Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் இலக்கியம் – ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இலக்கியம் – ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும்

வெங்கட் சாமிநாதன்

1998-ம் வருடம் என்று நினைக்கிறேன். Indian Council for Cultural Relations, இந்தியா சுதந்திரம் அடைந்து 50 வருஷங்கள் ஆனதை ஒட்டி, இந்திய மொழிகள் அனைத்திலும் காணும் இலக்கிய வளர்ச்சியைப் பற்றி எழுதப் பலரைக் கேட்டிருந்தார்கள். அத்தோடு ஒரு சில, மாதிரிப்படைப்புக்களையும் மொழிபெயர்த்துத் தரச் சொல்லிக் கேட்டார்கள். தமிழ் மொழி வளர்ச்சி பற்றி எழுத என்னைப் பணித்திருந்தார், இதன் ஆசிரியத்வம் ஏற்ற ICCR இயக்குனர் திரு ஓ.பி. கேஜ்ரிவால். இவை அனைத்தும் தொகுக்கப் பெற்று Indian Horizons என்ற தலைப்பில் 500 பக்கங்கள் கொண்ட ஒரு தொகுப்பு ஜனவரி-ஜூன், 1999-ல் வெளியானது. இந்திய மொழிகள் அனைத்திலிருந்துமான (டோக்ரி, கஷ்மீரி, ஸிந்தி, உருது மொழிகள் உட்பட) இலக்கிய வளர்ச்சி பற்றிய மதிப்பீட்டுக் கட்டுரைகளுடன், அந்தந்த மொழிகளின் சில கதைகள், கவிதைகளும் மொழி பெயர்க்கப்பட்டு சேர்க்கப்பட்டன. இவற்றில் தமிழ் மொழிக்காகச் சேர்க்கப்பட்டவை, ஜெயமோகனின் மாடன் மோட்சம் என்ற கதையும் சல்மாவின் சில கவிதைகளும். எனது தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றிய கட்டுரைக்கு Enigma of Abundance என்று தலைப்பு கொடுத்திருந் தார்கள். Enigma of Abundance………..!!! தலைப்பு என்னமோ வசீகரமாகத்தான் இருக்கிறது. ஆனால் கட்டுரையில் சொல்லப்பட்ட விஷயங்கள் இதை நியாயப்படுத்துமா என்பது தெரியவில்லை. ஆகவே இப்போது எனக்குள்ள சுதந்திரத்தில் மிகச் சாதாரண மொழியில்,

 

தமிழ் இலக்கியம் – ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும்

 

 

இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடரந்த பல பத்து வருடங்கள், பொதுவாக தமிழ்க் கலாசாரச் சூழலிலோ, அல்லது குறிப்பாக தமிழ் இலக்கியச் சூழலிலோ ஏதும் ஆர்ப்பரித்து உற்சாகம் கொள்ளும் வருடங்களாக இருக்கவில்லை. புதுமைப் பித்தன் (1906-1948) என்றொரு இலக்கிய சிருஷ்டி மேதை, எதையும் சட்டை செய்யாத தன் வழியில், எதையும் திட்டமிட்டுச் செயல்படாத தன் சிருஷ்டிகரத்தோடு தமிழ்ச் சிறுகதையை இதுகாறும் அது எட்டிராத சிகரத்திற்கு எடுத்துச் சென்றிருந்தார். அனேகமாக ஒரு நூறு கதைகள் எழுதியிருப்பார் அவர். அந்த ஒவ்வொரு கதையும் ஒரு மாறுபட்ட வடிவில் அமைந்திருக்கும். அவரது சொந்த திருநெல்வேலி மாவட்டத்தின் பேசு மொழியையும் குறிப்பாகப் பிள்ளைமார்களின் கொச்சையையும் அவர் கையாண்டிருந்தது அன்று பண்டிதர்களின் ரசனைக்கும் மொழித் தூய்மைக்கும் விருப்பமாக இருக்கவில்லை. ஒரு மேதையின் சிருஷ்டி மலர்ச்சிக்கும், இயல்பாக பிரவகிக்கும் எழுத்துத் திறனின் நேர்த்திக்கும் அவர் ஒரு சிகர முன் மாதிரியாக இருந்தார். அவரது வாழ்க்கையின் கடைசி நாட்களில் அவர் ஈடுபாடு சினிமாவின் பக்கம் திரும்பியது. படப்பிடிப்பின் போது புனே சென்றார். சுதந்திரம் கிடைத்த சில மாதங்களில் தனது 41-வது வயதில் அவர் காலமானார்.

அன்றைய தமிழ் இலக்கிய நிறப்பிரிகையில் புதுமைப் பித்தன் ஒரு கோடி என்றால், மறுகோடியில் வணிக உலகின் பிரகாசத்திலும் பிராபல்யத்திலும் ஒளிவீசிக்கொண்டிருந்தவர் கல்கி என்னும் (1899 – 1954) புனை பெயர் கொண்ட, மிகச் சக்தி வாய்ந்த பத்திரிகையாளரும் மக்களிடையே ஈடு இணையற்ற புகழ் பெற்றவருமான ரா. கிருஷ்ணமூர்த்தி. அவர் அளவுக்கு எழுதிக் குவித்தவர் யாரும் இன்று வரை இல்லை. அவர் காலத்தில் பல லக்ஷக்கணக்கில் இருந்த, அவரைப் படித்த மக்களின் மனத்தையும் சிந்தனையும் தன் வசப் படுத்தும் அவரது அளப்பறிய ஆற்றல் என்றும் பெருவாரி மக்களைச் சென்றடையும் சாக்கில் ஆபாச அருவருப்பு தரும் எல்லைகளுக்குச் சென்றதில்லை. அவரது எழுத்தும் செயல்களும் தேசீயம், மக்கள் பண்பாடு ஆகியன பற்றிய சிந்தனைகளால் உருவானவை. 1941- ம் வருடம் ஒரு நாள் மகாத்மாவின் அழைப்புக்கு செவி சாய்த்து, மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளம், டிரைவரோடு கூடிய கார், வசிக்க ஒரு பங்களா, எங்கும் செல்ல பிரயாணச் செலவு எல்லாம் கொடுத்து வந்த ஆனந்த விகடன் ஆசிரியப் பதவி எல்லாவற்றையும் ஒரு கணத்தில் மறு சிந்தனையின்றி, உதறித்தள்ளி, சிறை செல்ல முடிவு எடுக்க முடிந்திருக்கிறது அவரால். பல லக்ஷக்கணக்கில் தமிழ் மக்களுக்கு, தம் வீட்டோடு கட்டுப்பட்டுக் கிடந்த பெண்களையும் சேர்த்து, தம் பத்திரிகை எழுத்தின் மூலம் படிக்கும் ஆர்வத்தையும் பழக்கத்தையும், நிகழ் கால தமிழ் இலக்கியத்தில் ஆர்வத்தையும் தூண்ட அவரால் முடிந்திருக்கிறது. 1953-ல் அவர் காலமானபோது அவருக்கு வயது 54. இவர்கள் இருவரும் தான், அன்றைய தமிழ் இலக்கிய நிறப்பிரிகையின் இரு முனைகளில், ஒரு முனையில் புதுமைப் பித்தன், ஒரு சிறந்த இலக்கிய சிருஷ்டி மேதை, மறுமுனையில் கல்கி, லக்ஷிய தாகம் கொண்ட, தன் மண்ணின் கலாசாரத்தில் பண்பாட்டில் வேர்கொண்ட, மக்கள் மனம் கவர்ந்த எழுத்தாளன்.

இதற்குப் பின் தொடர்ந்த பல தசாப்தங்கள் கண்டது தமிழ் இலக்கியத்தில் மிக மோசமான வியாபார சக்திகளின் ஆதிக்கப் போட்டியும் மக்களின் கீழ்த்தர ரசனைகளைத் திருப்தி செய்ய முனைந்த போட்டியும், இவற்றின் விளைவாக சீரிய இலக்கியச் செயல்பாடுகளின் தொடர்ந்த தேக்கமும் தான் என்றே சொல்ல வேண்டும். இந்த நோய் தமிழ் சமூகத்தில் இலக்கியத்தோடு மாத்திரம் கட்டுப் பட்டிருக்கவில்லை. நாடகம், சினிமா, கல்விக்கூடங்கள் என இன்னும் மற்ற அறிவியல், கலைத்துறைகள் என தமிழ் சமூகம் முழுதையுமே பீடித்திருந்தது என்றே சொல்லவேண்டும்.

முப்பதுக்கள், நாற்பதுக்களில் மணிக்கொடி என்ற இலக்கியப் பத்திரிகையைச் சுற்றி புதுமைப்பித்தனோடு எழுந்த  மௌனி (1907-1985), ந.பிச்சமூர்த்தி (1900-1976), கு.ப.ராஜகோபாலன் (1902-1944), சிதம்பர சுப்பிரமணியம் (1912-1978). சி.சு. செல்லப்பா (1912 – 1998), பி.எஸ்.ராமையா (1905-1983) போன்ற பெருந்தலைகள், ஒரு புதிய எழுச்சியையும், சகாப்தத்தையும் உருவாக்கியவர்கள், மறக்கப் பட்டுவிட்டனர். ஒருவர் இறந்துவிட்டால், உடன் இருந்த மற்ற சிலர் எழுதுவதையே முற்றிலும் மறந்துவிடுவார்கள். இன்னும் சிலருக்கு எழுத ஒரு மேடை கிடைப்பதில்லை. இன்னும் சிலர், ஆர். ஷண்முகசுந்தரம் கு. அழகிரிசாமி(1924-1970), தி.ஜானகிராமன்(1921-1982), தெ.மு.சி. ரகுநாதன் (1923), லா.ச.ராமாமிர்தம் (1916) போன்றோர் வியாபார எழுத்துக்களின் வெள்ளப் பெருக்கில் மூழ்கடிக்கப்பட்டனர். வியாபார எழுத்துக்கள் போடும் இரைச்சலில் இவர்களது உணர்ச்சிப் பெருக்கெடுத்து பொங்கி எழாத நிதானம் கேட்கப் படாமலேயே போய்விட்டது. கோடிக்கணக்கிலான மக்கள் திரளிடம் பெறும் பிராபல்யம் இதுவரை அறிந்திராத செல்வச் செழிப்பை மாத்திரம் அல்லாது, பிராபல்யமும் செல்வச் செழிப்புமே இலக்கிய மதிப்பீட்டையும் கல்வி ஸ்தாபனங்களின் அங்கீகாரத்தையும் கூட பெற்றுத் தந்தது. இது இர்விங் வாலஸுக்கு நோபெல் இலக்கியப் பரிசு கிடைப்பது போலவும், அமெரிக்க பல்கலைக் கழகங்கள் எதுவும் வில்லியம் ஃபாக்னரா, ஹெமிங்வேயா, யார் இந்தப் பேர்வழிகள் என்று கேட்பது போலவுமான ஒரு அவலமும் ஆபாசமும் நிறைந்த நிலைதான் சுதந்திரத்திற்குப் பின் மலர்ந்த தமிழ் இலக்கியச் சூழல்.

 

இந்தப் பின்னணியில் தான், க.நா.சுப்ரமணியம் (1912-1988) என்னும் ஒரு சிறுகதை, நாவலாசிரியரும், சி.சு.செல்லப்பா (1912-1998) என்னும் சிறுகதையாசிரியரும், இந்த அவல நிலையை மாற்ற ஏதும் செய்யவேண்டும் என்று துணிந்தனர். இலக்கிய மதிப்பீடுகள் பற்றியும், வெகுஜனங்கள் ரசனைக்கு ஏற்ப எழுதுவது இலக்கியமாகாது என்றும் அவர்கள் வாசகர்களுக்கு திரும்பத் திரும்ப உணர்த்த வேண்டியிருந்தது. இது அவர்கள் இருவருக்கும் பிரபல எழுத்தாளர்களின் பகைமையை மாத்திரம் அல்ல, கல்வி ஸ்தாபனங்களின் பகைமையையும் சம்பாதித்துத் தந்தது.

செல்லப்பா 1959-ல் எழுத்து என்று ஒரு சிறு பத்திரிகையைத் தொடங்கினார். அதில், முப்பது நாற்பதுக்களில் எழுதிக்கொண்டிருந்த, பின் மேடையேதுமற்று எழுதுவதை நிறுத்திவிட்டிருந்த தன் சக எழுத்தாளர்களுக்கு ஒரு மேடை அமைத்துத் தர எண்ணினார். வெகுஜன எழுத்தின் ஆரவார இரைச்சலில் தம் குரல் இழந்து புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு ஒரு புத்துயிர்ப்பு தருவதாக அது அமைந்தது. எழுத்து என்னும் அந்த சிறுபத்திரிகை தன் பன்னிரண்டு வருட கால வாழ்வில், ஒரு ஆயிரம் பிரதிகள் கூட என்றும் விற்றிராது. ஆனால் அதன் தாக்குவலு அதன் பிரதிகள் விற்பனை எண்ணிக்கையை மிகவும் மீறியது. அதன் காலத்தில், வெகு ஜனப் பத்திரிகைகள் ஒவ்வொன்றும் தம் வாசகர்களின் எண்ணிக்கை பல லக்ஷங்களைக் கொண்டதாக தம் வெற்றியை அவ்வப்போது பறைசாற்றிக்கொண்டிருந்தன, ABC (Audit Bureau of Circulation) தரும் சான்றுகளைக் காட்டி. ஆனால் ஆச்சரியம், எழுத்து என்ற அந்த சிறு பத்திரிகை தான் எண்ணிப்பாராத, எதிர்பார்த்திராத தளங்களில் வெற்றி பெற்றிருந்தது.

