Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திராவிட கட்சி செம்பு தூக்கிகள் , கருணா, ஜெயா, சோனியா, விசயகாந்த் சொம்பு தூக்கிகள் எல்லாம், இந்த நண்பரின் கேள்விக்கு பதிலை கூறு பார்க்கலாம்?

Featured Replies

எனக்குள் நிறைய கேள்விகள் எழுகிறது??? உங்களுக்கும் இதே கேள்விகள் எழுந்தால், நீங்களும் தமிழனே 

***கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்தார் ஜெயா....அந்த வழக்கு என்ன ஆனது??? 

***ஜெயாவை கைது செய்து சிறையில் அடைத்தார் கருணாநிதி......அந்த வழக்கு என்ன ஆனது???வழக்கு எந்த நிலையில் உள்ளது???

***மதுரையில் ரயில் நிலையத்தில், ஸ்டாலினை ஒருவர் கத்தியால் குத்த முயன்றார் என்றொரு வழக்கு, அது என்ன ஆனது ??? வழக்கு எந்த நிலையில் உள்ளது???

***தா.கி யை வெட்டி கொன்ற வழக்கில், அழகிரி விடுதலை....அரசு, மேல்முறையீடு செய்தார்களா??? வழக்கு எந்த நிலையில் உள்ளது???

***சுடுகாட்டு கூரை வழக்கில் செல்வகணபதி விடுதலை...அரசு, மேல்முறையீடு செய்தார்களா??? வழக்கு எந்த நிலையில் உள்ளது???

***வரிசையாக ஜெயாவின் ஆடம்பர பொருட்களை அடுக்கி சன் டிவி யில் காண்பித்தார்கள்....அந்த பொருட்களெல்லாம் என்ன ஆனது......ஏதேனும் வழக்கில் சாட்சியாக உள்ளதா ?

***சொத்துக்குவிப்பு வழக்கு 16 ஆண்டுகளாக, ஏதேனும் ஒரு நாட்டில் நடக்குமா ??? இந்தியாவை தவிர ??? 
இந்த தாமதத்திற்கு உச்சநீதிமன்றம் சொல்லும் காரணம்தான் என்ன ???? 

***பாலங்கள் கட்டியதில் தவறு நடந்ததாக சொன்னார் ஜெயா ?? அப்போ அந்த ஊழலில் கருணாநிதியின் பங்கு என்ன என ஜெயா ஒரு அறிக்கை விடாமல் இருப்பதேன் ?

***கண்ணகி சிலையை லாரிக்காரன் இடித்து தள்ளினான், அதனால் விழுந்தது என்றார் ஜெயா....
அப்போ இடித்த லாரி ஓட்டுனர், லாரியின் உரிமையாளர் யார் என்பதை சொல்லிவிட்டார்களா ?????

***கருணாநிதி , தன் குடும்பத்தையே கட்சியில் முன்னிலை படுத்துகிறார் என்று தனது கட்சியின் முதல் மாநாட்டில் குற்றம் சாட்டினார் விஜயகாந்த்......அப்போ அவரது மைத்துனர் சுதீஷ், தனது மனைவிக்கு கட்சியில் பிரதான இடம் அளித்ததேன்???? 

***காங்கிரஸ் கட்சிக்கு இனிமேலும் ஆதரவளித்தால், தமிழர்கள் மன்னிக்கமாட்டார்கள் என்றார் கருணாநிதி...இப்போ தன் மகளுக்கு MP சீட்டிற்கு காங்கிரசிடம் ஆதரவு கோரினால் மட்டும் தமிழர்கள் மகிழ்வார்களா ????

***2G வழக்கில் தயாநிதியின் நிலைதான் என்ன ? அவரை விசாரிகபோவதாக சொன்னார்களே....அதன் நிலைதான் என்ன ??? 

***அடைந்தால் திராவிட நாடு..இல்லையேல் சுடுகாடு என முழங்கிய அண்ணா...அந்த கொள்கையை கைவிட்டதேன் ? 

***ஹிந்தி எதிர்ப்பு போர் தி.மு.க வினுடையதா ......அல்லது அந்த காலத்து தமிழக மானவர்களுடயதா ????? 

***தமிழரே தமிழ்நாட்டை ஆளனும் என்பதை திராவிடம் ஆதரிக்கிறதா எதிர்க்கிறதா ?????

***தமிழின தலைவர் என சொல்லபடுவபர்...SUN TV, RED GIANT, CLOUD NINE, KTV எனும் ஆங்கில பெயர்களை ஏற்கிறாரா ? எதிர்க்கிறாரா ?

***தமிழக சட்டசபையால் சட்ட மசோதாக்களை மட்டுமே தாக்கல் செய்ய முடியும்....சட்டத்தை இயற்றும் அதிகாரம் இல்லை...அது ஏன் ? இதை எந்த முதல்வரும் ஏன் வெளியே சொல்வதில்லை ?????

***தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்பதற்கு பதிலாக இன்னும் ஏன் சென்னை உயர்நீதிமன்றம் என பெயர் தாங்கி நிற்கிறது ??? அதை மாற்ற ஏன் தமிழின் தலைவர், அறிஞர் அண்ணா முயற்சிக்கவில்லை ???

***கச்ச தீவை , நெய்வேலியை தாரைவார்க்கும்போது என்ன செய்து கொண்டிருந்தன ஆண்ட திராவிட கட்சிகள்????......ஹிந்தி எதிர்ப்பு போரின் வெற்றிக்கு உரிமை கோரும் திராவிட கட்சிகள் ........கச்ச தீவு , நெய்வேலி தோல்விகளுக்கு உரிமை கோர மறுப்பதேன் ????

***கூடங்குளம் போராட்டகாரகளுக்கு அமெரிக்க நிறுவனங்களில் இருந்து பணம் வருகிறது என குற்றம் சுமத்திய மத்திய அரசு, அந்த நிறுவனங்களின் பெயர்களை வெளியிடாமல் இருப்பதேன் ????? மீண்டும் அதே அமெரிக்க அரசோடு அணு ஒப்பந்தம் போடுவதேன் ???? 

தங்கள் தலைவர் ராஜீவ் இறந்தபோது..தலைவரை தனியாக விட்டுவிட்டு ..காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் எங்கே சென்றனர் ??? 

#### இப்படி பல கேள்விகள் ....ஆனால் விடைதான் கிடைக்கவில்லை .........சிந்தியுங்கள் தமிழர்களே ...மூளை நமக்கு இருப்பது சிந்திக்கதான் ...... ####

 

இணைந்த கரங்கள்

முகனூல் 

  • கருத்துக்கள உறவுகள்
***சுடுகாட்டு கூரை வழக்கில் செல்வகணபதி விடுதலை...அரசு, மேல்முறையீடு செய்தார்களா??? வழக்கு எந்த நிலையில் உள்ளது???

 

 

சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் தீர்ப்பு; மாஜி அமைச்சர்கள் உள்பட 8 பேர் விடுதலை
 
மதுரை: தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சிகாலத்தில் சுடுகாட்டு கூரை அமைப்பதில் ஊழல் நடந்த விகாரத்தில் சி.பி.ஐ., கோர்ட் இன்று தீர்ப்பளித்தது. இதில் சம்பந்தப்பட்ட மாஜி அமைச்சர்கள் இருவர் உள்பட 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
 
ஜெ., முதல்வராக இருந்த (1995 ) நேரத்தில் தமிழகம் முழுவதும் மயானங்கள் அமைக்கப்பட்டது. இதில் மதுரை சுற்றுப்பகுதியில் பல மயானங்கள் கட்டுவதில் முறைகேடு நடந்தது.
 
இது தொர்டபாக தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அ.தி.மு.க.,வினர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தல், இலவச வேட்டிசேலை மற்றும் காலணி வழங்குதலில் ஊழல், சுடுகாட்டுகூரை அமைப்பதில் ஊழல் என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
 
உமாசங்கர் ஐகோர்ட்டில் மனு: மதுரையில் ஊரகப்பகுதியில் சுடுகாட்டு கூரை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு இருப்பதாக அப்போதைய துணை கலெக்டர் உமாசங்கர் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இதனையடுத்துசி.பி.ஐ., விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.
 
