Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'தமிழக மாணவர்கள், 13ஆவது சட்டத் திருத்தத்தை எரித்துப் போராட வேண்டும்!

Featured Replies

 
'தமிழக மாணவர்கள், 13ஆவது சட்டத் திருத்தத்தை எரித்துப் போராட வேண்டும்' என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தமிழக மாணவர் போராட்டம் குறித்தான 'அறப்போர்' ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வில் பேசினார்.
 
2013 மார்ச் மாதத்தில், ஐ.நா. மனித உரிமைகள் அவையில் அமெரிக்கா தாக்கல் செய்த மோசடியானத் தீர்மானத்தை எதிர்த்து நடைபெற்ற தமிழக மாணவர்களின் எழுச்சியை ஆவணப்படுத்தும் விதமாக, 'அறப்போர்' ஆவணப்படம் உருவாக்கப்பட்டது. மரணதண்டனைக்கு எதிரான ஆவணப்படமான 'இப்படிக்கு தோழர் செங்கொடி' படத்தை இயக்கிய பத்திரிக்கையாளர் திரு. வெற்றிவேல் சந்திரசேகர், 'அறப்போர்' படத்தை இயக்கியுள்ளார். செங்கொடி மீடியா ஒர்க்ஸ் சார்பில், திரு. சி.கபிலன் படத்தைத் தயாரித்துள்ளார்.
 
இப்படத்தின் வெளியீட்டு விழா நேற்று(28.07.2013) மாலை சென்னை அண்ணாசாலை புக் பாய்ண்ட் அரங்கில் நடைபெற்றது. நிகழ்வுக்கு முன்னதாக, ஆவணப்படம் திரையிடப்பட்டது. 
 
இந்நிகழ்வுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையேற்றார். உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன்,  மே பதினேழு இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, இயக்குநர் ம.செந்தமிழன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். இயக்குநர் அமீர் சிறப்புரை நிகழ்த்தினார். தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சென்னை செயலாளர் கவிஞர் கவிபாஸ்கர் நிகழ்வை தொகுத்து வழங்கினார். 
 
தலைமையுரையாற்றிய, த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் பேசியதாவது:
 
அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்துக் களம் கண்ட  தமிழக மாணவர்களின் போராட்டத்தை ஆவணப்படுத்தும் விதமாக 'அறப்போர்' ஆவணப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. 1965இல் தமிழகத்தையே புரட்டிப் போட்ட, இந்தி எதிர்ப்புப் போராட்டம் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை. அது போன்ற குறைகளை இல்லாமல் செய்வதற்காக, நமது கண்முன்னே நிகழ்ந்த மாணவர் போராட்டத்தை இங்கு ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். அதற்கு, முதலில் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
தமிழக மாணவர்களின் போராட்டம், எவ்வளவு வீரியமானதாக இருந்தாலும் அது இன்னும் தனது இலக்கை அடையவில்லை. நாம் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. இன்றைக்கு, அமைதி நிலவும் இந்த இடைப்பட்ட காலத்தை மாணவர்கள் அடுத்தக் கட்டப் போராட்டங்களுக்கான தயாரிப்புக் காலமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நமது கொள்கைகளில் முழுமையானத் தெளிவு பெற வேண்டும். 
 
அதில் முதலாவதாக இருக்க வேண்டியது, இந்திய அரசு தமிழினப் பகை அரசு என்ற புரிதல் தான். தமிழர்களுக்கென ஒரு நாடு அமைவதை இந்திய அரசு ஒருகாலத்திலும் ஏற்றுக் கொள்ளாது. ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை என்பது, உள்நாட்டில் என்ன கொள்கை நிலவுகிறதோ அதன் நீட்சியாகவே இருக்க முடியும். உள்நாட்டில், தமிழ்நாட்டிற்கு எதிராக அனைத்து சிக்கல்களிலும் எதிராக நிற்கும் இந்திய அரசு, அதன் நீட்சியாகத் தான் தமிழீழ விடுதலைக்கு எதிராக நிற்கிறது என்ற புரிதலை நாம் பெற்றாக வேண்டும். தமிழர்களுக்கு எதிரான அனைத்து சிக்கல்களிலும், இந்திய அரசு முதன்மை எதிரியாக வந்து நிற்க, அதன் ஆரிய இனவெறித் தமிழினப் பகையே முக்கியக் காரணமாகும். 
 
