Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா: அரசின் அபிவிருத்தியானது தமிழர்களின் தன்னாட்சி அவாவை சிறிதளவேனும் குறைக்கவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா: அரசின் அபிவிருத்தியானது தமிழர்களின் தன்னாட்சி அவாவை சிறிதளவேனும் குறைக்கவில்லை
[ திங்கட்கிழமை, 14 ஒக்ரோபர் 2013, 08:24 GMT ] [ நித்தியபாரதி ]


அபிவிருத்தி என்கின்ற போர்வையில் வடக்கில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் நிலவும் பிரிவினைவாத எண்ணத்தை நீக்குவதற்காக சிறிலங்கா அரசாங்கமானது தனது காலத்தை இழுத்தடிப்பதற்கான உத்தியைப் பயன்படுத்தி வருகிறது.

இவ்வாறு Mail & Guardian ஊடகத்தில் JASON BURKE எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

ஒரு பத்தாண்டு காலத்திற்குள் இரு சகோதரர்கள் தமது மூன்றாவது வீட்டை மிகவும் அழுக்கான வீதியிலிருந்து சில மீற்றர் தூரத்தில் கட்டுகின்றனர். இது தமக்கு நிலையான வீடாக இருக்கும் என இவர்கள் நம்புகின்றனர். பாதுகாப்புப் படையினர் தொடர்பான அச்சம் காரணமாக இவ்விரு சகோதரர்களும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் சிறிலங்காவின் வடக்கில் உள்ள கிளிநொச்சியில் இவ்விருவரின் கதை என்பது பொதுவானதாகக் காணப்படுகிறது. முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிழல் ஆட்சியின் நிர்வாகத் தலைநகரமாக கிளிநொச்சி விளங்கியது.

சிறிலங்காவின் வடக்கில் தற்போது ஆண்கள் கட்டடப் பணிகளில் ஈடுபடுகின்றனர். சிறிலங்காப் படையினரால் புலிகள் தோற்கடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியுள்ள நிலையில், தற்போது கிளிநொச்சியில் கடைகள், புதிய வங்கிகள், ATM மையங்கள், வீதி விளக்குகள், இணையசேவை நிலையங்கள், தொடரூந்து நிலையம் போன்றன புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சியிலிருந்து தெற்காக 322 கிலோமீற்றர் தூரத்திலுள்ள கொழும்பிற்கு நாளொன்றுக்கு மூன்று தடவைகள் தொடரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் மிகப் பெரிய விளையாட்டு நிலையம் ஒன்றும் உள்ளது.

இவ்விரு சகோதரர்களின் மற்றைய சகோதரர் தமிழ்ப் புலிகளின் உறுப்பினராக இருந்த வேளையில் இறுதிக் கட்ட யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்டார். "இதற்கு முன்னர் இங்கு பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடிந்தது. போர் முடிவடைவதற்கு முன்னர் நாங்கள் மிகவும் சுதந்திரமாகப் பேசமுடிந்தது. இங்கு சில அபிவிருத்திகள் நடைபெறுகின்றன. ஆனால் இது உண்மையான சுதந்திரத்தைத் தரவில்லை. இது உண்மையான சமாதானத்தையும் ஏற்படுத்தவில்லை" என சகோதரர்களில் ஒருவர் கூறினார்.

இவ்வாறான உணர்வலைகள் தமிழ் மக்கள் அதிகம் வாழும் சிறிலங்காவின் வடக்கில் பரவலாகப் பேசப்படுகின்றன. சிறிலங்காவில் நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் தலைவர்களுக்கான உச்சிமாநாட்டில் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறூன் மற்றும் ஏனைய நாட்டுத் தலைவர்கள் பங்குபெறுவதெனத் தீர்மானித்து அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் இந்நிலையில், சிறிலங்காவில் உண்மையான சமாதானம் என்பது எவ்வாறு கொண்டுவரப்பட முடியும் என்கின்ற வினா முன்வைக்கப்படுகிறது.

