Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாஷிங்டனில் தமிழ் மணம் கமழ நடந்த 'புறநானூறு: பன்னாட்டு மாநாடு'

Featured Replies

வாஷிங்டன்: வாஷிங்டனில் புறநானூறு: பன்னாட்டு மாநாடு ஆகஸ்ட் மாதம் 31 மற்றம் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தமக்கென தமிழ்ச் சங்கங்கள் அமைத்து, தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்காலங்களில் கூடி அளவளாவுகின்றனர்; கலை நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். சில சமயங்களில் இந்தியாவிலிருந்து முக்கியப் பிரமுகர்களை வரவழைத்துப் பங்கேற்க வைப்பதும் உண்டு.

அமெரிக்கத் தலைநகரின் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் இந்தச் சம்பிரதாயங்களுக்கு அப்பாலும் தமிழை - தமிழ் மொழியை முன்னிறுத்தி - சில அரிய பணிகளை ‘சத்தம் போடாமல்' செய்து வருகின்றது. ‘இலக்கிய வட்டம்' என்ற பெயரில் தமிழார்வமுள்ள உறுப்பினர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஒன்று கூடியும், பல்வழித் தொலைபேசியிலும் (Conference call) திருக்குறள், புறநானூறு, சிலப்பதிகாரம் போன்ற நம் இலக்கியங்களைப் படிக்கிறார்கள்; விவாதிக்கிறார்கள்; ரசிக்கிறார்கள். அவ்வப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கியப் பாடல்களில் வினாடி-வினா நடத்துகிறார்கள்.

கர்நாடக சங்கீதம் என்றாலே தெலுங்கு கீர்த்தனைகள் தான் நினைவுக்கு வருகின்ற இந்தக் காலக்கட்டத்தில் பாரதி பாடல்களையும், தமிழ் இலக்கியப் பாடல்களையும் கொண்டு ‘தமிழிசைப் பாடல்கள்' நிகழ்ச்சியை ஆண்டு தோறும் நடத்துகின்றனர். இவையாவற்றிலும் பங்கேற்பவர்கள் தமிழகத்திலிருந்து வந்து இங்கு பணியாற்றும் (பெரும்பாலும்) கணிப்பொறி வல்லுநர்களும் (IT professionals) அவர்களின் பிள்ளைகளும் தான் என்பது கூடுதல் ஆச்சரியம்! தவிர, வாஷிங்டன் வட்டாரத்தில் மட்டும் விடுமுறை நாட்களில் குழந்தைகள் தமிழ் கற்பதற்கான தமிழ்ப் பள்ளிகள் ஐந்துக்கு மேல் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

06-1378453424-international-conference-w
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, இந்த வருடம் ஆகஸ்ட் 31ம் தேதி, செப்டம்பர் 1ம் தேதி ஆகிய 2 நாட்கள் "புறநானூறு: பன்னாட்டு மாநாடு" ஒன்றை வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையுடன் இணைந்து நடத்தியது. வாஷிங்டன் வட்டாரத்தில், மேரிலாந்து மாநிலத்தில் சில்வர் ஸ்ப்ரிங் என்ற ஊரில் இரண்டு நாட்களாக நடந்த இந்த மாநாடு, முழுக்க முழுக்க புறநானூற்றை அலசி, ஆராய்ந்து, ரசித்து, விவாதிக்கும் ஓர் அரிய வாய்ப்பாக அனைவருக்கும் அமைந்தது.
06-1378453452-international-conference-w
அமெரிக்காவின் பல பகுதிகளில் இருந்தும், கனடா மற்றும் தமிழகத்தில் இருந்தும் சுமார் 350-க்கும் மேற்பட்டவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளாரும், ஒப்பிலக்கிய ஆய்வாளருமான பேராசியர்.மருதநாயகம்,

திரைப்பாடலாசிரியர், தமிழின உணர்வாளர் கவிஞர் அறிவுமதி, தமிழ் இலக்கிய ஆய்வாளரும், தமிழ் அறிஞருமான பேரா.முருகரத்தினம்,

சங்க இலக்கிய மொழி பெயர்ப்பாள: திருமதி வைதேகி ஹெர்பர்ட், பண்டைத் தமிழ் இலக்கிய ஆய்வாளர் முனைவர். அறிவு நம்பி,

கவிமாமணி. இலந்தை இராமசாமி ஆகியோர் மாநாட்டின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவர்கள் தவிர அமெரிக்காவிலேயே வசிக்கும் சிலரும் புறநானூறு சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை வழங்குவதற்கும், உரையாற்றுவதற்கும் அழைக்கப்பட்டிருந்தது மாநாட்டின் பன்முகத்தன்மையைக் காட்டியது.

