Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவும் அமெரிக்காவும் நமது வழிக்கு வரக்கூடிய காலம் உருவாகும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்தியாவும் அமெரிக்காவும் நமது வழிக்கு வரக்கூடிய காலம் உருவாகும்!

65537f4c-af01-4165-8ef9-9ebd44fcc4dc1.jp
நேர்கண்டவர் - சி.அ. யோதிலிங்கம்

 

வடக்கில் மாகாணசபைத் தேர்தல்கள் இடம்பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகும் பின்னணியிலும் 13வது திருத்தச்சட்டம் குறித்த விவாதங்கள் தமிழர் அரசியல் அரங்கில் தொடர்ச்சியாகவும் பரவலாகவும் இடம்பெற்றுவருகின்ற சூழ்நிலையிலும் இவை குறித்தும் ஜெனிவா தீர்மானங்களின் பின்னான அரசியல் சூழ்நிலைகள் குறித்தும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுடன் உரையாடினோம்.

தாயகத்தில் அரச வன்முறைகளுக்கு எதிரான அனைத்துப் போராட்டங்களிலும் முன்னணியில் செயற்பட்டுவரும் திரு கஜேந்திரகுமார், அரசியல் ரீதியான விவாதங்களிலும்கூட தனது ஆழமான கருத்துகளை தொடர்ச்சியாக முன்வைத்து வருபவர்.

தமிழர் அரசியல் சார்ந்த விவாதங்களின் தொடர்ச்சியாகவே கஜேந்திரகுமார் அவர்களின் இந்நேர்காணலும் அமைகிறது. ஜெனிவா தீர்மானம், 13வது அரசியல் திருத்தம், இந்திய அணுகுமுறை, தமிழக மாணவர் போராட்டம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்த அவரின் கருத்துகளை முழுமையாக இங்கே தருகிறோம்.

***

ஜெனிவா தீர்மானம் பலத்த ஏமாற்றத்தினைத் தந்துள்ளது என ஒரு கருத்து நிலவுகின்றது. இது பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?

ஜெனிவா தீர்மானம் வெறுமனவே ஏமாற்றத்தினை மட்டும் தரவில்லை. அது தமிழ் மக்களுக்கு மிகுந்த ஆபத்தைத் தரக்கூடியதாகவும் உள்ளது. இதனாலேயே நாம் அதனை நிராகரித்தோம். நாம் இந்த நிராகரிப்பு தீர்மானத்தை எடுப்பதற்கு பிரதானமாக மூன்று காரணங்கள் உண்டு.

முதலாவது காரணம், 2012ம் ஆண்டு தீர்மானத்தைப் போலவே மீண்டும் ஒரு தடவை ஸ்ரீலங்கா அரசாங்கத்தைப் பொறுப்புக்கூறும் உள்ளக விசாரணையை நடாத்துமாறு அது கேட்டுள்ளது. ஸ்ரீலங்கா அரசு இன்று மிகப்பெரும் இன அழிப்புக் குற்றவாளி. சர்வதேச சமூகமே இக் குற்றத்தை சுமத்தியுள்ளது. இந்நிலையில் அதே குற்றவாளியிடம் தன்னுடைய குற்றத்தைப் பற்றி விசாரிக்குமாறு கேட்பது இயற்கை நீதிக்கு முரணான விடயமாகும்.

ஒரு பேச்சுக்கு உள்ளக விசாரணையைப் பற்றி யோசித்தாலும் அவ்வாறான விசாரணையை நடாத்துவதற்கு பொலிஸ், நீதிமன்றம் என்கின்ற இரண்டு விடயங்கள் முக்கியமானவையாகும். இன்று இன அழிப்புக் குற்றவாளியாக இராணுவம் மட்டுமல்ல காவல்துறையும் இருக்கிறது. காவல்துறை குற்றவாளியல்ல என நாம் கருதினாலும் இன்று பாதுகாப்பு அமைச்சின் கீழ்தான் பொலிஸ் திணைக்களமும் உள்ளது. எனவே பொலிஸ் எவ்வளவு தூரம் சரியான விசாரணையை நடாத்தும் என்பது சந்தேகத்திற்குரியதே. அதன் விசாரணை கேளிக்கையாகவே அமையும்.

65537f4c-af01-4165-8ef9-9ebd44fcc4dc4.jp

நீதிமன்றத்தினைப் பொறுத்தவரை இன்று பிரதம நீதியரசராக பதவி வகிப்பவர் சென்ற வருடம் ஜெனிவாவில் ஸ்ரீலங்கா அரசினை தீவிரமாக நியாயப்படுத்தி செயற்பட்டவர் ஆவார். அப்போது அவர் சட்டமாஅதிபராக இருந்தார். எனவே அவர் தலைமை வகிக்கின்ற நீதிமன்றம் நேர்மையான விசாரணையை நடாத்தும் என எதிர்பார்க்க முடியாது.

உண்மையில் உள்ளக நிலைமைகளைப் பார்க்கின்றபோது உள்ளக விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை. இது அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்த விடயம். இதனை நன்றாக தெரிந்த பின்னரும் கூட ஜெனிவா பிரேரணை உள்ளக விசாரணையைக் கோரியிருப்பது இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட, தொடர்ந்து உள்ளாக்கப்பட்டு வருகின்ற தமிழ் மக்களை அவமானப்படுத்துவதாகவே அமையும்.

இரண்டாவது காரணம், இந்தத் தீர்மானம் சென்ற வருட தீர்மானத்தைப்போல நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான மையப்பொருளாக ஆக்கியுள்ளது. இத்தனைக்கும் நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கப்பட்டபோது சர்வதேச சமூகமே அதனை நிராகரித்திருந்தது. இந் நிராகரிப்பிற்கு பிரதானமாக பின்வரும் மூன்று காரணங்களை அது கூறியிருந்தது.

