Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலை செய்த இலங்கை அரசை காப்பாற்ற முனையும் அமெரிக்கா?

Featured Replies

இனப்படுகொலை செய்த இலங்கை அரசை காப்பாற்ற முனையும் அமெரிக்கா?
பொன்.சந்திரன், , கோவை.

ஞாயிறு, 03 மார்ச் 2013 22:17  


ஜெனிவாவில் நடந்து கொண்டிருக்கின்ற (பிப்ரவரி - மார்ச் 2013) ஐ.நா அவையின் மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கையில் நடைப்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் பற்றிய விவாதம் ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பிரிட்டனின் சானல் 4 தொலைக் காட்சியின் மனித உரிமை பத்திரிகையாளரும் ஆவணப்பட இயக்குனருமான கெல்லன் மெக்ரி அவர்களின் ஆவணப்படம் ("NO FIRE ZONE - THE KILLING FIELDS OF SRILANKA") பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதற்கு முன் KILLING FIELDS என்ற பெயரில் வெளி வந்த ஆவணப்படம் இன அழிப்புப் போரின் சில காட்சிகளை பதிவு செய்திருந்தது. ஆனால் பாதுகாப்பு வளையம் என்று அழைக்கப்பட்டு அப்பகுதியில் குவிந்த பொது மக்கள் மீது சிங்கள இராணுவம் முற்றுகையிட்டு பீரங்கித் தாக்குதல் நடத்தியதை காட்சிப்படுத்தியிருக்கும் புதிய ஆவணப்படம் இலங்கையின் போர் குற்றங்களை அம்பலப்படுத்தியுள்ளது. பாதுகாப்புப் வளையங்களில் இருந்த தற்காலிக மருத்துவ மனைகள் மீது 65 முறை பீரங்கி தாக்குதல்கள் நடத்தப்பட்டன எனபதை இந்த ஆவணப்படம் ஆதாரத்துடன் படம்பிடித்துள்ளது.     NO FIRE ZONE என்பது உண்மையில் INTENSIVE FIRE ZONE ஆக தமிழ் மக்களைக் குவித்து கொல்வதற்கான கொலைக் களமாக மாற்றப்பட்டது என்பதை ஆவணப்படம் பதிவு செய்துள்ளது.


இப்பதிவுகள் உலக ஊடகங்கள், உலகளாவ உள்ள மனித உரிமை ஆர்வலர்கள், ஐ. நா மனித உரிமைக் கவுன்சில் மற்றும், இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படத்தை திரையிட பெரும் முயற்சி எடுத்துக் கொண்ட Amnesty International மற்றும் International Human Rights Watch ஆகிய உலக மனித உரிமை அமைப்புகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

 

பன்னிரண்டு வயதே நிரம்பிய பாலகன், பிரபாகரனின் இளைய மகன், பாலசந்திரன்,  சிங்கள இராணுவத்தால் சிறைப் பிடிக்கப்பட்டு, பிறகு ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்டக் காட்சிகள் உலகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. சிங்கள அரசு அதிகாரிகள் வழக்கம் போல் இக்காணொலிகள் சித்திரிக்கப்பட்டவை என்றும் உலக அரங்கில் இலங்கை அரசிற்கு அவப்பெயரை உருவாக்க விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் செய்யும் சதி என்றும் கூறி புறந்தள்ள முயற்சிக்கின்றனர். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குரிஷித் அவர்களோ பாராளுமன்றத்தில் “இந்த படங்களை பார்த்து நாம் ஒரு முடிவுக்கு வரமுடியாது” என்றும் ”என்ன இருந்தாலும் இலங்கை இந்தியாவின் நட்பு நாடு” என்றும் இலங்கைக்கு சாமரம் வீசுகிறார்!


இலங்கையில் நடந்தேறியது இனப் படுகொலையே என்பதை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்; சுயேச்சையான சர்வதேச விசாரணக்கு வழிவகுக்கும் தீர்மானத்தை இந்தியா மனித உரிமைக் கவுன்சிலில் முன்மொழிய வேண்டும்;  இலங்கையில் அதிகாரப் பரவலுக்கு ஆக்க வகையிலான முன்னெடுப்புகளுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்; மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டும்; ஆகிய கருத்துக்களை முன்வைத்து பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் காரசாரமாகவும் ஆவேசமாகவும் இந்திய பாராளுமன்றத்தில் விவாதித்தார்கள். ஆனால் மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் அரசோ ஒரு நாட்டின் உள் நாட்டுச் சிக்கல்களை அவர்களேதான் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நட்பு நாடான இலங்கை மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றிய எச்சரிக்கை தேவை என்றும் கூறி தொடர்ந்து சிங்கள இனவெறி அரசை காப்பாற்றி வருகிறது. நமது தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழரை இனப்படுகொலை செய்த இலங்கை அரசு ஈழத்தமிழர்களுக்கான  விடியலை உத்தரவாதப்படுத்துகின்ற வரை இலங்கை, தமிழ்/இந்திய மக்களின் எதிரியே என்று எழுப்பப்படுகின்ற குரல்கள் ஒரங்கட்டப்படுகின்றன.