06-1378453473-international-conference-w
துவக்கமாக புறநானூற்றுப் பாடல் ஒப்புவிப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் 6 வயதில் இருந்து 12 வயதுக்குள்ளான சிறுவர் சிறுமிகள் ஒவ்வொருவரும் சுமார் பத்துப் புறநானூற்றுப் பாடல்களை ஒப்புவித்தது அபாரம்! இன்னொரு நிகழ்வில், பாடலைச் சொல்லி அதற்கு விளக்கமும் தம் இளந்தமிழில் கொடுத்தனர். முதல் நாளின் பண்ணிசைக்கும் போட்டியிலும், இரண்டாவது நாளின் "தமிழிசையில் புறநானூறு" நிகழ்ச்சியிலும் மாணவ-மணவியர்கள் தம் மென்குரலில் "உண்டால் அம்ம இவ்வுலகம்", "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்", "ஈயென இரத்தல் இழிந்தன்று", "யாதும் ஊரே யாவரும் கேளிர்", "ஈன்று புறந்தருதல் என்தலைக்கடனே" போன்ற எளிய, ஆனால் ஆழமான கருத்துக்கள் கொண்ட புறநானூற்றுப் பாடல்களைக் கர்நாடக இசையில் பாடி மாநாட்டுக்கு இசையுடன் கலந்த அழகூட்டினர்.
06-1378453493-international-conference-w
மாணவ--மாணவியருக்கான வினாடி-வினா நிகழ்ச்சியிலும் புறநானூறு பற்றிய இவர்களின் ஆழம் தெரிந்தது. இளவல்கள் சளைக்காமல் பதில் சொன்ன சில கேள்விகளைப் பாருங்கள்: "தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் எதைப்பற்றியது?", "விறலி என்றால் பொருள் என்ன?", "புறநானூற்றை முதலில் பதிப்பித்தவர் யார்?", "பாணர் எனப்படுபவர் யார்?", "தன் போர் முரசில் படுத்துறங்கிய மோசிக்கீரனாரைத் தொந்தரவு செய்யாமல் விசிறியால் வீசிய சேரமன்னனின் செயல் காட்டும் பொருள் என்ன?", "சங்க காலம் என்பது எப்போதிருந்து எப்போது வரை?". மிக எளிதானதாகத் தெரிந்த "புறநானூற்றில் மொத்தம் எத்தனைப் பாடல்கள் உள்ளன?" என்ற கேள்விக்குக் கூட ஒரு மாணவி "மொத்தம் 400 பாடல்கள்; ஆனால் 398 தான் முழுமையாகக் கிடைத்துள்ளன" என்று கூறி அசர வைத்தார்! பத்துப்பாட்டுகளின் பெயர்கள் அத்தனையும் சொல்லிக் கலக்கினார், இன்னொரு வாண்டு! இத்தனைக்கும், இவர்கள் பிறந்து வளர்ந்து படிப்பது அமெரிக்காவில்! இவர்கள் அதிகமாகப் பேசும் மொழி ஆங்கிலம்!
06-1378453514-international-conference-w
புறநானூறு குறித்த கட்டுரை வாசிப்புகளும், மேடைப்பேச்சுக்களும் எல்லோரையும் கவனிக்க வைத்தன. "புறநானூற்று காலத்தில் சாதிகள் இருந்தனவா?" என்ற தலைப்பிலான (திரு.சொர்ணம் சங்கர் வழங்கிய) கட்டுரையை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். "புலையன்", "இழிபிறப்பாளன்", "துடியன்" போன்ற சொற்கள் பாடல்களில் வருவதும், "வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும், கீழ்ப்பால் ஒருவன் கற்பின், மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே" போன்ற வரிகளும், "மேலோட்டமாகப் பார்த்தால் சாதிகள் சங்க காலத்திலேயே இருந்திருக்கின்றன என்று எண்ண வைக்கும்; ஆனால் அப்படியில்லை; புறநானூற்றுப் பாடல்களின் சொற்பிரயோகங்களை வைத்து மனிதன் பிறப்பால் பாகுபடுத்தப்பட்டதாகச் சொல்ல முடியாது" என்பதை ஆராய்ந்து விளக்கும் டெக்ஸாசைச் சேர்ந்த தமிழறிஞர் திரு. பழனியப்பனின் கட்டுரை அது.
06-1378453535-international-conference-w
