Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடிப்படை உயிர்ப்பண்புகளின் மரபியல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படை உயிர்ப்பண்புகளின் மரபியல்

 

பிரகாஷ் சங்கரன்
 

 

உயிரினங்களின் நடவடிக்கைகளை உற்றுக் கவனிக்கும் பழக்கமுள்ளவர்களுக்கு பல அடிப்படையான கேள்விகள் யோசிக்க யோசிக்க பெரும் வியப்பாக வளர்ந்துகொண்டே இருக்கும். உதாரணமாக, பிறந்த குழந்தைக்கு தாயின் மார்பில் வாய் வைத்து பால் உறிஞ்சிக் குடிக்க வேண்டும் என்ற அறிவு எப்படி வந்தது? மனிதரில் மட்டுமல்ல எல்லாப் பாலூட்டிகளிலும், கண்ணைக் கூட திறக்காத குட்டிகள் தங்கள் உயிர் வளர்க்கும் உணவு அன்னையின் முலையில் இருப்பதாக அறிந்து எப்படி நேராக ஊர்ந்து சென்று சேர்கின்றன? பறவைகள் கூடு கட்டுவது எப்படி? சிலந்தி வலை பின்னுவது எப்படி?… இன்னும் இதே போன்ற “எப்படி?” என்ற கேள்விகளின் வரிசை முடிவில்லாமல் நீளும்.


மேலே கேட்கப்பட்டவை உட்பட இன்னும் உயிர்களின் நடத்தைகளில் பலவற்றுக்கு ‘அது அவ்வுயிரின் இயல்பு’ என்று ஒற்றை வார்த்தையில் விளக்கம் கொடுத்துவிடலாம். ‘உயிர்களின் இயல்பு’ என்பதைத் தெளிவாக, உயிரியல் சார்ந்து விவாதிக்கத் தகுந்த வகையில் புறவயமானதாக வரையறை செய்ய வேண்டுமென்றால், ‘ஒரு உயிரினத்தில் வெளிப்படுத்தப்படும் உயிரியல் பண்புகளில் மிக அடிப்படையானவை,’ என்று சொல்லலாம். குறிப்பாக அதன் நடத்தை (Behaviour) சார்ந்த பண்புகளில் மிக ஆதாரமானவை என்று கூறலாம்.


உடலில் சர்க்கரை சிதைவுமாற்றம் செய்யபட்டு ஆற்றலாக சேமிக்கப்படுவது முதல் சந்ததியை தோற்றுவிப்பதன் வழியாகத் தன் இனத்தைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் உந்துதல் வரை ஒரு உயிரியுடன் தொடர்புள்ள அனைத்தும் அதன் உயிரியல் பண்புகள் தான். அனைத்து உயிரியல் பண்புகளும் அதற்குக் காரணமான மரபணுவில்தான் குறிக்கப்பட்டு, தலைமுறைகளாக தொடர்ந்து கடத்தப்படுகிறது. உயிரியல் பண்புகள் நேரடியாக ஒற்றை மரபணுவால் குறிக்கப்படலாம் அல்லது மரபணுத் தொடரில் ஆங்காங்கே தனித்தனியாக விரவியிருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மரபணுக்களின் தொகுப்பினால் குறிக்கப்படலாம். (உதாரணமாக ஒருவரின் உயரத்தை நிர்ணயம் செய்வது எந்த ஒரு தனியான மரபணுவும் இல்லை, மாறாக, பல்வேறு மரபணுக்களின் கூட்டு வெளிப்பாட்டால் நிர்ணயம் செய்யப்படுகிறது.)