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காவின் இராணுவப் படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கான போரை முன்னெடுத்த காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கு எதிராக பல்வேறு போர் மீறல்களை மேற்கொண்டிருந்தன. இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு சிறிலங்கா பொறுப்பளிக்க வேண்டும் என இதன் மீது பல்வேறு அழுத்தங்கள் இடப்பட்டுள்ள நிலையில், சிறிலங்காவில் பொதுநலவாய அமைப்பின் உச்சிமாநாட்டை நடாத்துவது தொடர்பில் விவாதங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

சிறிலங்கா அரசாங்கமானது சிறுபான்மைத் தமிழ் மக்களுடன் இதயசுத்தியுடன் கூடிய அரசியல் மீளிணக்கப்பாட்டை அடைந்து கொள்வதற்கு மிகக் குறைவான முயற்சிகளையே மேற்கொண்டு வருவதாக விமர்சிக்கப்படுகின்றது. கொழும்பிற்கு மிகவும் பலமான ஒரு செய்தியை வழங்குவதானது தனிப்பட்ட ரீதியில் சிறந்தது என கமறூன் நம்புவதாக பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் கொழும்பில் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டைத் தான் புறக்கணிப்பதாக கனேடியப் பிரதமர் தொடர்ந்தும் கூறிவருகிறார்.

"பொதுநலவாய அமைப்பின் உச்சிமாநாடானது மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை மேலும் பலப்படுத்தும். '50 நாடுகள் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளன. நாங்கள் தீண்டத்தகாதவர்கள் அல்லர்' என அனைத்துலக சமூகத்திடமும் உள்நாட்டு மக்களிடமும் சிறிலங்கா அரசாங்கம் கூறிக்கொள்ள முடியும்" என கொழும்பைச் சேர்ந்த ஆய்வாளரும் செயற்பாட்டாளருமான பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், செப்ரெம்பர் இறுதிக்குள் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடாத்த வேண்டும் என மகிந்த ராஜபக்ச மீது அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுத்ததாகவும், இதன் பெறுபேறாக 25 ஆண்டுகளின் பின்னர் முதன்முதலாக வடக்கு மாகாண சபையைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மேற்கொள்ளப்பட்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.

போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் சிறிலங்காவில் பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டாலும் கூட, இந்த அபிவிருத்தியானது தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்கான கோரிக்கையை சிறிதளவேனும் குறைக்கவில்லை என்பதை வடக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் கூறுகின்றன. சிறிலங்கா இராணுவத்தினர் வடக்கில் வாழும் மக்களின் நடவடிக்கைகளில் தலையீடு செய்வதாகவும், வடக்கில் அதிகளவில் இராணுவம் பிரசன்னமாகியிருப்பதாகவும், அரச வளங்களை சிறிலங்கா இராணுவத்தினர் தவறாகப் பயன்படுத்துவதாகவும் பொதுநலவாய அமைப்பின் அவதானிகள் தெரிவித்த போதிலும்கூட, தமிழ்ப் புலிகளுக்கு ஆதரவாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வடக்கு மாகாண சபைக்கான 38 ஆசனங்களில் 30 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது.

சிறிலங்காவின் வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய எட்டு மாகாணங்களில் ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. வடக்கு மாகாணத்திடம் அரசியல் அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கு சிறிலங்கா அதிபர் தனது எதிர்ப்பைக் காண்பித்துள்ளார். "சிறிலங்காவின் வடக்கு மாகாணத்திற்கு அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்து வழங்குவதற்குப் பதிலாக இங்கு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்மூலம் இனப் பிரச்சினையை முதன்மைப்படுத்துவதை நிறுத்துமாறு சிறிலங்கா அதிபர் தமிழ் மக்களிடமிருந்து உறுதிபெற விரும்புகிறார்" என ஆளும் கூட்டணியின் யாழ் மாவட்ட அரசியல்வாதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் மேற்கொள்ளப்படும் பொருளாதார அபிவிருத்திகள் தொடர்பாக சில சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அதாவது வடக்கில் பல புதிய வாகனங்கள் இரண்டு தடவைகள் பதிவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் கால்நடைகள் மற்றும் பல ஏக்கர் விவசாய நிலங்கள் போன்றனவும் 2011ல் இரண்டு தடவைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்தில் இந்த விபரங்கள் வெளியாகியுள்ளன. கிளிநொச்சியில் தமது வீட்டைக் கட்டிக்கொண்டிருந்த இரண்டு சகோதரர்கள் உட்பட பலர் கட்டுமானங்களில் ஈடுபடுகின்றனர்.