புறநானூற்றின் காலத்தைத் துல்லியமாக ஆராயும் அகழாய்வுகள் பற்றி குறிப்பாக, அண்மையில் ஏற்பட்டிருக்கும் அறிவியல் முன்னேற்ற வழிகளில் ஆராயும்- (திரு.ராஜ் முத்தரசனின்) கட்டுரையும் ஒரு புதிய கோணத்தை வீசியது. "சமீபத்திய ஆராய்வுகள்படி, புறநானூற்றில் சுமார் 26 பாடல்களில் குறிப்பிடப்படும் குறுநில மன்னன் நெடுமான் அஞ்சியின் காலம் கி.மு.490" என்கிறார் இவர். இன்னொரு கேள்விக்குப் பதிலளிக்கையில் 19-ஆம் நூற்றாண்டுவாக்கில் ஆதிச்சநல்லூரில் கிடைத்த மட்பாண்டங்கள், சென்னை அருங்காட்சியகத்துக்கு அனுப்பப்பட்டு அவை காணாமல் போனதை குற்றம்சாட்டும் தொணியில் இல்லாமல் ஓர் ஆதங்கத்தில் தான் குறிப்பிடுகிறார்.
06-1378453552-international-conference-w
இன்றைய அரசியலுக்கும் பொருந்தும் அரசியல் சிந்தனைகள் -நீர் வளத்தைப் பெருக்குதல், எளிமையாக வாழ்தல், மக்களிடம் வரி வாங்குவதில் கடினம் கொள்ளாமை போன்றன- இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புறநானூற்றில் காணக் கிடைப்பதை, திருமதி. மேகலா இராமமூர்த்தி தன் பேச்சில் எடுத்துக்காட்டினார். புறநானூற்றின் வாழ்த்து முறைகள், அஞ்சாமைப் பண்புகள், சமூக விழிப்புணர்வு, வாழ்வியல் கோட்பாடுகள், உவமைச் சிறப்புக்கள் மற்றும் கவிதை இயல் பற்றியும் கவிஞர். இலந்தை இராமசாமி, திரு. நாகலிங்கம் சிவயோகன், திருமதி. சரோஜா இளங்கோவன், முனைவர். முருகரத்தினம் மற்றும் திரு.வாசு ரங்கநாதன் ஆகியோர் பேசினர்.
06-1378453574-international-conference-w
‘இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புறநானூற்றை இப்போது கொண்டாட வேண்டிய அவசியம் என்ன?" என்ற பரவலான கேள்விக்கு, மாநாட்டின் மையக் கருத்துரை (Keynote Address) வழங்கிய முனைவர். மருதநாயகம் தன் பேச்சில் பதிலளித்தார். "தன் சரித்திரத்தைத் தெரியாதவன், தவறுகளை மீண்டும் செய்யக்கூடியவன்" என்றும் "ஒவ்வொரு தலைமுறையும் பழைய இலக்கியங்களை மீண்டும் தன் போக்கில் புரிதல் ("re-interpret") வேண்டும்" என்றும் அறிஞர்களின் மேற்கோள்களில் சொல்வதைக் குறிப்பிட்டார். இன்னொரு உரையில், புறநானூறு தான் தூதுப்பாடல்களுக்கும், கையறு நிலைப்பாடல்களுக்கும் (இரங்கற்பாக்கள்), பள்ளியெழுச்சிப் பாடல்களுக்கும், மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சிக்கும், ஆண்டாளின் திருப்பாவைக்கும் ஆதாரமாக, தூண்டுகோலாக அமைந்தது என்றார். "புறநானூற்றுச் சமுதாயம் முற்றிலும் ஏற்றத் தாழ்வுகள் அல்லாத ஓர் இலட்சியச் சமுதாயம் (a perfect, absolute egalitarian society) என்று சொல்ல முடியாது; ஆனால் அக்கால கிரேக்க, ரோம மற்றும் யூத சமுதாயங்களுடன் ஒப்பிட்டால் ஏற்றத் தாழ்வுகள் புறநானூற்றுச் சமுதாயத்தில் மிகக் குறைவு" என்றார். "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" போன்ற உலகத்தாரை நட்பு பாராட்டும் ஓர் உயர்ந்த, எளிய, பரந்த மனப்பாங்கை வேறு எந்த உலக இலக்கியங்களிலும் காணமுடிவதில்லை" என்று திரு. ஜார்ஜ் ஹார்ட் (கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர்) குறிப்பிடுவதைச் சுட்டிக் காட்டினார்.
06-1378453613-international-conference-w