ஒருசெல் நுண்ணுயிர்களில் மரபணுவில் குறிக்கப்பட்டுள்ள பண்பு நேரடியாக வெளிப்படுகிறது. ஆனால் உயர் உயிரினங்களில் (விலங்குகளில்) இது கொஞ்சம் சிக்கலானது. குறிப்பாக நடத்தை சார்ந்த அடிப்படையான பல பண்புகள் இரண்டு அடுக்குகளிலாக வெளிப்படுத்தப்படுகின்றன. முதலில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மரபணுக்களில் ஒரு உயிரியல் பண்பு குறிக்கப்படுகிறது, அடுத்ததாக இந்த மரபணுக் குறியீடு, ஒரு உயிரியல் பண்பாக உருப்பெறும் களமான மூளையில், ஒவ்வொரு பண்புக்கும் உள்ள சிறப்புப் பகுதிகளில் வெளிப்படுவதன் மூலம் முழுமை அடைகிறது. மனிதன் போன்று, நரம்பணு வலைப்பின்னல்களும் முளையின் அளவும் பெருவளர்ச்சி பெற்ற உயிரினத்தில் இந்த இரண்டாம் கட்ட வெளிப்பாடு இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. உதாரணமாக, பேச்சு/மொழி என்னும் திறனுடன் தொடர்புடைய மரபணுக்கள் வெளிப்படும் களம் மனிதனின் மூளையில் உள்ள பேச்சுக்கான சிறப்புப் பகுதிகள்.


மூலக்கூறு மரபியல் துறையில் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்புகளின் பெரும்பாய்ச்சல் நிகழ ஆரம்பித்த காலத்திலிருந்து அடிப்படையான பல உயிரியல் பண்புகளுக்கு மரபியல் விளக்கங்களும் ஆராய்ச்சி பூர்வமான ஆதாரங்களும் அளிக்கப்பட்டு வருகின்றன. அதற்கு முன்பு வரை விலங்குகளின் இயல்பு எனக் கருதப்படும் மிக அடிப்படையான உயிரியல் பண்புகள் தத்துவம், சமூகவியல், நடத்தையியல், உளவியல் மற்றும் நரம்பியல் சார்ந்து மட்டுமே விளக்கப்பட்டு வந்தன. எடுத்துக்காட்டாக, அறிவாற்றல் அல்லது மொழி/பேச்சு என்னும் பண்புகளுக்கான மரபியல் அடிப்படையை விளக்கி சொல்வனத்தில் முன்னர் எழுதியுள்ள கட்டுரைகளைப் படிக்கலாம்.


உயிரினங்களின் நடத்தை சார்ந்த மிக அடிப்படையான பண்புகள் மரபணுக்களில் ஏற்கனவே குறிக்கப்பட்டிருந்தாலும், அவற்றில் சில சமூக வாழ்க்கையின் மூலம் அவற்றுக்குக் ‘கற்றுத்தர’ப்படுகின்றன, வேறு சில எந்தப் புறத்தூண்டுதலோ, உதவியோ இன்றி வெளிப்படுகின்றன. காட்டில் ஒரு இளம் சிறுத்தைக் குட்டிக்கு வேட்டையாடுதல் தாயிடமிருந்து கற்றுக் கொள்ளும் பண்பாக இருக்கிறது, ஆனால் நீச்சல் அதற்குக் கற்றுத் தரப்படுவதல்ல. வாழ்வில் முதல் முறை அது நீரில் இறங்கும் போதே நீந்தத் தொடங்கிவிடுகிறது. வீட்டில் வளர்ப்புப் பிராணிகளாக பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகளில் இத்தைகைய பண்புகளை கவனித்தால் அது இன்னும் ஆச்சரியத்தைத் தூண்டும். தாயிடமிருந்து கண்திறக்கும் முன்பே பிரிக்கப்பட்டு தன் இனத்தின் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தபட்டு முற்றிலும் அன்னியமான சூழலில் வளர்க்கப்படும் நாய்களும் கூட அவற்றின் இயல்புகளை மறந்துவிடுவதில்லை. நீச்சலோ, முகர்ந்து அறிதலோ அவற்றில் எந்த ‘கற்றுத்தரலும்’ இன்றியே வெளிப்படுகிறது. சட்டென்று இப்பண்புகளை நாம் ‘அவை நாயின் இயற்கை’ என்று சொல்லிவிடுவோம். அவ்வாறு சொல்லும் போது நமக்குத் தெரியாமலே நாம் குறிப்பிடுவது இத்தகைய அடிப்படை உயிர்ப்பண்புகள் தலைமுறைகளுக்குக் கடத்தப்படும் விதமாக உயிரிகளில் உள்ளார்ந்து பொதிந்து வைக்கப்பட்டுள்ளது என்னும் மரபியல் நோக்கையே ! “மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுத் தரவா வேண்டும்?” என ஆழமான பொருள் பொதிந்த ஒரு புரிதலை எளிய பழமொழியாக பண்பாட்டில் சேகரித்து வைத்திருக்கிறோம்.


