Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மாணவர்களின் போராட்டமும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மாணவர்களின் போராட்டமும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்

ஈழத்திலிருந்து எஸ்.மயூரன்
 

 

ஈழத்தமிழர்களின் 35 வருடகால அகிம்சைப் போராட்டமும் 26 வருட கால ஆயுதப் போராட்டமும் சிங்கள பௌத்த இனவாத அரசாங்கங்களினால் தோற்கடிக்கப்பட்டு ஈழத்தமிழ் மக்கள் சின்னாபின்னமாக ஆக்கப்பட்டு, 'எங்களைக் காப்பாற்ற யாருமே இல்லையா' என அவர்கள் ஆதங்கப்பட்டு தாங்கொணா உளச் சோர்வுகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் வேளையில்தான், எங்கள் இரத்த உறவுகளான தமிழக மாணவர்கள் 'நீங்கள் வேதனையில் துவள வேண்டாம் நாங்கள் இருக்கின்றோம்' என வீறுகொண்டு எழுந்தமை ஒவ்வொரு ஈழத்தமிழனின் நெஞ்சத்திலும் பால் வார்த்ததைப்போல் உள்ளது.

 

இப்போது எங்களது நெஞ்சத்தில் இருந்து வழியும் இரத்தத்தினை உங்கள் இனப்பற்று என்னும் பால் கழுவத் தொடங்கிவிட்டது. இந்த நாட்டில் சிங்களவனுக்கு மண்டியிட்டு வாழ்வதனை விட நிமிர்ந்து நின்று மரணிப்பதே மேல் என்னும் கொள்கையில் நாங்கள் ஒவ்வொருவராக வீழ்ந்து கொண்டிருக்கின்றோம். எங்கள் தமிழ் இனம் இந்நாட்டில் முற்றாக அழிக்கப்பட்டு விடும் என்னும் அச்சமே எங்களுக்கு தீராத கவலையினையளிக்கின்றது.

 

இந்தியா உட்பட உலகின் அனைத்து நாடுகளுமே ஈழத்தமிழர்கள் உலகத்தில் ஒரு புதிய நாட்டினை உருவாக்குவதற்குப் போராடுகின்றனர் என தவறுதலாகக் கற்பிதம் கொண்டு தாங்கள் தனிநாட்டுக்கு ஆதரவு அளிக்கமாட்டோம் என்று உறுதியாகக் கூறுகின்றன. நாங்கள் உலகில் ஒரு புதிய நாட்டினை உருவாக்குவதற்குப் போராடவில்லை என்பதனை முதலில் கூற விரும்புகின்றோம். போர்த்துக்கேயர் 1505 ஆம் ஆண்டு இத்தீவினைக் கைப்பற்றிய போது ஒரு முழு நாடு என்னும் ரீதியில் இத்தீவுக்கு ஒரு பெயர் கூட இருக்கவில்லை. யாழ்ப்பாணம், கண்டி, கொழும்பு என மூன்று அரசுகள் அப்போது காணப்பட்டன. யாழ்ப்பாண இராச்சியத்தினை பரராஜசேகரன் என்னும் தமிழ் மன்னனும் கண்டியை சிறி விக்கிரம ராஜசிங்கன் என்னும் தமிழ் மன்னனும் ஆண்டு வந்தனர். கொழும்பு இராஜ்ஜியம் மட்டும் சிங்கள மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது. கொழும்பு இராச்சியம் கோட்டை, சீதாவாக்கை, றைகம என மூன்றாகப் பிரிக்கப்ட்டு மூன்று சிங்களச் சகோதரர்களால் ஆளப்பட்டுக் கொண்டிருந்தது.

 

கோட்டையினை புவனேகபாகுவும் சீதாவாக்கையினை மாயாதுன்னையும் றைகமத்தினை றைகம்பண்டாரவும் ஆண்டு வந்தனர். ஆங்கிலேயர் 1815 ஆம் ஆண்டு கண்டியினைக் கைப்பற்றிய பின்புதான இத்தீவு ஒரு தனிநாடாக ஆக்கப்பட்டது. ஆங்கிலேயர்தான் இந்நாட்டிற்கு சிலோன் என்று பெயர் வைத்தனர். 1972 ஆம் ஆண்டுதான் இந்நாட்டிற்கு அப்போதைய பிரதமாரான சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் சிறிலங்கா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நாங்கள் உலகில் ஒரு புதிய நாட்டினை உருவாக்கப் போராடவில்லை. இழந்த நாட்டினை மீட்கப் போராடிக் கொண்டிருக்கின்றோம் என்பதனை எங்கள் குரல்வளைகள் நெரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது இந்தியாவுக்கும் உலகத்திற்கும் நீங்கள் சான்றுகளுடன் உரத்துக் கூற வேண்டும் என்பதற்காகவே நான் இவ்வரலாற்றுத் தகவல்களை உங்களுடன் முதலில் பகிர்ந்து கொள்கின்றேன்.

