Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்கிலீக்ஸ் - அம்பலமாகும் இரட்டை வேடங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிலீக்ஸ் - அம்பலமாகும் இரட்டை வேடங்கள்
சந்திர பிரவீண் குமார்


1940களில் லக்ஷ்மிகாந்தன் என்ற பத்திரிகையாளர் சினிக்கூத்து என்ற பத்திரிகையை நடத்தி வந்தார். அதில் திரைப்படங்கள் பற்றிய செய்திகள் மட்டுமல்லாது நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய அவதூறான செய்திகளை வெளியிட்டதால் பத்திரிகை தடை செய்யப்பட்டது. ஆனால் அவர் அசராமல் ஹிந்துநேசன் என்ற பத்திரிக்கையைத் துவங்கி அதில் நடிகர்கள் மட்டுமல்லாது அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் பற்றி விமர்சனம் செய்தார். இறுதியில் லக்ஷ்மிகாந்தன் கொல்லப்பட்டார். அவரது கொலை வழக்கு விசாரிக்கப்பட்டு அந்த நாளைய நடிகர்கள் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோருக்கு நாடு கடத்தும் தண்டனை வழங்கப்பட்டது. கடைசியில் அவர்கள் நிரபராதிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலையானார்கள். ஆனால் இரண்டு மாபெரும் கலைஞர்களின் தொழில் வாழ்க்கை போனது போனதுதான்.

 

சரித்திரம் காட்டும் இந்தச் சம்பவம் தற்போதும் நடக்கிறது. ஆனால் இதன் எல்லைகள் விரிவானவை. எதிரிகளும் அதிகம். விக்கிலீக்ஸ் என்னும் இணையதளம் அம்பலப்படுத்தும் விஷயங்கள் உலகம் முழுவதிலும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. இதன் அதிபர் ஜூலியன் அசாஞ்சேயின் மீது பலருக்குக் கொலை வெறி ஏற்படும் அளவுக்கு இந்த அம்பலங்கள் பலரது மானத்தை வாங்குகின்றன.

 

'உலக தாதா' அமெரிக்காவின் தகிடுதத்தங்கள் முதல் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி தேர்தலில் வெற்றிபெறக் கோடிக்கணக்கில் பணம் செலவழித்தது வரை பல செய்திகளும் இதில் கிடைக்கின்றன. அதிகாரத்தில் இருப்பவர்களை முகம் சிவக்க வைக்கும் இந்தப் பின் நவீன கால லக்ஷ்மிகாந்தன் மீது அவ்வளவு சுலபமாகக் கைவைத்துவிட முடியாது. காரணம், அசாஞ்சே ஆவணங்களின் ஆதாரங்களுடன் குற்றங்களைச் சுமத்துகிறார். விக்கிலீக்ஸுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளே எதிரிகளாக இருக்கும் போதிலும், அசாஞ்சேவை யாராலும் தீர்த்துக்கட்ட முடியவில்லை. அவர் மீதும், நிறுவனத்தின் மீதும் சட்டபூர்வமான போரை மட்டுமே தொடுக்க முடிகிறது.

 

உலக நாடுகளிடையே விக்கிலீக்ஸ் ஏற்படுத்தும் அதிர்வலைகள் கொஞ்ச நஞ்சமல்ல. 1940களைப் போன்று உலகப் போர்களை சுலபமாக உண்டாக்கும் சூழல் தற்போது இல்லை. ஆனால் கடந்த 65 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளிடையே ஏராளமான பனிப்போர்கள் நடந்துவருகின்றன. அனைத்து நாடுகளிலும் உள்ள உள்நாட்டுக் குழப்பங்களும் அரசியல் சமாளிப்புகளும் குறித்த தகவல்கள் இந்த வலைதளத்தில் நிரம்பி வழிகின்றன. இந்தச் செய்திகள் பல்வேறு நாடுகளின் இரட்டை நிலைகளை அமல்படுத்துவதுதான் பிரச்சினை. உலக நாடுகள் பலவும் பிரச்சினைகளை அமுக்கும் விதங்கள் சர்ச்சைக்கு உரியவை. ஆனால் இவை இதுவரை வெளிவந்ததில்லை. இப்போது வெளியாகும்போது எரிச்சல் ஏற்படத்தானே செய்யும்?

