Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாத் தோல்வியும், தமிழக எழுச்சியும் சுயநிர்ணய உரிமைப் பாதையை திறந்து விட்டிருக்கிறதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவாத் தோல்வியும், தமிழக எழுச்சியும் சுயநிர்ணய உரிமைப் பாதையை திறந்து விட்டிருக்கிறதா?
முத்துக்குமார்

பலரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த ஜெனிவாக்களம் பிசுபிசுத்து விட்டது. அமெரிக்காவும், இந்தியாவும் தமது இயலாத்தன்மையை பகிரங்கமாக வெளிப்படுத்திவிட்டன. ஜெனிவாவிற்கான அமெரிக்க தூதுவர் தங்களால் செய்யமுடிந்தது இவ்வளவுதான் என தமிழ் அரசியல் தலைவர் ஒருவருக்கு நேரடியாகவே கூறிவிட்டார். பிரேரணை நான்கு முறை வீரியக் குறைப்பிற்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றது. தமிழக மாணவர் போராட்டம் சற்று முன்னரே ஆரம்பிக்கப்பட்டிருந்தால் சிலவேளை பிரேரணை வீரியக் குறைப்பிற்கு உள்ளாகாமல் இருந்திருக்கலாம்.

உண்மையில் இந்த வருட ஜெனிவாக்களம் ஒரு பண்பு மாற்றத்தினையே வேண்டிநின்றது. அடிப்பது போன்று பிரமையை தோற்றுவித்துவிட்டு பின்னர் தடவுவதுவல்ல அந்த பண்புமாற்றம். தடவுவதிலிருந்து அடிப்பதை நோக்கி நகர்வது என்பதே அப்பண்புமாற்றம். ஆனால் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இவ்வாறான பண்புமாற்றத்திற்கான துணிவு வரவில்லை. சும்மா தடவுவதிலிருந்து வருடித் தடவுவது என்கின்ற மட்டத்திற்கு அவை கீழ் இறங்கியிருக்கின்றன. சென்ற வருடத்தைவிட பிரேரணை காரம் குறைந்தமை அதனையே வெளிப்படுத்துகின்றது.

பிரேரணை கடுமையாக இருக்கும் என்கின்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்களின் ஒரு பிரிவினரிடம் பெரிதாக இருக்கவில்லை. ஆனால் குறைந்தபட்சம் மனித உரிமை விவகாரங்களை கையாள்வதற்கான ஒரு சுயாதீனமான கண்காணிப்புப் பொறிமுறையாவது உருவாக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த மாற்றம் தாயகத்தில் ஒரு ஜனநாயக சூழலை உருவாக்கும் என்கின்ற நப்பாசையை கொடுத்திருந்தது.

ஆனால் சாதாரண மக்களின் நிலை வேறு. அவர்கள் உண்மையிலேயே வன்மையான பிரேரணை வரும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். தமிழ் ஊடகங்களும் யதார்த்தத்திற்கு அப்பால் அந்த நம்பிக்கையை ஊதிப் பெருப்பித்திருந்தன. இறுதியில் எல்லா எதிர்பார்ப்புகளும் பொய்யானபோது நம்பிக்கையின்மையின் உச்சத்திற்கு மக்கள் சென்றனர்.

மறுபக்கத்தில் சுயநிர்ணய உரிமைப்பாதையை ஏற்றுக்கொண்ட தமிழ் அரசியல் சக்திகள் மேலே வருவதற்கான பாதையையும் இப்போக்கு திறந்து விட்டிருக்கின்றது. 2009 மே 18 இன் பின்னர் சுயநிர்ணய உரிமைப்பாதைக்கான அரசியல் அடைக்கப்பட்டேயிருந்தது. மக்கள் மத்தியில் வலுவாக வளர்ச்சி கண்ட தோல்வி மனப்பான்மை, அதிகாரப் பகிர்வில் நம்பிக்கையை கொடுத்த இந்திய அமெரிக்க சக்திகளின் நகர்வுகள் என்பன சுயநிர்ணய உரிமைப்பாதை அடைக்கப்படுவதற்கு காரணங்களாக இருந்தன.