முதல்வராக இருந்த ஜெ., மீதான வழக்கு கர்நாடக சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.பி., ஜெகன்நாதன், போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் 8 பேரும் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பளித்தார்.
 
இதன்படி மாஜி அமைச்சர்கள் செல்வகணபதி, ஈஸ்வரமூர்த்தி, இவரது உதவியாளர் மோகன், ஊரக வளர்ச்சி துறை இயக்குனராக இருந்த சத்தியமூர்த்தி ஊரகவளர்ச்சி துறை செயலர் ஆச்சாரியாலு, அசோக், ராஜகோபால், உள்பட 8 பேரும் விடுதலையாயினர்.
 
போதிய ஆதாரங்கள் இல்லை : இந்த வழக்கில் 11 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதில் சம்பத் என்பவர் ஐகோர்ட் உத்தரவுப்படி விடுவிக்கப்பட்டார்.இந்த வழக்கு தொடர்பாக 138 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். குற்றங்களை நிரூபிக்கும்படியாக போதிய ஆதாரங்கள் இல்லை என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். சி.பி.ஐ.,சார்பில் வக்கீல் தெய்வேந்திரன் ஆஜரானார். செல்வகணபதி தற்போது தி.மு.க.,வில் இருக்கிறார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

திராவிடத் தலைவர்கள் என்று கேள்வி கேட்டுவிட்டு காங்கிரசினையும் கேள்வி கேட்பதன் நோக்கம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
தீதும் நன்றும் பிறர் தர வாரா !!! emailButton.png  
 

கே.பி.சுனில். இந்தியாவின் மிக முக்கியமான பத்திரிக்கை-யாளர்களுள் ஒருவராக வந்திருக்க வேண்டியவர்.  இந்தியாவின் குறிப்பிடத்தக்க ஆங்கிலப் பத்திரிக்கையான இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆப் இந்தியாவின் தென்னிந்திய கரெஸ்பான்டென்டாக இருந்தார் சுனில்.  சுனில் பழைய தலைமுறைப் பத்திரிக்கையாளர்.  இன்றைய தலைமுறைப் பத்திரிக்கையாளர்களில் பெரும்பாலானோருக்கு 1000 வார்த்தைகள் கொண்ட ஒரு கட்டுரைக்காக பல மைல்கள் பிரயாணம், பல நாட்கள் உழைப்பு என்பது புதிய விஷயமாக இருக்கும்.  ஆனால், தொலைக்காட்சி செய்திச் சேனல்கள் உருவாகாத எண்பதுகளில் தினசரி, வார இதழ்கள் ஆகியவற்றில் வரும் கட்டுரைகளுக்காக பல மணி நேரம் உழைப்பைச் செலவிடுவார்கள் பத்திரிக்கையாளர்கள்.  அவ்வாறு பல மணி நேரம் செலவிட்டு, பல தூரங்கள் பிரயாணம் செய்து,  அக்கட்டுரை பிரசுரமானதும் பலர் அக்கட்டுரை குறித்து விவாதிப்பதையும், பலர் அக்கட்டுரையைப் பாராட்டுவதையும் கேட்கையில் மேலும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று உழைப்பார்கள்.   இந்தத் தலைமுறைப் பத்திரிக்கையாளர்கள் தற்போது அருகி விட்டார்கள்.   இன்றைய தலைமுறைக்கு, உச்சஸ்தாயில், தொண்டை கிழிந்து போகும் அளவுக்கு கத்தும் அர்னாப் கோஸ்வாமிதான் சிறந்த பத்திரிக்கையாளர்.

2.jpg

கே.பி.சுனில், முந்தைய தலைமுறையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்.  இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் 1987ம் ஆண்டு ஒரு பெண்ணோடு பின்னாளில் கொலை வழக்கில் சிக்கிய ஜெயேந்திரர் ஓடிப்போனார்.  அப்படிப் போகையில் அவர் தனது கையில் இருக்கும் தண்டத்தை அறிவாலயத்திலேயே… மன்னிக்கவும்… சங்கர மடத்திலேயே விட்டு விட்டுப் போய்விட்டார். ஜெயேந்திரர் அவ்வாறு தண்டத்தை விட்டுப் போவது இந்து மதத்துக்கே எதிரானது, இனி அவர் சங்கராச்சாரியாராக தொடர இயலாது என்று இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் எழுதினார் சுனில்.   இதற்கு காஞ்சி மடம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.  ஒரு நீண்ட மறுப்பை எழுதி அனுப்பியது.

இதையடுத்து, இந்தியாவில் உள்ள மற்றொரு சங்கர மடத்தில் உள்ள ஒரு மூத்த துறவியைச் சந்தித்து, காஞ்சி சங்கர மடத்தின் விளக்கம் எத்தனை பொய்யானது என்பதை விரிவாக எழுதினார்.   காஞ்சி பெரியவாள், சின்னவாள், உறைவாள், குறுவாள் என்று அத்தனை பேரும் வாயை மூடிக்கொண்டனர்.

ஜெயலலிதாவைப் போல அகங்காரம் கொண்ட நபரை பார்க்கவே முடியாது. 1989-90 வாக்கில் தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் புடவையைப் பிடித்து இழுத்த வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. அந்தச் சம்பவங்கள் குறித்து பத்திரிக்கைகளில் வெளியிட்டதற்காக சம்பந்தப்பட்ட பத்திரிக்கையாளர்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை எடுத்து வர வேண்டும் என்று அப்போது ஜெயலலிதாவின் சொம்பாக இருந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் மனு அளித்ததைத் தொடர்ந்து முரசொலி, கோவை மாலை முரசு மற்றும் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆகிய ஊடகங்களில் வெளியிட்ட முரசொலி செல்வம், கோவை மாலை முரசின் எஸ்கேஐ.சுந்தர் மற்றும் கே.பி.சுனில் ஆகியோருக்கு 15 நாட்கள் தண்டனை விதிக்கப்பட்டது.  இவர்களை 15 நாட்கள் கைது செய்ய சபாநாயகர் வாரண்ட் பிறப்பித்தார்.  இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட போது சுனில் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியிலிருந்து ராஜினாமா செய்து விட்டு, திருபாய் அம்பானி தொடங்கியிருந்த “பிசினெஸ் அன்ட் பொலிட்டிக்கல் அப்சர்வர்” என்ற இதழில் பணிபுரிந்து கொண்டிருந்தார். இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி நிறுவனமோ, புதிய நிறுவனமோ, இரண்டு நிறுவனங்களும், சுனிலுக்கு உதவத் தயாராக இல்லை.

சம்பந்தப்பட்ட அனைவரும் தலைமறைவாயினர்.  சுனில் டெல்லி சென்று உச்சநீதிமன்றத்தில் சேடப்பட்டி முத்தையாவின் கைது நடவடிக்கைக்கு தடை பெற முயற்சி செய்தார். இங்கே உள்ள பத்திரிக்கையாளர்கள் உதவியோடும், டெல்லியில் உள்ள பத்திரிக்கையாளர்கள் உதவியோடும் சபாநாயகரின் கைது வாரண்டுக்கு தடை பெறும் முடிவுக்கு வருகிறார் சுனில்.    அப்போது டெல்லி பத்திரிக்கையாளர்கள் உச்சநீதிமன்றத்துக்கு வெளியே துண்டேந்தி பணத்தை வசூல் செய்து வந்த பணத்தை வைத்து இருப்பதிலேயே சிறந்த வழக்கறிஞரை அணுக முடிவுசெய்கின்றனர்.  அவர்களால் அப்போது வசூல் செய்ய முடிந்த தொகை ஐந்தாயிரத்துக்கும் குறைவு.