1. நல்லிணக்க ஆணைக்குழு உறுப்பினர்கள் வெளிப்படையாகவே அரசாங்கத்திற்கு சார்பானவர்கள்.

2. நல்லிணக்க ஆணைக்குழுவின் அதிகார எல்லைகள் மிகவும் குறுகியவையாகும்.

3. மக்கள் சுதந்திரமாக சாட்சியம் வழங்குவதற்கான பாதுகாப்பு சூழல் இல்லாமல் இருந்தது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு வருமாறு இலங்கை விரும்பிக் கேட்டபோதும் கூட சர்வதேச மன்னிப்புச்சபை, மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் போன்ற மனிதவுரிமை நிறுவனங்கள் புறக்கணித்திருந்தன. இவ்விசாரணை செயற்பாடுகளை ஒரு பம்மாத்து எனவும் விமர்சித்திருந்தன. தாயகத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இதனை புறக்கணித்திருந்தது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரான நாமும் புறக்கணித்திருந்தோம். பெரும்பான்மையான தமிழ் மக்களும் புறக்கணித்திருந்தனர். சாட்சியம் அளிக்கச் சென்றவர்களையும் கூட ஒழுங்காக சாட்சியமளிக்க விடாத நிலையும் இருந்தது. இவ்வாறு சர்வதேச சக்திகளாலும், தாயக சக்திகளினாலும் நிராகரிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினைத்தான் நல்லிணக்கத்திற்கு மையப்பொருளாகப் பயன்படுத்த வேண்டும் என ஜெனிவா பிரேரணை கோருகின்றது.

இதிலுள்ள ஆபத்தான விடயம் நல்ல பரிந்துரைகள் என சிலவற்றைக் காட்டினாலும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் அடிப்படையான அதன் இறுதி இலக்கு எந்தவொரு மாகாணமும் இனம் சார்ந்தவையாக இருக்கக் கூடாது என்பதாகும். அறிக்கையின் உண்மையான நோக்கம் முழு இலங்கையையும் சிங்களமயமாக்குவதே.

மூன்றாவது காரணம், 13வது திருத்தத்தினை ஜெனிவா பிரேரணை வரவேற்றுள்ளமையாகும். தமிழ் மக்களைப் பொறுத்தவரை இதுவும் மிகவும் ஆபத்தானது. தமிழ்த்தேசிய பிரச்சனைக்கு தீர்வாக 13வது திருத்தத்தினை முன்வைப்பதன் மூலம் அதற்குள் தமிழ் அரசியலை முடக்குவதற்கு முயற்சிக்கப்படுகின்றது. 13வது யாப்புப் திருத்தம் தமிழ் மக்களின் அபிலாசைகளைத் தீர்க்க எந்த வகையிலும் உதவப்போவதில்லை. 13வது திருத்தத்தின்படி மாகாணசபைகளுக்கு எந்தவித சுயாதீனமும் கிடையாது. மத்திய அரசில் தங்கியிருக்கும் நிலையே உண்டு. ஏற்கனவே நடைமுறையில் செயற்பட்ட வடகிழக்கு மாகாணசபையும், தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற கிழக்கு மாகாணசபையும் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. மத்திய அரசிடம் இருந்து வழுகி வருகின்ற அதிகாரங்கள் கூட ஆளுனரிடம் உள்ளதே தவிர மாகாண அமைச்சரவையிடம் ஒப்படைக்கப்படவில்லை. கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஒரு 'பீயோனை நியமிக்கின்ற அதிகாரம் கூட தனக்கு இல்லை' என ஒப்பாரி வைத்திருந்தார். அரசியல் ரீதியாக 13வது திருத்தம் தமிழ் மக்களின் இறைமையினையோ சுயநிர்ணய உரிமையினையோ கணக்கில் எடுத்துக்கொள்ளாத ஒன்றாகும்.

13வது திருத்தத்தை அமுல்படுத்தக் கூட அரசு பின்னடிக்கின்றதே. இது பற்றி என்ன கூறுகின்றீர்கள்?                                                                                           

 தமிழ் மக்கள் இது விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென்றே நான் கருதுகின்றேன். சிங்கள மக்கள் விரும்பவில்லை என்பதற்காக அதனை நல்லது என நினைக்கக் கூடாது. ஜெனிவா தீர்மானத்தை அரசாங்கம் எதிர்க்கின்றது என்பதற்காக அதனை தமிழ் மக்களுக்கு சார்பான விடயம் எனக் கருதக்கூடாது. எல்லா விடயங்களையும் தமிழ் மக்களின் நலன்களில் இருந்தே நாம் நோக்க வேண்டும்.

சாதாரண சிங்கள மக்கள் 13வது திருத்தத்தையும், மாகாணசபை முறையையும் நிராகரிப்பதற்கு காரணம் அவர்களிடம் ஆதிக்கம் செலுத்தும் இனவாதமே. இனவாதம் ஊட்டப்பட்ட சிங்கள மக்கள் இலங்கைத்தீவு சிங்கள மக்களுக்கு மட்டும் உரியது எனக் கருதுகின்றனர். இதனால் தோற்றப்பாட்டு நிலையில் கூட ஒரு தீர்வு தமிழ் மக்களுக்கு வழங்கப்படுவதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. தமிழ்மொழி விசேட மசோதா சட்டம் தொடக்கம் பண்டாரநாயக்காவின் பிராந்திய சபைகள், டட்லி சேனநாயக்காவின் மாவட்ட சபைகள், ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் மாவட்ட அபிவிருத்திச் சபைகள், இந்திய அனுசரணையில் உருவான மாகாண சபைகள் என எல்லாவற்றையும் எதிர்ப்பதற்கு இப்பச்சை இனவாதமே காரணமாகும்.

