Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க, இந்தியப் பெருங்கவனம் இலங்கை நோக்கி எப்போது திரும்பும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க, இந்தியப் பெருங்கவனம் இலங்கை நோக்கி எப்போது திரும்பும்?

தத்தர்
 

சர்வதேச அரசியலில் தன் சொந்தக் கால்களில் நிற்கும் அரசென்று எதுவுமில்லை. இன்றைய ஒற்றை மைய உலக அரசியலில் அமெரிக்கா அதிக வல்லமை வாய்ந்த அரசாக இருக்கின்றபோதிலும், அது தனக்காக கூட்டாளிகளைக் கொண்டிருப்பதிலும் மற்றும் சர்வதேச அரசியல் நிலவரங்களைக் கையாள்வதிலுமே தனது முதன்மையைப் பேணுகின்றது. அமெரிக்காவுக்கு உடனடிச் சவால் மத்திய கிழக்கு எனப்படும் மேற்கு ஆசியப் பகுதியாகும். அதனது இரண்டாவது சவால் சீனாவாகும். மூன்றாவது நிலையிலேயே ரஷ்யா காணப்படுகின்றது. ரஷ்யாவின் ராணுவ பலம் அமெரிக்காவுக்கு சவால் விடக்கூடியதாக இருந்தாலும் அது அரசியல் பொருளாதார நிலையில் சர்வதேச ரீதியில் பலயீனமானதாக உள்ளது. அமெரிக்கா தன்னுடைய எதிரிகளைக் கையாள அல்லது சவால்களை வெற்றிகொள்ள அவ்வப் பிராந்தியங்களில் தனக்கான கூட்டாளி அரசுகளைக் கொண்டுள்ளது. இதனைப் பின்பு விபரமாக நோக்குவோம்.

 

காலத்திற்கு காலம் சர்வதேச அரசியல்மையம் இடம் விட்டு இடம் மாறும். நீண்ட காலமாக சர்வதேச அரசியல் மையம் முஸ்லிம்களை மையமாக கொண்ட மேற்காசிய பிராந்தியத்திலேயே அங்கிங்காய் நகர்கின்றது. பனிப்போரின் பின் அது மேற்காசியாவில் ஈராக்கில் மையம் கொண்டது. அடுத்து மேற்காசியாவில் விளிம்பில் உள்ள முஸ்லிம் நாடான ஆப்கானிஸ்தானில் மையம் கொண்டது. பின்பு அது லிபியாவில் மையம் கொண்டது. இன்று அது சிரியாவில் மையம் கொண்டுள்ளது. அடுத்து மேற்காசியாவில் உள்ள தலையாய பகுதி ஈரான் ஆகும். இந்த அனைத்துப் புள்ளிகளையும் முஸ்லிம்களை அடிப்படையாகக் கொண்ட ஏறக்குறைய மேற்காசிய பிரதேசமென ஒரு பெரும்புள்ளியில் அடக்கலாம். தற்போது சர்வதேச அரசியல் சிரியாவில் மையம் கொண்டுள்ளது.

 

மொத்தமாக வரப்போகும் சில தசாப்தங்களை உள்ளடக்கிய சர்வதேச அரசியல் மையங்களாக மேற்காசியா, தென்னாசியாவில் இலங்கை, கிழக்காசியாவில் வடகொரியா என்பனவுள்ளன. பசுபிக்கிலும், கிழக்கு ஆசியாவிலும் அமெரிக்கா தனது கூட்டாளி நாடுகளாக யப்பான், தென்கொரியா, தாய்வான் என்பனவற்றைக் கொண்டுள்ளது. இம் மூன்று அரசுகளாலும் சீனாவையும், வடகொரியாவையும் கட்டுப்படுத்துவதே அமெரிக்காவின் நோக்கமாகும். பசுபிக் சமுத்திரத்தில் தனது பலம்வாய்ந்த எதிரிகளான அமெரிக்காவையும் யப்பானையும் எதிர்கொள்வது கடினமான நிலையில் சீனாவின் கவனம் வளமான, ஒப்பீட்டு ரீதியான வாய்ப்பான இந்து சமுத்திரத்தை நோக்கியுள்ளது. இந்து சமுத்திரத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா எனும் இரண்டு நாடுகளை சீனா எதிர்கொள்ளவேண்டும். இது பசுபிக்கை விட சற்று வாய்ப்பாக இருக்கின்ற அதேவேளை தவிர்க்க முடியாத அடிப்படை வளங்களை இப்பிராந்தியம் கொண்டுள்ளது. ஒன்று மேற்காசிய பெற்றோலியம், ஆபிரிக்க பெற்றோலியம் மற்றும் மூலவளங்களும் ஆகும். மேலும் வளமான சந்தை, பரந்த இந்து சமுத்திர நாடுகளில் விரிந்து கிடக்கின்றது. ஆதலால் சீனாவின் ஜீவ மரண போராட்டத்துக்குரிய தவிர்க்க முடியாத கவனத்துக்குரிய பிராந்தியமாய் இந்து சமுத்திரம் விளங்குகின்றது.

