Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரிமைகள் பேரவையில் இந்தியாவின் நிலைப்பாடு

Featured Replies

பல்வேறு தளங்களிலும் பல்வேறு முனைப்புக்களும் எதிர்பார்ப்புக்களும் நிலவி வரும் ஒரு பரபரப்பான சூழ்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ளது.

அதில் இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கைப் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், இலங்கையில் நீதித்துறை, ஊடகத்துறை என்பவற்றின் மீதான அச்சுறுத்தல் தொடர்பாகவும், பிரதான கவனம் செலுத்தப்படும் எனக் கருதப்படுகிறது.

அதன் காரணமாக, அக்கூட்டத்தொடரிலும் அடுத்த காலப்பகுதியிலும் இலங்கை பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய இக்கட்டான நிலை தோன்றக் கூடும்.

ஏற்கனவே கடந்த கூட்டத்தொடரில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்தத் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டு அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகளால் முன்வைக்கப்பட்டு வந்தது.

மனித உரிமைகள் விவகாரங்களில் இலங்கை போதிய கவனம் செலுத்தவில்லை என்ற காரணத்தை முன்வைத்து ஐரோப்பிய ஒன்றியம், தான் இலங்கைக்கு வழங்கி வந்த ஜி.பி.எஸ். பிளஸ் வரிச்சலுகையை நிறுத்திவிட்டது.

அதேவேளை, சர்வதேச மன்னிப்புச் சபை, ஆசிய மனித உரிமை கள் பேரவை உட்படப் பல மனித உரிமை அமைப்புக்கள் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளன.

மேலும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் அமைப்புகள் நடத்திவரும் தீவிரமான பிரசாரங்களும், போராட்டங்களும், இலங்கை அரசின் செயற்பாடுகளை அம்பலப்படுத்துவதில் காத்திரமான பங்கை வகித்து வருகின்றன.

இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக சனல் 4 தயாரித்து அண்மையில் வெளியிட்ட தொலைக்காட்சி ஆவணப்படம், உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அது இட்டுக்கட்டப்பட்ட போலியான தகவல்களை கொண்டது, எனக் கூறி இலங்கை தலைகீழாக நின்று மறுத்த போதிலும் அது உண்மையானது என்றே பலதரப்புக்களும் நம்புகின்றன.

குறிப்பாக, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இரண்டாவது மகன் கொல்லப்பட்டமை தொடர்பான காட்சிகள், போராளிகள் எனக்கருதப்பட்ட இளம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பான காட்சிகள் பல உலக நாடுகளினதும், மனித உரிமை நிறுவனங்களினதும் கோபத்தைக் கிளறியுள்ளன.

அது மட்டுமின்றி அது மனித உரிமைகள் பேரவைகூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளுக்கு போட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது. அங்கு அந்தப் படம் திரையிடப்படுவதை இலங்கை கடுமையாக எதிர்த்த போதிலும், அது அங்கு போட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தொடர் ஆரம்பமான போதே, இலங்கைக்கு சகுனப் பிழைகள் தென்பட ஆரம்பித்து விட்டன. அதை ஆரம்பித்துவைத்துப் பேசிய மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை, லிபியா ஆகிய நாடுகளில் இடம்பெறும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து கடும் கண்டனங்களை வெளியிட்டார்.

அடுத்து அங்கு உரையாற்றிய அமெரிக்கப்பிரதிநிதியும் இலங்கையில் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமலிருந்து வரும் இனப்பிரச்சினைக்கான மூல காரணங்கள் தீர்க்கப்படாத வரை இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பணி முற்றுப்பெற முடியாது எனக் குறிப்பிட்டிருந்தார்.

வழமையாகப் போர்க்குற்றங்கள், மனித உரிமைகள் என்பன தொடர்பான விடயங்களை முதன்மைப்படுத்தும் அமெரிக்கா, இம்முறை அதேயளவு முக்கியத்துவத்தை இனப்பிரச்சினைத் தீர்வுக்கும் கொடுத்திருப்பது ஒரு முக்கிய விடயமாகும்.

இத்தகையதொரு சூழ்நிலையில் அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான ஒரு கண்டனத் தீர்மானத்தைக் கொண்டு வரவுள்ளது. அதன் விவரங்கள் இப்போது வெளியிடப்படாவிட்டாலும், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், இனப்பிரச்சினைத்தீர்வு என்பன தொடர்பாகப் போதிய அக்கறை காட்டப்படாமை தொடர்பான கண்டனங்களும் வலியுறுத்தல்களும் இடம்பெற்றுள்ளன எனத் தகவல்கள் கசிந்துள்ளன.