சமீபத்திய மரபியல் ஆய்வு ஒன்று இத்தகைய அடிப்படை உயிர்ப்பண்புகளுக்கான மரபியல் ஆதாரத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. எலிகள் பூமிக்கு அடியில் வலை தோண்டி வசிப்பது அவற்றின் அடிப்படையான உயிர்ப்பண்பு. தங்கள் இயற்கையான வாழ்விடத்தை விட்டு பல தலைமுறைகளாக ஆராய்ச்சிக்கூடங்களிலேயே இனப்பெருக்கம் செய்யப்பட்டு, பிளாஸ்டிக் கூண்டுகளில் வளர்க்கப்பட்ட வெவ்வேறு இன எலிகள், பெரிய மண்தொட்டிகளில் விடப்பட்டபோது சட்டென்று மண்ணைத் தோண்டி வலைகளை அமைக்க ஆரம்பித்தன. இதன் மூலம் வலையைத் தோண்டுதல் என்னும் அடிப்படைப்பண்பு சமூக வாழ்கையால் மட்டும் உண்டாவதல்ல, மரபணுக்களிலேயே குறிக்கப்பட்டுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. வலையைத் தோண்டும் உந்துதல் மட்டுமல்ல, தோண்டப்போகும் வலையின் கட்டுமானத் திட்டமும் கூட மரபணுவிலேயே பொதிந்து வைக்கப்பட்டுள்ளது என்கிறது இந்த ஆய்வு.


17burrow-articlelarge.jpg


இந்த ஆராய்ச்சிக்காக, மரபணு ரீதியாக நெருங்கிய இரண்டு எலி இனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் ஓல்ட்ஃபீல்ட் எலிகள் எனப்படும் எலி இனம் நீண்ட சுரங்கப்பாதைகளும், உள் நுழைவதற்கும் ஒரு வாசலும், ஆபத்து நேரங்களில் தப்பித்துப் போவதற்கு இன்னொரு சுருக்குவழியும் வைத்து வலைகளை தோண்டக்கூடியது. ஆய்வில் பயன்படுத்தப்பட்ட இன்னொரு எலி இனம் நீளம் குறைவான சுரங்கப்பாதையும், தப்பிச் செல்லும் வாசல் இல்லாமலும் உள்ள வலைகளைத் தோண்டக்கூடியது. இயற்கையான அதன் வாழ்க்கைச் சூழலிலும், ஆய்வகத்திலும் எத்தனை தலைமுறைகள் தாண்டினாலும் இனம் சார்ந்த இந்த வலைகளின் கட்டுமானத் திட்டம் மாறவே இல்லை.


அடிப்படையில் இரண்டு எலி இனங்களும் மரபணு ரீதியாக நெருங்கியவை ஆதலால் இவற்றைக் கலந்து இனப்பெருக்கம் செய்ய வைத்து கலப்பின எலிகளை உருவாக்கினர். வலையின் சுரங்கப்பாதை நீளம், தப்பிச்செல்லும் வாசல் ஆகியவற்றை, முதல் தலைமுறை கலப்பின எலிகள் தோண்டும் வலைகளிலும், கலப்பின எலிகளை மீண்டும் நீளம் குறைவான சுரங்கப்பாதை உள்ள வலைகளைத் தோண்டும் எலி இனத்துடன் இனப்பெருக்கம் செய்ய வைத்து உருவான எலிகளின் வலைகளிலும் அளந்தனர். அத்துடன் இந்த எலிகளில் இருந்து மரபணு பிரித்தெடுக்கப்பட்டு தொடர்ந்து மேற்கொண்ட மூலக்கூறு மரபணு ஆய்வில் எலி இனங்களின் மரபணுத் தொடரில் மூன்று பகுதிகள் வலையின் சுரங்கப்பாதை நீளத்தைக் குறிக்கின்றன என்பதையும், ஒரு பகுதி தப்பிச்செல்லும் வாசல் அமைப்பதைக் குறிப்பதையும் கண்டுபிடித்தனர்.