இலங்கை அரசு பூச்சிய அரசியலுக்கும் சுயநிர்ணய அரசியலுக்கும் மட்டும் தான் தமிழ் மக்களை விட்டு வைத்திருந்தது. ஒன்றில் அடிமையாக இரு அல்லது சுயநிர்ணய உரிமை அரசியலுக்காக போராடு என்பதே இதன் அர்த்தமாகும். இடைநிலை அரசியலை வெளிப்படுத்தும் அதிகாரப்பகிர்வு அரசியலுக்கான எந்த ஒரு வாய்ப்பையும் வழங்கியிருக்கவில்லை. தமிழர் அரசியல் வரலாறு முழுவதும் இப்போக்கே இடம்பெற்றது. இதனால் தான் இவ் அரசியலை முன்னெடுத்த அனைவரும் வரலாற்றில் தோற்றுப்போயினர். தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நோர்வே என இத் தோற்றுப் போனவர்களின் வரிசையில் இன்று புதிதாக இந்தியாவும், அமெரிக்காவும் சேர்ந்திருக்கின்றது.

இந்த போக்கிற்கு பிரதான காரணம் இந்த அரசியல் கேட்டுப் பெறுதலை அடிப்படையாக கொண்டது. அதாவது சிங்கள அரசிடம் தான் அதிகாரம் உள்ளது. தமிழர்கள் அதனை கேட்டுப் பெறுதல் என்பது இதன் அர்த்தமாகும். சிறிலங்கா அரசு என்பது ஒரு பேரினவாத அரசு. இந்த அரச உருவாக்கம் சிங்கள சமூக உருவாக்கத்திலிருந்து தோற்றம் பெற்றது. சிங்கள சமூக உருவாக்கத்தின் அடிப்படை இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் உரிய நாடு. ஏனையவர்கள் வாழ்ந்துவிட்டுப்போகலாம். ஆனால் உரிமைகள் எதுவும் கேட்க முடியாது என்பதே. இந்தக் கருத்துநிலை வரலாறு, ஐதீகம், மதம் என்பவற்றிலிருந்து கட்டியெழுப்பப்பட்டது.

இந் நிலையில் பேரினவாத அரசு அதிகாரத்தை ஒன்றுகுவித்து கெட்டியாக்குவதன் மூலம் உயிர்வாழ்கின்றது. அதிகாரத்தை பங்கிட்டுக் கொடுத்தால், அதன் பேரினவாத ஆதிக்க நிலை பலவீனப்பட்டு போய்விடும். அதனால் எந்தக் கட்டத்திலும் அது அதிகாரப் பங்கீட்டிற்கு தயாராக இருப்பதில்லை. ஆனால் சுயநிர்ணய உரிமைப்பாதை என்பது இதற்கு மாற்றானது. அது இருப்பதை அங்கீகரிப்பது. அதாவது இறைமை அதிகாரம் தமிழ் மக்களிடம் உள்ளது. அதனை அங்கிகரிக்கவேண்டும் என்று எனக் கூறுகின்ற பாதையாகும். இது சிங்களதேசமும், தமிழ்த்தேசமும் இணைந்து கூட்டு இறைமையை உருவாக்குவதற்கான பாதையையும் திறந்துவிடும்.

புலிகள் சுயநிர்ணய உரிமைக்கான அரசியலையே முன்னெடுத்தனர். அவர்களது இடைக்கால தீர்வு பற்றிய யோசனை அதனையே வெளிப்படுத்தியிருந்தது. ஆனால் பிராந்திய, சர்வதேச சக்திகளது நிலைப்பாடு வேறாக இருந்தது. அவற்றின் பூகோள நலன்களுக்கு முழு இலங்கையும் தேவையாக இருந்தமையால் சுயநிர்ணய உரிமைக்கான அரசியலை அவை ஏற்றுக்கொள்ளவில்லை. குறைந்த பட்சம் நடுநிலை வகிப்பதற்கும் அவை தயாராக இருக்கவில்லை.