 

முள்ளி வாய்க்கால் படுகொலைகள் அம்பலத்திற்கு வந்த பிறகும் இது உள்நாட்டு பிரச்சனைதான் என்று இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதன் உள் நோக்கம் என்ன? இந்தியா, இலங்கைப் பிரச்சனையில் தலையிடுமானால் நாங்கள் காஷ்மீர் பிர்ச்சனையைப் பற்றி பேசுவோம் என்று இலங்கை மிரட்டுவதாலா? இல்லை, இனப்படுகொலைப் போரில் இந்தியா உடந்தையாக இருந்ததால் இந்திய அரசின் கைகளில் படிந்துள்ள இரத்தக் கரைகள் அம்பலத்திற்கு வந்து விடுமோ என்ற அச்சத்தாலா?  இல்லை தேசிய இனங்களின் சிறைக்கூடமாக உள்ள இந்தியத் துணைக்கண்டத்தில், வடக்கிலும் கிழக்கிலும், மத்திய இந்தியாவிலும், போராடும் மக்களுக்கு எதிராக இந்திய அரசு தொடுத்துள்ள அடக்குமுறைகளுக்கு, உலக அரங்கில், பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுமோ என்ற தயக்கத்தாலா?


உலக மயமாக்க அரசியலையும்; அமெரிக்க, சீன வல்லாதிக்கங்களின் புவிசார் அரசியலில் இந்திய பெருங்கடல் - இந்திய-இலங்கை புவி அரசியல் - சிக்குண்டிருப்பதை அவதானிக்க வேண்டும். மேலும், இந்தியத் துணைக் கண்டத்தின் புவிசார் அரசியலை புரிந்து கொள்ளாமல் இதற்கு விடையில்லை என்ற வாதத்தை மறுப்பதற்கில்லை. இந்தப் பின்னணியில்தான் இலங்கையில் நடந்தேறிய இனப்படுகொலைப் போரையும் அதற்குப் பின் நடந்தேறிவரும் நகர்வுகளையும் அவதானிக்க இயலும்.

 

இரட்டை கோபுர தகர்விற்குப் பிறகு உலக அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களைக் கணக்கில் கொள்ளாமல் இந்த அலசலை மேற்கொள்ள  முடியாது. ”பயங்காரவாதத்திற்கு எதிரானப் போர்” (WAR ON TERRORISM) என்ற பெயரில், விடுதலைப் புலிகள் தலைமையில் நடந்த, ஈழத் தமிழ்த் தேச விடுதலைப் போரை ஒடுக்குவதில், அமெரிக்கா, சீன உட்பட உள்ள அனைத்து வல்லாதிக்க அரசுகளுக்கும், பங்கு இருந்தது. அதேபோல் இந்தியத் துணைக் கண்டத்தின் பேட்டை ரவுடியாக திகழும் இந்திய அரசுக்கும் விடுதலைப் புலிகளை ஒடுக்குவது இத்துணைக்கண்ட அரசியலுக்கு ஒரு முன்தேவையாக இருந்தது. ஆக, இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு அனைத்து வல்லாதிக்க சக்திகளும் கைகோர்த்து நின்றன.  சோசலிச நாடுகள் என்று கருதிக்கொண்டிருக்கும் நாடுகள் கூட மேற்கத்திய ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக இலங்கைக்கு ஆதரவு தருவது என்ற பெயரில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக எடுத்த முன்னெடுப்புகள் சோசலிச சர்வதேசியத்தை கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றன.


