Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதை நோக்கி - சிறீலங்காவுக்கு எதிரான மேற்குலகப் பிரச்சாரம் - ந.மாலதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதை நோக்கி - சிறீலங்காவுக்கு எதிரான மேற்குலகப் பிரச்சாரம் - ந.மாலதி
 

 

 

b04e4759-806b-431b-9f09-3e246f5196c91.jp
விடுதலைப்புலிகளின் அழிவுக்குப் பின்னர் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் கொடூரங்களை வெளியுலகத்தின் பார்வைக்குக் கொண்டுவரும் மேற்குலகத்தின் பிரசாரத்தை பொதுவாகத் தமிழர்கள் நன்றியுடன் நோக்குகிறார்கள். இத்தமிழர்களில் ஒரு சிறுபான்மையினர் இம்மேற்குலகப் பிரச்சாரம் சிறீலங்கா அரசைத் தமக்குச் சார்பாக மாற்றுவதற்காகவே என்று சந்தேகிக்கிறார்கள். இதனால் தமிழர்கள் பெரிதாக ஒரு நன்மையும் அடையப் போவதில்லை என்பது இவர்கள் கருத்து. இன்னுமொரு பகுதியினர் இலங்கைத்தீவில் சிங்களவர்கள் மேற்குலகத்திலிருந்து விலகிப்போக, தமிழர்கள் அங்கே மேற்குலக நண்பனாக இயங்கினால் நன்மைகள் அடையலாம் என்று கருதுகின்றனர்.
 
2009ம் ஆண்டிற்குப் பின்னரான இம்மேற்குலகப் பிரச்சாரத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் அறிக்கைகள், கருத்துக்கள், நூல்கள், கட்டுரைகள், நேர்காணல்கள், ஆவணப்படங்கள் ஆகியனவற்றிற்குப் பொதுவான சில முக்கிய பண்புகள் உண்டு. ஜனவரி 2009 தொடக்கம் மே 2009 வரையான காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களில் மட்டுமே குவிமையப்படுத்தல், இனப்படுகொலை என்னும் பதத்தை நிராகரித்தல், ஆறு தசாப்தங்களாக தமிழருக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை உதாசீனப்படுத்தல், தமிழரின் நியாயமான தனிநாட்டுக் கோரிக்கையை கருத்தில்கொள்ள மறுத்தல், விடுதலைப்புலிகளை எப்போதுமே வெறுக்கப்பட வேண்டியவர்களாக சித்தரித்தல், மற்றும் இப்பிரச்சாரம் மேற்கொள்ளுபவர்கள் இடையே பாரிய கருத்து வேற்றுமைகள் காணப்படாமை ஆகியனவே இவை.
 
இம்மேற்குலக பிரச்சாரத்தைப் புரிந்துகொள்வதற்கு இப்பிரச்சாரத்தில் பங்கெடுப்பவர்களைப் படத்தில் காட்டியது போல் நான்கு அடுக்குகளாக பிரித்துப் பார்க்கலாம். அடிமட்ட அடுக்கு எந்தவொரு அமைப்பின் பிரதிநிதியாக அல்லாமல் தனியாராக பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களைக் கொண்டிருக்கும். இவர்களாலேயே நீதிக்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவேண்டிய கடப்பாடு இல்லாமல் மிகவும் கடுமையான குற்றங்களை சிறீலங்கா மேல் சுமத்த முடிகிறது. அதற்கு மேலுள்ள அடுத்த அடுக்கில் அரசசார்பற்ற நிறுவனங்களான "அம்னஸ்ரி இன்ரனசேனல்", மனித உரிமைப் பாதுகாப்புச் சபை, சர்வதேச நெருக்கடிக்குழு போன்றவை உள்ளன. இதையும் விட சனல்-4 போன்ற ஊடகங்களும் இவ்வடுக்கில் உள்ளன. இவ்வரசசார்பற்ற அமைப்புக்களும் சுமத்தப்படும் குற்றங்களுக்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அழுத்தங்கள் இல்லாமல் தமது பிரச்சாரத்தை மேற்கொள்ளலாம். இதற்கு அடுத்த அடுக்கில் உள்ள ஐநா அமைப்புக்களின் அறிக்கைகளும் தீர்மானங்களும் கீழடுக்குகளிலிருந்து வருபவற்றைவிட கனமுள்ளவை, கவனிக்கப்படுபவை. இருப்பினும் ஐநாவின் கீழியங்கும் ஒவ்வொரு அமைப்பும் தமக்கு மேலதிக நடவடிக்கை எடுக்க அதிகாரமிலாதவை போல நடந்து கொள்ளலாம். இறுதியாக எல்லாவற்றிற்கும் மேலுள்ள அடுக்கில் இராணுவ மற்றும் பொருளாதார பலமும் அதிகாரமும் உள்ள மேற்குலக நாடுகள் இருக்கின்றன.
 
