந்தப்போது அமெரிக்காவின் உளவுத்துறையான சி.ஐ.ஏ சோவியத்திற்கு எதிராக போராட ஆப்கானிஸ்தான் புரட்சிக்காரர்களுக்கு பல்வேறு வகையில் உதவியது. ஆனால் நேரடியாக அமெரிக்கா இதில் தலையிடவில்லை.பாகிஸ்தான் தான் இதில் ஏஜண்டாக செயல்பட்டது. குறைந்தது 3 பில்லியன் அமெரிக்கடாலர் ஆப்கானிஸ்தானுக்கு வாரி வழங்கியது. ஐ எஸ் ஐ இந்த செயல்பாட்டை operation cyclone என்றழைத்தது.


பாகிஸ்தானுக்கு இந்த ஏஜண்ட் வேலைகள் தவிர நேரடியான பல்வேறு உதவிகளையும் அமெரிக்க உளவுத்துறை இன்றுவரை செய்து கொண்டுதான் இருக்கிறது. முன்னாள் ரா அதிகாரி பி. இராமன் 2007ல் வெளியிட்ட அவருடைய புத்தகம் " the kaoboys of R & AW ' வில் சில செய்திகளை உறுதி செய்திருக்கிறார். "அமெரிக்க உளவுத்துறை பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ எஸ் ஐக்கு தீவிரவாத தாக்குதல்கள் குறித்த பயிற்சிகளைக் கொடுக்கும். அதே சமயத்தில் இந்திய ரா வுக்கும் தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்கும் சில நுட்பங்களை அறிந்து கொள்ளும் பயிற்சியை அளிக்கும்: என்கிறார்.


9/11ல் அமெரிக்கா சந்தித்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின், ஒசமா பின்லேடன் பாகிஸ்தானில் அமெரிக்காவால் சுட்டுக்கொல்லப்பட்டபின் அமெரிக்க பாகிஸ்தான் உறவு பாதிக்கப்பட்டிருக்கிறதா?இக்கேள்விக்கு சம்பந்தப்பட்ட அமெரிக்காவும் பாகிஸ்தானும் அப்படியெல்லாம் பாதிக்கப்படவில்லை என்று சொல்கின்றன.ஆனால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் உலகில் தீவிரவாதத்திற்கு எதிராக அமெரிக்காவும் இந்தியாவும் கை கோத்து நிற்பதாகவும் ஒரு பிம்பத்தை அமெரிக்க அதிபரும் இந்தியப் பிரதமரும் அடிக்கடி தொலைக்காட்சிகளில் சொல்லிக்கொள்கிறார்கள்!


 

இந்தப் பிம்பத்தைக் கட்டமைப்பதில் இரு அரசுகளுக்கும் பல்வேறு ஆதாயங்கள்
இருக்கின்றன. உலக நாடுகளின் சட்டாம்பிள்ளையாக, போலீஸ்காரனாக தன்னைக்
காட்டிக்கொள்ளும் அமெரிக்காதான் மூன்றாம் நாடுகளின் உள்நாட்டு
பிரச்சனைகளில் தலையிட்டு அமைதி குலைத்து தன் அபரிதமான ஆயுத உற்பத்திக்கான
சந்தைகளை விரிவு படுத்திக் கொண்டே இருக்கிறது.அகண்ட பாரதக் கனவுகள் ஒருபக்கம், இந்தியா வல்லரசாகும் கனவுகள் ஒருபக்கம் என்று கனவுகளில் மிதக்கும் இந்திய அரசோ 9/11க்குப் பின் இச்சூழலைச் சாதகமாக்கிக்கொள்ள துடிக்கிறது.


இந்த ரா வின் செயல்பாடுகளைத்தான் நடிகர் கமலஹாசன் தன் கைகளில் எடுத்துக் கொண்டு வழக்கம்போல கந்தலாக்கி இருக்கிறார். ஆனால் இந்தக் கந்தல் ஆடையில் எங்கே கிழிக்க வேண்டும், எவரைக் கிழிக்க வேண்டும் , எப்படி கிழிக்க வேண்டும், எதை எல்லாம் ஒட்டுப்போட்டு கிழிசல் மறைய தைக்க வேண்டும் என்பதில் கவனமாகத்தான் இருந்திருக்கிறார்.


ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக குற்றம்சாட்டப்பட்டு தூக்கிலடப்பட்டப்பின் கமலும் கமலின் உதவியாளரும் பேசும் வசனம் ரொம்பவும் விஷமமானது."நான் என் பெயரைத் தான் மாற்றிக்கொண்டிருக்கிறேன். என் தர்மத்தை (மதத்தை ) அல்ல" என்பார் அந்த உதவியாளர். இசுலாமியராகவரும் கமல் அவன் தர்மப்படி அவன் நடக்கட்டும் என்று அவனை டிஸ்மிஸ் செய்து அனுப்பிவிடுவார்.கதையின் முடிவு "போராட்டம் தொடரும், நானோ உமரோ இருவரின் ஒருவர் கொல்லப்படும் வரை தொடரும்" என்று முடிக்கிறார்.


விசுவநாதனாக இதைச் சொல்லியிருந்தால் அது  இந்து தீவிரவாதம்.அகமதுவாக இதைச் சொல்லியிருந்தால் அது இந்திய தீவிரவாதம் இரண்டுமே ஆபத்தானது.கமலுக்கு அல்ல, நமக்கு.மத சாதி அடையாளங்களை மறந்து துறந்து தமிழனாக வாழ நினைக்கும் ஒவ்வொருவருக்கும்.

 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22925:2013-02-11-10-03-15&catid=1:articles&Itemid=264

அ.ராமசாமியினதும் ஜமாலனதும் பதில்கள் அருமை. எதுவரை மிகவும் தரமான விடயங்களை முன்னெடுக்கின்றது.

 

இணைப்புக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

பூனை வெளியே வந்து விட்டது
 
சாதாரண விஸ்வரூபம் படம் இப்படி விஸ்வரூபம் எடுக்க ஆளுவோரின் சொந்த காழ்ப்புணர்ச்சிதான் .
 
