Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருள் சுமந்த நிலம் - மு.புஷ்பராஜன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இருள் சுமந்த நிலம் - மு.புஷ்பராஜன்

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச, இவ்வாண்டு 'முள்ளிவாய்கால் வெற்றி' உரையில், 'இந்த நாள், தாய் நாட்டை மீட்டெடுத்த நாள். தாய் நாட்டை மீட்பதற்கான இந்தப் போரில் இலட்சக்கணக்கானோர் பலியானார்கள். உடல் உறுப்புக்களை இழந்தார்கள். இரத்தத்தை, வியர்வையைப் பூமிக்கு அர்ப்பணித்தார்கள். இவ்வாறான தனித்துவம்மிக்க சிறிலங்கா படையினரை சிலர் அனைத்துலக மேடைக்குக் கொண்டுசெல்ல முயற்சித்தனர். புலிகளுடன் மோதவேண்டாம், அவர்கள் கேட்பதைக் கொடுக்குமாறு அனைத்துலகம் எம்மிடம் அடிக்கொரு தரம் ஆலோசனை கூறியது. புரிந்துணர்வு உடன்பாட்டின் மூலம் நாட்டைப் பிரித்துக் கொடுக்கவும் முயற்சித்தனர். ஒன்றிணைக்கப்பட்ட நாட்டின் ஓர் அங்குலத்தையயேனும் பிரிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்' எனக் கூறியுள்ளார்.

உரையின் சாராம்சம் 2009ஆம் ஆண்டிலிலிருந்து பெரிதும் வேறுபட்டிருக்கவில்லை. அப்போது நன்றி கூறிய நாடுகளில்தான் சிறிய மாற்றம். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முன்னின்று உதவியதாகச் சொல்லப்பட்ட நாடுகளில் சில இப்பொழுது பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பவையாகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானவையாகவும் மாற்றப்பட்டுள்ளது. இனப்படுகொலை எனத் தமிழரும், போர்க்குற்றம் எனச் சர்வதேசமும் கூறிக்கொண்டாலும், அரச அதிபர், இராணுவத்திற்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கப்போவதில்லை என்பதையும், தமிழர் தரப்பினருடனான சமாதானப் பேச்சுக்கள், நாட்டைப் பிரித்துக்கொடுக்கும் முயற்சியே என்றும், அதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆக, புரிந்துணர்வு உடன்படிக்கையின்போது, அரசு உண்மை ஈடுபாட்டுடன் செயற்படவில்லை என்பதை இப்போதாவது வெளிப்படுத்தியுள்ளார். புரிந்துணர்வு உடன்படிக்கையின்போது, புலிகள் இதயசுத்தியுடன் ஈடுபடவில்லை என்று கூறியபடி அரசுக்கு ஆதரவாக இருந்த நாடுகளையும் அரசு ஏமாற்றிவிட்டது என்பதையே அதிபரின் வீரம் செறிந்த உரை உணர்த்துகின்றது. இதனைப் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் 'பேச்சுவார்த்தையை விரும்பாமல் யுத்தத்தின் மூலம் வெற்றிகொண்ட ஜனாதிபதி' என முன்னர் கூறியிருந்ததும் உறுதிப்படுகின்றது. நன்றிக்குரிய நாடுகள், இலங்கை அரசின் பொதுக் குணவியல்பில், எதிர் நிலைக்கு மாற்றப்பட்டது பற்றியோ, இலங்கை அதிபர் அளித்த அரசியல் தீர்வுக்கான வாக்குறுதிகள் மீறப்பட்டது பற்றியோ, இதனால் இருள்சூழ்ந்த தமிழர் வாழ்வுபற்றியோ அரசியல் உரிமைகள் பற்றியோ அதிகம் கவலைப்படப்போவதில்லை. இவர்களது கவலையெல்லாம், தங்கள் நலனுக்கான இலங்கை விலகிப்போவதும், சீனாவுடன் ஆபத்தான எல்லைவரைக்கும் உறவாகிக்கொண்டிருக்கிறதே என்பதுதான்.

