Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எண்பதுகளில் தமிழ் இலக்கியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எண்பதுகளில் தமிழ் இலக்கியம்
வெங்கட் சாமிநாதன்




venkat_swaminathan_Tamil_Authors_Portrai

 

(தில்லியிலிருந்து அன்று வெளிவந்துகொண்டிருந்த BOOK REVIEW என்ற ஆங்கில இதழ், தமிழ் எழுத்துக்கு என ஒரு தனி இதழ் வெளியிட்டது. அந்த இதழுக்காக தமிழ் இலக்கியத்தின் எண்பதுக்களில் வெளிவந்த தமிழ் எழுத்துக்கள் பற்றி நான் எழுதியது பின் வரும் கட்டுரை. From the Eighties to the Present என்ற தலைப்பில் Book Review-வின் நவம்பர்-டிசம்பர் 1992 இதழில் வெளியான கட்டுரைதான் இங்கு தமிழில் தரப்பட்டுள்ளது. அந்தச் சிறப்பிதழில் பிரசுரமான இரண்டு மற்ற கட்டுரைகள் ராஜூ நரஸிம்ஹன் A Telescopic Arousal of Time என்ற தலைப்பில் அம்பையின் சிறுகதைத் தொகுப்பு Lakshmi Holmstrom-ன் மொழிபெயர்ப்பில் A Purple Sea என்ற தலைப்பில் வெளி வந்த புத்தகத்தைப் பற்றியது. அடுத்தது வாஸந்தியின் காதல் பொம்மைகள் பற்றி எம். விஜயலக்ஷ்மி எழுதிய Indian Feminism – Vaasanti style என்ற கட்டுரையும் தான் இப்போது என் கட்டுரையின் மற்ற பக்கங்களிலிருந்து நான் இப்போது பெறக்கூடியவை. இந்த இதழுக்கு பின் வரும் கட்டுரை தவிர, அ.கா. பெருமாளின் தோல் பாவைக் கூத்து பற்றிய புத்தகம் ஒன்றுக்கும் மதிப்புரை ஒன்றை நான் எழுதித்தந்திருந்தது எனக்கு நினைவுக்கு வருகிறது. ஆனால் அது இப்போது கிடைப்பதாயில்லை. கிடைப்பது பின் வரும் கட்டுரை ஒன்றுதான்.)


நான் எண்பதுகளோடு வரம்பிட்டுக்கொள்கிறேன். இது எனக்கு சௌகரியமாகவும் இருப்பது சந்தர்ப்பவசம் தான். அதிர்ஷ்டவசமாக, இந்த எண்பதுக்களில் தான் தமிழில் சிருஷ்டி எழுத்துக்கள் புதிய பாதைகளில் பயணிக்க ஆரம்பித்தன. அந்த புதிய பாதைகள் இதுகாறும் கால் பதித்திராத பாதைகள். கால் பதித்திராத பாதைகள் என்றேன். காரணம் எதுவாகவும் இருக்கலாம். அவர்கள் நினைத்துப் பார்த்திராததாகவோ, தெரிந்திராததாகவோ, அல்லது அப்பாதையில் பயணிப்பதற்கு அவர்கள் தயாராக இல்லாததாகவோ இருக்கலாம். அல்லது அவை சிரம சாத்தியமானவை என்றோ அவற்றை ஒதுக்குவதே விவேகமான காரியம் என்றும் கூட நினைத்திருக்கலாம். ஆக, இம்மாதிரியான புதிய பாதைகளில் பயணிக்கத் துணிந்த எழுத்தாளர்களை, அவர்களது துணிவுக்கும், கற்பனைத் திறத்துக்கும், நேரிய சிந்தனைகளுக்கும் நாம் பாராட்ட வேண்டும். எனவே, இந்த காலகட்டத்தில், தாம் கடந்து வந்த பாதையிலேயே இன்னம் ஒன்று, தமக்குப் பிராபல்யமும், பணமும் தந்த வழியிலேயே இன்னம் ஒன்று என தொடர்ந்து எழுதியவர்களைப் பற்றிப் பேசப் போவதில்லை. சிலர் சொல்லக் கூடும். இந்த புதிய பாதையில் செல்லும் சாகஸக்காரர்களை விட பழைய பழகிய அச்சிலே இன்னம் ஒன்று, இன்னம் ஒன்று என்று எழுதித் தள்ளுபவர்கள் எழுத்துக்கள் சீராக நன்றாக எழுதப் பட்டவை, வெற்றிபெறுபவை என்று வாதிக்கக் கூடும். இருக்கலாம். ஆனால், இவர்கள் எழுத்து பற்றி எனக்கு அக்கறை இல்லை. தமிழ் இலக்கியத்தின் புதிய பரிமாணங்களின் சிருஷ்டியை விரும்புகிறவர்களுக்கும் அக்கறை இராது என்றே நான் நினைக்கிறேன்.

இன்றைய தமிழ் இலக்கியத்தின் கோபம் கொண்ட இளைஞன் பற்றி முதலில் பேசலாம். சில வருடங்களுக்கு முன் மறைந்துவிட்ட அவர், 76 வயதுக் காரர். இப்போது அவரைப் பற்றி எழுதுவது அவருக்கு நான் செலுத்தும் அஞ்சலியுமாகும். அணைய விருக்கும் தீபம் நீண்ட உயர்ந்த சுடர் விட்டுப் பிரகாசமாக எரியுமே. அது போலத்தான் அவர் தன் கடைசி நாட்களைக் கழிக்க சென்னை வந்து சேர்ந்ததும் அந்த எண்பதுக்களில் தான் அவர் நிறைய எழுதினார். நிறைய அவர் புத்தகங்களும் பிரசுரமாயின. அதுகாறும் பிரசுரமாகாது இருந்தவை கூட பிரசுரமாயின. அதற்கு முன் கிட்டத்தட்ட இருபது வருடங்களோ என்னவோ தில்லியில் ஒரு மாதிரியான “நாடிழந்த அகதி” போல் வாழ்ந்தார். ஆனால் தில்லிவிட்டு சென்னை வந்ததும் அந்தக் கடைசி காலத்தில் அது வரை அவரைப் பிரசுரிக்காத பத்திரிகைகள், வெகுஜனப் பத்திரிகைகள் கூட அவரைப் பிரசுரித்தன. வாழ்நாள் முழுதும் அந்த வெகுஜன பத்திரிகைகளைத் தான் அவர் இடைவிடாது சாடி எழுதி வந்திருக்கிறார். பாமரத் தனமான இலக்கிய வாசனையேயற்ற எழுத்துக்களுக்கே பரிசளித்து வந்த மத்திய சாஹித்ய அகாடமியையும் அவர் சாடாத சமயம் இருந்ததில்லை. அவரிடம் அவ்வளவு திட்டுக்களையும் வாங்கிவந்த சாகித்ய அகாடமி அவரது வாழ்நாள் கடைசியில் அவருக்கு பரிசு அளித்தது. வெகு வருஷங்களாக பிரசுரமாகாது இருந்த எழுத்துக்களும், வருஷக் கணக்கில் மறு பிரசுரம் பெறாது இருந்த புத்தகங்களும் மறு பிரசுரம் பெற்றன. எங்கெங்கோ உதிரியாகக் கிடந்த அவரது எழுத்துக்கள் எல்லாம் சேகரிக்கப்பட்டு தொகுப்புக்களாக வெளிவந்தன. வற்றிக்கிடந்த ஆற்றில் திடீரென பிரளயம் வந்தது போலத்தான். ஒரு வேளை போர்க்குதிரை சாதுவாகி லாயத்தில் கட்டப்பட்டு விட்டதோ என்று தோன்றலாம். இல்லை. நிகழ்ந்தது சமாதானமோ, துக்கிக்க வேண்டிய தோல்வி ஒன்றோ இல்லை. அவரது கடைசிக் காலத்தில் அவரது மறைவிற்குச் சற்று முன், அவரது swan song போல பிரசுரமான அவதூதர் என்ற நாவலின் பிரதான பாத்திரமான அவதூதரை இங்கு உதாரணமாகக் காட்டலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.