ஐ.நா அமர்த்திய தாருஸ்மான் தலைமையிலான மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவின் அறிக்கையும், டப்ளின் தீர்ப்பாயத்தின் அறிக்கையும், பின்னர் சானல் 4 மற்றும் பிற தொலைக்காட்சி ஊடகங்களின் ஆவணப்படங்களும் இனப்படுகொலைப் போரில் நடந்தேறிய இன அழிப்பு நடவடிக்கைகள், போர் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை மிகத் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளன. இப்போரில் ஐக்கிய நாடுகள் அவை தம் சர்வதேசக் கடமையை செய்யத் தவறியது என்பதை ஐ.நாவின் சார்ல்ஸ் பெட்ரீ தலைமையிலான அக மீளாய்வு அறிக்கை(INTERNAL REVIEW REPORT) குற்றம் சாட்டியுள்ளது.

விடுதலைப் புலிகளை அழிக்கும் போக்கில் சில துணை அழிவுகளை (COLLATERAL DAMAGES) தவிர்க்க முடியாது என்று கருதிய வல்லாதிக்க சக்திகள் இன அழிப்புப் போரின் இறுதி கட்டத்தில் நடந்தேறிய போர் குற்றங்கள் பற்றியும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் பிற மனித உரிமை மீறல்கள் பற்றியும் நிச்சயம் அறிந்திருப்பார்கள்.


அன்று இன அழிப்புப் போரில் உடன் இருந்த அமெரிக்கா இன்று மனித உரிமைக் கவுன்சிலில் ”இலங்கைக்கு எதிராக” கொண்டுவரும் தீர்மானத்தின் சூட்சுமம் என்ன?  இன அழிப்புப் போரைத் தொடர்ந்து, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, இலங்கையில் தொடரும் STRUCTURAL GENOCIDE என்று சொல்லக் கூடிய வகையில் ஒரு திட்டமிட்ட, அமைப்பு ரீதியான இன அழிப்பு நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.  மறு வாழ்வு மற்றும் மறு கட்டமைப்பு (REHABILITATION AND RECONSTRUCTION)  என்ற பெயரில் திட்டமிட்ட சிங்கள மயமாக்கலும், இராணுவ மயமாக்கலும்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  இதன் விளைவாக தமிழர் பகுதிகளில் புதிதாக குடியமர்த்தப்பட்டுள்ள சிங்களர்களுக்கும், இராணுவ குடும்பங்களுக்கும் செய்து தரப்பட்டுள்ள  “வளர்ச்சியை” தமிழ்ப் பகுதியின் (வடக்கு-கிழக்கின்) ஒட்டு மொத்த வளர்ச்சியாக சித்தரிக்கப்படுகின்றன.

 

மனித உரிமைக் கவுன்சிலில் போருக்குப் பிந்திய வளர்ச்சி திட்டங்களைப் பற்றி விளக்கிய சிங்கள அமைச்சர் மகிந்தா சமரசிங்கே இலங்கையின் ஒட்டு மொத்த வளர்ச்சி (GDP)  8 சதமாக இருக்கும் போது வடக்கு-கிழக்கு பகுதிகளின் ஒட்டு மொத்த வளர்ச்சி 27 சதமாக உயர்ந்துள்ளது என்று அறிவித்திருக்கிறார். இராணுவத்தின் வசதிக்காக போடப்பட்ட ரயில் பாதையையும் சாலைகளையும் மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களாக சித்திரிக்கின்றார். உள் நாட்டு அகதிகள் அனைவருக்கும் மறு வாழ்வு வெற்றிகரமாக அமல்படுத்தியுள்ளதாக புள்ளி விவரங்களை அள்ளி வீசுகிறார். Reconstruction, Resettlement, Rehabilitation, Reintegration and Reconciliation ஆகிய ஐந்து “R" களை இலங்கையின் தாரக மந்திரமாக பறைசாற்றுகின்றார்.

 

ஆனால் நல்லிணக்கம்(Reconciliation) யதார்த்த மெய்மையாக மாற வேண்டுமென்றால் அதிகாரப் பரவல் (Devolution) அடிப்படையாக அமைய வேண்டும். தமிழர் பகுதிகளில் சிங்கள காலனியாக்கமும் இராணுவ மயமாக்கமும் தொடரும்வரை அதிகாரப் பரவல் சாத்தியமில்லை. ஆகவே தமிழ் மக்களின் இன்றைய தேவை ஐந்து "R" கள் அல்ல மாறாக மூன்று “D" கள். அதாவது Decolonisation, Demilitarisation and Devolution.


