Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராஜதந்திரப் போர் தமிழர்களுக்குப் புதிதல்லவே - வளவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராஜதந்திரப் போர் தமிழர்களுக்குப் புதிதல்லவே - வளவன்

04 அக்டோபர் 2013


உலக இராஜதந்திரக்களம் எப்போதும் தமிழர்களுக்கு சார்பானதாகவோ, அல்லது தமிழர்கள் மீதான அனுதாபம் மிக்கதாகவோ இருந்தது எனக் கொள்ள முடியாது. அது போலவே அது எல்லாவேளைகளிலும் தமிழர்களுக்கு எதிரானதாகவே இருந்தது என்றும் கருத முடியாது. தமிழர்கள் மீது கரிசனையும் அனுதாபமும் கொண்டதாக உலக அரசியல் - இராஜதந்திரக் களம் தோற்றமளித்த சந்தர்ப்பங்களை மீள்வாசிப்புச் செய்தல் இன்றைய களநிலைமையின் கனதியையும், காலம் கையளித்துள்ள கடமையையும் உணர உதவும். போருக்குப் பிந்திய இந்தக் காலகட்டத்தில், ஈழத் தமிழர்கள் அரசியலில் எதைச் சாதித்தனர், எதைச் சாதிக்கப் போகின்றனர், ஈழத்தமிழரின் இலக்கை அடையும் முயற்சிகள் சரியான திசையில் செல்கின்றனவா என்று ஒரு மதிப்பீட்டை செய்வதற்கு இது பொருத்தமானதாக இருக்கும்.

ஈழத்தமிழர்; தொடர்பான உலக அரசியல் பற்றிப் பேசுமிடமெங்கும் இந்தியாவைப்பற்றிப் பேசாமல் அப்பால் நகர முடியாது. இலங்கைத்தமிழர் தொடர்பான இந்திய நிலைப்பாடு தொடர்பில்; 1990 களுக்கு முன் இந்தியா எப்போதும் ஈழத்தமிழருக்கு ஆதரவாகச் செயல்பட்டது போலவும், ராஜீவ்காந்தியின் மரணத்தின் பின்பாகவே நிலைமை எதிராக மாற்றமடைந்தது போலவும் ஒரு உண்மையற்ற எண்ணக்கரு பல அரசியல் சிந்தனையாளர்களால் எடுத்தாளப்படுவது வேதனையானது. ஈழப்போராட்டத்தின் திசை வழியொன்று அடைபட்டது புலிகளின் இராஜீய அணுகுமுறையின் தோல்வியினால்தான் என தொடர்களை எழுதுகின்ற ஆய்வாளர்கள் கடந்தகாலத்தை வசதிக்காக மறந்துவிடுகின்றனர். ஆயுதப்போராட்டம் தோற்றம் பெறுவதற்கு முன்பாகவே இந்தியாவினால் பல சந்தர்ப்பங்களில் ஈழத்தமிழர் நலன் மட்டுமன்றி இந்தியத்தமிழரின் நலன்களும் புறக்கணிக்கப்பட்டது என்ற யதார்த்தத்தைப் புறக்கணிக்கும் அபத்தமான அரசியல் ஆய்வுகள் பொருத்தமான செல்திசையைக்காட்டவோ, கடந்த காலத்தின் நடுநிலையான மீள்வாசிப்பிற்கோ உதவப்போவதில்லை.

பிரித்தானியர்; வெளியேறியபோதே தமிழருக்கு எதிரான சிங்கள இனவாத அரசியலும் தொடங்கிவிட்டது. அப்போதிருந்தே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்திய வெளியுறவுக் கொள்கை இலங்கை அரசுக்கு ஆதரவாகவும், தமிழர் நலன்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதான தோற்றப்பாட்டினை மறுதலிக்க முடியாது. இலங்கையில் இந்தியத்தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டபோதும். அவர்கள் 'நாடற்ற மக்கள்' (Stateless people ) ஆனபோதும் இந்திய அரசு கண்டுகொள்ளவில்லை. 1964 இல் 'சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம்' மேற்கொள்ளப்பட்டபோதும் 150,000 தமிழ்த் தோட்டத் தொழிலாளர் நாடற்றவர்களாகவே இலங்கையில் விடப்பட்டனர். 1956 ஆம் ஆண்டு 'சிங்களம் அரசகரும மொழி' என அரசியல் சட்டம் திருத்தப்பட்ட போதும் 1972 ஆம் ஆண்டு ' பௌத்த மதம் அரச மதம்' ஆனபோதும் இந்தியா மௌனம் காத்தது. பாரம்பரியமாகத் தமிழர் வாழ்ந்துவரும் பிரதேசங்களில் 1972 முதல் இலங்கை அரசு பல சிங்களக் குடியேற்றங்களை நிறுவிய போதும் இந்தியா கண்டிக்கவில்லை. இவற்றின் உச்சமாக 1974இல் தமிழகத் தமிழரின் பாரம்பரியச் சொத்தான கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது.