மாறாக ஓர் இடைநிலை அரசியலுக்கு சிங்கள தேசத்தையும், தமிழ்த் தேசத்தையும் கொண்டு வரலாம் எனக் கருதின. தமிழ்த் தரப்பிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கான நம்பிக்கையை கொடுத்திருந்தது. சிங்கள தேசத்திலிருந்து மகிந்தர் அரசாங்கம் அதற்கான நம்பிக்கையை கொடுத்தது.

இந்த அரசியலைக் கொண்டு வருவதற்கு புலிகள் மட்டுமே ஒரு தடையெனக் கருதியமையினால் புலிகளை அழிப்பதற்கு சர்வதேச, பிராந்திய சக்திகள் ஒத்துழைத்தன. சாட்சியமில்லா யுத்தத்திற்கு துணைபோயின. யுத்தம் முடிந்தபின்னர் சுயநிர்ணய உரிமைப் பாதைக்கு அடிப்படையாகவுள்ள தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்கின்ற கோரிக்கைகளை தமிழ்த்தரப்பு கைவிடவேண்டும் என வலியுறுத்தின. சிங்களதேசத்திடம் இருக்கும் மேற்குலக எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு என்பன இதனால் மட்டுப்படுத்தப்படும் எனவும் கருதின.

ஆனால் நடந்ததோ வேறு. இலங்கையை மையமாக வைத்து வளர்ந்து வந்த அதிகாரச் சமநிலை மோசமாகச் சீர்குலைந்தது. ஜனாதிபதி மகிந்தர் ஒரு மன்னர் நிலைக்கு உயர்த்தப்பட்டார். பேரினவாத அதிகாரத்திற்கு தொல்லையாக இருந்த புலிகள் அழிக்கப்பட்டமையினால் சிங்கள மக்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றனர். தொல்லைகளற்ற பேரினவாத அதிகாரக் கட்டமைப்பு எழுச்சியடைந்தது. அது தமிழர் அரசியலை பூச்சிய நிலைக்குத் தள்ளுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கியது. தமிழர் தாயகத்தில் நிலப்பறிப்பு, வளப்பறிப்பு, கலாச்சாரப்பறிப்பு என வேலைத் திட்டங்கள் பெருகின.

போர் முடிவிற்கு வந்தபின்னர் தமிழர்களது மைய அரசியல் என்பது பூச்சிய அரசியலுக்கும், இடை நிலை அரசியலுக்கும் இடைப்பட்ட போராட்டமாகத்தான் இருந்தது. சர்வதேச ஆதிக்க சக்திகளின் ஆதரவுடன் இந்த அரசியலை நடத்தலாம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதியது. சர்வதேச ஆதிக்க சக்திகளும் அதற்கான நம்பிக்கையை கொடுத்தன. சம்பந்தன் சிங்கக்கொடியேற்றி இந்த அரசியலை தொடக்கிவைத்தார். தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்கின்ற கொள்கைகளையெல்லாம் கைவிட்டார்.

ஆனால் இறுதியில் எல்லாம் தோல்வியைத் தழுவின. மகிந்தரின் பூச்சிய அரசியல் நோக்கிய வேலைத்திட்டத்தினை இந்த சர்வதேச சக்திகளினாலும், பிராந்திய சக்திகளினாலும் தடுக்கமுடியவில்லை. சீனப்பூதம் ஒரு எல்லைக்குமேல் இச் சக்திகளின் செயற்பாடுகளையும் கட்டிப்போட்டது. ஜெனிவாக் களமும் சுற்றி சுற்றி ஓர் இடத்திலேயே நின்றது.