KA.-NA.-SU-Subramaniam_Tamil_Authors_Wri

அந்த நாவலின் அவதூதர் ஒரு காலத்தில் குடும்பத்தோடு வாழ்ந்தவர் தான் இப்போது அவதூதர் (ஆடையைக் கூட துறந்து வாழும் சன்னியாசி) ஆன பிறகும் தான் குடும்பத்தோடு வாழ்ந்த கிராமத்திலேயே தான் வாழ்கிறார். அந்த கிராமத்து மக்கள் வாழ்க்கையின் சுக துக்கங்களில் பங்கு கொள்கிறார். பின் சற்றுக் காலம் கழித்து மறுபடியும் குடும்பத்தில் ஐக்கியமாகிறார். அவதூதராக கிராமத்தில் இருந்த போதும் குடும்பத்தோடும் கிராமத்து மக்களோடும் அவருக்கு இருந்த உறவு, ஆழ்ந்த ஈடுபாடும், பொறுப்புணர்வும் கவலையும் கொண்ட ஒதுங்கி வாழ்தலும் ஆக இணைந்து இருந்தது. அவரது அப்போது பிரசுரமான இன்னொரு நாவலான தாமஸ் வந்தார், இயேசுவின் தூதரும் சீடருமான புனித தாமஸ் தன் மறைவிற்கு முந்திய கடைசி வருடங்களை சென்னையை அடுத்த இப்போது புனித தாமஸ் மலை என்று அறியப்படும் இடத்தில் கழித்தார். அப்போது அவருக்கும் மயிலாப்பூரில் வாழ்ந்ததாகக் கருதப்படும் வள்ளுவருடனான ஒரு கற்பனைச் சந்திப்பை விவரிக்கிறது தாமஸ் வந்தார். அப்போது அந்தச் சந்திப்பின் விளைவாக வள்ளுவர் மீதும் அவரது குறள் மீதும் இருந்திருக்கக் கூடிய கிறித்துவ தர்மங்களின், நீதி நெறிகளின் பாதிப்பைப் பற்றிய க.நா.சு. வின் சிந்தனைகளை இந்த நாவலில் பார்க்கலாம். அக்காலத்திய சென்னையின் இரு புறநகர் குடியிருப்புகளில் வாழ்ந்து வந்த வள்ளுவரும் தாமஸும் ஒருவரை ஒருவர் அறிந்திருக்கக் கூடும். சந்தித்திருக்கக் கூடும். இதற்கு ஏதும் சரித்திரச் சான்று இல்லையென்றாலும், இக்கால கட்டத்தில் நிகழ்ந்து வந்த மத உறவுகளும் கொந்தளிப்புகளும் சரித்திரம் கண்டவை தான்.
sujatha1-150x150.jpg



புனையப்பட்ட நாவலில், சரித்திரம் பற்றியும் அதன் ஆதாரங்கள் பற்றியுமான சர்ச்சை நம்மை பிரபஞ்சனின் மானுடம் வெல்லும், சுஜாதாவின் கருப்பு, சிவப்பு, வெளுப்பு போன்ற நாவல்களை நினைவூட்டும். சரித்திர நாவல்கள் எழுதுவதில் நாற்பதுகளிலிருந்து இவர்களுக்கு முன்னோடிகளாக இருந்த மிகுந்த பிராபல்யமும் புகழும் பெற்று பெரும் ரசிக பலத்தைக் கொண்டிருந்த கல்கியும், அவரளவுக்கு வெற்றியோ பிராபல்யமோ பெற்றிராத மற்றவர்களும் வெகு ஜன கவர்ச்சியான வழக்கமான காதல் கதைகளுக்கே வித்தியாசமான பெயர்களையும் உடைகளையும் அணிவித்து நாட்டுப் பற்று உணர்வுகளுக்கு ஊட்டம் தரும் வகையில் சரித்திரப் பின்னணி கொடுத்து சந்தைக்குத் தம் நாவல்களைத் தயாரித்தார்கள்.

 

Writer_Prabhanchan_Books_Authors_Kavitha


ஆனால், சுஜாதா வெற்றி பெற்ற வெகு ஜன எழுத்தாளர். எல்லா தரப்பு மக்களிடையேயும் பெரும் அளவில் பிராபல்யமும் புகழும் பெற்றிருந்தார். குறிப்பாக இளம் வயது வாசகர்களை அவர் வெகுவாகக் கவர்ந்திருந்தார். பிரபஞ்சன் கவனிக்கப்பட்டு வரும் இலக்கியத் தரமான சிறுகதையாளராக வளர்ந்து வந்தார். இருவருமே சரித்திர நாவல் எழுதும்போது சரித்திர ஆதாரங்களோடு, முடிந்த வரை கிடைக்கும் ஆதாரங்களைத் தேடி, இலக்கியத் தரத்தோடு எழுத முயன்றனர். பிரபஞ்சன் புதுச்சேரிக் காரர். புதுச்சேரியின் சரித்திரத்தை, அது ப்ரெஞ்சுக் காரர்களின் காலனியான காலத்திலிருந்து, கடைசியாக சுதந்திர இந்தியாவின் ஒரு தனிப் பகுதியான ஆனது வரையிலான சரித்திரத்தை மூன்று பாகங்களில் எழுதத் திட்டமிட்டுள்ளார். இதன் முதல் பாகமாகிய மானுடம் வெல்லும் வெளி வந்துள்ளது. அதில் வரும் சரித்திர பாத்திரங்களும் நிகழ்வுகளும் சரித்திர ஆதார பூர்வமாக இருக்கவேண்டி, அக்கால கட்டத்தில் வாழ்ந்து அந்நிகழ்வுகளையும் சரித்திர புருஷர்களையும் தன் அனுபவ பூர்வமாக பதிவு செய்துள்ள 18- நூற்றாண்டின் பின் பாதியில் ப்ரெஞ்சுக் காரர்களுக்கு துபாஷியாக இருந்த ஆனந்தரங்கம் பிள்ளையின் மிக விரிவான நாட்குறிப்புகளையே தன் நாவலுக்கு ஆதார ஆவணமாக பிரபஞ்சன் பயன் படுத்தியுள்ளார். சுஜாதாவின் நாவல், தன் தந்தையைக் கொன்ற பிரிட்டீஷ் அதிகாரியைப் பழி வாங்க தெற்குக் கோடியிலிருந்து கான்பூர் வரை ஒரு சாகஸப் பயணம் கொண்ட ஒரு மறவர் குல இளைஞனின் கதையைச் சொல்கிறது. 1857-ன் முதல் இந்திய விடுதலைப் போரின் பின்னணியில் இக்கதை நிகழ்கிறது. இதற்கு சரித்திர ஆதாரங்கள் தேடுபவருக்கு நிறையவே கொட்டிக் கிடக்கிறது. இருவரும் தம் நாவல் சரித்திரபூர்வமாக உண்மையாக இருக்கவேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள்.

 

Gopallapurathu_Makkal_Ki_Rajanarayanan_T

கி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்கள் என்ற 1991-ம் வருடம் மத்திய சாஹித்ய அகாடமி பரிசு பெற்ற நாவலையும் ஒரு வகையில் சரித்திர நாவல் என்று தான் சொல்ல வேண்டும். கி. ராஜநாராயணன் எழுதி வரும் மூன்று பாகங்களுக்கு திட்டமிடப்பட்ட நாவலின் இரண்டாம் பாகம் இது. விஜய நகர் சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு தெலுங்கு பேசும் மக்கள் தம் ஊரை விட்டு தெற்கு நோக்கிப் பயணமாகினர். அந்த சரித்திரம் பற்றிய செவி வழிக்கதைகளும் செய்திகளும் ஒரு வாறாக இடைவெளிகளுடன் கோர்த்துச் சொல்லப்பட்டுள்ள நீண்ட கதை இது. கி. ராஜநாராயணன் அவ்வாறு இடம் பெயர்ந்து தெற்கு மாவட்டங்களில் குடிபெயர்ந்து வாழும் சமூகத்தைச் சேர்ந்தவர். இதன் இரண்டாம் பாகம், இந்த பயணத்தின் ஏதோ ஒரு குறிப்பிட்டுச் சொல்லாத காலகட்டத்திலிருந்து தொடங்கி இந்தியா விடுதலை அடைந்தது வரையிலான சரித்திரத்தைச் சொல்கிறது. இடைவெளிகள் விட்டுத் தொகுக்கப்பட்டுள்ள இந்தக் கதைகள் ஒரு விவசாய சமூகத்தின் எளிமை, வெகுளித் தனம், அவர்களுக்கே இயல்பான கிராமீய நகைச் சுவை, ஒரு அப்பாவித்தனம், ஒரு விஷமத்தனமான பாலியல் கிண்டல்கள் என வாய்மொழி மரபின் குணங்கள அனைத்தும் இவரது கதையாடலின் இன்றியமையாத அம்சங்கள். அவரது கதையாடலில் ஒரு மெல்லிய இழையாக சரித்திரம் அடியோட்டத்தில் தொடரும்.