இருப்பதிலேயே அப்போது சிறந்த வழக்கறிஞர் என்று அவர்கள் கருதி, ராம் ஜெத்மலானியை அணுகுகின்றனர்.  இன்று தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று, மனித உரிமைகள் குறித்தும், அரசியல் அமைப்புச் சட்டம் குறித்தும் வாய் கிழிய பேசும் ராம்ஜெத்மலானி என்ன சொன்னார் தெரியுமா ?  50 ஆயிரம் இருந்தால் உள்ளே நுழையுங்கள்… இல்லையென்றால் அப்படியே வெளியேறுங்கள் என்கிறார்.   இல்லை… இது கருத்துச் சுதந்திரம் தொடர்பானது என்று கூறியதற்கு, உங்கள் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு எனக்கு 50 ஆயிரம் வேண்டும் என்கிறார். அந்த காலத்தில் 50 ஆயிரம் என்பது பெரிய தொகை.

அடுத்ததாக யாரை அணுகலாம் என்று ஆலோசித்து, மூத்த வழக்கறிஞர் சோலி சோரப்ஜியை அணுகுகின்றனர்.  சோலி சோரப்ஜி பீஸ் எவ்வளவு என்பதைப் பற்றியெல்லாம் ஒரு வார்தை கூட பேசாமல், உடனடியாக சுனில் வழக்கை எடுத்துக் கொண்டு, உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் கைது வாரண்டுக்கு தடை கோருகிறார்.  வழக்கை விசாரித்த நீதிபதிகள், கைது வாரண்டுக்கு தடை பிறப்பிக்கின்றனர்.   சோலி சோரப்ஜிக்கு நன்றி தெரிவித்து விட்டு,  சென்னை கிளம்ப எத்தனிக்கிறார்.  அப்போது சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா தூர்தர்ஷனுக்கு பேட்டியளிக்கிறார்.   உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்னைக் கட்டப்படுத்தாது.   நான் புதிதாக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளேன்.   சென்னையில் சுனில் கால் வைத்தால் சென்னை மாநகர காவல் ஆணையாளர் கைது செய்வார் என்று அறிவிக்கிறார்.

சென்னை வந்தால் மீண்டும் கைது செய்யப்படுவோம் என்பதை அறிந்த சுனில் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்கிறார்.   மீண்டும் சோலி சோரப்ஜியை சென்று சந்திக்கிறார்.  துரதிருஷ்டவசமாக சோலி சோரப்ஜி மும்பை நீதிமன்றத்தில் ஆஜராக இருப்பதால் அவர் டெல்லியில் இல்லை.   சோலி சோரப்ஜி சுனிலிடம், கவலைப்படாதீர்கள்.  மற்றொரு வழக்கறிஞரைப் பரிந்துரைக்கிறேன் என்று மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கை பரிந்துரைக்கிறார். இந்திரா ஜெய்சிங்கும் அன்று கொல்கத்தா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி இருப்பதால் சுனிலின் வழக்கை எடுத்துக் கொள்ள இயலாத நிலை.  தமிழ்நாடு சென்றால் கைது செய்யப்படுவோம் என்ற நெருக்கடி சுனிலுக்கு.  இந்திரா  ஜெய்சிங், மற்றொரு மூத்த வழக்கறிஞரான கே.கே.வேணுகோபாலை பரிந்துரைக்கிறார்.

மூத்த வழக்கறிஞர் வேணுகோபால் மீண்டும் சுனிலின் வழக்கை உச்சநீதிமன்றத்தில் முறையிடுகிறார்.  உச்சநீதிமன்ற நீதிபதிகள் கஸ்லிவால் மற்றும் ராமசாமி ஆகியோர் இந்த வழக்கை விசாரிக்கின்றனர்.  தமிழக சட்டப்பேரவை சபாநாயகர், தன் வரம்பை மீறிச் செயல்பட்டு வருகிறார், உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் செயல்படுகிறார், இது உச்ச நீதிமன்றத்தில் அதிகாரம் மற்றும் மாநில அரசின் அதிகாரத்துக்கு இடையே அரசியல் அமைப்புச் சட்டச் சிக்கலை ஏற்படுத்தும் செயல் என்று வாதிடுகிறார்.  உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, எங்கள் உத்தரவை அமல்படுத்தத் தவறினால், மாநில அரசைக் கலைப்பதற்கு மத்திய அரசிடம் பரிந்துரை செய்வோம் என்றனர். ஜெயலலிதா ஆடிப்போனார்.  அப்படியே பின் வாங்கினார்.

உச்சநீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று வெற்றித் திருமகனாகத் திரும்பினார் சுனில்.  டெல்லியிலிருந்து சென்னை வரும் விமானத்தில் சுனிலின் பக்கத்து இருக்கையில் அமர்ந்து பயணித்தவர் யார் தெரியுமா ?  சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா.  சுனில் அருகே அமர்ந்த சேடப்படடி முத்தையா, சுனில் வழக்கு குறித்தும், பல்வேறு அரசியல் விஷயங்கள் குறித்தும் விரிவாக விவாதித்து வந்தார்.  சென்னை விமான நிலையத்தில் இறங்கி இருவரும் பிரியும் சூழ்நிலையில், சுனில் சேடப்பட்டி முத்தையாவிடம் நீங்கள் தேடிக்கொண்டிருந்த சுனிலைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டார். சேடப்பட்டி இல்லை என்றதும், அது நான்தான் என்று கை குலுக்கி விட்டு விடைபெற்றார்.

இதுதான் சுனிலின் பின்புலம். சுனில் இப்படி சிக்கலில் மாட்டியபோது, தமிழகத்தின் பத்திரிக்கையாளர்கள் இந்தச் சிக்கலை தங்கள் சிக்கலாக நினைத்தார்கள்.  ஒட்டுமொத்த பத்திரிக்கை உலகமும் சுனில் பின்னால் நின்றது.  டெல்லியில் இருந்து திரும்பிய சுனில், சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பார் என்று எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர்.  ஆனால், சுனிலுக்குப் பதிலாக, ஏ.எஸ்.பன்னீர்செல்வன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.   சுனில் எங்கே என்று பத்திதிரிக்கையாளர்கள் கடும் கோபமடைந்து கேள்வி கேட்டதும், பன்னீர்செல்வன் பத்திரிக்கையாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு சென்று விட்டார். இதனால் அப்போது மற்ற பத்திரிக்கையாளர்கள் சுனில் மீது கடும் கோபத்தில் இருந்தனர்.

ஜெயலலிதாவுடனான பத்திரிக்கையாளர்கள் போராட்டத்தில் சுனிலோடு துணை நின்று ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க பெரிய அளவில் பாரிய முயற்சிகளை எடுத்தவர், இந்து பத்திரிக்கையின் ஆசிரியர் என்.ராம் என்பது குறிப்பிடத்தக்கது.

2280672661_f4dc889f02_b.jpg

அகங்காரம் பிடித்த ஜெயலலிதாவின் ஆணவப் பயணத்துக்கு தடை போட்டவர் என்று சுனில் இந்தியா முழுக்க பிரபலமானார்.   அவரின் இந்த பிரபலத்தை பயன்படுத்தி அப்போது வளர்ந்து வரும் தொலைக்காட்சி ஊடகத்தில் ஒரு வலுவான நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஏ.எஸ்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பத்திரிக்கையாளர்கள் முன்முயற்சி எடுத்தனர். சொந்தமாக ஒரு தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கலாம் என்று தொடங்கப்பட்டதுதான் டெலிஜும்.  இந்த தொலைக்காட்சி நிறுவனம் தொடங்க ஆரம்பகாலத்தில் பொருளுதவி கொடுத்து உதவி செய்தவர்கள் இளையராஜா, கமல்ஹாசன் மற்றும் அனந்து ஆகியோர்.

ஆனால், ஆறே மாதங்களில், செய்தியோ பொழுதுபோக்கோ, ஊடகத்தைப் பார்க்கும் பார்வையில் என்னுடைய பார்வையும் சுனிலுடைய பார்வையும் வேறு வேறானது என்பதை உணர்ந்தேன் என்கிறார் பன்னீர்செல்வம். ஒரு விளையாட்டுப் போட்டியை ஒரே ஆர்வத்தோடு இருவரும் பார்த்து மகிழ்ந்தோம் என்றாலும், நாங்கள் எதிர் எதிர் அணிகளை ஆதரித்து வந்தோம் என்பதை உணர்ந்தேன் என்கிறார் பன்னீர் செல்வம். ஆறே மாதங்களில் 1 ஏப்ரல் 1993 அன்று, பன்னீர் செல்வம் டெலிஜுமை விட்டு விலகுகிறார்.

