Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாலியின் தமிழ்க்கடவுள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாலியின் தமிழ்க்கடவுள்

 
ஒரு சிறிய பீடிகை

மும்பை போன புதிதில் (நவம்பர் 2000) ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகக் கழிந்தது. இந்தி தெரியாது. ஆங்கிலம் அரைகுறை. சாப்பாடு சரியில்லை. நண்பர்கள் கிடையாது. பைத்தியம் பிடிக்காத குறை.

மிகவும் நொந்துபோய் ஒரு நாள் சென்னையில் இருக்கும் நண்பரிடம் தொலைபேசியில் உரையாடினேன். அவர் கடிந்து கொண்டார். ‘வாரக் கடைசியில் ட்ரெயின் பிடித்து மடுங்கா (Matunga) போ, அங்கே சாப்பாடு கிடைக்கும் அரோரா தியேட்டரில் தமிழ்ப்படம் ஓடும், போய்ப் பார். கிரி ட்ரேடிங் கம்பெனியில் தமிழ்ப்புத்தகங்கள் கிடைக்கும் வாங்கிப் படி. சும்மா ஊர் புடிக்கலைன்னு புலம்பாதே’ என்று அறிவுரை கொடுத்தார். என்ன புத்தகம் வாங்குவது என்று அவரிடமே கேட்டேன். வாலியின் அவதார புருஷன், பாண்டவர் பூமி என்றார். அவற்றைப் படித்து அவை பிடித்துப் போய் அதன் பிறகு ‘கிருஷ்ண விஜயம்’, ‘ராமானுஜ காவியம்’, ‘இவர்கள் இன்னும் இருக்கிறார்கள்’, ‘நானும் இந்த நூற்றாண்டும்’, ‘வள்ளுவம் வசன கவிதை வடிவில்’ என்று வாலி எழுதிய நிறைய புதுக்கவிதை வடிவ நூல்களை வாங்கிப் படித்தாகிவிட்டது.

வாலி ஒரு நல்ல கவிஞர், சிறப்பாக எழுதுபவர் என்று நான் சொல்லி யாருக்கும் புதிதாகத் தெரியப் போவதில்லை. நான் சொல்லப் போவது எல்லாமே என் அனுபவங்களை \ கருத்துக்களைப் பதிவு செய்யும் ஒரு முயற்சியே.

புத்தகத்தின் அமைப்பு

‘தனியே எனக்கொரு தகவுமில்லை, எல்லாம் எம்பிரான் முருகப்பெருமான் இட்ட பிச்சை’ என்று அடக்கத்தின் உச்சத்தில் ஆரம்பிக்கிறார் முன்னுரையில்.

சமீபத்தில் வாங்கிய புத்தகங்களுள் இவ்வளவு சிறந்த கட்டமைப்புடன் எந்தப் புத்தகமும் பார்க்கவில்லை. கெட்டி அட்டை, முன்னட்டையில் பாலமுருகன் கையில் வேலுடன். கண்டநாள் முதலாய்க் காதல் பெருகுதடி, கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை...’ என்று அனந்தலக்ஷ்மி சடகோபன் பாடுவது காதில் ரீங்காரமிடுகிறது அட்டைப் படத்தைப் பார்க்கும்போதெல்லாம். மணியம் செல்வன் ஒரு ஜீனியஸ்.

DSC00837.JPG

பின்னட்டையில் வாலி. ஒரு ஞானி மாதிரி தோன்றுகிறார். அந்த அட்டையில் ஆறு (ஆறு, எண்ணிக்கையைக் கவனிக்கவும்) வரியில் முருகன் பற்றிய ஒரு கவிதை.

தமிழ்க் கடவுள்

எனப் படும்

தமிழரின் தேவு;

வையமே!

அவன் தாள் –

வைகலும் மேவு!

முதன் முதலாக எனக்குக் கநாசுவின் பொய்த்தேவு நாவலில் அறிமுகமானது ‘தேவு’ என்ற வார்த்தை. நீண்ட நாள் கழித்து அதைத் திரும்பப் படிப்பதில் ஒரு ஆனந்தம்.