இந்திய அரசமைப்புச் சட்டத்தில், இந்தியாவை பாரத்(BHARAT) எனக் குறிப்பிடுகிறார்களே? இது எங்கிருந்து வந்தது? ஆரியப் பார்ப்பனர்களின் வரலாற்றிலிருந்து எடுத்தாண்ட பெயர் அது. ஆரியத்தின் அடையாளம் இந்திய அரசின் அசோகச் சக்கர சின்னமாக, ஆரியபட்டாவாக, பத்மபூசனாக, பத்மசிறீயாக வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. நாம் தான் இதைக் காணத் தவறுகிறோம். இவையெல்லாம் தற்செயல் நிகழ்வல்ல. தமிழர்களுக்கு எதிரான ஆரியத்தின் பகைவெறி, இன்றும் இந்திய அரசு மூலமாகத் தொடர்கிறது. இது தான் நாம் பெற்றாக வேண்டிய முதல் கொள்கைத் தெளிவு. 
 
இரண்டாவதாக, வல்லரசுகள் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு உத்தியைக் கொண்டு நமது போராட்டங்களை நசுக்குவதற்கான முயற்சிகளில் இருக்கின்றனர். இந்தியாவும், அமெரிக்காவும் இன்றைக்கு ஒரே புள்ளியில் நின்று செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள். தமிழர்களுக்கு எந்த வகையிலும் அதிகாரமளிக்காத மோசடியான 13ஆவது சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டுமெனக் கூறும் விவாதங்களுக்குப் பின்னணியில் இந்தியா இருக்கிறது. அதே போல, அமெரிக்கா வேறொரு முயற்சியில் இருக்கிறது. 
 
அண்மையில் 2013 சூலை 23 அன்று அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் மெடலின் ஆல்பிரைட் மற்றும்  சூடானுக்கான அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் தனித்தூதர் வில்லியம்சன் ஆகியோர் ஒரு அறிக்கை தயாரித்து அமெரிக்க அரசுக்கு அளித்துள்ளனர். “அமெரிக்க ஐக்கிய நாடுகளும் பாதுகாக்கும் பொறுப்பு குறித்த சிக்கலும்” என்ற தலைப்பிலான அறிக்கை இது. 
 
ஐ.நா.மன்றம் 2005 ஆம் ஆண்டு “பாதுகாக்கும் பொறுப்பு” (Responsibility To Protect- R2P) என்ற சட்டத் தீர்மானத்தை இயற்றியது. “ஒவ்வொரு உறுப்புநாடும் இனக் கொலையிலிருந்தும் போர்க் குற்றங்களிலிருந்தும் இனத் தூய்மையாக்கலிலிருந்தும், மனித குலத்திற்கெதிரான குற்றங்களிலிருந்தும் தங்கள் குடிமக்களை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளன” என்று இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.
 
இவ்வாறு செய்யத்தவறும் நாடுகளை அறிவுறுத்துவது, அது இயலாத போது அந்நாடுகள் இத்தீர்மானத்தின்படி நடந்து கொள்வதற்கு நெருக்கமாக துணை செய்வது அதுவும் இயலாத சூழலில் ஐ.நா.வின் ஒப்புதலோடு படை நடவடிக்கை உள்ளிட்ட நேரடி தலையீட்டில் இறங்குவது என இதன் செயலாக்கத்திற்கான படி நிலை வழி காட்டலையும் ஐ.நா.வின் இத்தீர்மானம் வழங்குகிறது. இத்தீர்மானத்தின் படி எந்தெந்த நாடுகள் தொடர்பாக அமெரிக்கா செயல்படவேண்டும் என எடுத்துரைப்பதே ஆல்பிரைட் - வில்லியம்சன் அறிக்கையாகும்.
 