போரின் போது பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இடம்பெயர்ந்த போதிலும், தற்போது இவர்களின் வாழ்வியல் சிறிது முன்னேறியுள்ளது. மீள்குடியேறிய மக்களில் 63 சதவீதத்தினர் மலசலகூடங்களைக் கொண்டிருப்பதாகவும், 25 பேரில் ஒருவர் தமக்கான நீரைப் பெற்றுக் கொள்வதற்காக 500 மீற்றருக்கு மேல் நடந்து செல்லவேண்டியிருப்பதாகவும் போரின் போது மூடப்பட்ட 160 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் தற்போது மீளவும் இயங்க ஆரம்பித்துள்ளதாகவும் அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையகம் விடுத்த புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சில தரவுகள் நம்பமுடியாதவையாக உள்ளன. அதாவது சில இடங்களில் மக்கள் போதியளவு உணவைப் பெறமுடியாது தவிப்பதாக உள்ளுர்வாசிகள் கூறுகின்றனர். முன்னரைவிடத் தற்போது நிலமை மிகவும் மோசமாக உள்ளதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.

"தாம் கடனாக வாங்கிய பணத்தை திருப்பித் தரமுடியாத நிலையில் பலர் உள்ளனர்" என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொருளியல் ஆய்வாளரான அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார். 18 மாதங்களின் முன்னர் சண்முகம் சிவலிங்கம் என்பவர் முச்சக்கரவண்டி ஒன்றை வாங்குவதற்காக கடனாக 465,000 சிறிலங்கா ரூபாக்களைப் பெற்றிருந்தார். இவர் தற்போது கிளிநொச்சி தொடரூந்து நிலையத்திற்கருகில் தனது முச்சக்கர வண்டியை நிறுத்தியுள்ளார். "தான் நாளொன்றுக்கு 700 ரூபாக்களை மட்டுமே வருவாயாகப் பெறமுடிவதாகவும் ஆனால் மாதாந்தம் 20,000 ரூபாக்களை கடனை அடைப்பதற்காகச் செலுத்தவேண்டும் எனவும் தான் அடிக்கடி பட்டினியாக இருப்பதாகவும்" முச்சக்கர வண்டியின் உரிமையாளரான சண்முகம் சிவலிங்கம் தெரிவித்தார்.

அபிவிருத்தி என்கின்ற போர்வையில் வடக்கில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் நிலவும் பிரிவினைவாத எண்ணத்தை நீக்குவதற்காக சிறிலங்கா அரசாங்கமானது தனது காலத்தை இழுத்தடிப்பதற்கான உத்தியைப் பயன்படுத்தி வருகிறது. இதனை வடக்கில் வாழும் சிலர் ஏற்றுக்கொண்டாலும் கூட, போரின் இறுதிக்கட்டத்தில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சில சம்பவங்கள் தொடர்பில் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

அதாவது புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு என்பது முக்கிய விடயமாகும். ஆயிரக்கணக்கான புலிகள் தமது ஆயுதங்களையும் தூக்கிவீசிவிட்டு மக்களுடன் இணைந்து எவ்வாறு பாதுகாப்பான இடத்திற்கு விரைந்தனர் என்பதை சாட்சியங்கள் பல விபரிக்கின்றன.

"ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டு ஆறு மாதங்களின் முன்னர் போர் முடிவடைந்திருக்க வேண்டும். இறுதிக்கட்ட யுத்தத்தில் புரியப்பட்ட சாதனைகள் என எதனையும் கூறமுடியாது. ஆனால் இது ஒரு வரலாற்றுச் சம்பவமாகப் பதிவு செய்யப்பட்டு பரவலாக அறியப்படும் விடயமாகக் காணப்படுகிறது. போரின் போது இறந்த அனைவருக்கும் இது ஒரு வேதனைக்குரிய விடயமாகும்" என யாழ்ப்பாணத்தில் செயற்படும் முதன்மையான தமிழ் உரிமை ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபைத் தேர்தல் பரப்புரையில் 'மாவீரர்கள்' தொடர்பாகவும் தமிழ்ப்புலிகள் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் மீதும் புகழ்பாடப்பட்டு உரைநிகழ்த்தப்பட்டன. இதில் பெறப்பட்ட பெறுபேறுகள் முன்னைய காலத்தை நினைவூட்டுவதாக உள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய அனந்தி சசிதரன், மே 2009ல் படையினரின் சரணடைந்த பின்னர் காணாமற்போன தனது கணவர் தொடர்பாகத் தகவலை அறிந்துகொள்வதற்காக அரசியலில் நுழைந்துள்ளார். "நான் மட்டுமல்ல, பலர் தமது காணாமற்போன கணவன்மாரைத் தேடுகின்றனர். பிறிதொரு ஆயுதப் போராட்டம் எமக்கு வேண்டாம். போரால் நாம் பல்வேறு துன்பங்களைச் சந்தித்தோம். ஆனால் தமிழ்ப் புலிகளின் காலத்தில் நாம் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தோம். ஆகவே அரசியல் போராட்டம் தொடரவேண்டும்" என அனந்தி சசிதரன் குறிப்பிட்டார்.

