Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புகைப்பதை நிறுத்த சுஜாதா சொல்லும் வழிமுறைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புகைப்பதை நிறுத்த சுஜாதா சொல்லும் வழிமுறைகள்

kamal.jpg?w=320&h=213

 

மூச்சு ஆராய்ச்சி நிறுவனம் (ரெஸ்பிரேட்டரி ரிசர்ச் ஃபவுண்டேஷன்) சென்னை வடகிழக்கு ரோட்டரி சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் டாக்டர் நரசிம்மன்(C.O.P.D) க்ரானிக் அப்ஸ்ட்ரக்டிவ் பல்மனரி டிசீஸ் (பிடிவாதமான சுவாசத்தடை வியாதி) மனிதனைக் கொல்வதில் மூன்றாவது இடத்துக்கு வந்திருக்கிறது என்று சொன்னார். இதயநோய், புற்றுநோய் போன்றவை மெள்ள மெள்ளக் குறைந்து வரும்போது ஸி.ஓ.பி.டி முதலிடத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறதாம்.

இந்தக் கூட்டத்தில் புகைப்பதைக் கைவிடுவது எப்படி என்கிற தலைப்பில் உரையாற்ற அழைத்திருந்தார்கள். இதற்கு நான் தகுதியான ஆள்தான். 1986 வரை ஒரு நாளைக்கு பாக்கெட் சிகரெட் – ப்ளேயர்ஸ், பிறகு கோல்டு ப்ளேக், இறுதியாக வில்ஸ் ஃபில்டர் பிடித்தவன். அதை ஒரே நாளில் கைவிட்டவன்.

சிகரெட் பழக்கம் தற்செயலாகத்தான் ஏற்படுகிறது. குறிப்பாக வீட்டில் கட்டுப்பாடாக வளர்ந்த இளைஞர்கள் அதை ஒருவிதமான defiance ஆகப் பழகிக் கொள்கிறார்கள். ஸ்ரீரங்கத்தில் குடுமி வைத்துக்கொண்டு பிரபந்தம் சொல்லிக் கொண்டிருந்த நண்பன் வேலை கிடைத்து டெல்லி வந்து குடுமியை நறுக்கிய கையோடு மகாவிஷ்ணு சங்கு சக்கரம் போல் அந்தக் கையில் ஒன்று, அந்தக் கையில் பனாமா பற்றவைத்துக் கொண்டான். ரிட்டயர் ஆனப்புறம்தான் நிறுத்தினான்.

இக்கால இளைஞர்கள் பெண் சிநேகிதிகள் முன்னால் ஸ்டைலாக சிகரெட் பற்றவைத்து ஒரு இழுப்பு இழுத்து விட்டுப் பேசிக்கொண்டே வார்த்தை வார்த்தையாக புகை வெளியிடுவது ரொம்ப ஸ்டைலாக இருக்கும். சில காதலிகளும் இதைக் கல்யாணம் வரை விரும்புவார்கள். பிள்ளை பிறந்ததும் அதன் தலைமேல் சிகரெட் புகை வாசனை வரும்போது பழக்கத்தைக் கைவிட்டே ஆகவேண்டும். இல்லையேல் சுளுக்கு.

என் சிகரெட் பழக்கம்… எம்.ஐ.டி.ஹாஸ்டலில் வெள்ளிக்கிழமை மெஸ்ஸில் டின்னர் கொடுக்கும் போது ஒரு 555 சிகரெட் தருவார்கள். அப்போதெல்லாம் அதன் விலை நாலணா. அதை நண்பனிடம் கொடுத்து அவன் புகை வளையம் விடுவதை வேடிக்கை பார்ப்பேன். ஒரு நாள் நாமே குடித்துப் பார்க்கலாமே என்று தோன்றியதில் பழக்கம் பச்சக் என்று ஒட்டிக் கொண்டது.

சிகரெட் பழக்கம் ஒரு சனியன். லேசில் நம்மை விடாது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் என்னுடன் அது இருந்தது. சில சமயம் சிகரெட் பிடிப்பதற்காகவே எதையாவது சாப்பிடுவேன். கொல்லைப்புறம் போவதற்கு சிகரெட் பிடித்தாக வேண்டும்.

