Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவரவருக்குச் சொந்தமான நிலம்

Featured Replies

அவரவருக்குச் சொந்தமான நிலம் குலசேகரன்

ஓவியங்கள்: ரவி

அன்றும் வழக்கம்போல் நாராயணமூர்த்தி காலை வேளையில் நிலத்துக்குப் புறப்பட்டார். ஊரில் வசிப்பவர்களில் பலர் நகரத்துக்குக் குடி பெயர்ந்து போய்விட்டதால் வெறிச்சோடியிருந்த தெருக்களின் வழியாக நடந்தார். குட்டையான கோபுரத்தில் சுண்ணாம்புச் சிற்பங்கள் சிதைந்து மூளியாக நிற்கும் பழைய மாரியம்மன் கோயிலையும் கடந்து ஆற்றை நெருங்கினார். நிறைய மரங்கள் வெட்டப்பட்ட கரை வெறுமையாக நீண்டிருந்தது. பழைய ஞாபகங்ளோடு ஆற்றில் முகத்தைக் குனிந்து பார்ப்பதுபோல் எஞ்சியிருந்த சில மரங்கள் கவிந்து நின்றிருந்தன. ஆழ்ந்த பெருமூச்சுடன் அவர் ஆற்றில் இறங்கினார். எங்கும் மணல் பரவியிருந்த ஆறு பெரிய பாலைவனமாகத் தோற்றமளித்தது. எண்ணற்ற காலடிகள் அதன் குறுக்காகப் பதிந்து உருவான தடத்தில் நடந்தார். தூரத்தில் நிழல்களைப் போல் சில உருவங்கள் முன்னால் சென்றுகொண்டிருந்தன. திறந்த வெளியில் வெயில் கண்கூச வீசியது. நெருப்பு மூட்டியதைப் போல் ஆறு சூடேறிக்கொண்டிருந்தது. வறண்ட ஆற்று மணலின் அடியில் கொஞ்சம்கூட ஈரம் இருக்காது எனத் தோன்றியது. வெண்மையான உடைந்த நத்தை ஓடுகளும் சிறிய சங்குகளும் எலும்புத் துணுக்குகளைப் போல் மணலில் கலந்திருந்தன. வண்ணார்கள் துணி துவைக்கத் தோண்டியிருந்த ஆளுயுரப் பள்ளம் துவை கல்லோடு மணல் சரிந்து மூடிக் கிடந்தது. அங்கங்கே முளைத்திருந்த பல வகையான செடிகளின் அடிப்பகுதிகள் கருகியிருந்தன. ஆற்றில் வழி முடிவற்றதாக நீண்டுகொண்டிருந்தது.

short-story-01.jpgஅவருக்குப் பின்னாலிருந்து வந்த மற்றொரு நிலத்துக்காரரான சேகர் “நிலத்துக்குப் போறீங்களா?” என்று கேட்டபடி விரைவாகக் கடந்து சென்றார். ஆற்றோரத்தில் சிறு ஓடைபோல் தோல் தொழிற் சாலையின் இரத்தச் சிவப்பான கழிவுநீர் ஓடிக்கொண்டிருந்தது. அதிலிருந்து வயிற்றைப் புரட்டும் கடுமையான நெடி வீசியது. இருபுறமும் சாக்கடை போன்ற கருமையான சேறு படிந்திருந்தது. அதன் மேல் யாரோ வரிசையாகப் போட்டிருந்த கற்களின்மேல் கால்களை வைத்து அருவருப்போடு கடந்தார். மேலும் சிறிது தூரம் கால்கள் மணலில் புதைய நடந்து கரையை அடைந்தார். அங்கே கலக்கும் வற்றிய கானாற்றின் முட்புதர்கள் கவிந்த வழியாகச் சென்று நெடுஞ் சாலையில் ஏறினார். வேறு உலகத்திற்குள் நுழைந்துவிட்டதுபோல் மிகப் பெரிய சாலையில் எண்ணற்ற வாகனங்கள் பரபரப்புடன் இரைச்சலிட்டு ஓடிக்கொண்டிருந்தன. ஓரமாக வழிப்போக்கன் ஒருவன் நீண்ட ஊன்றுகோலுடன் எங்கேயோ நடந்துசென்றுகொண்டிருந்தான். அவர் போக்குவரத்து இல்லாத நேரத்திற்குக் காத்திருந்து உள்ளூரப் பயத்துடன் சாலையைக் கடந்தார். அங்கிருந்து காண்கையில் அவருடைய கொல்லையில் வாடிய தென்னை மரங்கள் மிகவும் பசுமையாகத் தெரிந்தன.