இந்நான்கு அடுக்குகளிலிருப்போர் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் வகைகளை அவதானித்தால் சிறீலங்கா மேல் இவர்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகளின் தீவிரம் அடுக்குகள் கீழே போகப்போக அதிகரிப்பதை காணலாம். இந்த ஒட்டுமொத்தப் பிரச்சாரத்திலிருந்து வெளிவரும் எந்தவொரு கருத்தையும் எடுத்து ஆராய்ந்து வாசகர்கள் இவ்வுண்மையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். ஆகவே மேற்குலக பிரச்சாரத்தினைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு இவ்வடுக்குகள் சார்ந்த பார்வை உதவியாக இருக்கும்.
 
விடுதலைப்புலிகளின் அழிவுக்குப் பின்னர் தொடரும் சிறீலங்காவுக்கு எதிரான இப்பிரச்சாரத்தில் இன்னுமொரு முக்கிய அம்சமாக சிறீலங்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் காலப்போக்கில் தீவிரமடைவதையும் அவதானிக்கலாம். வாசகர்களுக்கு இத்தீவிரமடைதலை உணர்த்துவதற்கு அப்பிரச்சாரத்தின் முக்கிய மைற்கற்கள் கீழே தரப்படுகின்றன.
 
2009: ஆகஸ்ட் 2009 இல் கண்கள் கட்டப்பட்டு நிர்வாணம் ஆக்கப்பட்ட தமிழர்கள் துப்பாக்கியால் சுடப்படும் ஒளிப்படங்களுடன் இப்பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டது. ஐநாவின் துணையுடன் மூன்று லட்சம் மக்கள் மோசமான மெனிக் பாம் முகாம்களில் அடைக்கப்பட்டு கிடந்த அதேகாலத்தில் இந்த ஒளிப்படம் பிரபலமாக்கப்பட்டது. அந்த மூன்று லட்சம் மக்கள் இதைவிட மோசமான கொடூரங்களுக்குச் சாட்சிகள். அவர்கள் ஐநாவினால் அணுகக்கூடியவர்களாகவே அப்போது இருந்தார்கள்.
 
2010: ஆங்காங்கே போர்க்குற்றங்களைப் பற்றிய சில சத்தங்கள் போடுவதைவிட இவ்வாண்டில் அதிகமாக மௌனம் காக்கப்பட்டது.
 
2011: ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை வெளியிடப்படுமா படாதா என்ற நீண்ட விவாதத்திற்குப் பின்னர் மார்ச் மாதத்தில் இது வெளியிடப்பட்டது. இதில் புதிதாக எதுவும் சொல்லப்படவில்லை. நடந்த கொடூரங்களுடன் ஒப்பிடும்போது இதில் கூறப்பட்டது ஒரு துளியே. தொடர்ந்து மே மாதத்தில் கோடன் வேய்ஸ் தனது நூலை வெளியிட்டார். தொகையாக மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதை ஐநா மறைத்தது என்ற குற்றச்சாட்டைவிட இதிவும் புதிதாக எதைவும் சொல்லிவிடவில்லை. தொடர்ந்து யூன் மாதத்தில் ஊடகப் பரபரப்பூட்டும் விதத்தில் சனல்-4 தனது சிறீலங்கா சார்ந்த முதல் ஆவணப்படத்தை வெளியிட்டது. வெளிவர இருக்கும் தனது நூலை எழுதி வரும் காலத்தில் பிரான்சிஸ் கரிசனுக்கு பிரபலம் கொடுப்பதற்காக நோர்வேயின் 'சமாதனத்தின் ஆட்டக்காய்' (Pawn of Peace) என்ற அறிக்கையின் வெளியீட்டு நிகழ்வுக்கு அவர் தலைமை தாங்கினார்.
 