DSC00836.JPG

இந்தப் புத்தகம் முழுதும் வாலியின் கையெழுத்திலேயே உள்ளது. தமிழில் இவ்வாறு வருவது இதுவே முதல்முறை. படைப்பாளியின் கையெழுத்திலேயே ஒரு படைப்பைப் படிக்கும்போது அந்தப் படைப்பிற்கும் வாசகருக்கும் இருக்கும் நெருக்கம் இன்னும் அதிகமாகிறது என்றே தோன்றுகிறது. அச்சிட்ட புத்தகத்தைப் புகைப்படத்திற்கு ஒப்பிட்டால், கையெழுத்தை ஓவியத்திற்கு ஒப்பிடத் தோன்றுகிறது. படைப்பாளியின் உணர்வுகளை மிக அருகில் இருந்து புரிந்து கொள்ளமுடியும் என்று தோன்றுகிறது.

புத்தகம் முழுதும் ஓவியர் சில்பியின் ஓவியங்கள் காணக் கிடைக்கின்றன. மானசீகமாக எல்லா முருகன் ஸ்தலங்களுக்கும் எளிதாகச் சென்று வந்துவிடலாம். சில்பி ஒரு மேதை.

எல்லாப் பக்கங்களிலும் வேல், மயில், சேவல் உள்ளன. வடிவேலும் மயிலும் துணை (டி எம் எஸ் குரலில் இந்தப் பாட்டை நீங்கள் கேட்டுப் பார்க்கவேண்டும்) படிப்பவருக்கு, அதுவும் எல்லாப் பக்கங்களிலும், கூடுதலாக சேவலும்.

DSC00838.JPG

புத்தகத்தின் வடிவு (அமைப்பு) வடிவு (அழகு). வடிவைப் பற்றி (வடிவு – அழகு – முருகு) வடித்ததும் (எழுத்து) வடிவு. ஒருவேளை வடிவைப் (முருகு) பற்றிய வடிவென்பதால் (எழுத்து) இயற்கையாகவே வடிவுடன் எல்லாமே அமைந்துவிட்டனவா? வடித்த ஓவியங்களும் வடிவு.

அல்லையன்ஸ் வெளியீடு, 370 பக்கங்கள், ரூபாய் 500.

பாடுபொருள்

கந்தபுராணம் புதுக்கவிதை வடிவில்

பகிர்ந்து கொள்ளத் தோன்றுபவை

முழுப் புத்தகத்தையும் பகிர்ந்துகொள்ளத் தோன்றுகிறது. ஆனால் அது நடைமுறை சாத்தியமில்லை. நீங்கள் வாலியின் கையெழுத்திலேயே இதைப் படிக்கவேண்டும்.

அணிந்துரை

முனைவர் இரா. செல்வக்கணபதி. மொத்த நூலின் சாரமும் இவருடைய அணிந்துரையில் வந்துவிடுகிறது. வெகு அழகான அணிந்துரை. ரசித்து எழுதியிருக்கிறார். வாலியின் இந்தப் படைப்பை மால் முருகனுக்கு மாமன் வழி வந்த கொடை என்று சிலாகிக்கிறார் (வாலி வைணவர் என்பதைப் பூடகமாகச் சொல்கிறார்).

முன்னுரையில் கந்தர் அலங்காரத்தில் இருந்து ஒரு விஷயத்தைச் சொல்கிறார். ‘அவன் கால்பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கை எழுத்தே’. ‘விதி வலியது’ எனும்போதிலும் கந்தன் கருணையால் அதை வெல்லலாம் என்ற பொருள் தொனிக்கிறது.

கொஞ்சம் சம்பந்தமில்லாத விஷயம். இருந்தாலும் எழுதுகிறேன். மாவலி நிறைய புண்ணியம் செய்தவன் என்று புரிகிறது இப்போது. பரதனும் புண்ணியம் செய்தவன். வேதாந்த தேசிகர் பெரிய மகான். திருவடி பெருமை தெரிந்தே பாதுகா சகஸ்ரம் எழுதியிருக்கிறார்.

பார்வதி மலைமகளாக அவதரிப்பதன் நோக்கம்

இமவான் தவத்தை மெச்சும் விதமாகப் பார்வதி பூவுலகில் அவதரித்தார் என்பதுதான் பொதுவான புரிதல். அவதாரத்தின் முக்கிய நோக்கம் பகவத் சம்ரக்ஷனம்தான். அதன் பிறகே அசுர வதை இத்யாதி. இதை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். மானுடர்களை உய்விக்கவே பார்வதி மனிதப் பிறப்பெடுக்கிறார். ஜகன்மாதா அல்லவா? அதனால் தாய்க்கே உரிய வாத்சல்யம் மேலோங்க அவதரிக்கிறார். இதுதான் வாலி பஞ்ச்!