அவர் எப்போதும்போல் கைக் கடிகாரத்தைத் திருப்பிப் பார்க்காமல் வானில் சூரியன் இருக்குமிடத்தை வைத்து நேரத்தை அனுமானித்தார். இப்பொழுதெல்லாம் அடிக்கடி உண்டாகிற சலிப்பால் இன்று படுக்கையிலிருந்து எழுவதற்குச் சற்று தாமதமாகிவிட்டது என்று நினைத்துக்கொண்டார். அவர் சாலையிலிருந்து கொல்லைக்கு இறங்குகையில் தென்னை ஓலைகள் வரவேற்பதைப் போல் காற்றில் ஆடின. முன்புறமுள்ள மோட்டார் கொட்டகையைத் திறந்து சாப்பாட்டுத் தூக்கை வைத்துவிட்டு தோப்பிற்குள் நுழைந்தார். நெடுங் காலமாகப் பழகிய மனிதர்களைப் போல் தென்னை மரங்கள் அவரை உற்றுப் பார்த்தவாறு நின்றிருந்தன. நிறைய ஓலைகள் பூச்சியரித்து உலர்ந்து சல்லடைகளைப் போலிருந்தாலும் கீழே நிழல் அரையிருட்டாகப் பரவியிருந்தது. அது மிகவும் அந்தரங்கமானதாகவும் பாதுகாப்பானதாகவும் தோன்றியது. எங்கும் கிட்டாத பேரமைதியை அவர் ஒரு கணம் அடைந்தார். நடு முதுகில் நெருப்பாக ஓடிய வேர்வை பனித் துளிகளைப் போல் குளிர்ந்து சில்லிட்டது. அப்போது வேலியோரம் அடர்ந்திருந்த புதர்கள் அசைந்து சிறிய சலசலப்புச் சத்தம் கேட்டது. நீளமான பாம்பு ஒன்று வளைந்து வளைந்து நிலத்தின் எல்லையோரம் சென்று தரையிலிருந்து எழும்பி படம் விரித்து ஆடியது. அது எதையோ சொல்வதைப் போல் அவரைத் திரும்பிப் பார்த்தது. பிறகு நெளிந்து வேலியின் முட்புதர்களில் புகுந்து மறைந்தது. நிலத்துக்குக் காவலாக ஒரு பெரிய நல்ல பாம்பு இருப்பதாக அப்பா பலமுறை சொல்லியிருந்தார். நாராயண மூர்த்தி அதை முதன்முறையாக இப்போதுதான் பார்த்தார். அவர் உடல் சிலிர்த்து அதேயிடத்தில் சற்று நேரம் உறைந்து நின்றிருந்தார். பின்னர் தென்னை மரங்களில் சிறுத்துச் சூம்பியிருந்த காய்கள் களவுபோய்விட்டனவா எனக் கவனித்துவிட்டு, கீழே விழுந்திருந்த சில மட்டைகளை இழுத்துச் சென்று பட்டியில் சேர்த்தார்.

மீண்டும் கொட்டகையருகில் வந்து பெரிய குகை போன்ற கிணற்றில் எட்டிப் பார்த்தார். மேலிருந்து தண்ணீர்க் குழாய் கிணற்றை ஆழமாக ஊடுருவிச் சென்றுகொண்டிருந்தது. உள்ளே சுற்றுச் சுவர்களின் வெடிப்புகளில் செடிகள் செழுமையாக வளர்ந்திருந்தன. ஒரு செடியில் தொங்கிக்கொண்டிருந்த தூக்கணாங் குருவிக் கூடு வெறுமையாகக் காற்றில் ஆடியது. கிணற்றினுள்ளே வெட்டப்பட்டிருந்த பாறைகளின் கூரிய விளிம்புகள் உலோகங்களைப் போல் கருமையாகப் பளபளத்தன. அடியாழத்தில் நீர் மேலேயுள்ள வெளிச்சத்தை லேசாகப் பிரதிபலித்துக்கொண்டிருந்தது. இரவெல்லாம் துளித்துளியாகத் தண்ணீர் சுரந்து அடிக்குழாயை மறைத்து தேங்கியிருந்தது. அவர் கொட்டகைக்குள் சென்று தண்ணீர் மோட்டாரைப் போட்டார். கிணற்று நீர் கீழேயிருந்து மெதுவாக ஏறி வந்தது. கரும்பாசி பற்றிய சிறிய தொட்டியில் வெண்நுரை பொங்கக் குதித்துக் கால்வாயில் புதுவெள்ளமெனத் ததும்பி ஓடியது. மண் வெட்டியைக் கையிலெடுத்துக்கொண்டு கால்வாயில் கால்களை நனைத்தபடி நடந்தார். கொல்லையின் தொடக்கத்திலுள்ள இரு வயல்களிலும் நெற்பயிர்கள் துவண்டு தலைசாய்ந்திருந்தன. இளம் பச்சையாக நெல் மணிகளில் பால் பிடிக்கத் தொடங்கியிருந்தன. அங்கங்கே களைகள் மட்டும் உயர்ந்து பசுமையாக அசைந்தன. நேற்றுப் போட்டிருந்த மடையை மாற்றி மற்றொரு வாய்க்கால் பக்கமாகத் திருப்பினார். அதில் நீர் மெதுவாக ஊர்ந்து பரவத் தொடங்கியது. அவருக்கு மிகவும் விருப்பமான மண்ணின் மணம் மேலே எழுந்தது. மண்வெட்டியை மடையின் மேல் வைத்துவிட்டுக் கொட்டகைக்குத் திரும்பினார்.