அதன் பிறகு டெலிஜும் முழுமையாக சுனில் வசம் வருகிறது. இந்த டெலிஜும் சார்பாக ராஜ் டிவிக்கு நிகழ்ச்சிகள் தயாரிக்கும் பணியில் சுனில் ஈடுபட்டு வருகிறார்.  தொலைக்காட்சி ஊடகம் அப்போதுதான் இந்தியாவில் வளர்ந்து வரும் ஊடகம் என்பதால், பெரிய அளவில் சுனிலால் லாபம் ஈட்ட முடியவில்லை.  அப்போது ஜெயலலிதா ஜெ.ஜெ.டிவி தொடங்கி நடத்தி வந்தார்.

1996ல் அதிமுக படுதோல்வி அடைந்ததும், ஜெ.ஜெ.டிவி இழுத்து மூடப்பட்டது.  தொலைக்காட்சி கட்சி வளர்ச்சியில் எந்த அளவுக்கு பங்கு வகிக்கும் என்பதை உணர்ந்த ஜெயலலிதா மீண்டும் 1999ல் ஜெயா டிவியை தொடங்குகிறார். அதன் முழுப்பொறுப்பும், டிடிவி.தினகரன் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.  இந்தத் தகவலை அறிந்த சுனில், தனது டெலிஜும் நிறுவனத்துக்காக நிகழ்ச்சிகள் தயாரித்துக் கொடுக்கும் ஒப்பந்தத்தை வழங்குமாறு டிடிவி.தினகரனை சந்தித்துக் கேட்கிறார்.

டிடிவி.தினகரனோ, நீங்கள் உடனடியாக ஜெயா டிவியின் செய்திகளை கவனித்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.  சற்றும் தாமதிக்காமல் உடனடியாக சரி என்று சொன்ன சுனிலை ஜெயலலிதா சந்திக்கிறார்.  செய்தியைப் பொறுத்தவரை நீங்கள்தான் எல்லாமும்.  அதிமுகவின் தேவை என்ன என்பது உங்களுக்குத் தெரியும்.  அதற்குத் தகுந்தார்ப்போல செய்திகளைப் பார்த்துக் கொள்ளுங்கள் (ஜெயலலிதாவின் அறிக்கைகளை கமா, புல்ஸ்டாப் இல்லாமல் படிப்பது) என்று கூறுகிறார்.  சுனிலும் சரி என்று கூற, ஒரு சுப முகூர்த்த நாளில் சுனில், ஜெயா டிவிக்குள் காலெடுத்து வைக்கிறார்.

ஜெயலலிதாவின் ஈகோவுக்கு வானமே எல்லை.   1995 முதல் 1996 வரை, சன்டிவியில் வெளிவந்த நேருக்கு நேர் என்ற நிகழ்ச்சி கிட்டத்தட்ட ஆட்சி மாற்றத்துக்கு பெரும் காரணமாக இருந்தது என்று கூறலாம்.  அந்த நிகழ்ச்சியில், அப்போது அதிமுகவிலிருந்து பிரிந்து வந்தவர்களை பேட்டியெடுத்து, ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் வண்டவாளங்களை வெளியிடுவார்கள்.   ஒவ்வொரு வாரமும், இந்த வாரம் யார் விருந்தினர் என்று மக்கள் ஆவலோடு எதிர்ப்பார்க்கும் வகையில் அந்த நிகழ்ச்சி அமைந்தது.  அந்த நிகழ்ச்சியில் பேட்டியெடுத்தவர் ரபி பெர்நார்ட்.  இந்தியாவில் தனியார் தொலைக்காட்சி தளைக்க ஆரம்பித்திருந்த அந்த நேரத்தில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சி, பரபரப்பாக மக்கள் மத்தியில் தொற்றிக் கொண்டது.   பெரும் வரவேற்பைப் பெற்றது.

1996 தேர்தலில் அதிமுகவின் படுதோல்விக்குப் பிறகு, அப்போது விஜய் டிவியில் பணியாற்றிய ரபி பெர்நார்ட் ஜெயலலிதாவை ஒரு பேட்டியெடுத்தார்.  அத்தோடு சரி.  காயடிக்கப்பட்ட காளையாக மாற்றப்பட்ட ரபி பெர்நார்ட், ஜெயா டிவியில் அடிமைகளோடு அடிமையாக மாறிப்போனார்.  இன்று அவர் மாநிலங்களவை உறுப்பினராக ஜெயலலிதாவால் தேர்ந்தெடுக்கப்படும் அளவுக்கு விசுவாசமான அடிமையாக இருந்தார்.

ஒரு காலத்தில் அதிமுக படுதோல்வி அடையக் காரணமாக இருந்த ரபிபெர்நார்ட் எப்படி ஜெயலலிதாவின் அடிமையாக மாற்றப்பட்டாரோ அதே போலத்தான் சுனிலும்.  சுனில் வேலை கேட்கிறார் என்றதும், நம்மை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற ஒரு நபரை, நமது அடிமையாக வைத்திருக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் ஈகோ வெற்றி பெற்றது.

simran-for-teenage-bonanza-jaya-tv-press

காலம்தான் எத்தனை தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்துகிறது !!!!

1999ல் ஜெயா டிவி தொடங்கிய காலத்தில் வருமானமெல்லாம் கிடையாது.  ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கே கடன் வாங்க வேண்டிய நிலை.  1991-1996 அதிமுக ஆட்சியில் அமைச்சர் கண்ணப்பனிடம் உதவியாளராக இருந்த சார்புச் செயலர் இசக்கிமுத்து என்பவருக்கு வேலையே, தமிழகம் முழுக்க இருந்த அதிமுகவின் மாவட்ட அடிமைகள், மன்னிக்கவும், மாவட்ட செயலாளர்களைச் சந்தித்து, ஜெயா டிவிக்கு நிதி வசூலிப்பதுதான்.   இரண்டு மாதங்களுக்கெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து ஊதியம் கொடுக்கப்பட்ட காலம் உண்டு.

2002ம் ஆண்டு வாக்கில் ரங்கா என்கிற ரங்கநாதன் ஜெயா டிவிக்குள் அடியெடுத்து வைக்கிறார்.  செய்திகளைப் பொறுத்தவரை நமது எம்ஜிஆர் இதழின் ஆசிரியராக இருந்த பாவைச் சந்திரன் பிரதான பங்கு வகித்தார்.  அப்போது ஜெயா டிவி அலுவலகத்தின் ரிசெப்ஷனில் அமர்ந்து பணியாற்றியவர் ஜனா என்கிற ஜனார்த்தனம்.

2001ல் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், இசக்கி முத்துவை அழைத்த ஜெயலலிதா, அவருக்கு தலைமைச் செயலகத்தில் புதிய பதவி ஒன்றை அளித்தார்.

2001ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு, ஜெயா டிவியின் வருமானத்துக்கு ஒன்றும் குறைவில்லை.  சுனிலின் முக்கியத்துவமும் அதிகரித்தது.  2001ல் கருணாநிதியின் நள்ளிரவுக் கைதுக்குப் பிறகு, ஜெயலலிதா அரசுக்கு கடும் அவப்பெயர் ஏற்பட்டது.  ஆட்சியே கலைக்கப்படும் அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டது.  அப்போது என்ன செய்வதென்று தெரியாமல், அவப்பெயர் ஏற்படுத்திய முட்டாள் போலீசைத் திட்டிக் கொண்டிருந்தார் ஜெயலலிதா.  அப்போது சுனில்தான், சன் டிவியில் ஒளிபரப்பான கருணாநிதி கைதின் நள்ளிரவு வீடியோவின் மறுபக்கத்தை ஒளிபரப்ப ஏற்பாடு செய்தார்.  கைது செய்ய சென்ற காவல்துறையினரை உள்ளே அனுமதிக்காமல் தகராறு செய்தது, போலீசை மிரட்டியது, முரசொலி மாறன், காவல்துறையினரை அடித்தது, காலால் எட்டி உதைத்தது போன்ற வீடியோக்கள் காவல்துறையினர் வசம் இருந்தன.  அந்த மங்குணிப் பாண்டியர்கள் அந்த வீடியோக்களை பத்திரமாக பூட்டி வைத்திருந்தனர்.  சுனில்தான் அந்த வீடியோக்களை வாங்கி, ஜெயா டிவியில் அந்த வீடியோவை ஒளிபரப்பி, சேதத்தை கட்டுப்படுத்தினார்.