2009 மே மாதத்தின் பின்னர் உலகின் மனச்சாட்சி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் திரும்பிய வேளைகளிலும் இந்திய இராஜதந்திர நகர்வுகள் இலங்கைக்கு ஆதரவானதாகவும், நெருக்கடியிலிருந்து தப்பிப் பிழைக்க உதவும் வகையிலுமே அமைந்தது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தபோது ஸ்பெயின், கனடா, மெக்சிகோ, இங்கிலாந்து, செக்குடியரசு, நெதர்லாந்து, டென்மார்க் போன்ற பல நாடுகள் நிபந்தனையின்றி ஆதரித்த போதும் இந்தியா முதற்கட்டத்தில் இலங்கையைப் பாதுகாக்கும் வகையில் செயற்பட்டமையையும், இரண்டாம் கட்டத்தில் தீர்மானத்தை மென்போக்குடையதாக மாற்ற அழுத்தம் கொடுத்து மாற்றத்தின் பின் ஆதரித்தமையையும் ராஜீவ்காந்தியின் மரணத்தோடும், சோனியாவின் பிடிவாதத்தோடும் மட்டும் தொடர்புபடுவதல்ல.

1983 ஆம் ஆண்டு நடந்த இனப்படுகொலையைக் கண்டித்து அர்ஜன்டினா, மொரிசியஸ் நாடுகள் ஐ.நா. பொதுச் சபையில் இலங்கைக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் கொண்டுவருவதாக அறிவித்த போது இந்தியா நடந்து கொண்ட விதத்தையும், 1986 - செப்டம்பர் மாதம் இங்கிலாந்தும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஐ.நா. பொதுச் சபையில் இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றிப் பேசிய விவாதத்தின் போது இந்தியா இலங்கை அரசுக்கு ஆதரவாகப் பேசியதையும், 1987 - மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் ஆர்;ஜென்டினா, கனடா, நோர்வே மற்றும் செனகல் நாடுகள் இலங்கைக்கு எதிராகக்; கொண்டுவந்த கண்டனத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் இந்தியா கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருந்ததையும் அறிந்தவர்கள் சிறுபிள்ளைத்தனமாக ராஜீவ்காந்தியின் மரணத்தோடும், சோனியாவின் பிடிவாதத்தோடும், பலிகளின் இராஜததந்திரக் கையாளலின் தவறுகளோடும் மட்டுமே இந்திய இராஜதந்திரத்தை மட்டுப்படுத்தி விடமாட்டார்கள்.

முதன்முதலாக உலகின் மனச்சாட்சி 2009 மே மாதத்தின் பின்னர்தான் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் திரும்பியிருப்பது போன்ற தோற்ற நிலையைத்தரும் அரசியல் கலந்துரையாடல்கள் இன்னொரு அபத்தம். அவ்வாறு கூறுவதும் எம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்குச் சமம். இத்தகைய கருத்துநிலைகள் சர்வதேசம் தொடர்பான மிகையான எதிர்பார்ப்புக்களையும், யதார்த்தத்தை விஞ்சிய அதீத நம்பிக்கைகளையும் விதைத்து விடும் அபாயம் மிக்கவை. இதன் அர்த்தம் முள்ளிவாய்க்காலில் உரிமைப் போருக்காக தம்மைக் கொடையாக்கி - தங்கள் உயிர்களை அர்ப்பணித்து சர்வதேசத்தின் மனச்சாட்சியை உலுக்கிய மக்களினதும் போராளிகளினதும் தியாகத்தை மலினப்படுத்துவதல்ல.

கடந்த 70 ஆண்டு கால உரிமைப் போரில், தமிழர்கள் மீது வன்முறைகள் ஏவப்பட்ட போதும், தமிழர் தாயகப் பகுதிகளிலும், அதற்கு வெளியேயும் தமிழர்கள் நிம்மதியாக வாழமுடியாமல் – தமிழர்களுக்கென்று பாதுகாப்பு அரண் ஒன்று இல்லாமல், இனக்கலவரங்களின் பெயரால் தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டு, அவர்கள் இன அழிப்புச் செய்யப்பட்ட போதும் பல தடவைகள் உலக மனச்சாட்சி தமிழர்களுக்கான அனுதாபத்தையும், கரிசனையையும் வெளிப்படுத்தியிருக்கின்றது. தவிர்க்கவியலாமலோ, இராஜீயச்சூழலின் புறநிலைகளாலோ சில சந்தர்ப்பங்களில் இந்தியாவின் கரிசனையும், அக்கறையும் கூட தமிழர்கள் சார்பானதாக இருந்திருக்கின்றது.