இதற்கு இசுலாமிய தலைவர்களபகடைகளாகஆக்கப்பட்டுள்ளனர்.அவர்களை தூண்டி விட்டதே அரசாள்வோர்தான் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது.
 .தடை விதிப்பு நீக்கப்பட்டதும் பொறுப்பான அரசு படத்தை வெளியிட ஒத்துழைப்பு தந்திருக்க வெண்டும்.சுமுகமாக இல்லாவிட்டால் பாதுகாப்பு கொடுக்க வெண்டும்.
ஆனால் ஜெயா அரசோ இரவோடு சென்று தடையை வாங்கி படத்தை வெளியிடச்செய்யாமல் போராடுகிறது.
Tamil_News_large_63633820130130160038.jp
  .இது இசுலாமிய மக்கள் எதிர்ப்பை வைத்து செய்யப்படும் சுய நல அரசியல்.
இங்கும் தடை நீக்கம் வந்து விட்டால் உச்ச நீதி மன்றம் சென்றாவது படத்தை வர விடாமல் தடுக்க அரசு வழக்குரைஞர்களுக்கு  உத்திரவிடப்பட்டுள்ளதாம்.
தனது ஜெயா டிவிக்கு படத்தை விற்காதது இவ்வளவு பெரிய குற்றமா?
ரசிகர்கள் கூடி வெளியெ நிற்கையில் காவல்துறையினர் திரையரங்கை கட்டுப்பாட்டில் கொண்டுவந்து நிற்கையில் உள்ளெ வைக்கப்பட்டிருக்கும் கமல் பட பதாகைகள் தீவைத்து கொளுத்தப்படுகிறதாம்.அது எப்படி சாத்தியம்தீவைத்தது யார்?இருவர் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு பொய் விட்டார்கள் என்று காவல்துறை சொல்லி வழக்கை எழதி பதிகிறதாம் .அப்படி யாரும் வரவில்லை என்று ரசிகர்கள் சொல்லுகிறார்கள்.இவை எல்லாம் சட்டம் ஒழ்ங்கி பிரச்னை என நீதிமன்றத்தில் காட்ட ஆதாரமாக செய்யப்படுகிறதாம்ரசிகர்களை நாகர்கோவில் கார்த்திகை திரையரங்கில் இருந்து வெளியேற்றிய பிறகு சிலர் வந்து காவல் துறையினர் பாதுகாப்புடன் வந்து அலங்கார வளைவுகளுக்கு தீவைக்கின்றனராம்.அதை தடுக்க செல்லும் கமல் ரசிகர்களை அடித்து விரட்டி அந்த தீவைப்பாளர்களௌக்கு பாதுகாப்பு வழ்ங்க்கப்படுகிறதாம் அவர்கள் இசுலாமியர்கள அல்லவாம்.ஆளுங்கட்சி கட்சிக்காரர்கள் போல்தான் தெரிகிறதாம்.இதிலிருந்து பிரச்னை இசுலாமியர்களுக்கும் விஸ்வரூபம் படத்துக்கு முடிந்து இப்போது ஜெயலலிதா கமல்ஹாசனை பலி வாங்கும் படலம் தான் நடப்பதாக தெரிகிறது.
ஆனால் நிச்சயம் படம் வெளிவரும் இதற்கான பலனை ஜெயலலிதா விரைவில் அறுவடை செய்வார்.
விஸ்வரூபம் பட விவகாரத்தில் விரைவில் வெற்றி பெறுவோம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். தனது வீட்டின் முன் குவிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மத்தியில் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது:
"வரும் 1 ம்தேதி, மும்பையில் விஸ்வரூபம் திரைப்படம் வெளியாக உள்ளது. அதற்காக, நான் மும்பைக்கு செல்கிறேன். அங்கு வெற்றிப்படப் மகிழ்ச்சியில் நான் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. தாங்கள் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள், அமைதியாக இருங்கள். தாங்கள் இங்கு பெருந்திரளாக கூடியுள்ளதால் மற்றவர்களுக்கு  இடையூறாக இருப்பதாக "அவர் கூறினார். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அங்கு குழுமியிருந்த நிலையில், இரவு 08.40 மணியளவில், கமல் ரசிகர்களை சந்தித்தார்.
 
 இதனிடையே, கமல் கடனில் தத்தளிப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, ரசிகர்கள் நிதிஉதவி செய்யும் பொருட்டு, டிமாண்ட் டிராப்ட்களையும்,பணக்கட்டுகளையும்  கமலிடம் அளிக்க அங்கு கொண்டு வந்திருந்ததாகவும் கமல்ஹாசன் அவற்றை வாங்க மறுத்து களைந்து அமைதியாக செல்லக் கூறினார் என்றும் அங்கிருந்து வந்த  தகவல்கள் கூறுகின்றன.
 