ஒரு தீவிர விமர்சன நோக்கில் பார்த்தால், ஈ. பாலகிருஷ்ணபிள்ளையின் டணாய்க்கன் கோட்டை என்ற நாவல் தான் முழுக்க முழுக்க சரித்திரத்தில் ஆதாரித்த நாவல் என்று சொல்ல வேண்டும். அது மைசூரை திப்பு ஆண்ட கலவரமும் சண்டைகளும் நிறைந்த காலத்தில் நிகழ்வது., தொடர்ந்து மராட்டியர்களுடன் பிரிட்டீஷாருடனும் தன்னையும் தன் ராஜ்யத்தையும் காத்துக்கொள்ள நடந்த யுத்தங்கள் நிறைந்த காலம். தமிழில் இது தான் உண்மையான சரித்திர நாவல் என்று சொல்ல வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கல்கியும், அவரைப் பின் தொடர்ந்தவர்களும் சரித்திரம் என்று உடையணிவித்துத் தந்த காதல் புனை கதைகள் மக்கள் கவனத்தைத் தம் பால் முழுதுமாக ஈர்த்துக்கொண்ட காலத்தில் வந்த காரணத்தால் யாருடைய கவனத் திலிருந்தும் மறைந்தே போயிற்று. ,அது இப்போது திரும்ப பதிப்பிக்கப் பட்டு வந்துள்ளது. முதல் பதிப்பு வெளிவந்து முப்பது வருஷங்களுக்கு மேலான பிறகு இப்போது எண்பதுக்களில் இது மறுபதிப்பு பெற்றுள்ளது, மேலே சொல்லபட்ட, இப்போது எழுதப்பட்டு வரும் சரித்திரத்தில் ஆதாரித்த நாவல்களுக்கு ஒரு அர்த்தமும் முக்கியத்துவமும் தருகிறது. இவைகள் வெளிவரும் இக்கால கட்டத்தில் முன்னர் எழுதப்பட்ட சரித்திரம் என்று புனையப்பட்டு மலையெனக் குவிந்திருக்கும் காதல் கதைகள் அவற்றிற்கு உரிய கதியை அடையும் என்று எதிர்பார்க்கலாம்.

 

Writer_Vaasanthi_Portrait-150x150.png


சரித்திரப் பழமையிலிருந்து நிகழ் காலத்திற்கு வந்தால் வாசந்தியின் நிற்க நிழல் வேண்டும் என்ற நாவல் நம் முன் நிற்கும். இலங்கையில் இன்றும் எரியும் பிரசினையாக உள்ள, சிங்கள பெரும்பான்மை யதேச்சாதிகாரத்திற்கு இரையாகித் தவிக்கும் தமிழர்களின் போராட்ட வாழ்வைச் சித்தரிக்கும் நாவல் அது. இந்த நாவல் ஒரு பக்கச் சாய்வாக தமிழர்களின் அவல வாழ்வை மாத்திரம் சித்தரிக்கும் ஒன்றல்ல. இரு தரப்பினருக்கும் பொதுவாகக் காணும் மனிதகுல சோகக் கதையைச் சொல்கிறது, வாஸந்தியின் அனுதாபம் இரு தரப்பிலும் சாதாரண மக்களின் வேதனையும் துயரமே வாழ்வாகிப் போவதும் தான். எல்லா அரசுகளும் விளையாடும் அரசியல் விளையாட்டின் தார்மீக மற்ற தன்னலம். தமிழ்த் தீவிர வாதிகள் தம்முள் ஒருவருக்கொருவர் தம் அதிகாரத்தைப் பெருக்க தம் தலைமையைக் காத்துக்கொள்ள, கடைசியில் தம்மையே அழித்துக் கொள்ளும் சகோதரப் பழிவாங்கல், எதையும் அவர் ஒதுக்குவதில்லை. நாவலின் பெரும்பகுதி ஒரு பாராட்டத் தகுந்த முயற்சி என்றே சொல்ல வேண்டும். இந்த பிரசினையை வாஸந்தி நேர்மையுடனும், தீவிரமாகவும் அணுகியிருந்தாலும், இந்நாவல் அவ்வளவாகக் கவனம் பெறவில்லை. காரணம், வாஸந்தி என்னும் ஒரு வெகு ஜன பிரபலம் பெற்ற எழுத்தாளர் எழுதியிருப்பதால் இருக்கலாம்.

 

Vittal_Rao_K.jpg


இங்கிருந்து நகர்ந்தால், சிறுகதை, நாவல் என்னும் புனை எழுத்தை ஒரு சமூக ஆவணமாகவே பார்க்கும் விட்டல் ராவின் எழுத்துக்களின் பக்கம் பார்வை விழும் அவரது நதி மூலம், காலவெளி போன்ற நாவல்கள் அத்தகைய குணத்தவை அவரது எழுத்துக்கள் இன்னம் சீரிய கவனத்தையும் அங்கீகரிப்பையும் வேண்டுபவை. ஆனால் அவருக்கு உரிய இலக்கிய ஸ்தானமோ,அங்கீகரிப்போ ஏன் கிடைக்கவில்லை என்பதற்கான காரணம் ஏதும் எனக்குத் தென்பட்டதில்லை. அவரது நதி மூலம் என்னும் நாவல் மூன்று தலைமுறை மாதவ பிராமண சமூகத்தின் வாழ்க்கையை தன் கதைக்களனாகக் கொண்டுள்ளது. அந்த வாழ்க்கையினூடே, வெளியே சமூகத்தின் நிகழ்வுகள், குறிப்பாக, சினிமாவிலும் , நாடகத்திலும் நிகழ்ந்துள்ள நிகழ்வுகள் மாற்றங்கள் இந்த சமூகத்தின் வாழ்வில் பின்னிப் பிணைகின்றன இந்த வெளியுலக மாற்றங்களும் நிகழ்வுகளும் வெறும் பின்னணியாகத் தரப்படவில்லை. அந்த மாற்றங்கள் இந்த மாதவ பிராமண குடும்பத்தின் வாழ்வோடும் வெளி சமூக சரித்திரத்தின் மாற்றங்களோடும் ஒன்றை ஒன்று பாதிக்கும் ஒட்டுறவு கொண்டவை. கடந்த இருபதுகளிலும் முப்பதுகளிலும் வயதுக்கு வந்த, இன்றைய முதியவர்கள் இந்த நாவலை, கடந்து விட்ட பழங்காலத்தை இழந்த ஒரு வருத்த உணர்வு இல்லாது படிக்க முடியாது. அவர்கள் கடந்து வந்துவிட்ட பழங்கால நினைவுகளும் படிக்கும் போது மேலெழும். விட்டல் ராவின் இன்னொரு நாவலான காலவெளியும் குறிப்பிட்டுப் பேசவேண்டிய ஒன்று. விட்டல் ராவ் எழுபதுகளில் சென்னை ஒவியக் கல்லூரியில் ஒவியம் கற்றார். காலவெளி நாவலில், அறுபது எழுபதுகளில், ஓவியக் கல்லூரியில் கற்று முடிந்த பின் நாட்களின் சூழலை, ஒவியமும் கற்று வந்த மாணவர்களின் உணர்வுகளை, அவர்களிடையே நிலவிய ஆசைகள், தோல்வி உணர்வுகள், பிழைக்க வழி தேடும் முயற்சிகள்,அவர்களிடையே நிலவிய போட்டி மனம், பொறாமை உணர்வுகள் அத்தனையையும் , நம்பகத் தன்மையோடும் வெகு அழகாகவும், உண்மையாகவும், விவரங்களோடும் தன் எழுத்தில் பதித்துள்ளார். ஒரு மாதிரியான பொஹீமியன் வாழ்க்கை, அதில் விருப்பும் தோல்வியும், தன்னை வெளிக்காட்டிக்கொள்ளும் ஆசை, ஒரு கலைஞனின் நவீன பார்வைக்கும் உணர்வுகளுக்கும் அனுதாபமோ புரிதலோ இல்லாத நகர வாழ்க்கை, நவீன கலைகளின் புதிய போக்குகள் பற்றிய ஞானமோ அக்கறையோ கூட இல்லாத அந்த சூழலையும் வெகு நன்றாகவே விட்டல் ராவ் தன் நாவலில் பதிவு செய்துள்ளார். விட்டல் ராவுக்கு குறிப்பிட்டுச் சொல்லத் தக்க நுணுக்க விவரங்களின் நினைவும் அவற்றைப்பதிவு செய்யும் திறனும்,, தன் நிகழ் கால, இலக்கியம், நாடகம், சினிமா, சங்கீதம் என பலதுறைகளிலும் ஆழ்ந்த பரிச்சயமும் கொண்டிருந்திருக்கிறார். அக்கால புதுமையான தமிழில் இலக்கிய சிறுபத்திரிகைகளின் பெருக்கமும், எழுத்தாளர், ஒவியர், என பல்துறைகளிலும் ஈடுபாடுள்ளோ குழு சந்திப்புகளும், தெருச் சந்திப்புகளின் உரையாடல்களும், திருவல்லிக்கேணியின் குறுகிய எண்ணற்ற சந்துகளில் நடமாட்டமும் ஆங்கிலோ இந்தியர்கள் வசிக்கும் ஒரு தெருமுனை வீட்டிலிருந்து இன்னொரு சந்தின் ஒரு இடுங்கிய வீட்டின் உள்ளே அறுபதுக்களின் ராக் இசைத் தட்டுக்கள் கேட்கப் போவதுமான அந்நினைவுகள் அந்த சூழல் எல்லாம் பதிவாகியிருப்பது, இது நினைவுகளின் பதிவா, அல்லது கதை சொல்லலா என்ற ஊசலாட்டம் இந்த மாதிரியான எழுத்து விட்டல் ராவை தனித்துக் காட்டும். அந்நாட்களில் கல்லூரியிலிருந்து படிப்பை முடித்து வெளியே வந்த நான்கு ஒவிய மாணவர்களின் அன்றாட வாழ்வின் போராட்டத்தையும் எதிர்பார்ப்புகளையும் தோல்விகளையும் வெகு இயல்பாக, ஏதும் பெரும் சாதனை செய்தவதான தோரணையின்றி பதிவு செய்திருப்பது விட்டல் ராவின் சிறப்பு.