 

sv-88-1024x576.jpg

 

தமிழ்க் கவிதைக்கு இரண்டாயிரம் ஆண்டு நீண்ட வரலாறும் மரபும் உண்டு. ஆனால் இந்த நீண்ட வரலாறும், மரபுமே, கவிதா சிருஷ்டிக்கும் புதுமை வேட்டலுக்கும் தடையாகி, ஜீவனற்ற வெற்றுச் செய்யுள் ஆக்கலையே கவிதை எனத் தமிழ்ப்பண்டிதர்களை ஏற்க வைத்தது. இத்தடை மெல்லப் பிளந்தது ஒரு தற்செயலே. சி.சு. செல்லப்பா தன் முதல் எழுத்து இதழுக்கு அன்றிருந்த முன்னோடியான ந.பிச்சமூர்த்தியிடம் எழுதக் கேட்க அவர் அவசரத்துக்கு ஒரு பழைய கவிதையைத் தந்தார், அது 1947இல் எழுதி மறக்கப்பட்டிருந்த கவிதை. 2000 வருஷப் பழமை கொண்ட யாப்பு விதிகளைப் புறம் தள்ளி, சொல்லும் கருத்துக்கு ஏற்ப வேகம் கொள்ளும் சுதந்திர நடை பயின்ற கவிதை அது. அதனாலேயே அது கவனிப்பாரற்று இருந்தது. அந்தக் கவிதை 15 வருடங்களுக்கு முன் கவனிப்பாரற்றிருந்த அந்த கவிதை இப்போது 1959-ல் ஒரு பெரும் கவித்வ எழுச்சிக்கு மூல காரணமாகியது. அக்கவிதை தந்த சுதந்திரத்தையும் அது தன் கருத்துக்கேற்ப கொண்டவடிவையும் கண்டு உற்சாகம் கொண்ட ஒரு பெரும் இளைஞர் கூட்டமே தாமும் அப்பாதையில் கவிதைகள் எழுதத் தொடங்கினர். தி.சோ. வேணுகோபாலன், பசுவய்யா, எஸ். வைதீஸ்வரன், நகுலன், தருமூ சிவராமூ, சி.மணி, ஆத்மாநாம், கலாப்ரியா, ஞானக் கூத்தன் என்று நீளும் அக்கவிஞர் அணிவகுப்பில் ஒவ்வொருவரது கவிதையும், பெரும்பாலும் ஒவ்வொரு கவிதையும், தனிக் குரலும், சொல்லும், நடையும், வடிவும் கொண்டதாக இருந்தது. இவர்களுக்கெல்லாம் முன்னோடியாகத் தலைமையில் இருந்தவர் வேதகால ரிஷி போல, ந.பிச்சமூர்த்தி. இதன் பிறகு, தமிழ்க் கவிதை திரும்பிப் பார்க்கவில்லை. இது எழுத்து பத்திரிகையின் எதிர் பாரா முதல் சாதனை.

எழுத்து அன்றைய வெகு ஜனச் சூழலில், ஒரு சிறுபான்மை இலக்கியச் சூழலை உருவாக்கியது. அச்சூழல் தன் இலக்கிய உணர்வுகளில், விமர்சனப் பார்வையில், தீவிர கவனம் கொண்டதாக, இலக்கிய சிருஷ்டிக்கான புதிய பாதைகளைக் காண்பதில் வேகம் கொண்டதாக இருந்தது. ஒரு இலக்கியச் சிறுபத்திரிகை, அது பெரும்பான்மையின் அசுர பலத்தினூடே கூட, என்ன சாதிக்கமுடியும் என்பது எழுத்து பத்திரிகையின் மூலம் நிரூபணம் ஆனதும், ஆங்காங்கே எண்ணற்ற சிறு குழுக்கள் தம் பார்வைக்கும் கருத்துக்கும் ஏற்ப தமக்கென ஒரு சிறுபத்திரிகை வேண்டும் எனத் துணியவே சிறுபத்திரிகைகள் பெருகத் தொடங்கின. இது எழுத்து பத்திரிகையின் இரண்டாம் சாதனை.

மூன்றாவதாக, எழுத்து போன்ற ஒரு பத்திரிகையின் தோற்றத்துக்காகவே காத்திருந்தது போல, புதிய விமர்சனக் குரல்கள் கேட்க ஆரம்பித்தன, எழுத்து பத்திரிகையில். இதில் இரண்டு குரல்கள் பிரதானமானதும், குறிப்பிடத்தக்கது மாணவர்களது. ஒன்று தருமூ சிவராமூ (1939-1997) இலங்கையின் தமிழ் பேசும் பகுதியான ஈழத்திலிருந்து. இரண்டாவது வெங்கட் சாமிநாதன் (1933) இந்தியா வின் வடகோடி ஜம்முவிலிருந்து. இருவருமே அன்று தமிழ் நாட்டு வாசிகள் இல்லை.

தருமூ சிவராமூ எழுத்து பத்திரிகை கண்டு பிடித்த புதுக்கவிஞர். அவர் ஆளுமையிலிருந்த கவித்வம் அவர் கையாண்ட மொழியிலும், விமர்சனப் பார்வையிலும் காணப்பட்டது. வெங்கட் சாமிநாதனின் மொழி, வசனத்தின் சாதாரணத்வம் கொண்டது. அவரது விமர்சனப் பார்வையும் எழுத்தும், இலக்கியம், விஞ்ஞானம், தத்துவம், சங்கீதம், நாட்டியம், கிராமீயக் கலைகள், சிற்பம் ஓவியம் என அனைத்தையும் தன்னுள் கொண்டு ஒருங்கிணைந்த பார்வையாக இருந்தது. இவை ஒவ்வொன்றையும் தன் பிரியா அங்கங்கங்களாகக் கொண்ட முழுமை அது. பின்னர், கேட்ட குரல்கள் சுந்தர ராமசாமியும் தமிழவனும். சுந்தர ராமசாமி தனக்கென ஒரு ஈடு இணையற்ற அழகும் ஒட்டமும் கொண்ட நடை ஒன்றை சிருஷ்டித்துக் கொண்டு எழுதுபவர். அது அவரது விமர்சன எழுத்தில் கூட காணும். தமிழவன் தன் பயணத்தில் பல கட்டங்களைக் கடந்தவர். முதலில் மார்க்ஸிஸ்ட், பின்னர் அமைப்பியல்வாதியானார். இடையிடையே திராவிட இயக்கப் பார்வையும் தலை காட்டும். தமிழ் இலக்கியத்தை அமைப்பியல் பார்வையில் அணுகிய முதல் மனிதர் அவரே. அவர் அமைப்பியலை மிக விரிவாக விளக்கி ஒரு பெரிய புத்தகமே எழுதியிருக்கிறார்.

பின் வந்த அறுபது எழுபதுகளில் நிகழ்ந்த நிறைய சிறுபத்திரிகைகளின் திடீர் தோற்றம், வெகுஜன ரசனையே ஆக்கிரமம் கொண்டிருந்த சூழலில், இலக்கிய உணர்வுகொண்ட ஒரு சிறுபான்மையின் தோற்றம், இவையெல்லாம் புதிய இலக்கிய அனுபவங்களை எதிர்பார்த்து வரவேற்கும் மனநிலைகொண்ட ஒரு வாசகக் கூட்டமும் எழுந்தது. இக்கூட்டத்திற்கு வெகுஜன ரசனைக்கு தீனி போடுவதற்கே தயாரிக்கப்படும் பிராபல்ய எழுத்து எது என்றும், இவற்றிலிருந்து மிகவும் ஒதுங்கி வாழ்ந்த பாரதி, புதுமைப்பித்தன் போன்ற மணிக்கொடி எழுத்தாளர்களின் தேடலையும் அவற்றின் இலக்கிய மதிப்புகளை விமர்சன பூர்வமாக பிரித்தறியத் தெரிந்தது அந்த வாசக கூட்டத்துக்கு. லா.ச.ராமாமிர்தம், தி.ஜானகிராமன் போன்றோர் முதலில் மத்திம தரப் பத்திரிகைகளாலும், பின்னர் வெகுஜனப் பத்திரிகைகளாலும் ஆதரிக்கப்பட்டாலும் அவர்கள் எழுத்துக்களை வெகுஜன பிராபல்ய எழுத்துக்களிலிருந்து பிரித்தறியும் விமர்சனப் பார்வையும் அவ்வாசக கூட்டத்திற்கு இருந்தது. உண்மையில் சொல்லப் போனால், ஐம்பது அறுபதுகளில் இவ்விருவரும் தான் தமிழ் இலக்கியத்தைப் பெருமைப் படுத்தியவர்கள். இலக்கிய மதிப்பீட்டில் சிகர சாதனை செய்தவர்கள்.

தி.ஜானகிராமன்(1921-1982) தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். தஞ்சை சங்கீதம், நாட்டியம், இன்னும் மற்ற க்ளாஸிகல் கலைகள் அனைத்துக்கும் பிறப்பிடம், வளர்ப்பிடம். தி.ஜானகிராமனின் கதைகள், நாவல்கள் எல்லாவற்றிலும் இந்த தஞ்சை மண்ணின் வாழ்க்கை நோக்கும் தர்மமும் உயிர்பெற்று உலவும். அவரது எழுத்துக்களில் காணும் மனிதர்களின், அன்றாட வாழ்க்கை அம்சங்களும், பேச்சுக்களும் படிப்போரை மிக எளிதில் கவரும் இனிமையும் கொண்டது. அவரது சிகர சாதனையான மோகமுள் (1956) நாவலில் தன் இளமைக் கால கனவுகள், ஏமாற்றங்கள், ஏக்கங்கள், கடைசியில் தன் குடுமத்திலிருந்து பிதிரார்ஜிதமாகப் பெற்ற சங்கீதமே சரணாக அடைந்தும் தொடரும் ஏக்கங்கள் அனைத்தும் அந்நாவலில் அனுபவங்களாக விரிகின்றன. முதன் முறையாக, சங்கீதமே தமிழ் எழுத்தில் ஒரு புது அனுபவமாக வெளிப்பாடு பெறுகிறது.

லா.ச. ராமாமிர்தம் (1917) தந்தத்தில் வேலை செய்யும் சிற்பியைப் போல, மொழியை மிக நுணுக்கமாக கையாள்பவர். ஒவ்வொரு சொல்லின் சப்த ரூபத்தையும் அது இடம் பெறும் சந்தர்ப்பத்தையும் கொண்டு நகாசு வேலை செய்பவர். ஒரு பாரா எழுதுவதற்கு சில சமயங்களில் ஒரு நாள் பூராவும் எடுத்துக்கொள்வதாகச் சொல்வார். அவர் கதைகள் உலகம் அவர் குடும்பத்தை விட்டு என்றும் வெளியே விரிவடைந்ததில்லை. அவரது குடும்பக் கதை தான், மூன்று தலைமுறைக்காலம் நீளும் பெண்களும் ஆண்களுமாக, அவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ சாமியாட்டம் ஆடுபவர்களாக, அதீத உணர்ச்சி வசப்பட்டு தம் நிலை இழந்தவர்கள் போல, எந்நேரமும் இறுக்கமும் கொந்தளிப்புமாகவே, தம்மையும் வருத்தி, சுற்றியுள்ளோரையும் வருத்திக்கொண்டிருப்பவர்கள். அக்குடும்பம் தான் லா.ச.ராமாம்ருதத்திற்கு அவரது பிரபஞ்சத்தின் அணுரூபம். தாகூர் தன் வீட்டு வாசல் வெளியில் இருக்கும் புல் இதழின் பனித்துகளில் அண்டவெளி முழுதுமே பிரதிபலித்திருப்பதைக் கண்டது போல. இவ்விருவரும் தான் இன்றைய தமிழ் இலக்கியத்தின் சிருஷ்டி உச்சத்தின் இரு சிகரங்கள், மொழியைக் கையாளும் திறனிலும் அது வெளிப்படுத்தும் சிருஷ்டி தரிசனத்திலும்.