இது கமல்ஹாசனின் பேட்டி:
"என்னுடைய படம் நடக்கும் களம் ஆப்கானிஸ்தான். இது இந்திய முஸ்லிம்களை எப்படி கேலி செய்ய முடியும். என்னுடைய இந்த படத்தை எடுத்திருப்பதாக பெரும் செலவு செய்திருக்கிறேன். என்னுடைய திரையுலகை அனுபவத்தையும் எனக்கு இருக்கும் தொழில்நுட்பத்தை கொண்டும் இந்த படத்தை எடுத்துள்ளேன்.
Tamil_News_large_637082.jpg
இந்தபடத்துக்காக எனது சொத்துக்கள் அனைத்தையும் அடகு வைத்துள்ளேன். படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால் இப்போது நான் உங்களுக்கு பேட்டி அளித்து கொண்டு இருக்கும் இந்த வீடு ‌எனது இல்லை. கோர்ட்டில் வழக்கு நடந்தபோது நீதிபதி கேட்டார். ஒருவரின் முதலீடுக்காக நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டுமா என்று கேட்டார். நான் இப்போதும் சொல்கிறேன். நாட்டின் ஒற்றுமை தான் முக்கியம். நாட்டுக்காக எனது சொத்துக்கள் அனைத்தையும் இழக்க தயாராக இருக்கிறேன். எனக்கு மதம் கிடையாது, அரசியல் கிடையாது. எனக்கு மனிதநேயம் முக்கியம். மனதில் பட்டதை தைரியமாக எடுத்து சொல்பவன். இந்தப்படம் நிச்சயம் இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் கிடையாது. எதற்காக எனது படத்தை தடை செய்கிறார்கள் என்று புரியவி‌ல்லை. 
என்னை வீழ்த்தி விடலாம் என்று சிலர் கருதுகின்றனர். நான் விழுந்தால் விதையாக விழுவேன். மீண்டும் மீண்டும் எழுவேன். சுதந்திரப் பறவைகள் வந்தமரும் மரமாக உயர்வேன். இது சோலையாகும், காடாகும். ஆனால் விதை நான் போட்டது. 
எனது பட வசனமே எனக்கு உதவிக்கு வருகிறது. ஒருவேளை தமிழகம் மதச்சார்ப்பற்ற மாநிலமாக இல்லாமல் போய்விட்டால் நிச்சயம் வேறு ஒரு மாநிலத்தை தேடி போவேன். அதற்காக தமிழகத்தை விட்டு வெளியேறவும் நான் தயார். 
வேறு மாநிலமும் கிடைக்காவிட்டால் வேறு நாட்டை தேடி போவேன். இன்று படம் பார்க்கச் சென்ற எனது ரசிகர்களை தியேட்டர்களை விட்டு வெளியேற்றியுள்ளனர். அது ஏன் என்று விளங்கவில்லை. என்னிடம் இப்போது எதுவும் இல்லை. இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை. எனது ரசிகர்கள் அமைதியானவர்கள்.
 அவர்களில் பலர் முஸ்லிம்கள். 
அவர்கள் அனைவரும் தொடர்ந்து அமைதியாகவே இருப்பார்கள். கேரளாவில் மலபார், ஐதராபாத்தில் படம் அமைதியாக போய்க் கொண்டிருக்கிறது. 
என்னைப் பொறுத்தவரையில் எனது நீதி தாமதப்பட்டுள்ளது. தாமதிக்கப்படும் நீதி பொறுத்திருந்து பார்ப்போம்". இவ்வாறு பேசினார்.
 
கீழேயுள்ளது "வினவு"தளம் வெளியிட்ட பதிவு நன்றியுடன் மீள் பதிவிட்டுள்ளேன்.
 