தொடக்க காலத்தில் சுனிலின் முக்கியமான வேலை, ஜெயலலிதாவின் ஆங்கில அறிக்கைகளை திருத்தித் தருவதே. அது தவிர, வடநாட்டிலிருந்து ஜெயலலிதாவை சந்திக்க வருபவர்களை சரிபார்த்து, அனுப்பலாமா வேண்டாமா என்று முடிவு செய்து, அவர்களை அனுப்புவதும் சுனிலின் வேலை. ஜெயா டிவியில் வேலை பார்த்துக் கொண்டே, தனது தொழிலையும் சுனில் விரிவுபடுத்தத் தவறவில்லை.  2003ல் நியூ ஆவடி சாலையில், விஷுவல் கம்யுனிகேஷன் பயிற்சி மையம் ஒன்றைத் தொடங்கினார் சுனில்.  ஆனால் சிறிது காலத்தில் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

இந்த நிலையில்தான் ஜெயா டிவியின் முழுமையான கட்டுப்பாடு, டிடிவி.தினகரனின் மனைவி அனுராதா வசம் வருகிறது. தொடக்க காலத்தில் அனுராதாவுக்கு டிவியைப் பற்றி மட்டுமல்ல.. எதைப்பற்றியுமே ஒன்றும் தெரியாது.  மன்னார்குடியில், மாடு மேய்த்துக் கொண்டிருக்க வேண்டியவரை டிவி சேனலின் நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளச் சொன்னால் என்ன செய்வார் ?  அவரும் நாம் எப்படி இவ்வளவு பெரிய டிவியை பார்த்துக் கொள்வது என்று மலைத்த நேரத்தில் அவருக்கு உதவ, ஜெயா டிவியின் ரிசெப்ஷனில் பணியாற்றிக் கொண்டிருந்த ஜனா வருகிறார்.  ஜனா, அனுராதாவுக்கு எடுபிடியாகி, நாளடைவில் அனுராதாவின் காரியதரிசியாக மாறுகிறார்.   ஒரு கட்டத்தில் ஜனா என்ன சொன்னாலும், அது அனுராதாவின் சொல் என்ற அளவுக்கு மாறிப் போகிறது.  காற்று எந்தப்பக்கம் வீசுகிறது என்பதை புரிந்து கொண்ட ரங்கா என்கிற ரங்கநாதன் மற்றும், பாலா சுவாமிநாதன் ஆகியோர் அனுராதாவின் பக்கம் சாய்கிறார்கள்.  இவர்களோடு செந்தில்நாதன் என்பவரும் அனுராதாவின் நம்பிக்கைக்குரியவராக ஆகியரார்.  இந்த செந்தில்வேலன் அனுராதாவின் உறவினர்.

ஏற்கனவே ஜெயலலிதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்றதால் ஜெயலலிதா ஏதாவது செய்து விடுவாரோ என்ற அச்சத்திலேயே இருந்து வந்த சுனில், சில காலத்துக்கு அமைதியாகவே இருக்கிறார். எந்த முடிவுகளிலும் சுனில் கலந்தாலோசிக்கப்படுவது கிடையாது.  காலம் செல்லச் செல்ல, சுனிலும் தனக்கென ஒரு அணியை அமைப்பது அவசியம் என்று உணர்ந்து, தனக்கென ஒரு அணியை உருவாக்கத் தொடங்குகிறார்.    அப்படி சுனில் உருவாக்கிய அணியில் இடம்பிடித்தவர்தான் உதயக்குமார்.  இந்த உதயக்குமார் சுனில் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவதோடு, சுனிலின் புகழ்பாடும் நபராகவும் மாறுகிறார்.  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் விஷுவல் கம்யூனிக்கேஷன் படித்து, பயிற்சிக்காக ஜெயா டிவிக்குள் நுழைந்தவர்கள் ஆன்டன் மற்றும் ரமணி.  இவர்கள் இருவரும் சுனில் அணியில் இணைகிறார்கள்.   இப்படி மன்னார்குடி டேர் டெவில்ஸ் மற்றும் கோட்டயம் வாரியர்ஸ் ஆகிய இரு அணிகளுக்கிடையே நாளுக்கு நாள் மோதல் வலுத்து வருகிறது.

இரு அணிகளும் ஆளுக்கு ஆள் தங்ளகால் முடிந்த அளவுக்கு ஜெயா டிவியில் சுருட்டுகிறார்கள்.  ஆளிள்ளாத சொத்து யார் கேட்கப்போகிறார்கள் ?  மன்னார்குடி டேர் டெவில்ஸ் பல மேட்சுகளில் தங்கள் கேப்டன் அனுராதாவின் தயவால் வெற்றி பெறுகிறார்கள்.   கோட்டயம் வாரியர்ஸ் அப்படி நேரடியாக ஜெயா டிவியில் கொள்ளையடிக்க முடியாமல் வெளியில் வசூலிக்கத் தொடங்குகிறார்கள்.  தேர்தல் சமயத்திலெல்லாம் சுனில் அணியில் உள்ள உதயக்குமார் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஜெயலலிதாவின் கான்வாயோடு போகிறேன் என்று சொல்லி கிளம்பி விடுவார்.  இந்தப் பிரச்சாரத்தில் ஜெயலலிதாவோடு சென்றதற்காக ஆன செலவு 5 லட்சம் என்று ஜெயா டிவி கணக்கில் எழுதி விடுவார்.  ஆனால் சென்ற இடத்திலெல்லாம் அதிமுக அடிமைகளிடம் வசூலை அள்ளிக் குவித்து விடுவார்.

இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மன்னார்குடி டேர் டெவில்ஸ் மற்றும் கோட்டயம் வாரியர்ஸ் அணிகளுக்கு இடையேயான மோதல்கள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், கோட்டயம் அணி தோல்வியைச் சந்தித்து வந்தது.  இந்நிலையில் அணியின் கேப்டன் சுனிலிடம், ஜெயலலிதா, ஜெயா டிவி எப்படி நடக்கிறது என்று ஒரு ரகசிய ஆய்வறிக்கையைக் கேட்கிறார்.  கேட்க வேண்டுமா… எங்கெங்கு பணம் வாங்கினார்கள், யாரிடம் கமிஷன் வாங்கினார்கள் என்ற விபரங்களையெல்லாம் சுனில் ஒரு விரிவான அறிக்கையாக தயாரித்து போயஸ் தோட்டத்துக்கு அனுப்புகிறார்.  அந்த அறிக்கையைப் படித்த ஜெயலலிதா, அனுராதாவை வீட்டுக்கு அனுப்புவது என்று முடிவெடுக்கிறார்.  ஒரு நாள் அனுராதா, ரங்கநாதன், சுனில் ஆகியோர் ஜெயலலிதாவால் தோட்டத்துக்கு அழைக்கப்படுகிறார்கள்.  அங்கே அனுராதாவை காய்ச்சி எடுத்த ஜெயலலிதா, நாளை முதல் அனைத்து சுனிலிடம் ஒப்படைத்து விட்டு நீங்கள் வெளியேறலாம் என்று கூறுகிறார்.  மன்னார்குடி அணி, கடுமையான பின்னடைவை சந்திக்கிறது.  அம்பயரே மன்னார்குடி அணியின் பக்கம் இருந்தால் மேட்சில் எப்படி கோட்டயம் அணி ஜெயிக்க முடியும் ?   அம்பயரான சசிகலா, ஜெயலலிதாவிடம் கண்ணீரோடு அனுராதாவை மன்னிக்குமாறு கேட்கிறார்.   மனம் உருகிய ஜெயலலிதா, மீண்டும் அனுராதாவே அனைத்துப் பொறுப்புகளையும் பார்ப்பார் என்று உத்தரவிடுகிறார்.