இந்த ஆண்டுகளில் தான் சி.சு. செல்லப்பா (1912-1998) இரண்டு சிறிய ஆனால் செதுக்கிய வைரம் போன்ற ஒளிவீசும் இரண்டு நாவல்கள் எழுதினார். ஒன்று வாடிவாசல்(1959) அவர் பிறந்த சிறு வயதுப் பருவத்தைக் கழித்த மதுரை மாவட்டத்தின் ஜல்லிக்கட்டு எனப்படும் காளை பொருதும் விழா. இதில் ஆயுதம் ஏதும் அற்று தன் கை பலத்தின் மூலமே வெறியேற்றப்பட்ட காளையை அடக்கும் வீர விளையாட்டு. இரண்டாவது குறுநாவல் ஜீவனாம்சம் (1962). விவாக ரத்து கோரி புகுந்த வீட்டாரால் ஒதுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள மறுமகள் தன் கணவன் இறந்துவிட்டது அறிந்து புகுந்த வீடு செல்லத் தீர்மானிக்கிறாள். அவளுக்கு யார் துணையுமின்றி தனித்து விடப்பட்டுள்ள தன் முதிய மாமியாரையும் சிறுவனான மைத்துனனையும் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு யாரும் துணையில்லை என்ற காரணத்தால். அவள் மனத்தில் ஓடும் எண்ணங்களின் பிரவாஹம் தான் இக்குறுநாவல். க.நா.சுப்பிரமணியம் (1912-1989) தன் விமர்சனங்களிலும் சரி, சிருஷ்டி எழுத்திலும் சரி, நிறையவே எழுதியிருப்பவர்; அவரது நாவலகளில் முக்கியமாகக் குறிப்பிடப் பட வேண்டியவை இரண்டு. ஒன்று சுதந்திரத்திற்கு முந்திய ஆண்டில் எழுதப் பட்டது பொய்த்தேவு (1946). எளிய சிறு பிராய ஆரம்பத்திலிருந்து வெற்றிகரமான வியாபாரியான காலம் வரையிலான தன் வாழ்க்கை முழுதுமே பொய்யான தெய்வங்களைத் தேடி அலைந்த வாழ்க்கை தான் என் உணர்ந்து தன் கிராமத்துக்குத் திரும்புகிறவன் தன் கிராமத்து வெளியில் யாரும் அறியாத அனாதைப் பரதேசியாக இறந்து கிடக்கிறான். அடுத்தது 1951-ல் எழுதிய ஒரு நாள் என்னும் குறுநாவல். இரண்டாம் உலகப் போரில் பங்கு கொண்டு பல இடங்களில் போர்முனையைப் பார்த்தவன், உலகம் முழுதும் சுற்றியவன் தன் கிராமத்துக்குத் திரும்புகிறான். அங்கு தன் கிராமத்தையே தம் உலகமாகக் கண்டு அங்கு அமைதியாக தம் பெண்களுடன் வாழும் மாமா வீட்டில் ஒரு நாள் கழிகிறது. மாமாவும் உலகமும் கிராமத்து வாழ்க்கையின் அமைதியும் தான் உலகம் சுற்றிய வீர சாகஸங்களை விட அர்த்தமுள்ளது எனத் தோன்றுகிறது. கிராமத்திலேயே தங்கிவிடுவது என்று தீர்மானிக்கிறான்.

(தொடரும்)

 

http://solvanam.com/?p=26754

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இலக்கியம் – ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும் – பகுதி 2

வெங்கட் சாமிநாதன்

 

ஆர் ஷண்முக சுந்தரம் இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பாகச் சொல்லப்பட வேண்டிய ஒரு திறன் வாய்ந்த எழுத்தாளர். அவர் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பு அதிகம் பெறாதவர். இலக்கிய சர்ச்சைகள், நகர வாழ்க்கையின் சந்தடி, இவற்றில் எதிலும்  சிக்கிக்கொள்ளாத தூரத்தில் அமைதியாக வாழ்ந்தவர். அவருக்கு பணம் தேவைப்பட்டபோதெல்லாம் தன்னுடைய நோட்புக்கில் ஒரு குறு நாவல் எழுதி முடித்துவிடுவார். அதற்கு அவருக்கு ஏதோ சில நூறு ரூபாய்கள் கிடைத்துவிடும். இப்படித்தான் நாகம்மாள், சட்டி சுட்டது (1965), அறுவடை (1960) போன்ற நாவல்கள் எழுதப்பட்டன. இவை அந்நாட்களில் குறிப்பிடத் தக்க எழுத்து என்று சொல்லவேண்டும். இன்று நாகம்மாள், அறுவடை போன்றவை க்ளாஸிக்ஸ் என்றே சொல்லவேண்டும். அவரது நாவல்கள் கோயம்புத்துர் மாவட்டத்து விவசாயிகளின் வாழ்க்கையைச் சுற்றி எழுந்தவை. கிரேக்க அவல நாடகங்களின் மைய இழையோட்டத்தை அவற்றில் காணலாம். எதிலும் ஒரு மகிழ்ச்சி தரும் முடிவு இருப்பதில்லை. இன்னும் இரண்டு முக்கியமான எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லவேண்டும். அவர்கள் இருவரும் ஒரு குறுகிய ஆரம்ப கால கட்டத்தில் இடதுசாரி கூடாரத்தைச் சேர்ந்தவர்களாக விருந்தனர். ஆனால் அதிக காலம் அந்த கூடாரத்தில் தங்கவில்லை. பின்னர் அந்தக் கட்டுக்களைத் தாமே தகர்த்து  வெளியே வந்துவிட்டனர்.

 

jeyakanthan_Tamil_Authors-300x209.jpg

ஒருவர் நாம் சற்று முன்னர் பசுவய்யா என்ற பெயரில் கவிஞராக அறிமுகம் ஆன சுந்தர ராமசாமி (1931). சுந்தர ராமசாமி அதிகம் எழுதிக் குவிப்பவரில்லை. அவருக்கு தன் எழுத்தின் நடை பற்றியும் அதன் வெளிப்பாட்டுத் திறன் பற்றியும் மிகுந்த கவனமும் பிரக்ஞையும் உண்டு. இரண்டாமவர் த. ஜெயகாந்தன் (1931) இதற்கு நேர் எதிரானவர். ஏதோ அடைபட்டுக்கிடந்தது திடீரென வெடித்தெழுவது போல, அணை உடைந்த நீர்ப்பெருக்கு போல, மிகுந்த ஆரவாரத்துடன், நிறைய எழுதித் தள்ளிக் கொண்டிருப்பவர். நிகழ்கால தமிழ் இலக்கியத்தின் ஒரு அடங்காப் பிள்ளை. அவருக்கென ஒரு பெரிய, மிகப் பெரிய விஸ்வாஸம் கொண்ட ரசிகக் கூட்டமே உண்டு.

இவர்கள் எல்லாமே நிகழ் கால தமிழ் இலக்கியத்தின் ஐம்பது அறுபதுகளின் தேக்க காலத்தில் தெரியவந்தவர்கள். க.நா.சுப்பிரமணியமும் செல்லப்பாவும் உருவாக்கிய சிறுபான்மை இலக்கியச் சூழலின் தாக்கத்தில் எழுந்தவர்கள் இல்லை. ஆனால் க.நா.சு.வும் செல்லப்பாவும் உருவாக்கிய இலக்கிய சிறுபத்திரிகைக்கு ஓரளவு கடன்பட்டவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். சரஸ்வதி என்னும் இலக்கியச் சிறுபத்திரிகை இவர்களுக்கு இடம் கொடுத்து வளர்த்தது என்று சொல்லலாம். ஜெயகாந்தன் ஒருவர் தான் வெகுஜன பத்திரிகைகளில் தன்னை ஸ்தாபித்துக்கொண்டார். ஆர் ஷண்முக சுந்தரத்திற்கும் சுந்தர ராமசாமிக்கும் அங்கீகாரமும் தொடர்ந்த எழுத்துக்கான வாய்ப்பும் அளித்தது க.நா.சு.வும் செல்லப்பாவும் சிருஷ்டித்த சிறுபான்மை இலக்கியச் சூழல் தான்.

 

Tamil_Creative_na.muthusami-189x300.jpg

அறுபது எழுபதுகளில் இன்னம் ஒரு புதிய தலைமுறை இளம் எழுத்தாளர் தோன்றினர். இவர்களது வருகைக்கென வென்றே தயாராக இருந்தது என்று சொல்லவேண்டும், முன்னர் சொன்ன புதிதாக சிருஷ்டிக்கப்பட்ட சிறுபான்மை இலக்கியச் சூழல். இந்த புதிய தலைமுறை இளம் எழுத்தாளர்களின்  எழுத்தில் ஆரம்பத்திலேயே காணப்பட்ட ஒரு எழுத்துத் திறன், முப்பதுக்களில் தோன்றிய முன்னோடிகள் தம் கைவசப்பட பல வருஷங்கள் உழைத்துப் பழக வேண்டியிருந்தது இந்திரா பார்த்த சாரதி (1931), அசோகமித்திரன் (1931), சா. கந்தசாமி (1940), சுஜாதா (1936) ஆகிய எல்லோருமே சிறுகதைகள் எழுத்தாளர்களாகத் தான் தொடங்கி பின்னர் நாவல்களிலேயே அதிகம் தெரிய வந்தனர். இந்திரா பார்த்த சாரதி எழுத்தின் சுவாரஸ்யம் அதில் காணும் பரிகாசம். ந. முத்துசாமி சிறுகதைகளுக்குள்ளேயே தன்னை வரம்பிட்டுக்கொண்டவர். அவர் எழுத்தில் ஒரு கிராமத்தானின் பூச்சற்ற நாட்டுப்புற வெகுளித்தனம் இருக்கும். அதுவே அவர் எழுத்தின் திறனும் குணமுமாகி, கடந்துவிட்ட ஒரு பழமையை நோக்கிய தாபமும் ஏக்கமும் நிறைந்த ஒரு பயணமாக வெளிப்படும் அவர் எழுத்து.

சுஜாதாவின் எழுத்தில் அவர் வார்த்தைகளோடு விளையாடும் விளையாட்டுக்களே பெரும் வாசகப் பெருக்கத்தை அவருக்கு சம்பாதித்துத் தந்தது. அதிலே அவரும் சுகம் காண்பவர். ஆனால் அவர் இத்தோடு நின்று விடுபவர் இல்லை. அவர் எழுத்தில் காண்பது ஒரு விஷமத்தனமான விளையாட்டும், பாலியல் சீண்டலும் மாத்திரமல்ல. அதைத் தாண்டி, இன்றைய விஞ்ஞானமும்  தொழில் நுட்பமும் பரவிய இன்றைய சூழலில் மனித வாழ்க்கையின் முரண்களையும் போராட்டங்களையும் அவர் எழுத்துக்கள் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. விஞ்ஞானத்தை சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் முறையில் அதேசமயம் சுவாரஸ்யமாகவும் நகையுணர்வுடனும்  விளக்குவதில் பிரபலம் பெற்றவர் சுஜாதா. இதில் சுஜாதாவைத் தொடர்பவர் தொண்ணூறுகளில் தெரிய வந்த இன்னொருவர், சிறுகதைகளும் நாவல்களும் எழுதும்  இரா முருகன்.

Saa_Kandasamy_Tamil_Writers_Authors.jpg

இக்காலகட்டத்தில் தெரியவந்த இன்னொரு நாவல், சிறுகதை எழுத்தாளர், சா. கந்தசாமி. இவருடைய நாவல் விசாரணை கமிஷன்(1996) சாஹித்ய அகாடமி பரிசு பெற்றது. அது நிகழ்கால அரசியலையும் சமூகத்தையும் தைரியமாக விமர்சிக்கும் இவரது நாவலில் ஒரு அவநம்பிக்கைத் தொனியும் காணும்.

 

CS_Lakshmi_Ambai_Tamil_Authors-150x150.j

அசோகமித்திரன் கடந்த ஐம்பது வருடங்களான தொடர்ந்த முனைப்புடனான எழுத்தில்  கைத்திறனின் தேர்ச்சியைப் பெற்றிருப்பதைக் காணமுடியும். கைவரப்பெற்ற, வெற்றியும் தந்த இத்திறனை விட்டு அவர் நகர்வதில்லை அவரது உலகம் மத்திய தர நகர மக்கள் தம்  வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும்  இன்னல்கள் தாம். அவர்கள் தம் சமூக அடையாளங்களை மீறிய இன்னல்கள் தாம் அவரது உலகம். அசோகமித்திரனிடம் என்ன எதிர்பார்ப்பது என்று வாசகர்களுக்குத் தெரியும். அவர்களுக்கு ஆச்சரியம் தருவதும் ஏது இராது. அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவதும் ஏதும் இராது. அசோகமித்திரன் எழுத்துக்கள் யாரையும் ஏமாற்றுவதில்லை. ஆனால் அம்பை (1940) ஆச்சரியப் படுத்துவது மட்டுமில்லை. அதிர்ச்சியடையச் செய்பவரும் கூட. ஆசாரம், சம்பிரதாயம், பண்பாடு என்ற முகமூடிகளில்  தம் சுய பிம்பங்களைக் காத்துக்கொள்ள முயலும் அதிகாரங்களையும் ஆணாதிக்கங்களையும் அவர் விட்டு வைப்பதில்லை. சிறுகதைகள் மாத்திரமல்ல. தமிழ் பெண் எழுத்தாளர்களை, அவரது முன்னோடிகளும், சக காலத்தவருமான எழுத்தாளர்களைக் கண்ட பேட்டிகள் Face Behind the Mask என்ற புத்தகம் ஒன்றும் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. தன்னைப் பெண்ணிய வாதி என்ற அடைமொழிக்குள் அடைத்துக் கொள்ளாத பெண்ணியவாதி அம்பை.