 

முதலாம், இரண்டாம் உலகமகா யுத்தங்களும், அதற்கு முன்னான யுத்தங்களும் உலகின் புவிப்பரப்புக்களை பங்குபோடும் யுத்தங்களாக அமைந்தன. ஆனால் மூன்றாம் உலக மகாயுத்தமோ 'சமுத்திரங்களையோ, நீர் நிலைகளையோ பங்குபோடும் யுத்தமாய்' அமையும் என்று ஓர் கூற்றுண்டு. இந்நிலையில் இந்து சமுத்திரத்தை பங்குபோடுவதற்கான யுத்தத்தில் சீனா, ஈரான், பாகிஸ்தான் ஒருபக்கமாமகவும், அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா என்பன இன்னொரு பக்கமாகவும் அமையும். இதில் அமெரிக்காவுடன் அனைத்து நேட்டோ (NATO) நாடுகளும், கூடவே யப்பானும் அணி திரளும். இதில் ரஷ்யா தென்னாசியாவில் இந்தியாவை பகைக்க முடியாத நிலைப்பாட்டை கொள்ள வேண்டிய அவசியம் இருக்கும் அதேவேளை ஏனைய இடங்களில் அது இந்து சமுத்திரத்தில் அமெரிக்க ஆதிக்கத்தை ஆதரிக்கமாட்டாது. குறிப்பிடக் கூடியளவுக்கு அது எதிர்நிலையை எடுக்கவே விரும்பும். ஆனால் இந்து சமுத்திரத்தில் உள்ள தென்னாசிய பிராந்தியத்தில் பெரிய அரசாயும், சந்தை வளம்மிக்க அரசாயும் காணப்படுகின்ற இந்தியாவுடனான தனது ஆயுத, தொழில்நுட்ப மற்றும் மூலப்பொருள் வர்த்தகத்தின் பொருட்டு ரஷ்யாவுக்கு ஒரு தங்குநிலையுண்டு. ஆதலால் இதில் ரஷ்யாவின் நிலைப்பாடு இந்தியாவை முற்றிலும் பகைப்பதாக அமையாது.

 

பனிப்போர் முடிந்ததும் ரஷ்ய பேரரசை அமெரிக்கா அதன் பிராந்தியத்துக்குள் முடக்குவற்கேற்ற நடவடிக்கைகளில் அக்கறை செலுத்தியது. ரஷ்யாவுக்குள் காணப்பட்ட தேசிய இனப்பிரச்சனை நியாயபூர்வமான முறையில் தீர்த்து வைக்கப்பட்டிருக்காத பின்னணியில் ரஷ்யாவில் இருந்த 14 குடியரசுகள் பிரிந்து செல்ல வாய்ப்பு ஏற்பட்டது. இந்த வாய்ப்பை அமெரிக்காவும் சரிவரப் பயன்படுத்தி ரஷ்ய சம்ராஜ்யம் பதினைந்து துண்டுகளாக உடைய வழிவகுத்தது. அதேவேளை ரஷ்யாவுக்கு அரணாக இருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளான யூகோஸ்லாவியா, செக்கோஸ்லாவாக்கியா என்பன உடைந்து அங்கு புதிய ஏழு அரசுகள் தோன்றின. அதாவது பனிப்போர் முடிந்ததை உடனடுத்து சர்வதேச அரசியல் மையம் கிழக்கு ஐரோப்பாவுக்கு நகர்ந்தது. ஒப்பீட்டு ரீதியில் குறுங்காலத்தில் அமெரிக்காவின் விருப்பத்துக்கு உகந்த வகையில் கிழக்கு ஐரோப்பிய விவகாரம் நிதநிலையடைந்தது. இதனைத் தொடர்ந்து சர்வதேச அரசியல் மையம் நேரடியாக மேற்காசியாவுக்கு நகர்ந்தது. பனிப்போரின் பின்னான காலத்தில் மேற்காசியாவில் ஈராக்கை மையமாகக் கொண்டு நகர்ந்த அரசியல் மையமானது ராணுவ நடவடிக்கையின் மூலம் சதாம் ஹீசைன் ஆட்சியை வீழ்த்தியதுடன், அமெரிக்காவுக்கு சாதகமான முறையில் அது முடிவடைந்தது.