மகிந்தரின் அரசாங்கத்திற்கு 13வது திருத்தத்திற்குள் ஒன்றுமில்லை என நன்றாகத் தெரியும் எனினும் அவரது அரசாங்கமும் ஓர் இனவாத அரசாங்கம் தான். இதுவும் தோற்றப்பாட்டு நிலையிலுள்ள ஒரு தீர்வைக் கூட விரும்பவில்லை என்பதும் உண்மையே. எனினும் இவற்றிற்கு அப்பால் 13வது திருத்தத்தினை அது நிராகரிப்பதற்குக் காரணம். அது இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் தொங்கிக்கொண்டு இருக்கின்றமையே ஆகும். மகிந்தர் அரசாங்கத்தின் நோக்கம் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் இருக்கக்கூடிய இந்திய சார்பான பூகோள அரசியல் ஆதிக்கத்திலிருந்து இலங்கையை எப்படியாவது மீட்பதாகும். இதனை மேற்கொள்வதற்கு 13வது திருத்தத்தை இல்லாமல் செய்தல் வேண்டும். இதனூடாக இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை இல்லாமல் செய்யமுடியும். இங்கு நாம் தெளிவாக இருக்க வேண்டும். 13வது திருத்தத்தில் எதுவும் இல்லையாததால் சிங்களம் எதிர்க்கின்றது என்பதற்காக நாம் அதனை ஏற்கமுடியாது.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக இல்லாமல் செய்யும் நோக்கம் மகிந்தருக்கு இருக்கின்றது என நீங்கள் கருதுகின்றீர்களா?

ஆம், நிச்சயமாக

அப்படியானால் நீங்களும் அதனை எதிர்ப்பதன் மூலம் இலங்கை-இந்திய ஒப்பந்தம் இல்லாமல் போவதை விரும்புகின்றீர்களா?

நாம் ஒன்றை மிகத்தெளிவாகச் சொல்ல விரும்புகின்றோம். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்தியாவின் எதிரியல்ல. இந்தியாவை ஒருபோதும் நாம் எதிரியாக பார்க்கவுமில்லை. சர்வதேச நாடுகள் தங்கள் தங்கள் நலன்களின் அடிப்படையில் தான் வெளியுறவு விடயங்களில் செயற்படும் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். இது இந்தியாவிற்கு மட்டுமல்ல எல்லா நாடுகளுக்குமே பொருந்தும்.

இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் இலங்கை ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் ஆட்சியின் கீழ் அமெரிக்க ஆதிக்க வட்டத்திற்குள் விரும்பிச் செல்லத் தொடங்கியது. இந்தப் போக்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இலங்கையை இந்தியாவின் செல்வாக்கு மட்டத்திற்குள் கொண்டு வருவதற்கு இந்தியா முயன்றது. இதன் அடிப்படையிலேயே தமிழர் அரசியலை ஆதரித்ததோடு ஆயுதப் போராட்டத்திற்கும் உதவியது. இவற்றினூடாக இலங்கையரசின் இருப்பிற்கே ஆபத்தை உருவாக்கி இலங்கையைத் தனது செல்வாக்கு வட்டத்திற்குள் கொண்டு வந்தது. இந்த செல்வாக்கு வட்டத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் தான் இந்திய-இலங்கை ஒப்பந்தமாகும். இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்கள் பாதுகாக்கப்படும் என்ற உத்தரவாதங்களே ஒப்பந்தத்தின் இணைப்புக்களில் காணப்பட்டன.

தமிழ் மக்களினுடைய விடுதலைப் போராட்டங்களைப் பயன்படுத்தி தன்னுடைய நலன்களைப் பாதுகாத்துக் கொண்ட இந்தியா தமிழ் மக்களுக்கு எதுவும் கொடுக்காமல், ஆனால் கொடுக்கப்படுவதாகக் காட்டிக் கொண்டு, தமிழ் மக்களை சமாளிப்பதற்காகவே 13வது திருத்தத்தை கொண்டு வருவதற்குத் துணை நின்றது. இது விடயத்தில் எங்களுக்கு இருக்கின்ற கவலை தமிழர் அரசியலைப் பயன்படுத்தி தங்களது நலன்களைப் பாதுகாத்துக் கொண்ட இந்தியா தமிழ் மக்களை நடுத்தெருவில் விட்டுவிட்டதென்பதே.

எங்களுடைய நோக்கம் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை எதிர்ப்பதல்ல. மாறாக அரசியல் தீர்வு என்ற பெயரில் எம்மீது திணிக்கப்பட்ட 13வது திருத்தத்தினை அடியோடு நிராகரிப்பதே. இந்தியா தனது புவிசார் நலன்களைப் பேணுவதற்காக இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் உள்ளடக்கியிருக்கும் சரத்துக்கள் பற்றி எமக்கு கவலையில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு அவர்களை அழிவில் இருந்து பாதுகாக்கக் கூடியதான ஓர் தீர்வினை  இந்தியா பெற்றுத்தர வேண்டும், அதாவது தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான் எமது கோரிக்கை.

நீங்கள் இப்படிக் கூறினாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவா பிரேரணையை வரவேற்றிருப்பதோடு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை 13வது திருத்தம் என்பவற்றையும் ஆதரித்துள்ளதே.

இவை உண்மைதான். தமிழர்களுக்கு மிகவும் ஆபத்தான இவ்விடயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கென சொந்த நிகழ்ச்சிநிரல் எதுவும் கிடையாது. அது இந்தியாவினதும், அமெரிக்கா தலைமையிலான மேற்குலகினதும் நிகழ்ச்சி நிரல்களின்படியே இயங்குகின்றது. இதனால் தான் அதனை ஆதரிக்கின்றது.

தமிழ் மக்களின் நலன்களில் இருந்து கொண்டு இந்திய, மேற்குலக நிகழ்ச்சி நிரல்களை அணுக வேண்டுமே தவிர அவர்களின் நிகழ்ச்சி நிரல்களை தமிழ் மக்களிடம் விற்பதற்கு முனையக் கூடாது. தமிழ்த் தலைமையின் பொறுப்பும் அதுவல்ல.