இந்த தோல்வி சுயநிர்ணய உரிமைச் செயற்பாட்டாளர்களை மீண்டும் களத்திற்கு கொண்டுவந்து விட்டிருக்கின்றது. இவர்களின் மீள்வருகைக்கு இதுவரை தடையாக இருந்தவை மக்களிடம் இருந்த தோல்வி மனப்பான்மையும், இடைநிலை அரசியலின் ஆதிக்கமும் தான். தோல்வி மனப்பான்மையே இது விடயத்தில் பலத்த தடையாக இருந்தது. தமிழக மாணவர்களின் எழுச்சி இந்த தோல்வி மனப்பான்மையை தற்போது வெகுவாக பலவீனப்படுத்தியிருக்கின்றது.

ஏற்கனவே தளத்திலும், புலத்திலும், தமிழகத்திலும் சிறு பிரிவினர் பல்வேறு அவமதிப்புகளுக்கு மத்தியிலும் சுயநிர்ணய அரசியலை முன்னெடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இடைநிலை அரசியல் சக்திகளின் ஆதிக்கமும், மக்களின் தோல்வி மனப்பான்மையையும் இவர்களை மேலே வரவிடவில்லை. ஆனாலும் இடைநிலை அரசியல்காரர்களுக்கு இச் சக்திகள் அடிக்கடி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தனர்.

தாயகத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும், சுயநிர்ணய அரசியலை முன்னெடுத்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியேறி இதற்கு வலுவான கொள்கைரீதியான தலைமையைக் கொடுத்தார். அவரது வெளியேற்றத்தை சம்பந்தன் தலைமையோ, பிராந்திய, சர்வதேச சக்திகளோ முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்த போராட்டங்களும், அவர்களுடைய அரசியல் நகர்வுகளும் இடைநிலை அரசியல் சக்திகளுக்கு பெருந்தொல்லைகளாக மாறின.

இத் தொல்லைகள் இரண்டு வகைகளில் வெளிப்பட்டன. தாயகத்தில் போராட்டங்கள் என்ற வகையிலும், சர்வதேச பொதுச்சந்திப்புகளில் வலுவான குறுக்கீடுகள் என்ற வகையிலும் வெளிப்பட்டன. தாயகத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே முதலில் போராட்டங்களை தொடக்கிவைத்தது. இதன் பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் போராட்டங்கள் நடத்தவேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டன.

சர்வதேச சந்திப்புக்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கொள்கைவழி நின்று பலமான குறுக்கீடுகளை மேற்கொண்டனர். இக்குறுக்கீடுகள் தமது நிலப்பாடுகளை நியாயப்படுத்த முடியாத அளவிற்கு கூட்டமைப்பை தள்ளின.

ஜெனிவா களத்திலும் இதுவே இடம்பெற்றது. ஜெனிவா களத்தில் பெரிதாக எதுவும் சொல்லவேண்டிய தேவை கூட்டமைப்பிற்கு இருக்கவில்லை. இதனால் அங்கு செல்வதற்கு பெரிய அக்கறையை காட்டவில்லை. அமெரிக்க, இந்திய சக்திகளின் நிகழ்ச்சி நிரல்களை அப்படியே ஏற்றுக் கொண்டமையினாலேயே அத்தேவை எழுந்திருக்கவில்லை. சென்ற தடவை தமிழ் மக்கள் வலியுறுத்திய போதும் கூட்டமைப்பு ஜெனிவா செல்லாமைக்கு இதுவே காரணம். தமிழ் மக்கள் பொறுப்புக்கூறலில் சர்வதேச விசாரணையையும், நல்லிணக்கத்தில் சுயநிர்ணயமுடைய அரசியல் தீர்வையும் வலியுறுத்தினர். ஆனால் சர்வதேச சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் அது இருக்கவில்லை. அவை இலங்கையில் ஆட்சி மாற்றத்தை மட்டும் விரும்பியமையினால் மென்மையான அழுத்தங்களை கொடுக்கவே விரும்பினர். இதனால் ஒரு தோற்றப்பாட்டு நிலையிலாவது பொறுப்புக் கூறுதலும், நல்லிணக்கமும் இருக்கவேண்டும் என அவை வற்புறுத்தின. உள்ளக விசாரனை, உள்ளக முயற்சியிலான தீர்வு என்கின்ற தீர்மானங்கள் அந்த வகையிலேயே வெளிவந்தன.