வலைதோண்டுதல் என்னும் அடிப்படை உயிர்ப்பண்புக்கான மரபியல் பின்புலம் மிகநீண்ட மரபணுத் தொடரில் இருந்து நான்கு குறுகிய மரபணுப் பகுதிகளில் பொதிந்துள்ளது என்பதை வெற்றிகரமாகக் கண்டுபிடித்துவிட்டதால், இனி இதில் நேரடியாகப் பங்குபெறும் மரபணுக்களைத் தேட வேண்டிய பரப்பு குறுகி விட்டது. விஞ்ஞானிகளின் அடுத்த ஆராய்ச்சி இலக்கு இந்த நான்கு பகுதிகளிலும் குறிப்பிட்ட எந்த மரபணு வலைதோண்டும் பண்பைக் குறிக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது தான்.


burrow-shape.jpg


ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகமுக்கியமான இந்த ஆய்வு, புகழ்பெற்ற அறிவியல் இதழான ‘நேச்சர்’-ல் கடந்த மாதம் வெளியாகி உயிரியல் ஆய்வாளர்களின் பெரும் கவனத்தையும், வரவேற்பையும் பெற்றிருக்கிறது. ஏற்கனவே விலங்குகளின் நடத்தை தொடர்பான பல பண்புகளுக்கான மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதும், மேலும் இந்த ஆய்வின் முடிவும், அடிப்படையான உயிரியல் பண்புகளுக்கான மரபியல் குறித்த தேடலில் பல புதிய பாதைகளைத் திறந்து விட்டுள்ளன. அவை இத்தகைய ஆய்வுகளின் எதிர்கால சாத்தியங்கள் என்னவெல்லாமாக இருக்கக்கூடும் என்ற கொஞ்சம் ‘அறிவியல் புனைவுத் தனமான’ ஊகங்களை மனதில் தூண்டுகின்றன.


எலி வலை தோண்டுதல், பறவை கூடு கட்டுதல் போன்ற பெரிய உயிரினங்கள் மிகச்சிறிய குழுவாக அல்லது தனியாக ஈடுபடும் அடிப்படை உயிரியல் செயல்பாடுகளின் மரபியல் பின்புலம் தரும் வியப்பு ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் எறும்புகள், தேனீ, கரையான் போன்ற சிற்றுயிர்கள் பல்லாயிரக்கணக்கில் ஒன்றுசேர்ந்து ஈடுபடும் செயல்களில் (புற்றுக் கட்டுதல், தேனடை கட்டுதல், உணவு தேடுதல், எதிரிகளைத் தாக்குதல், சமூகமாக வாழ்தல் இன்னபிற…) மரபணுக்களின் பங்கு என்னவாக இருக்கமுடியும்? என்னும் கேள்வி இன்னும் மிகப்பெரிய வியப்பையும் எதிர்பார்ப்பையும் உண்டாக்குகிறது. உதாரணத்திற்கு, சிலவகை எறும்புகளின் புற்றின் பிரம்மாண்டமான அளவும், ஏராளமான அறைகளும், பாதைகளும் கொண்ட மிகச்சிக்கலான கட்டுமானத் திட்டமும் ஒவ்வொரு தனி எறும்பின் திறனுக்கும், ஆயுளுக்கும் அப்பாற்பட்டவை. சில வாரங்களே உயிர்வாழும் எறும்புகள் (ராணி எறும்புகள் விதிவிலக்கு, அவை 20 - 30 வருடங்கள் வரை வாழும்) தலைமுறை தலைமுறையாகப் பிறந்து புற்றைக் கட்டி வளர்த்துக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு எறும்பின் மரபணுவிலும் இந்த பிரம்மாண்ட கட்டுமானத்திற்கானத் திட்டம் இருக்க முடியுமா?


ps2.jpg


 