Thoppil_Mohammad_Meeran_Tamils_Creative-

இந்த இடத்திலிருந்து தோப்பில் முகம்மது மீரானின் ஒரு கடலோரத்து கிராமத்தின் கதை என்னும் முதல் நாவலுக்குள் நாம் நகர்வது ஏதும் சிரம மில்லாத பயணம் தான். மீரானின் இம் முதல் நாவலே ஒரு க்ளாஸிக் ஆகியுள்ளதும், இலக்கிய அங்கீகாரம் பெற்றுள்ளதும், அவருக்கு பெரும் பாராட்டுக்களும் புகழும் தந்துள்ளதும், அதே சமயம் இது வியாபார ரீதியாகவும் வெற்றியாகியுள்ளதெல்லாம் எல்லாமே, ஏதோ ஒரே பரிசு அவருக்கு அளிக்கவல்லது எல்லாவற்றையும் ஒரே கூடையில் போட்டு ஒட்டு மொத்தமாக கொடுத்தது போல ஆனதும், தமிழில் புதிதாக நிகழும் ஒரு அதிசய நிகழ்ச்சி. சமீபகால தமிழ் இலக்கிய வரலாற்றில், இது போன்ற ஒரு நிகழ்வு இருந்ததில்லை. தோப்பில் முகம்மது மீரான் இந்த நாவலை எழுதியதே ஒரு சாகஸம் நிறைந்த காரியம் தான். 20-ம் நூற்றாண்டின் ஆரம்ப பத்துக்களில், அவரது முஸ்லீம் சமுதாயத்தின் வாழ்க்கைச் சித்திரத்தை இந்நாவலில் பதிந்துள்ளார். அந்த சமுதாயத்தின் மத நம்பிக்கைகள், அவற்றில அவர்கள் கொண்டிருந்த வேறு எதையும் சிந்திக்கவும் செய்யத் துணியாத முரட்டு விஸ்வாசம், ஆங்கிலக் கல்விக்கு எதிர்ப்பு, தாம் அராபிய வம்ஸாவளியில் வந்தவர்கள் என்றும் அந்த கலப்பற்ற புனிதத்வத்தைக் காப்பாற்றுபவர்கள் என்ற கர்வம் எல்லாம் மீரானால் எவ்வித தயக்கமுமின்றி இந்நாவலில் சித்தரிக்கப் பட்டுள்ளது. ஆனால் அந்த சித்தரிப்பில் தம் மூதாதையரை, அவர்கள் வாழ்க்கைப் பிடிப்பை, பழமையை, அவர் கேலி செய்யவில்லை. அவர்கள் அந்த வாழ்க்கை மதிப்புகளில் பெரும் நம்பிக்கை வைத்திருந்தார்கள், அதற்காக இன்றைய நம் மதிப்பிடுகளைக் கொண்டு அவர்களைக் கேலி செய்வதில் அர்த்தமில்லை, இதே போல இன்றைய நம் வாழ்க்கை மதிப்புகளும் நம்பிக்கைகளும் நம் எதிர் கால சந்ததியார்களின் கேலிக்கும் இரையாகலாம் என்பது போன்ற சிந்தனை பின்னிருந்திருக்கிறது. இது எப்படியோ போகட்டும். எப்படியாக இருந்தாலும், இந்த சித்தரிப்பு, தம் வாழ்க்கை முறையிலும், நம்பிக்கைகளிலும் ஒரு அதீத முரட்டுத் தனமான பிடிப்பு உள்ள முஸ்லீம் சமூகத்தைப் பற்றிய இந்த சித்தரிப்பு, அபாய கரமானது தான். ஸல்மான் ருஷ்டிக்கு என்ன நிகழ்ந்தது என்பதை நாம் நினைவு கொண்டால், தோப்பில் முகம்மது மிரானின் எழுத்து எவ்வளவு சாகஸம் நிறைந்தது, எத்தகைய பயங்கர விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் என்பதை நினைத்தால், இந்த நாவல், அவரது சமூகத்தினரே வெளியிடும் ஒரு பத்திரிகையில், அந்த முஸ்லீம் கமூகம் தமக்குள்ளே வினியோகித்துக் கொள்ளும் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது என்பது ஆச்சரியம் தருவது. திரும்பவும் இந்த க்ளாஸிக் தமிழ் நாவல் எழுதிய தோப்பில் முகம்மது மீரான், தமிழ் படித்தவர் இல்லை. மலையாளம் மாத்திரமே படித்தவர். அவர் எழுதுவது தமிழ் மொழியில் தான் ஆனால் அவர் படித்த அவருக்குத் தெரிந்த மலையாள எழுத்தில் தான் தமிழ் எழுதுகிறார். பின்னர் தமிழ் எழுத்தில் தெரிந்தவர் உதவியுடன் பிரதி செய்து கொள்கிறார். ஆச்சரியம் தான்.

நேர்மை, உண்மை, தனக்கு உண்மையாயிருத்தல், சுயத்தை கேள்விக்கு உட்படுத்தல் என்பன பற்றிப் பேசும்போது, சி. எம் முத்து என்னும் ஒரு இளம் எழுத்தாளர் பக்கம் நம் கவனம் செல்கிறது. சி.எம். முத்து எண்பதுகளில் தெரிய வந்தவர். அவரது இதுகாறும் வெளிவந்துள்ள நெஞ்சின் நடுவே, கறிச்சோறு என்னும் இரண்டு நாவல்களிலும் சாதி என்னும் உணர்வு வெறியாகக் கொண்டுள்ள அவர் சாதியினரைப் பற்றித் தான் எழுதுகிறார். அவர் சார்ந்திருக்கும் தேவர் என்னும் பின் தங்கிய சாதியினருக்குள்ளும் உள்ள எண்ணற்ற சாதி உட்பிரிவுகள் அவர்களுக்குள்ளும் உள்ள மேல் சாதி, கீழ்சாதி பிளவுகள் அவரவரின் மேல் ஜாதிப்பெருமைகளும் கர்வமும், அதனால் அடிக்கடி வெடிக்கும் சாதிச்சண்டைகள், அவர்கள் எல்லோரும் ஒட்டு மொத்தமாக தம்மிலும் கீழ் சாதியினரோடான தீண்டத் தகாதாராக நடத்தும் கொடுமை, இது அவ்வளவின் வேஷதாரித்தனம் போன்ற அத்தனையும் முத்துவின் நாவல்களில் எத்தகைய தயக்கமோ, பயமோ இன்றி வெளிப்படுத் தப்படுகின்றன. மீரான் தன் மதத்தினரின் அன்றைய சித்திரத்தை உண்மையுடன் சித்தரித்தாலும் அவை அவர்களது அன்றைய வாழ்வின் மதிப்பீடுகள் சார்ந்தது என்ற ஒரு தற்காப்பு உணர்வு தெரிவது போல, முத்து தன் சாதியினரின் மேல்சாதிப் பெருமையும் கர்வமும், தமக்குள் இருக்கும் ஆயிரம் பிரிவுகளை நியாயப் படுத்தும் வேஷதாரித்தனத்தையும் அந்த வாழ்க்கையின் மதிப்புகள் சார்ந்தது என்று தன் சாதியினரின் சாதி வெறியை நியாயப் படுத்துவதுமில்லை. சமாதானம் ஏதும் சொல்வதுமில்லை. கடுமையான கண்டனம் தான் தயக்கமின்றி அவர் நாவல்களில் வெளிப்படுகிறது. தன் சுய விமர்சனத்தில் முத்து தன் சாதியினரைப் பற்றிச் சொல்வது அத்தனையும் ஒவ்வொரு சாதி சமூகத்தைப் பற்றியதுமான உண்மை என்ற போதிலும், மேல் சாதி ஹிந்து சமூகத்தில் உள்ள ஒவ்வொரு சாதியினரும் பேணும் சுய சாதிப் பெருமையும் அதை மறைக்கும் அவர்களிடம் காணும் வேஷதாரித்தனமும், சாதி அடுக்கின் ஏணியின் ஒவ்வொரு படியும் ஏற ஏற மேல் படி ஒவ்வொன்றிலும் இருக்கும் சாதியினரின் வெறியில் ஏற்றத்தையே நாம் காண வேண்டியிருக்கும். பிராமணரைத் தவிர. அவர்கள் கண்ணாடிப் பெட்டியில் பாம்போடு அடை பட்டிருக்கும் எலியைப் போல எந்நேரமும் நடுங்கியே வாழ்கிறவர்கள். சுய ஜாதி விமர்சனம் என்ற அளவில் தன் சாதியினர் பேணும் சாதி வெறியை மறைக்காது குறைக்காது நியாயப் படுத்தாது வெளிப்படுத்தும் சி.எம். முத்து தமிழ் நாட்டில் தனித்துக் காணும் எழுத்தாளர். தமிழ் நாட்டில் எந்த சாதி எழுத்தாளரும் தன் சாதியினரின் சாதி வெறியைப் பற்றி மூச்சு விடமாட்டார். அவர் பேணும் சாதி சமத்துவத்தை நிலை நாட்ட, பொதுவாக சாதிப் பற்றை எதிர்க்க, அவருக்கு சுலபமாகக் கிடைப்பது பிராமண சமூகம் தான். அவர் தன் சாதி உணர்வை மீறிய சமத்துவத்தை, முற்போக்கு உணர்வுகளை அவ்வப்போது நிரூபித்துக் கொள்ள, பறை சாற்றிக் கொள்ள அவருக்கு சுலபமாக கைகொடுப்பது பிராமணரிடம் அவர் காணும் ஜாதி உணர்வை கடுமையாகச் சாடுவது தான்