மீண்டும் மன்னார்குடி அணி வலுவான நிலையை அடைகிறது.  அது வரை சுனிலின் ஜாக்பாட் ஷுட்டிங் ஜெயா டிவியின் தளங்களில் நடந்து வருகிறது.  தனக்கு பின்னடைவு ஏற்பட்டதற்கு சுனில்தான் காரணம் என்பதை அறிந்த அனுராதா, சுனிலின் படபடிப்புக்கு இனி ஜெயா டிவியில் இடமில்லை என்று அறிவிக்கிறார்.   பின்னடைவைச் சந்தித்த சுனில் நல்ல நாள் வரும் வரை காத்திருக்கிறார்.

மீண்டும் 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், மன்னார்குடி அணிக்கு கொண்டாட்டமோ கொண்டாட்டம்.  அதிமுக ஆட்சிக்கு வந்ததும் விளம்பரதாரர்கள் ஜெயா டிவியை அம்முகிறார்கள்.  ஜெயா டிவிக்கு விளம்பரம் கொடுத்தால் அம்மாவின் கடைக்கண் பார்வை நமக்குக் கிடைக்கும் என்று எண்ணி விளம்பரங்களை கொட்டுகிறார்கள். இதற்கு நடுவே, புதிதாக தொடங்கப்பட்ட ஜெயா ப்ளஸ், ஜெயா மேக்ஸ், மற்றும் ஜெயா மூவிஸ் ஆகியவற்றில் உள்ள விளம்பர ஸ்லாட்டுகளுக்கும் ஏக கிராக்கி ஏற்படுகிறது.  சாதாரணமாக விளம்பரம் கொடுத்தால் வரும் வருவாயை விட, செக்ஸ் டாக்டர்கள், ரியல் எஸ்டேட் விற்பனையாளர்கள், அதிருஷ்டக் கல், நேமாலஜி, ஜெம்மாலஜி, கும்மாலஜி, போன்ற மோசடிப் பேர்விழிகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு வருவாய் அதிகம்.  ஏனென்றால் ஜெயா டிவியில் நிகழ்ச்சி நடத்திய கும்மாலஜி மோசடிப் பேர்விழிகள் ஒரே  வருடத்தில் கோடீஸ்வரர்கள் ஆகியிருக்கிறார்கள். ஒரு நாள் நிகழ்ச்சி நடத்துவதற்கு ஜெயா ப்ளஸ் கட்டணம் 55 ஆயிரம் ரூபாய்.  இப்படி ஜெயா டிவியில் நிகழ்சசி நடத்தி பணக்காரனான ஒரு நபர் அம்மன் அருள் பழனிநாதன்.  இந்த அம்மன் அருள் பழனிநாதன், சாதாரண நபராக டாடா இண்டிகாவில் வந்த பழனிநாதன் மஹிந்த்ரா ஜைலோ காரில் பின்னாளில் வலம் வந்தார். இதற்கு ஒரே காரணம் ஜெயா டிவி நிகழ்ச்சி.   ஜெயா ப்ளஸ்ஸில் வரும் ரியல் எஸ்டேட் நிகழ்ச்சிகளைப் போன்ற மோசடியை எங்குமே பார்க்க முடியாது.  முதலில் தாம்பரம் ரயில் நிலையத்தைக் காண்பித்து ரயில் நிலையத்துக்கு வெகு அருகில் என்று அறிவிப்பார்கள்.  அந்த இடம் விழுப்புரத்துக்கு அருகில் இருக்கும்.  இப்படிப்பட்ட மோசடி விளம்பரங்களைப் பார்த்து, வலையில் சிக்கிய நடுத்தர வர்க்கத்தினர் ஏராளம்.  இதே போன்ற மற்றொரு மோசடிதான் கல்வி நிறுவனங்களின் நிகழ்ச்சி.  எங்கள் கல்வி நிறுவனத்தில் பயின்றால், மாதம் 20 ஆயிரம் ரூபாய்க்கு வேலை என்று கூசாமல் புளுகுவார்கள்.  இந்த விளம்பர நிகழ்ச்சிகள் வசூலில் சுனிலுக்கும் கணிசமான பங்கு உண்டு.

Jaya-Tv-14th-Anniversary-Stills5034CHch1

இந்த நிலையில்தான் 2011 இறுதியில் சசிகலா போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்படுகிறார்.   சசிகலா வெளியேற்றப்பட்டதும், அனுராதாவும் ஜெயா டிவியிலிருந்து வெளியேறுகிறார்.  ஒரு காலத்தில் ஜனா வைத்ததே சட்டம் என்று இருந்த ஜெயா டிவியில் காலம் மாறுகிறது.  தனது முதுகு வலிக்காக சிகிச்சை எடுத்துத் திரும்பிய சுனில், ஜனாவின் வசம் புதிய டாட்டா க்ராண்ட் வாகனம் இருப்பதைப் பார்த்து, தனக்கு முதுகு வலி இருப்பதால், தனக்கு டாட்டா க்ராண்ட் வாகனத்தை தருமாறு கேட்கிறார்.   சாதாரணமாக ரிசெப்ஷனில் இருந்து அனுராதாவின் உதவியாளரான அந்த ஜனா, சுனிலிடம், உங்களுக்கு முதுகு வலி என்றால், உங்கள் வீட்டில் உள்ள உங்களின் சொந்த ஸ்கார்ப்பியோவை எடுத்து பயன்படுத்துங்கள்… இந்த வாகனத்தைத் தர முடியாது என்கிறார். இது பழைய சம்பவம்.

அனுரதா வெளியேறிய மறுநிமிடம், டாட்டா க்ராண்ட் வாகனம் சுனில் வசம் மாறுகிறது.  அனுராதா வெளியேறியதும், அவரது ஆதரவாளர்களான ரங்கா என்கிற ரங்கநாதன், ஜனா, முரளிராமன் உள்ளிட்ட அனைவரும் படிப்படியாக ஓரங்கட்டப்படுகிறார்கள்.   பின்னர் வெளியேற்றப்படுகிறார்கள் ஜெயா டிவியின் அறிவிக்கப்படாத மேலாண்மை இயக்குநராகிறார் சுனில்.  ஜெயா டிவியில் அடிமைகளாகவே இருந்து பழக்கப்பட்ட அனைவருக்கும் திடீரென்று எஜமானன் இல்லாவிட்டால் எப்படி வாழ முடியும் ?   அதனால் சுனிலை தங்களின் அறிவிக்கப்படாத எஜமானனாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

நானே ராஜா, நானே மந்திரி என்று ஒரு சர்வாதிகாரியின் மனநிலைக்கு வருகிறார்.  தனது எதிரிகளை படிப்படியாக ஓரங்கட்டி ஒழித்தே விட்டார்.  ஒரு காலத்தில் ஜாக்பாட்டின் ஷுட்டிங்குகள் ஜெயா டிவி அரங்கத்தில் நடத்தக்கூடாது என்று தடை செய்யப்பட்டிருந்த அதே நிகழ்ச்சி ஜெயா டிவியின் தளங்களில் தடபுடலாக நடைபெற்றது.  அந்த நேரத்தில்தான் ஈடிஏ ஸ்டார் குழுமம் சுனிலை அணுகுகிறது.  கருணாநிதியோடு ஈடிஏ ஸ்டார் குழுமத்துக்கு ஜெயலலிதா அரசு பதவியேற்றதிலிருந்தே கடும் நெருக்கடி. ஸ்டார் குழுமத்தின் இலவச மருத்துவக் காப்பீடு மற்றும், அரசு ஊழியர் மருத்துகக் காப்பீடு திட்டத்தை ரத்து செய்தார் ஜெயலலிதா.  தலைமைச் செயலக கட்டுமானத்தில் நடைபெற்ற ஊழலை விசாரிக்க தனி விசாரணை ஆணையம் அமைத்தார்.

ஏப்ரல் 2010ல் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் ஈடிஏ ஸ்டார் குழுமம் பற்றி இப்படித் தெரிவித்தார்.