 

Tamil_Literati_Rajanarayanan_KiRa-300x23

1923-ல் பிறந்த கி.ராஜநாராயணன் இங்கு பேசப்படும் எழுத்தாளர்கள் எல்லோரிலும் மூத்தவர் தமிழ் நாட்டின் தென்கோடியில் தெலுங்கு பேசும் விவசாயிகள் குடும்பத்தில் பிறந்தவர். அவர்கள் விஜயநகர் சாம்ராஜ்ய காலத்தில், பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டுக்கு வந்து குடியேறியவர்கள். பள்ளிப்படிப்பு என்று சொல்ல அதிகம் ஏதும் இல்லாதவர் தான்  அவரது எழுத்துக்கள் இக்காரணங்களால் தனித்வம் மிக்கது. வாய்மொழி மரபும் எழுத்து மரபும் மட்டுமல்லாது, கிராமீயமும் நகரத்துவ நாகரீகமும் கூட அவ்வவற்றின் தனித்வம் தன் எல்லைக்கோடுகளை மங்கச் செய்து இவரது எழுத்துக்களில் ஒன்று கலந்திருக்கும்.

Authors_Writers_prapanchan-300x225.jpg

 

பிரபஞ்சன் (1945), நாவலாசிரியர், சிறுகதைகளும் எழுதுபவர். முன்னர் ப்ரெஞ்ச் ஆதிக்கத்திலிருந்து இப்போது இந்தியாவுடன் இணைந்துள்ள பாண்டிச்சேரிக் காரர். 1709 – 1761 காலத்தில் புதுச்சேரியில் வாழ்ந்த ஆனந்த ரங்கம் பிள்ளை பாண்டிச்சேரி கவர்னராக இருந்த டூப்ளே முதலானவர்களுக்கு துபாஷி யாகவும் ஆலோசகராவும் இருந்தவர்.  தமிழில் எழுதப்பட்ட அவரது அன்றாட நாட்குறிப்புகள் மிக விரிவானவை. அவர் வாழ்ந்த காலகட்டம் ஆங்கிலேயர்களுக்கும், ப்ரெஞ்சுக் காரர்களுக்கும், மராட்டியர்களுக்கு இடையே தொடர்ந்த போர்களும், கோட்டைகளுக்குள்ளும் வெளியேயும் நடந்த சதிச்செயல்களும் நிறைந்தவை. ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள் 12 பெரிய பாகங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன வெளியாகியுள்ளன. இந்நாட்குறிப்புகள் ஆனந்த ரங்கம் பிள்ளையின் தனிப்பட்ட வாழ்க்கையை மாத்திரம் சொல்பவை அல்ல. அவர் வாழ்ந்த காலத்து சமூக, சரித்திர நிகழ்வுகளையும் பதிவு செய்துள்ளவை. பெரும்பாலும் இந்த நாட்குறிப்பு களையும், அந்தக் காலத்து மராட்டியர்களின், நவாபுகளின் வரலாறுகளையும் ஆதாரமாகக் கொண்டு, புதுச்சேரியின் வரலாற்றையே ஆனந்த ரங்கம்பிள்ளையை மையப்பாத்திரமாகக் கொண்டு பிரபஞ்சன் திட்டமிட்டுள்ள மூன்று பாக வரலாற்று நாவலில் இதுகாறும், மானுடம் வெல்லும் (1990) வானம் வசப்படும் (1993) என இரு பாகங்கள் எழுதியிருக்கிறார் பிரபஞ்சன். இப்பெரும் வரலாற்று நாவல் தனித்துவம் மிக்கதும் ஒரு மைல்கல் எனச் சொல்லப்படவேண்டியதுமான படைப்பு.

அண்டை மாநிலங்களிலிருந்தும், தூரத்து மாநிலங்களி லிருந்தும் காலம் காலமாக குடிபெயர்ந்து தமிழகத்தில் வாழும் மக்களால் தமிழும் தமிழ் இலக்கியமும் வளம் பெற்றுள்ளது. இது ஒரு நீண்ட வரலாறு கொண்ட காட்சி, நிகழ்வு. தமிழ் இலக்கியத் தோற்றமான சங்க காலத்திலிருந்தே (கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகள்) தொடங்குவது. இன்று தன் எண்பதுகளில் இருக்கும் எம்.வி.வெங்கட் ராம் (1920), ஏதோ ஒரு நூற்றாண்டில் சௌராஷ்டிரத்திலிருந்து குடிபெயரத் தொடங்கி கடைசியில் தமிழ் நாட்டில் குடிகொண்ட சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்தவர். 1930-களின் மணிக்கொடி காலத்திய மூத்த எழுத்தாளர். அதே மணிக்கொடி காலத்திய கு.ப.ராஜகோபாலனின் தாய் மொழி தெலுங்கு. அவரோடு இரட்டையராகக் கருதப்பட்ட ந.பிச்சமூர்த்தியும் தெலுங்கு மொழி பேசுபவர். மணிக்கொடி எழுத்தாளர் என்று புகழ்பெற்ற இவர்கள் யாரும் ஒரு வார்த்தை தெலுங்கில் எழுதியவர்கள் இல்லை.

 

dileep_Kumar_Umaavum_Ramavum_Fiction_Wri

சமகாலத்திய திலீப் குமார் (1951) தமிழ் நாட்டில் வெகுகாலமாக வாழ்ந்து வரும் குஜராத்திகள் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது கதைகள் பெரும்பாலும் தமிழ் நாட்டில் வாழும் மத்திய தர குஜராத்திகள், மராத்தியர் வாழ்க்கையைச் சித்தரிப்பவை. விமலாதித்திய மாமல்லன் (1960) ஒரு மகாராஷ்ட்ரியன். அவருடைய கதைகள் நம்மை தமிழ் நாட்டின் மகாராஷ்ட்ரர்களின் குடும்பத்துக்குள் இட்டுச் செல்கின்றன. விட்டல் ராவ் (1941) கன்னடியர். அவர் கன்னடம், தெலுங்கு, தமிழ் மூன்று மொழிகளும் பேசும் திரிவேணி சங்கமம் என்று சொல்லத்தக்க இடத்திலிருந்து வருபவர். அவரது கதைகள் தமிழ் நாட்டில் வாழும் கன்னடம் பேசும் குடும்பத்தினர் வாழ்க்கையைச் சித்தரிக்கின்றன. தம் வீடுகளில் கன்னடம் பேசினாலும் இவர்கள் தமிழ் வாழ்க்கையோடு ஐக்கியமானவர்கள் இருப்பினும் தமது கன்னட அடையாளங்களை, தெரிந்தோ, பிரக்ஞை அற்றோ சிறிய பெரிய அளவில் தம்மில் தக்க வைத்துக்கொண்டுள்ளவர்கள். இவையெல்லாம் இவர்கள் அனைவரது தமிழ் எழுத்துக்களிலும் சித்தரிக்கும் வாழ்க்கையிலும் பலதரப்பட்ட வண்ணங்களையும், மணங்களையும் கொண்டு சேர்க்கின்றன. அது தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் வளப்படுத்தியுள்ளது.

 

சுப்ரபாரதி மணியனும் தன் சிறுகதைகளிலும் நாவல்களிலும் தமிழ் நாட்டின், தமிழ் இன மக்களின் எல்லைகளில் வாழும் மக்களின் வாழ்க்கையையும் அப்பிரதேசங்களின் தனித்வ குணங்களையும் நுணுக்கமாகவும் விவரமாகவும்  கொண்டு சேர்த்துள்ளார். ஆ. மாதவன் பல தலைமுறைகளாக, திருவனந்த புரத்தில் வாழ்பவர். அவர் காலம் கடைத்தெருவில் உள்ள அவரது கடையில் கழிகிறது. அவரது கதைகளும் இயல்பாக, அக்கடையைச் சுற்றிய உலகையும் மக்களையும் பற்றித் தான் பேசுகின்றன. அவர்களது மலையாள மணத்தோடு. நீல பத்மனாபன் (1936) வெகு காலம் முன்பே கேரளத்துக்குக் குடிபெயர்ந்து வாழும் தமிழ் நாட்டு இரணியல் செட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர். அவரும் தம்மைச் சுற்றியுள்ள தமிழர், மலையாளிகள் வாழ்க்கையைத் தான் தன் எழுத்தில் கொண்டு வர இயலும். நீல பத்மநாபன் நிறைய நாவல்கள் சிறுகதைகள் எழுதிக்குவித்துள்ளவர். அவற்றில் தலைமுறைகள் (1966) என்ற நாவல் ஒரு மைல்கல் என்ற சிறப்பும் முக்கியத்துவமும் பெற்றது.

இன்றைய தமிழ் எழுத்தில் பொதுவாகக் காணப்படும் ஒரு முக்கியமானதும் சிறப்பானதுமான விஷயம், ஒரு காலத்தில் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளான பி.ஆர். ராஜம் அய்யரும் (1872-1898) புதுமைப்பித்தனும் (1907-1948) தம் எழுத்துக்களில் அவர்களுக்குப் பரிச்சயமான கொச்சைப் பேச்சு மொழியை எவ்வித தயக்கமுமின்றி பயன்படுத்தத் தொடங்கியதிலிருந்து, கொச்சை கொடுக்கும் ஜீவனை அறிந்து பின் வந்த தலைமுறையினர்  பேச்சு மொழியையே பயன்படுத்துவது வழக்கமாயிற்று. இது படிப்பவர்களுக்கு முதலில் சற்றி சிரமம் கொடுப்பதாகவும், பேச்சு மொழியைப் புரிந்து கொள்ளப் பழகவேண்டியும் இருந்தது. ஏனெனில் பேச்சு மொழி அவரவர் பிறந்து வளர்ந்து பழகிய வகுப்பு, மதம், வட்டாரம் சார்ந்து மாறுபடும் காரணத்தால், பரிச்சயமில்லாதாருக்கு அது உடன் புரிவதில்லை. ஆனால் பேசுவோருக்கு உயிர் கொடுப்பதும் இயல்பானதும் அது தான். புத்தகங்களில் எழுதப்படும் ஒழுங்குபடுத்தப்பட்ட இலக்கணம் சுத்திகரித்த மொழி செயற்கையானது, தமிழ் நாட்டில் எங்கும் எந்தத் தமிழனும் பேசாத மொழி அது. தீவிர தமிழ்ப் பண்டிதர்கள் மாத்திரமே நிர்ப்பந்தித்து பொதுவில் பேசும் மொழி. உயிரற்றது. மௌனத்தில் புன்னகை வருவிக்கும் மொழி. தமிழ் நாட்டின் வட்டார பேச்சு உருவங்களோடு, எழுபது எண்பதுக்களுக்குப் பிறகு இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களும் அவரவர் இடங்களில் வழங்கும் பேச்சுமொழியையும் நிகழ் காலத் தமிழ் எழுத்துக்குக் கொண்டுசேர்த்தனர். இதன் விளைவாக இன்றைய தமிழ் எழுத்தில் தான் எத்தனை ஃபணீஸ்வர்நாத் ரேணுக்கள்! எத்தனை மைலா ஆஞ்சல்கள்!!

Vannadasan_Nellai_Tamil_Writers-190x300.

 

வண்ணநிலவனும் (1948), வண்ணதாசனும் (1946) அவர்களுக்குப் பரிச்சயமான உயிரோட்டம் மிகுந்த திருநெல்வேலி பிள்ளைமார் பேச்சு மொழியில் தான் எழுதுகின்றனர். அவர்கள் மாத்திரமல்ல. இன்னம் அனேகர். அவரவர் பிறந்து வளர்ந்து பேசிய பேச்சு மொழியில். நாஞ்சில்நாடன்(1946) எழுதுவது, அவர் பிறந்து வளர்ந்து ஊரைப் பற்றி, அங்கு வாழும் மக்களைப்பற்றி, அதன் சுற்றுவட்டார ஜனங்களைப் பற்றித் தான் எழுதுகிறார். அவர்களது பேச்சு மொழி, அவர்களது குறுகிய வட்டத்துக்கு அப்பால் வழங்காத, அவர்களுக்கே உரிய ஒன்றாக இருக்கலாம். அவர்கள் வேறு எங்கு இப்போது வளர்ந்தாலும் சரி. எட்டுத் திக்கும் மதயானை (1998) என்னும் அவரது சமீபத்திய நாவல், தன்னுடைய கிராமத்தை விட்டு ஒடி, தலைமறைவு உலகில் சேர்ந்து விடுகிறான். அந்த உலகு அவனை இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு இட்டுச் செல்கிறது. அரசியல் வாதிகளுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும், தலைமறைவில் வாழும் குற்றவாளிக் கும்பல்களுக்கும் இடையில் நிலவும் வெளித்தெரியாத உறவுகளையும், இவற்றினுள்ளும்  ஊடுருவியுள்ள சாதிப் பிணைப்புகளையும் பற்றியது தான் இந்நாவல்.

