Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காவி இருளுக்கு இரையாகலாமா தமிழருவி? - கொளத்தூர் மணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காவி இருளுக்கு இரையாகலாமா தமிழருவி? - கொளத்தூர் மணி

 
1264710_533790470033194_1692434102_o.jpg
 
இந்தியாவில் அடுத்து அமையப்போகும் ஆட்சி – அது எந்த ஆட்சியாக இருந்தாலும் மக்கள்பிரச்சினைகளை எல்லாம்தீர்த்துவிடப் போகிறது; ஊழலற்ற, நேர்மையான ஆட்சி ஒன்றுமலரப்போகிறது என்கிற மாயைகளில் மூழ்கிட நாம் தயாராகஇல்லை. தேர்தல் வழியாகமட்டுமே சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மாற்றி அமைத்துவிட முடியும் என்றநம்பிக்கையும் நமக்கு இல்லை.
 
ஆனால், "இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடியே வர வேண்டும், அதற்குத் தகுதியானவர்அவர் ஒருவரே" என்ற பிம்பம் திட்டமிட்ட வகையில் கட்டி எழுப்பப்படுகிறது. கார்ப்பரேட்ஊடகங்களும், சமூக வலைதளங்களும் இந்தக் கருத்தைப் பரப்புவதில் உற்சாகம் காட்டிநிற்கின்றன. பன்னாட்டு நிறுவனங்களும் பெருமுதலாளிகளும் இதன் பின்னணியில்இருப்பது கண்கூடு. இந்தத் ‘திருப்பணியில்’ நாம் மிகவும் மதிக்கும் தோழர் தமிழருவிமணியனும், தன்னை இணைத்துக் கொள்ள முன்வந்திருப்பது நமக்கு வியப்பையும்வேதனையையும் தருகிறது. சுயநல, சந்தர்ப்பவாத, பதவிவெறி அரசியலில் இருந்து தன்னைவிடுவித்துக்கொண்ட அவர், மோடியை பிரதமராக்குவதற்குக் கூட்டணி வியூகங்களைவகுத்துத்தந்து கொண்டிருக்கிறார். தமிழகத்தில் ‘புதிய அரசியல் பூத்துக் குலுங்குவதற்கும்’பாஜகவுடனான அணியே அவசியம் என்றும் வலியுறுத்தி இருக்கிறார். யாரோடு யார்கூட்டணி சேர வேண்டும் என்பது பற்றி நமக்குக் கவலை இல்லை. ஆனால், நரேந்திரமோடியையும் பாஜகவையும் முன்னிறுத்துவதால் உருவாகும் ஆபத்துகளைப் பற்றியே நாம்கவலைப்படுகிறோம்.
 
முதலில், நரேந்திரமோடி பாஜக தேர்வுசெய்த பிரதமர் வேட்பாளர் என்பதைவிட, அதன் தாய்அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.சின் செல்லப்பிள்ளையாகக் களமிறக்கப்பட்டவர் என்பதேஉண்மை. காந்தியார் முன்வைத்த ‘தேசியத்தை’ ‘போலி தேசியம்’ என்று ஒதுக்கித் தள்ளியஆர்எஸ்எஸ், மனிதர்களைப் பிளவுபடுத்தும் மதவாதத்தை – உண்மையான தேசியமாகவரையறுக்கிறது. பெரும்பான்மை மக்களின் சமூகம், மொழி, இனம் மற்றும் வர்க்கஅடையாளங்களைப் புறந்தள்ளிவிட்டு, மதப் பெரும்பான்மைவாத அரசியலைமுன்னிறுத்தித் தேர்தல் ஆதாயம் அடைய முனைகின்றனர். மதச்சார்பற்ற, ஜனநாயகதேசியத்துக்கு மாற்று – மதவாதத்தை முன்னிறுத்தும் வகுப்புவாத தேசியம் என்போருக்குஆதரவாக தோழர் தமிழருவி மணியன் வாதாடத் துணிவது மிக மிக ஆபத்தானது.
 
தமிழகத்தில் 15 விழுக்காடு வாக்காளர்கள் மோடியைப் பிரதமராக்கத்துடித்துக்கொண்டிருப்பதாக மணியன் வரையும் சித்திரம் அடிப்படை ஆதாரமற்றது. தமிழகத்தேர்தல் களத்தில், கடைசியாக நடந்த 2011 தேர்தலில்கூட பாஜகவின் வாக்குவங்கி 2.2விழுக்காட்டைத் தாண்டவில்லை. அது 15 விழுக்காடாகத் திடீரென ஊதி்ப் பெருத்து நிற்கிறதுஎன்பதற்கு எந்தச் சான்றுமில்லை.
 