“எண்ணூர், தூத்துக்குடி அனல் மின் நிலையங்களுக்கு ஆண்டுதோறும் 6 மில்லியன் டன்னுக்கும் அதிகமான நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. கூடுதல் விலைக்கு ஆண்டுதோறும் நிலக்கரி இறக்குமதி செய்வதன் மூலம் மின்சார வாரியத்துக்கு ரூ. 1,000 கோடி இழப்பு ஏற்படுகிறது. எனவே, வாரியம் நஷ்டத்தில் இயங்குவதில் ஆச்சரியம் இல்லை.

250 மில்லியன் டன் நிலக்கரியை இருப்பு வைத்துள்ள இந்தோனேசியாவின் "பாரா எனர்ஜி மக்மூர்' என்ற நிறுவனத்தை வாங்கியுள்ள "ஸ்டார் எம்சன்ஸ் ரிசோர்ஸ்' நிறுவனத்திலிருந்துதான் பெரும்பாலான நிலக்கரிஇறக்குமதி செய்யப்படுகிறது.

இந்த நிறுவனத்தை விருத்தி செய்தது துபாயைச் சேர்ந்த ஈடிஏ ஸ்டார் குழுமம். இக்குழுமத்துக்கு சொந்தமான "ஈஸ்ட் கோஸ்ட் கன்ஷ்ட்ரக்ஷன்' நிறுவனம் தான் ரூ. 700 கோடி மதிப்பில் தலைமைச் செயலகத்தையும், கோட்டூர்புரத்தில் பல கோடி மதிப்பிலான நூலகத்தையும் கட்டி வருகிறது.

இதே நிறுவனம் தான், "ஈடிஏ ஸ்டார் இன்ஸ்சூரன்ஸ்' என்ற பெயரில் ரூ. 2 ஆயிரம் கோடி காப்பீட்டுத் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. 1973ல் ஜெமினியின் குறுக்கே கட்டப்பட்ட அண்ணா மேம்பாலத்தை இந்நிறுவனம் தான் கட்டியது. அது குறித்து சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆருக்கு போட்டியாக முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க. முத்து நடித்த "பிள்ளையோ பிள்ளை' படத்தை விநியோகம் செய்ததும் இக்குழுமம்தான்.

இதே நிறுவனம் தான் "ஜெனக்ஸ் எக்சிம்' என்ற பெயரில் ஸ்பெக்ட்ரம் ஊழலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒரு லட்சம் கோடியிலிருந்து ஆயிரக்கணக்கான கோடிகளை இந்தியாவுக்கு வெளியே எடுத்துச் சென்றுள்ளது.”

ஜெயலலிதாவுக்கு இந்த அறிக்கையைத் தயாரித்துக் கொடுத்ததே சுனில்தான். ஈடிஏ ஸ்டார் குழுமத்துக்கும், கருணாநிதிக்கான தொடர்பும் குறித்து ஜுனியர் விகடனில் வெளிவந்த கட்டுரை சவுக்கில் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளதை இந்த இணைப்பில் காணவும்.

இப்படி ஜெயலலிதாவால் கடுமையாக கண்டிக்கப்பட்ட ஈடிஏ ஸ்டார் குழுமம் இன்று அதிமுக அரசோடு ஐக்கியமாகியிருப்பது உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.  இதன் உபயம் சுனில்.

இந்த ஈடிஏ ஸ்டார் குழுமத்துக்கு அரசிடமிருந்து வரவேண்டிய நிலுவைத்தொகைகள் கோடிக்கணக்கில் பாக்கியிருந்தன.   ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளான நிறுவனம் என்பதால், அரசு அதிகாரிகள் இந்த பாக்கித் தொகைகளை இந்நிறுவனத்துக்கு தராமல் விசாரணை நிலுவையில் உள்ளது என்பதைக் காரணம் காட்டி நிறுத்தி வைத்திருந்தனர்.

ஜெயலலிதா அரசால் நெருக்கடிகளுக்கு மேல் நெருக்கடிக்கு ஆளாகி, விரக்தியின் விளிம்புக்கே சென்ற ஈடிஏ ஸ்டார் குழுமம் எப்படி இந்த அரசோடு சமாதானமாவது என்று ஆலோசித்து தேர்ந்தெடுத்த நபர்தான் சுனில்.  மலையாளி லாபி மூலமாக சுனிலை அணுகுகிறார்கள். சுனிலின் நிறுவனமான டெலிஜும் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் ஜாக்பாட் நிகழ்ச்சியின் ஷுட்டிங் துபாயில் நடைபெற்றது.  அந்த நிகழ்ச்சி துபாயில் ஷுட்டிங் எடுக்கப்பட்டதற்கான மொத்த செலவுகளையும், ஈடிஏ ஸ்டார் குழுமம் ஏற்றுக் கொண்டது.   ஈடிஏ ஸ்டார் குழுமம் செலவில் ஷுட்டிங் எடுக்கப்பட்ட ஜாக்பாட் நிகழ்ச்சிக்கான தயாரிப்புச் செலவுகளை, சுனில் ஜெயா டிவிக்கு இந்நிகழ்ச்சியை விற்பனை செய்கையில் சேர்த்து விற்பனை செய்து, தனக்கு எவ்விதமான செலவும் இல்லாமல் வெறும் லாபத்தை மட்டுமே பார்த்தார்.  இந்த மோசடி ஜெயா டிவி நிறுவனத்துக்குள் பரபரப்பாக பேசப்பட்டு வந்தாலும், சுனில்தான் ஜெயா டிவியின் சக்ரவர்த்தியாகி விட்டாரே… அவரை யார் கேட்பது ?

தான் நிர்வாகப் பொறுப்பை எடுத்ததன் அறிகுறியாக ஜெயலலிதாவை கவர வேண்டும் என்பதற்காக, சுனில், ஜெயா குழுமத் தொலைக்காட்சிகளின் மொத்த லாபம் என்று 4 கோடி ரூபாய்க்கான காசோலையை ஜெயலலிதாவிடம் சென்று கொடுத்தார்.  ஜெயலலிதா சுனிலிடம், தொலைக்காட்சி தொடங்கிய 13 ஆண்டுகளில் இப்போதுதான் முதல் முறையாக லாபம் என்று பணத்தை எடுத்து வந்து கொடுத்திருக்கிறீர்கள் என்று கூறி விட்டு, இந்தத் தொகை எனக்கு வேண்டாம்.  இந்தப் பணத்தை தொலைக்காட்சியை மேலும் வளர்ப்பதற்கு பயன்படுத்துங்கள் என்று சுனிலிடமே அந்தத் தொகையை திருப்பிக் கொடுத்து விட்டார்.

இதன் பிறகு புதிய திரைப்படங்கள் வாங்குவதில், சுனில் வகித்த பங்கு குறித்து, சவுக்கில் விரிவாக விஸ்வரூபம் கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது.  இப்படி புதிய படங்கள் வாங்குவதிலும், சுனில் ஏராளமான வருமானம் ஈட்டினார்.

சுனில் மீது ஜெயா டிவியில் பணியாற்றும் ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்தது ஊதிய உயர்வு விவகாரத்தில்தான்.  ஜெயா டிவியின் 14வது ஆண்டு விழாவை ஒட்டி எம்.எஸ்.விஸ்வநாதன் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயலலிதா, ஜெயா டிவி ஊழியர்கள் அனைவருக்கும் 30 சதவிகிதத்துக்கும் குறையாமல் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று மேடையிலேயே அறிவித்தார்.