 
 b04e4759-806b-431b-9f09-3e246f5196c94.jp

2012: மார்ச்சில் நடக்கவிருந்த ஐநா மனித உரிமைச் சபையின் கூட்டத்தை ஒட்டி சனல்-4 'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' என்ற தனது இரண்டாவது ஆவணப்படத்தை வெளியிட்டது. தொடர்ந்து ஏப்பிரல் மாதம் கொத்துக் குண்டுகள் பாவித்ததற்கான சான்றுகள் கண்டுபிடித்ததாக கூறும் ஒரு ஐநா பணியாளரின் மின்னஞ்சல் கசியவிடப்பட்டது. அக்டோபரில் பிரான்சிஸ் கரிசனின் நூல் வெளிந்தது. தொடர்ந்து மேற்குலகப் பிரச்சாரத்தின் பகுதியாக தனது நூலை பரப்புவதற்கு உலகப் பணயங்களை அவர் மேற்கொள்ளுகிறார்.
 
2013: மார்ச் ஐநா மனித உரிமை சபைக் கூட்டத்தைக் கணக்கிலெடுத்து பெப்பிரவரியில் மனித உரிமைப் பாதுகாப்புச் சபை 'சிறையில் வன்புணர்வு' என்ற அறிக்கையை வெளியிட்டது. தொடர்ந்து சனல்-4 பன்னிரண்டு வயதுச் சிறுவன் பாலச்சந்திரனின் படத்தை வெளியிட்டு இன்னுமொரு ஊடகப் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் பிரான்சிஸ் கரிசனும் 'வெள்ளைக் கொடி' விவகாரத்தைப் பற்றி நேரே கண்டவர்களுடன் பேசியதாக ஒரு கட்டுரையை வெளியிட்டார்.
 
மேற்குலகத்திடம் இவற்றைவிட சிறீலங்காவுக்கு எதிரான அதிக சாட்சியங்கள், செயற்கைக்கோள் படங்கள் உட்பட இருப்பது நிச்சயம். இம்மேற்குலகப் பிரச்சாரத்தினர் 2009 க்குப் பின்னர் இன்றுவரை வெளிக்கொணர்ந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நோக்கினால் இன்னும் மோசமான குற்றச்சாட்டுக்களை வெளிக்கொண்டுவர இவர்களால் முடியும் என்பதை ஊகிக்கலாம். இவர்களின் பிரச்சாரம் எக்காரணங்களுக்காக மேலும் மேலும் உக்கிரமடையும்? எக்காரணுங்களுக்காக தணிந்து போகும்? இதை ஆராய்வதற்கு அடுக்குகள் கொண்ட மேற்குலகப் பிரச்சாரத்தின் குறியிலக்கை மூன்று பிரிவுகளாக நோக்கலாம். சிங்கள மக்களும் அவர்களின் அரசும், தமிழ் மக்களும் அவர்களின் வருங்காலத்தில் இருக்கக் கூடிய அரசும், மற்றும் ஏனைய உலக மக்களுமே அம்மூன்று பிரிவுகள்.
 
சிங்கள அரசை மேற்குலகத்தின் நண்பனாக்குவதற்காக சிங்கள மக்கள் குறிவைக்கப்படுகிறார்கள். போர்க்குற்றச்சாட்டுக்கள் இவர்களை அச்சுறுத்தி தம்பக்கம் திருப்புவதற்கு உதவுகிறது. அதே சமயத்தில் போர்க்குற்றவாளிகளாக இனம் காணப்பட்ட சிங்களவர்களைத் தூதுவர்களாக ஏற்று (அவுஸ்திரேலியா, ஜெர்மனி, ஐநா ஆகிய இடங்களில்) அவர்களை தம்பக்கம் இழுக்கும் முயற்சியும் தொடர்கிறது. மேற்குலகப் பிரச்சாரத்தில் முழுமையாக மயங்கிய தமிழர்களும் சிங்களவர்களுக்காக பிரயோகிக்கப்படும் 'தடியும்-இனிப்பும்' சேர்ந்த இவ்வுத்தியால் மகிழ்வுக்கும் கசப்புக்கும் ஆக மாறி மாறி ஊசலாடுகிறார்கள்.
 