கூட்டமைப்பிற்கு இது சங்கடமான நிலை. ஜெனிவாவிற்கு சென்றால் மக்கள் விருப்பங்களை வெளிப்படுத்தவேணடும். ஆனால் அந்த மக்கள் விருப்பங்கள் சர்வதேச சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு முரணானவை. எனவே ஜெனிவா செல்வதை தவிர்ப்பதைத் தவிர வேறு தெரிவு அதற்கு இருக்கவில்லை. எனினும் செல்லாமைக்கான விமர்சனங்கள் அதிகரித்தன. சுரேஸ் பிரேமச்சந்திரனும் அதனை முன்வைத்தபோது கூட்டமைப்பின் தலைமைக்கு மக்களின் முன்னால நெளிய வேண்டிய நிலை எற்பட்டது.

இந்தத் தடவை மக்களின் விமர்சனங்களுக்கு அஞ்சியே கூட்டமைப்பின் ஒரு பிரிவினர் ஜெனிவா சென்றனர். அதிலும் சர்வதேசமட்டத்தில் தாக்கம் செலுத்தக்கூடிய சம்பந்தன் செல்லவில்லை. சுரேஸ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சிறீதரன், அரியநேந்திரன், யோகேஸ்வரன் ஆகியோரே சென்றனர். இவர்களில் மாவையும், செல்வமும், அரியநேந்திரனும், யோகேஸ்வரனும் மனித உரிமைகள் பேரவையை எட்டியே பார்க்கவில்லை. சுரேஸ் பிரேமச்சந்திரனும், சிறீதரனும் மட்டுமே சென்றனர். சுமந்திரன் சிறிது நேரம் மட்டும் தலைகாட்டிவிட்டு சென்று விட்டார்.

மனித உரிமைகள் பேரவையில் பேசுவதற்கான வாய்ப்பு இவர்களுக்கு கிடைக்கவில்லை. அரசு சாராத அமைப்புக்கள் நடாத்தும் சிறிய கூட்டங்களில் பேசுவதற்கான வாய்ப்பே இவர்களுக்குக் கிடைத்தது. சுரேஷ் பிரேமச்சந்திரனும், சுமந்திரனும், சிறீதரனும் பேசினர். சிறிதரன் தன்னுடைய பிரச்சினைகளை மட்டும் பேசினார். சுமந்திரனின் பேச்சு வழமைபோன்றிருந்தது. சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பக்களை தொகுத்துக் கூறினார். சிறீதரன் இரண்டுநாள் மட்டுமே வந்தார். சுரேஷ் பிரேமச்சந்திரன் 05ஆம் திகதி வரை சமூகமளித்தார். அதற்கு பின்னர் கூட்டமைப்பினர் எவரினதும் தலைக்கறுப்பையே ஜெனிவாவில் காணவில்லை.