தாய்மைக்கே உரிய

தண்ணளியால்

தரை இறங்கினாள்; இமய

வரை இறங்கினாள்

இந்த இடத்தில் உபன்யாசத்தில் கேட்ட ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது. கெட்டவர்கள் மேலோங்கிவிட்டனரே, பகவான் ஏன் அவதரிக்கவில்லை என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு இருக்கும். பிரஹலாதன் போல ஒரு பக்தன் தோன்றும் பட்சத்தில், துஷ்ட நிக்ரஹம் செய்து சிஷ்ட பரிபாலனம் செய்ய பகவான் நிச்சயம் அவதரிப்பான். பிரஹலாதன் அளவிற்கு ஸ்ரத்தையுடன் பக்தி செய்பவர் இப்போது உள்ளனரா?

பார்வதி தாலாட்டு

கந்தபுராணத்தில் இல்லாத பார்வதி தாலாட்டு இந்த நூலில் இடம்பெறுகிறது (அணிந்துரையில் இன்னும் அழகாக இதை செல்வகணபதி சொல்கிறார்). பார்வதி குழந்தையாக வர மாதவம் செய்த இமவான் மனைவி தாலாட்டுப் பாடுவது போல அமைந்துள்ளது.

ஜகன்மாதாவே (...இம்மாநிலத்தார்க்கும், இமையோரின் அம்மாநிலத்தார்க்கும் அம்மா...) தன்னை அம்மாவென்று அழைக்கும் பேறு பெற்ற மேனை மிகவும் மகிழ்கிறாள்.

சின்ன சங்கரா

முருகனைச் ‘சின்ன சங்கரா’ என்று விளிப்பது இதுவே முதல்முறை என்று செல்வக்கணபதி சிலாகிக்கிறார். கார்த்திகைப் பெண்கள் தாலாட்டும் இடத்தில் முருகன் இவ்வாறு விளிக்கப்படுகிறார்.

பால முருகன் செய்யும் லீலையை விளக்குவது முன்னூறு ஜென்ம வேலை என்கிறார் கவிஞர்.

தத்தக்கா பித்தக்கா என்று குழந்தை நடப்பதை ரசிக்காதவர் யார் இருக்க முடியும்? அதுவும் பாலமுருகன் நடை. சொல்லவும் வேண்டுமா?

பெரியாழ்வாரின் பாசுரங்கள், ஊத்துக்காடு வெங்கட கவியின் பாடல்கள் (ஆடாது அசங்காது வா...) நிச்சயம் நினைவுக்கு வரும்.

குழைகள், மணிகள், பரல்கள், வளைகள், கழல்கள், தொடிகள் அணிந்து ஒரு தேர் போல நடக்கிறான் பாலன். அவன் வஸ்திரம் உடுத்திய சித்திரம், யாரையும் சாய்க்கும் வசீகர அஸ்திரம்.

செய்யும் லீலைகளைச் சொல்ல ஆயிரம் நா கொண்ட ஆதி சேஷனாலும் முடியாது.

பரிகாரமில்லாத பாவம்

பொதுவாக ‘ ரொம்ப பாவம் பண்றே’, ‘அநியாயம் பண்றே’ என்று சொல்லி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறோம். பரிகாரமில்லாத பாவம் என்று சொல்வது நல்ல முறை என்று படுகிறது. ஒருவர் தவறு செய்யும்போதே இதற்கு ஏதேனும் பரிகாரம் செய்து தப்பி விடுவோம் என்ற எண்ணம் ஆழ் மனதில் இருக்கக் கூடும். அப்போது இது போன்ற பாவங்களுக்குப் பரிகாரம் கிடையாது என்று யாரேனும் தடுத்து நிறுத்தினால் அவர் அதைச் செய்யுமுன் ஓரிரு முறை யோசிப்போம் என்றே படுகிறது.

முரண்களின் அழகு

முரண்களில் அழகு காண்பது எனக்குப் பிரியமான விஷயம். சூரபத்மனால் ஏற்படும் முரண்களை அழகாகச் சொல்கிறார். அவனுடைய பராக்கிரமத்தை எளிதாக நமக்குப் புரியவைத்துவிடுகின்றன இவை. வாயுவிற்கு வியர்ப்பது, அக்னியைச் சுடுவது, எமன் உயிர்ப்பிச்சை கேட்பது, ஆதிசேஷன் பெட்டிப்பாம்பாவது.

