Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலில் யாழ் சுமந்த பையன் - தீபச்செல்வன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
முள்ளிவாய்க்காலில் யாழ் சுமந்த பையன் - தீபச்செல்வன்
22 பெப்ரவரி 2013
2009ம் ஆண்டு மே வரை இலங்கையில் கண்மூடித்தனமான யுத்தம் நடந்தது. யுத்தத்தின் இறுதியில் மக்களின் கைகளில் ஏதுவும் இருக்கவில்லை. கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்படும் பொழுது எல்லாவற்றையும் கைவிட்டு உயிரை மட்டுமே பிடித்துக்கொண்டு ஓடிக் கொண்டிருந்தார்கள் மக்கள். யுத்தம் எல்லாவற்றையும் நிலை கொள்ளச் செய்யுமளவில் மிகவும் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. 

ஒரு சிலர் மாத்திரம் கையில் கிடைத்த எதையாவது ஒன்றை எடுத்துக் கொண்டு யுத்த களத்தை ஊடறுத்துச் சென்றார்கள். இலங்கை அரசு பிடித்த வீடியோக் காட்சிகளில் ஒரு சிறுவன் மாத்திரம் தனது தோளில் யாழை சுமந்தவாறு சென்று கொண்டிருந்ததை பிபிசியின் சிங்களச் செய்தியாளர் பிரியத் லியனகே  அவதானித்தார். யார் இந்தச் சிறுவன்? இவன் எதற்காக அந்த யாழை எடுத்துச் செல்லுகிறான்? என்று அறிய விரும்பினார் பிரியத் லியனகே.  

யாழ் சுமந்த பையனை பிரியத் லியனகே  தேடிக்கொண்டிருப்பது பற்றி குமுதத்தில் வெளியான ரிப்போர்ட் ஈழத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையில் மறுபிரசுரம் செய்யப்பட்டது. அந்த ஸ்டோரி வெளியாகும் பொழுது யாழ் சுமந்து சென்ற அந்தப் பையன் கிளிநொச்சியில் மீளக்குடியேறியிருந்தான். சிங்களர் தேடும் தமிழ் சிறுவன் என்று வலம்புரிப் பத்திரிகையில் வெளியானது அந்த ஸ்டோரி. இந்த தேடல் தொடக்கத்தில் யாழ் சுமந்த பையனின் குடும்பத்தை அதிர்ச்சி கொள்ள வைத்தது. எதற்காக சிங்களவர் தேடுகிறார்? என்று அவர்கள் சந்தேகித்தார்கள்.  

அந்தச் சிறுவன் எதற்காக அந்த யாழை கொடும் யுத்தத்திலும் சுமந்து சென்றான் என்ற கதையை பிரியத் லியனகே அறிய விரும்புகிறார் என்பதை அவர்கள் வலம்புரிப்பத்திரிகை ஊடாகவே அறிந்து கொண்டார்கள். அந்தச் சிறுவனை சந்திக்க அவர் எடுத்த கடுமையான முயற்சிகள் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

லண்டனிலிருந்து இலங்கைத் தடுப்புமுகாங்கள் எல்லாம் தேடியலைந்தார். வன்னியில் புலிகள் இயக்கத்தில் இசையுடன் தொடர்புடைய எல்லோரையும் தேடி அந்தப் பையனை விசாரித்தார் பிரியத். தன்னை சந்திக்க பலர் விரும்பவில்லை என்று சொன்ன பிரியத் பலர் தங்கள் கைபேசிகளை அணைத்துவிட்டதாகவும் சொன்னார். யாரும் எதையும் பேச முடியாத நிலையில் வாழ்ந்துகொண்டிருப்பதை தான் உணர்வதாக அவர் குறிப்பிட்டார். 

Yarl1.jpg

கொடிய யுத்தத்தினால் எல்லாம் நிலை குலைந்த தேசத்தில் யாழ் சுமந்த சிறுவனை அவரால் கண்டுபிடிக்க இயலவில்லை. ஆனாலும் என்றாவது ஒருநாள் அவனைப் பார்ப்பேன் என்ற பிரியத் லியனகேவின் நம்பிக்கை வெற்றி பெற்றிருக்கிறது.  

யாழ் சுமந்த பையன் கிளிநொச்சி மத்திய கல்லூரியில்தான் படிக்கிறான் என்று வலம்புரி பத்திரிகை முகாமையாளர் கஜேந்திரன் சொன்ன பொழுது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்தப் பாடசாலையில்தான் நானும் படித்திருக்கிறேன். அத்துடன் இப்பொழுதும் அடிக்கடி அந்தப் பாடசாலைக்குச் சென்றும் வருவேன். அவனை எங்கேனும் பாத்திருப்பேனா? என்று நினைத்தேன். கிளிநொச்சியில் இரத்தினபுரம் என்ற எனது கிராமத்திற்கு அருகில் உள்ள விவேகானந்தநகர் என்ற கிராமத்தில்தான் அவன் வசிக்கிறான் என்றும் அறிந்தேன். எனது சைக்கிளை எடுத்துக் கொண்டு யாழ் சுமந்த பையனின் வீட்டைத் தேடிச் சென்றேன்.  