ஜெனிவாவில் நின்ற காலத்திலும் சர்வதேச ராஜதந்திரிகளை சந்தித்து பேசுவதில் இவர்கள் அக்கறை காட்டவில்லை. அவ்வாறு சந்தித்து பேசுவதற்கு இவர்களுக்கு விடயங்களும் பெரிதாக இருக்கவில்லை. சர்வதேச நிகழ்ச்சிநிரல் இவர்களை கட்டிப்போட்டிருந்தது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாடு இதற்கு மாறாக இருந்தது. அவர்களுடைய இந்த செயற்பாடுகளை கூட்டமைப்பினர் அறவே எதிர்பார்க்கவில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாருக்கு மட்டும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டங்களில் பங்குபற்றுவதற்கும், பேசுவதற்கும் அனுமதி கிடைத்தது. அவர் இதனை மிகவும் வினைத்திறனுடன் பயன்படுத்திக்கொண்டார். முக்கியமான இராஜதந்திரிகள் அனைவரையும் சந்தித்து சர்வதேச விசாரணை, இடைக்கால நிர்வாகம் என்பவற்றை வலியுறுத்திக் கூறினார். ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட பிரேரணையால் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மைகளும் கிடைக்கப்போவதில்லை என அடித்துக் கூறினார். குறிப்பாக பிரேரணையை கொண்டுவந்த ஜெனிவாவிற்கான அமெரிக்க தூதுவரிடமும் வலியுறுத்திக் கூறினார். பல்வேறு இராஜதந்திரிகளுடன் பலத்த வாதப்பிரதிவாதங்களிலும் இவர் ஈடுபட்டார். வளைந்து, நெளிந்து பேசும் நிலையில் அவர் இருக்கவில்லை.

மனித உரிமைகள் பேரவையில் கிடைத்த பேசும் சந்தர்ப்பத்தையும் அவர் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். இங்கும் சர்வதேச விசாரணையையும், இடைக்கால நிர்வாகத்தையுமே வலியுறுத்திப் பேசினார். இந்தச் செயற்பாடுகள் மூலம் ஜெனிவா பிரேரணையை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் வலிமையாகப் பதிந்தார்.

ஜெனிவாவில் இருந்து தாயகம் திரும்பியதும் ஊடகவியலாளர் மாநாட்டினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பகிரங்கமாகக் கூட்டியது. அதில் ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நிராகரித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இவ் அறிவிப்பு சங்கடமான நிலையைத் தோற்றுவித்தது. சம்பந்தனும், சுமந்திரனும் பதறியடித்துக் கொண்டு ஜெனிவா பிரேரணையை வரவேற்பதாக அறிக்கை விட்டனர். இந்த அறிக்கையை விடாவிட்டால் எஜமான்களின் முகச்சுழிப்பிற்கு கூட்டமைப்புத் தலைமை ஆளாகவேண்டி நேர்ந்திருக்கும். தமிழத் தேசிய மக்கள் முன்னணி சர்வதேச சக்திகளிலோ, பிராந்திய சக்திகளிலோ கூட்டமைப்பை போல தங்கியிருக்கவில்லை. அதனால் சுயாதீனமாக கருத்துரைக்கவும், நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அவர்களால் முடிகின்றது.

தமிழகத்தில் இந்தத் தடவையேற்பட்ட மாணவர் எழுச்சி எவரும் எதிர்பார்க்காத எழுச்சியாகும். மத்திய ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, தமிழக அரசியல்வாதிகளும் இவ் எழுச்சியினால் ஆடிப்போயுள்ளனர். இது ஒருவகையில் அரபுலக எழுச்சியைப் போன்றது. புதிய தொடர்பாடல் தொழில்நுட்பங்கள் இதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மாணவர்கள் கொடுத்த ஊக்கம் தமிழகத்தின் பல்வேறு பிரிவினரையும் போராட வைத்திருக்கின்றது. திரைப்படத் துறையினர் கூட இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை.

இதுவரை காலமும் தமிழக அரசியல்வாதிகளின் கைகளிலேயே ஈழ ஆதரவு அரசியல் இருந்தது. தற்போது இதனை பொதுமக்கள் கையில் எடுத்திருக்கின்றனர். இது தமிழக அரசியலில் ஏற்பட்ட முக்கியமான பண்பு மாற்றமாகும். அரசியல்வாதிகளுக்கு மக்களின் பின்னால் இழுபட்டுச் செல்வதைத் தவிர வேறு தெரிவு இல்லை.