 

ஈழத்தமிழ் இளைஞர்களின் வன்முறை கலந்த போராட்டம் இந்தியாவின் கண்ணுக்கும் பல உலக நாடுகளின் கண்ணுக்கும் தெரிகின்றனவே தவிர, ஈழத்தமிழ் இளைஞர்கள் ஏன் ஆயுதங்களை கையிலெடுத்தார்கள் என்பதனை அனைவரும் உணர மறுக்கின்றனர். சிங்கள அரசுகளின் பயங்கரவாதத்தினை எதிர்கொள்ளவே அவர்களும் பயங்கரவாதத்தினைக் கையிலெடுத்தனர். அகிம்சை வழியில் போராடிய தமிழ்த் தலைவர்கள் மீது வன்முறைகளை 1948-1983 வரைக்கும் பிரயோகித்தது சிறிலங்கா அரசாங்கங்கள்தான். 1958 ஆம் ஆண்டிலும் 1978 ஆண்டிலும் தமிழ் மக்களுக்கெதிரான திட்டமிட்ட அரச பயங்கரவாதம் இலங்கை அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்டபோது ஈழத்தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கியிருக்கவில்லை.

 

1948 ஆம் ஆண்டு இந்நாட்டிற்கு சுதந்திரம் (தமிழர்களுக்கு சுதந்திரம் பறிபோன நாள்) கிடைத்தபோது தமிழ் மக்கள் தாங்களும் சம உரிமைகளுடன் இந்நாட்டில் வாழலாம் என எதிர்பார்த்தனர். ஆனால் முதல் பிரதமரான டீ.எஸ் சேனாநாயக்க பதவி ஏற்றவுடன் இந்திய வம்சாவழித் தமிழ் மக்களின் வாக்குரிமையைப் பறித்து, அவர்களை நாடற்றவர்களாக ஆக்கி, தமிழ் மக்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தினைக் குறைத்தார். அதுமட்டுமன்றி தமிழ் மக்கள் செறிவாக வாழ்ந்த வளம் பொருந்திய மாவட்டங்களான திருகோணமலையில் கல்லோயா நீர்ப்பாசனத் திட்டத்தினையும் அம்பாறையில் சேனாநாயக்க சமுத்திர நீர்பாசனத் திட்டத்தினையும் ஏற்படுத்தி சிங்களவர்களை இம்மாவட்டங்களில் குடியேற்றி, இம்மாவட்டங்களில் தமிழ் மக்களின் செறிவினைக் குறைத்து, கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களை சிறுபான்மையினராக மாற்றினார்.

 

அவருக்குப் பின்னர் ஆட்சிபீடமேறிய எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க சிங்களம் மட்டும் சட்டத்தினை கொண்டு வந்து தமிழ் மொழியினை ஒரு இழிவான நிலைக்குத் தள்ளி சிங்கள மொழியில் தேர்ச்சி பெறாத, தேர்ச்சி பெற மறுத்த தமிழர்களை தமது அரச தொழில்களிலிருந்து நீக்கினார். அவருக்குப்பின் ஆட்சியமைத்த சிறிமாவோ பண்டாரநாயக்க டீ.எஸ் சேனாநாயக்கவினால் வாக்குரிமை பறிக்கப்பட்ட இந்திய வம்சாவழித்தமிழ் மக்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோரை அப்போதைய இந்தியப் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரியுடன் இணைந்து சிறிமாவோ- சாஸ்திரி உடன்படிக்கையினைச் செய்து, இந்தியாவிற்கு பலவந்தமாகத் திருப்பியனுப்பினார். அத்துடன் அவர் 1970 ஆம் மீண்டும் பதவிக்கு வந்தவுடன் தரப்படுத்தல் என்னும் முறைமையினை ஏற்படுத்தி தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல வேண்டுமானால் சிங்கள மாணவர்களை விடவும் கூடுதலாகப் புள்ளிகளைப் பெறவேண்டும் என அறிவித்தார்.