(தொடரும்)

- See more at: http://solvanam.com/?p=28598#sthash.Zb6mFSQd.dpuf

Edited by கிருபன்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எண்பதுகளில் தமிழ் இலக்கியம் – 2
வெங்கட் சாமிநாதன்
 
 

Nanjil-300x224.jpg



 
 
நாஞ்சில் நாடன் தன் சிறுகதைகளிலும் நாவல்களிலும் அரசியல் வாதிகள், மற்றும் பிரமுகர்களின் வேஷதாரித்தனத்தை தனக்கே உரிய கேலியுடன் சித்தரிக்கிறார். வாக்குப் பொறுக்கிகள் என்னும் அவரது சிறுகதைத் தொகுப்பு ஒரு உதாரணம். தன் மிதவை என்னும் நாவலில் தான் பிறந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு சிற்றூரிலிருந்து வேலை தேடி பம்பாய் வந்த கதையைச் சொல்கிறார். அதில் தான் சந்திக்க நேர்ந்த அரசியல் பிரமுகர்களின் வெளி வேஷங்களையும், சாதி உணர்வுகளையும் பற்றி கொஞ்சம் விரிவாகவே எவ்வித தயக்கமின்றி கேலியுடன் தான் எழுதுகிறார்.

gopikrishnan-1.gif

கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களில் தான் (அதைக் கதை என்பதா, இல்லை சிறுகதை என்பதா, அல்லது குறிப்புகள் என்பதா, எந்த வகைப்படுத்தலுக்கும் இயைவதாக, ஆனால் அதே சமயம் முழுவதும் அந்த வகைப்படுத்தலுக்கு அடங்காததாக இருப்பவை), ஒவ்வாத உணர்வுகள் என்ற தொகுப்பில் அவற்றைப் பார்க்கலாம், அவருடைய நடையும், எழுத்து பெறும் வடிவமும், கிண்டலும், சுய எள்ளலும் தனி ரகமானவை. தன்னைச் சுற்றியிருக்கும் வாழ்வை, நடை முறையை, மதிப்புகளை, சமூகத்தை அவர் செய்யும் கிண்டல், அதில் அவரது சுய எள்ளலும் சேர்ந்தது, எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கும் ரகம். இன்றைய தமிழ் சமூகத்தின் மதிப்புகளின் அது எதையெல்லாம் தன் வெற்றியாகக் கருதி வியக்கிறதோ அந்த அலங்கோலங்கள், கீழ்த்தரங்கள், ஆபாசங்களையெல்லாம் மதிப்புகள், வாழ்க்கைத் தர உயர்வு, வெற்றி என்று சொல்லிப் பெருமைப் பட்டூக் கொள்வது, தமிழ் மொழியையே கொச்சைப்படுத்துவதும் ஆபாசமாக்குவதும் ஆகும். கோபிகிருஷ்ணன் தனக்கென தனி ஒரு நடையையும், எழுத்து வடிவையும், உருவாக்கிக்கொண்டுள்ளார், தன்னையே கிண்டல் செய்து கொள்ளும் பாணியில் சமூகத்தைக் கிண்டல் செய்வதற்கு. அவர் போல ஒரு நடை, எழுத்து பாணி, கிண்டல், அவரதேயான ஒரு பார்வை கொண்ட இன்னொரு எழுத்தாளர் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவரைப் பற்றிய எதுவும் அவரது தனித்துவத்தையே சொல்லும்.

 
ambai-198x300.jpg
 
இப்போது அம்பையின் பக்கம் திரும்பவேண்டும். கோபம் கொப்பளிக்கும் பெண். அவர் தன் கோபத்தை மறைப்பதில்லை. வேறு எதுவாகவும் மறைத்துக் காட்டுவதில்லை. அவர் தன் கோபத்தை, கோபமாகவே அறியப்பட விரும்புகிறவர். அதற்கு ஏதும் அலங்காரங்கள், மூடி மறைப்புகள் இல்லாது தன் கோபத்துக்கு காரணமானவை இரையாக வேண்டும். அச்சீற்றத்தை அனுபவிக்க வேண்டும். செய்வதறியாது நெளியவேண்டும். தன் சீற்றத்தை சீற்றமாகவே கொட்டித்தீர்க்கும் பெண்ணியவாதி. பெண்ணியம் அவருக்கு இன்றைய பெண்குலம் தரிக்கும் ஃபாஷன் அல்ல. கோஷிக்கும் கொள்கை அல்ல. அவர் தனது வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களைத் தாண்டி வந்தவர். முதலில் எல்லா பெண்களையும் போல், சம்பிரதாயத்தில் தோய்ந்த எல்லாரும் மெச்சும் மரபு சார்ந்த, செண்டிமெண்டுகளில் மனம் மகிழும் பெண்ணாகத் தொடங்கி, இடது சாரிப் பார்வைகளில் சில காலம் வாழ்ந்து, இப்போது பெண்ணியத்தில் வந்து சேர்ந்துள்ளார். வேஷம் தரித்து உலவும் எல்லா ரகங்களின் உண்மை சொரூபத்தையும் அவரால் பார்க்க முடிந்திருக்கிறது,  வெகு ஜன பத்திரிகை ஒன்று, அவரது சிறு கதை ஒன்றை வெகு சுவாதீனமாகத் தன் பக்கங்களில் பிரசுரித்துக்கொண்டது, அம்பையைப் புகழ்ந்து கூறும் சில வரிகள் அறிமுகத்துடன். அம்பையிடமிருந்து இதற்குப்பதிலாக வந்தது அவரது சீற்றம் தான் ” என்னிடமிருந்து முன் அனுமதி கேட்டுப் பெற்றிராமல் உங்கள் இஷ்டத்துக்கு என் கதையை உங்கள் பத்திரிகையில் பிரசுரித்துக்கொள்ள உங்களுக்கு என்ன தைரியம்?. .அப்படி நீங்கள் என்னைக் கேட்டிருந்தால் கூட என் கதையைப் பிரசுரிக்க உங்கள் பத்திரிகைக்கு சம்மதம் தந்திருக்க மாட்டேன். எனக்கு நீங்கள் உங்கள் ;பத்திரிகையில் என் எழுத்துக்களுக்குத் தந்திருக்கும் ;போலித்தனமான பாராட்டுரைக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. ஏனெனில், உங்கள் பத்திரிகையின் வெளிச்சொல்லப் பட்டவையோடோ, அல்லது சொல்லப்படாத உள்நோக்கங்களுடனே எனக்கு எவ்வித உடன்பாடும் கிடையாது.

அந்தப் பத்திரிகை தன் பாராட்டுக்கும் இத்தகைய எதிர்வினை வரும் என்று எதிர்பார்த்திருக்குமா என்ன?