"விஸ்வரூபம் படத்திற்கு 31 மாவட்ட ஆட்சியர்களும் விதித்திருந்த தடையை நீக்கி நேற்று இரவு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
“இப்போது தீர்ப்பை வெளியிட்டு விட்டால், நாளை காலை 5 மணிக்கே முதல் காட்சியை திரையரங்கில் போட்டு விடுவார்கள். எனவே நாளை காலை தீர்ப்பை வெளியிடுங்கள். நாங்கள் மேல் முறையீடு செய்து கொள்கிறோம்” என நேற்று உயர்நீதிமன்றத்தில் கெஞ்சியிருக்கிறார்  அரசின் தலைமை வழக்குரைஞர் நவநீத கிருஷ்ணன்.
 நீதிபதி அதை ஏற்கவில்லை. 
எனவே இரவோடு இரவாக 12 மணிக்கு சென்று தலைமை நீதிபதியின் வீட்டு  கதவை  தட்டி எழுப்பி தடை உத்தரவு கேட்டிருக்கிறார்கள். ‘காலை நீதிமன்றத்தில் முதல் வழக்காக இதனை எடுத்துக் கொள்வதாக’ அவர் கூறியிருப்பதாக இன்றைய நாளேடுகள் கூறுகின்றன.
நேற்று நீதிமன்றத்தில் அரசு தரப்பு எடுத்து வைத்த வாதங்களைப் பார்த்தபோது, “வேறு ஏதோ நோக்கங்களுக்காகத்தான் இந்த நாடகத்தை ஜெயலலிதா அரசு நடத்துகிறது” என்பது பச்சையாகத் தெரிந்தது.
“இத்திரைப்படம் இசுலாமியர்களை தவறாக சித்தரிப்பதாக முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதால், இதனை திரையிடுவதன் மூலம் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று அஞ்சுவதனால்தான் இதற்கு எதிராக 144 தடை விதிக்கப்பட்டிருப்பதாக” தமிழக அரசு கூறியிருந்தது.
“அளவற்ற அருளாளனாகிய அல்லாதான், அம்மாவை இப்படி சிந்திக்க வைத்திருக்கிறான்” என்று கூறி, இசுலாமிய மக்கள் மத்தியில் “புல்லரிப்பை” தூண்டி வருகின்றன இசுலாமிய அமைப்புகள். ஆனால் அம்மாவை சிந்திக்க வைத்த அல்லாவால், அட்வகேட் ஜெனரலை சிந்திக்க வைக்க முடியவில்லை போலும்! நேற்று நீதிமன்றத்தில் வாதிட்ட நவநீத கிருஷ்ணன், வண்டு முருகன் ரேஞ்சுக்கு இறங்கி விட்டார்.
தடை விதிப்பதற்கான காரணம் என்று தமிழக அரசு கூறியிருப்பதை விட்டு விட்டு, “இந்த தணிக்கைக் குழு சான்றிதழே ஒரு ஊழல்” “தணிக்கைக் குழு உறுப்பினர்களின் நியமனம் ஊழல்” என்றார்.
Tamil_News_large_633046.jpg
“தணிக்கைக் குழுவே ஊழல் என்றால், எல்லாப் படங்களுக்கும் அல்லவா நீங்கள் தடை விதிக்க வேண்டும்?” என்று மடக்கினார் கமலஹாசனின் வக்கீல்.
“அப்படியானால், நீங்கள் இப்போது சொல்லும் இந்தக் காரணங்களுக்காகத்தான் தடை விதித்திருக்கிறீர்களா?” என்று நீதிபதி கேட்டவுடன், “உங்களுக்கு தெரியாத சட்டம் இல்லை, உரிய செக்சனில் தடை செய்யுங்கள் மை லார்ட்” என்ற பாணியில் ஜகா வாங்கிவிட்டார் வண்டு முருகன்.
அம்மாவின் அட்வகேட் ஜெனரல்தான் இப்படி என்றால், ஆட்சியர்கள் அவரை விஞ்சி விட்டார்கள்.
32 மாவட்டங்களிலும் முஸ்லிம் அமைப்புகள் புகார் கொடுத்திருக்கிறார்கள். யாராவது ஒரு புகார் கொடுத்தால் அதனை பரிசீலித்துப் பார்த்து, அதன் பின்னர் அப்பிரச்சினை குறித்த தனது சொந்த மதிப்பீட்டின் அடிப்படையில் ஒரு மாவட்ட ஆட்சியர்முடிவு எடுக்க வேண்டும். இப்படி சொந்த மூளையைப் பயன்படுத்தி யோசிப்பதையே application of mind  என்று சட்ட மொழியில் கூறுவர். சொந்த மூளையைப் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ, அப்படி பயன்படுத்தித்தான் இந்த முடிவை எடுத்தோம் என்று உத்தரவில் எழுதுவதற்காவது தெரிந்திருக்க வேண்டும்.