களத்து மேட்டின் ஓரத்திலிருந்த தந்தையின் காரை உதிர்ந்த சிறிய சமாதி அவருடைய கண்ணில்பட்டது. அதன் ஒற்றைக் கண்ணைப் போன்ற மாடக் குழியில் அழுத்தமாக எப்போதோ எண்ணெய் வழிந்த கரிய தடம் படிந்திருந்தது. மேற்கிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்த தகப்பனார்தான் பொட்டலாயிருந்த இடத்தை மிகவும் குறைந்த விலைக்கு வாங்கிப் பண்படுத்தி விவசாயம் செய்திருக்கிறார். ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவரை ஏமாற்றி எழுதிப் பெற்றுக்கொண்டதாகக்கூட ஊரில் பேச்சு இருக்கிறது. தொண்ணூறு வயதில் மரணப் படுக்கையிலிருக்கையில் அப்பாவுடைய மூச்சு பல நாட்களாக இழுத்துக்கொண்டிருந்து கடைசியில் கொல்லை மண்ணைக் கரைத்துப் புகட்டியபோதுதான் நின்றது. அவர் சொன்னவாறு சொந்த நிலத்தில் உடல் புதைக்கப்பட்டு சமாதியும் கட்டப்பட்டது. அவர் நீர் இறைத்த கமலையின் பெரும் கற்கள் இன்னும் கிணற்றருகில் பூமியினடியில் கிடக்கின்றன. எவ்வளவு சிக்கல்கள் ஏற்பட்டாலும் இந்த நிலத்தை விற்க மனம் விரும்பாது என்று நினைத்தார். அப்பா உயிரோடு இருந்தால் விற்பதற்கு ஒப்புக்கொள்ளமாட்டார். இந்த மண் விலை மதிப்பற்றது எனச் சொல்வார். இளம் வயதிலேயே வீட்டை விட்டுப் பெருநகரத்துக்கு ஓடிப்போய்விட்ட மூத்த மகன் நிலம் இருப்பதால் பயனேதும் இல்லை என்கிறான். அங்கேயே திருமணம் செய்துகொண்ட அவனுடைய மனைவியும் நிலத்தை விற்றுவிட்டால் சொந்தமாக வீடு கட்டிக்கொண்டு வாடகைக்கும் விடலாம் என நினைக்கிறாள். வேலை தேடி நகரத்துக்குச் சென்ற இரண்டாம் மகனும் நிலத்தை விற்று வரும் பணத்தில் ஏதாவது தொழில் செய்ய விரும்புகிறான். பலரையும்போல் தங்கத்தினாலான கனமான தாலிச் சரடு போட்டுக்கொள்ள இவர் மனைவி நீண்ட காலமாக ஆசைப்பட்டுக்கொண்டிருக்கிறாள். எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடுவதைப் போலிருக்கும் பூர்வீக ஓட்டு வீட்டை இடித்து மாடி வீடு கட்டிக்கொள்ளலாம். தினமும் இரவுகளில் தூக்கமில்லாமல் தவிக்கச் செய்யும் அனைத்துக் கடன்களையும் முதலில் தீர்க்க வேண்டும்.

அவர் கொட்டகை எதிரில் கயிற்றுக் கட்டிலை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தார். தொய்ந்துபோன பழைய கட்டில் தொட்டிலைப் போல் ஆடியது. அதில் உட்கார்ந்ததும் எப்போதும் போல் வரும் தூக்கம் அவரைத் தழுவியது. களத்தை ஒட்டி எண்ணற்ற வெட்டுத் தழும்புகளுடனிருந்த முதிர்ந்த புன்னை மரத்திலிருந்து குளிர்ந்த காற்று வீசியது. அவர் வழியை நோக்கியவாறுபடுத்து அரையுறக்கத்தில் மூழ்கினார். சற்று நேரத்தில் அவரருகில் தரகர் ஒருவர் வந்தார். “உண்மையிலேயே நிலத்தை விற்கிறதா இருக்கீங்களா?” என்றார். நாராயண மூர்த்தி தயக்கத்துடன் “ம் . . .” கொட்டினார். “கடைசியா என்ன விலைக்குத் தருவிங்க?” என்று தரகர் கேட்டார். “நான் ஏற்கெனவே சொன்ன விலைதான், பைசா குறைக்க முடியாது” என்றார். “அந்த விலைக்கு விற்காது . . . நீங்க சொல்றதில பாதி விலைக்குதான் பக்கத்து விவசாயிங்க எல்லாம் வித்திருக்காங்க” என்றார் தரகர். “சேகர், ராமுகூட முன் பணம் வாங்கிட்டாங்க, நீங்க என்ன சொல்றீங்க?” என்றார் மீண்டும். அவர் அதையே தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். நாராயணமூர்த்தி மிகுந்த குழப்பம் அடைந்தார். சுற்றிலுமுள்ள கொல்லைகள் விற்கப்பட்டு அவர் மட்டும் தனியாகவிடப்பட்டதாக உணர்ந்தார். அவர் என்ன கூறுவதென்று புரியாமல் திகைத்தார். “சரி, சரி . . .” என்று சத்தமாகச் சொல்லியபடி தூக்கத்திலிருந்து விழித்தார். அவருடைய வார்த்தைகள் அவருக்கே மிகவும் தெளிவாகக் கேட்டன. யாராவது கேட்டுவிட்டார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தபடி எழுந்து உட்கார்ந்தார். அங்கு ஒருவருமில்லை. ஆனாலும் அந்தத் தரகரின் வார்த்தைகள் உண்மையாகப் பட்டன.