அதே வேளை இலங்கையின் சார்பில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் குழுவுக்குத் தலைமை தாங்கும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, மீள்குடியேற்றம்.

வடக்கு கிழக்கு அபிவிருத்தி போன்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசு நிறைவேற்றிவிட்டதாகவும், ஏனையவற்றை நிறைவேற்ற கால அவகாசம் தேவை எனவும் அங்கு பூசி மெழுகுவார். போர்க்குற்றங்கள் எதுவும் படையினரால் மேற்கொள்ளப்படவில்லையெனவும் புலிகளே அவற்றை மேற்கொண்டனர் என்ற இலங்கை இராணுவத் தளபதியால் நியமிக்கப்பட்ட இராணுவ நீதிமன்றம் தயாரித்த அறிக்கையை அவர் அங்கு முன் வைக்கவும் கூடும்.

அவர் எதைச் சொன்னாலும், எப்படி பேசினாலும் இலங்கைக்கு ஆதரவு வழங்கும் நாடுகள் அவற்றின் உண்மை, பொய்யை ஆராய்ந்ததுமில்லை ஆராயப்போவதுமில்லை. இலங்கையின் இனப்பிரச்ச்சினைத் தீர்வு தொடர்பாகவோ, போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவோ அவற்றுக்கு எவ்வித அக்கறையும் கிடையாது.

ஒரு இனம் தொடர்ந்து ஒடுக்கப்படுவது தொடர்பாகக் கூட அவர்கள் கவலைப்படுவதில்லை. அமெரிக்க எதிர்ப்பு, அணிசேரா நாடுகள், ராஜீய உறவுகள் என்ற அடிப்படையில் இலங்கை அரசு அவற்றைத் தனக்குச் சார்பானதாக நிலை நிறுத்த வைத்திருக்கிறது.

சவூதி அரேபியா, ஜோர்தான் போன்ற மன்னர் ஆட்சி நிலவும் நாடுகளை அவை அமெரிக்கச் சார்பானவையாக இருந்த போதும், இங்குள்ள அரசு சார்ந்த முஸ்லிம் தலைமைகள் மூலமாக வளைத்துப் போட்டு வைத்திருக்கிறது இலங்கை.

எது எப்படியிருந்த போதிலும், இலங்கை விவகாரங்களில் இந்தியாவின் முக்கியத்துவத்தை எவரும் குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது. அப்படி எவரும் குறைத்து மதிப்பிடுவதுமில்லை.

இந்தியா தென்னாசியாவில் ஒரு பிராந்திய வல்லரசு என்பதுடன், இலங்கையின் அமைவிடம் தென்முனைக்கு அண்மையில் உள்ளது. இந்து சமுத்திரத்தில் இலங்கை ஒரு போக்குவரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருப்பதால் இந்தியாவின் இராணுவ, பொருளாதாரத் தேவைகளின் அடிப்படையில் இலங்கை, இந்தியாவுக்கு மிக முக்கியமானதாகும்.

எனவே அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற மேற்குலகம் இலங்கை தொடர்பான விஷயங்களில் இந்தியாவைப் புறந்தள்ளி விட்டு எந்த முடிவையும் எடுக்கப் போவதில்லை. 

எனவே, இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்தப் பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாடு ஒரு காத்திரமான பங்கை வகிக்கும்  என்பதை எவருமே மறுத்து விட முடியாது.

எனினும் கடந்த வருடம் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு கொடுத்த போதும், அதில் திருத்தம் மேற்கொள்ளும்படி அழுத்தம் கொடுத்து அதை வலுவிழக்கச் செய்தது என்பதை மறந்துவிட முடியாது.

ஆனால் இலங்கை, இந்தியா வழங்கிய அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தாமல், உலகையும் இந்தியாவையும் ஏமாற்றும் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.

அத்தகையதொரு அனுபவத்தின் பின்பு, இந்தியா, இவ்விடயத்தில் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கும் என்பதுதான் இங்கு எழும் கேள்வி. தமிழ் நாட்டில் ஆளும் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் உட்பட சகல கட்சிகளும் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இந்திய மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க, காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்கள், லோக்சபா உறுப்பினர்கள், ராஜ்யசபா உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து மேற்படி தீர்மானத்தை ஆதரிக்கும்படி கோரியுள்ளனர்.