 

ஆனால், அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீதான பின்லேடனின் தாக்குதலோடு சர்வதேச அரசியலானது பனிப்போரின் பின் பின்னான இன்னொரு யுகத்துக்குள் நுழைந்தது. இதனால் அரசியல் மையம் மேற்காசியாவின் விளிம்பு நாடான ஆப்கானிஸ்தானில் மையம் கொண்டது. அதனை அமெரிக்கா தனது கூட்டாளி நாடுகளுடன் எதிர்கொண்டு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடிந்தது. பின்லேடன் கொல்லப்பட முன்பே பின்லேடனின் அரசியல் பாதை முடிவடைந்து விட்டது. ஆனால் அவர் கொல்லப்பட வேண்டியதற்கு ஒரு குறியீட்டு முக்கியத்துவம் மட்டுமே அமெரிக்காவிடம் இருந்தது. பின்லேடனைக் கொன்றதோடு அந்தக் குறியீட்டு முக்கியத்துவமும் நிறைவடைந்தது. சுமாராக 2005 ஆம் ஆண்டு வாக்கோடு, பின்லேடன் சகாப்தம் அவர் உயிருடன் இருக்கும் காலத்திலேயே முடிவடைந்துவிட்டது. ஆயினும் ஒரு குறியீட்டு நீட்சி அவர் கொல்லப்படும் காலம் வரை இருக்கவே செய்தது. முஸ்லிம் உலகில் பின்லேடன் யுகம் முடிவடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்காவின் கவனம் மேற்காசியாவில் லிபியா, சிரியா நோக்கியே இருந்தது. ஈரான் சற்று நீண்டகால காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தது.

 

இவ்வகையில் இந்து சமுத்திரத்தில் மேற்காசியா ஓரளவு கட்டுப்பாட்டின் கீழ் வந்த அதேவேளை, மேலும் கட்டுப்படக் கூடியவகையில் வாய்ப்பைக் கொண்டிருந்தது. தொடர்ந்தும் அமெரிக்காவின் கவனம் அதிகம் மேற்காசியாவிலேயே அதிகம் படர்ந்திருந்த அதேவேளை, மேற்காசியா தவிர்ந்த இந்து சமுத்திர பிராந்தியத்தின் தென்னாசியா, கிழக்காபிரிக்கா நோக்கி சீனா தன் கவனத்தை அதிகம் செலுத்தத் தொடங்கியது. 1980 ஆண்டு வாக்கில் இருபது வருட உத்தேச திட்டத்துடன் சீனா நால்வகை நவீனமயமாக்கலை மேற்கொண்டது. சுமாராக கால்நூற்றாண்டில் அதன் இலக்கை பெரிதும் எட்டியது. சீனாவின் நால்வகை நவீனமயமாக்கல் அதன் உற்பத்தி சக்திகளை அதிகரிக்கவும், சீனாவை முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் நோக்கிய சந்தை முறைக்கு இட்டுச் செல்லவும் வழிவகுத்தது. உலகளாவிய வர்த்தகமே ஏகாதிபத்தியத்தின் ஊற்று என்பதால் உலகளாவிய வர்த்தகத்தில் சீனா ஈடுபட்டதன் மூலம் தன்னை ஒரு தெளிவான ஏகாதிபத்திய நாடாக்கிக் கொண்டது. ஏகாதிபத்தியம் என்பது உற்பத்தி, வர்த்தகம் எனும் இரண்டிலும் ஏகபோகத்தை கொண்டிருப்பது ஆகும். முதலாளித்துவம் ஏகபோகமாக மாறும் இடமே ஏகாதிபத்தியம் நுழையும் இடமாகும். இவ்வகையில் சீனாவின் நால்வகை நவீனமயமாக்கமும், அதன் விளைவுகளும் சீனப் பெருஞ்சுவரை தகர்த்து சீனாவை உலக ஏகபோக சம்ராஜ்யத்துக்குள் பிரவேசிக்கச் செய்தது.