மிகுந்த ஏமாற்றமுடன் நாராயணமூர்த்தி சாலையைப் பார்த்துக்கொண்டிருந்தார். அதில் வாகனங்கள் வேகமாகப் போய்வந்துகொண்டிருந்தன. மீண்டும் நிலங்களைப் பறித்து அந்த நெடுஞ்சாலையை மேலும் பெரிதாக்கப் போகிறார்கள் என்று பேசிக்கொள்கிறார்கள். அப்போது சைக்கிளில் ஓர் ஆள் சாலையிலிருந்து இறங்கி உள்ளே வந்தான். அவரை அடிக்கடி தேடி வந்துகொண்டிருக்கும் நிலத்தரகர்களில் ஒருவராயிருக்கலாம் என்று எண்ணினார். ஆனால் அவன் நேராகத் தொட்டியிடம் சென்று கை கால்களையும் முகத்தையும் கழுவிக்கொண்டு தண்ணீரை அள்ளியள்ளிக் குடித்தான். முன்பெல்லாம் நிறையப் பேர் பசுமையான நிழலை நாடியும் தாகத்தைத் தணித்துக்கொள்ளவும் கொல்லைக்குள் நுழைவார்கள். இப்போது வழிதவறியவர்களைப் போல் சிலர் மட்டும்தான் அபூர்வமாக வருகிறார்கள். அவன் தயங்கி நின்று நிலத்தின் மேல் ஆவலாகக் கண்களை ஓட்டினான். அவரருகில் வந்து “நல்ல வெயிலு” என்றான். “ஆமா . . .” என்றார். அவன் மேலும் நெருங்கி, “என்னைத் தெரியுதுங்களா?” என்றான். “யாரு, குணசேகரன் மகன் சின்னவனா?” என்று கேட்டார். “நா முருகேசனுங்க, ரொம்ப நாளா இங்கக் காவலுக்கிருந்தேன் . . . இந்தத் தென்னஞ்செடியெல்லாம் நா வச்சதுதான், வளர்ந்து காப்பு காய்க்குது” என்றான். அவருக்கு உடனே மங்கிய கடந்த காலத்தை ஒருமுறை புரட்டிப் பார்த்ததுபோலிருந்தது. அது இப்போது மிக வளமையாகவும் செழிப்பாகவும் இருந்ததாகத் தோன்றியது. “முருகேசா, நல்லா இருக்கியா?” என்றார். அவன் தலையாட்டிவிட்டு மௌனமாக நின்றிருந்தான். அவன் பக்கத்து ஊரில் வசிப்பவன் என்றாலும் சந்தித்து நீண்ட நாட்களாகின்றன. அவனோடு அந்தக் காலத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க வேண்டுமென்று விரும்பினார். “மரங்களுக்கு என்னன்னு தெரியாத நோய் பிடிச்சிடுச்சி . . . சரி, இப்ப நீ என்ன செய்யிற?” என்றார். “தோல் கம்பெனி வேலைக்குப் போறேன். பொன்னுரங்கம் எதனாலோ பூச்சி மருந்து குடிச்சி செத்துட்டாராம்... இப்பதான் சாவுக்குப் போயிட்டு வந்தேன். இங்க வழியில உங்களையும் பாக்கத் தோணுச்சி” என்றான் கம்மிய குரலில். நாராயணமூர்த்தி நெருங்கிய சமமான மனிதரை இழந்ததைப் போன்ற உணர்வுடனும் மரணத்தைப் பற்றிய பீதியுடனும் “மேல கொல்லைக்காரரா? யாரும் சொல்லலையே...” என்றார். “உடனே எடுத்துட்டாங்க . . . அப்ப நா வர்றேங்க, மதிய வேலைக்காவது போவனும்” என்று சாலையிலேறிச் சென்றுவிட்டான். அவன் முதலில் பொன்னுரங்கம் கொல்லையில் தான் நீண்ட காலம் குத்தகைக்கு இருந்தான். பிறகு அவன் நாராயண மூர்த்தியிடமும் சில வருடங்கள் காவலுக்கிருந்தான். அவன் தூரத்தில் சென்று புள்ளியாகும் வரையிலும் இவர் பார்த்துக்கொண்டிருந்தார்.