 

இந்த வலைத்தளத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருந்தாலும் இதுவரை வெளிப்படையாக எதுவும் செய்ய முடியவில்லை. உலக நாடுகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டும் வேலையை விக்கிலீக்ஸ் தொடந்து செய்துவருகிறது. பாலியல் பலாத்கார வழக்கொன்றில் ஜூலியன் அசாஞ்சே கைது செய்யப்பட்டார். அதற்கு மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. ஒருமுறை விக்கிலீக்ஸை முடக்கியும் பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை.

 

சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் மக்களின் அனைத்து விவரங்களையும் சேகரிக்கும் 'ஆதார் அட்டை'யைப் பற்றி ஒருவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டபோது ’அதி ரகசியம்’ என்று தகவல் மறுக்கப்பட்டது. ஆனால் அதன் விவரங்கள் விக்கிலீக்சில் வெளியிடப்பட்டபோது உலகம் சிரித்தது. அதி ரகசியமான தகவல்களுக்கே இந்தக் கதி என்றால் மற்ற விஷயங்கள்? நாட்டின் பாதுகாப்பு குறித்த தகவல்களுக்கும் இதே நிலைதானே என்ற அச்சம் கிளம்பியது.

 

அண்மையில் அம்பலமான சில விஷயங்கள் இந்திய அரசியலில் பல விதமான தாக்கங்களை ஏற்படுத்திவருகின்றன. 1970களில் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது ஸ்வீடன் நாட்டில் இருந்து ஜெட் விமானங்கள் வாங்கப்பட்டன. அப்போது பைலட்டாக இருந்த ராஜீவ் காந்தி, ஸ்வீடன் நிறுவனத்துக்கு இடைத்தரகராகச் செயல்பட்டார் என்று விக்கிலீக்ஸ் செய்தி கூறியது. இந்தச் செய்தி வெளியானதும், இந்திய நாடாளுமன்றம் ஸ்தம்பித்தது. இந்தக் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் அரசு பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரின. 2009 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து, காங்கிரஸ் அமைச்சரவை மீண்டும் பொறுப்பேற்றபோது பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக அறிவிக்கப்பட்டார். அதுபற்றி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கவலை தெரிவித்ததாக வந்த செய்தியும், சஞ்சய் காந்தி மரணம் பற்றிய தகவலும் காங்கிரஸ் கட்சிக்குத் தலைவலியை ஏற்படுத்தின.

 

2008இல் பாராளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம், மணிசங்கர் ஐயர் பெட்ரோலிய அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட பிரச்சினை என்று அனைத்தையும் கிளறுகிறது. ஸ்விஸ் நாட்டு வங்கிகளில் இந்திய பணம் 67 லட்சம் கோடி ரூபாய் என்ற திடுக்கிடும் தகவலும் அவற்றில் அடக்கம்.

 

விக்கிலீக்ஸ் எதிர்க்கட்சிகளையும் விடவில்லை. அமெரிக்க எதிர்ப்பு விஷயங்களில் பா.ஜ.க. இரட்டை நிலை எடுப்பதாகச் செய்தி வெளியிட்டது. பிரகாஷ் காரத்தும், மாயாவதியும்கூடத் தப்பவில்லை. 'விக்கிலீக்ஸ் அதிபர் மனநலம் பாதிக்கப்பட்டவர்' என்று மாயாவதி பகிரங்கமாகவே குற்றம் சுமத்தினார்.