 

மிகவிரைவான வளர்ச்சியை உற்பத்தி சக்திகளில் பெற்றுக் கொண்ட சீனா, அதை தனது நாட்டின் எல்லைகளைக் கடந்து தனது உற்பத்திப் பொருட்களுக்கான சந்தையையும், அவற்றுக்கான மூலவளங்களையும் தேடவேண்டியிருந்தது. இந்த வகையில் அதனுடைய ஏகாதிபத்தியத்துக்கு இந்து சமுத்திரம் வாய்ப்பான களமாக நீண்டகாலப் பார்வையில் உள்ளது. வேலை வாய்ப்பு உற்பத்தியில் தங்கியுள்ளது. உற்பத்தி, மறு உற்பத்தியில் தங்கியுள்ளது. மறு உற்பத்தி வர்த்தகத்தில் தங்கியுள்ளது. வர்த்தகம் என்பது உலக வர்த்தகத்தில் தங்கியுள்ளது. இதன்படி சுரண்டலின் மூலம் வர்த்தகத்தை ஊடகமாகக் கொண்டே இவை அனைத்தும் சுழல்கின்றன என்பதால் வர்த்தகமே சுரண்டலினதும் அதன்வழி ஏகாதிபத்தியத்தினதும் தாயாகின்றது. வர்த்தகம் கடல் வழியிலும், மூலவளம் கடலிலும் கடல் சார்ந்த நாடுகளிலும் காணப்படுகின்றது. ஆதலால் அனைத்து வகை ஆதிக்கத்தினதும் தாய் ஊடகமாக கடல் ஆதிக்கம் அமைய வேண்டியுள்ளது. இவ்வகையில் இன்றைய யுகம் கடலாதிக்கப் போட்டிக்கான யுகமாய் பரிணமித்துள்ளது. இதில் இந்து சமுத்திரமே தற்போது தலையாய இடத்தை வகிக்கின்றது.

 

இந்து சமுத்திரத்தில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போட்டியும் அதில் இந்தியாவின் பாத்திரமுமே பிரதான இடத்தை வகிக்கும். அமெரிக்காவின் கவனம் மேற்காசியாவில் இருந்த நிலையில், சீனாவானது தென்னாசியா, கிழக்காபிரிக்கா நோக்கி விரைவான அடியெடுப்புக்களை மேற்கொண்டு விட்டது. ஒரு புறம் அமெரிக்கா இரத்தம் சிந்தி திறக்கும் உலக சந்தைகளை உலகமயயமாக்கல் சட்டங்களின் கீழ் சீனா இழப்பின்றி தனக்கான சந்தைகளாகவும் மாற்றிக் கொண்டது. அமெரிக்கா மேற்காசியாவில் தன் கவனத்தை செலுத்திக்கொண்டிருந்த அதேவேளை, சீனா தனக்கான வேர்களை ஒப்பீட்டு ரீதியில் வாய்ப்பாகக் காணப்பட்ட தென்னாசியாவில் வேரூன்ற முற்பட்டது. இந்த வேரூன்றலை அமெரிக்காவால் அரசியல் ராணுவ ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் சகிக்க முடியாததாய் உள்ளது.

 

2005 ஆம் ஆண்டு இலங்கையின் ஜனாதிபதி தேர்தலின்போது சீன சார்பு கொண்ட ராஜபக்ச பதவிக்கு வருவதை அமெரிக்கா விரும்பியிருக்கவில்லை. ஆனால் விடுதலைப் புலிகளின் தேர்தல் புறக்கணிப்பு ராஜபக்சவை பதவிக்கு கொண்டுவந்து விடுமென அமெரிக்கா அஞ்சியது. புலிகள் தேர்தலை புறக்கணிக்க கூடாதென அமெரிக்கா விரும்பியபோதிலும் புலிகள் ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்தார்கள். அந்த புறக்கணிப்பே ராஜபக்ச பதவிக்கு வர உதவியதாக அமெரிக்கா சினங்கொண்ட நிலையில் புலிகளின் வீழ்ச்சியை அமெரிக்கா விரும்பியது. ஆரம்பத்தில் புலிகளை எல்லைக்குட்படுத்தும் விருப்பங்களைக் கொண்டிருந்த அமெரிக்கா, பின்பு ராஜபக்ச தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து புலிகள் வீழ்த்தப்படுவதை விரும்பியது.