short-story-02.jpgகிணற்றில் நீர் வற்றி மோட்டார் கத்தவும் நாராயணமூர்த்தி வேகமாகச் சென்று அதை நிறுத்தினார். குழாயில் நிற்கும்போது ஒழுகும் நீரை இரு கைகளிலும் பிடித்துக் குடித்தார். அவருக்கு குளிர்ச்சியாகவும் சற்று ஆறுதலாகவுமிருந்தது. மற்ற கிணறுகளில் தண்ணீர் உப்பு கரித்தாலும் இதில் மட்டும் தேன் போலிருப்பதாகச் சொல்வார்கள். முன்பு கால்நடை மந்தைகள் மேய்ப்பவரின்றிக் காட்டிலிருந்து இறங்கி நேராக நிறைந்திருக்கும் தொட்டியில் தண்ணீர் குடித்துவிட்டுச் செல்லும். அருகிலிருக்கும் ஊர்ப் பெண்கள் துணிகளைத் துவைத்துக் களத்தில் விரித்துக் காயப்போடு வார்கள். இரவிலும் கூட ஆண்கள் குளிப்பார்கள். இந்த இடம் எப்போதும் உயிர்ப்புடனிருக்கும். தொட்டிக்குப் பக்கத்திலிருந்த துவைகல் மங்கி மண் படிந்திருந்தது. மறுபடியும் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தார். அடியில் விழுந்து உடைந்த பானை ஓடுகளும் கை நழுவிய சில இரும்புச் சாமான்களும் பிளாஸ்டிக் பைகளும் துல்லியமாகப் புலப்பட்டன. மத்தியானத்துக்குப் பிறகுதான் அவை மூழ்கிச் சிறிது நேரம் பாயுமளவு கிணற்றில் நீர் தேங்கும். அதுவரையிலும் மீண்டும் கட்டிலில் படுத்துப் பகல் கனவு காணலாம். இடையில் பசியெடுத்தால் எழுந்து சாப்பிடலாம். அவர் சில நாட்களில் உண்ண மறந்து அப்படியே தூக்கை ஞாபகமில்லாமல் வீட்டுக்கு எடுத்துச் சென்று விடுவார். அதிலிருக்கும் உணவு கெட்டு வீணாகிப்போகிறதென்று மனைவி ஏசுவாள். அப்போதெல்லாம் விளைந்துகொண்டிருந்த அரிசியைச் சமைத்தால் மறு நாள் காலையில் சாப்பிடுகையில் பழையதும் அமுதம்போலிருக்கும். இப்போது சோறு அடுத்த வேளையில் ஊசி நாற்றமெடுக்கிறது.

அவர் ஆழ்ந்த உறக்கத்தின் நடுவிலிருந்து எழுந்து மோட்டாரைப் போட்டார் வயலுக்கு நடந்து சென்று வரப்பின் மீது உட்கார்ந்தார். அவர் கைகள் அனிச்சையாகக் கால்வாயில் முளைத்திருந்த செடிகளைப் பிடுங்கி எடுத்துக்கொண்டிருந்தன. முன்பு அவருக்குத் துணையாகக் கொல்லையிலிருந்து சத்தம் ரீங்காரம்போல் எப்போதும் எழும். தவளைகள் அவ்வப்போது இடை வெளிகள் விட்டுக் கத்தும். சுற்றிலும் பல வகை பறவைகள் ஓயாமல் கீச்சிடும். சிறு பூச்சிகள் ஒரே குரலில் இரையும். அவற்றைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார் என்பது இப்போதுதான் அவருக்குப் புரிந்தது. மண்ணைக் கிளறினால் அப்போதுதான் பிறந்த குழந்தைகளைப் போல் துடிக்கும் புழுக்களையும் காணோம். வளைகளின் உள்ளிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் நண்டுகளும் இல்லை. அவர் நிலத்தைச் சுற்றி வருகையில் அறிந்துகொள்ளவே முடியாத ஆயிரக்கணக்கான நுண்ணுயிர்களைச் சந்திப்பார். அவை யாவும் மாயமாக மறைந்து நிலத்தில் மயான அமைதி நிலவியது. அவரைத் தனிமை தாங்க முடியாத பாரமாக அழுத்தியது. அதிலிருந்து தப்பித்து வெளியேறி கண்காணாத இடத்துக்குச் செல்ல வேண்டும்போல் மூச்சடைத்தது. அவர் எழுந்து தென்னந் தோப்பினுள் நடந்தார். அவரைச் சுற்றிலும் நெடிய மரங்கள் மௌனமாக நின்றிருந்தன. அங்கிருந்தும் கிளம்பி சாலையோரம் வந்து நின்றார். சாலையில் ஓயாத இரைச்சலுடன் வாகனங்கள் போய்க்கொண்டிருந்தன. மேலே வானம் மேகங்களில்லாமல் வெறுமையாகக் கவிந்திருந்தது. அவர் தாகம் மேலிடத் திரும்பித் தொட்டி நீரில் முகம் கை கால் கழுவித் தண்ணீர் குடித்தார். அவர் முகம் எப்போதும்போல் கரும் பச்சைப் பாசிகளின் நடுவில் தெளிவாகத் தோன்றி நடுங்கி மறைந்தது. அதன் இப்போதைய கேள்வியும் ‘நிலத்தை விற்கப்போகிறாயா?’ என்பதுதான். அவர் மோட்டாரை அணைத்துவிட்டு மீண்டும் கட்டிலுக்குத் திரும்பினார்.