சர்வதேச, ஆசிய வல்லாதிக்க அரசியல் சக்திகள், தமது நலன் சார்ந்த அரங்கில், தமிழர்களை எல்லாத் திசைகளிலும் அடித்தும் அணைத்தும் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த சக்திகளின் நலனுக்குச் சார்பான -சீனாவின் அணைப்பிலிருந்து விலகி, மேற்கு மற்றும் இந்திய அணைப்பினுள் வரும்- களம் இலங்கையால் உருவாக்கப்படுமானால், இன்று தோற்றம் பெறும் தமிழர் சார்பான நிலை சடுதியில் மாற்றமடைந்துவிடும். 2009ஆம் ஆண்டு நிலைக்கு மீண்டும் சென்று, பயங்கரவாதத்தை ஒழித்த பெருமைமிகு மணிமுடியை இலங்கை அதிபர் தலையில் சூட்டவும், தமது நலன்சார்ந்த ஒப்பந்தங்களை ஏற்படுத்தவும் இவர்கள் தயங்கப்போவதில்லை. இவர்கள் தயக்கம், தயக்கமின்மைக்கு அப்பால், அந்த மணிமுடியை அரச அதிபர் அழுத்தமாகத் தானே சூடிக்கொண்டுள்ளார். தமிழர் தரப்பும் இவர்களின் மாற்றமுறும் வேடங்களை நம்புவதுபோல் பாவனை செய்யவேண்டிய நிலையில்தான் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள், அது இயங்கிய தமிழர் விடுதலையோடு, அதிகார மனநிலையில் போராட்ட நெறிகளை மீறியும் இயங்கியது. விடுதலைக்கெதிரான குணங்கள் ஆரம்ப காலத்திலிருந்தே அதன்கூடப் பயணித்தவைதான். சக சிறுபான்மை இனங்களோடு ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய நல்லுறவுகளையும் அது மிகமோசமாகச் சிதைத்துக்கொண்டது. 'தடைகளை அகற்றுதல்' என்று மனித உயிர்களைத் துச்சமாக மதித்தது. சாராம்சத்தில், தமிழர் பாதுகாப்பு என்ற நிலையில் ஆரம்பித்து, தமிழர் நலன் என்று வளர்ந்து, கட்சி நலன் என இறுதியில் இறுகியது.

புலிகள் வளர்த்துக்கொண்ட இந்தச் சாதகமற்ற குணாம்சங்களே 'நீதியின் நிமித்தம்' புலிகள் அழிக்கப்படக் காரணம் என்று இன்றும் பலர் கருதுகிறார்கள். ராஜீவ் காந்தி படுகொலையை தவறாமல் குறிப்பிடுவார்கள். அது சர்வதேச, பிராந்திய நாடுகள் திட்டமிட்டிருந்த புவிசார் நலன்களுக்கான ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது. புலிகள் தமது ஆளுகைக்கு உட்பட்ட வட-கிழக்குப் பிரதேசங்களில், வல்லாதிக்க நாடுகளின் பொருளியல் நலன்களுக்கான ஒரு சாதக நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தால் இந்த நீதிமிக்க வல்லாதிக்க நாடுகளின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட அரசு என்ற நிலை இலங்கைக்கு அதிக சாதகங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

நடைமுறை வாழ்வில் அங்கீகரிக்கப்பட்ட நீதிபற்றி, வல்லாதிக்க நாடுகள் துளியும் கவலைப்படுவதில்லை. தமது நலன்சார்ந்த இலக்கை அடைவதற்காக அவைகள் அதர்மங்களால் கட்டமைக்கப்பட்ட அரசியல் நீதி ஒன்றை எப்போதும் வைத்திருக்கின்றது. வெளியில், பொதுவாழ்வு நீதிபற்றிப் பேசிக்கொண்டு, நடைமுறைப்படுத்துவது அரசியல் அநீதியையே. நலன்களுக்கு அப்பால் எதுவுமே இல்லை. நோம் சொம்ஸ்சியிலிருந்து மிகச் சமீபத்திய எட்வேட் ஸ்நோடென் வரை இதை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