 

1970 ஆம் ஆண்டு அறிமுகபடுத்திய தரப்படுத்தல் சட்டம் மூலம் 1969 ஆம் ஆண்டு பரீட்சையில் தோற்றி வெற்றிபெற்று பல்கலைக்கழக அனுமதியினைப் பெற்றிருந்த பல தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழ அனுமதியினை முன்னரே அமுலாகும் வண்ணம் செய்து இரத்துச் செய்தார். இவ்வாறு பல்கலைக்கழக அனுமதியினை இழந்த பல மாணவர்கள் எவ்வித வழியும் இன்றியே ஆயுதங்களை கையிலெடுக்க முற்பட்டனர். 1977 இல் புதிதாக பதவிக்கு வந்த ஜே. ஆர்.ஜெயவர்த்தன 'போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்' என தமிழ் மக்களை நோக்கி யுத்தப் பிரகடனம் செய்தார்.

 

1983 ஆம் ஆண்டு யாழ்பாணத்தில் முதன் முதலாக 13 சிறிலங்கா இராணுவத்தினர் கண்ணிவெடியில் கொல்லப்பட்ட போது அதற்குப் பதிலடியாக சிறிலங்காவின் தென்பகுதியில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ்மக்கள் சுட்டும் வெட்டியும் எரித்தும் கொல்லப்பட்டனர். மொத்தத்தில் டீ.எஸ் சேனாநாயக்க தமிழ் மக்களின் வாக்குரிமையிலும் நிலத்திலும் கைவைக்க, எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க தமிழ் மக்களின் தாய் மொழியில் கைவைத்தார். சிறிமாவோ பண்டாரநாயக்க தமிழ் மக்களின் கல்வியில் கைவைக்க, ஜே. ஆர்.ஜயவர்த்தன தமிழ் மக்களின் உயிரில் கைவைத்தார். ஆனால் மகிந்த ராஜபக்ச இவ்வனைவரினதும் செயற்பாடுகளை ஒன்றாக்கி தமிழ் மக்களின் வாக்கு, மொழி, நிலம், கல்வி என அனைத்தையும் அழித்து இந்நாட்டில் தமிழ் மக்கள் இனி ஒருபோதும் எவ்வகையிலும் பலம்வாய்ந்தவர்களாக் இருக்கக் கூடாது என்னும் வகையில் தனது சகோதரர்களுடன் இணைந்து ஒவ்வொரு நிமிடமும் தமிழ் இனத்தையே கருவறுத்துக் கொண்டிருக்கின்றார். எனவே அவருக்குக் கொடுக்கப்படும் ஒவ்வொரு நிமிட கால அவகாசமும் தமிழின அழிப்புக்கு அவருக்கு வழங்கப்படும் அங்கீகாரமாகவே கருதப்படவேண்டும்.

 

இந்த இடத்தில் ஈழத்தமிழ் மக்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது என்ன? உங்களுக்கு ஈழத்தமிழ் மாணவர்களுக்கு இல்லாத ஜனநாயக சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் இருக்கின்றது. உங்களது கல்விக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் அகிம்சைவழியில் நீங்கள் எங்களுக்காகப் போராடி, நாங்கள் சுயகௌரவத்துடன் எங்களை நாங்களே ஆளக்கூடிய நிலையை ஏற்படுத்த முடியும் என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். இதற்காக நீங்கள் எவரும் தீக்குளிப்பு போன்ற உயிர்த்தியாக நடவடிக்கைகளில் ஈடுபடுவதனைத் தாங்கும் நிலையில் ஈழத்தமிழினம் இல்லை. நாங்கள் போதியளவு உயிர்த்தியாகம் செய்து களைத்துவிட்டோம். உங்கள் உயிர்கள் ஒவ்வொன்றும் எங்களுக்கு முக்கியமானது.

 

இந்திய அரசாங்கம் எங்களுக்குச் சார்பாக செயற்பட்டு தர்மத்தின் பக்கம் நிற்கும் என்று நாங்கள் கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை. டீ.எஸ் சேனாநாயக்க இந்திய வம்சாவழித் தமிழ் மக்களின் வாக்குரிமையினைப் பறித்தபோது இந்தியா அவ்வட்டூழியத்தினை தடுத்த நிறுத்த முற்படவில்லை. ஆனால் இந்தியா அதற்கு மேலும் சென்று சிறிமா- சாஸ்திரி உடன்படிக்கையினைச் செய்து தமிழ் மக்களில் கணிசமான தொகையினை இந்தியாவுக்குத் திருப்பியழைத்ததன் மூலம் இலங்கையில் 60:40 என்னும் விகிதத்தில் காணப்பட்ட இனவிகிதாசாரத்தினை 80:20 என ஆகும் வண்ணம் செய்து சிறுபான்மையினராக இருந்த தமிழ் மக்களை மேலும் சிறுபான்மையினராக்கி எங்களின் ஜனநாயகப் பலத்தினையே இலங்கை சிதைப்பதற்கு இந்தியாவே உதவிசெய்துள்ளது. அது மட்டுமன்றி கச்சதீவு உடன்படிக்கையினைச் செய்து தமிழ்நாட்டு மக்களுக்குத் துரோகமிழைத்ததை நீங்கள் அறிவீர்கள்.