 

இந்த வலைத்தளத்தில் இந்தியாவுக்குச் சாதகமான அம்சங்களும் உண்டு. மும்பை தாக்குதல் சம்பவம் உட்பட இந்தியாவில் நடக்கும் பல குண்டுவெடிப்புகளுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யின் சதியே காரணம் என்று ஆதாரத்துடன் அம்பலப்படுத்துகிறது. ஒசாமாவின் மகன் பாகிஸ்தானில் தங்கியிருந்தது, அமெரிக்காவிற்கு யுரேனியம் தர மறுத்தது, அணுகுண்டு போடுவதாக இந்தியாவை மிரட்டியது, காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஏற்படுத்துவது என்று பல்வேறு செய்திகளையும் வெளியிட்டு பாகிஸ்தானை சங்கடத்தில் மூழ்கடிக்கிறது.

 

இலங்கை பிரச்சினையையும் விக்கிலீக்ஸ் விட்டுவைக்கவில்லை. இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியபோது ராணுவத்தினர் அங்கு நாசத்தை ஏற்படுத்தினார்கள். அதற்கு ஈடாக 50 லட்சம் ரூபாயை விடுதலைப் புலிகளுக்கு இந்திய அரசு வழங்கியது என்று இந்த வலைத்தளம் கூறுகிறது. ஈழத் தமிழர்கள் விஷயத்தில் தற்போது அதீத அக்கறை செலுத்தி வரும் ஜெயலலிதா, ஒரு காலத்தில் தமிழகத்தில் விடுதலை புலிகள் நுழைய விடாமல் நெருக்கடி கொடுத்ததை ஆவணப்படுத்துகிறது.

 

இந்த உலக மகா செய்தி ஊடகம் அதிகம் ஆட்டிப் படைப்பது அமெரிக்காவைத்தான். விக்கிலீக்ஸின் பெரும்பாலான தகவல்கள் அந்த நாட்டையே குறி வைத்துள்ளன. உலக நாடுகள் பலவற்றிலும் அமெரிக்கா ஏற்படுத்திய குழப்பங்களை இவை வெளிச்சம் போடுகின்றன. ஈராக் யுத்தத்தில் 66 ஆயிரம் பேர் பலியானது, இந்திய மாணவர்களுக்கு விசா அளிப்பதில் முறைகேடு, பல உலக நாடுகளை மிரட்டிப் பணிய வைப்பது, இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் இரட்டை நிலையைக் கடைப்பிடிப்பது என்று அனைத்தையும் இந்த வலைத்தளம் கேள்விக்குள்ளாக்குகிறது. அதிமுக்கிய ராணுவ ரகசியங்கள் இவர்களுக்கு எப்படிப் போகின்றன என்று ஒபாமாவின் எதிர்ப்பாளர்கள் அவரைத் துளைத்தெடுக்கிறார்கள்.

 

இந்த வலைத்தளத்துக்கு உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிருபர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தகவல்களைத் திரட்டும் பாணியே அலாதியானது. பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் அவர்கள் இருக்கும் நாடுகளைப் பற்றிய பல்வேறு தகவல்களைத் திரட்டுகின்றன. அந்தத் தூதரகங்களில் பணியாளர்களாகச் சேரும் விக்கிலீக்ஸ் நிருபர்கள், அங்கு நம்பிக்கைக்கு உரியவர்களாகப் பழகி இந்த தகவல்களைச் சேகரிக்கிறார்கள். இப்போது தங்களது தூதரகங்களில் யார், யார் விக்கிலீக்ஸ் நிருபர்கள் என்ற சோதனையை அமெரிக்கா மேற்கொண்டுவருகிறது. மேலும் இந்தச் செய்திகள் தூதரக அதிகாரிகள் மூலம் கிடைப்பதாகச் சொல்லப்படுவதால், 'மற்ற நாடுகளின் உள்விவகாரங்களின் அமெரிக்கா எப்படி தலையிடலாம்' என்ற செய்தியையும் அமெரிக்கா சமாளிக்க வேண்டியுள்ளது.