“முஸ்லிம் அமைப்புகள் புகார் கொடுத்திருப்பதால், நாங்கள் தடை செய்கிறோம்” என்று “ரொம்ப வெள்ளந்தியாக” பல மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள். “இது சட்டவிரோதமானது” என்று வாதிட்ட கமலஹாசனின் வழக்குரைஞர் ராமன், “32 மாவட்டத்திலுமா சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது” என்று கிண்டலும் அடித்தார். “எப்படியாவது இந்தப் படத்தை முடக்க வேண்டும் என்ற உள்நோக்கம் அரசுக்கு இருக்கிறது” என்று நேரடியாகவே குற்றம் சாட்டினார்.
இதற்கு மேல் சொல்வதற்கு எதுவும் இல்லை என்ற அளவுக்கு அசிங்கமான முறையில் விவகாரம் அம்பலமாகிவிட்டது.
“இந்தத் தடைக்கு காரணமாக அமைந்த ‘புண்பட்ட மனம்’, மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவினுடையதே அன்றி, முஸ்லிம் உம்மாவினுடையது அல்ல. எங்கப்பன் குதிருக்குள் இல்லை, இல்லை இல்லவே இல்லை” என்று தனது வாதத்திறமை மூலம் நீதிமன்றத்தில் தெளிவாகக் காட்டிவிட்டார் தலைமை வழக்குரைஞர்.
கிசுகிசு செய்திகளாக உலா வந்து கொண்டிருக்கும், ஜெயா டிவி மற்றும் ப.சிதம்பரம் விவகாரங்கள்தான் தடைக்கு காரணமா, அல்லது, மேலும் வேறு காரணங்கள் ஏதாவது இருக்கக் கூடுமா என்று நமக்குத் தெரியாது. ஆனால் சங்கராச்சாரி கைதுக்கு இணையான மர்மங்கள் நிச்சயம் இதில் உண்டு. தன்னுடைய தனிப்பட்ட விரோதங்களைத் தீர்த்துக் கொள்ள போலீசையும் அரசு எந்திரத்தையும் தன்னுடைய கூலிப்படையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்காதவர் ஜெயலலிதா என்பது எல்லோரும் அறிந்ததுதான்.
முன்னர் உயர்நீதிமன்ற நீதிபதியின் பிள்ளை மீது போடப்பட்ட கஞ்சா கேசையும், பின்னர் சமீபத்தில் (சசிகலா) நடராசன் மற்றும் மன்னார்குடி கும்பல் மீது மீது போடப்பட்ட வழக்குகளையும் வாசகர்களுக்கு நினைவு படுத்துகிறோம். அம்மாவின் கூலிப்படையாக செயல்படுவதற்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் தயாராக இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும்.
பல இசுலாமிய அமைப்பினரும் இதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதையே நடக்கின்ற சம்பவங்கள் காட்டுகின்றன. தங்களுடைய தனிப்பட்ட ஆதாயங்களுக்காகவோ, அரசியல் ஆதாயத்துக்காகவோ முஸ்லிம் மக்களை பகடைக்காயாக்கி, இவர்கள் நடத்தி வரும் இந்த நாடகம், பெரும்பான்மை தமிழக மக்களின் பொதுக்கருத்தை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பி வருகிறது.
நேற்று இரவு சன் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில், “பெரும்பான்மையினரான நாங்கள் கோபப்பட்டால் என்ன நடக்கும் தெரியுமா?” என்று கேட்டார் திரைப்படத்துறையைச் சேர்ந்த கேயார். முஸ்லிம் பிரதிநிதிகள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். இது ஒரு பானைச் சோறுக்கு ஒரு சோறு.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஐ வளர்ப்பதற்கு இதை விட அற்புதமான ஒரு சூழலை வேறு யாரும் ஏற்படுத்திக் கொடுக்க முடியவே முடியாது. ஜெயினுலாபுதீன் வகையறாக்கள் போட்டுக் கொடுத்திருக்கும் இந்த ரோட்டின்மீது இந்து மதவெறியர்களின் ரதயாத்திரை தொடங்கப் போவது உறுதி. அந்த ரத யாத்திரையின் பயனையும் மோடியின் மதிப்புக்குரிய நண்பரான ஜெயலலிதாவே அறுவடை செய்வார் என்பதுதான் இந்த த்ரில்லரின் கிளைமாக்ஸ் திருப்பமாக இருக்கும்.
 