 

அதாவது ஒரு துளி இரத்தமும் சிந்தாமல் ராஜபக்ச அரசாங்கத்துடனான நட்புறவின் மூலம் சீனா இலங்கையில் உறவைப் பெற்றுக் கொள்வதைக் கண்ட அமெரிக்கா, அதற்காக அது புலிகளின் மீதே அதிக ஆத்திரமடைந்தது. இதன் மூலம் "புலிகளை ராஜபக்ச பார்த்துக் கொள்ளட்டும், ராஜபக்சவை தான் பார்த்துக் கொள்ளலாம்" என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்தது. இந்த வகையில் முள்ளிவாய்க்கால் யுத்தத்தை இந்து சமுத்திரத்துக்கான யுத்தத்திலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. மேற்காசியாவில் சர்வதேச அரசியல் மையம் கொண்டிருந்த அதேவேளை ஒரு கிளை மையமாக 2005 இலிருந்து இற்றை வரையான இலங்கை அரசியல் அமைகின்றது.

 

1983 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆண்டு வரையான சுமாரான கால் நூற்றாண்டு காலமும் தென்னாசியாவை மையமாக கொண்ட இந்து சமுத்திரத்தின் ஒரு புள்ளியாய் புலிகள் இருந்தனர். ஆனால் முள்ளிவாய்க்காலில் புலிகளுக்கு ஏற்பட்ட வீழ்ச்சியோடு அந்தப் புள்ளி ராஜபக்ச குடும்பத்துக்கு கைமாறிவிட்டது. அதனால் இப்போது அமெரிக்காவின் கவனம் ராஜபக்ச குடும்ப அரசியல்தான். ராஜபக்ச குடும்ப அரசியலை வீழ்த்தி ஐ.தே.கட்சி தலைமையிலான ஆட்சியை கொண்டு வர அமெரிக்கா விரும்பினாலும் அது சாத்தியப்படப் போவதில்லை. எது எப்படியாக இருப்பினும் சிங்கள அரசியலானது ராஜபக்சாவின் பேரினவாதமாகும். அவர் தமிழின ஒழிப்பாலும், பேரினவாதத்தாலும் தன்னை அரணமைத்துக் கொண்டார். சிங்கள மக்கள் அபிமானத்துக்குரிய காப்பிய மன்னனான துட்டகைமுனு மன்னனை ராஜபக்சவில் காண்கின்றனர். வெல்லற்கரிய புலிகளை வீழ்த்திய மாபெரும் தலைவனாக ராஜபக்சவை சிங்கள மக்கள் கருதுகின்றனர். அந்தத் தளம் வரப்போகும் சில தசாப்தங்களுக்கு நீடிக்கும் என்பதால் ராஜபக்சாக்களை சில தசாப்தங்கள் வரை தோற்கடிக்க முடியாது.

 

கட்சி ரீதியாக ஐ.தே.க இலங்கை அரசியல் பலமான தளத்தைக் கொண்டுள்ளது. ஆயினும் இந்தத் தளத்தை அடிப்படையாக கொண்டு இலங்கை அரசியலில் வெற்றி பெற நினைத்தால் அது தவறு. மத வழியிலும், கல்வி வழியிலும், போதனை வழியிலும், அரசியல் வழியிலும் இந்திய எதிர்ப்பு வாதம், தமிழின எதிர்ப்பு வாதத்தில் ஊறிப் போன சிங்கள மக்களுக்கு ராஜபக்ச புலிகளை வீழ்த்தியதன் மூலம் நிதர்சனமான காப்பிய தலைவனாக தோன்றுகின்றார். இந்தக் காப்பிய போதை கொண்ட ஆசிய கலாச்சாரத்தில் காப்பிய தலைவர்களுக்கு எப்போதும் இடமுண்டு. ஆதலால் சிங்கள இனவாத கலாச்சாரத்துக்குள்ளாலும், ஆசிய கலாச்சாரத்துக்குள்ளாலும் ராஜபக்சாவையும், சிங்க மக்களையும் மதிப்பீடு செய்ய வேண்டும். அவ்வாறல்லாமல் ஐ.தே.கவை அரியணையில் அமர்த்திவிடலாம் என மேற்குலமோ அல்லது வேறெந்த நாடோ நினைத்தால் அது பகல் கனவு. இந்நிலையில் ஈழத் தமிழர் மட்டும் தான் ராஜபக்சவுக்கு எதிரான திரட்சி வாய்ந்த சக்தி. இலங்கையில் ஈழத்தமிழர்கள் இல்லையேல் அல்லது அவர்கள் பலயீனப்படுத்தப்பட்டு விட்டாலோ இலங்கைத் தீவில் ஒளிக் கீற்றுக்களைக் காணவே முடியாது. ஈழத்தமிழர்கள் இல்லாத இலங்கையில் இந்தியாவுக்கு எதுவும் இருக்காது.