நாம் இந்த விடயங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றோம். கூட்டமைப்புச் செல்லும் பாதையின் ஆபத்துக்களையும், விளைவுகளையும் தெளிவாக மக்களிடம் கூறி வருகின்றோம். இதற்குமேல் மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.

ஜெனிவா தீர்மானம் இப்படித்தான் நீர்த்துப் போகுமென முன்னரே நீங்கள் எதிர்பார்த்தீர்களா?

நாம் எதிர்பார்த்தே இருந்தோம். இலங்கையில் நல்லிணக்கத்தையும், பொறுப்புக் கூறுதலையும் கொண்டுவருவதற்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக இந்தியாவினதும், மேற்குலகத்தினதும் புவிசார் அரசியல் நலன்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையே இதுவாகும். தற்போது சிறீலங்காவிலுள்ள சீன சார்பு ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய அவசர தேவை இந்தியா மற்றும் மேற்குலகத்திற்கு ஏற்பட்டுள்ளது. அந்த ஆட்சியை இரண்டு வழிகளில் முடிவுக்குக் கொண்டுவரலாம் எனக் கருதுகின்றார்கள். ஒன்று சீன சார்பு ஆட்சியாளர்களுக்கு மிகுந்த நெருக்கடிகளை ஏற்படுத்தி சீன சார்பு போக்கினை கைவிடச் செய்து தம்மோடு உறவுகளை பலப்படுத்தச் செய்வது அல்லது நெருக்கடிகளை ஏற்படுத்தி சீன சார்பு ஆட்சியாளர்களை ஆட்சிப் பீடத்திலிருந்து அகற்றுவது.

அவ்வாறு அவை எதிர்பார்க்கும் நேச அரசாங்கத்திற்கு நாளை நெருக்கடிகள் வரக்கூடாது என்பதற்காக மோதலின் அடிப்படைக் காரணங்களைத் தீர்க்கக்கூடிய எந்தக் கடினமான சூழலையும் உருவாக்க அவை விரும்பவில்லை.

தமிழ் மக்களை தனியான தேசமாக சிங்களவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதே உண்மை. தமிழ்த் தேசத்தை அங்கிகரிப்பதாக சிங்களத் தலைவர் ஒருவர் கூறுவாரேயானால் சிங்கள மக்கள் அவரை நிராகரித்து விடுவார்கள். ஆனால் இனப் பிரச்சனைக்கான ஒரேயொரு தீர்வு தமிழ் மக்களை ஒரு தனியான தேசமாக அங்கிகரிப்பதுதான் என்பதையும் நாம் அறிவோம். மேற்குலகமும், இந்தியாவும் இதை அறியும். ஆனால் இதை அவர்கள் அதிகாரபூர்வ கொள்கையாக அங்கீகரிக்கமாட்டார்கள். அப்படி அங்கீகரித்தால் இலங்கையில் அவைகளால் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தவோ, தங்களுக்கு நேசமான அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவரவோ முடியாது.

சீனாவிற்கு ஆதரவான ஆனால் இந்திய அமெரிக்க நலன்களுக்கு எதிரான மகிந்த அரசாங்கத்தின் கொள்கைகளை சிங்கள மக்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இதனால் தங்களுக்கு ஆதரவான அரசாங்கத்தை இலங்கையில் ஆட்சிக்குக் கொண்டுவரமுடியாது எனும் உண்மை உணரப்படும் போதுதான் மேற்குலகும், இந்தியாவும் தமிழ்த் தேசியப் பிரச்சனையை காத்திரமாக அணுகும்.

இனப்படுகொலைக்கு ஆதாரங்களாக எவ்வளவோ நிரூபணங்கள் குவிந்த போதும் இப்படிப்பட்ட தீர்மானத்தை ஜெனீவாவில் அவை கொண்டுவந்தமைக்கு இதுவே காரணம். தமிழர்களின் துயரங்களை துடைப்பது என்பதன் பெயரிலேயே இதனை நிறைவேற்றியிருக்கின்றனர். இது மாபெரும் கொடுமை.

மற்றைய நாடுகளுக்கு சம்மதம் இல்லை என்பதால்தான் தீர்மானம் பலவீனப்படுத்தப்பட்டது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதமல்ல. உலகிலேயே மிகவும் வல்லமையான ஒரு நாடும், பிராந்தியத்தில் வலிமையான நாடும் நினைத்தால் மற்றைய நாடுகளை தங்கள் வழிக்குக் கொண்டுவருவது பிரச்சனையே அல்ல. ஆனால் துரதிஷ்டவசமாக அமெரிக்கா, இந்தியா, மேற்குலகம் ஆகிய மூன்றிற்குமே அத்தகைய உறுதியான எண்ணம் இருக்கவில்லை. கடுமையான தீர்மானம் அவற்றின் நலன்களுக்கு ஏற்றதாக இருக்காது என்பதே அதற்குக் காரணம்.

இந்தியாவும், மேற்குலகமும் ஏற்படுத்த நினைக்கும் ஆட்சிமாற்றம், தமிழ் மக்கள் விரும்பும் ஏதேனும் தீர்வைப் பெற்றுக்கொள்ள வழிவகுக்குமென நீங்கள் கருதுகின்றீர்களா?

ஆட்சிமாற்றம் ஏற்படுமென அவை கருதுகின்றன என்பது உண்மை. அதற்காக அவை மிகத் தீவிரமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன என்பதும் உண்மை. ஆனால் இலங்கையிலிருக்கும் இன்றைய அரசியல் சூழலில் ஒரு ஆட்சிமாற்றம் இடம்பெறுவதற்கு வாய்ப்புக்கள் உண்டென நாம் கருதவில்லை. காலாகாலமாக இலங்கை அரசின்(State policy) கொள்கையே இலங்கைத் தீவை முழுமையாக பௌத்த-சிங்கள மயப்படுத்துவது தான். காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்டகாலம் தொடக்கம் சிறீலங்காவின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பினையும் ஆட்சியாளர்கள் அதற்கே பயன்படுத்தினர். அதற்கேற்பவே அரசியல் யாப்பு மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டன. அரசு இயந்திரமும் அதற்கேற்ற வகையிலேயே உருவாக்கப்பட்டிருந்தது.