பொதுவாக, எறும்புகளின் கூட்டுமனத்தில் அந்தப் புற்றின் கட்டுமானத்திற்கான திட்டம் இருக்கக்கூடும், அந்த எறும்புகளின் கூட்டுமனம் என்பது பிரபஞ்ச மனத்தின் ஒரு பகுதியாக இருக்கக்கூடும் என்ற தத்துவார்த்தமான விளக்கமே இதுவரை கொடுக்கப்பட்டுள்ள பதில்களுள் சிறந்தது என்பது என் எண்ணம். புகழ்பெற்ற பகுப்பாய்வு உளவியல் வல்லுனரான கார்ல் யுங் முன்வைத்த, மனிதர்களுள் தனிமனித நனவிலியைத் தாண்டி மிக ஆழத்தில் ஒட்டுமொத்த இனத்தின் ‘கூட்டு நனவிலி’ (Collective Unconscious) இருக்கிறது என்ற கருதுகோள் உளவியலில் புதிய வாசல்களைத் திறந்தது. இந்த கூட்டு நனவிலி மனித இனத்தில் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கைமாறுகிறது. விளைவாக, கூட்டு நனவிலியில் இருக்கும் ‘தொல்படிமங்கள்’ (Archetypes) மனிதரில் நனவுமனச் செயல்பாட்டில் வெளிப்படுகிறது என்றார் யுங். இந்தக் கருதுகோளை, மேலே சொன்ன கூட்டுமனம் என்ற தத்துவார்த்தமான விளக்கத்துடன் - தலைமுறைகள் தாண்டி ஒரு மிகப்பெரிய கூட்டுச்செயல்பாட்டில் ஈடுபடும் எல்லா உயிரினங்களுக்கும் போட்டுப்பார்க்கலாம்.


உளவியலில் கூறப்படும் கூட்டு நனவிலி போல, அறிவியலில் (சமூக உயிரியலில்) ‘கூட்டு அறிவாற்றல்’ (Collective Intelligence) என்றொரு கருதுகோள் உண்டு. ஒரு உயிரினத்தில், தனித்த ஒவ்வொரு அங்கங்களின் அறிவாற்றல் ஒட்டுமொத்தமாக்க் கூடிச் செயல்படுவதே ‘கூட்டு அறிவாற்றல்’.


அடிப்படையில் மனிதன் உட்பட அனைத்துப் பெரிய பலசெல் உயிரினங்களும் தனித்தனி செல்கள் ஒட்டுமொத்தமாகக் கூடி ஒற்றை அமைப்பாகச் செயல்படும் விதமாக பரிணமித்தவை தான். ஒரு மனிதனின் ஒவ்வொரு நரம்பணுவும் தனித்தனியாக இருந்தால் அவை, ஒன்றிலிருந்து இன்னொரு நரம்பணுவுக்கு சமிக்ஞையைக் கடத்தும் செயல்பாட்டில் மட்டும் தான் ஈடுபட முடியும். ஆனால் அவை ஒட்டுமொத்தமாக இணைந்து ஒரே மூளையின் அங்கமாகச் சேர்ந்து செயல்படும்போது ஆர்யபட்டராகவோ ஆதிசங்கரராகவோ மாறமுடியும்.


ps1.jpg


நுண்ணுயிர்கள் முதல் எறும்புகள், கரையான்கள், இன்னும் பல்வேறு பூச்சிகள், சிற்றுயிர்கள், பறவைகள், காட்டெருமை போன்ற பெரிய விலங்குகள் உட்பட பல உயிரினங்களில் இந்தக் கூட்டு அறிவாற்றல் செயல்படுகிறது. வானில் பறக்கும் பறவைக்கூட்டம் சட்டென்று ஒரே நேரத்தில் ஒரு திசை நோக்கி வளைந்து திரும்புதலும், கடலடியில் சிறுமீன்கள் பல்லாயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாக நீர்ச்சுழல் போல சுழல்வதும், ஒரே திசையில் நீந்துவதும், ஒரே நேரத்தில் நீந்தும் போக்கை மாற்றி அலையெனப் புரண்டு திரும்புவதும், பெரும்படையாக லட்சக்கணக்கான எறும்புகள் உணவு தேடிப் புலம்பெயர்வதும் எல்லாம் ‘கூட்டு அறிவாற்றல்’ கொண்டும் விளக்கப்படுகின்றது. ஒற்றை பேருருவமும் மனமுமாக ஒரு உயிரினத்தின் ஒவ்வொரு தனி அங்கமும் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து கூட்டு இச்சையினால் (Collective Will) செயல்படும் இவற்றை ‘அதிஉயிரிகள்’ (Superorganisms) என அழைக்கின்றனர். இந்தக் கூட்டு அறிவாற்றலில் மரபணுக்கள் பங்கு இருக்க முடியுமா என்பது குறித்து எதிர்கால ஆய்வுகள் இருக்கக்கூடும்.