 

அமெரிக்காவுக்கு ராஜபக்ச அரசாங்கம்தான் பிரச்சினையே தவிர சிங்கள அரசல்ல. ஆனால் நடைமுறை என்னவெனில் வரப்போகும் சில தசாப்தங்களில் ராஜபக்ச அரசாங்கமே சிங்கள அரசை நிர்ணயிக்கும் என்பதனால் ராஜபக்ச அரசாங்கத்தையும், சிங்கள அரசையும் பிரித்துப் பார்க்க முடியாது. இந்த பிரித்துப்பார்க்க முடியாத நிலையில் சர்வதேச சமூகம் அனுபவ வாயிலாக இப்போது ஓரளவு உணரத்தொடங்கியுள்ளது. ஆயினும் அது முதிர்ச்சி பெற, வலிமைபெற இன்னும் காலம் தேவைப்படுகின்றது. இந்நிலையில் சீனாவை ராஜபக்ச அரசாங்கம் வாரியணைத்துள்ள நிலையில் அது சிங்கள அரசின் வாரியணைப்பாகவும் பரிணாம வளர்ச்சி பெற்று விடும். அப்போது சீனாவையும், சீனாவை அணைத்து வைத்திருக்கும் சிங்கள அரசையும் எதிர்கொள்ள ஈழத்தமிழர் விவகாரத்தை தவிர அமெரிக்காவுக்கோ, இந்தியாவுக்கோ வேறெதுவும் இருக்க முடியாது.

 

தற்போது சிரியாவில் அஸாத் அரசாங்கத்தை வீழ்த்தக்கூடிய வாய்ப்பு மேலோங்கியுள்ள நிலையில் முதலில் அதனை பூர்த்தியாக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு உண்டு. சிரியாவில் ஆளும் அஸாத் அராங்கத்துக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு அறுபது பில்லியன் டொலர் உதவியை அமெரிக்க அரசு செய்யப் போவதாக 2013 பெப்ரவரியின் இறுதி வாரத்தில் வெளிப்படையாகவும், உத்தியோகபூர்வமாகவும் அறிவித்துள்ளது. அதேவேளை துருக்கிக்கு ஏவுகணைகளை வழங்கி சிரியாவுக்கு எதிராக துருக்கியை அமெரிக்கா பலப்படுத்தி தயார் நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இரத்தம் தோய்ந்த அஸாத் அரசாங்கம் வீழ்வது உறுதி. அதன் ஆயுள் தொங்கிக் கொண்டிருக்கிறதே தவிர வீழ்ச்சி தவிர்க்க முடியாது. இந்நிலையில் அமெரிக்காவின் கவனம் தற்போது முதன்மையாக சிரியா பக்கம் திரும்பியுள்ளது. சிரியாவுக்கு எதிரான யுத்தத்தை நேரடியாக தொடுப்பது வெகு தொலைவில் இல்லை. எப்படியோ, அமெரிக்க கூட்டு நடவடிக்கையின் மூலமும், நேட்டோ படைகளின் நடவடிக்கையின் மூலமும் அமெரிக்கா சிரியாவை வெற்றி பெற்று விடும். அதுவரை அமெரிக்காவின் கவனமும், சர்வதேச அரசியலும் சிரியா நோக்கி நகர்ந்துள்ளது. சிரியாவின் வீழ்ச்சி ஈரானுக்கான ஒரு தடுப்புச் சுவரை உடைத்து விடும். சிரியாவின் வீழ்ச்சியின் பின்பு அமெரிக்காவுக்கு மேற்காசியாவில் உள்ள சவால் ஈரான் தான். ஆனால் ஈரான் இலகுவில் எதிர்கொள்ளக்கூடிய நாடல்ல.