இந்த அறிக்கை இலங்கை பற்றியும் பேசுகிறது. அதில் 2009 ஆம் ஆண்டு நடந்த படுகொலையில் அமெரிக்கா வெறும் பார்வையாளராக இருந்தது எனக் கண்டிக்கும் ஆல்பிரைட் - வில்லியம்சன் அறிக்கை இனி “இலங்கையில் இன நல்லிணக்கத்திற்கு அமெரிக்கஅரசு இலங்கை அரசுக்கு துணை புரிய வேண்டும்” என அறிவுறுத்துகிறது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் 13ஆவது திருத்தத்தின் படியான தீர்வு என்ற இந்தியாவின் நிலைபாடும் அமெரிக்க வல்லரசின்  “நல்லிணக்கத்திற்குத் துணைபுரிந்தது” என்ற நிலைபாடும் சந்திக்கிற புள்ளி இது. 13ஆவது சட்டத்திருத்தம் என்ற வரம்புக்குள் தமிழீழ விடுதலைக் கோரிக்கையை புதைக்க பன்னாட்டுச் சதி வலை விரிக்கப்பட்டிருக்கிறது.
 
சிங்கள அதிபர் ராசபக்சேவின் தம்பி பசில் ராசபக்சே, திரும்பத் திரும்ப 13ஆவது சட்டத் திருத்தத்தை ஏற்க மாட்டோம் எனக் கூறி வருகிறார். புலிகள் ஒட்டு அழிக்கப்பட்டுவிட்டதாக கருத முடியாது, 13ஆவது சட்டத் திருத்தம் மூலம் அவர்கள் மீண்டும் எழுவார்கள் என்றெல்லாம் சொல்லி வருகிறார். 
 
அப்படி, அந்த 13ஆவது சட்டத்திருத்தத்தில் தமிழர்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்ற போதும், அதைக்கூட ஏற்கமறுக்கிறது சிங்களம். போருக்குப் பின்னால், தமிழீழப் பகுதிகளில் மிகப்பெரும் பிரச்சினையாக இருப்பது அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் கேள்வி கேட்பாராற்ற, மிகத்தீவிரமான சிங்களக் குடியேற்றமாகும். இதற்கு, 13ஆவது சட்டத் திருத்தம் ஏற்கெனவே அங்கீகாரம் வழங்கியிருப்பது இங்கு பலரும் அறியாத செய்தி.
 
13ஆவது சட்டத்திருத்தத்தில், தமிழர் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது, கவனமாக தமிழர்களும் பிற இனத்தவர்களும் வாழும் பகுதி எனக் குறிப்பிடுகிறது. இதன் பொருள், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் தமிழர்களின் தாயகம் மட்டுமல்ல, அங்கு பிற இனத்தவர்களும் வாழ்கிறார்கள் எனக் காட்டுவது. இதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு சிங்களக் குடியேற்றங்களை அப்பகுதிகளில் தீவிரப்படுத்துவதே இதன் நோக்கம். அரசாங்கம், வடகிழக்குப் பகுதிகளில் ஏழைகளுக்கு நிலத்தைப் பகிர்ந்தளிக்கும்போது இலங்கை முழுவதுமுள்ள இனத்தவர்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப பகிர்ந்தளிக்க வேண்டும் என்கிறது. அதன்படி, சிங்களர்களுக்கு நிலங்கள் வழங்க வழிவகை செய்யப்பட்டது. இந்தியாவும் இதைத்தான் விரும்புகிறது. 
 