“ராமன் கோவில் விவகாரத்தை வளர்த்தெடுக்கக்கூடாது, பொது சிவில் சட்டத்தைவலியுறுத்தக்கூடாது, காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்துசெய்யக்கூடாது’ என்று பாஜகவிடம் நிபந்தனை விதிக்கலாம் என்றும் மணியன்ஆலோசனை வழங்கியிருக்கிறார்.
 
திருச்சியில் நடந்த இளந்தாமரை மாநாட்டில் பேசிய மோடியே இதற்குப் பதில்கூறி விட்டார்.காஷ்மீருக்குத் தனிச் சலுகை வழங்கியதை மட்டுமல்ல, இந்தியாவில் மொழிவழிமாநிலங்கள் பிரிக்கப்பட்டதையேகூட அவர் எதிர்த்திருக்கிறார். இதுவே ஆர்.எஸ்.எஸ்.சின்சித்தாந்தத் தந்தை கோல்வாக்கரின் கருத்து!
 
இந்த மூன்று விவகாரங்களையும் கையிலெடுக்க மாட்டோம் என்று உறுதிமொழி தந்துதான்1998-99-ம் ஆண்டுகளில் வாஜ்பாய் கூட்டணியை அமைத்தார். அவற்றில் அதிமுகவும்,திமுகவும் பங்கேற்றன. அந்தக் காலகட்டத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்ததோழர் தமிழருவி மணியன், மதவாத பாஜகவின் உறுதிமொழிகளை ஒருபோதும்நம்பமுடியாது; இந்தியாவின் ஆட்சி அதிகாரம் காவிப் பயங்கரவாதிகளின் கைகளுக்குப்போய்விடக்கூடாது என்று தமிழகம் முழுவதும் சுற்றிச்சுழன்று அனல் பறக்கப் பேசியதுநினைவுக்கு வருகிறது. கொடுத்த உறுதிமொழிகளையே நம்புவதற்கு உகந்ததல்ல என்றுபுறந்தள்ளியவர், இப்போது புதிதாக உறுதிமொழியைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதும்,அதை நம்பி மோடியை பிரதமர் பதவியில் அமர்த்த வேண்டும் என்பதும் நாட்டை எங்கேகொண்டுபோய்ச் சேர்க்கும்?
 
அயோத்தியில் பூஜை மட்டுமே செய்வோம் என்று உச்ச நீதிமன்றத்தில் உறுதிகூறிஅனுமதிபெற்ற பாஜகதான், பாபர் மசூதியை இடித்துத் தள்ளியது. மசூதி இடிக்கப்பட்டவுடன்அதை வன்மையாகக் கண்டித்த அத்வானிதான், பிறகு அதை நியாயப்படுத்தினார். குஜராத்இனப் படுகொலையின்போது, மோடி பதவி விலக வேண்டும்; ராஜ தர்மத்தைப் பின்பற்றமோடி தவறிவிட்டார்; எந்த முகத்தோடு நான் வெளிநாடு செல்வேன் என்று கண்ணீர் வடித்தவாஜ்பாய்தான், பிறகு மோடி பதவியில் தொடர்வதை அனுமதித்தார். இவர்கள் தருகிறஉறுதிமொழிகளை நம்பி ஏற்க முடியுமா என்பதை தோழர் தமிழருவி மணியன்தான் விளக்கவேண்டும்.
 