நாராயணமூர்த்தி யாரோ வருகிற உணர்வில் கண் விழித்து தலையைத் தூக்கிப் பார்த்தார். சாலையோரமாகப் பளபளவென்று விலையுயர்ந்த கார் நின்றுகொண்டிருந்தது. அதிலிருந்து இருவர் இறங்கி அவரை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்கள். வெறும் வழிப்போக்கர்களாயிருக்கலாம் என்றுதான் அவர் முதலில் நினைத்தார். அதில் ஒருவர் அடிக்கடி அவரிடம் வந்து போய்கொண்டிருக்கும் தரகர்தான். மற்றொருவர் பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் அறிந்த பெரிய நிலச்சுவான்தார். அவர் அருகிலிருக்கும் நகரத்தில் கட்டடங்களை வாங்கி விற்கும் பெரும் வியாபாரியாக மாறியிருந்தார். இப்போது அக்கம் பக்கத்திலுள்ள விவசாய நிலங்களைப் பேராசையோடு தொடர்ந்து வாங்கிப் போட்டுக்கொண்டிருக்கிறார். நாராயணமூர்த்தி கட்டிலில் சற்றுத் தள்ளி உட்கார்ந்து அவர்களுக்கு இடமளித்தார். அவர் அமர்ந்து நிலத்தை ஒருமுறை பார்த்துவிட்டு “நிலத்தை விற்கிறதா இருக்கீங்களா?” என்றார். “எனக்கு விருப்பமில்லை, இருந்தாலும் என் குடும்பத்துல விற்கச் சொல்றாங்க” என்றார் நாராயணமூர்த்தி. “என்ன விலைக்குக் கொடுப்பிங்க?” என்று கேட்டார் நிலச்சுவான்தார். “நா முன்னால சொன்னதுதான்...” என்றார் நாராயணமூர்த்தி சற்றுப் பெருமையுடன். “நீங்க பகல் கனா காணுறிங்க, இது அந்தளவு போகாது” என்றார் அவர். அவர்கள் குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கிப் பயிர்களை அழித்துச் சமமாக்கி வீட்டு மனைகளாக அல்லது முழுநிலமாகப் பயங்கர விலைக்கு விற்பார்கள் என்று நாராயணமூர்த்தி நினைத்துக்கொண்டார். “எவ்வளவு நாளைக்கானாலும் நிலம் இப்பிடியே கிடக்கட்டும்” என்றார். “இதுக்கு மேல விவசாயத்த நம்ப முடியாது, பேசாம வித்திடுங்க” என்றார் தரகர். “பின்னால ராமசாமி நிலம், பக்கத்துல சுந்தரேசன், அதுக்கும் பக்கத்துல ராமு நிலம் எல்லாத்தையும் நான் வாங்கியிருக்கேன். உங்களுக்கும் அதே விலை போடுறேன்” என்றார் நிலச்சுவான்தார். அந்த விலை நாராயணமூர்த்தி வெகு காலமாகக் கற்பனை செய்துகொண்டிருந்ததில் பாதியளவும் இல்லை. அவர் ஒவ்வொன்றாகப் போட்டிருந்த மனக்கணக்குகள்யாவும் முடிவில்லாமல் நின்றன. இந்தப் பணத்தை இரு மகன்களுக்கும் பங்கிட்டு எஞ்சுவது அவர் வாழ்நாள் முழுவதற்கும் காணாது. நாராயணமூர்த்தி களத்தையும் சாலையையும் தாண்டி எதிரே தூரத்தில் உறைந்திருந்த மலையை உற்று நோக்கினார். அது பிரம்மாண்டமான உண்மைபோல் உருவெடுத்து நின்றது. “இப்ப உங்களுக்கு வேற வழியில்லை, நீங்க கொடுத்துதான் ஆகனும்” என்றார் தரகர் மீண்டும். “இல்ல, மகனுங்களைக் கேக்கணும்...” என்று நாராயணமூர்த்தி தடுமாறிய குரலில் கூறினார். “உங்க பெரிய மகன் ஊருக்கு வந்தப்ப பேசினேன். நீங்கதான் நடுவுல நிக்கறதா சொன்னாரு” என்றார் தரகர். “நீங்க பயப்படாதீங்க, உங்க எல்லாருக்கும் நான் சுமுகமாப் பிரிச்சிக் கொடுத்திடறேன்” என்றார் நிலச்சுவான்தார். பல பஞ்சாயத்துகளில் இறுதித் தீர்ப்புகளை வழங்கும் அவருடைய சொல்லை அனைவரும் தட்ட முடியாமல் ஒத்துக்கொள்வார்கள். நாராயணமூர்த்தி முடிவு எட்டப்பட்டுவிட்டதை உணர்ந்தார். அவருடைய கண்ணெதிரில் நிலத்தைச் சுற்றிலும் பெரிய சுவர் மாயமாக எழுந்து நின்றது. அவருடைய மகன்களுடைய உருவங்கள் உள்ளே நுழைய முடியாமல் வெளியே காத்துக்கொண்டிருந்தன.