 

அத்துடன் தமிழ் இளைஞர்களின் உயிர்த்தியாகம் மூலம் சிறிலங்கா அரசினை பணியச்செய்து 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய உடன்படிக்கையினைச் செய்ததன் மூலம் திருகோணமலைத் துறைமுகத்தினை தனது அனுமதியின்றி வேறு எந்த நாட்டுக்கும் கொடுக்கக்கூடாது என எழுதி வாங்கிக் கொண்டதுடன், புத்தளத்தில் இருந்த அமெரிக்காவின் தொலைத் தொடர்பு நிலையமான 'வொய்ஸ் ஒவ் அமெரிக்கா'வினையும் இந்தியா மூடச் செய்தது. எவ்வித அதிகாரங்களும் இல்லாத மாகாண சபை முறையினை தமிழ் மக்கள் மீது இந்தியா திணித்தது. சர்வதேச உடன்படிக்கை என்பதை மதியாமல் சிறிலங்கா உச்ச நீதிமன்றம் இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களை மகிந்தவின் ஆட்சிக்காலத்திலேயே பிரித்தது. 'நீங்கள் இந்திய உடன்படிக்கையினை இரத்துச் செய்தால் நாங்கள் கச்சதீவு உடன்படிக்கையினை இரத்துச் செய்வோம்' என மிரட்டியிருந்தால் சிறிலங்கா அரசாங்கம் கட்டாயம் பின்வாங்கியிருக்கும். ஆனால் இந்தியா அவ்வாறு செய்யவில்லை.

 

இன்று கிழக்கு மாகாண ஆளுனராக முன்னாள் கடற்படைத் தளபதி நியமிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றம் முழு அளவில் இடம்பெறுகின்றது. வளம் பொருந்திய திருகோணமலையின் மாவட்ட ஆட்சியராக முன்னாள் இராணுவ அதிகாரி முழு அளவில் தமிழ் மக்களை மாவட்டத்தில் இல்லாதொழிக்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் தனக்கு ஒரு அலுவலக சிற்றூழியரைக் கூட நியமிக்கும் அதிகாரம் இல்லை எனக் கூறினார். முன்னாள் கடற்படை அதிகாரியான மொஹான் சமரவிக்கிரம என்னும் ஆளுனரிடத்திலேயே முழு அதிகாரங்களும் காணப்படுகின்றன. வட மாகாண ஆளுனரான முன்னாள் இராணுவ அதிகாரி சந்திரசிறி முழு அளவில் இராணுவ ஆட்சியினை அம்மாகாணத்தில் செய்து கொண்டிருக்கின்றார். வடமாகாணத்தில் தேர்தல் நடப்பதற்கு முன்னர் அம்மாகாணத்திலுள்ள தமிழ் மக்களின் நிலங்களை இயன்றவரை பறிக்கும் வேலைகள் முழு அளவில் இடம் பெறுகின்றன. வன்னியில் பல கிலோ மீற்றர் நீளத்திற்கு இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் அதிகாரம் எதுவுமற்ற ஒரு பொம்மை மாகாண அரசாங்கத்தினை வழங்குகின்ற 13வது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துமாறு இந்தியாவும் பல மேற்கு நாடுகளும் சிறிலங்காவினை வலியுறுத்துகின்றன. ஆனால் அதைக்கூட சிறிலங்கா வழங்க முன்வரவில்லை என்பதே இந்நாடுகளின் கவலையாக உள்ளது.

 

ஆகவே தனது பிராந்திய நலனில் அக்கறை கொண்டு ஈழத்தமிழர்களுக்குத் தொடர்ச்சியாக துரோகமிழைத்த இந்தியாவிடமிருந்து எவ்வித தர்மம் சார் உதவிகளையும் எதிர்பார்க்கும் நிலையில் ஈழத்தமிழர்கள் இன்று இல்லை. ஆனால் தமிழக மக்கள் தொடர்ந்தும் எங்களுடனேயே இருக்கின்றனர். அவர்களுக்கு இந்தியாவின் பிராந்திய நலன்களுக்காக ஈழுத்தமிழர்களை பலிக்கடாவாக்கும் எண்ணம் துளிகூட இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். இவ்விடத்தில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் வெகுண்டெழுமாக இருந்தால் இந்திய சர்க்கார் கட்டாயம் அடிபணிந்தே தீரும்.