 

ஈரான் சுமாராக நூறு வீத அமெரிக்க எதிர்ப்பைக் கொண்ட நாடு. வடகொரியாவும் அவ்வாறாகவே அமெரிக்கா மீது நூறு வீத எதிர்ப்பைக் கொண்ட நாடு. சிங்களமும் அவ்வாறே நூறுவீத அமெரிக்க, இந்திய எதிர்ப்பைக் கொண்ட நாடு. சிரியாவின் வீழ்ச்சியின் பின்பு ஈரானை அமெரிக்கா சுற்றி வளைக்கும் முயற்சியில்தான் அதிகம் கவனம் செலுத்தும். இலங்கை விவகாரத்தில் ஒரு வெற்றியைக் கண்ட பின்பே ஈரானில் அமெரிக்கா தன் கவனத்தை அதிகம் செலுத்துவதற்கான வாய்ப்புண்டு. வடகொரியா மிகவும் நீண்ட தூர சர்வதேச மையத்துக்குரியது. அதனை மட்டுப்படுத்த தென்கொரியாவும், யப்பானும் அமெரிக்காவின் கையில் உள்ளன.

 

இத்தகைய சர்வதேச பின்னணியில் சிரியாவை நோக்கி சர்வதேச அரசியல் மையம் நகர்ந்துள்ள நிலையில், அமெரிக்காவுக்கு இலங்கை விவகாரம் இரண்டாவது இடத்திலேயே உள்ளது. சிரியாவின் வீழ்ச்சியின் பின்பு அமெரிக்காவின் கவனம் இலங்கை நோக்கி திரும்பும் என்பதில் ஐயமில்லை. எனவே தற்போது அமெரிக்கா இலங்கை விவகாரத்தில் கடும் போக்கைக் கொள்ள வாய்ப்பிருக்காது. இது இரண்டாம் கட்ட நிகழ்ச்சி நிரலுக்குரிய இடத்தில், அரைக் கொதிநிலையில் பேணவேண்டிய அமெரிக்காவின் நோக்குநிலையாய் இருக்க முடியும். ஆயினும் இவ்வாண்டின் இறுதிக்குள் விழக்கூடிய சிரியாவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இலங்கை விவகாரம் சர்வதேச அரசியல் மையமாக மாறும்.

 

2014 ஆம் ஆண்டு இந்தியாவில் பொதுத் தேர்தல் நடக்கவிருக்கும் பின்னணியிலும் இந்தியாவின் கவனம் இலங்கை நோக்கி திரும்புவது தவிர்க்கப்பட முடியாது. ஈழத்தமிழர் பிரச்சினையும், இலங்கை விவகாரமும் இந்திய தேர்தலில் ஒரு தேசிய விவகாரமாகவும், இந்தியாவின் பாதுகாப்பு சார்ந்த விவகாரமாகவும், இந்தியாவின் வெளிவிவகாரம் சார்ந்ததாகவும் முப்பரிமாணங்களைப் பெறும். சிரியாவின் வீழ்ச்சி எவ்வளவு வேகமாகின்றதோ, ஈழத்தமிழர் பிரச்சினை அமெரிக்க-இந்திய - சீன முக்கோண யுகத்துக்குள் நடுநாயகமாய் அமையும். எப்படியோ இவ்வாண்டு ஈழத்தமிழர் விவகாரம் சர்வதேச விவகாரமாய் மாறும் என்பது சந்தேகத்துக்கிடமில்லை. அதுவரை அது இரண்டாம் பட்சத்தை தாண்டவும் முடியாது. அத்தகைய ஒரு இடைமாறு காலத்துக்குரிய காத்திருப்பு பட்டியல் நிலையே இலங்கைக்குரிய அந்தஸ்த்தாகும். அதேவேளை அது முதலாம் கட்டத்துக்கு வர வெகுகாலம் எடுக்காது.

 

சிரியாவின் வீழ்ச்சியின் பின்பே அமெரிக்காவின் முழு முதல் கவனம் இலங்கை மீது திரும்பும். அதேபோல இந்தியாவின் பொதுத் தேர்தலை அண்டியே இந்தியாவின் கவனமும் இலங்கையை நோக்கித் திரும்பும். இந்த இரண்டும் சந்திக்கும் ஒரு புள்ளியில் ஈழத் தமிழருக்கு வாய்ப்பான ஒரு சர்வதேச மையம் தோன்றும். இதனை ஈழத் தமிழ் மக்கள் சரிவர அறுவடை செய்யக் கூடிய நிலையை அடைந்தால் ஈழத் தமிழர்களுக்கான விடிவை ஏற்படுத்துவது சாத்தியம். வல்லரசுகளுக்கிடையேயான போட்டியை சாதகமாக கையாளும் ஒரு புள்ளியில் தான் ஈழத் தமிழர்களுக்கான விமோசனம் மையம் கொண்டுள்ளது. எனவே முரண்பாடுகளைக் கையாளுதல் என்கின்ற வித்தையில் கவனம் செலுத்தி சூழ்நிலைகளை எமக்கு சாதகமாக்க எம்மை நாம் விரைவில் தயாராக்க வேண்டும்.