தற்காலத் தமிழ் இலக்கியதைப் பற்றிப் பேசும்போது, எண்பதுகளும் தொண்ணூறுகளும் மிகுந்த பரவசமும் உற்சாகமும் தந்த வருடங்கள். வெகுஜனப் பத்திரிகைகளின் அசுரத்தனமான செல்வாக்கு இன்னமும் வாசகர்களை ஆட்டிவைக்கின்றன தான். ஆனால அவற்றில் வெளிவந்து மக்களைக் கவர்ந்தனவெல்லாம், ஐம்பதுக்களிலிருந்து தொடர்ந்து பல பத்துவருடங்களுக்கு பெரிய இலக்கியமாகக் கருதப்பட்ட நிலை இப்போது இல்லை. அரசியல் வாதிகளும், சினிமாக்காரர்களும் இன்னமும் பெருவாரியான மக்களை மயக்கும் கவர்ச்சி பெற்றவர்கள் தான். ஆனால் இலக்கிய ரசனைகொண்ட ஒரு சிறுபான்மை உருவாகியுள்ளதாகச் சொன்னேனே, அவர்கள் இந்த மயக்கத்திற்கு பலியானவர்கள் இல்லை. கட்சியின் கொள்கைகளுக்கும் விதிமுறைகளுக்கும் ஏற்ப தங்கள் எழுத்துக்களைத் தயாரித்து சந்தையில் கடை பரப்பிக்கொண்டிருந்த இடது சாரி எழுத்தாளர்களும் விமர்சகர்களும் கிளப்பிக்கொண்டிருந்த கூச்சலும் ஆரவாரமும் அனேகமாக் இப்போது ஓய்ந்துவிட்டன. காரணம் அவர்களுக்கு வழிகாட்டலும் உயிர்ப்பும் தந்து வந்த கோட்டைகள் சரிந்துவிட்டன இவையெல்லாம் மகிழ்ச்சி தரும் விஷயங்கள் தான். ஆனால் ஒவ்வொரு பருவமும்  அது கொண்டு வந்து சேர்க்கும் நோய் பரப்பும் பூச்சிகளும் தொத்து நோய்களும் கொண்டது தானே. பருவத்திற்கு பருவம் அவை மாறினாலும்.

கடந்த முன் பத்துக்களில், தமிழ்ப் புலமை, மரபின் தளைகளை எல்லாம் அறுத்துக்கொண்டு சுதந்திரமாக சிந்திக்கச் செயல்படத் துணிந்த சிருஷ்டி இலக்கிய உலகை தன் ஆதிக்கத்தில் அடக்கி வைத்திருந்தது. அங்கீகரிக்க மறுத்தது. ஆனால்  எழுபதுக்குப் பின் கிளர்ந்த மாற்றங்களால், தன் பழைய வழிமுறைகள் செல்வாக்கு இழந்தது கண்டு, இடது சாரிகள் ஊர்வலத்தில் தன்னையும் சேர்த்துக்கொண்டது தமிழ்ப் புலவர் உலகம்.இந்தத் தாவலும், பயணமும் அவர்களுக்கு சுலபமாகவே இருந்தது. இடதுசாரிகளும் அவர்களை தம் ஊர்வலத்தில் சேர்த்துக் கொண்டனர். காரணம் இடது சாரிகள் கொடுக்கப்பட்ட கொள்கைகளையே கோஷமிட்டு எழுதிப் பழகியவர்கள். அவர்கள் முன் பட்டையிட்ட பாதை ஒன்று தரப்பட்டது போலவே, தமிழ்ப் பண்டிதர்களுக்கும் இலக்கண வரம்புகளும் தயாரித்துத் தரப்பட்ட ஃபார்முலாக்களும் சூத்திரங்களும் ஏதும் புதிய பாதைகளை அவர்களுக்குத் தரவில்லை. பழக்கப்பட்ட சுவடு காட்டும் பாதை. யாப்பு விதிகளும் இலக்கண வரம்புகளும் இங்கும் கூட உதவாது போகவே, இவர்கள் பயணம் தொடர புதிய வாகனங்கள் கிடைத்தன. ஸ்ட்ரக்சுர்லிஸம், பின்னர் போஸ்ட்-ஸ்ட்ரக்சுரலிஸ்ம்,, பின்னர் போஸ்- மாடர்னிஸம் என்றெல்லாம் தொண்ணூறுகளில் கோஷங்கள் தமிழ் வெளியை நிறைத்தன. ஒவ்வொன்றின் கூடாரத்திலும் இவர்களது வாசம் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் தான் நீடித்தது. இந்தத் தமிழ் பண்டிதர்கள் எல்லாம் பெரும்பாலும் கல்லூரிகளில் மொழியியல் படித்தவர்கள். ஆக, மொழியியல் இவர்களது தாவலை சுலபமாக்கியது. மொழியியல் இவர்களுக்கு ஒரு பயிற்சி மையம். அங்கு கற்ற படித்து மனனம் செய்த சொற்கூட்டங்கள், விதிமுறைகள், மற்றவர்களைப் பயப்படுத்தத் தான் பயன்பட்டன. ஆனால் மொழி எவ்வாறு கலையாகிறது. வார்த்தைகள் பெறும் புத்துயிர், புது அர்த்தங்கள், வெற்று வார்த்தைக் கூட்டங்கள் எவ்வாறு வார்த்தைகள் முன்னர் கொண்டிராத புது உலகையும் அர்த்தங்களையும் சிருஷ்டித்துவிடுகின்றன என்ற மாயம் பற்றி அவர்கள் அறிந்தவர்கள் இல்லை. அவர்களுக்குப் புரிந்ததில்லை. மொழியும், பார்த்து அனுபவித்த வாழ்க்கை விவரங்களும் மாய உலகை சிருஷ்டிக்கும் திறனும் அவர்களை மீறிய உலகம். வெற்றுப் புலமையும் மனனம் செய்த விதிகள் வாய்ப்பாடுகள் இவற்றைக் கேட்டு பிரமிப்போர் இன்னும் இருந்தாலும் அவர்களும், அந்தக் காலமும் மறைந்து கொண்டிருக்கிறது தான்.

இன்னமும் ஒரு வேடிக்கை. இந்தத் தமிழ் புலமைகளும் கோஷதாரிகளும் இப்போது புதிதாக கிளர்ந்தெழுந்து கொண்டிருக்கும் தலித் கூடாரத்துக்குள் நுழைந்து விட்டனர். அங்கு அவர்களுக்கு தலித் சித்தாந்தம் ஒன்றை தாமே உருவாக்கி போதிக்கத் தொடங்கியுள்ளனர். எவ்வாறு தாம் உருவாக்கியுள்ள தலித் சித்தாந்தத்தை அடியொற்றி தலித் இலக்கியம் படைக்கப்படவேண்டும், அதன் விதி முறைகள் என்னவென்று சொல்லத் தொடங்கியுள்ளனர்.

 

Thoppil_Mohammad_Meeran_Tamils_Creative.

அடுத்து சிருஷ்டி பரமான நிகழ்வுகளைப் பற்றிப் பேசலாம். எல்லா சிருஷ்டிகரமான ஈடுபாடுகளைப் போலவே, சில மிக சுவாரஸ்யமானவை. இன்னும் சில மிகவும் ஆச்சரியம் தருபவை. உதாரணத்துக்குச் சொல்லப் போனால், தோப்பில் முகம்மது மீரான்(1944). அவரது  நாவல்கள் பழமைப் பிடிப்பும்  இறுக்கமான வாழ்வும் கொண்ட முஸ்லீம் சமூகத்தை விமர்சனம் செய்பவை. இம்மாதிரியான கண்டனத்துக்குள்ளாகும் முஸ்லீம் சமூகம் என்னவோ கடந்த நூற்றாண்டைச் சேர்ந்தது. அவரது கதைக்களனும், மக்களும்  அவர் பிறந்து வளர்ந்த கடற்கடையோரம் அரபிக்கடலைப் பார்த்த தேங்காய்ப் பட்டினம் என்னும் கிராமத்தை மையம் கொண்டது. அம்மக்கள் பெரும்பான்மையினர் மதக் கட்டுப்பாடுகளில் வாழும் முஸ்லீம்கள். இவர்களது கட்டுப்பாடுகளையும் நம்பிக்கைகளையும் தனது கிண்டலுக்கும் கண்டனங்களுக்கும் உள்ளாக்குவதில் மீரானுக்கு தயக்கம் ஏதும் இருப்பதில்லை.

தனது முதல் நாவல் கடலோரத்து கிராமத்தின் கதை(1988) தொடங்கி பின் வந்த துறைமுகம்(1991), கூனன் தோப்பு(1993), சாய்வு நாற்காலிகள்(1995) ஆகிய நாவல்களில், தன் முந்திய முஸ்லீம் சமுதாயத்தின் குருட்டு நம்பிக்கைகள், மதக்கட்டுப்பாடுகளின் முரட்டுக் கரங்கள், முஸ்லீம் மதகுருக்கள் இம்மக்களின் மீது கொண்டுள்ள கழுத்தை நெறுக்கும் ஆதிக்கம், ஏழைமக்களையும் பெண்களையும் மதகுருக்களும் பணம் படைத்தோரும் தம் கட்டுக்குள் வைத்து சற்றும் இரக்கமின்றி இழைக்கும் கொடுமைகள், இவையெல்லாம் மதத்தின் புனிதத்தைக் காப்பாற்ற்த் தான் என்று கோஷிக்கும் வேஷதாரித்தனம் எல்லாம் மீரானின் எழுத்தில் பதிவாகியுள்ளன. வேடிக்கை என்னவென்றால், மீரானின் எழுத்துக்கள் எல்லாமே எதிர்பாரா வியாபார வெற்றிகள். அத்தோடு இலக்கிய அங்கீகாரமும் அவை பெற்றுள்ளன. இப்போது அவர் தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் சுழல்கிறது. இஸ்லாமிய சமுதாயத்தின் பேசாப் பொருளை யெல்லாம் பேசியவராயிற்றே.

 

 

- See more at: http://solvanam.com/?p=27687#sthash.188XZwts.dpuf

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இலக்கியம் – ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும் – பகுதி 3
வெங்கட் சாமிநாதன்

Novelist_Tamil_Writer_Authors_Fiction-sa

இந்த இடத்தில், சந்தர்ப்பத்தில் சல்மா என்னும் கவிஞரைப் பற்றிப் பேசுவதும் பொருத்தமாக இருக்கும். அதற்கான காரணங்கள் சுவாரஸ்யமானவை பல. சல்மா தன் கவிதைகளில் தன் சொந்த துயரங்களையும் இழப்புகளையும் பற்றித் தான் பேசுகிறார் என்று தோன்றும். ஆனால் அவை உண்மையில் அத்தோடு நிற்பதில்லை. இறக்கை முளைத்துப் பறக்கத் தொடங்கி விடுகின்றன. அக்கவிதைகள் வேறு நிலைகளுக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. தன் சொந்த துயரங்கள், தன் குடும்பத் துயரங்களாக, ஒரு சமூகத்தின் துயரங்களாக, அவர் சார்ந்திருக்கும் மதத்தின் நிலைப் பாட்டிலிருந்து பெறும் துயரங்களாக விரிவடைகின்றன, அவரை மட்டிலும் ஒரு பெண்ணாக, தனிப்பட்ட வியக்தியாகத் தாக்கி வதைக்கும் துயரமாக நின்றுவிடாது பெண் சமூகம் முழுதையும், தான் சார்ந்த இஸ்லாமிய பெண் சமூகம் முழுதும் ஆழ்த்தியிருக்கும் துயரமாக, இழப்புக்களாக விரிவு படுகிறது. மதம் மாத்திரமல்ல, ஆண் வர்க்கமே தன் மதத்தின் துணை கொண்டு தன் மேலாண்மைக்கு தன் மதத்தையே ஆயுதமாக, சமூக நியாயமாக பயன்படுத்திக்கொள்கிறது. சல்மாவின் சொந்த துயரங்களும் இழப்புக்களும் பெண்சமூகத்தின் துயரங்களுக்கும் இழப்புக்களுக்கும் metaphor ஆகிறது. அவரது குரல் பெண்சமூகமே, குறிப்பாக இஸ்லாமிய பெண் சமூகமே அதை அழுத்தி வதைக்கும் ஆணாதிக்கத்துக்கு எதிராக எழுப்பும் குரலாகிறது. சல்மாவுக்கு அவரது கவிதைகள் விடுதலைக்கான மொழியாகிறது.