அம்பை அதிகம் எழுதுபவரில்லை. கிட்டத்தட்ட பத்து வருடகால இடைவெளிக்குப் பிறகு “வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” என்று அவரது சிறுகதைகளின் தொகுப்பு வெளிவந்தது. அவரது எழுத்து சிறுகதை என்ற வடிவத்தில் தான் இருக்கும் என்பதில்லை. Fable, tale, அல்லது ஒரு சாதாரண கதையாடல் என்று பல வடிவங்களிலும் அவரது திறமையைக் காட்டும் தொகுப்பு இது. அத்தோடு அவரது பலதரப்பட்ட அனுபவங்களையும், நிகழ்விடங்களையும், அமெரிக்க நகரம் ஒன்றின் லத்தீன் அமெரிக்க குடியிருப்பிலிருந்து, தமிழ் நாட்டின் தென்கோடியில் இருக்கும் ஒரு கிராமம் வரை, காணலாம். இத்தொகுப்பின் கதைகளில் ஒரு கலவையாகத் தான்  நாம் சந்திக்கும் மனிதர்களும். இருப்பார்கள். இன்றைய தமிழில் அம்பை ஒருவர் தான் ஒரு உண்மையான பெண்ணிய எழுத்தாளர். அவருடைய சீற்றம் அவர் உதட்டிலிருந்து உதிர்வதில்லை. அவரது ரத்த நாளங்களில் ஓடும் ஒன்று. அவர் ஒருத்தரிடம்  தான் பெண்ணிய சீற்றம், அனுபவமாக வெளிப்பட்டு  கலையாக மாற்றம் பெற்றுள்ளது.

 
poomani.jpg
 
வெடித்துச் சிதறும் வெப்பத்தைத் தாண்டி ஒரு மென்மையும் சாந்தமுமான வெளிப்பாட்டுக்குத் திரும்பினால், பூமணி அமைதியாக, தன் தீர்மானமான மனதுடனும், தன் நம்பிக்கைகளில் உறுதிப் பாட்டுடனும் இதுகாறும் பேசப்படாத தாழ்த்தப்பட்ட மக்களின் உலகை நம் முன் வைப்பதைக் காணமுடிகிறது. சமூகத்தில் தீண்டத் தகாதவர்களாக இருந்தவர்கள், நிகழ் கால தமிழ் எழுத்துக்களில் கூட தீண்டத் தகாவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் இந்த எண்பதுகளில் நம் கவனத்திற்கு வருவது கொலைக் குற்றத்துக்கு ஆளாகி, சட்டத்திலிருந்து தப்பி, காட்டில் பதுங்கியிருக்கும் இருவரின் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தை வெகு நுணுக்கமாக சித்தரிக்கும் பூமணியின் நாவல் வெக்கை. வெகு இறுக்கமும் அடுத்து என்ன நடக்கும் என்ற திகிலும், வாழ்வதற்குப் போராடும் தனக்குத் தானே விதித்துக்கொண்ட துன்பங்களும் நிறைந்த, மிக திறமையுடன் எழுதப்பட்டுள்ள விவரிப்பு என்று சொல்ல வேண்டும். பூமணியின் எழுத்துத் திறனுக்கு ஒரு சான்று.

 
sundara.jpg
 
எண்பதுகளின் எழுத்துக்கள் பற்றிச் சொல்லும் இந்தக் கட்டுரையின் புனைவு இலக்கிய பகுதியின் கடைசியில் மூன்று புத்தகங்கள் பற்றி, முதலில் இரண்டு நாவல்கள், பின் தன் புனைவுகளின் பின்னணி பற்றிய சுயசரித்திரக் குறிப்புகள் பற்றிப் பேசவேண்டும். ஒன்று, சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள், பின் இரண்டாவதாக, சம்பத் தின் இடைவெளி என்ற இரு நாவல்கள். மூன்றாவதாக வருவது லா.ச. ராமாமிருதத்தின் பாற்கடல். மூன்றும் மற்றதிலிருந்து வெகுவாக மாறுபட்ட எழுத்துக்களைக் கொண்டவை. எழுத்தின் குணத்திலிருந்து, இந்த எழுத்துக்கள் ஒவ்வொன்றும் நம்மிடம் எழுப்பும் எதிர்வினை வரை, வேறுபட்டவை. இருப்பினும், ஒவ்வொன்றும், புனைவானாலும், அதன் ஆசிரியரின் ஒரு வகையான சுயசரிதம் என்றே சொல்லத் தோன்றும். சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள், ஒரு கற்பனையான எழுத்தாளனைப் பற்றியது. அந்த எழுத்தாளன் ஒரு வகையில் சுந்தர ராமசாமியையே பிரதிபலிப்பவன் என்று சொல்ல வேண்டும். இன்னொரு வகையில் சுந்தர ராமசாமி தான் என்னவாக இருக்க விரும்புகிறாரோ அந்த விருப்பத்தின் பிரதிபலிப்பு என்று சொல்ல வேண்டும். சுந்தர ராமசாமி இதை மறுப்பார் தான். தன்னைச் சுற்றியிருக்கும் எழுத்தாளர் உலகத்தைப் பற்றிய அவருடைய சிந்தனைகளைத் தான் மறைமுகமாக இதில் பிரதிபலித்துள்ளார் என்று சொல்ல வேண்டும். சமீப காலத்தில் வேறு எந்த புத்தகமும் இதற்கு எதிராகவும் சார்பாகவும் இவ்வளவு கொந்தளிக்கும் கருத்து மோதலை எதிர் கொண்டுள்ளதா என்பது சந்தேகம் தான். அதில் ஆச்சரியமும் இல்லை தான். சுந்தர ராமசாமி தன் கதை சொல்லும் உத்திகளிலும் எழுத்திலும் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய உருவையும் நடையையும் கைக்கொள்கிறார் என்பதற்கும் சிறந்த உதாரணம் என்று இந்த நாவலைச் சொல்லவேண்டும்.

சம்பத் தன்  இடைவெளி  நாவலில், தன்னை அறியாதே தன்னை நெருங்கி வந்து கொண்டிருந்த மரணத்தை எழுதியதாகவே தோன்றுகிறது. மரணத்தைப் பற்றிய தன் அறிவு பூர்மான சிந்தனைகளுக்கு ஒரு இலக்கிய வடிவம் சிருஷ்டித்துக்கொண்டிருக்கும் போது, பல வருடங்களாக தன் மனத்தில் அலையாடிக்கொண்டிருந்த மரண பய பிரமைகளுக்கும் ஒரு உருக்கொடுத்து விட்டதாகவே தோன்றுகிறது. அந்நாட்களில், மரணம் பற்றிய சிந்தனைகளும் டாஸ்டாவ்ய்ஸ்கியும் தான் அவர் மனத்தையும் சிந்தனைகளையும் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன. இதன் காரணமாகவே அவர் நண்பர்களிடையே கேலிக்கும் ஆளானார். அது அவருக்குத் தெரிந்தே இருந்தாலும் அவர் அது பற்றிக் கவலைப் பட்டவரில்லை. இடைவெளி நாவலே அந்நாட்களில் அவரது மரணத்தைப் பற்றிய பிரமைகளுக்கும், அறிவார்த்த அலசலுக்கும் ஆன இலக்கியப் பதிவு தான். இந்நாவலின் அச்சுப் பிரதிகளை சரிபார்த்து அனுப்பிய சில நாட்களுக்குள் இரத்தக் கொதிப்பில் மூளை நாளங்கள் வெடித்து மரணமடைந்தார். இடைவெளி தான் அவரது முதலும் கடைசியுமான எழுத்தும், நாவலும்.

லா.ச.ராமாம்ருதம் ஒரு தனி ரகமான எழுத்தாளர். அவருடைய தனக்குள்ளேயே சுருங்கி வாழும் பழம் சம்பிரதாயங்கள் கொண்ட ஹிந்து குடும்பம். மதப் பற்றும், கடவுள் பக்தியும், கொண்ட குடும்பம். அவர்கள் எப்போதும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் மன இறுக்கத்துடன் வாழ்பவர்கள். தங்களையும் காயப்படுத்திக்கோண்டு சுற்றி இருப்போரையும் காயப் படுத்தும் குணம் கொண்டவர்கள். கோபம், அன்பு, குடும்பப் பாசம் எல்லாவற்றிலும் அவர்கள் அறிந்தது எப்போதுமே முறுக்கேறிய தீவிரம் தான். அது கொடூரமாக, பயங்கரமாக வெடித்துச் சிதறும் தீவிரம். லா.ச.ராமம்ருதம் நம் காலத்திய நவீன எழுத்தாளர் தானா, அல்லது புராணங்களையும்  மாயைகளையும் சிருஷ்டிப்பவரா என்று திகைக்கத் தோன்றும். பாற்கடல் அவர் குடும்பத்தில் நிகழ்ந்த சம்பவங்களையும் பாத்திரங்களைப் பற்றிய குறிப்புகளையும் கொண்ட தொகுப்பு தான். அவரது குடும்பத்தின் மூன்று தலைமுறைகளுக்கு நீளும் உறவினரைப் பற்றியவை இந்த சம்பவங்களும் குறிப்புகளும். இதை அவரது சுய சரிதக் கோவை என்றும் சொல்லலாம். அல்லது சிறுகதைத் தொகுப்பு என்றும் சொல்லலாம். அவர் கதைகளாக வெளியிட்டுள்ள வற்றின் சம்பவங்களையும், பாத்திரங்களையும் மனதில்கொண்டு அவற்றின் மூலம் எங்கு என்று தேடிச்சென்றால், அந்த மூலங்களை பாற்கடலில் நாம் சந்திக்கலாம். இம்மனிதர்களும், அவர்கள் குணங்களும் சம்பவங்களும் தான் அவரது கதைகளின் சிருஷ்டிக்கு ஆதார உத்வேகிகளாக இருந்துள்ளனர். ஆக பாற்கடலை அவரது கதைகளுக்கான மூலமாகவும் துணை நூலாகவும் கொள்ளலாம்.
 