வளமும், வலிமையின்மையும் கொண்ட நாடுகள்மீது அதி பயங்கர கொடூரங்களை நிகழ்த்திய நாடுகள்தான், புலிகளைப் பயங்கரவாதியாக அறிவித்தார்கள். அது அவர்கள் ஏற்படுத்த இருந்த பேரழிவுக்குகான முன்னங்கீகாரம்தான். புலிகள் வலிமையுள்ளவர்களாக மாறிவரும் காலத்தில் அமெரிக்காவும், இந்தியாவும் இலங்கையின் வடக்கு-கிழக்கு ஆயுதப் போராட்டம் பிராந்திய நலனுக்குப் பாதகமானவை என்றே தொடர்ந்தும் கூறிக்கொண்டு வந்துள்ளது. புலிகளின் இருப்பு ஒன்றே, சிங்கள அரசின் இராணுவ முனைப்பை எதிர்கொள்ளக் கூடியனவாயும் வட-கிழக்குத் தமிழர்களுக்கு அது பாதுகாப்பானது என்ற நிலையையும் அவர்களது நிர்வாக நியாயங்களையும் அதன் வரலாற்று வகிபாகத் தேவையையும் மதிப்பிட வல்லாதிக்க நாடுகளின் நோக்கு நிலை இடமளிக்கவில்லை.

வலிமைமிக்க நாடுகள், நலன் நோக்கில், பிற நாடுகளை, இனங்களைப் பலிகொள்வதும் அதில் அறநெறிகள் கைக்கொள்ளப்படத் தேவையில்லை என்ற கருத்து தொடர்ந்தும் அரசியல் கோட்பாட்டு ரீதியில் நியாயமாக்கப்பட்டிருக்கிறது. குகை மனிதக் குணாம்சம், நாகரீக உலகில் அங்கீகரிக்கப்பட்ட அதிசயத்தை எவரும் கேள்விக்கு உட்படுத்துவதில்லை. இரத்தங்களாலும் எலும்புகளாலும் அமைந்திருக்கும் சிம்மாசனங்களை, உலகின் மனச்சாட்சி என்ற மயக்கம் தரும் வார்த்தைகளால் தங்களை வளைந்துகொண்டுள்ள சில பத்திரிகையாளர்களும் அரசியல் ஆய்வாளர்களும் இந்த அரசியல் நீதியை நியாயப்படுத்துபவர்களாகவே மாறியுள்ளனர்.

சுயநலங்களால் சூழப்பட்ட கட்சி அரசியலுக்கு மாற்றாக, தமிழகத்தில் எழுந்த மாணவர் போராட்டமும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும் நடைமுறைச் சாத்தியங்களுக்கு அப்பால் ஈழத் தமிழர் நலன் என்ற மையத்திலிருந்து உருவானதே. இந்தியாவில் இதுவரை எட்டாத எல்லைவரை அவர்களால் விரிந்துசெல்ல முடிந்தது. இவர்கள் எழுச்சியின் எதிரெலியாக பத்திரிகைகளில் வெளிவந்த சில புத்திஜீவிகளின் கருத்து வகைமாதிரிகள், ஆட்சி அதிகாரத்தின் நோக்கு நிலைக்கு சார்பானதாகவே காணப்படுகிது.

'இலங்கையில் தமிழர்களது தனிநாடு அமைக்கும் முயற்சிக்கு நாம் ஆதரவு அளிக்கலாமா? அது இந்தியாவுக்குப் பல பிரச்சனைகளை உருவாக்கும். தனிஅரச கோரும் காஷ்மீருக்கு அது வாய்ப்பானது' என்கின்றனர். இதில் காஷ்மீரோ அன்றி வேறு மாநிலங்களோ தனிஅரசு கோரினால் இந்திய அரசுதான் அதை தன் எல்லைக்குள் கையாளவேண்டும். தனிஅரசு கோரிய இன்னொரு நாட்டின் இனம் அழிக்கப்படுவதுதான் தமது நாட்டிற்குப் பாதுகாப்பானது எனக் கருதுவது எந்தவகை நியாயத்தன்மை? இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஈழத் தமிழ் இனம் சிதைக்கப்படுவது நியாயம் என்பது இந்திய நோக்கு நிலையிலிருந்துதான் வெளிவருகிறது.