இதையடுத்து, 30 சதவிகிதம் ஊதிய உயர்வு என்று எதிர்ப்பார்த்துக் காத்திருந்த ஜெயா டிவி ஊழியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.   சப் எடிட்டர்கள் உள்ளிட்டோருக்கு வெறும் 20 சதவிகிதம் மட்டுமே ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது.  சுனிலுக்கு ஜால்ரா போட்டு சுனில் விசுவாசிகளாக இருந்த உதயக்குமார், ரமணி போன்றோருக்கு ஊதியம் இரட்டிப்பாக்கப்பட்டது.  ரமணி என்பவர்தான் ஜெயா டிவியின் தலைமைச் செய்தியாளர்.  இந்த ரமணி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் படித்தபோது, பயிற்சிக்காக ஜெயா டிவிக்கு வருகிறார்.  பயிற்சிக்கு வந்தபோது ஜெய டிவியில் சேர்ந்த அவர், அதன் பிறகு, திரும்பவேயில்லை.  ஜெயா டிவியிலேயே செட்டிலாகி விட்டார். மாதம் 3 ஆயிரம் ரூபாய்க்கு வேலைக்குச் சேர்ந்த ரமணியின் மாதச் சம்பளம் இன்று 60 ஆயிரம்.  தொடர்ந்து ஒரே நிறுவனத்தில் பணியாற்றி அதன் மூலம் முன்னேறியது வரவேற்கத்தகுந்த விஷயமே.  ஆனால், ரமணியின் பிரதான வேலை ஜெயா டிவியில் கிடையாது.  தலைமைச் செயலகத்தில் முதல்வர் அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரிகளாக உள்ள தங்கையன் மற்றும் சரவணமேனாடு சேர்ந்து, தரகு வேலை பார்ப்பதுதான் ரமணியின் பிரதான பணியே.   தொழில் தொடங்குவோர், கல்வி நிறுவனம் நடத்துவோர், போன்றவர்களை உரிய அதிகாரி மற்றும் அமைச்சர்களிடம் அறிமுகப்படுத்தி அவர்களின் வேலைகளை முடித்துக் கொடுப்பதுதான் இவரின் பிரதான வேலை.  சமீபத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், இவரது மனைவிக்கு அரசு வேலை கிடைத்துள்ளது.  இவர் மனைவி முழுத் திறமையோடு இந்த வேலையைப் பெற்றிருக்கலாம் என்றாலும் கூட, தலைமைச் செயலகத்தில் உள்ள இவரது தொடர்புகளால்தான் இந்த வேலையைப் பெற்றுள்ளார் என்றே பேசப்படுகிறது.

குறைவான ஊதிய உயர்வு பெற்ற அனைத்து ஊழியர்களும் கடும் எரிச்சலாகி மனக்குறையோடு, அனுராதாவின் வெளியேற்றத்துக்குப் பிறகு தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட ராகவேந்திர ராவைப் பார்த்து முறையிடுகின்றனர்.  ஜெயலலிதாவே 30 சதவிகித ஊதிய உயர்வு வழங்கியும், சுனில் தர மறுக்கிறார், அவருக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் 100 சதவிகித ஊதிய உயர்வு வழங்கியிருக்கிறார் என்று முறையிடுகிறார்கள்.  ராகவேந்திர ராவ், சுனிலையே பார்த்து முறையிடுமாறு கூறுகிறார்.   பிரச்சினை கை மீறுவதை உணர்ந்த சுனில், உடனடியாக அனைத்து ஊழியர்களுக்கும் தலா 1000 ரூபாயை வழங்கி, பின்னர் ஊதிய உயர்வும் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

Power tends to corrupt, and absolute power corrupts absolutely என்று லார்ட் ஆக்டன் சொன்னதற்கு எந்த மாற்றமும் இல்லாமல், சுனிலுக்கு கிடைத்த அளவுகடந்த அதிகாரம் அவரை ஒரு மிகப்பெரிய ஊழல் பேர்விழியாக மாற்றி விட்டிருக்கிறது.  ஊழல் பேர்விழியாக மட்டும் இல்லாமல் சுனிலை ஒரு நன்றிகெட்ட மனிதராகவும் மாற்றியிருக்கிறது.

மன்னார்குடி மாபியா கூட்டம் வரைமுறை இல்லாமல் கொள்ளையடித்த காரணத்தால்தான் சுனிலை அனைத்துப் பொறுப்புகளுக்கும் சேர்த்து நியமித்தார் ஜெயலலிதா.  சுனிலுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்கிய ஒரே காரணம், அவர் மீதிருந்த நம்பிக்கைதான்.

ஒரு வகையில் ஜெயலலிதாவை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது.  கருணாநிதியைச் சுற்றி சுற்றி உறவினர்கள்.  சென்னையில் ஒரு பகுதியை மொத்தமாக ஒதுக்கினால் அந்தப் பகுதி முழுவதும் கருணாநிதியின் உறவினர்கள் இருப்பார்கள்.  ஆனால் ஜெயலலிதா, இந்த மன்னார்குடி கூட்டத்தை நம்பியே இருக்க வேண்டியிருக்கிறது.  அந்த மன்னார்குடி கூட்டமோ ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இல்லாமல் தங்கள் நலனை வளர்ப்பதிலேயே குறியாக இருக்கிறது.  ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருப்பவர்கள் அவர் அருகில் இல்லை என்பதுதான் வேதனையான விஷயம்.  ஆனால் மன்னார்குடி கூட்டத்தை நம்புவதைத் தவிர ஜெயலலிதாவுக்கு வேறு வழியே இல்லாத காரணத்தால்தான் வெளியேற்றப்பட்ட மன்னார்குடி கூட்டம் மீண்டும் போயஸ் தோட்டத்துக்குள் நுழைந்துள்ளது.

jaya_tv_14th_anniversary_2012_photos00-0

டெலி ஜும் நிறுவனத்தை தொடர்ந்து நடத்தியிருந்தால் சுனில் இன்று இருக்கும் அளவுக்கு செல்வந்தராக இருந்திருக்க முடியாது. அவருக்கு இன்று இருக்கும் பணமும் அதிகாரமும் அவரிடம் நிச்சயம் இருந்திருக்காது.  இன்று அவருக்கு இருக்கும் சொகுசுகளும், ஏகபோகங்களும், ஜெயலலிதா அளித்தவையே.  இதை மனதில் வைத்தாவது சுனில் ஜெயலலிதாவுக்கு கொஞ்சமாவது விசுவாசமாக இருந்திருக்கலாம்.  ஆனால் அவரின் சுயநலம் அவர் கண்ணை மறைத்து விட்டது.  துரோகம் செய்து ஜெயலலிதாவிடம் சிக்கினால் என்ன ஆகும் என்பது அதிமுக அடிமைகளுக்கு நன்றாகத் தெரியும்.   அப்படித்தான் சுனிலும் சிக்கிக் கொண்டுள்ளார்.

சவுக்கில் வெளிவந்த விஸ்வரூபம் கட்டுரையைத் தொடர்ந்து சுனில் மீது, உளவுத்துறை விசாரணை நடைபெற்றுள்ளது. அந்த விசாரணை அறிக்கையைப் பார்த்து கடும் கோபமடைந்த ஜெயலலிதா, சுனில், தலைமை செயல் அலுவலர் ராகவேந்திர ராவ் மற்றும் தலைமைச் செய்தி ஆசிரியர் தில்லை ஆகியோரை வரவழைத்து, போயஸ் தோட்டத்தில் கடுமையாக திட்டியிருக்கிறார். அப்போது ரபி பெர்நார்டையும் வரவழைத்து, ஜெயா டிவியின் செய்தி மற்றும் மார்க்கெட்டிங் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு ரபி பெர்நார்டை பணித்துள்ளார்.

சுனில் கையொப்பமிட வேண்டிய பல்வேறு சட்டச் சிக்கல்கள் உள்ளதால், சுனிலை உடனடியாக வெளியேற்ற முடியாது. அதனா அவரைத் தற்காலிகமாக ஜெயா டிவியின் நிகழ்ச்சிகளை கவனித்துக் கொள்ள பணித்துள்ள ஜெயலலிதா, சுனில் பெயரில் உள்ள ஆவணங்கள் மாற்றப்பட்டதும், அவரை வேலையை ராஜினாமா செய்ய உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

அன்பார்ந்த சுனில் அவர்களே… உங்களுக்கு தமிழ் படிக்கத் தெரியாது என்பது தெரியும்.  தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதன் மலையாள மொழிபெயர்ப்பு என்ன என்று உங்கள் தொண்டர் அடிப்பொடிகள் ஒருவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

 http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=1771:2013-02-26-11-22-17&catid=1:2010-07-12-16-58-06&Itemid=19

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.