இடைக்காலத்தில் தமிழ் மக்களது விடுதலைப் போராட்டம் இப் பௌத்த-சிங்கள மயமாக்கத்திற்கு பெருந்தடையாக இருந்தது. தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டமையினால் அத்தடையும் நீங்கிவிட்டது. இதனால் அண்மைக்காலமாக முழுமையான சிங்களமயமாக்கல் செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. சிங்கள மக்களுக்கு இது நன்றாகத் தெரியும். இதனால் சிங்களமயமாக்கலை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு அதனை தீவிரத்துடன் மேற்கொள்ளும் ஒர் அரசாங்கத்தை வீழ்த்த சிங்களமக்கள் முனைவார்கள் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல.

இதைவிட எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இன்று மிகவும் பலவீனமான நிலையிலுள்ளது. போர் வெற்றி அக்கட்சியினை மிகவும் பலவீனப்படுத்திவிட்டது. கட்சிக்குள் உள்நெருக்கடி வேறு. மாற்றுத் தலைவர்களும் இரண்டாம் கட்டத் தலைவர்களும் அங்கு ஒதுக்கப்பட்டு பலவீனப்படுத்தப்பட்டுள்ளனர். இன்னுமொரு எதிர்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் நிலை மிகவும் பரிதாபகரமானது. அக்கட்சியின் இனவாதக் கொள்கையை மகிந்த அரசாங்கம் தனது கையில் எடுத்துள்ளதால் அக்கட்சி தனது கட்சிச் செயற்பாட்டிற்கு கொள்கையில்லாமல் உள்ளது. கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுகள் வேறு அதனை மிகவும் பலவீனப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இங்கு ஓர் ஆட்சி மாற்றம் என்பது நிகழ்வதற்கான வாய்ப்புக்கள் மிக மிகக் குறைவு என்பதே எம்முடைய கருத்தாகும்.

எனினும் இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம் இலங்கைத் தீவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்த் தேசத்திற்கு எதிராக பௌத்த-சிங்களமயமாக்கல் நடைபெறப்போவதே உண்மை. அது கட்சியின் தன்மைக்கேற்ப நேரடியாகவோ, மறைமுகமாகவோ மேற்கொள்ளப்படலாம். இந்நிலையில் தமிழ் தலைமைகள், தமிழ்த் தேசிய அரசியலை சிங்கள தேசியத்திற்குள் கரைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடாது, அதனை உயிர்ப்புடன் வைத்திருக்குப் போராட வேண்டும்.

சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதியினருக்கு, சிறீலங்கா அரசாங்கத்தை தமது வழிக்குக் கொண்டுவருவதற்கு தமிழ் அரசியலை பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இந்த நிலையை வாய்ப்பாகப் பயன்படுத்தி, தமிழ் தேசத்தைப் பாதுகாப்பதற்கு எத்தகைய அரசியல் நிலைப்பாடு அங்கீகரிக்கப்பட வேண்டுமோ அந்த நிலைப்பாட்டை, அந்த சர்வதேச சமூகத்தினர் ஏற்றுக்கொள்ளச் செய்யும் நிலையை உருவாக்க சகல வழிமுறைகளையும் கையாள வேண்டியது தமிழ்த் தலைமைகளது இன்றைய வரலாற்றுக் கடமையாகும். 

ஜெனிவாவில் தமிழ் மக்களின் நிலைநின்று நீங்களும் உங்கள் கட்சியினரும் கடுமையாக செயற்பட்டுள்ளீர்கள். அது பற்றி கொஞ்சம் விரிவாக கூறமுடியுமா?

சென்ற தடவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவாவிற்குச் சென்று எமது பக்க நியாயங்களை முன்வைக்கும் என நாம் எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அது நடைபெறவில்லை. இந்தத் தடவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வந்தால் என்ன, வராவிட்டால் என்ன நாங்கள் செல்வது என முடிவெடுத்திருந்தோம். நானும் கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனும், கட்சியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணனும் சென்றிருந்தோம். அங்கு தமிழ் அரசியல் தலைவர்களில் எனக்கு மட்டுமே மனிதவுரிமைகள் பேரவை கூட்டங்களில் கலந்து கொள்வதற்கும், உரையாற்றுவதற்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. இச்சந்தர்ப்பத்தை எங்களால் முடிந்தவரை பயன்படுத்தினோம்.

பேரவைக் கூட்டங்களில் கலந்துகொள்ளக் கிடைத்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, பல்வேறு நாடுகளின் இராஜதந்திரிகளுடனும் உரையாடி எமது பக்க நியாயத்தை முன்வைத்தோம். நாம் சந்தித்த அனைத்து இராஜதந்திரிகளுக்கும் இந்தப் பிரேரணை தமிழ் மக்களுக்கு எந்தவித பயனையும் தரப்போவதில்லை என்பதை தர்க்க ரீதியாகத் தெரியப்படுத்தினோம். சர்வதேச விசாரணையையும், அதனை இலகுவாக்கக்கூடிய வகையில் இடைக்கால நிர்வாகத்தினையும் வற்புறுத்தினோம். மனிதவுரிமைகள் பேரவையில் நான் உரையாற்றிய போதும் கூட இவை இரண்டையும் தர்க்க ரீதியாக வற்புறுத்தினேன்.

மனிதவுரிமைகள் பேரவையின் உத்தியோகபூர்வ கூட்டங்களுக்குப் புறம்பாக அரசுசார்பற்ற நிறுவனங்கள் நடாத்திய சிறிய கூட்டங்களிலும் பங்கு பற்றி எமது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்தோம். இது விடயத்தில் எம்மால் முடிந்தவரை பணிகளை ஆற்றியிருக்கின்றோம் என்றே நாம் கருதுகின்றோம்.