'இலங்கையில் போரே நடைபெறவில்லை. பிறகு போர்க்குற்றம் எப்படி வரும். அங்கு நடைபெற்றது கிளர்ச்சியாளர்களை அரசு அடக்கிய செயல்'. இதில், ஒரு இனம் தமது உரிமைக்குரிய நிலத்தை மீட்கப் போராடுவது கிளர்ச்சி என்று மலினப்படுத்தப்பட்டுள்ளது. கிளர்ச்சி, புரட்சி என்ற சொற்களுக்கு அப்பால், பொதுமக்கள் கொல்லப்பட்டது இங்கு நியாயப்படுத்தப்படுகிறது. அது போர் இல்லை என்று வேறு வரையறுக்கப்பட்டு, போர்க்குற்றம் என்ற கோரிக்கையை மறுக்கும் மனநிலையும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. கிருஷ்ண பரமாத்மா தன் 'பாஞ்ச்ச ஜன்யா' வை ஊதி, பாண்டவர் பூமிக்காக கௌரவர்களிடம் போர்தொடுத்த செயலைப் போர் என்று இப் புத்திஜீவிகள் குறிப்பிடுகிறார்கள். பதினெட்டு நாட்கள் நடைபெற்றவை 'மகாபாரதப்போர்'. ஆனால், மூன்று தசாப்தங்களாக வாழ்ந்த நிலத்திற்காகவும் தங்கள் இழந்த உரிமைக்காகவும் போராடியது வெறும் கிளர்ச்சி. எந்த நோக்கிலிருந்து, எதை நியாயப்படுத்த இக்கருத்து முன்வைக்கப்படுகிறது.

இப்போது புத்திஜீவிகளால் அடிக்கடி பதியப்படும் வாக்கியம் இது. இதில் சர்வதேச ஆய்வாளர்களும் அடக்கம். 'முப்பது வருடப் போர் முடிந்து இப்போது அமைதி நிலவுகிறது'. இந்த அமைதி என்பது எந்த நோக்கிலிருந்து இது உரைக்கப்படுகிறது. இலங்கை அதிபர் தனது உரையில் கூறியதுபோல 'இது கொலைகள் நிறுத்தப்பட்ட காலம்' என்பது உண்மைதான். யுத்தம் என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட கொலைகள் நிறுத்தப்பட்ட காலம்தான். தமிழ் மக்கள்மீது இந்தச் சமாதானப் போர்வையில் நடைபெறும் கொலைகள் திரைமறைவில் இன்னமும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது பிரான்சிஸ் கரிசன் "Still counting the dead" என்ற நூலின் பெயர் இன்றும் பொருத்தமுடையதுதான். அந்நிய இராணுவத்தின் கீழ் வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டவர்களிடம் அமைதியா நிலவுகிறது? உலகில் எந்த இராணுவத்தின் கீழும் மக்கள் அமைதியாக வாழ்ந்திருக்கிறார்களா? இந்தப் புத்திஜீவிகள் மக்கள் சார்ந்தா அரசு சார்ந்தா தம் கருத்தை முன்வைக்கிறார்கள்?

யுத்தம் ஓய்ந்த பின்னர்தான் யுத்தத்திற்குரிய சில காரணங்கள் மிக வேகமாக மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. டி.எஸ் செனநாயக்க காலத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு, கடந்த முப்பது வருடங்களாக தடுத்தி நிறுத்திவைக்கப்பட்ட நில அபகரிப்பு, இராணுவத் தேவைகள், உயர் பாதுகாப்பு வலையங்கள் என்ற பெயரில் வேகமாக நடைபெற்று வருகிறது. ஆக்கிரமிப்பின் அடையாளமாக பௌத்த விகாரைகள் சிங்கள மக்கள் வாழ்ந்திராத பகுதியெங்கும் அமைக்கப்படுகிறது. இதன் முக்கியத்துவம் உடனடியாகப் புரியவில்லையாயினும், எதிர்காலத்தில் அதிகரிக்கப்படவிருக்கும் சிங்களக் குடியேற்றத்திற்கான திட்டமிடலில் ஒரு பகுதியாகவும் இருக்கலாம். இந்து, முஸ்லிம் வணக்கத் தலங்கள் இடிக்கப்படுகிறது. அவர்களது கவலைகள், முறையீடுகள் அதிகாரத்தினால் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. சிறுபான்மையினரின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்படும் வகையில் இன விகிதாசாரம் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்தியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் செல்லாக்காசாக மதிக்கப்படுகிறது. இந்தியாவும் எண்பதுகளிலிருந்து ஈழத் தமிழர்கள் ஐக்கிய இலங்கைக்குள் சம உரிமைமயுடன் வாழ்வதைத் தான் விரும்புவதாகச் சொல்லிக்கொண்டு வருகிறது. இதுவும் இராமேஸ்வரம் மீனவர்கள் கதைதான்.