காவல்துறை, நிதி, காணி அதிகாரங்கள் எதுவுமில்லாத 13ஆவது சட்டத்திருத்தம் எந்த அதிகாரத்தையும் தமிழர்களுக்கு வழங்கப் போவதில்லை. சிங்களம் எந்த ஒரு சிறு உரிமையையும் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்காது, ஈழத் தமிழர்கள் இலங்கையில் சிங்களர்களோடு ஓர் அரசமைப்பின் கீழ் சேர்ந்து வாழ முடியாது என்பதுதான் இதில் பெற வேண்டிய படிப்பினையே தவிர 13ஆவது திருத்தம் சிறப்பானது என்று வாதிடுவது அல்ல.
 
இதை நாம் மட்டும் சொல்லவில்லை, 13ஆவது சட்டத்திருத்தத்தை அமலாக்குகிறோம் எனச் சொல்லிக் கொண்டு, வரதராஜபெருமாள் என்பவரை இந்திய இராணுவ வண்டியில் கொண்டு வந்து தமிழர் மாகாணத்தின் முதல்வராகப் பதவியேற்க வைத்தார்களே, அவர் சொன்னார். இந்திய அமைதிப்படை திரும்பச் செல்லும் போது, அவரும் இந்திய இராணுவத்துடன் இணைந்து இந்தியாவிற்கு ஓடினார். அவர் சொன்னார், எனது அலுவலகத்தி்ல் ஒரு நாற்காலி வாங்குவதற்கக் கூட, ஜனாதிபதி மாளிகைக்கு விண்ணப்பித்துக் காத்திருக்க வேண்டும், இதில் எந்த அதிகாரமுமில்லை எனச் சொன்னார். 
 
இன்றைக்கு 13ஆவது சட்டத்திருத்தம் குறித்து தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் காங்கிரசுக்காரர்களும், இந்து போன்ற பத்திரிக்கைகளைச் சேர்ந்தவர்களும், 13ஆவது சட்டத்திருத்தமே இறுதித் தீர்வு என்பது போலப் பேசுகிறார்கள். இந்த 13ஆவது திருத்தததை ஏற்றுக்கொள்ளாமல் தமிழீழத் தனிஅரசு கோரிக்கையில் பிரபாகரன் பிடிவாதமாக இருந்ததால்தான் இவ்வளவு பெரிய பேரழிவு ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டுவிட்டது, இனியாவது ஈழத்தமிழர்கள் இதனை ஏற்று தமிழர் சிக்கலுக்கு தீர்வுகாண வேண்டும் என காங்கிரசாரும் ஆரிய - பார்ப்பனிய ஊடகங்களும் முழு வீச்சோடு கருத்துப் பரப்பி வருகின்றன.
 
இது போதாதென்ற, வரும் ஆகஸ்ட் 8ஆம் நாள் டெசோ சார்பில் 13ஆவது சட்டத்திருத்தத்தை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம் வேறு நடக்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் அவையில், அமெரிக்கா மூலம் கொண்டுவரப்படும் தீர்மானத்தை, இலங்கையும் ஆதரிக்கும் வகையில் ஒட்டெடுப்பு இல்லாதத் தீர்மானமாக, நீர்த்துப் போகச் செய்ய முனைப்புடன் இறங்கி செயல்பட்டது இந்திய அரசு தான். சுப்பிரமணிய சாமி என்ற தரகர் இதற்காகவே, இந்திய அரசு சார்பில் அமெரிக்கா சென்றார். இதை, அமெரிக்காவே கூறியது. தீர்மானத்தின் ஒவ்வொரு வார்த்தையையும், இந்தியாவைக் கேட்டுக் கொண்டே நாங்கள் மாற்றியமைத்தோம் என அமெரிக்கா சொன்னது. உண்மையில் அது அமெரிக்கத் தீர்மானமல்ல, இந்திய - அமெரிக்கத் தீர்மானம் அது. 
 