இந்த பின்னணியில்தான் அமெரிக்கா முன்மொழியும் தீர்மானம் மனித உரிமைக் கவுன்சிலில் விவாதிக்க இருக்கிறது. அமெரிக்க தீர்மானத்தின் நகல் வெளி உலகிற்கு கிடைக்காத இன்றைய (2.3.2013) நிலையில் ஊடகங்களில் கசிந்து வந்துள்ள சில தகவல்களின் அடிப்படையில் அமெரிக்கா கொண்டு வரவிருக்கும் தீர்மானத்தின் சாரம்சம் என்னவாக இருக்கும் என ஊகிக்க முடிகிறது. ”கடமையுணர்வுடனும் பொறுப்புணர்வுடனும் LLRC (படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணையம்)யின் பரிந்துரைகளை இ்லங்கை அரசு, கூடிய விரைவில் அமல்படுத்த வேண்டும்” என்பதுதான் அமெரிக்க தீர்மானத்தின் அடிப்படையாக இருக்கும் என்று தோன்றுகிறது.

 

இதன் நோக்கம் என்ன?

1. மனித உரிமை இயக்கங்கள் கோரி வரும் இனப்படுகொலைப் பற்றிய சர்வதேச விசாரணை என்பதை காலவரையின்றி கிடப்பில் போடுவது.

2. ஐ. நா அவையின் நிபுணர் குழுவும், அக மீளாய்வு அறிக்கையும் மோசடி (FLAWED) என்று அடியோடு மறுத்த LLRC க்கு நிரந்தர தகுதியைக் கொடுத்து, இலங்கையில் சர்வதேச தலையீட்டை தடுப்பது.

3. மறுவாழ்வு நல்லிணக்கம் ஆகியவைகளுக்கு அழுத்தம் கொடுத்து அதிகாரப் பரவலாக்கலுக்கு ஆதாரமான “பொது வாக்கெடுப்பு” என்னும் கோரிக்கையை முற்றாக மறுப்பது.

4. சீனச் செல்வாக்கிலிருந்து இலங்கையை மீட்டு அமெரிக்க செல்வாக்கில் தக்க வைத்துக் கொள்வது.

5. நீண்ட கால நோக்கில் இலங்கையில் மற்றொரு விடுதலை இயக்கம் வேர் பிடிக்காமல் இருக்க தேவையானச் சூழலை உருவாக்குவது.

6. உலக நாடுகளின் எசமான் என்ற இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் பாதுகாத்து கொள்வது.

7. தங்கள் கடமையை செய்யத் தவறிய ஐ.நா அலுவலர்களை காப்பாற்றுவது அல்லது இலங்கையிலும் வெளியிலும் செயல்பட்ட இரண்டாம் நிலை அதிகாரிகளை மட்டும் தண்டிப்பது.

 

இவையத்தனையும் ஈழத் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்கும் தன்னாட்சிக்கும், விடுதலைக்கும் எதிரானதாகும்.


அமெரிக்காவின் இந்த முன்னெடுப்புகள் இன அழிப்பை தொடர்ந்து நடத்தி வரும் சிங்கள அரசை காப்பாற்றுவதற்கான முயற்சியே அன்றி வேறல்ல.

 

ஆகவே, அமெரிக்காவின் இந்த சூழ்ச்சியை மனித உரிமை ஆர்வலர்களும் ஜனநாயக இயக்கங்களும் விடுதலை விரும்பிகளும் முறியடிக்க முடியுமா? ஐ.நா அவையில் மனித உரிமைக் கவுன்சிலில் உள்ள பிற உறுப்பு நாடுகளின் அழுத்தத்திற்கு அமெரிக்கா உடன்படுமா? மனித உரிமை இயக்கங்களின் கருத்துத் திரட்டல் வெற்றி பெறுமா? 

 

இவற்றிற்கு தேவையான பரப்புரையை தமிழகத்திலும் இந்தியத் துணைகண்டத்தின் பிற மக்களிடமும் எடுத்துச் செல்ல முடியுமா? போராடும் பிற நாட்டு மக்களிடம் இதனை ஒரு காத்திரமான விவாதப் பொருளாக மாற்ற முடியுமா? நீதிக்கான தமிழக மக்களின் உரத்த குரலுக்கு மத்திய அரசு செவி சாய்க்குமா?


இவைகளுக்கான விடை நமது கூட்டுச் சிந்தனையிலிருந்தும் கூட்டுச் செயற்பாட்டிலிருந்தும் நிச்சயம் பிறக்கும்.

 

- பொன்.சந்திரன், கோவை.

 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=23151

இதையே தமிழக பல கட்சிகள் கோருகின்றன.மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னைனியும் இதயே வேண்டி நிற்கின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.