சற்று முன் சமீப காலங்களில், எழுபது எண்பதுகளில் ஒரு வெறியாக, ஃபாஷனாக தமிழ் இலக்கிய, பண்டித உலகில் உலாவந்த ஸ்ட்ரக்சுரலிஸ, போஸ்ட் ஸ்ட்ரக்சுரலிஸ, போஸ்ட் மாடர்னிஸ சமாசாரங்களுக்கு இணையாக தலையெடுத்த மந்திர யதார்த்த, நான் லீனியர் ஆரவார கோஷங்கள் பற்றியும் சொல்ல வேண்டும். மிகவும் திறன் வாய்ந்த, தான் பிறந்த, வாழும் மண்ணில் திடமாகக் காலூன்றியவராக தன் ஆரம்ப எழுத்துக்களில் தன் மக்களைப் பற்றி மிக நுண்ணிய, நட்பும் நெருக்கமும் தொனிக்கும் யதார்த்தச் சித்திரங்களைத் தன் மதனிமார்களின் கதை (1989), கொல்லனின் ஆறு பெண் மக்கள் (1990) போன்ற தொகுப்புகளில் அடங்கிய கதைகளில் எழுதிய கோணங்கி, திடீரென மார்க்வேஸ் மாதிரி எழுதப்போகிறேன் என்று தீர்மானித்து மந்திர யதார்த்தத்துக்குத் தாவியுள்ளார். ஒரு வேளை அவற்றை மந்திர யதார்த்தம் என்று சொல்வது முற்றிலும் சரியல்லவோ என்னவோ. கோணங்கி மாதிரி திடீரென இப்படி ஒரு புதிய மதத்திற்கு தாவியவர்கள் ஒவ்வொருவரும் தம் எழுத்துப் பாணிக்கு ஒரு புதிய பெயர் தந்து கொள்கிறார்கள். கோணங்கி இதை ஏதோ ஒரு மாயவித்தை போல, தன் எழுத்துக்கள் எதையும் தான் எழுதுவதில்லை என்றும், அது தானாக எழுதிக்கொள்கிறது என்றும் சொல்கிறார். ஏதோ ப்ளாஞ்செட்டில் கை வைத்ததும் அது எழுதுவதைப் போலத்தான், தான் எழுதுவது என்னவென்று தனக்கே தெரியாது என்பது போலச் சொல்கிறார். இதை நம்புவதற்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தாலும், அவர் நம் காதில் நிறையவே பூச்சுற்றுவது போல இருந்தாலும், அவர் சொல்லும்போது மிக சீரியஸாகத் தான் தன் முகத்தை வைத்துக் கொள்கிறார். ஆனால் இந்த புதிய ஃபாஷன் அல்லது பித்து ஒரு சிறிய வட்டத்தை நம்ப வைத்துள்ளது என்று தான் தோன்றுகிறது. அவர்கள் வெகு ஆரவாரத்துடன் தம் காதில் பூச்சூட்டிக் கொள்கிறார்கள்.

இதன் இன்னொரு விளைவு, இப்போது லத்தீன் அமெரிக்க எழுத்துக்களின் மொழிபெயர்ப்புகள் கணிசமாக வரத் தொடங்கியுள்ளன. அந்த மொழி பெயர்ப்புகள் நமக்கு எந்த உற்சாகத்தையும் தரவில்லை என்பது ஒரு புறம் இருக்கிறது. தமிழ் இலக்கியம் முப்பது நாற்பதுகளில் நிறைய மொழி பெயர்ப்புகளை கண்டது. ஐரோப்பிய மொழிகளிலிருந்து, ஆங்கிலம் வழியாகவும். நேராக மராத்தி, வங்காளி, ஹிந்தி என மற்ற இந்திய மொழி களிலிருந்தும் கூடத் தான். ஆனால் அதன் பிறகு பின் வருடங்களில் மொழிபெயர்ப்புகளுக்கு எந்த வரவேற்பும் இருந்ததில்லை. இப்போது தலித் அரசியலும் சிந்தனையும் மேலிட்டிருப்பதால், தலித் எழுத்துக்கள், கன்னடம், மராத்தி மொழிகளிலிருந்து வரத்தொடங்கியுள்ளன. இது ஏதும் இலக்கிய விழிப்புணர்வின் காரணமாக விளைந்ததல்ல. தலித் பற்றிய சிந்தனைகள் அரசியலில் மேலோங்கி யிருப்பதன் காரணத்தால் விளைந்ததே.



தலித் அரசியல் விழிப்புணர்வின் காரணமாக அதற்கு ஊட்டம் கொடுத்து உதவக்கூடிய, தலித் எழுத்துக்கள் பக்கம் நம் கவனம் செல்லவேண்டும்.. தலித் பற்றிய அரசியலும் சிந்தனையும் தமிழ் நாட்டில் திடீரென எழக் காரணம், அம்பேத்கர் நூற்றாண்டு நினைவு விழாக்கள் இந்தியாவெங்கும் கொண்டாடப்பட்டது, மண்டல் கமிஷனின் அறிக்கையின் காரணமாக எழுந்த நாடு தழுவிய கிளர்ச்சிகள், தலித் மக்கள் திடீரென தமக்குரிய உரிமைகளுக் காகவும், தம்மை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்புக்களுக்காகவும் மேல் ஜாதி ஹிந்துக்களுடன் தொடங்கிய போராட்டங்களும் அவற்றினிடையே நேர்ந்த வன்முறைகள் எல்லாம். மேல் ஜாதியினர் இதை விரும்பவில்லை.



தலித் மக்கள் வாழ்க்கை பற்றி எழுந்த முதல் இலக்கிய படைப்பு, பூமணி(1947) எழுதிய பிறகு (1976) என்ற நாவல். ஒரு கிராமத்தில் ஒரு செருப்பு தைப்பவனின் கதை அது. அவன் தனக்கு நேரும் இழிவுகளையெல்லாம் மௌனத்தோடு தனக்குள் குமைந்து கொண்டும் கௌரவத்தோடும் சகித்துக் கொள்கிறான். கருப்பன் என்னும் ஒரு அநாதைச் சிறுவன் அவன் பொறுப்பில் வளர்கிறான். கருப்பன் தனக்கு நேரும் அவமதிப்பை எல்லாம் எதிர்கொள்ளும் வழியே வேறு. அவனைச் சுற்றி இருக்கும் எல்லாவற்றையுமே எல்லாரையுமே பார்த்தால் அவனுக்கு கிண்டல் தான். பொதுவாக தலித் எழுத்துக்களில் காணும் மனிதர்கள், அவர்களின் வெவ்வேறு வடிவங்களுக்கும் வகைகளுக்கும் கருப்பன் ஒரு மாதிரி அச்சு உருவம். பூமணி இதை அடுத்து வெக்கை(1982) என்ற ஒரு நாவலை எழுதியிருக்கிறார். இந்த நாவலில், ஒரு இளைஞன் தன் குடும்பத்தாரை மிரட்டி ஹிம்சைப் படுத்திக் கொண்டிருந்தவனை வெட்டி முடமாக்கிவிட்டு தப்பி ஓடி ஒரு காட்டில் தலைமறைவாகி விடுகிறான். அவனது தலைமறைவு வாழ்க்கையின் அன்றாட சித்தரிப்பை இந்த நாவலில் பார்க்கலாம்.



எல்லா தமிழ் தலித் எழுத்துக்களிலும் மாறாது காணப்படும் ஒரு குணம், அவர்களின் சீற்றம் தான். அது நாம் எதிர்பார்க்க வேண்டிய ஒன்று தான். அதோடு தலித் எழுத்துக்கள் நாம் இதுகாறும் காணாத சமுதாயத்தின், உலகின் வாழ்க்கையை பதிவு செய்து, அத்தோடு. ஒரு புதிய மொழியையும் இலக்கியத்திற்குக் கொண்டு சேர்த்துள்ளன. அந்த மொழி பண்படுத்தப் படாதது. கொச்சையானது. ஆபாசமும் வசையும் நிறைந்தது. ஆனால் அதன் வெளிப்பாடு வெளிப்படையானது. அது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கலாம். ஆனாலும் அது பேசப்படுவது. உயிரோட்டம் கொண்டது. அந்த மொழியில் தான் தலித் மக்களின் உணர்வுகள் பேசப்படுகின்றன. பாமா (1958) ஒருகன்னி மாடத்தில் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். கருக்கு(1992) என்ற அவரது முதல் புத்தகம் சுயசரிதம் என்று சொல்ல வேண்டும். கன்னி மாடத்திலும் கூட ஜாதி வேற்றுமைகள் பேணப்படுவதைச் சொல்கிறது கருக்கு. இதைத் தொடர்ந்து வந்த சங்கதி (1992) பாமாவின் பாட்டி சொல்லும் கதையாக பதிவாகியுள்ளது. குசும்புக்காரன் என்று ஒரு சிறுகதைத் தொகுப்பும் பாமா 1996-ல் வெளியிட்டிருக்கிறார்.



பழையன கழிதலும், ஆனந்தாயி என்ற இரு குறிப்பிடத்தக்க நாவல்களை எழுதியுள்ள சிவகாமி ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி. இந்த இரு நாவல்களும் தலித் வாழ்க்கையின் இன்னொரு புதிய பரிமாணத்தைச் சித்தரிக்கின்றன. காலம் காலமாக தாம் கட்டுண்டிருந்த தளைகளை தகர்த்து எழுந்துள்ள புதிய தலைமுறை கல்வி கற்ற, அதிகார வேட்கையும் பணத்தாசையும் கொண்ட தலித்துகள் சிவகாமியின் நாவல்களில் மையப் பாத்திரங்களாகின்றனர். இந்த தலித்துகள், இன்னமும் வதைபடும் நிலையில் தங்கிவிட்ட அதிர்ஷ்டம் கெட்ட தம் சகோதர தலித்துகளை அடக்கி ஆளுவதில் சந்தோஷம் அடைகின்றனர். விழி. [பா. இதய வேந்தன், அபிமானி, உஞ்சை ராஜன் போன்ற இளம் தலித் எழுத்தாளர்களுக்கும் தாம் சொல்ல அவர்கள் கண்ட அனுபவித்த தலித் வாழ்க்கைகள் உள்ளன. அவை தாக்கு வலு வாய்ந்த எழுத்துக்கள். சுயவிமர்சனம் கொண்டவையாதலால். எதையும் மறைக்காதவை.



சோ தர்மனின்(1953) தூர்வை (1996), இமையத்தின் (1964) கோவேறு கழுதைகள், இரண்டும் தலித் வாழ்க்கை பற்றிய மிக முக்கியமானதும் குறிப்பிட்டுப் பேச வேண்டியதுமான நாவல்கள். சோ தர்மனின் பாத்திரங்கள் சமீபத்திய பழமையைச் சேர்ந்தவை. எவ்வளவு தான் அவர்கள் ஒடுக்கப்பட்டாலும், வசதி அற்று இருந்தாலும், சமூகத்தில் ஒதுக்கப் பட்டாலும் தம் வாழ்க்கையை சந்தோஷத்துடனேயே கழிக்கிறார்கள். பூமணியின் கருப்பனைப் போல அவர்களுக்கு மகிழ்ச்சி தருவது அவர்களது நகை உணர்வு. அந்த நகை உணர்வு தான் அவர்களை ஒடுக்கும் சமூகத்தை மீறி வாழும் சக்தி தரும் ரகசிய ஆயுதம். இந்த நாவல்கள், தலித் வாழ்க்கையைச் சொல்லும் வாய்மொழி மரபில் வருபவை. ஆனாலும் எழுத்தில் பதிவாகி அச்சில் வந்துள்ளவை.



இமையத்தின் கோவேறு கழுதைகள் மிகவும் சர்ச்சைக்குள்ளான எழுத்து. காரணம், தலித் சமுதாய மக்களுக்குள்ளேயே நிலவும் வர்க்க மேலாண்மையும், வசதி உள்ளோர் வசதி அற்றோர் இடையேயான ஏற்றத் தாழ்வுகளையும் ஒளிவு மறைவின்றி பதிவு செய்துள்ளது தான். தலித் மக்களுக்குள்ளேயே கூட படித்தவரும், மேல் நிலைக்கு உயர்ந்துள்ளவரும், அதிகாரம் படைத்தவருமான் மத்திய தர தலித்துக்கள், இவை எதுவுமற்ற இன்னமும் எழ்மைப்பட்ட சக தலித்துகளை அடக்கி ஆளும் கொடுமை, மேல் ஜாதியினரும் சமூகத்தில் உயர் மட்டத்தில் உள்ளவரும் தமக்குக் கீழ்ப் படியில் இருப்போரை அடக்கி ஆண்ட கொடுமைக்கு சற்றும் குறைந்ததில்லை என்பதை இமையத்தின் நாவல் சித்தரித்துள்ளது. தலித் சித்தாந்திகள், இமையத்தையும் அவர் எழுத்துக் களையும் ஒட்டு மொத்தமாகத் தம் உரத்த குரலில் வன்மையாகக் கண்டனம் செய்து வருவது நமக்கு அதிர்ச்சி தரும் செய்தி அல்ல.

நாவலும் சிறுகதைகளும் எழுதும் பாவண்ணன், பெருமாள் முருகன் போன்றோரும், கவிதை எழுதும் இரத்தின கரிகாலன், பழமலை போன்றோரும் தலித்துகள் அல்ல தான். ஆனால் அவர்கள் வாழ்க்கை தலித் மக்களோடு நெருங்கி பின்னிப் பிணைந்த காரணத்தால் அவர்கள் எழுத்துக்கள் தலித் வாழ்க்கையைப் பேசுவனவாக இருக்கின்றன.