கீழேயுள்ளது கருணாநிதியின் வாதங்கள்: 

தி .மு.க., தலைவர் கருணாநிதி, முதல்முறையாக விஸ்வரூபம் படத்ததை பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

"விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக தமிழக அரசு ஏன் இவ்வளவு கடுமை காட்டுகிறது என்று தெரியவில்லை.

Tamil_News_large_637101.jpg
ஒரு சாரார் கூறும் போது, விஸ்வரூபம் திரைப்படத்தை அ.தி.மு.க.,வுக்குச் சொந்தமான டி.வி., ஒன்று அடிமாட்டு விலைக்கு கேட்டதாகவும், ஆனால் படத்தின் தயாரிப்பாளர் தாங்கள் ரூ. 100 கோடிக்கு மேல் பணத்தை செலவழித்து படம் எடுத்துள்ளதாக கூறி மறுத்து விட்டு, வேறு ஒரு டி.வி.,க்கு கொடுத்து விட்டதால் இந்த கோபம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சர் சிதம்பரம் தொடர்பான புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய கமல், வேட்டி கட்டிய தமிழன் தான் பிரதமராக வரவேண்டும் என்று பேசியது தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

மேலும், கமலுக்கும் ஜெயலலிதாவுக்குமான பகை இன்று நேற்றல்ல, அது எம்.ஜி.ஆர்., காலத்திலேயே துவங்கி விட்டது. கமல் நடித்த விக்ரம் பட சிறப்பு காட்சியில் எம்.ஜி.ஆர்., கலந்து கொண்டார். அப்போது எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதிய ஜெயலலிதா, உங்களை அவமானப்படுத்தும் விதமாக கமல், நீங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை விளம்பரப்படுத்தவில்லை. ஆனால் படத்திற்கு ஒவ்வொரு பேப்பரிலும் முழுப்பக்க விளம்பரம் தருகிறார். நீங்கள் இதை பார்த்தீர்களோ இல்லையோ, நான் பார்த்தேன். அவர் உங்களை கிள்ளுக்கீரையாக நினைக்கிறார் என்று கூறியுள்ளார்.

பெரியார் அடிக்கடி  என்று கூறுவார். தற்போது நடக்கும் நிகழ்ச்சியைப் பார்க்கும் போதும் அது தான் எனக்கு நினைவுக்கு வருகிறது". 

இந்த படத்தை விசாரிக்கும் ஐகோர்ட் நீதிபதி, விஸ்வரூபம் பட சிறப்பு காட்சியை நேரில் பார்த்தார். பின்னர் 28ம் தேதி நடந்த விசாரணையின் போது, கமல் தரப்பும், அரசு தரப்பும் பேசி ஒரு நல்ல முடிவினைக் காணலாம் என தெரிவித்தார். ஆனால் இதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபடவில்லை. விஸ்வரூபம் மீதான தடையை ரத்து செய்யாததால் நேற்று ஐகோர்ட்டில் 6 மணி நேரம் வழக்கு நடந்துள்ளது .

ojah5a2f3rd07n6tp6ctff3gr4165996.jpg-thu

விஸ்வரூபம் படம் மீதான வழக்கில், இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, நேற்று இரவு 10.15 மணியளவில் தான் தனது தீர்ப்பினை அளித்துள்ளார், இதன் பின்னர் அதிமுக அரசு, இரவோடு இரவாக நள்ளிரவு 11.30 மணிக்கு தலைமை நீதிபதி பொறுப்பில் உள்ள நீதிபதி எலிபி தர்மாராவ் வீட்டிற்கு சென்று தீர்ப்பை எதிர்த்து, அப்பீல் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று தலைமை நீதிபதி, இன்று காலை 10.30 மணிக்கு அப்பீல் செய்ய அனுமதி வழங்கியிருக்கிறார். எந்த அளவிற்கு ஜனநாயகமும், மனிதாபிமானமும் இந்த அரசினரிடம் இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேட வேண்டுமா என்ன ?."

இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

 

http://suransukumaran.blogspot.ca/2013/01/blog-post_30.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.