யுத்தத்தில் சுமந்து சென்ற அந்த யாழை எடுத்துக் கொண்டு வந்தான். மிகவும் பக்குவமாக அந்த யாழை மடியில் வைத்திருந்தான். முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் அந்த யாழை எப்படி சுமந்து சென்றானோ அதேபோல யாழை சுமந்தபடி நின்றான். ஈழப்போர் முடிந்து இப்பொழுது மூன்று வருடங்களாகிவிட்டன. யாழ் சுமந்த பையனான பராபரன் மேகவண்ணன் இப்பொழுது நன்றாக வளர்ந்திருந்தான். மேகவண்ணன் 1996ஆம் ஆண்டில் முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பில் பிறந்தவன். யுத்த்திற்குள்ளேயே பிறந்து வளர்ந்தவன். 

ஈழப்போரின் இறுதியில் சமர்க்களத்தை ஊடறுத்துச் சென்றவர்களின் பின்னால் இப்படி நகர்ந்த பலரிடம் பல கதைகள் இருக்கின்றன. யாழ் சுமந்த பையனின் பின்னால் மிகவும் உணர்ச்சி மிகுந்த கதையொன்று இருந்தது. 'இந்த யாழ் என்ட அக்காவின்ட' என்று மேகவண்ணன் சொன்னான்.  

Yarl2.jpg

'இந்த யாழை எடுத்துக் கொண்டு வரச் சொல்லியோ யாழைப் பற்றியோ நாங்கள் ஏதுவும் சொல்லேல்ல. எங்கட கண்ணுக்கு முன்னால சனம் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருந்தது. நாங்கள் எதப் பற்றியும் கவனிக்கேல்ல. உயிரைப் பிடிச்சுக் கொண்டு ஓடுற நேரத்தில இந்த யாழைப் பற்றி நாங்கள் நினைச்சே பாக்கேல்ல.' என்று மேகவண்ணனின் தாயார் ஜெயராணி பராபரன் சொன்னார்.  

மேகவண்ணன் சுமந்து வந்த அந்த யாழ் அவனின் இரண்டாவது அக்காவான தர்சினியினுடையது. உயிர் பறிக்கும் முள்ளிவாய்க்கால் யுத்தகளத்தில் ஓடிக் கொண்டிருந்த பொழுது 2009 மே ஒன்பதாம் தேதி மேகவண்ணனின் அக்காவான பராபரம் தர்சினி முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சன்னம் பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து போனார். 

இறந்த இடத்திலேயே தர்சினியை புதைத்துவிட்டு செல்லும் பொழுது யாரும் சொல்லாமலே தர்சியின் யாழை மேகவண்ணன் தூக்கிக் கொண்டு வந்தான். கொல்லப்பட்ட அக்காவின் இசை மூச்சை அந்த யாழில் அவன் கொண்டு வந்திருக்கின்றான் என்றார் தாயார் ஜெயராணி. 

மே 09 இலிருந்து மே 15வரை மிகவும் உக்கிரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது. அந்த யுத்த நாட்களில்தான் மேகவண்ணன் அந்த யாழை சுமந்து கொண்டே சென்றான். 

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தர்சியின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் யாழ் ஒன்றை வாங்கி அவர் படித்த முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரிக்கு கொடுப்பதாக புஷ்பராணி குறிப்பிட்டார். பராபரம் தர்சினி இசையிலும் நடனத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்று அவரது தாயார் புஷ்பராணி குறிப்பிட்டார். 'எங்கட குடும்பமே இசையில ஈடுபாடு கொண்டது. அப்பா நாடகம் நடிப்பார். அம்மா பாட்டு படிப்பா. தம்பிக்கும் அந்த ஈடுபாடு இருக்குது' என்று குறிப்பிட்டார் இன்னொரு அக்காவான யசோதா. 'ஊரில இசை நிகழ்சியள் எதும் நடந்தால் மேகவண்ணன் ஓடிருவான்' என்று யசோதா குறிப்பிட்டார். 

Yarl3.jpg

யசோதாவுக்கு ஆறு வயதான பிள்ளை ஒன்று இருக்கிறது. அவரது கணவரும் புதுமாத்தளனில் வைத்து இராணுவத்தின் செல்தாக்குதலில் இறந்து விட்டார். முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது மேகவண்ணனின் குடும்பம். மேகவண்ணனின் தாயார் புஷ்பராணியின் முகத்திலும் அவனது சகோதரி யாசோதா முகத்திலும் சோகத்தின் கோடுகள் இறுக்கமாக படிந்துவிட்டன. 

பிரியத் லியனகே நினைத்ததுபோலவே அவன் சுமந்த யாழுக்குப் பின்னால் சோகம் உறைந்த பெரும் கதையிருந்தது. அக்காலை இழந்த அந்தச் சிறுவன் அவளின் நினைவாக எடுத்து வந்த அந்த யாழ் இச்சிறுவன் மூலம் ஒலிக்கிறது. 

மேகவண்ணனுக்கு இசையைப் படிக்க வேண்டுமென்று மிகுந்த ஆர்வம் உள்ளது. யுத்;தத்தால் கூரை உடைந்த வீட்டுக்குள் தனது அக்காவின் யாழை வைத்திருக்கிறான் மேகவண்ணன். கொடும் யுத்த களத்திலிருந்து கொண்டு வந்த யாழை மீட்க வேண்டும். இசையை படிக்க வேண்டும். வாழ வேண்டும் என்று விரும்பும் மேகவண்ணன் என்ற சிறுவன் அழிந்த ஈழத் தமிழ் இனத்தில் முளைக்கும் செடியாக நம்பிக்கை தருகிறான்.  

தீபச்செல்வன்     

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/88889/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றிகள், கறுப்பி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.