பிரதமர் அதற்கு சம்மதம் தெரிவித்ததாக அவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் நாராயணசாமி இந்தியா அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில் இந்திய நாடாளுமன்றத்திலும், மேலவையிலும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இரண்டாவது மகன் இலங்கைப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பான பிரச்சினை எழுப்பப்பட்டு, பெரும் அமளிதுமளி ஏற்பட்டு சபைகள் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமன்றி இந்திய மேலவையில் அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமெனக் கோரி பிரேரணை முன்வைக்கப்பட்டு விவாதங்கள் இடம்பெறுகின்றன.

இவ்விதம் பல முனைகளிலும் இந்தியா அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையிலும், இந்தியா இவ்விடயம் குறித்து இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

அமெரிக்காவின் பிரேரணையை இந் தியா ஆதரிக்கும் போன்ற ஒரு தோற்றப்பாடு தென்பட்ட போதிலும், கடைசி நேரத்தில் பிரேரணையை மென்மைப்படுத்த அது முயலக்கூடும் என்ற சந்தேகமும் சில தரப்பினரிடம் எழாமல் இல்லை.

இலங்கை, இந்தியாவைத் தனது பக்கம் சாய்க்கப் பெரும் இரகசிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இந்தியா இலங்கையைக் கையாள்வதில் மிக அவதானமாகவே செயற்பட வேண்டியுள்ளது.

இந்தியா இலங்கை மீது கடுமையான அழுத்தங்கள் மேற்கொண்டால் இலங்கை கூடுதலாகச் சீனா பக்கம் சாய்ந்து விடக்கூடும் என்ற அச்சம் எப்போதுமே இந்தியாவுக்கு உண்டு. அதன் காரணமாக, தொடர்ந்து இந்தியா, இந்த விடயத்தில் பல விட்டுக் கொடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது.

எனினும் யதார்த்தம் இந்தியாவின் எதிர்பார்ப்புக்கு மாறாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. இலங்கை மேலும் மேலும் சீனா பக்கம் சாய்வதன் மூலம் இலங்கையில் சீனாவுக்கு ஒரு பலமான அடித்தளம் உருவாகி வருகிறது.

அதாவது இலங்கையுடனான இந்தியாவின் விட்டுக்கொடுப்பு அரசியல், இந்தியாவின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாகவே மாறிவருகிறது. குறிப்பாக இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகம், கொழும்பின் தாமரைக் கோபுரம் என்பன இந்தியாவின் பாதுகாப்பைப் பாதிக்கும் மையங்களாகவே நோக்கப்படுகின்றன.

அதாவது இலங்கையை அரவணைத்து வழிக்குக் கொண்டு வரும்  இந்தியாவின் ராஜ தந்திரம் தோல்வியடைந்து விட்டதாகவே தோன்றுகின்றது. எனவே இந்தியா மாற்று வழியில் இறங்க வேண்டிய தேவை எழுந்துவிட்டது என்பது மறுக்க முடியாத  உண்மை.

எனினும் இந்தியா உடனடியாக அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் எனச் சொல்லிவிட முடியாது. ஆனால் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் அரசியல் நிலைப்படு, இந்தியாவின் தவிர்க்க முடியாத தேவையாகிவிட்டது.

எனவே தற்சமயம் இலங்கை மீது சர்வதேசம் கொடுக்கும் அரசியல் அழுத்தங்களை நீளக் கயிற்றில் கட்டி விடுவதற்கு இந்தியா மறைமுகமாக ஒத்துழைப்பை வழங்கலாம்.
அவ்வகையில், மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கப் பிரேரணைக்கு இந்தியா ஆதரவு வழங்கக் கூடிய சாத்தியமே அதிகமாகத் தென்படுகின்றது. அது மன்மோகன் சிங்குக்கு உள்நாட்டில் எழும் நெருக்கடிகளைத் தணிக்கவும் உதவக் கூடும்.

இந்தியா இலங்கையைக் கையாள்வதில் மிக அவதானமாகவே செயற்பட வேண்டியுள்ளது. இந்தியா இலங்கை மீது கடுமையான அழுத்தங்கள் மேற்கொண்டால் இலங்கை கூடுதலாகச் சீனா பக்கம் சாய்ந்து விடக்கூடும் என்ற அச்சம் எப்போதுமே இந்தியாவுக்கு உண்டு.

- சந்திரசேகரஆஷாத்

 

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=8104846703811434

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.