ஏற்கனவே எழுதப்பட்ட நாடகத்தின் காட்சி முடிவடைந்ததைப் போல் நிலச்சுவான்தார் எழுந்து நிற்க நாராயணமூர்த்தியும் எழுந்தார். நிலச்சுவான்தார் பைக்குள்ளிருந்து ஒரு பணக் கட்டையெடுத்து எண்ணிப் பார்க்காமல் அவர் கைகளில் வைத்தார். “இத முன் பணமா வச்சுக்குங்க, இப்பப் பேச்சே போதும், பின்னால ஒப்பந்தம் போட்டுக்கலாம்” என்று கூறினார். அதை வாங்கவும் மறுக்கவும் இயலாமல் நாராயணமூர்த்தி மரம் போல் நின்றார். அவரை அறியாமல் கைகள் பணத்தை மூடிக்கொண்டன. தரகரும் நிலச்சுவான்தாரும் விடை பெற்றுப் புறப்பட்டுப் போனதையும் அவர் கவனிக்கவில்லை. எல்லாம் கனவில் விரைவாக நடந்து முடிந்ததுபோலிருந்தது. கார் கிளம்பிச் சென்ற பின் அவர் நம்பிக்கையில்லாமல் பணத்தை விரித்துப் பார்த்தார். நடந்தவை எல்லாம் உண்மை என்பதைப் போல ஆயிரம் ரூபாய்த் தாள்கள் கனமாக இருந்தன. அவர் கொட்டகைக்குள் புகுந்து பணக் கட்டைப் பிரித்து எண்ணத் தொடங்கினார். இவ்வளவு பெருந்தொகை அவரிடமிருப்பது இதுதான் முதல் முறை. எண்ணிக்கை பிசகி மீண்டும் சிலமுறை எண்ணி அதை மடியில் சுற்றி வைத்துக்கொண்டார். அவர் மீண்டும் கொட்டகைக்கு வெளியில் வந்து சிறிதாயிருந்தாலும் விரிந்து பரந்து தெரிந்த நிலத்தில் ஒவ்வொன்றையும் உன்னிப்பாகக் கவனித்தார். மரங்கள், நெல் வயல்கள், களம், கால்வாய் எல்லாமும் உயிரடைந்து கண்களில் துலக்கமாக விழுந்தன. அவற்றையெல்லாம் நிரந் தரமாகப் பிரியப்போகிறோம் என்கிற எண்ணம் அவருக்குள் மேலெழுந்தது. அவர் பிறந்ததிலிருந்து பழகியிருக்கும் மிருதுவான மண். காலையில் எழுந்ததும் நினைவின்றி வழக்கம்போல் நிலத்துக்குக் கிளம்பி வந்துவிடுவோம் என்று தோன்றியது. உடனே வீட்டுக்குப் பறந்து செல்ல வேண்டுமென்று நினைத்தார். அவருக்கு மகிழ்ச்சியாகவும் அதே நேரத்தில் வேதனையாகவும் இருந்தது. இப்போதே பணத்தை மனைவியிடமும் பிள்ளைகளிடமும் ஒப்படைத்து விட்டுப் பாரத்தை இறக்க வேண்டும்.