சாப்பிட்டவுடன் கட்டாயம் பிடிப்பேன். சிந்தனா சக்தி வேண்டும் என்று வெத்துக் காரணம் சொல்லி பற்றவைத்து விரலிடுக்கில் வைத்துச் சாம்பலை சொடுக்குவேன். இதனால் பல சுவைகளை, வாசனைகளை இழந்தேன். இவ்வாறு அது என்னைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்த போது அவ்வப்போது சே என்று தோன்றி நிறுத்திவிடத் தீர்மானிப்பேன். ஒவ்வொரு புதுவருஷமும் தவறாத வைராக்கியமாக சிகரெட்டை நிறுத்துவேன். அது சிலசமயம் பிப்ரவரி வரை நீடிக்கும். சில சமயம் ஜனவரி 2ம் தேதிவரை.

பெங்களூரில் ஒரு முறை செக்கப்புக்கு போனபோது டாக்டர் பரமேஸ்வரன் ‘ரங்கராஜன், நீ சிகரெட் பழக்கத்தை கைவிட வேண்டும்’ என்றார்.

‘ஏன்?’ என்றேன். ‘உன் ஹார்ட் சரியில்லை’ என்றார்.

‘எப்போதிலிருந்து விட வேண்டும்?’ என்று கேட்டதற்கு நேற்றிலிருந்து’ என்றார். ‘கைவிடாவிட்டால் என்ன ஆகும்?’ என்றேன். ஹார்ட் அட்டாக்… லங் கேன்சர்.. யு சூஸ்.. நீதான் எத்தனையோ படிக்கிறாயே… உனக்கு சொல்ல வேண்டுமா?’

இந்த முறை பயம் வந்துவிட்டது. ஞாபகம் வைத்துக் கொள்வதற்குத் தோதாக ஆகஸ்ட் பதினைந்தைத் தோதாக தேர்ந்தெடுத்து பெல்காலனி தெருநாய் ஜிம்மி உள்பட அனைத்து நண்பர்களிடமும் ‘நான் சிகரெட்டை நிறுத்திவிட்டேன்’ என்று அறிவித்தேன். இது முக்கியம். யாராவது நான் புகைபிடிப்பதை பார்த்தால் உடனே உலகத்துக்கும் மனைவி மக்களுக்கும் தகவல் சொல்லிவிடும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தினேன். சிகரெட் பழக்கம் என்பது பைனரி இதைத் தெளிவாக உணரவேண்டும்.

ஜாதி இரண்டொழிய வேறில்லை… சிகரெட் பிடிப்பவர், பிடிக்காதவர். குறைவாக பிடிப்பவர்… எப்போதாவது பிடிப்பவர்… இதெல்லாம் ஏமாற்று கைவிடுவதாக இருந்தால் முழுவதும் கைவிட வேண்டும். இருபது சிகரெட்டிலிருந்து பத்து, பத்திலிருந்து எட்டு என்று குறைப்பதெல்லாம் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வது. முதல் தினம் நரகம். முதல் வாரம் உபநரகம்… சிகரெட் இல்லாமல் உலகமே பாழாகி இருக்கும்… இந்த இம்சை தேவையா என்ற ஏக்கத்தைச் சமாளிக்க நிறைய ஐஸ்வாட்டர் குடிக்க வேண்டும். சிகரெட்டுக்குப் பதிலாக பாக்கு, பான்பராக் என்று புகையிலையின் எந்த வடிவமும் கூடாது. வேறு எதாவது வேலையில் கவனம் செலுத்துவது உத்தம்மானது. நீங்கள் விட்டுவைத்த புல்புல்தாரா வாசிப்பது, இயற்கை காட்சிகளை வரைவது, கவிதை எழுதுவது போன்ற பயனுள்ள பொழுது போக்குகளைத் தொடரலாம்.