இடைக்கால நிர்வாகம் குறித்து நீங்கள் பேசுகின்றீர்கள் அது சாத்தியமாகும் என நீங்கள் கருதுகின்றீர்களா? இதனை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளும் என கருதுகின்றீர்களா?

இலங்கையிடமோ சர்வதேச சமூகத்திடமோ சென்று அவை ’ஏற்றுக்கொள்ளத்தக்க’ கோரிக்கைகள் எவை எனக் கருதி அவற்றின் அடிப்படையில் எங்கள் கட்சி கோரிக்கைகளை முன்வைப்பதில்லை. தமிழர்கள் மீது இன்று கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கட்டமைப்புசார்(Structural) இனப்படுகொலையைத் தடுத்துநிறுத்துவதற்கு எது வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும் என்கிற தர்க்க ரீதியிலான முடிவில் நாங்கள் கோரிக்கைகளை வைக்கிறோம். சிங்கள ஆதிக்கத்தில் இருக்கும்வரை, ஈழத் தமிழர்களின் தாயகம் அழிவை மட்டுமே சந்திக்கும். நிலைமாறு காலகட்ட நிர்வாகம் ஒன்று வேண்டும்.

அத்துடன் அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இடைக்கால அரசு கேட்ட காலமும் இன்றைய காலமும் வெவ்வேறு. இலங்கையில் சீனா நுழைந்ததால், இன்று தமிழ் மக்களின் புவிசார் அரசியல் மதிப்பு வலுவடைந்திருக்கிறது. இலங்கை விவகாரத்தில், அமெரிக்காவும் இந்தியாவும் சிங்கள அரசுக்கு எதிராகக் காய்நகர்த்த வேண்டும் என்றால் அவை தமிழர்களின் அரசியலைத்தான் கையிலெடுக்க வேண்டிவரும். இதனால்தான் தமிழர்களின் துயரத்தை இன்று அவை ஜெனீவாவில் இலங்கையின் மீது நிர்ப்பந்தம் தரப் பயன்படுத்திக்கொள்கின்றன. 

மேலும் ஈன்றெடுத்த இறைமை என்ற சர்வதேச சட்டக்கோட்பாட்டின் பிரகாரம் நாம் கோரும் நிலைமாற்று நிர்வாகம் என்பது சர்வதேச சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றுதான். இவ் ஈன்றெடுத்த இறைமைக் கோட்பாட்டின்படி கட்டாயமாக இவ் நிலைமாற்று நிர்வாகம் தனிநாட்டில்தான் முடிவடைய வேண்டுமென்பதில்லை. இவ் நிலைமாற்று நிர்வாக அலகு இறுதியில் தேசங்களின் இறைமைகளை கூட்டுதல் என்னும் அடிப்படையில் ஒரு நாட்டுக்குள் இறுதித் தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம். இத்தகைய இடைக்கால அல்லது நிலைமாற்று நிர்வாகம் என்பது தென்சூடானில் ஏற்படுத்தப்பட்டிருந்தது என்பதனை நாம் ஒரு முன்னுதாரணமாகக் கொள்ளலாம்.

தமிழ் மக்களுக்கு இன்று கிடைத்துள்ள வாய்ப்பான புவிசார் அரசியல் சூழலை நாம் எப்படிப் பயன்படுத்திக்கொள்வது எனத் தீர்மானிப்பது இனி நம்கையில்தான் இருக்கிறது. இந்திய, அமெரிக்க, சீனக் குழாம்களின் வியூக முக்கியத்துவம் வாய்ந்த புவிசார் அரசியல் நலன்களை நாம் புரிந்துகொள்ளத் தவறினால் நம் மக்களுக்குப் பலனளிக்கக்கூடிய எந்த வியூகத்தையும் நாம் வகுக்க இயலாது. நாம் ஒன்றிணைந்து விட்டுக்கொடுக்காமல் வைராக்கியத்துடன் நின்றால், நம் வழிக்கு இந்தியாவும் அமெரிக்காவும் தயக்கத்துடனாவது வரக்கூடிய காலம் நிச்சயம் உருவாகும்.

தமிழக மாணவர்களின் எழுச்சி எந்தவகையில் தமிழர் விடுதலைப் போராட்டத்தில் தாக்கத்தைச் செலுத்தியுள்ளது என நீங்கள் கருதுகின்றீர்கள்?

தமிழக மாணவர்களின் எழுச்சியை தமிழ் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையின் ஆரம்பமாகவே பார்க்கின்றோம். தாயகத்தில் தமிழ்மக்களுக்கு குரல் இல்லாமல் இருக்கின்ற சூழ்நிலையில் வாழ்கின்றோம். ஒரு பக்கத்தில் அரசியல் யாப்பின் 6வது திருத்தம் காரணமாக எமது குரலை மட்டுப்படுத்த வேண்டியிருக்கின்றது. மறுபக்கத்தில் 2009 மேயின் பின்னர் தமிழ் மக்கள் ஒரு தோல்வி மனப்பான்மையில் இருக்கின்றனர். அதேவேளை மோசமான அடக்குமுறைக்கு உச்சவகையில் முகம் கொடுத்துக் கொண்டும் இருக்கின்றனர். இந்தியா தன்னுடைய நலன்களின் அடிப்படையில் மட்டும் முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கின்றது. தமிழர் நலன்களை முதன்மைப்படுத்தவில்லை. தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட 13வது திருத்தத்தினை அவர்களின் தலையில் கட்டிவிட அதுவேறு முயற்சிகளைச் செய்கின்றது.