"புறநானூறு பெரும்பாலும் வீரம் பற்றியும் மன்னர்கள் குறித்தும் பாடப்பட்டது" என்ற பரவலான கருத்தை மறுக்கிறார், மாநாட்டு விருந்தினர் முனைவர் அறிவு நம்பி. ஆதாரமாக, "எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே" போன்ற எளிய புறநானூற்று வரிகளைச் சுட்டிக்காட்டும் அவர், "அவனைப் பற்றி அவர் பாடியது" என்று அள்ளிக் கொடுக்கும் அரசனை ‘அவன்' என்றும், கவிஞனை ‘அவர்' என்றும் வழங்கிய சங்ககால வழக்கை நினைவூட்டி, கவிஞர்களுக்கு அக்காலத்தில் வழங்கிய மதிப்பையும் கோடிட்டுக்காட்டுகிறார்.

புறநானூற்றின் சிறப்புக்களை மட்டுமன்றி, அதில் குறிப்பிடப்படும் இக்காலத்துக்கு ஒவ்வாத சில அக்கால வழக்கங்களையும் சுட்டிக்காட்டினர், முனைவர்.பிரபாகரனும் திருமதி.சரோஜா இளங்கோவனும். பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கு இருந்ததைக் குறிப்பாகச் சொல்லும் பாடலும், ஔவையார், மன்னன் அதியமான் தனக்குக் கள் பகிர்ந்துண்டதைச் சொல்லும் பாடலும் (‘பெண்களும் கள்ளுண்டது ஆண்-பெண் சமநிலையைக் குறிப்பதாயிற்றே' என அரங்கத்தில் ஒருவர் கேட்டார்!). தமிழ்ச் சமுதாயத்துக்குள்ளேயே அடிக்கடி நடந்த போர்கள் பற்றிச் சொல்லும் பாடல்களும் இருப்பதைக் குறிப்பிட்டார்கள்.

புறநானூற்றை மக்களிடம் பரவலாகக் கொண்டு சேர்க்கும் பணியை எளிமையாக, ஆரவாரமின்றிச் செய்து கொண்டிருக்கும் முனைவர்.பிரபாகரன் மற்றும் திருமதி. வைதேகி ஹெர்பெர்ட் ஆகியோரின் தமிழ்ச்சேவையை அறிமுகப்படுத்துவதாகவும் இந்த மாநாடு அமைந்தது. இருவருமே புறநானூற்றின் பாடல் விளக்கங்களை எளிதில் புரியும் வண்ணம் புத்தக வடிவில் கொண்டு வந்திருக்கிறார்கள்; திருமதி வைதேகி ஹெர்பெர்ட்டின் புத்தகம் ஆங்கிலத்திலும் விளக்கம் சொல்கிறது. கனடாவின் டொரொன்டோ பல்கலைக்கழகம் இவரது இலக்கிய மொழிபெயர்ப்புகள் குறித்து இவரைக் கௌரவித்திருக்கிறது. ‘தமிழ் இலக்கியங்கள் ஒரு சாதாரணக் குடும்பத்துத் தலைவியான தன்னை எப்படிப் பரவசப்படுத்தி, அடுத்த தலைமுறைக்கு அதைக் கொண்டு செல்ல வேண்டும் என்று தூண்டியது' என்பதை விளக்கி, ‘எனக்கு மேடைப் பேச்செல்லாம் வராது; ஆனால் என்னுடன் அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்தால் உங்களுக்கும் இலக்கிய ஆர்வம் தொற்றிக்கொள்ளும்; குறைந்தது இரண்டு புறநானூற்றுப் பாடல்களை நீங்கள் ரசிக்கும்படிச் செய்துவிடுவேன்" என்று இவர் எளிய தமிழில் சொன்னபோது, அரங்கமே எழுந்து நின்று கைதட்டி வணங்கியது.

மாநாட்டின் மற்றொரு அம்சம், சுமார் 48 பேர் பங்கேற்ற புறநானூற்று வினாடி-வினா நிகழ்ச்சி. பங்கேற்றவர்கள் அனைவரும் இல்லத்தரசிகளாகவும் பிற பணிகளில் ஈடுபட்டவர்களாகவும் இருக்க, அவர்களுக்குக் குறிப்பிட்ட புறநானூற்றுப் பாடல்களைப் படித்து ஆராயும் ஓர் அரிய வாய்ப்பைத் தந்ததையும், அவர்களும் ஆர்வமாக அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதையும் மாநாட்டின் வெற்றிகளில் ஒன்றாகச் சொல்லலாம். இந்தச் சிறப்பான நிகழ்ச்சியை திரு. பீட்டர் யெரேணிமூஸ் மற்றும் திரு. குழந்தைவேல் இராமசாமி ஆகியார் மிகச் சிறப்பாக வடிவமைத்திருந்தனர்.

மாநாட்டு நாளுக்கு முன்பாகவே புறநானூற்றைப் பல கோணங்களில் ஆராயும் ஆய்வுக்கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளுக்கு முதல் பரிசாக 1000 டாலர்களும், இரண்டாவது, மூன்றாவது பரிசுகளாக முறையே 500, 250 டாலர்களும் வழங்கப்பட்டன. புறநானூற்றுக் காட்சிகளை ஓவியமாக வடிக்கும் ‘ஓவியப் போட்டி"யும் நடந்தது.

06-1378453638-international-conference-w

06-1378453638-international-conference-w

http://tamil.oneindia.in/art-culture/essays/2013/international-conference-on-purananuru-held-in-washington-182918.html#slide317749

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.