அடுத்து நாடகம் பற்றிச் சொல்லவேண்டும். இதில் நம் கவனத்தை வேண்டுபவை, எழுபதுகளில் பார்த்தவற்றின் தொடர்ச்சியைத் தான் எண்பதுகளிலும் பார்க்கிறோம். இவற்றை நாடகப் பிரதி என்று சொல்வதற்கு பதில் மேடைத் தயாரிப்புக் குறிப்புகள் என்று சொல்ல வேண்டும். எதுவும் அதன் முழுமையில் நாடகப் பிரதியாகக் காணவில்லை. ந. முத்துசாமியின் நற்றுணையப்பன் (அல்லது கடவுள்) சில அடிகள் முன்னெடுத்த ஒன்று. இருப்பினும் தன்னில் முழுமை கொண்ட ஒரு நாடக இலக்கியத்தை மேடையேறும் முன்னே ஒரு அனுபவத்தை வாசகனுக்குத் தரும் ஒன்றை  இனித்தான் நாம் காணவேண்டும்.
 

கவிதை என்று எடுத்துக்கொண்டால், நிறைய கவிதைகள் எழுதப்படுகின்றன. இந்த மலையென குவிந்துள்ளது நம்மைத் திகைத்து மூச்சு முட்ட வைக்கின்றது. ஆனால் இந்தக் குவியலில் பெரும் பகுதி கவிதை என்ற தகுதி பெறுபவை அல்ல. சொல்ல வந்ததிலும் சொல்லும் முறையிலும், இரண்டிலும் தான். காவி உடை ஒரு மனிதனை சன்னியாசியாகவோ ஞானியாகவோ ஆக்குமானால், துண்டிக்கப்பட்ட வாக்கியங்களும், சிறு சிறு சொற்கூட்ட வரி அடுக்குகளும் நிச்சயம் கவிதைகளாகும் தான். அறுபதுகளின் சிருஷ்டிப் பெருக்கு எழுபதுகளிலும் எண்பதுகளிலும் வடிந்து விட்டதாகவே தோன்றுகிறது.

விமர்சனம் பக்கம் திரும்பினால்,  இப்போது பெரும்பாலோரைப் பிடித்து ஆட்டி வரும், பவிஷும், ஃபாஷனுமான ஸ்ட்ரக்சுரலிஸ்ம்- போஸ்ட் ஸ்ட்ரக்சுரலிஸம் பற்றித் தான் பேசவேண்டும். இலக்கிய விமர்சனம், எண்பதுகளில் கல்வியாளர்களால் அபகரிக்கப்பட்டு தன் சுய வாழ்வை இழந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். சில வருஷங்களுக்கு முன் பல்கலைக் கழகங்களில் மொழி இயல் மாணவர்களாகவோ, லெக்சரர்களாகவோ இருந்தவர்கள் எல்லாம் இப்போது மொழீயியல் வல்லுனர்களாக, பேராசிரியர்களாக பதவி பெற்றுவிட்டவர்கள். அவர்கள் சிறிது கால சுய முன்னேற்றப் பயிற்சிக்குப் பிறகோ, மொழியியலில் புழங்கிய காரணத்தாலோ தம்மைத் தாமே ஸ்ட்ரக்சுரலிஸ்டுகளாக, போஸ்ட் ஸ்ட்ரக்சுரலிஸ்டுகளாக உயர்த்திக்கொண்டு விட்டார்கள். ஆக இப்போது இலக்கிய விமர்சன உலகு, இந்தமொழியியல் வல்லுனர்களின் இறுகிய கைப்பிடியில் அகப்பட்டுக்கொண்டுள்ளது. ஸ்ட்ரக்சுரலிஸ்ட்டுகள். போஸ்ட் ஸ்ட்ரக்சுரலிஸ்டுகள் எல்லாம் விமர்சனம் என்று சொல்லிக் கொட்டும் துறைசார்ந்த வார்த்தைகளின் புகைமூட்டத்தால், அது மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது. இது ஒரு வித இரைச்சல் பெருகி, சூழல்கெட்ட நிலை. (noise pollution) பயங்கர விளைவு தான். முன்னால் தம் இயல்பான அழகுணர்வு பிறப்பித்த விமர்சனம் கிட்டத்தட்ட கடாசி எறியப்பட்டு விட்டது என்றே சொல்ல வேண்டும். இந்த ஸ்ட்ரக்சுரலிஸ்ட் வகையினரின் சித்தாந்த பூர்வமான, பாடபுத்தகப் பாங்கில் எழுதப்பட்ட விளக்க நூல்களும், பழங்கால விருத்தி உரை போன்ற  கட்டுரைகளும்  கொஞ்சம் வெளிவந்துள்ளன. இந்த விளக்க உரைகள்  கிட்டத்தட்ட பத்து வருட காலம் தொடர்ந்து வந்தாலும், ஸ்ட்ரக்சுரலிஸ் மதத்திற்கு புதிதாக தம்மை ஞானஸ்னானம் செய்து கொண்டவர்களின் விளக்கங்களில் புதிதாக மதம் மாறியவர்களின் ஆவேசம் கொதித்துத் தளும்பிய போதிலும் அவற்றில் எதுவும் முன்னர் இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்பட்டவற்றின் இலக்கிய மதிப்பிற்கு ஏதும் ஸ்ட்ரக்சுரலிஸ்ட் சேர்க்கை என புதிய பரிமாணத்தையோ மதிப்பையோ தந்துவிடவுமில்லை, தம் ஸ்ட்ரக்சுரலிஸ்ட் அலசலால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட எந்த ஒரு இலக்கியப் படைப்பையும் அதன் பீடத்திலிருந்து இறக்கிவிடவுமில்லை. எந்த ஒரு புதிய படைப்பின் இலக்கியத் தகுதியையும்  தம் ஸ்ட்ரக்சுரலிஸ்ட் அணுகலால் தீர்மானித்து விடவுமில்லை. இவர்களுடைய ஸ்ட்ரக்சுரலிஸ்ட் கணினியிலிருந்து ஏற்கனவே ப்ரொக்ராம் செய்யப்பட்ட கட்டுடைப்புக்குப் பின் கணினி வெளித்தள்ளும்  அலசல் முடிவுகளின் அச்சுப் பிரதி, அந்தப் படைப்பின் அழகியல் மதிப்பிட்டைத் தந்ததுமில்லை. ஆக, இந்த ஸ்ட்ரக்சுரலிஸ்டுகள் போடும் இரைச்சலும் புகை மூட்டமும் எதற்காக, என்று தெரிவதில்லை.

எனவே இந்த வீணான அயற்சி தரும் வேலையை விட்டு, பொருள் தரும் அர்த்தம் தரும் பக்கம் திரும்பினால், நம் பார்வைக்குப் படுவன இரண்டு முக்கியமான முயற்சிகள். ஒன்று ஞானியின் மார்க்ஸிஸமும் தமிழ் இலக்கியமும், என்னும் இலக்கிய விமர்சனக் கட்டுரைத் தொகுப்பு. இரண்டாவது எஸ்.வி. ராஜதுரையின் ரஷ்ய புரட்சியின் இலக்கிய சாட்சியம். இரண்டு பேருமே ,பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் தாம் கொண்டிருந்த இறுகிய சித்தாந்த நிலைப்பாட்டிலிருந்து விலகி வெகு தூரம் வந்து விட்டனர் ஞானி முந்தைய இலக்கிய வாழ்வில் தாம் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சி தயாரித்துத் தந்திருந்த பழம் கம்யூனிஸ்ட் கோட்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக உதறிவிட்டு இப்போது அவ்வப்போது தானே தேவைக்கேற்ப தன் சொந்த தயாரிப்பிலான மார்க்ஸிஸ இலக்கியக் கோட்பாட்டைக் கொண்டுள்ளார். இதற்கு அவரைத்தவிர வேறு எங்கும் அங்கீகாரம் கிடையாது. இதில் அவரது தாராளமனமும் சிந்தையும் செயல் படுவது வாஸ்தவம் தான். அதில் தமிழ் இலக்கியத்தின் ஆரம்ப கால பக்தி யுக இலக்கியத்தையும், வேதகாலத்திலிருந்து தொடங்கி, இன்றைய ஜே. கிருஷ்ணமூர்த்திவரை அனைத்து இந்திய சிந்தனை வளம் முழுதையும் அவரது மார்க்ஸீய இலக்கிய பார்வை தன்னுள் அடக்கிக் கொள்கிறது. இதை நான் கேலியாகச் சொல்லவில்லை. நிச்சயமாக இல்லை. அவருடைய மார்க்சிஸமும் தமிழ் இலக்கியமும் என்ற இலக்கிய விமர்சனக் கட்டுரைத் தொகுப்பில்  மங்கலான தெளிவற்ற சிந்தனைப் போக்குகளும் உள் முரண்களும் நிறைந்திருக்கக் காணலாம். இச்சிந்தனைகளிலும் பார்வைகளிலும் தெரியும் ஞானியின் தாராளமன சிந்தனைப் போக்கை நான் மதிக்கிறேன். அது தாங்கிவரும் மார்க்ஸிஸ் லேபிளையும் மீறி.