தமது பதவிகள் மிகவும் பலவீனமானவை என்பதை தமிழ் அரசியல்வாதிகள் ஏற்றுக்கொண்டனர். புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட மாகாண சபைக்கு மிகக்குறைந்தளவு அதிகாரமே உள்ளது. தமிழ் மக்களின் கலாசார அடையாளம் மதிக்கப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் சிறிதளவு விருப்பத்தைக் காண்பித்துள்ளது. சிறிலங்காவின் வடக்கில் மிகக்குறைந்தளவு படையினரே நிறுத்தப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாணத்தில் உள்ள கட்டளைத் தளபதி ஒருவர் தெரிவித்த போதிலும், இங்கு இராணுவத்தினரின் பிரசன்னம் மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது.

சிறிலங்கா இராணுவத்தினர் நாட்டில் நிலைத்திருந்த 'பயங்கரவாதத்தை' தோற்கடித்தனர் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக போர் வெற்றி நினைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறிலங்காவின் வடக்கில் மிகவும் அதிகமான நிலங்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

கிளிநொச்சியை விட்டு புலிகள் பின்வாங்கிய போது அவர்களால் வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கியானது இன்று சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் இடமாகக் காணப்படுகிறது. அத்துடன் போர் வெற்றிச் சின்னங்கள் விற்கப்படும் கடை, தபாலட்டைகள், பழச்சாறு போன்றன விற்கப்படும் கடை என்பன கிளிநொச்சியில் உள்ளன. இதனைத் திறந்து வைப்பதற்கு சிறிலங்கா அதிபரின் மகனும் இளைஞர் விவகார அமைச்சருமான நாமல் ராஜபக்ச கிளிநொச்சி வந்திருந்தார்.

இவ்வாறான சுற்றுலா மையங்களில் சிங்கள சுற்றுலாப் பயணிகள் ஒளிப்படங்களை எடுக்கின்றனர். இவர்கள் சிறிலங்கா இராணுவத்தின் துணையுடன் இவற்றைப் பார்வையிடுகின்றனர். இதேவேளையில் பெரும்பாலான தமிழ் மக்கள் இங்கு அச்சுறுத்தப்படுகின்றனர்.

"பயங்கரவாதம் என்பது மோசமானது. இது எந்தநேரத்திலும் மீண்டும் தோன்றக்கூடியது" என கண்டியைச் சேர்ந்த அரசாங்கப் பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச போரை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவந்தார் என்பது தொடர்பாக தான் பெருமையடைவதாகவும் ஆனால் போரின் இறுதிக்கட்டத்தில் என்ன நடந்தது என்பதை விபரிக்கத் தான் விரும்பவில்லை எனவும் கிளிநொச்சியில் தொடரூந்துக்காகக் காத்துக்கொண்டிருந்த, தமிழர் ஒருவரைத் திருமணம் புரிந்த, வங்கியொன்றில் முகாமையளராகப் பணிபுரியும் சிங்களவரான நிரோசா இந்திரவாசன் கூறினார்.

"சுற்றுலாப் பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள இடங்கள் எனக்கு கோபத்தை ஏற்படுத்துகின்றன. இவை எமது அழகிய நாட்டை அழித்துவிட்டன. இவை எமது சமூகத்தை நிர்மூலமாக்கிவிட்டன. எமது நிலத்திலிருந்த வெற்றிச் சின்னங்களை சுற்றுலா மையங்கள் அழித்துவிட்டன. இப்பொழுது சுற்றுலாப் பயணிகள் எமது அழிவுகளை அனுபவிக்க வருகிறார்கள். போரால் வாழ்வியல் மாற்றமடைந்த மக்களாக நாம் வாழ்கிறோம். இதனை ஆற்றுவதற்கு எதுவும் இடம்பெறவில்லை" என மாகாணசபை உறுப்பினரான சசிதரன் குறிப்பிட்டார்.


http://www.puthinappalakai.com/view.php?20131014109250

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.