Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காமமும் இலக்கியமும்: இலக்கியத்தில் காம ரசம் ததும்பும் பாடல்களும் வரிகளும்: வாசித்து இன்புறுக..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாலடியார் -40: காம நுதலியல்

 

முயங்காக்கால் பாயும் பசலைமற்று ஊடி
உயங்காக்கால் உப்பின்றாம் காமம்; - வயங்கு ஓதம்
நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப!
புல்லாப் புலப்பதோர் ஆறு.
391

கடல் அலைகள் ஓயாது மோதுதற்கு இடமான நீண்ட கழிகளினது குளிர்ச்சி பொருந்திய கரையையுடைய அரசனே! கணவனுடன் கூடிப் புணராவிடின் மேனி எங்கும் பசலை படரும்; ஊடி வருந்தாவிடின் காதலானது சுவையில்லாமல் போகும். எனவே முதலில் கூடிப் பின் ஊடுவதும் காதல் நெறியாம். (தலைவனுக்கு வாயில் நேர்ந்த தோழி, தலைவியின் புலவி நீங்கச் சொல்லியது).

 

தம்அமர் காதலர் தார்சூழ் அணியகலம்
விம்ம முயங்கும் துணையில்லார்க்கு - இம்மெனப்
பெய்ய எழிலி முழங்கும் திசையெல்லாம்
நெய்தல் அறைந்தன்ன நீர்த்து.
392

தம்மால் விரும்பப்படும் தலைவருடைய மாலை அணிந்த அழகிய மார்பை, உடம்பு பூரிக்கத் தழுவும், அத் தலைவரைப் பிரிந்த மகளிர்க்கு, 'இம்' என்னும் ஒலியுடன் மேகம் நீரைப் பொழிய திக்குகளெல்லாம் எழும் அவ்வோசை சாப்பறையை ஒத்திருந்தது. (பருவம் கண்டு ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்கு உரைத்தது).

 

கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள் துணையில்லார்க்கு
இம்மாலை என்செய்வ தென்று.
393

மிக வருந்தி வேலை செய்யும் கம்மாளரும் வேலையை நிறுத்திக் கருவிகளை எடுத்து வைக்கும் மயக்கம் பொருந்திய மாலைக் காலத்தில், மலர்களை ஆய்ந்தெடுத்து மாலையாகத் தொடுத்து, அம்மாலையைக் கையில் வைத்துக்கொண்டு, தலைவன் இல்லாத மகளிர்க்கு இம்மாலை என்ன பயனைத் தரும் என் மனம் கலங்கி அழுதாள். (தலைவி செலவுடன் படாமையைத் தோழி தலைவனுக்குக் கூறியது).

 

செல்சுடர் நோக்கிச் சிதர் அரிக்கண் கொண்டநீர்
மெல்விரல் ஊழ்தெறிய விம்மித்தன் - மெல்விரலின்
நாள்வைத்து நங்குற்றம் எண்ணும்கொல், அந்தோதன்
தோள்வைத்து அணைமேற் கிடந்து.
394

சூரியன் மறையும் மாலை நேரத்தைக் கண்டு வருந்தி, செவ்வா¢ பரந்த கண்கள் கொண்ட நீரை மெல்லிய விரல்களால் முறையாக எடுத்தெறிந்து விம்மி அழுது, தனது மெல் விரல்களால் நான் பிரிந்து சென்ற நாட்களைக் கணக்கிட்டு, படுக்கையில் தனது தோளையே தலையணையாகக் கொண்டு படுத்து, நான் வராத குற்றத்தை எண்ணுவாளோ? (வினை முடித்து மீண்ட தலைவன் பாகன் கேட்பக் கூறியது).

 

கண்கயல் என்னும் கருத்தினால் காதலி
பின்சென்றது அம்ம சிறுசிரல்; - பின்சென்றும்
ஊக்கி எழுந்ததும் எறிகல்லா ஒண்புருவம்
கோட்டிய வில்வாக்கு அறிந்து.
395

சிறிய மீன் கொத்திப் பறவை என் தலைவியின் கண்களைக் கயல் மீன் எனக் கருதி அவளைப் பின் தொடர்ந்து சென்றது. அப்படிச் சென்றும், ஊக்கத்துடன் முயன்றும், அவளுடைய ஒளிமிக்க புருவத்தை வில்லின் வளைவு என்று எண்ணிக் கண்களைக் கொத்தாமல் விட்டு விட்டது. (தலைவன், தலைவியின் அழகை வியந்து தோழனிடம் கூறியது).