 
 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=7fb07a88-3f04-4c5f-a740-43bb685fcabc

2005 ஆம் ஆண்டு இலங்கையின் ஜனாதிபதி தேர்தலின்போது சீன சார்பு கொண்ட ராஜபக்ச பதவிக்கு வருவதை அமெரிக்கா விரும்பியிருக்கவில்லை. ஆனால் விடுதலைப் புலிகளின் தேர்தல் புறக்கணிப்பு ராஜபக்சவை பதவிக்கு கொண்டுவந்து விடுமென அமெரிக்கா அஞ்சியது. புலிகள் தேர்தலை புறக்கணிக்க கூடாதென அமெரிக்கா விரும்பியபோதிலும் புலிகள் ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்தார்கள். அந்த புறக்கணிப்பே ராஜபக்ச பதவிக்கு வர உதவியதாக அமெரிக்கா சினங்கொண்ட நிலையில் புலிகளின் வீழ்ச்சியை அமெரிக்கா விரும்பியது. ஆரம்பத்தில் புலிகளை எல்லைக்குட்படுத்தும் விருப்பங்களைக் கொண்டிருந்த அமெரிக்கா, பின்பு ராஜபக்ச தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து புலிகள் வீழ்த்தப்படுவதை விரும்பியது.

 

அமெரிக்க இராஜதந்திரம் அப்படியானதா?

 

புலிகளை அதற்காகத்தான் அழித்தால் இராஜபக்சாவை முழுமையாக தொடர்ச்சியாக வெல்லவும் சீனாவுடம் மேலும் உறவுகளை வளர்க்கவும் அது உதவும் என இந்த வல்லரசின் அறிவிற்கு தெரிந்திருக்கவில்லை  :rolleyes:

 

 

சிரியாவின் வீழ்ச்சியின் பின்பே அமெரிக்காவின் முழு முதல் கவனம் இலங்கை மீது திரும்பும். அதேபோல இந்தியாவின் பொதுத் தேர்தலை அண்டியே இந்தியாவின் கவனமும் இலங்கையை நோக்கித் திரும்பும். இந்த இரண்டும் சந்திக்கும் ஒரு புள்ளியில் ஈழத் தமிழருக்கு வாய்ப்பான ஒரு சர்வதேச மையம் தோன்றும். இதனை ஈழத் தமிழ் மக்கள் சரிவர அறுவடை செய்யக் கூடிய நிலையை அடைந்தால் ஈழத் தமிழர்களுக்கான விடிவை ஏற்படுத்துவது சாத்தியம்.

 

சிரியா வீழும் சாத்தியங்கள்... அது விழுந்தால் தான் எமது பிரச்சனை மேல் அமெரிக்கா கவனம் திரும்பும்...  என்பது ஏற்புடையதாக இல்லை.

 

ஒன்று உருசியாவுடன் மற்றையது சீனாவுடன் சம்பந்தப்பட்டது.

 

ஒன்று உள்நாட்டு ஒரே இன பிரச்சனை,மற்றையது உள்நாட்டு இரு இனங்கள் சம்பந்தப்பட்ட நீண்டகால பிரச்சனை. சிரியாவில் உருசிய நீண்டகாலமாக  நிலை கொண்டுள்ளது, இலங்கையில் சில ஆண்டுகளாக சீனா நிலை எடுத்து வருகின்றது.

 

சிரியாவில் ஆளும் அரசு நீடித்தால் அது இரானுக்கு ஆதரவாக அமையும்.இலங்கையில் மகிந்த அரசு நீடித்தால் சிறுபான்மை இனங்கள் அழிக்கப்பட்டு முழு சிங்கள பௌத்த தேசமாக்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

இராஜபக்ச வருவதை புலிகள் விரும்புவார்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட அமெரிக்கா 1998 இலேயே புலிகள் இயக்கத்தை தடை செய்து வைத்திருந்தது..! :D

எல்லாம் அம்புலி மாமா கதை தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.