உதடுகளில் லேசாக நடுக்கம் ஏற்படும் போதெல்லாம் குளிர்ந்த தண்ணீர் குடித்துவிட்டு ‘யார் தெச்ச சட்டை.. எங்க தாத்தா தெச்ச சட்டை… தாத்தா தெச்ச சட்டைப்பைல பாத்தா ரெண்டு முட்டை’ என்று தொடர்ந்து சொல்ல வேண்டும். பக்கத்தில் இருப்பவர்கள் புகார் செய்தால் ‘ஒரு வாரம் அப்படித்தான் இருக்கும்’ என்று அவர்கள் மேல் பாயலாம். யாரையாவது அடிக்க வேண்டும் போல இருக்கும். அதற்கு வசதியில்லையென்றால் ஒரு மேளம் வாங்கிக் கொள்ளுங்கள்… கூடவே உதைப்பதற்கு ஒரு கால்பந்தும், சுழற்ற ஒரு சாவிச் சங்கிலியும் வைத்துக் கொள்ளலாம்.(கண் ஜாக்கிரதை) ஒரு வாரமானதும் பழக்கம் லேசாக வாலைச் சுருட்டிக் கொள்ளும். நாட்களை எண்ணத் துவங்கலாம். தமிழ்ப் படங்கள் போல வெற்றிகரமான பத்தாவது நாள்… இன்று பதினைந்தாவது நாள்… சூப்பர்ஹிட் ஐந்தாவது வாரம்… இப்படி! மெள்ள மெள்ள நண்பர்களிடம் மனைவியிடமும் பீற்றிக் கொள்ளத் துவங்கலாம்… போஸ்டர்கூட ஒட்டலாம். ஆனால், இந்தக் கட்டத்தில் சிகரெட் குடிக்கும் நண்பர்கள் அருகே செல்வதும் மிதப்புக்காகப் பையில் குடிக்காமல் சிகரெட் வைத்துக் கொள்வதும் விஷப் பரீட்சைகள்.

பழக்கத்தை விட்ட நாற்பத்தெட்டாவது நாள் முதல் மைல்கல் தாண்டிவிட்டீர்கள். ஒரு சிகரெட்டை எடுத்து அதைப் பற்றவைக்காமல் மூக்கில் ஒட்டிப்பார்த்து விட்டு ‘சீ நாயே’ என்று சொல்ல முடிந்து, அழுகை வராவிட்டால் பரீட்சை பாஸ். இனியெல்லாம் சுகமே. சிகரெட் பழக்கம் நம்முடன் அஞ்சு வருஷம் தேங்குகிறது என்று டைம் பத்திரிக்கையில் படித்தேன். அதாவது சிகரெட்டை நிறுத்தின அஞ்சு வருஷத்துக்குள் ஒரு சிகரெட் பிடித்தாலும் மறுதினமே பழைய ஞாபகம் உசுப்பப்பட்டு பத்தோ, இருபதோ வழக்கமான கோட்டாவுக்குப் போய்விடூவீர்கள். அஞ்சு வருஷம் தாண்டி விட்டால் பழக்கம் போய்விடுகிறது.

இப்போதெல்லாம் அமெரிக்காவில் சிகரெட்டை நிறுத்த பலவிதமான patch டம்மி சிகரெட் எல்லாம் கொடுக்கிறார்கள். இந்தியாவிலும் கிடைக்கலாம். எல்லாவற்றிலும் சிறந்தது லங் கேன்சர் பயம்தான். 90 விழுக்காடு சிகரெட் குடிப்பதால் இது வருகிறது. வகுத்துப் பார்த்தால் இன்றைய தினம் இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் வருஷத்துக்கு 130 சிகரெட் குடிக்கிறார் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. சுமார் ஐந்து கோடி மக்கள். பெரும்பாலும் ஆண்கள் புகைபிடிக்கிறார்கள். 50 லட்சம் பேர் அதைக் கைவிட்டிருக்கலாம். அந்நியச் செலாவணி நிறைய சம்பாதிக்கிறது. நம் மக்கள் தொலையில் ஐந்து விழுக்காடாவது இந்த வியாதியின் அபாயத்தில் இருக்கிறார்கள். இதனுடன் சேர்ந்து புகையிலை சார்ந்த வாய், நாக்கு, தொண்டை, உணவுக்குழல் கேன்சர்கள்… கிட்னிகாரானரி ஆர்ட்டரிகளைப் பாதிக்கும் வியாதிகளுக்குக் கணக்கில்லை. இதை அறிந்து கொண்டால் பாட்ச் தேவையில்லை.

பற்ற வைப்பதற்கு முன் ஒரு நிமிஷம்..!

நன்றி : சுஜாதா – கற்றதும் பெற்றதும் – ஆனந்தவிகடன் (29.12.2002)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.