 

அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற்கு அன்னோ
பரற்கானம் ஆற்றின கொல்லோ; - அரக்கார்ந்த
பஞ்சிகொண்டு ஊட்டினும் பையெனப் பையெனவென்று
அஞ்சிப் பின்வாங்கும் அடி.
396

செவ்வாம்பல் போன்ற வாயையும், அழகிய இடையையும், உடைய என் மகள் முன்னர், செம்பஞ்சுக் குழம்பைப் பாதத்தில் பஞ்சினால் தடவிய போதும், மெல்ல மெல்ல எனக்கூறிக் காலைப் பின்னுக்கு இழுத்துக் கொள்வாள். அந்தோ! அந்தப் பாதங்கள் பரற்கற்கள் பொருந்திய பாலை வழியின் கொடுமையை எவ்வாறு தாங்கின? (தலைவனுடன் போன தலைவியை எண்ணித் தாய் ஏங்கியது).

 

ஓலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர்
மாலைப் பொழுதில் மணந்தார் பிரிவுள்ளி
மாலை பரிந்திட்டு அழுதாள் வனமுலைமேல்
கோலஞ்செய் சாந்தம் திமிர்ந்து.
397

ஓலையிலே எழுதும் கணக்கா¢ன் ஓசை ஒழியும்படியான மாலை நேரத்தில், தலைவன் பிரிதலை நினைத்து, மாலையைக் கழற்றி, வீசியெறிந்து, அழகிய கொங்கைகளில் பூசப்பட்டிருந்த சந்தனக் குழம்பையும் உதிர்த்துத் தள்ளித் துன்புற்று அழுதாள். (தலைவனின் பிரிவை ஆற்றாத தலைவியின் துன்ப றிலையைத் தோழி கூறியது).

 

கடக்கருங் காலத்துக் காளைபின் நாளை
நடக்கவும் வல்லையோ என்றி; - சுடர்த்தொடீஇ
பெற்றான் ஒருவன் பெருங்குதிரை அந்நிலையே
கற்றான் அஃதூரும் ஆறு.
398

ஒளி பொருந்திய வளையலையுடையளே! 'கடந்து போதற்கு அரிய பாலை வழியிலே காளை போன்ற நின் காதலனுடன் நாளை நடந்து செல்லும் ஆற்றல் உடையையோ?' என்று தானே கேட்கின்றாய்? ஒருவன் ஒரு குதிரையை எப்பொழுது பெற்றானோ அப்பொழுதே அதில் ஏறிச் செல்லும் முறையையும் கற்றவன் ஆவான். ஆதலால் காதலன்பின் செல்லுதல் அரிதன்று. (தலைவனுடன் போகச் சம்மதித்த தலைவி தோழிக்குக் கூறியது).

 

முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும்
இலக்கணம் யாதும் அறியேன் - கலைக்கணம்
வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலும்என்
பூம்பாவை செய்த குறி.
399

முலைக்காம்புகளும் முத்துமாலையும் உடல் முழுதும் அழுந்தும்படி தழுவிக்கொண்டதன் காரணத்தை அப்போது யான் அறியேன்! தாமரைப் பூவில் உறையும் திருமகள் போன்ற என் மகள், மான் கூட்டங்கள் புலிக்கு அஞ்சும் பாலை வழியில் என்னை விட்டுப் பிரிந்து தன் காதலனுடன் செல்வதற்குத் தான் அப்படி அன்பாகத் தழுவிக் கொண்டாளோ? (தலைவனுடன் போன தன் மகளை எண்ணி நற்றாய் வருந்திச் சொல்லியது).

 

கண்மூன்று உடையானும் காக்கையும் பையரவும்
என்ஈன்ற யாயும் பிழைத்ததென் - பொன்னீன்ற
கோங்கரும் பன்ன முலையாய்! பொருள்வயின்
பாங்கனார் சென்ற நெறி.
400

பொன் போலும் தேமல் பொருந்திய, கோங்க மலரைப் போன்ற முலையையுடைய தோழி! முக்கண்ணனான சிவபெருமானும், காக்கைப் பறவையும், படமுடைய பாம்பும், என்னைப் பெற்ற தாயும் எனக்கு என்ன குற்றம் செய்தனர்? அவர்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை! பொருளாசையால் என் தலைவன் பிரிந்த வழியே எனக்குக் குற்றம் செய்தது. (தலைவி தனது பிரிவாற்றாமையைத் தோழிக்கு உரைத்தது. மன்மதனை முழுதும் எரிக்காமல் உயிர் கொடுத்த சிவனும், தன் கூட்டில் பொரித்த குயில் குஞ்சைக் கொல்லாமல் வளர்த்த காக்கையும், சந்திரனை விழுங்கிப் பின் உமிழ்ந்த பாம்பும், தன்னைப் பெற்ற போதே கொல்லாமல் வளர்த்த தாயும் குற்றம் செய்தவர் ஆவர் எனக் கூற வந்தவள், அப்படிக் கூறாது, அவர்கள் குற்றம் ஏதும் செய்யவில்லை என மாற்றிக் கூறினாள். இதன் நயம் உணர்ந்து மகிழத்தக்கது).

 

http://www.tamilkalanjiyam.com/literatures/pathinen_keezhkanakku/naaladiyar/naaladiyar40.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.