'1950 ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் இலங்கையில் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுவதைக் கண்டித்து தமிழகத்தின் சென்னை மாநகரத்தில் பேரணி ஒன்றை நடத்தினார்;. 1961-இல் தமிழர்கள் தாக்கப்பட்டபோது, 'இலங்கையில் தமிழினமும், தமிழ் மொழியும் பூண்டோடு அழிக்கப்படுவதில் இருந்து காப்பாற்ற - உண்மை நிலை அறிய ஒரு குழுவை அனுப்புமாறு ஐ.நா.சபைக்கு வேண்டுகோள் விடுத்துக் கடிதம் அனுப்பினார்.

இந்திராகாந்தியும் 1977-ல் இந்தியப் பாராளுமன்றத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட செய்து அதில் அமிர்தலிங்கத்தை பேச வைத்தவர். ஈழப்போராட்டத்திற்கான சர்வதேச அளவிலான ஆதரவுத்தளத்தின் அவசியத்தையும் வலியுறுத்தியவர். 1983-ம் ஆண்டு ஜுலை கலவரம் ஏற்பட்டு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, வெளிநாட்டு அமைச்சராக இருந்த பி.வி.நரசிம்மராவையும், ராஜாங்க அமைச்சர் ஜி.பார்த்தசாரதியையும் அனுப்பி வைத்தவர். 1983-ம் ஆண்டு சுதந்திரதின உரையில், 'இலங்கையில் திட்டமிட்ட இனப்படுகொலை நடக்கிறது' எனக்கண்டித்தவரும் கூட.

இலங்கை இனப்படுகொலையை ஐ.நா. மன்றத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் கோரிக்கையை ஏற்று, இந்திரா காந்தி அமெரிக்காவில் ஐந்து நாட்கள் தங்கி, ஐ.நா. கூட்டத்திற்கு வந்திருந்த நாடுகளின் பிரதமர்கள், அதிபர்கள், தூதர்கள் அனைவரையும் சந்தித்து இலங்கை பிரச்சினை தொடர்பாக விளக்கினார். ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பெரஸ் டி.கொய்லர் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்களுக்கு இலங்கை இனப்பிரச்சினை அப்போதுதான் புரிந்தது. 84 நாட்கள் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் 70 நாட்கள் பண்ருட்டிராமச்சந்திரன் கலந்துகொண்டு இலங்கை இனப் பிரச்னைகளை விளக்கினார்.

இவற்றையெல்லாம் கூறுவதன் நோக்கம் கடந்த காலத்தில் நடந்த பல நம்பிக்கை தரத்தக்க சம்பவங்கள் வெறும் சம்பவங்களாகவே நகர்ந்து போனதை ஞாபகம் கொள்வதற்கே.

இன்று மீண்டுமொரு நம்பிக்கை துளிர்த்திருக்கிறது. ஐ.நா மனிதஉரிமை ஆணையர் நவநீதம்பிள்ளையும் அமெரிக்காவும் பொறுப்புக்கூறுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்காது போனால், அனைத்துலக விசாரணைக்கு வலியுறுத்தப்படும் என்று எச்சரிக்கின்றனர். மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக, ஒத்துழைப்பு வழங்கும் ஐ.நா மனிதஉரிமை ஆணையம் மற்றும் நாடுகளை அமெரிக்கா பாராட்டுகிறது. மூன்று மாகாணங்களுக்கான தேர்தல் வெற்றிகரமாக நடந்துள்ளதற்கு சிறிலங்கா மக்களுக்கு அமெரிக்காவின் வாழ்த்துக்கள் பரிமாறப்படுகின்றது. மாகாணசபைகளுடன் ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்படுமாறும், அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் கடப்பாட்டை நிறைவேற்றுமாறும் சிறிலங்கா அரசாங்கத்தை அமெரிக்கா கேட்டுக் கொள்கிறது. கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் தொடர்பான கட்டுப்பாடுகள், மனிதஉரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், நீதித்துறைத் தலையீடுகள், குறித்து, மனிதஉரிமை ஆணையரின் கவலைகளை சர்வதேசமும் பிரதிபலிக்கிறது.

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாகுபாடுகள் குறித்தும், மனிதஉரிமை மற்றும் சட்டமீறல்களை புரிவோர் தண்டிக்கப்படுவதில் இருந்து தப்பித்தல், அமைதியாக ஒன்று கூடுவதற்கான கட்டுப்பாடுகள், பொறுப்புக்கூறுவதில் முன்னேற்றமின்மை, அனைத்துலக விசாரணையை வலியுறுத்தும் என்ற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. பொறுப்புக்கூறவும், மனிதஉரிமைகள் குறித்த கடப்பாட்டை நிறைவேற்றவும், சிறிலங்கா முன்வர வேண்டும் என்று கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் சத்தமாகவும் தெளிவாகவும் அழைப்பு விடுக்கின்றார்.