தங்கர் பச்சான் எனனை மிகவும் பரவசப் படுத்தும் ஒரு எழுத்தாளர். தமிழ் சினிமா உலகில் வெற்றியும் புகழும் மிகப் பெற்ற, எல்லோரின் பாராட்டையும் பெற்ற சினிமா புகைப்பட வல்லுனர் அவர். ஆனால் அவரது படைப்பெழுத்துக்களைப் பார்த்தால், தன் பிறந்த கிராமத்து மண்ணிலும் வாழ்க்கையிலும் ஆழக் கால்பதித்துள்ள ஒரு சாதாரண விவசாயியாகத்தான் அவரைக் காண்கிறோம். இந்த நவ நாகரீக காலத்தில் வாழும் ஒரு மனிதர் என்பதையோ, ஏன், அவர் வெற்றியும் புகழும் பெற்று வாழும் சினிமா உலகப் பகட்டின் மினுமினுப்பின் அடையாளம் எதையுமோ சிறிதளவு கூட அவர் எழுத்தில் காணக் முடிவதில்லை. அவருடைய ஒன்பது ரூபாய் நோட்டு (1996) என்ற நாவலில் காணும் சில கிராமத்து வாழ்க்கையின் நுணுக்கமான நீண்ட விவரிப்புகள் அவற்றோடு அவருக்கு இருக்கும் சொந்த அனுபவத்தை நெருக்கமான விவர ஞானத்தைச் சாட்சியப்படுத்துகின்றன. பேர்ல் எஸ் பக்கின் Good Earth நாவலில் வரும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பையும் அவை பல நூறு ஏக்கர் பரப்பில் விளைவிக்கும் பயிர் நாசத்தையும் விவரிக்கும் பக்கங்களை, ஹெமிங்வேயின் Old Man and the Sea நாவலில் வரும் ராக்ஷஸ மீனுக்கான நீண்ட போராட்டத்தின் நுணுக்கமான விவரிப்பையும் நினைவு படுத்தும் பகுதிகள் தங்கர் பச்சானின் விவரிப்புகள்.

கடந்த இருபது வருடங்களில் கவிதை எழுத வந்திருப்பவர்களின் பெருக்கம் கொஞ்சம் அதிகம் தான். அவர்களில் பலர் நம் கவனிப்பை வேண்டும் அளவில் நன்றாகவே எழுதிய போதிலும் நம்மைப் பரவசப்படுத்தும் புதிய கண்டுபிடிப்பு என்று உற்சாகம் கொள்ளும் நிலையில் எவரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். எழுபதுகளிலிருந்து தன் ஆரம்ப காலத்தில் தன் கிண்டல் பார்வையும் சமூக அரசியல் விமர்சனமும் கொண்ட கவிதைகளால் பரவசப்படுத்திய ஞானக் கூத்தனிடம் அந்த பழைய நகை உணர்வு அறவே அற்றுப் போய்விட்டது போல காணப்படுகிறார். ,அவர் கவிதைகள் எவ்வித சுவையும் அற்று பரபரப்பையும் இழந்து காண்கின்றன. இப்போல்லாம் அவர் ரொம்ப சீரியஸ். பிரமீள் (அந்நாளைய தருமு சிவராமூ) இப்போது வெற்று வாய்ச்சண்டை வீரராகக் கீழிறங்கிவிட்டார். பழையவர்கள் தம் கவிதைகளைத் தொகுப்பதில் ஈடுபட்டுள்ளார்கள். ஏதும் புதிய முகங்கள், உற்சாகம் தரும் முகங்களைக் காணோம். சல்மாவைத் தவிர.

விமர்சன எழுத்து பற்றி ஏதும் சொல்லாமல் இருப்பதே நல்லது என்று படுகிறது. பொதுவான இலக்கிய சூழல் விமர்சனத்துக்கு ஏற்றதாக இல்லை. எவ்வித மாற்று அபிப்ராயமோ, உள்நோக்கமற்ற கருத்துப் பரிமாற்றமோ, சுதந்திரமான சிந்தனை வெளிப்பாடோ, விருப்பு வெறுப்பற்ற மதிப்பீடுகளோ வெளிவரும் சூழல் இல்லை இங்கு, இப்பொது. காட்டமான கட்சியாடல்கள் என்னவோ உரத்த குரலில் மிகுந்த ஆவேசத்தோடு நடக்கின்றன தான். ஆனால் அவை ஏதும் ஒரு மாற்றுக் கருத்தை அனுமதிக்கும் நிலையில் இல்லை. சித்தாந்திகள் எண்ணிக்கையில் அதிகமாகி உள்ளனர். அவரவர்க்கு தயாராகக் கிடைக்கும் ஒரு மேடையில் எழுந்து நின்று கொண்டு உரத்த குரலில் தம் இருப்பை தமிழ் உலகுக்கு அறிவித்துக்கொண்டு வருகின்றனர்.



நாடக இலக்கியத்தைப் பற்றிப் பேச வந்தால், தமிழர்களுக்கு ஏதோ ஒன்று ஏதோ காரணத்துக்காகப் பிடித்து விட்டால் அதை யோசனை இன்றி இறுகப் பற்றிக்கொள்வார்கள். அவர்களுக்கு, அவர்களில் நாடகப் பற்று கொண்ட ஒரு சிறு பான்மையினருக்கு ஒரு வகையான நடிப்பு தான் நாடகம் என்று ஒரு கருத்து பற்றியுள்ளது. சம்பிரதாய மேடை என்பதே, நாடக இலக்கியம் என்பதே மேற்கத்திய காலனீயத்தின் எச்சம் என்ற கருத்து இறுகப் பற்றியுள்ளது யதார்த்தமான, இயல்பான நடிப்போ, நாடக எழுத்தோ அவர்களுக்கு விரோதமானது. ஏனெனில் இதுவும் மேற்கத்திய காலனீயத்தின் எச்சங்கள். முதலாளித்துவ சமூகத்திலிருந்து பெற்றது. நமக்குப் பழக்கமான, சம்பிரதாய ஓரங்க நாடகங்களும் பல அங்கங்கள் கொண்ட முழு நாடகங்களும் மேடையில் நடிக்கப்படுவனவும் அவர்களுக்கு விரோத மானவை. நடிப்பு என்றால் அது பத்ததிகள் கொண்டதாக இருக்க வேண்டும் இயல்பாகவோ, யதார்த்த பூர்வமாகவோ இருத்தல் கலை ஆகாது. நாடகத்தின் சலனங்கள் நடன அடவுகள் மாதிரி முழுதும் கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும். பேச்சும் இயல்பாக இருக்கக் கூடாது. அதுவும் கூடியாட்டப் பாத்திரத்தின் பேச்சு போல நீட்டி முழக்கி இழுத்து இழுத்துப் பேசும் பத்ததிகள் கொண்டதாக இருக்க வேண்டும். நடனங்களும் கொண்டிருக்க வேண்டும். இவை தான் இந்திய மண்ணில் வேரூன்றிய நாடகப் பண்புகள் மற்றதெல்லாம் மேற்கத்திய காலனீயம் தந்தவை என்ற ஒரு கருத்து பரவலாக்கப் பட்டுள்ளது. தமிழ் நாட்டில் நாடக இயக்கம் என்ற ஒன்று முன்னரும் இருந்ததில்லை. அறுபது எழுபதுகளில் எழுந்த ஒரு எளிய பலஹீனமான தொடக்கம் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு விட்டது. நாடக இலக்கியம் என்று ஏதும் சொல்லிப் பெருமை படும் அளவில் இங்கு இல்லை

இன்னும் ஒரு பகுதி உண்டு, மிகவும் சோர்வு தரும் வரண்ட பகுதி அது. அவ்வப்போது ஆங்காங்கு காணும் சில துளிர்களைத் தவிர. கடந்த 70 வருடங்களில், தமிழ் மக்களின் வாழ்க்கையையும், நம்பிக்கைகளையும் வரலாற்றையும் அவரவர் சிந்தனைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப செதுக்கி உருவாக்கிய சக்தி வாய்ந்த பெரும் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். ஈ.வே. ராமசாமி நாயக்கர், சி. ராஜகோபாலாச்சாரி, கே. காமராஜ், சி.என். அண்ணாதுரை, எம்.ஜி ராமச்சந்திரன், மு.கருணாநிதி ஆகிய ஏழுபேரும் அதில் மிக முக்கிய மானவர்கள். தமிழனின் வாழ்க்கையை, தலைவிதியை நிர்ணயித்தவர்கள். இவர்களில் கடைசியாகச் சொல்லப்பட்ட மு. கருணாநிதியைத் தவிர வேறு எவரும் தம் சுயசரிதத்தை எழுதியதில்லை. அதிலும் மு. கருணாநிதியின் மூன்று பாகங்கள் கொண்ட நெஞ்சுக்கு நீதி என்ற அந்த சுய சரிதம் பெரும்பாலும் தன்னை நியாயப்படுத்திக்கொள்ளும் காரியமாகவே இருக்கிறது. வேறு ஒரு சமயத்தில், வேறு ஒரு மனச் சாய்வில் அது வேறாக எழுதப்பட்டிருக்கும். ஆனால் தம் அரசியல் வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் பழம் அரசியல் தலைவர்களுக்கு அவரவர்க்கு முன் உள்ள, தம்மை நியாயப் படுத்திக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தங்கள் உண்டு. அரசியல் வாழ்க்கை யிலிருந்து ஒதுங்கி வாழும் சி. சுப்பிரமணியம் போன்றவர்கள் தான் தம் வரலாற்றை சுய சார்பற்று, தன்னை நியாயப் படுத்திக்கொள்ளும் முயற்சியில் இறங்காமல் எழுத முடியும். சி. சுப்பிரமணியம் அதைத் தான் செய்துள்ளார். ஆனால், கடந்தன் ஒரு நூற்றாண்டு கால அரசியல் சமூக வரலாற்றை, அந்த வரலாற்றை உருவாக்கிய இயக்கங்களை, தலைவர்களைப் பற்றி, நேர்மையாக, எந்த கட்சி சார்பும் அற்று, உணர்ச்சி வசப்படாது, வரலாற்று உண்மைகளைப் பதிவு செய்யும் நோக்கில் எந்த சரித்திரப் பதிவும் வரவில்லை. ஒன்று தாம் வணங்கும் தலைவர்களை போற்றித் துதி பாடும் வகையின அல்லது தமக்கு எதிரான தலைவர்களை ஒதுக்கும் அல்லது குறைத்துச் சொல்லும் நூல்கள் தான் வரலாறு எனப் பெயர் சூட்டப்பட்டு வெளிவருகின்றன.

ஆனால் சில குறிப்பிடத்தக்க விதி விலக்குகளும் இருக்கின்றன தாம். அவை அரசியல் தலைவர்களால் எழுதப்பட்டவையல்ல. சாதாரண மனிதர்கள் தந்தவை.. சுவருக்குள் சித்திரங்கள் (1998) என்னும் புத்தகம் தியாகு என்னும் சிறைக் கைதியாக வாழ்ந்த ஒரு நக்சல் தீவிர வாதியால் எழுதப்பட்டுள்ளது. தியாகு கீழ்க் கோர்ட் ஒன்றால் விசாரிக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டவர். அவர் அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்கோர்ட்டுக்கு மனுச்செய்து கொள்ள வில்லை. ஆனால் சென்னை உயர்நீதி மன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளித்தது. அவர் 16 வருடங்கள் அனுபவித்த சிறை வாழ்க்கையை வெகு நுணுக்கமாகவும் உண்மையாகவும் தன் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். அவரது அரசியல் கருத்துக்கள், அதற்கான அவரது அரசியல் போராட்டங்கள், சந்தித்த வழக்குகள் எல்லாம் அவரது சுவருக்குள் சித்திரங்கள் புத்தகத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ளன.



இது போன்ற அபூர்வமான இன்னொரு வாழ்க்கைச் சரிதமும் தமிழில் இக்கால கட்டத்தில் வெளிவந்துள்ளது. அழகிய நாயகி அம்மாள் என்னும் படிப்பறிவற்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு மூதாட்டி, அவ்வப்போது வாய் மொழியாகச் சொல்லச் சொல்ல பதிவு செய்யப்பட்ட அந்த அம்மையாரின் குடும்பத்தின், சமூகத்தின் மூன்று தலைமுறை வரலாறு தான் கவலை என்ற தலைப்பில் 1998-ல் வெளியானது. குறிப்பிடத்தக்க ஒரு விவரம், அந்த தடித்த வரலாற்றுப் பதிவில் அந்த அம்மையார் தன் கணவனைப் பற்றி நல்லதாகச் சொல்ல ஏதும் இருக்கவில்லை.