நீலகண்டமும் திரிசங்கு சொர்க்கமும்

உலகம் உய்ய நஞ்சுண்ட கதை நாம அறிந்ததே. அதை ஓரிடத்தில சொல்லும்போது

தின்ற நாள்முதல்

திரிசங்கு நிலையில் நிற்கும்...

என்று சொல்கிறார்.

கெடுதலின் நிலைகள்

நினைத்தது நடக்காதபோது தாபம் பிறக்கும், பின் கோபம், அடுத்துக் கோபம், அதைத் தொடர்வது பாபம், இறுதியாக சாபம். ஆயிரம் பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்கள் பத்து பதினைந்து வரிகளில் சொல்லப்பட்டு விடுகின்றன.

பரம்பொருளின் சிறப்புகள்

அனைத்திற்கும் தோற்றுவாய், ஈற்றுவாய், கருணையின் ஊற்றுவாய், அவன் அடி தொழுதாரை உண்ணாது கூற்றுவாய், அவன் பெருமைகளை சொல்ல வல்லதோ நம் சோற்றுவாய்?! சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் இந்த வித்தையை வாலி எங்குதான் கற்றாரோ?!

மொழி விளையாட்டு

தமிழ் இவரிடம் வளைகிறது, நெளிகிறது, குழைகிறது. இழுத்த இழுப்பிற்கு வருகிறது.

அருந்தவம் (அரிதான தவம்)

அருந்தாத தவம் (அன்ன பானங்கள் இன்றிச் செய்யும் தவம)

தவங்கள் பாபங்களாகின்றன. வரங்கள் சாபங்களாகின்றன.

அமராவதி மீது அமர்ந்தது அது வரை அதன்மீது அமராத விதி

அறக்கண் அவிந்திருக்கும் அரக்கன்

எம் தலைவன் தலையில் ஆறுடையவன், தலைகள் ஆறுடையவன் அல்லன் (வள்ளலைப் பாடும் வாயால் எனத் தொடங்கும் பாடலை எம் கே தியாகராஜ பாகவதர் குரலில் நீங்கள் கேட்கவேண்டும்).

சூரனிடம் மற்ற எல்லோரும் மறம், திறம், புறம் பேசுகின்றனர். சிங்கமுகன் ஒருவனே அறம் பேசுகிறான்.

சிலேடை வெகு இயல்பாக வருகிறது.

தீயரசு (கெட்டவன்), தீயரசு (அக்னி)

விடுதலை (தேவர்களுக்கு), விடுதலை (வேல் விடுதலை பாலன் நிறுத்துவான்)

எதுகையும் இயைபும் போட்டி போட்டுக்கொண்டு நீ முந்தி நான் முந்தி என்று வருகின்றன.

வேலின் சிறப்பு

வேலாம்படையின் முன் பற்ற படைகள் நூலாம்படை. நீள, அகல, ஆழக் கற்கவேண்டும் என்பதன் குறியீடு.

முடிவாக...

இந்தப் புத்தகம் நிறைய புதுமைகளைத் தாங்கி வந்துள்ளது. இந்தப் புத்தகத்தை வாலி தன்னுடைய மனைவிக்குச் சமர்ப்பித்துள்ளார். அவர் சமர்ப்பணம் செய்யும் அழகு நமக்குக் கண்ணீரை வரவைத்துவிடும்.

நீ நான் திலகம் வைத்த திலகம்...(உன்னால்) என்நெற்றியில் (வெற்றித்) திலகம் வைத்தது உலகம்

...இறந்து காட்டுகிறாய் உன் இருப்பை

உன் மகன் மட்டுமல்ல

உன் மணாளனுக்கும் தான்...

இப்போது

அம்மா

இல்லை

இதைப் படிக்கும்போது பேச்சடைத்து விடுகிறது. உணர்வுகளை அவர் வெளிப்படுத்தும் விதம் மூச்சடைக்க வைக்கிறது. டாகூரைப் பற்றி பங்கிம் சொன்னதை இந்த இடத்தில் நினைவு கூரத் தோன்றுகிறது. அவ்வளவாக இந்த இடத்தில் அதற்கு சம்பந்தமில்லாதபோதிலும்

 

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நுணா, இது நல்லதொரு விடயம்  !! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.