இன்றைக்கு டெசொ சார்பில் பேசும் தி.மு.க.வினர் என்ன சொல்கிறார்கள்? எங்களது இலக்கு என்பது தமிழீழம் தான் என்றாலும், இடைக்காலத்தில் தமிழீழத் தமிழர்கள் மூச்சு விடுவதற்காக 13ஆவது சட்டத்திருத்தத்தை நிறைவேற்றக் கோருகிறோம் என்கின்றனர். முழுமையான அதிகாரப் பகிர்வுக்கு, 13ஆவது சட்டத்திருத்தம் ஒரு முதல்படிதான் என்றும் சொல்கின்றனர். சட்டப்பேரவையில், தமிழீழம் அமையப் பொதுவாக்கெடுப்பு வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் செயலலிதாவும் இதையே தான் கருத்தாகக் கொண்டுள்ளார். செயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் பதில் எழுதியதை, அ.தி.மு.க.வினர் ஆரவாரத்துடன் காண்பிக்கிறார்கள். 
 
இந்தப் பெரியக் கட்சிகள், 13ஆவது சட்டத் திருத்தம் அதிகாரப்பகிர்வுக்கான முதல் படி என்கின்றன. இதை யார் சொன்னது? இலங்கை அரசு சொன்னதா? இந்திய அரசு சொன்னதா? இலங்கை - இந்திய அரசுகளைப் பொறுத்தவரை, 13ஆவது சட்டத்திருத்தம் தான் இறுதித்தீர்வு என்கின்றனர். ஆனால், பெரியக் கட்சிகள் தான் இவ்வாறு கூறு ஏமாற்றுகின்றனர். 
 
எப்படி ஐ.நா. மனித உரிமைகள் அவையில் தாக்கல் செய்யப்பட்ட அமெரிக்கத் தீர்மானம் மோசடியானது என தமிழக மாணவர்கள் போராடினார்களோ, அதைப் போல 13ஆவது சட்டத் திருத்தம் மோசடியானது, அதை ஏற்க மாட்டோம் எனப் போராட வேண்டும். அமரிக்கத் தீர்மானத்தை எரித்துப் போராடியதைப் போல, 13ஆவது சட்டத் திருத்தத்தை எரித்துப் போராட வேண்டும். 
 
இந்தப் போராட்டத்திற்கான தயாரிப்புக் கால எல்லையாக, இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடக்கவிருப்பதை எடுத்துக் கொள்ள வேண்டும். காமன் வெல்த் மாநாட்டை, ஒரு நாட்டில் நடத்துவதை நாம் சாதாரணமாக, பொதுப்பார்வையுடன் பார்த்துவிட முடியாது. எங்கு காமன் வெல்த் மாநாட்டு நடக்கிறதோ, அதன்பின், 2 ஆண்டுகளுக்கு அந்த நாட்டு அதிபர்தான் காமன் வெல்த் கூட்டமைப்புக்குத் தலைவராக இருப்பார். அதனால் தான், இந்திய அரசு இலங்கையில் காமன் வெல்த் மாநாட்டை நடத்தி, இராசபக்சேவுக்கு முடிசூட்டி அழகுப் பார்க்க விரும்புகிறது. 
 
இன்றைக்கு ஒரு நாட்டின் அதிபராக இருக்கும் இராசபக்சேவையே, தமிழினப் படுகொலைக்காக நாம் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முடியவில்லையெனில், நாளை அவர் காமன் வெல்த் கூட்டமைப்பின் தலைவரானால் என்ன செய்வது? அவரை ஒன்றும் செய்யக்கூடாது என்பதற்காகத்தான், இந்திய அரசு திட்டமிட்டு இலங்கையில் காமன் வெல்த் மாநாட்டை நடத்துகிறது. அதை நாம் முறியடிக்க வேண்டும்!
 