இவையெல்லாம் தமிழர்களின் விடிவுக்கான சமிக்கைகளாக, நம்பிக்கை ஒளிக்கீற்றுக்களாக கொண்டாடப்படுகின்றன. ஆனால் அன்று முதல் இன்றுவரை உலகின் அக்கறை என்பது மனிதஉரிமைகள், போர்க்குற்றங்கள், தேர்தல்கள் பற்றியனவே அன்றி தமிழர்களுக்கான தீர்வைப்பற்றிப் பேசுவன அல்ல. தமிழர்களுக்காக திறந்துள்ள சர்வதேசத்தின் இராஜதந்திர நுழைவாயில்கள் மனிதாபிமான நெருக்கடிகளை முறையிடுவதற்கும் 13ம் திருத்தத்திற்குள் நுழைவதற்குமான அளவிற்கே விசாலமானவை. அதைத்தாண்டி அரசியல் அபிலாஷைகள், அரசியலுரிமைக் கோரிக்கைகள் எமும்போது இந்தக்கதவுகள் இறுகமூடிக்கொண்டதே கடந்த கால வரலாறு.

எமது விடுதலைப்போராட்டத்தை அழிக்க வேண்டும் தனிநாடு என்ற பேச்சே இருக்கக் கூடாது என்பதே மேற்குலகினதும் இந்தியாவினதும் நிலைப்பாடு. இதற்கு ஈடாக 13 ஆவது திருத்தச்சட்டத்தை தமிழ் மக்களின் அரசியல் தீர்வாகத் திணித்துவிட வேண்டும் என்ற நிலைப்பாடே அவர்களிடம் இருந்தது. உண்மையான அதிகாரப் பகிர்வு நடக்க வேண்டுமென்றால், 13வது அரசியல் சாசனத் திருத்தத்தில் இருந்து தொடங்க முடியாது என்பது வெட்ட வெளிச்சம். இதைப் புரிந்திருந்த காரணத்தினால்தான், இத்திருத்தம் வந்த உடனேயே, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமைப் பொறுப்பில் இருந்த அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் மற்றும் சம்பந்தன் ஆகிய மூவரும், 28 அக்டோபர் 1987 தேதியிட்டு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதி இதன் குறைபாடுகளை நுணுக்கமாகவும் விரிவாகவும் எடுத்துக் காட்டி, அதை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்குமாறு ஜெயவர்த்தனா அரசை கேட்டுக் கொள்ளுமாறு ராஜீவ் காந்தியை வலியுறுத்தியிருந்தனர். அப்போதிருந்த 13 ஆவது திருத்தச்சட்டம் கழுதை என்றால் இன்று அது கட்டெறும்பு. ஆனால், இன்றோ, இத்திருத்தத்தை விட்டால் வேறு வழி ஏதும் இல்லை என்ற அளவிற்கு சென்றுள்ளோம் என்பது வேடிக்கை.

இந்த வலியுத்தல் மேற்குலகினதும் இந்தியாவினதும் விருப்பமே எமக்கான உலக அங்கீகாரத்தைத் தக்கவைக்கும் என்பதன் அடிப்படையிலான இராஜதந்திர நிலைப்பாடாகவும் இருக்கலாம். ஆனால் கடந்த காலத்தில் தமிழர்கள் நலிவுற்று அனுதாபத்திற்குரியவர்களாக இருந்தவேளைகளில் தாம் விரும்பிய தீர்வைத் திணிக்கும்போது உலக இராஜதந்திரக்களம் தமிழர்களுக்கு சார்பானதாகவும், தமிழர்கள் மீது அனுதாபம் மிக்கதாகவும் இருந்தது என்பதும் தமிழர்கள் பேரம் பேசும் வல்லமை கொண்டவர்களாக பலம் பெற்ற வேளைகளில் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் சார்ந்து, தமிழர்களுக்கு எதிரானதாகவே இருந்தது என்பது கடந்த பத்தாண்டுகளிலும் நிரூபிக்கப்பட்டது. இது புரிந்து கொள்ளப்படுதல் இராஜதந்திர யுத்தகளத்தில் நிற்கும் தளபதிகளுக்குப் பழைய களங்களுக்கு திரும்பாதிருக்கவும், புதிய பாதைகளைக் காட்டவும் உதவும் . இராஜதந்திரப் போர் தமிழர்களுக்குப் புதிதல்லவே.

- வளவன்
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97294/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.