ஆனால் எஸ் வி ராஜதுரை, கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்வீரர் என்று எனக்கு நினைப்பு. ஆனால் அவர் கட்சி அலுவலக கட்டிடத்துக்கு வெளியே தான், ஆனால் அதன் சுற்றுச் சுவருக்குள்ளேயே நடை பழகிக்கொண்டிருப்பார். அவ்வப் போது கட்சி அறிவிக்கும்  பார்வைக்கும் நிலைப்பாட்டிற்கும் தன் ஒப்புதலையும் பிரகடனம் செய்துகொண்டிருப்பார். கட்சியின் கோட்டைச் சுவர்கள் சரியத் தொடங்கின. மெதுவாகவும், பின்னர் வேகமாகவும், படிப் படியாகவும். அந்தச் சரிவின் ஒவ்வொரு படிநிலையிலும் ராஜதுரை கட்சியுடனான தன் மாறுபட்ட பார்வையை, தன் தளரும் சிந்தனையை இன்னும் கொஞ்சம் தளரவிட்டுக்கொண்டே இருப்பார். ஆனால் சோஷலிஸ் கோட்பாட்டில் தன்க்குள்ள தளரா நம்பிக்கையையும் வெளிப்படுத்துவார். எந்த சமயத்தில் அவர் கட்சிக் கோட்பாட்டைத் தான் சொல்கிறாரா இல்லை தன் விலகிய சிந்தனை நிலையைச் சொல்கிறாரா என்று சொல்வது கடினம். அவருக்கே அது கடினமாகத் தான் இருக்க வேண்டும். ஆக, இருவருக்குமே அவரவரது தமது தீவிர சோஷலிஸ் கொள்கை விஸ்வாசத்தை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் அவர்கள் விஸ்வசிப்பதாகச் சொல்லும்  சித்தாந்தமோ அவ்வப்போது மாறும், மாறி இறுகிய நிலை கொள்ளும். . ஆனால் பரிதாபம், அவர்களது போப் தன் பதவியைத் துறந்து விட்டார். வாடிகனோ காலியாகி சிதைந்தும் உருக்குலைந்தும் விட்டது. ஆனால் இப்போதும் ராஜதுரை மிகுந்த உறுதிப்பாட்டுடன் பிரகடனம் செய்வது, மார்க்ஸிஸம் என்றைக்கும் மாறாத அழியா நிரந்த உண்மை என்றும், அதன் போஷகர்கள் தான் அந்த சித்தாந்தத்திற்கு துரோகம் இழைத்தவர்கள் என்றும் பிரகடனம் செய்வார். அடுத்தடுத்து வெளிவரும் அவரது புத்தகங்கள் அவரது மாறிவரும் சித்தாந்த பார்வையை பதித்துச் செல்கின்றன். அவரது சமீபத்திய புத்தகமான, ரஷ்ய புரட்சி – இலக்கிய சாட்சியம், கம்யூனிஸ்ட் ரஷ்யாவில் அரசுக் கட்டுப்பாட்டை மீறி மாறுபட்ட சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள் நாடு கடத்தப்பட்டார்கள், அல்லது சிறைபிடிக்கப்பட்டு சைபீரியாவின் வதை முகாம்களில் மிகுந்த காலத்தில் வேலை செய்ய அனுப்பப்பட்டார்கள் அல்லது இந்த மண்ணிலிருந்தே நிரந்தரமாக நீக்கப் பட்டார்கள். அவர்களது வாழ்க்கையும் எழுத்துக்களூம் பற்றியது தான் ரஷ்ய புரட்சி – இலக்கிய சாட்சியம். எஸ் வி ராஜதுரை கூரியமதியும், நுட்பமான அலசல் பார்வையும், நிறைந்த படிப்பும்  கொண்டவர் தான் சந்தேகமில்லை. ஆனால் இவை அத்தனையும், மனித சரித்திரத்தின் கால வோட்டத்தில் மார்க்ஸிஸ சிந்தனையும் ஒரு கட்டத்தில் வரம்பு கட்டிய நிலை தான் என்பதை அவருக்கு உணர்த்தத் தவறி விட்டன. இரண்டாவதாக, அவரது ஆளுமையின் அறிவார்த்த பரிமாணத்தின் விசாலத்துக்கு ஈடு சொல்லும் குணத்ததல்ல அவரது ஆளுமையின் தேடிக் காண வேண்டிய அழகுணர்ச்சி. அதோடு அவரது அறிவார்த்த பரிமாணம் செலாவணி அற்றுவிட்ட  பத்தொன்பதாம் நூற்றாண்டு சித்தாந்தம் ஒன்றின் இறுகிய பிடிப்பில் கைகால்களை இழந்து முடமாகியது. ஞானி, எஸ் வி. ராஜதுரை இருவருமே, தமக்கு உண்மையானவர்கள். தம் சிந்தனை நேர்மை கொண்டவர்கள். தாம் நம்பிக்கை கொண்டவற்றுக்கும்  உண்மை யானவர்கள். இவர்கள் காலத்திய ஸ்ட்ரக்சுரலிஸ்டுகள் போன்றல்ல. ஸ்ட்ரக்சுரலிஸ்டுகளோ மாறாக, மற்றவர்களைப் பயமுறுத்த, வியந்து வாய் பிளக்கச் செய்ய சீருடையாக தம் ஸ்ட்ரக்சுரலிஸ் படிப்பை அணிந்து நடை பழகுகிறவர்கள்.

 
gomal-swami-223x300.jpg
 
கடைசியாக, இந்த கட்டுரையை முடிக்கும் முன், சுப மங்களா என்று இப்போது வெளிவந்துகொண்டிருக்கும் ஒரு இடைநிலை (இலக்கியச் சிறு பத்திரிகைக்கும் வெகுஜனப் பத்திரிகைக்கும் இடையில்) பத்திரிகையைக் குறிப்பாகச் சொல்ல வேண்டும் வாசகப் பெருக்கத்தில் அது இடை நிலையில் இருப்பது. அதை கோமல் ஸ்வாமிநாதன் தன் ஆசிரியப் பொறுப்பில் எடுத்துக் கொள்ளும் முன் Woman & Home போன்ற ஒரு பெண் வாசகர்களைக் கவரும் வகையில் வெளிவந்து கொண்டிருந்த ஒன்று. அப்படி இருந்த ஒன்றை தன் பொறுப்பில் அதை கலை, இலக்கியப் பத்திரிகையாக உருமாற்றி, எந்த இலக்கியச் சிறு பத்திரிகையும் கற்பனையில்ம் கூட நினைத்தும் பார்த்திராத வாசகப் பெருக்கத்தை கொண்ட வெற்றிகரமான மேடையாக ஆக்கித் தந்தது பெரிய நெடுந்தூர சாகஸத் தாவல் தான். ஆக, தன் முயற்சியில் ஒரு சீரிய இலக்கியமும் கலைகளும் சார்ந்த பத்திரிகை கூட பிராபல்யம் பெற்று வணிக ரீதியிலும்  வெற்றியடைவது சாத்தியம் என்றும் நிரூபித்தார் கோமல் ஸ்வாமிநாதன். தமிழில் எந்த சீரிய, கனமான இலக்கியப் பத்திரிகையும் எழுபதுக்கள் வரை அதிக பட்சம் ஒரு சில நூறுகளுக்கும் மேல் வாசகர்களைக் கொண்டதில்லை. ஆனால் கோமல் ஸ்வாமிநாதன்  அந்த வாசகர் தொகையை பத்தாயிரங்களுக்கு கொண்டு சென்றுள்ளார். கோமல் ஸ்வாமிநாதன் சுப மங்களாவின் ஆசிரியப் பொறுப்பை ஏற்று இப்படி ஒரு சாதனையைச் செய்து காட்டும் வரை யாரும் அவரிடம் இத்தகைய ஒரு இலக்கிய தாகமும், அத்தோடு வணிக சாமர்த்தியமும் இணைந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்ததில்லை. இந்தப் பெரிய புரட்சி கர மாற்றம் எண்பதுக்களின் தமிழ் இலக்கிய வரலாற்றில் கொட்டை எழுத்துக்களில் எழுதப் படவேண்டும்
 
 

- See more at: http://solvanam.com/?p=29131#sthash.tbQjFuqE.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.