short-story-03.jpgநாராயணமூர்த்தி சாப்பாட்டுத் தூக்கை எடுத்துக்கொண்டு கொட்டகையைப் பூட்டிவிட்டுத் திரும்பினார். அப்போது சாலையின் சரிவில் ஒருவர் இறங்கி வருவது தெரிந்தது. அவருடைய தந்தை இளமைத் தோற்றத்தில் நடந்து வந்துகொண்டிருந்தார். உயர்ந்த உருவமும் அழுத்தமான நடையுடனும் அப்பா உயிர்பெற்று வந்ததைப் போலிருந்தது. அது அவருடைய இளைய மகன் வாசுதேவன் தான். அந்த உருவ ஒற்றுமைக்காக அவனை அப்பாவைப்போல் உள்ளூர அவர் கருதிக்கொள்வார். அவன் இரு கைகளிலும் இரு பெட்டிகளுடனும் தோளில் மற்றொரு பையும் தொங்க நடந்து வந்துகொண்டிருந்தான். அவன் முகம் சோர்ந்து களைத்திருந்தது. அவன் மூன்றாவது வீட்டுத் தொலைபேசி மூலமாகக்கூடத் தெரிவிக்காமல் திகைப்பளிக்கும்படி திடீரென்று வந்திருக்கிறான். அவனுடைய வருகை மிகப் பொருத்தமான நேரத்தில்தான் நடந்திருக்கிறது என்று எண்ணிக்கொண்டார். அவனிடம் நிலம் விற்றதைப் பற்றி விளக்கிச் சொல்லலாம். கொட்டகைக் கதவை மறுபடியும் திறந்தவாறு “வாப்பா, நல்லாயிருக்கியா, வேலை எப்பிடியிருக்குது?” என்று கேட்டார். அவர் அப்பாவைப் பற்றிய நினைப்பால் பெரும்பாலும் மகனைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவதில்லை. அவன் பைகளைக் கட்டிலின் மேல் இறக்கிவைத்தவாறு “நல்லாத்தானிருக்கேம்பா, நீங்க எப் பிடியிருக்கீங்க? அம்மாவும் அண்ணனும்?” என்றான். வெளியில் வந்து நிலத்தைச் சுற்றும் முற்றும் புதிய மனிதனைப் போல் பார்த்தான். “அப்பா, தாகமாயிருக்குது... தண்ணீர் ஓடலைபோலிருக்குது, பரவாயில்லை” என்று தொட்டியருகே சென்று முகம் கழுவி இரு கைகளாலும் தண்ணீரை அள்ளிப் பருகினான். அவனுடைய சட்டையின் மேல் தண்ணீர் ஒழுகி அங் கங்கே ஈரத் திட்டுகள் உண்டாயின. முகத்திலும் கைகளிலும் நீர்த் துளிகள் சொட்ட “நம்ம தண்ணிக்கு ரொம்ப ருசி, எங்கெல்லாமோ குடிச்சிருக்கேன், இதுக்கு ஈடாகாது” என்றான். அவன் கண்கள் மீண்டும் கொல்லையின் மேல் ஈர்க்கப்பட்டவை போல் சுற்றிக்கொண்டிருந்தன. அதைத் தடுப்பதைப் போல் “நான் உன்னோட பேசலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள நீயே நேரில வந்திட்ட...” என்றார் நாராயணமூர்த்தி. “ஆமாம்பா, நான் இரண்டு மூணு நாளாவே புறப்பட இருந்தேன். இன்னிக்கு தான் முடிவெடுத்து வந்தேன்” என்றான் வாசுதேவன்.

அவர் அவனையே ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார். அவன் அவரைவிட ஒரு பிடி உயரம் அதிகமாக இருந்தான். உறுதியான கறுத்த அப்பாவுடையதைப் போன்ற முகத்தில் கவலை கோடிட்டிருந்தது. அவனிடம் உடனே அனைத்தையும் சொல்லிவிட விரும்பினார். அவன் காலணியை அவிழ்த்துவிட்டுக் களத்து மேட்டுக்குச் சென்று கொல்லையை நோக்கினான். மடியிலிருந்த பணத்தை அவருடைய கை தொட்டுப் பார்த்துக்கொண்டது. அவன் வருத்தமுடன் “மரங்கள் செத்துப்போயிருக்குது . . . பயிர் வாடியிருக்குது . . .” என்றான். இந்த நிலத்தை விற்று முன்பணமும் வாங்கியாகிவிட்டது என்ற சொற்கள் நாராயணமூர்த்தியின் வாய்வரை வந்தன. ஆனால், “எங்கியும் வெள்ளாமை சரியில்லை...” என்று முணு முணுத்தார். முதலில் பணத்தை அவன் கையில் எடுத்துத் தந்துவிட்டு எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்க நினைத்தார். வாசுதேவன் வேறு எண்ணங்களில் மூழ்கியிருக்கிறான் என்ற தயக்கத்தோடு குற்ற உணர்வும் அவரைத் தடுத்தது. “அப்பா, என்னை வேலையிலிருந்து எடுத்துட்டாங்க. இன்னும் நிறையப் பேருக்கும் வேலை போயிடுச்சி. மறுபடியும் வேற யாருக்கோ உழைக்க எனக்கு விருப்பமில்ல. இனிமே நான் விவசாயம் பண்றேன், நீங்க வயசான காலத்தில சும்மா இருங்க” என்று அவரருகில் வந்து இறைஞ்சுவதைப் போல் கூறினான். “உழவு வேலையில ஒண்ணும் கிடைக்காது... நீ என்னப் பத்திக் கவலைப்படாம நல்லா யோசிச்சிப்பாரு” என்றார் நாராயணமூர்த்தி. “நான் இனிமே வேலைக்குப் போக மாட்டேம்பா. நான் மாடு வளர்த்து ஏர் ஓட்டியாவது பிழைக்கிறேன்...” என்று வாசுதேவன் சொல்லிக்கொண்டிருந்தான். அவனுடைய சொற்கள் கனவில் ஒலிப்பதைப் போல் அவருக்குக் கேட்டன

 

http://www.kalachuvadu.com/issue-132/page34.asp

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.