இந்நிலையில் மாணவர்களுடைய போராட்டம் இலங்கைத் தீவையும், தமிழகத்தையும் மையப்படுத்திய பூகோள அரசியலில் தமிழ்மக்களின் முக்கியத்துவத்தினை விளங்கிக் கொண்டு கொள்கைகளை வகுத்துப் போராடிக்கொண்டிருப்பது தமிழ் மக்களை ஆபத்தான நிலையில் இருந்து மீட்பதற்கான சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கின்றது. இந்தப் போராட்டம் தமிழக மாநில அளவில் மட்டுப்படுத்தப்படாமல் தமிழகத்தின் அனைத்து மக்களின் பங்களிப்போடு ஒட்டுமொத்த தமிழகத்தின் நிலைப்பாடாக மாறுவது அவசியமானது. மாணவர்களினுடைய போராட்டத்தின் விளைவுகளை தமிழக சட்டசபைத் தீர்மானத்தில் காணக்கூடியதாகவுள்ளது. 'உலகத்தமிழர்' என்கின்ற பொது அடையாளம் வளர்வதற்கும் இது துணைபுரிந்திருக்கின்றது.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=3&contentid=65537f4c-af01-4165-8ef9-9ebd44fcc4dc

 

பேட்டியின் கேள்வி-பதில் இரண்டிலுமே  கூட்டமைப்பு 13ம் திருத்தத்தை ஆதரிக்கிறது என்று கூறப்படுகிறது. கூட்டமைப்பு புலிகளாள் போடப்பட்ட அமைப்பு. அது அன்றிலிருந்து இன்றுவரை 13ம் திருத்தத்தை எதிர்க்கிறது. ஆனால் அரசு சில்லறை சில்லறையாக 13ம் திருத்தத்தை வக்கற்றதாக்குவதையும் எதிர்க்கிறது. உதாரணத்திற்கு நமக்கு காணி அதிகாரம் வேண்டு என்று கூவிகொண்டிருப்பது மட்டும் போதாது. என்றாவது வடக்கு-கிழக்குக்கு காணி அதிகாரம் நமக்கு கிடைக்குமாய் இருந்தால் அன்று நமது காணிகளில் சிங்களவர் மட்டும்தான் குடியிருக்கப் போகிறார்கள் போலிருக்கு. எனவே அவ்வப்போது இராணுவம் தனியார் காணிகளை சுவீகரிக்கும் போதும் எதிர்க்க வேண்டும் என்று நினைக்கிறோம். அது போலவேதான் சுயாட்சி கேட்கும் போது 13ம் திருத்தத்தில் இருந்த உரிமைகள் அழிந்து விடுவதையும் கூட்டமைப்பு எதிர்க்கிறது . மிச்சம் இருகட்சிகளுக்குமிடயில் இருக்கும் அரசியல் போட்டியே.

 

 

 

இந்தியாவும், மேற்குலகமும் ஏற்படுத்த நினைக்கும் ஆட்சிமாற்றம், தமிழ் மக்கள் விரும்பும் ஏதேனும் தீர்வைப் பெற்றுக்கொள்ள வழிவகுக்குமென நீங்கள் கருதுகின்றீர்களா?

ஆட்சிமாற்றம் ஏற்படுமென அவை கருதுகின்றன என்பது உண்மை. அதற்காக அவை மிகத் தீவிரமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன என்பதும் உண்மை. ஆனால் இலங்கையிலிருக்கும் இன்றைய அரசியல் சூழலில் ஒரு ஆட்சிமாற்றம் இடம்பெறுவதற்கு வாய்ப்புக்கள் உண்டென நாம் கருதவில்லை. காலாகாலமாக இலங்கை அரசின்(State policy) கொள்கையே இலங்கைத் தீவை முழுமையாக பௌத்த-சிங்கள மயப்படுத்துவது தான். காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்டகாலம் தொடக்கம் சிறீலங்காவின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பினையும் ஆட்சியாளர்கள் அதற்கே பயன்படுத்தினர். அதற்கேற்பவே அரசியல் யாப்பு மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டன. அரசு இயந்திரமும் அதற்கேற்ற வகையிலேயே உருவாக்கப்பட்டிருந்தது.

இடைக்காலத்தில் தமிழ் மக்களது விடுதலைப் போராட்டம் இப் பௌத்த-சிங்கள மயமாக்கத்திற்கு பெருந்தடையாக இருந்தது. தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டமையினால் அத்தடையும் நீங்கிவிட்டது. இதனால் அண்மைக்காலமாக முழுமையான சிங்களமயமாக்கல் செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. சிங்கள மக்களுக்கு இது நன்றாகத் தெரியும். இதனால் சிங்களமயமாக்கலை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு அதனை தீவிரத்துடன் மேற்கொள்ளும் ஒர் அரசாங்கத்தை வீழ்த்த சிங்களமக்கள் முனைவார்கள் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல.

இதைவிட எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இன்று மிகவும் பலவீனமான நிலையிலுள்ளது. போர் வெற்றி அக்கட்சியினை மிகவும் பலவீனப்படுத்திவிட்டது. கட்சிக்குள் உள்நெருக்கடி வேறு. மாற்றுத் தலைவர்களும் இரண்டாம் கட்டத் தலைவர்களும் அங்கு ஒதுக்கப்பட்டு பலவீனப்படுத்தப்பட்டுள்ளனர். இன்னுமொரு எதிர்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் நிலை மிகவும் பரிதாபகரமானது. அக்கட்சியின் இனவாதக் கொள்கையை மகிந்த அரசாங்கம் தனது கையில் எடுத்துள்ளதால் அக்கட்சி தனது கட்சிச் செயற்பாட்டிற்கு கொள்கையில்லாமல் உள்ளது. கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுகள் வேறு அதனை மிகவும் பலவீனப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இங்கு ஓர் ஆட்சி மாற்றம் என்பது நிகழ்வதற்கான வாய்ப்புக்கள் மிக மிகக் குறைவு என்பதே எம்முடைய கருத்தாகும்.