தமிழ்நாட்டில் ஆட்சி செய்த திமுக, அதிமுக மீது நமக்கும் கடுமையான விமர்சனங்கள்உண்டு. கொள்கைவழி அரசியல் லட்சியங்களை வளர்த்தெடுக்க முனையாமல்,சந்தர்ப்பவாத – தனிமனித – ஊழல் நிறைந்த ஆட்சியை நடத்தியவர்கள் என்பதும்உண்மைதான். ஆனாலும், மற்ற மாநிலங்களோடு ஒப்பீட்டு அளவில் ஆராய்ந்தால், சமூகநீதி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழகம் முன்னிலையில்நிற்கிறது என்பதே உண்மை. தமிழ் மண்ணில் பெரியார் உள்ளிட்ட பல முன்னோடிகள்தான்இதற்கான அடித்தளத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார்கள். அதன் காரணமாகவேமக்களிடம் பகையுணர்ச்சியைக் கட்டி எழுப்பிடத் துடிக்கும் மதவாத சக்திகள் தமிழகத்தில்ஆழமாகக் கால்பதிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில்,தமிழர்களின் உரிமைக்காகப் போராடிவரும் வைகோ போன்ற தலைவர்களையும் –ஒருபோதும் மதவாத அடையாளத்தைத் தனது கட்சிக்குள் நுழைத்திடாத விஜயகாந்த்போன்றவர்களையும், ஆர்.எஸ்.எஸ்.ஸோடு அணிசேர்க்க அழைத்து தமிழகத்தில்காவிக்கூட்டத்தின் ஆதரவுத் தளத்தை அதிகரிக்கச் செய்யும் ஆபத்துக்கு தோழர் மணியன்துணைபோகலாமா என்பதே நம் கேள்வி.
 
பல்வேறு மொழி, இனம், மதம், பண்பாடுகளைக் கொண்ட ஒரு நாட்டின் பிரதமராகஇருப்பவர், இந்தத் தனித்துவமான பன்முகத்தன்மையை மதிப்பவராகவும், ஏற்பவராகவும்இருப்பதே அப்பதவிக்குத் தேவையான முதல் தகுதி. வளர்ச்சியைக் கொண்டுவரும்சாதனையாளர் என்பதெல்லாம் இரண்டாம்பட்சமே! ஊடகங்கள் வியந்தோதுவதைப்போலஅப்படியொன்றும் குஜராத்தில் மோடி வளர்ச்சியை கொண்டுவந்துவிடவும் இல்லை.உருவான காலத்தில் இருந்தே, தொழில் வளர்ச்சியிலும் விவசாயத்திலும் முன்னணியில்இருந்துவரும் மாநிலம்தான் குஜராத். மோடியின் காலத்திலும் அது தொடர்கிறதுஎன்பதுதானே தவிர, புதிதாக எதையும் அவர் சாதித்துவிடவில்லை என்பதைபுள்ளிவிவரங்களும் ஆய்வுகளும் ஆதாரபூர்வமாக மெய்ப்பித்துள்ளன. (எகனாமிக் அன்டுபொலிடிக்கல் வீக்லி, செப். 28, 2013).
 
மனிதவள மேம்பாடு, எழுத்தறிவு, ஆண்-பெண் பிறப்பு விகிதம், ஊட்டச்சத்துக் குறைபாடு,தீண்டாமை ஒழிப்பு, பழங்குடியினர் முன்னேற்றம், வேலைவாய்ப்பு போன்ற பல்வேறுதுறைகளில் பின்தங்கிய மாநிலங்களின் பட்டியலிலேயே குஜராத் இடம் பெற்றிருக்கிறது.மோடிக்குப் பெருமை சேர்க்கவே போலி என்கவுன்டர்கள் நடத்தப்பட்டன. 97இஸ்லாமியர்கள் உயிரோடு எரிக்கப்பட்ட நரோடா பாட்டியா கொலைவழக்கில் – 28ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றிருக்கும் மாயா கொட்னானிக்கு, அந்தகோரத்தாண்டவத்தை அரங்கேற்றியபிறகு அமைச்சர் பதவிதந்து அழகு பார்த்தவர்தான்மோடி. அதனால்தான் உலகப்புகழ் பெற்ற பொருளாதார அறிஞர் அமார்த்தியா சென், "மோடிபிரதமராவதை நான் ஆதரிக்க மாட்டேன். 2002-ல், திட்டமிட்ட இனப்படுகொலைகட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர் அதைத் தடுக்க ஒன்றும் செய்யவில்லை. அவர்ஆட்சியில், பாதுகாப்பான சூழ்நிலையில் வாழ்வதாக சிறுபான்மை மக்கள் உணரமாட்டார்கள்" என்றார். இதை அறியாதவர் அல்ல, தமிழருவி!
 
காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் என்றால், கர்நாடகம் உள்ளிட்ட பாஜக ஆட்சி செய்தமாநிலங்களிலும் அதே கதைதான். பெருந்தொழில் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்குநிலங்கள் விற்பனை, 2 லட்சம் கோடி காண்ட்லா துறைமுக ஊழல், எரிவாயுத் திட்டத்தைஅன்னிய நிறுவனத்துக்கு இலவசமாக வழங்கியதில் ரூ.20,000 கோடி இழப்பு என்று ஊழல்குற்றச்சாட்டுகள் மோடியின் ஆட்சியின் மீது அணிவகுத்து நிற்கின்றன. குஜராத் அரசின்செயலால் பொதுத்துறைக்கு 2013-ம் ஆண்டு ரூ.4052 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதைதலைமைக் கணக்காயரின் அறிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது.
 
பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்குப் போட்டி போட்டுக்கொண்டு கதவைத்திறந்துவிடத் துடிப்பதில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.91 ஆயிரம் கோடி வரியை ரத்து செய்ய ப.சிதம்பரம்முன்மொழிந்தால், ‘தேசநலன்’ கருதி அதை ஆதரிக்கிறார் பாஜகவின் வெங்கையநாயுடு.
 
ஈழத் தமிழர் பிரச்சினையிலும் காங்கிரஸில் இருந்து பாஜக வேறுபட்டு நிற்கவில்லை.வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலும் சிங்களப் படைகளின் துப்பாக்கிக் குண்டுகளைத் தமிழகமீனவர்கள் எதிர்கொண்டார்கள். இலங்கை ராணுவத்தின் சக்திவாய்ந்த போர்க்கப்பல் –வாஜ்பாய் காலத்தில் வழங்கப்பட்டதுதான். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிறகு,சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் சென்ற நாடாளுமன்றக் குழு – ராஜபக்சே அரசு மறுவாழ்வுப்பணிகளைச் சிறப்பாகச் செய்வதாகப் பாராட்டுப் பத்திரம்தான் வாசித்தது. மத்திய பிரதேசபாஜக ஆட்சியோ, ராஜபக்சேவை புத்தர் கோயிலுக்கு அழைத்து, சிவப்புக் கம்பளம் விரித்தது.அதற்காகவே, சாஞ்சி வரை, தொண்டர்களை அழைத்துச் சென்று போராடினார் வைகோ.தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு, போர்க்குற்றத்துக்கான பன்னாட்டு விசாரணைபோன்ற கோரிக்கைகளிலும் இரு கட்சிகளின் நிலையும் ஒன்றேதான்!
 
தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு, தமிழகத்தில்இருந்து ஆதரவுக்குரல் கொடுத்த தலைவர்களையும் இயக்கங்களையும் ‘தேசவிரோதிகள்’,தண்டிக்கப்பட வேண்டிய `பிரிவினைவாதிகள்’ என்று பேசிய, எழுதிய சுப்பிரமணியன்சாமி,துக்ளக் சோ உள்ளிட்ட பல `உயர்குலத் தலைவர்கள்’, ஏடுகள் மோடியை பிரதமராக்கவேண்டும் என்று உறுதியுடன் களமிறங்கி நிற்கின்றன.
 
இவைகளைக் கருத்தில்கொண்டு, மக்களைக் கூறுபோடும் வெறுப்பு அரசியலைதேசியமாக்க முயற்சிக்கும் சனாதன அமைப்புகளிடம் இருந்து ஒதுங்கி நிற்க வேண்டியஎச்சரிக்கையை, தமிழ்ச் சமூகத்தின் முன் முன்வைப்பதே தோழர் தமிழருவி மணியன்ஏற்றுக்கொண்ட அரசியலுக்கு அறம் செய்வதாகும்.
 
தேர்தலுக்கு முன் அமைக்கப்படும் கூட்டணி, முடிவுகள் வந்தவுடன் மாறி அதிகாரத்தைப்பங்கிட்டுக் கொள்ளும் சந்தர்ப்பவாதமாகிவிட்ட நிலையில், தேர்தலுக்கு முன்மொழியப்படும்கூட்டணிகளில் என்ன பொருள் இருக்க முடியும்?
 
காந்திய இயக்கம் நடத்தும் தோழர் தமிழருவி மணியன், காந்தியின் உயிரைப் பலி கேட்டஒரு தத்துவத்தை நியாயப்படுத்தும் அரசியலுக்குத் துணைபோவது காந்தியத்துக்குஇழைக்கும் அநீதி அல்லவா?
 
எண்ணெய்ச் சட்டி சுடுவது உண்மைதான். அதற்காக நெருப்பில் விழுந்துவிட முடியுமா?
 
- கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.