இத்தகைய ஊகங்களுக்கு வலு சேர்க்கும் விதத்தில் இருக்கிறது, அதே ‘நேச்சர்’ இதழில் போன மாதம் வெளியான சுவிட்ஸர்லாந்தின் லாஸேன் பல்கலைக்கழக ஆராய்ச்சிக்குழுவினரால் நெருப்பு எறும்புகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு. ஒரு நெருப்பு எறும்புக் காலனியில் பொதுவாக ஒரே ஒரு ராணி எறும்பு மட்டுமே இருக்கும். சில நெருப்பு எறும்புக் காலனிகளில் வழக்கத்திற்கு மாறாக ஒன்றுக்கு மேற்பட்ட ராணி எறும்புகள் இருக்கும். இந்த இரண்டு விதமான காலனிகளைச் சேர்ந்த எறும்புகளின் மரபணுக்களில் நடத்தபட்ட மூலக்கூறு மரபியல் ஆய்வில் Gp-9 என்னும் ஒற்றை மரபணு நேரடியாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ராணி எறும்பை ஏற்றுக்கொள்ளும் உயிரியல் பண்பை நிர்ணயிக்கிறது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த Gp-9 என்னும் மரபணு எறும்புகளில் முகர்வுத் திறனை குறிக்கும். ஒரு எறும்புச் சமூகத்தின் இந்த Gp-9 மரபணுவில் ஏற்படும் சிறிய மாற்றம் அந்தச் சமூகம் ஒன்றுக்கு மேற்பட்ட ராணி எறும்புகளை ஏற்றுக்கொள்ளும் பண்பை உண்டாக்குகின்றது. X, Y என்று பாலின நிர்ணயம் செய்யும் மரபணுத்தொகுப்பு இருப்பதுபோல, இப்போது இந்த ஆய்வின் மூலம் முதன் முறையாக சமூக வாழ்க்கைப் பண்பை நிர்ணயிக்கும் ஒரு ‘சமூக மரபணுத்தொகுப்பு’ (‘Social Chromosome’) கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வு உயிர்களின் அடிப்படை பண்புகளின் மரபியல் பின்புலத்தை நிரூபிக்கும் நேரடியான –ஒற்றை மரபணுத் துல்லியத்திற்கு தரவுகளைத் தருகிறது என்ற வகையில் மிகமுக்கியமானது.


கட்டுரையின் தொடக்கத்தில் கேட்கப்பட்ட அடிப்படைக் கேள்விகளில் சிலவற்றுக்கு இன்னும் மரபியல் சார்ந்த விளக்கம் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், இதுவரை மரபணு விளக்கமே கொடுக்க முடியாமல் இருந்த -பல்வேறு காரணிகள் கொண்ட, மிகச் சிக்கலான, அடிப்படையான உயிர்ப்பண்புகளுக்கு ஒன்று அல்லது பல்வேறு மரபணுக்களின் பின்புலம் இருப்பதை வெளிக்கொண்டுவரும் இத்தகைய நவீன மரபணுவியல் ஆய்வு முடிவுகள், உயிர்ப்பண்புகளைப் பற்றிய நம் புரிதலுக்கு முக்கியமான தகவல்களையும், அறிதலின் சங்கிலியில் விடுபட்ட கண்ணிகளையும், தொடர்புறும் புதிய கோணங்களையும் சேர்க்கின்றன. அதற்காக ‘அனைத்தும் மரபணு மயம்’ என்றோ, தத்துவம், சமூகவியல், நடத்தையியல், உளவியல், நரம்பியல் சார்ந்த விளக்கங்கள் காலாவதியாகிவிடும் என்றோ பொருளில்லை. இந்த மரபியல் பின்புலம் ஏனைய விளக்கங்களுக்கு அடியிலிருந்து ஒளியூட்டுவதன் மூலம் அறிதலுக்கு புதிய பரிமாணங்களையும், திசைகளையும் காட்டுகிறது.

 

http://solvanam.com/?p=24245

  • கருத்துக்கள உறவுகள்

burrowing2.jpg

 

நேச்சரில் வந்திருந்தது. வாசித்திருந்தேன்.

 

தமிழில் அழகுற எழுதி இருக்காங்க. பாராட்டுக்கள்.

 

http://youtu.be/VJuayMgNUWw

 

Behaviour genes unearthed.            

               
Speedy sequencing underpins genetic analysis of burrowing in wild oldfield mice.
           

http://www.nature.com/news/behaviour-genes-unearthed-1.12217

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி கிருபண்ணா. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.