ஜெயலலிதா உடனடியாகவே அதற்கான பிரதிபலிப்பைக் காட்டினார். வலுவான சட்டசபைத் தீர்மானங்களை அவர் வெளிக்கொணர்ந்தார். இது ஒருவகையில் 1977ல் இடம்பெற்ற தமிழர் அரசியலைப் போன்றது. அக்காலப் பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி இளைஞர் எழுச்சிக்கு முகங்கொடுக்க முடியாமல் அவர்களுடைய கோரிக்கைகளையே தமது கோரிக்கைகளாக ஏற்றுக்கொண்டனர்.

இன்று தமிழர் அரசியலில் ஏற்பட்ட மிகப்பெரிய பண்புமாற்றம் 'உலகத்தழிழர்' என்ற பொது அடையாளம் வளர்ச்சி பெற்று வருகின்றமையாகும். இந்தப் பொது அடையாளத்திற்கு அடிப்படையாக இருந்தது ஈழத்தமிழர் விவகாரமே.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த பண்பு மாற்றங்களை சரிவர அடையாளங்கண்டு முன்னேறுவதே தமிழ்த்தேசிய சக்திகளுக்கு இன்றுள்ள கடமையாகும். வரலாறு தந்த இந்த சந்தர்ப்பத்தை ஒழுங்காகப் பயன்படுத்தாது விட்டால் வரலாறு இவர்களை ஒருபோதும் மன்னிக்காது.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=3de89171-f789-471d-a1a4-31b81f8b0394

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஜெனிவாத் தோல்வியும், தமிழக எழுச்சியும் சுயநிர்ணய உரிமைப் பாதையை திறந்து விட்டிருக்கிறதா?"

தலைப்பே பிழை ஜெனீவா வெற்றியும் எண்டு வந்திருக்க வேணும் அதால மேற்கொண்டு படிக்க விருப்பமில்ல..... :mellow:

 

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவாவிற்குச் சென்ற தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் ஒவ்வொருவராக 

நாலாம் மாடிக்கு அழைக்கப்படலாம் .விசாரணை என்ற பெயரில் அசுறுத்தப்படலாம்.

 

அடுத்த அமர்வில் தமிழ்த்தேசிய கட்சிகள் என்ற போர்வையில்

மகிந்த ஒட்டுக்குழுக்களை  ஜெனீவாவிற்கு அனுப்ப முயற்சிக்கலாம் .

 

"ஜெனிவாத் தோல்வியும், தமிழக எழுச்சியும் சுயநிர்ணய உரிமைப் பாதையை திறந்து விட்டிருக்கிறதா?"

தலைப்பே பிழை ஜெனீவா வெற்றியும் எண்டு வந்திருக்க வேணும் அதால மேற்கொண்டு படிக்க விருப்பமில்ல..... :mellow:

 

அதே பிரச்சணையாலேயே கட்டுரையை பொங்குதமிழில் கண்ட போது வாசிக்காமல் தவிர்த்திருந்தேன். இபோட்ஹூதான் படித்தேன். பிரேரணை நீர்த்திருக்கலாம், ஆனால் அதை தோல்வி என அழைக்க முயல்வது பிரச்சாரமாகத்தான் படுகிறது.

 

பதவியில் இல்லாத பொன்னம்பலத்தை விழுத்தவேண்டிய தேவை அரசுக்கு குறைவு. அது முதல் கண் வைப்பது போன தடவை ஐ.நா போன சிறீதரன் மீதே. அரசு சிறிதரனை விழுத்தி அதில் தனது ஆள் ஒருவரை நியமிக்க முயல்கிறது. இதனால் சிறீதரன் துன்புறுத்தப்பட போவது மட்டுமல்ல, தமிழரின் ஒரு தொகுதியும் இழக்கப்பட போகிறது. இவ்வளவும் ஆரம்பமானது கூட்டமைப்பு ஜெனிவா போனால் இனக்கலவரத்தை கொண்டுவருவேன் என மகிந்தா மிரட்டிய பின்னரும் சிறீதரன் அங்கு போனதலாகும்.