எனினும் இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம் இலங்கைத் தீவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்த் தேசத்திற்கு எதிராக பௌத்த-சிங்களமயமாக்கல் நடைபெறப்போவதே உண்மை. அது கட்சியின் தன்மைக்கேற்ப நேரடியாகவோ, மறைமுகமாகவோ மேற்கொள்ளப்படலாம். இந்நிலையில் தமிழ் தலைமைகள், தமிழ்த் தேசிய அரசியலை சிங்கள தேசியத்திற்குள் கரைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடாது, அதனை உயிர்ப்புடன் வைத்திருக்குப் போராட வேண்டும்.

சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதியினருக்கு, சிறீலங்கா அரசாங்கத்தை தமது வழிக்குக் கொண்டுவருவதற்கு தமிழ் அரசியலை பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இந்த நிலையை வாய்ப்பாகப் பயன்படுத்தி, தமிழ் தேசத்தைப் பாதுகாப்பதற்கு எத்தகைய அரசியல் நிலைப்பாடு அங்கீகரிக்கப்பட வேண்டுமோ அந்த நிலைப்பாட்டை, அந்த சர்வதேச சமூகத்தினர் ஏற்றுக்கொள்ளச் செய்யும் நிலையை உருவாக்க சகல வழிமுறைகளையும் கையாள வேண்டியது தமிழ்த் தலைமைகளது இன்றைய வரலாற்றுக் கடமையாகும்.

 

கேள்வி இதிலும் வேண்டுமென்றேதான் திசை திருப்புகிறது. சிறிமாவோ காலத்தில்தான் இலங்கையில் பண்டாரநாயக்கா நினைவு மண்டபம் கட்டி சீனா உறவுகளை உயர்த்த ஆரம்பித்தது. சிறிமாவிடம்தான் கச்சதீவை இந்தியா கொடுத்து நிரத்தர சமாதானத்தை ஆக்க முயன்று எமாந்தது. அதில் J.R. நன்றிக்கடன் இல்லமால் மேற்கில் சாய்ந்ததால் இந்திரா காந்தி இலங்கையை தாக்க முடிவுகள் எடுத்தார். ஆனால் ரஜீவுக்கு இலங்கை மேற்குடன் சாய்வதில் எந்த ஆட்சேபனையும் இருக்கவில்லை. இதனால் அவர் வேறுபாதையில்  சென்றார். ஆனால் இந்திராகாந்தி  SLFP சிறிமாவிடமும், சீனாவிடமும் ஏமாந்ததை விட பல மடங்கு மேற்கு நாடுகளிடமும், U.N.P.  பிரேமதாசவிடமும் J.R ரிடமும்  ரஜீவ் ஏமாந்தார். இதனால் இந்தியாவுக்கு U.N.P யில் இருக்கும் கோபம் S.L.F.Pயில் இல்லை. இந்தியா ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி U.N.P. யை கொண்டுவர முயல்கின்றது என்பது வெறும் கட்டுக்கதை. உண்மையில் இந்தியா மகிந்தா அரசுக்கு வேண்டியதெல்லாவற்றையும் செய்த்து கொடுத்து அதை தாஜா பண்ணத்தான் முயல்கின்றது என்பது தான் நாம் காணும் நிதர்சணம். ஐ.நா.பிரேரணைகளில் இந்தியா மூன்று முறை மகிந்தா அரசை காப்பாற்றியிருக்கிறது. பொதுநலவாயத்திலும் இதையேதான் செய்கிறது. அங்கு இலங்கையை விழுத்த பார்க்கும் மேற்குநாடுகளை தொடர்ந்து சிப்பிலி ஆட்டி தொடர்ந்து குழம்ப வைக்கிறது.

 

மேற்கு நாடுகளின் நிலை வேறு. அவர்கள் 2005லேயே தாம் விரும்பிய ஆட்சியை கொண்டுவர நினைத்து திட்டமிடல் பிழைகளினால் ஏமாந்தார்கள்.  ரணிலுக்கு தெரியாமால் புலிகளின் கப்பல்களை அழிக்க சந்திரிக்காவுக்கு உதவி, வெற்றியும் எடுத்துக்கொடுத்தார்கள். இதனால் சிங்கள மக்கள் புலிகளை அழிக்க ஐ.தே.க.யை விட சுதந்திர கட்சியையே தெரிந்தார்கள்.  பிழையை திருத்தாத மேற்குநாடுகள்  தமது தோல்விக்கு புலிகள் மீதில் பிழையை போட்டு புலிகளை முற்றாக அழித்தார்கள். அதன் பின்னர் திரும்ப மகிந்தாவை பதவி இறக்க முயன்று பொன்சேக்காவை போட்டு முயன்றார்கள். பாரிய தோல்வியை சந்தித்த பின்னர் இன்று தெரிய வந்திருக்கிறார்கள் இலங்கையில் ஆட்சி மாற்றம் இன்று நாளை கொண்டு வர முடியாது என்பதை. இதனால் இலங்கையை மிரட்ட முயல்கிறார்கள். அது எடுபடுமா இல்லையா என்பது வேறு. ஆனால் இவர்களின் பிரதான பாதை ஐ.நா., பொது நலவாயம் போன்றவை.

 

அதாவது இன்றைய நிலையில் இந்தியா தற்போதைய அரசு பதவில் இருப்பதை எதிர்க்கவில்லை. அதனுடன் இணங்கி அதற்கு உதவி தம் பாதையை இலங்கை அரசின் பாதையில் இணைக்க முயல்கிறது.. மேற்கு நாடுகளுக்கு ஜனநாயக முறையால் இலங்கையில் பதவி மாற்றம் கொண்டுவரலாம் என்ற நம்பிக்கை தர்ந்துவிட்டது. எனவே அவர்கள் அதை இப்பொது முயற்சிக்கவில்லை. மாறாக இலங்கையை மிரட்டி இலங்கையை தம் பாதையில் வர வைக்க முயல்கின்றன.

 

எனவே பிழையான அனுமானத்தை வைத்து சொல்லபட்டிருக்கும் கேள்வியும் பதிலும் பிழையானவையே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.