கடந்த 30 வருடங்களாக, ராஜபாளையத்தைச் சேர்ந்த தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ராஜூ சமுதாயத்தைச் சேர்ந்த மு.க. ஜகன்னாத ராஜா, சுயமாகக் கல்வி கற்றவர், பாலி, சமஸ்கிருதம், ப்ராக்ருதம், கன்னடம், தெலுங்கு ஆகிய அத்தனை மொழிகளிலிருந்தும் தமிழுக்கும், தமிழிலிருந்து கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கும் முக்கியமான பழம் நூல்களையும் தற்கால இலக்கியங்களையும் மொழிபெயர்க்கும் பணியில் சிறப்பாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். அதிலும் வெகு அமைதியாக, சுயதம்பட்டம் விளம்பரம் ஆகாயத்தை நோக்கி மூக்கை உயர்த்தாமல் செய்து வருவது குறிப்பிட வேண்டிய விஷயமும் கூட. யார் சொல்லியும் எந்த அறக்கட்டளையின் தயவும் இன்றி தன் விருப்பத்திற்கே செய்து வருகிறார். இது இன்றைய தமிழ் நாட்டில், அரசியல் கலாச்சாரத்தில் நிலவும் தர்மங்கள், மதிப்புகளுக்கு முற்றிலும் மாறான செயல். இன்றைய தமிழ் கலாச்சாரத்தில் உலகத்திலேயே மிகச் சிறப்பானதும் வளமானதுமான மொழி தமிழ் தான். அது மற்ற மொழிகளிலிருந்து பெறுவதற்கு தொடர்பும் உறவும் கொள்வதற்கு ஏதும் இல்லை.

அடுத்து சிறப்பாகச் சொல்லப்படவேண்டியவர்கள், சீனி விஸ்வநாதன், டி.வி.எஸ் மணி, பெ.சு.மணி போன்ற அறிஞர்கள் பாரதியின் எழுத்துக்களையும் வாழ்க்கையையும் முழுமையாகக் கொண்டு வருவதிலும் பாரதி பற்றிய அனைத்துச் செய்திகளையும் ஆவணப்படுத்துவதிலும் வெகு அமைதியாக தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்கள். பாரதி மாத்திரமல்ல, பாரதி போல தமிழர்களின் நினைவிலிருந்து அதே வெகு அமைதியுடன் மறைந்து கொண்டிருக்கும் வ.வே.சு. சுப்பிரமணிய சிவா, வ.வு.சி. போன்ற இலக்கிய கலாசார அரசியல் பெரியோர்களையும் அவர்களது எழுத்துக்கள் வாழ்க்கையை முழுமையாக ஆராய்ந்து கண்டு பதிவு செய்வதிலும் தம் அக்கறைகளை விரிவு படுத்திக்கொண்டுள்ளார்கள். இவை அத்தனையும் ஏதும் ஸ்தாபனங்களின், அரசின், பல்கலைக் கழகங்களின் உதவியாலோ தூண்டுதலாலோ நடப்பன அல்ல. முற்றிலும் தனி நபர் ஆர்வத்தில் பிறந்த முயற்சி இது.

கடைசியில் ஒரு மிக முக்கியமான, சமீப காலங்களில் காணும் ஒரு மாற்றத்தையும் பற்றிச் சொல்ல வேண்டும். அதன் அர்த்தமும் உத்வேகமும் எதைக் குறிப்பிடுகிறது என்பதோ, எதும் புரியாத மாற்றமா என்பதோ எனக்கு விளங்கிய பாடில்லை. தமிழர்களிடம் புத்தகம் வாங்கிப் படிப்பது என்று ஒரு பழக்கம் இருக்கிறதா, என்ற கேட்டு பெருமைப்படும்படி பதில் சொல்லிக் கொள்ள ஏதும் இல்லை. அப்படி ஒரு பழக்கமே அவர்களிடம் கிடையாது. ஒரு புத்தகம் ஆயிரம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு அது விற்றுத் தீர பத்து இருபது வருடங்கள் ஆகும் என்று இருந்த காலம் ஒன்று இருந்தது. க.நா. சுப்பிரமணியம் என்னும் ஒரு மிகச் சிறந்த நாவலாசிரியர், சர்ச்சைக்கிடமான எழுத்தாளர் 1946-ல் எழுதி கலைமகள் பிரசுரம் வெளியிட்ட பொய்த் தேவு என்ற நாவலின் முதல் பதிப்பு 1970-களில் கிடைத்து வந்தது. ஆனால் இப்போது ஒரு புத்தகம் ஆயிரம் பிரதிகள் விற்றுத் தீர சில வருஷங்கள் ஆகின்றன. விதி விலக்காக, தலித் எழுத்துக்கள், சமீப காலமாக தலித் பற்றிய எதுவும் மிகுந்த ஆரவாரத்தையும் உற்சாகத்தையும் எழுப்புவதாலும், மிகுந்த உற்சாகத்துடன் தீவிரமாகவும் தலித் மக்களே செயல்படுவதாலும் வெகு சீக்கிரம் தலித் பிரசுரங்கள் விற்று விடுகின்றன.

இத்தகைய நம்பிக்கை வரண்ட சூழலில், சி.சு. செல்லப்பா 1700 பக்கங்களுக்கு, மூன்று பாகங்களுக்கு விரியும், சுதந்திர தாகம் (1998) என்னும் பிரம்மாண்ட நாவலை வெளியிட்டுள்ளார். அது 1927 லிருந்து 1934 வரை ஏழு வருட கால, சுதந்திர போராட்ட நிகழ்ச்சிகள், அவர் வாழ்ந்த மதுரையிலும் அதைச் சுற்றிய இடங்களிலும் நிகழ்ந்த போராட்ட நிகழ்வுகளை விவரிக்கும் நாவல் என்றாலும் அதன் உயிரோட்டம் நாடு தழுவிய போராட்டத்தின் தாக்கத்தை பிரதிபலிப்பது. அது அவருடைய swansong. தன் அந்திம முதுமையில் இருபது முப்பது வருடங்கள் அதை எழுதுவதற்கு எடுத்துக்கொண்டுள்ளார். தனது நாற்பதுகளில் ஒரு இளம் எழுத்தாளர், பாவை சந்திரன் தன் முதல் நாவலாக எழுதியது 700 பக்கங்கள் கொண்ட நல்ல நிலம் (1998) அது ஒரு தஞ்சை கிராமத்தின் விவசாய குடும்பத்தின் மூன்று தலைமுறை வரலாறு. அந்த வரலாறு, தமிழ் நாட்டில் இருபதுக்களி லிருந்து நீளும் சமூக, அரசியல் சரித்திரத்தையே பிரதிபலிப்பதாக உள்ளது. ஒரு முதல் நாவலே ஒரு சாதனையாக, தமிழ் இலக்கியத்துக்கு சிறபபான சேர்க்கையாகியுள்ளது. சுந்தர ராமசாமியின் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் (1998) என்னும் இன்னொரு பிரம்மாண்ட நாவல் சுந்தர ராமசாமியின் குடும்பம் நிரந்தரமாக நாகர்கோயிலுக்குக் குடி பெயரும் முன், கேரள மாநிலத்தின் கோட்டயத்தில் 1937 லிருந்து 1939 வரை கழிந்த இள்மைக் காலத்தை விரிவாகச் சொல்கிறது, மறுபடியும் 700 பக்கங்களில். ஜெயமோகனும் (1962) தன் பங்குக்கு விஷ்ணுபுரம் என்னும் 700 பக்க நாவலை எழுதியுள்ளார். இந்த நாவலின் விஸ்தாரமும், எழுத்துத்திறனும், உத்தி பெருக்கமும் அவ்வளவு சுலபமாக வாசித்துவிடக்கூடிய ஒன்றல்ல. பிரமிக்க வைக்கும் சொல்திறனும், கற்பனை விசாலமும் கொண்டது. அனந்த சயனமாக வீற்றிருக்கும் சிலை ஒன்று கற்பக்கிரஹத்திலும் அதைச் சுற்றி ஒரு பெரும் கோயிலும், விஷ்ணுபுரம் என்ற இடத்தில் எல்லாம் கற்பனையே யானாலும் அது அனந்த சயன கோலத்தில் இருப்பதால் விஷ்ணு என்ற நம்பிக்கையும் தான் மையமாக உள்ளன இந்த பிரம்மாண்ட கற்பனைக்கும் நாவலுக்கும். இன்னுமொரு நம்பிக்கை, ஒரு புறம் கவிழ்ந்து சயனத்திலிருக்கும் இந்த சிலை மறுபுறம் புரளுமானால் நிகழும் ஒரு மகா பிரளயத்தில் இந்தக் கோயிலும் சுற்றியுள்ள அத்தனையும் வெள்ளத்தில் மூழ்கும் என்ற நம்பிக்கையும் கூட நிலவுகிறது. நாவல் பல நூற்றாண்டுகளின் நம்பிக்கைகளின் மதங்களின் போராட்ட சரித்திரத்தை, ஆதிகுடிகளின் காலத்திலிருந்து, பின்னர் வந்த பிராமணியம் அதைத் தொடர்ந்த பௌத்தம் அதன் பின்னர் பிரளயம் என கதையாடல் முன்னும் பின்னுமாக ஊஞ்சலாட்டத்தில் சலனிக்கிறது. சரித்திரம் கொள்ளும் ஒரு மாதிரியான சுழல் இயக்க குறிப்புணர்த்தலில், நாட்டின் மத, பண்பாடுகளின் சரித்திரம் எல்லாம் நாவல் என்னும் இந்த சிமிழுக்குள் அடைக்கப்பட்டுள்ளன. இத்தகைய பிரம்மாண்ட எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிய வளமான கற்பனை, பாண்டித்யத்தையும், சொல்திறனையும், உத்தி சிருஷ்டியையும் சாட்சியப்படுத்துகிறது. நிகழ்கால தமிழ் இலக்கியத்தில் விஷ்ணுபுரத்தில் காணும் ஜெயமோகனின் சொல் வளத்திற்கும், கற்பனைத் திறனுக்கும், நாவல் களத்தின் விசாலத்திற்கும் மொழியைக் கையாளும் லாவகத்திற்கும் இணை நிற்கும் இன்னொரு எழுத்தாளரை சமகாலத்தில் காண்பதற்கில்லை என்று தான் தோன்றுகிறது. இதன் விளைவாக ஜெயமோகன் அதீத ஆவேசம் மிக்க பாராட்டுக்களுக்கும், அதே போல இன்னொரு கோடியில் அதே ரக வசையாடலுக்கும், சிதையில் எரித்துவிடத் தோன்றும் வெறுப்புக்கும் ஆளாகியிருப்பது ஆச்சரியம் தரும் ஒன்றல்ல.

இங்கு சற்று மேலே சொல்லப்பட்ட இப்புத்தகங்கள் அனைத்தும் கடந்த இரண்டு வருடங்களுக்குள் வெளியானவை. இவை எதுவும் ஏற்கனவே நிலைபெற்றுவிட்ட பிரசுர ஸ்தாபனங்கள் எதுவும் வெளியிட்டவை அல்ல. சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் தம் முயற்சியில் வெளியிட்டவை. ஒரு சிருஷ்டி இலக்கியம் சந்தை நிலவரங்களின் அல்லது, சமூக நிலையின் சாதக பாதகங்களைச் சார்ந்து எழுதப்படுவதில்லை தான். ஆனால் புத்தகங்கள் வாங்கும் கலாசாரமே அற்று இருக்கும் சூழலில் ஒரு எழுத்தாளன் தன் புத்தகஙக்ளைத் தன் செலவிலேயே வெளியிடத் தூண்டுவது எது?

இருப்பினும் ஆச்சரியங்களிலும் ஆச்சரியம், ஜெயமோஹனின் புத்தகமும், சுந்தர ராமசாமியின் புத்தகமும் ஒன்று பிரசுரமான ஒரு சில மாதங்களிலும் மற்றது ஒரே வருஷத்திற்குள்ளும் விற்றுத் தீர்ந்தன. இந்த நிலை முற்றிலும் நம் புரிந்து கொள்ளலுக்கு அப்பாற்பட்ட ஒன்று. ஒரு வேளை நம் கண்களுக்கு வெளிப்பட தெரிவதற்கும் அப்பால் வேறு காரணங்கள் இருக்கக் கூடும். இந்த தமிழர்கள் நான் கடந்த ஐம்பது அறுபது வருடங்களாக அறிந்திருந்த தமிழர்கள் இல்லை. எனக்கு இந்த மாற்றம் பிடித்திருக்கிறது தான். ஆனால் என்னால் புரிந்து கொள்ளத் தான் முடியவில்லை.
 
http://solvanam.com/?p=28294
 

 

இப்பொழுது உள்ள எழுத்தாளர்களில் ஜெயமோகனின் சில நாவல்களை படித்துள்ளேன். கொற்றவையில் அவரின் சொல்வன்மையை கண்டு வியந்திருக்கிறேன். 50 வருடங்களில் கல்கி அளவுக்கு மக்களின் மனத்தைக் கவர்ந்த எழுத்தாளர்கள் தமிழில் மிக்கக் குறைவே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.