கடந்த முப்பது வருடகாலம் இல்லாத இராணுவ அடர்த்தி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் இராணுவ அனுமதி பெறவேண்டியிருக்கிறது. குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கான நீதியில் இருந்து தமிழ்மக்கள் வேறுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். தமிழர்கள் யாரை நினைவுகொள்ளவேண்டும், நினைவுகொள்ளப்படாது என்பதை இராணுவமே தீர்மானித்துக்கொள்கிறது. 'முள்ளிவாய்க்கால் மீண்டும் வேண்டுமா' என அச்சுறுத்தப்படுகிறார்கள். அவமானப்படுத்தப்படுகிறார்கள். ஆட்சியாளர்கள் விருப்பிற்கு மாறாக செயற்பட முனைபவர்கள் 'புனர்வாழ்வு முகாம்' என்று அழைக்கப்படும் விசாரணை முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

தமிழருக்கு நியாயமான தீர்வை ஐக்கிய இலங்கைக்குள் கோரும் பாராளுமன்ற தமிழ்ப் பிரதிநிதிகள் யாவரும் புலிகளெனக் குறி சுடப்படுகிறார்கள். விசாரணைக்கு அழைக்கப்படுகிறார்கள். 'நான் நினைத்தால் நாளைக்கு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனையும் 4வது மாடிக்கு அழைத்து விசாரணை நடத்துமாறு உத்தரவிடுவேன்' என்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஸ சவால் விடுகிறார். குற்றம் செய்யத் தேவை இல்லை. அவர் 'நினைத்தால்' போதும். அரசிற்கு எதிராக கருத்துரைப்பவர்கள் அனைவரும் உண்மைக்கு முரணான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களாக ஆக்கப்படுகிறார்கள். கடந்த முப்பது வருடங்களாக தமது தாயக விடுதலைக்குப் போராடிய மக்கள் மேலைத்தேச, கீழைத்தேச வல்லாதிக்க நலன்களுக்காகவும் தம் சொந்தத் தவறுகளுக்காகவும் பிறர் தயவுக்கு ஏங்கும் ஏதிலிகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இது தமிழர்களுக்கான அமைதியல்ல. எந்த மனிதருக்குமான அமைதியும் இல்லை.

இலங்கை ஆட்சி முறையின் ஆதாரமான மகாவம்ச, சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையின் தீவிர செயற்பாட்டுப் பிரதிநிதியாகிய பௌத்த துறவி ஒருவர் 'இலங்கை பல்லினங்களுக்குச் சொந்தமான நாடு அல்ல. சிங்கள மக்களுக்குச் சொந்தமான, அம்மக்களின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட நாடாகும். எனவே இங்கு வாழும் அனைவரும் இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனை வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு வெளிப்படுத்தாதவர்களுக்கும் ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கும் இங்கு இடமில்லை. அவர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்படவேண்டும்' என்று 'பிறருக்கான அன்பைப்' போதித்துள்ளார்.

பிறர் நலன்களுக்காகக் கொல்லப்பட்டது நீதி எனவும் இருள் இறக்கிய வாழ்வு அமைதி என்றும் விளக்கப்பட்டால், மேற்குலகுடனும் இந்தியாவுடனும் இணைந்து சர்வதேச, பிராந்திய புத்திஜீவிகளும் ஆய்வாளர்களும் தங்கள் நாடுகளின் நோக்கு நிலையிலிருந்தே இலங்கைத் தமிழர் அரசியலை, வாழ்வு நிலையை நோக்குகிறார்கள் என்பதுதான் உணர்த்துகிறது. உலக ஒழுங்கு, இராஜதந்திரம், இறையாண்மை, நட்புநாடு என்ற தந்திர அரசியல் சொல்லாடல்களுக்கு அப்பால் ஓர் இனத்தின் வாழும் உரிமையை, இலங்கைத் தமிழர்கள் நிலையிலிருந்து ஆராய்ந்தால் அவர்ர்கள் நியாயத் தன்மை, அவர்களது வாழ்விற்கான தீர்வு எவ்வகையானது என்பது புரியும்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=501f8ad7-de6a-4d22-8280-57ceb8196e77

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.