 

இவ்வளவு பிரச்சினைகளையும் கிளறும் விக்கிலீக்ஸ் மீதும் புகார் வராமல் இல்லை. உலகம் முழுவதும் உள்ள விக்கிலீக்ஸ் நிருபர்கள் அரசு அதிகாரிகளை மிரட்டித் தகவல்களைத் திரட்டுவதாக அமெரிக்கா கூறுகிறது. ஏதாவது ஒரு காரணம் சொல்லி வலைத்தளத்தைத் தடை செய்தால் வேறொரு பெயரில் முளைக்கிறது. இவ்வளவு வேட்டைகளை நடத்தும் விக்கிலீக்ஸ் நிர்வாகம், தனது ஊழியர்களை நடத்துவதில் மனித உரிமை மீறல் இருக்கிறது என்று டிஸ்கவரி சேனல் ஆவணப் படமொன்றைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. உளவு பார்த்த குற்றத்தின் கீழ் விக்கிலீக்ஸின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள், இதைத் தங்கள் நாடுகளில் தடை செய்துள்ளன.

 

ஆனாலும் இந்த வலைதளத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பெருகி வருகிறார்கள். ஜூலியன் அசாஞ்சே தனது சுயசரிதையை வெளியிடுவதற்கு ஒரு பிரிட்டன் நிறுவனம், சுமார் 7 கோடி ரூபாய் தர முன்வந்துள்ளதே இதற்கு உதாரணம்.

 

அமெரிக்கா தன் தூதரகங்கள் மூலம் உலக நாடுகளை உளவு பார்க்கிறது என்றால் அந்தத் தூதரகங்களில் விக்கிலீக்ஸ் ஊடிருவித் தகவல்களை அம்பலப்படுத்துகிறது. அமெரிக்கா திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக முழிக்கிறது. அரசுகளுக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் அரசியல்வாதிகளுக்கும் விபரீத விளையாட்டாக மாறிவரும் இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் சாதாரண மக்களைப் பொறுத்தவரை முக்கியமான ஆட்டமாக இருக்கிறது. மோசடிகள், முறைகேடுகள் குறித்த உண்மைகள் யாரைப் பற்றியவையாக இருந்தாலும் எவ்வளவு கசப்பானவையாக இருந்தாலும் அவை வெளிவந்தே ஆக வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை. அதே சமயம் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கக்கூடிய அம்பலங்கள் பற்றிய கவலைகள் நியாயமானவை. ஆனால் அம்பலமாவது தகவல்கள் மட்டுமல்ல, அந்தத் தகவல்களைப் பாதுகாக்க வேண்டிய அமைப்புகளின் ஓட்டைகளும்கூடத்தான். எனவே அம்பலங்களைப் பற்றி அலட்டிக்கொள்வதை விடவும் முக்கியமான தகவல்கள் கசியாத வண்ணம் நிர்வாக அமைப்பின் ஓட்டைகளை அடைப்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும்.

 

அடுத்து யார் தலை உருளப்போகிறதோ என்று உலகம் முழுவதும் உள்ள அதிகார மையங்களின் தலைகள் கவலைப்படுவதும், இந்தத் தலைகளின் முகமூடிகளுக்குப் பின் உள்ள முகங்களை அறிந்துகொள்ள மக்களுக்கு வாய்ப்புக் கிட்டுவதும் இந்த அம்பலங்களின் முக்கியமான விளைவுகள். ஒவ்வொரு சாமானிய மனிதரையும் தகவல் சார்ந்து ஆற்றல் கூடியவராக உணரச் செய்வதே விக்கிலீக்ஸின் ஆகப் பெரிய பங்களிப்பு. அந்த வகையில் இது மக்களுக்கான ஊடகம் என்று தயங்காமல் சொல்லலாம்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=11&contentid=0a3bdda8-e3ba-43db-a4af-f43b80de8bb1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.