 

யுத்தக் குற்றம் குறித்த றோம் சாசனத்தில் சிறிலங்கா கைச்சாதிடாத படியினால் யுத்தக் குற்றத்தின் மூலம் மகிந்தவையும் கோத்தபாயவையும் தண்டிப்பது இலகுவானதல்ல. இலங்கையில் இடம்பெற்றது, இடம்பெறுவது இனப்படுகொலை என்பதாலும் சிறிலங்கா ஐ.நா இனப்படுகொலைச் சாசனத்தில் கைச்சாத்திட்டுள்ள படியினாலும் இனப்படுகொலையினை வலியுறுத்துவதன் மூலமே மகிந்தவின் இனவாதப் பரிவாரங்களுக்கு முடிவு கட்ட முடியும்.

 

இதை நாம் தொடர்ச்சியாகப் போராடுவதன் மூலமே அடைய முடியும். ஆனால் எமது உடனடித் தேவை யாதெனில் தற்போது தமிழ் மக்களை இந்நாட்டிலிருந்து அழித்தொழிக்கும் வேலையினைத் தடுப்பதாகும். இதற்கு ஒரு தனிநாட்டின் தலையீடு போதுமானதல்ல. இந்தியத் தலையீடும் நோர்வேயின் தலையீடும் தோல்வியடைந்த கதை நமக்குத் தெரியும். இலங்கைக்கு சீனா, இந்தியா ஆகிய நாடுகள் கடன் உதவிகளை வழங்கினாலும் இலங்கை தனது ஏற்றுமதிகளுக்காக அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் என்பவற்றிலேயே அதிகம் தங்கியுள்ளது. எல்லா நாடுகளுக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் சிங்களவர்கள் அமெரிக்காவுக்கு எதிராக இன்றுவரை எவ்வித ஆர்ப்பாட்டத்தினையும் செய்யவில்லை. அவர்களுக்கு அமெரிக்கா குறித்த பயம் இருக்கின்றது. ஆகவே அமெரிக்கா தலைமையேற்கும் ஐ.நா பொறிமுறை அல்லது நேட்டோ முன்மொழியும் பொறிமுறையே தற்போது அவசியமானதாகும்.

 

ஆகவே உடனடியாக ஐ.நா கண்காணிப்பு மையங்களை வடகிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் அமைப்பதே தமிழ் மக்களுக்கான உடனடி பாதுகாப்பினை வழங்கக்கூடிய பொறிமுறையாக இருக்கக்கூடும். அதன் அடுத்த கட்டமாக தமிழ் மக்களுக்கு சர்வதேச தலையீட்டுடன் கூடிய ஓர் இடைக்கால நிர்வாகம் அமைக்கப்படக்கூடிய ஏதுநிலை உருவாகும். இவ்வாறு அமையும்போது தற்போது சிங்கள மக்கள் மத்தியில் இனவாத தீயினை கொழுந்து விட்டெரியச் செய்து அதன் பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் ராசபக்சேக்களின் அதிகாரம் ஆட்டங்காணத் தொடங்கும். அதன் பிறகு அவர்களை சர்வதேசம் கையாள்வது இலகுவானதாக இருக்கும். இதுவே தமிழ் ஈழத்திற்கான அடித்தளத்தினை எமக்கு வழங்கும்.

 

கந்தபுராணத்தில் சூரன், தாரகாசுரன், சிங்கமுகாசுரன் ஆகிய மூன்று அசுரர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். நாங்கள் இம்மூன்று அசுரர்களாகிய சூரன் (மகிந்த ராசபக்ச), தாரகாசுரன் (கோத்தபாய ராசபக்ச), சிங்கமுகாசுரன் (பசில் ராசபக்ச) என்பேரை நேரிலே காணுகின்றோம். வயதில் குறைந்தவராக இருந்தபோதும் இம்மூன்று அசுரர்களையும் அழித்த கந்தப்பெருமானாகவே மாணவர்களான உங்களைப் பார்க்கின்றோம். உங்கள் ஒவ்வொருவருக்குப் பின்னாலும் தமிழக மக்கள் இருக்கின்றார்கள் என நாங்கள் எண்ணுகின்றோம். எங்களை இவ்வசுரர்களின் பிடியிலிருந்து தமிழக மக்கள் பாதுகாப்பார்கள் என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=8&contentid=7749d0ea-9e67-49bf-ba32-ca823963b8c3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.