மேற்குலகப் பிரச்சாரத்தின் அடுத்த குறி உலகளாவிய தமிழர்கள். ஈழத்தமிழரின் இனப்படுகொலைக்கு மேற்குலகு துணை நின்றதை உணர்ந்து அறிந்து நிற்கும் தமிழினத்தின் நோக்கையும் தன்பக்கம் திருப்ப வேண்டிய கட்டாய தேவையுடன் தமிழர்கள் மேற்குலகின் பிரச்சாரத்தில் குறிவைக்கப்படுகிறார்கள். இன்று தமிழர்கள் ஒரு தனித்துவமான வரலாற்றுக் காலத்தில் நிற்கிறார்கள். இனப்படுகொலையில் மேற்குலகின் பங்கை பட்டறிவு மூலம் பெற்று நிற்கிறார்கள் தமிழர்கள். இத்தகைய பட்டறிவு வாய்ப்பு உலகில் எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை. தமிழர்களின் பட்டறிவை மழுங்கவைக்கும் நோக்குடனும் மேற்குலகப் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. ஏனெனில் இத்தகைய பட்டறிவு உள்ளவர்கள் மேற்குலக நன்மைகளுக்கு ஆபத்தானவர்கள். எனவே தமிழர்கள் மேற்குலகின் பிரச்சாரத்திற்குள் உள்வாங்கப்படுதை எதிர்த்து நிற்பார்களானால் இவர்களை உள்வாங்கும் நோக்குடன் அவர்களை நோக்கிய பிரச்சாரம் மேலும் தீவிரப்படுத்தப்படும். இதை ஏற்கனவே மேற்குலக பிரச்சாரத்தில் அவதானிக்க முடிகிறது.
 
 
மேற்குலகின் இறுதிக் குறியிலக்காக உலகின் ஏனைய மக்கள் உள்ளார்கள். எதிர்காலத்தில் சிறீலங்கா அரசுக்கு சாதகமாகவோ எதிராகவோ மேற்குலகம் எடுக்கும் செயற்பாடுகளுக்கு இவர்களைத் தயார்படுத்தும் நோக்குடன் இவர்கள் குறிவைக்கப்படுவார்கள். மேற்குலகப் பிரச்சாரம் இத்தேவையையும் நிறைவு செய்கிறது.
 
ஆக, மேற்குலகப் பிரச்சாரத்தின் கடினமான குறியிலக்காக உள்ளவர்கள் சிங்களவர்களும் தமிழர்களுமே. ஏனைய மக்களின் இலங்கைத்தீவின் பிரச்சனை பற்றிய கருத்தை இலகுவாக எவ்வகையாகவும் மாற்றி அமைக்கும் வல்லமை மேற்குலக பிரச்சார இயந்திரத்திற்கு உண்டு. சிறீலங்கா அரசை மேற்குலக சார்பாக மாற்றுவதில் வெற்றி கிட்டினால் சிறீலங்கா அரச அமைப்பில் ஒருசில மாற்றங்களுடன் தமிழர்களின் இறைமை இலகுவாகப் புறக்கணிக்கப்படலாம். மாறாக சிறீலங்கா அரசு மேற்குலகின் நண்பனாக மறுத்தால் அல்லது தமிழர்கள் மேற்குலகின் பிரச்சாரத்திற்கு உள்வாங்கப்படுவதை எதிர்த்தால் அவர்களின் பிரச்சாரம் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கலாம்.
 
முடிவாக கடந்த வருடங்களில் தமிழர்களுக்கு அவர்களின் போராட்டத்தினூடாக கிடைத்துள்ள பட்டறிவை உபயோகித்து மேற்குலகப் பிரச்சாரத்திற்குள் உள்வாங்கப்படாமல் எதிர்த்து நிற்பதே இன்று அவர்கள் பின்பற்றக்கூடிய சிறந்த வழியாக உள்ளது. தமிழீழ கோரிக்கையிலும் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்பதிலும் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டம் இத்தகைய தமிழ் உறுதிக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இம்மாணவர்களும் தமது போராட்டத்தை குழப்பும் நோக்கத்துடன் நடக்கும் செயற்பாடுகளைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். தமிழர்கள் யாவருமே தமிழர்களின் உறுதியைக் குலைக்கும் இத்தகைய உள்நோக்குடனான மேற்குலகின் அல்லது இந்தியாவின் செயற்பாடுகளைப் பற்றிய எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டிய தேவை இருக்கிறது.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=8&contentid=b04e4759-806b-431b-9f09-3e246f5196c9

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.