 

இந்த உண்மைகளை மறைக்கும் கட்டுரையாளர் உண்மையில் தேசிய வாதத்தை ஆதரிக்கிறாரா அல்லது கூட்டமைபை விழுத்த அரசாங்கத்திற்கு துணை போவதற்கு இப்படி நடிக்கிறாரா என்பது சந்தேகமாக இருக்கிறது. போனமுறை கூட்டமைப்போடு இணைந்தவர்களுக்கு இந்த இடம் கொடுக்கப்பட்டதால் இந்த முறை அது தேசிய மக்கள் முன்னணியிற்கு போனது. இரண்டு தடவையும் தமிழ் மக்கள் அவர்களுக்கு கிடைத்த சந்தர்ப்பமாக பார்க்கிறார்களே அல்லாமல் கட்டுரையாளருடன் சேர்ந்து பிரிவினை வாதமாக பார்க்கவில்லை.

 

எவ்வளவு துள்ளிக்குதிச்சாலும் அமெரிக்கா ஒரு பிரேரணையை கொண்டுவருவதால்த்தான் யாரும் அங்கு போக முடிகிறது. எனவே அமெரிக்க எஜமானை விட்டால் கஜேந்திரனும் அங்கு போயிருந்திருக்க மாட்டார். முட்டாள் தனமாக வீரம் காட்டாமல் மனமாற்றம் காட்டும் மேற்குநாடுகளை இறுக்கிப் பிடித்து தீர்வை கொண்டுவர கடமைப்பட வைக்க வேண்டும்.

 

கவனிக்க வேண்டியது, ஆரம்பத்தில் பிரேரணை கடுமையாக இருந்தது. 30 நாடுகளுக்கு மேல் ஆதரவு கொடுத்தார்கள். முடிவில் பிரேரணை நீர்க்கப்பட்டிருந்தது.  ஆக 25 நாடுகள் ஆதரவு கொடுத்திருந்தார்கள். எனவே தமிழ் மக்கள் பூச்சியத்திலிருந்து முடிவிலியிற்கு பாய்ந்துவிட்டார்கள் என்ற மாயைக்  கொண்டாட்டம் உபயோகமில்லாதது. எதற்காக கஜேநிதிரகுமாரும், பல தமிழ் அமைப்புக்களும், மற்றும் NGO களூம் தொடர்ந்து பிரச்சாரம் செய்து முடிய பிரேரணையும் குறுகி ஆதரவும் குறுகியது என்பதை ஆராய்ந்து, வரும் செப்டெம்பர், மார்சில் அதை திருத்த முயலவேண்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

எண்பதுகளின் ஆரம்பம் வரை இலங்கையில்  தமிழர்களுக்கு எப்படியான அநீதிகள்

நடைபெறுகின்றன எவ்வாறு தமிழினம் அங்கு ஒதுக்காப்பட்டு வருகின்றது எத்தனை ஆயிரம்

தமிழர்களின் கல்வியைச் சிங்களம் சிதைத்தது எனத் தெரியாமல் இருந்த மேற்குலக அரசுகளுக்கும்  மேற்குலக மக்களிற்கும்இன்று  ஓரளவிற்காவது தெரிய வைத்தது புலம்பெயர்ந்த தமிழர்களும் விடுதலைப்புலிகளும் தான் .

 

அந்த வகையில்ஜெனீவாவில்  சிறிலங்காவிற்கு எதிராகக் கொண்டுவரப்படும் ஒவ்வொரு

பிரேரணையும் தமிழர்களுக்கான தீர்வை அடையவைக்கும் படிக்கற்களே.

 

ஒவ்வொருமுறையும் சிங்களம் தமிழர்களின் பிரச்சனையில் சர்வதேசத்திடம் மண்டியிடுவதும்

தமிழர்களுக்கான, அவர்களுடைய தீர்வை நோக்கிய  வெற்றிப்படிகளே    

 

தமிழர்கள் இங்கு இன்னும் தோற்கவில்லை என்பது முக்கியமாகக் கவனிக்கவேண்டியது ஒன்று

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.