தமிழீழ விடுதலைக்கு எதிரான இந்தியாவின் செயல்பாடுகள் வெறும் பொருளியல் ஆதிக்க நலன்களுக்காக மட்டுமே இல்லை. இந்தியாவின் தமிழினப்பகையே அதைத் தீர்மானிக்கிறது. இந்தியாவின் பொருளியல் நலன்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என தமிழீழ விடுதலைப்புலிகள் திரும்பத் திரும்பக் கூறினார்கள். சுதுமலையில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க உரையில், தெற்காசியாவில் இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்போம் எனத் தெரிவித்தார். இந்தியக் கம்பெனிகளுக்கு எங்களால் ஆபத்து வராது என கூறியதோடு மட்டுமின்றி அதை செயல்படுத்திக் காட்டியவர்கள் விடுதலைப்புலிகள்.
 
புலிகளின் கடற்பிரிவான, கடற்புலிகள் வலுவாக இருந்தக் காலத்தில், அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த கடற்பகுதிகளில் சீனா, பாகிஸ்தான் என எந்த நாடும் நுழைய அனுமதிக்கப்படவில்லை. புலிகளின் அரசியல் மதியுரைஞரான அண்டன் பாலசிங்கம் ஒருபடி மேலே போய், மேற்காசியாவில் எப்படி அமெரிக்காவிற்கு இசுரேல் பாதுகாவலனாக இருக்கிறதோ, அதே போல் தெற்காசியாவில் இந்தியாவின் பாதுகாவலனாக தமிழீழம் இருக்கும் என்றார். இதில் எங்களுக்கு பல கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், இந்தியாவின் பொருளியல் நலனுக்கு எதிராக நிற்கமாட்டோம் எனப் புலிகள் அறிவித்திருப்பதை எடுத்துக் காட்டவே இதைச் சொல்கிறேன். 
 
இப்படி இந்தியாவின் நலன்களுக்கு ஆதரவாக இருந்த புலிகளை, இந்திய அரசு அடியோடு ஒழித்தது. தமிழர்களை இனப்படுகொலை செய்தது. ஏன்? காரணம், இந்திய அரசின் முதன்மையான தமிழினப்பகை. அமெரிக்காவிற்கு வேண்டுமானால் புவிசார் நலன்கள் இருக்கலாமேத் தவிர, இந்திய அரசு தமிழீழ இனப்படுகொலையை நடத்த உதவியது அதன் தமிழினப்பகையையே காட்டுகிறது. இதைப் புரிந்து கொண்டு தான் நாம் அடுத்தக் கட்ட நகர்வுகளுக்குத் திட்டமிட வேண்டும்!”.
 
இவ்வாறு தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார். 
 
கூட்டத்தின் நிறைவில், ஆவணப்பட இயக்குநர் வெற்றிவேல் சந்திரசேகர் ஏற்புரை வழங்கினார். “பல இயக்குநர்கள் தமிழீழச் சிக்கல் குறித்து ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்பதை தனது கனவாக அறிவிக்கின்றனர். ஆனால், யாரும் அதுபோன்றதொரு படத்தை எடுக்கவில்லை. எடுக்காமாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஏனென்றால், இந்திய அரசிடம் தேசிய விருது வாங்குவதே இலட்சியம் என செயல்படும் இயக்குநர்கள் தான் இங்கு அதிகமாக இருக்கின்றனர். எனவே, இந்திய அரசைப் பகைத்துக் கொண்டு படமெடுக்கும் இயக்குநர்கள் இங்கு இல்லை. கோடிகளெல்லாம் வேண்டாம், எனக்கொரு 30 இலட்ச ரூபாய் இருந்தால் போதும் தமிழீழச் சிக்கல் குறித்து நாங்கள் படமெடுப்போம். அதற்கான முன்னோட்டமாகத் தான் இந்த ஆவணப்படங்களை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்” என அவர் பேசினார். 
 
திரளான உணர்வாளர்களும், மாணவர்களும், பத்திரிக்கையாளர்களும் திரண்டிருந்த இந்நிகழ்வின் முடிவில், பார்வையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க 'அறப்போர்' ஆவணப்படம் மீண்டும் திரையிடப்பட்டது. $

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.