Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட அனைத்துலக வஞ்சக அரசியல் துணையானது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட அனைத்துலக வஞ்சக அரசியல் துணையானது – 01
[ செவ்வாய்க்கிழமை, 15 ஒக்ரோபர் 2013, 08:34 GMT ] [ புதினப் பணிமனை ]


மேற்குலகு, அதற்கு போட்டியாகும் எழும் சீனா, இந்திய மாக்கடல் வல்லரசாகும் கனவோடு உலக அரசியலில் எத்தனிக்கும் இந்தியா என இம்மூன்று சக்திகளின் கரங்கள் இத்தோல்வியின் பின்னால் தொழிற்பட்டன - குணா.கவியழகன்*.


01.


ஈழப்போராட்டத்தில் ஆயுதப்போரின் தோல்வி வெறும் உள்நாட்டுப் பரிமாணம் கொண்டதல்ல. இருதரப்பு மோதல்களின் முடிவாய் நிகழ்ந்த வெற்றி தோல்விகளும் அல்ல. இத்தோல்வியின் பின்னணியில் அனைத்துலக அரசியல் பரிமாணம் உண்டு.

பொதுப்புத்தியில் இதற்கு அனைத்துலக காரணிகள் உண்டு எனத் தெரிந்தாலும் அதன் பரிமாணம் என்ன? எதற்காக நிகழ்ந்தது? எப்படி நிகழ்ந்தது? என்ன காரணத்திற்காக நிகழ்ந்தது? என்பது வெகுசன அறிவுக்கு எட்டவில்லை. ஆனால் எட்டவேண்டியது அவசியம். போர் தோற்றாலும் தமிழர்கள் போராட்டத்தில் தோற்றுப்போகாமல் இருப்பதற்கும் பயணிப்பதற்கும் இந்த அறிவு இன்றும் இன்றியமையாததாகவே உள்ளது.

இத்தோல்வியின் பின்னாலுள்ள அனைத்துலக அரசியல் பரிமாணமும்கூட ஒற்றைத் தன்மையாய் இருக்கவில்லை. அனைத்துலக அரசியலில் எழுந்த உலக சக்திகளின் ஆதிக்கப் போட்டியில் இலங்கை அரசியல் முக்கியம் பெற்றது. இதனால் இப்போட்டிச் சக்திகளின் வெவ்வேறு நோக்கு நிலையிலான அணுகுமுறைகள் இப்போராட்டத்தை அழிவை நோக்கி இழுத்துவந்தன. போட்டிச் சக்திகளின் அரசியல் எதிரும் புதிருமாய் இருந்தபோதும் அவையாவற்றினதும் நலன்கள் ஈழப்போராட்ட விடுதலைக்கு எதிரானதாகவே இருந்தமை, உலக அரசியலிலேயே விந்தையான அனுபவமாக இருக்கின்றது.

மேற்குலகு, அதற்கு போட்டியாகும் எழும் சீனா, இந்திய மாக்கடல் வல்லரசாகும் கனவோடு உலக அரசியலில் எத்தனிக்கும் இந்தியா என இம்மூன்று சக்திகளின் கரங்கள் இத்தோல்வியின் பின்னால் தொழிற்பட்டன. தமக்குள் முரண்படும் இச்சக்திகள், எப்படி ஈழப்போரின் தோல்வியில் மட்டும் ஒருசேர பங்களிக்க முடிந்தது என்பது மிகவும் புதிரான அரசியல் பாடத்தை தந்திருக்கின்றது.

இந்த விசித்திரமான பாடத்தை நுணுக்கமாக கண்டறிந்துகொள்வதற்கான முயற்சிகளை தமிழ் அறிவுலகம் எடுத்தே தீரவேண்டும். இந்த அரசியல் பின்னணியின் நூதனமான முடிச்சுக்கள் அவிழ்க்கப்பட்டு, அலசப்பட்டு பொதுப்புத்திக்கு எட்டச் செய்யப்பட வேண்டும். அப்போதே எதிர்காலத்தில் அரசியல் விழிப்புணர்வுள்ள மக்களால் தூண்டப்படும் அரசியல் போராட்டமாக ஈழத்தமிழ் அரசியல் மாறும்.

நோர்வேயின் சமாதான முயற்சி ‘ஜெயசிக்குறு’ என்ற வன்னிப் போரின் அரச படையின் தோல்வியோடுதான் நிகழ்ந்தது. சந்திரிகாவின் காலத்தில் யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டு வன்னியில் அரச படைகள் முன்னேறிக்கொண்டிருந்தபோது, புலிகளின் இறுதி அழிவு மிகமிக அண்மித்துவிட்டதாகவே நம்பப்பட்டது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலுங்கூட சந்திரிகாவின் யுத்தத்திற்குக் கிடைத்த இராணுவ, அரசியல் உதவிகள் ஈழப்போராட்டத்தைத் தோற்கடிப்பதற்காகவே கிடைத்தன.

அமெரிக்கா உட்பட சில நாடுகளின் புலிகள் மீதான தடை, பயங்கரவாதப் பட்டியலுக்குள் புலிகள் இழுத்துவிடப்பட்டமை, சிறிலங்கா இராணுவத்திற்கான இயலுமைகள் அனைத்துலக ஆதரவோடு வளர்க்கப்பட்டமை, அனைத்துலக களத்தில் புலிகளின் செயற்பாடுகளை முடக்குவதற்கான எத்தனிப்புகள் என எல்லாமே அதற்காகத்தான் நிகழ்ந்தன.

ஆயினும் இவற்றையெல்லாம் மீறி புலிகள் வன்னிப்போரில் மிகவும் மகத்தான வெற்றிகளை எட்டியதுடன் இப்போர் வெல்லப்பட முடியாத போர் என்ற புரிதலை உலகிற்கு ஏற்படுத்தினர். இக்கட்டத்தில்தான் புலிகளின் மேலதிக படைமுன்னேற்றத்தைத் தடுக்கும் பொருட்டும் யுத்தத்தை முடக்குவதற்கான வேறு மார்க்கத்தை திறக்கும் பொருட்டும் அனைத்துலகத் தலையீடாக நோர்வேயின் சமாதான முயற்சி உள்நுழைந்தது.

யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்கும் அந்த முயற்சி முதிர முடியாமல் போனபோதே 2001 இல் பின்லாடனின் அமெரிக்கா மீதான தாக்குதலோடு உலகில் புதிய அரசியல் புறநிலை உருவாகிற்று. மேற்குலகு காத்திருந்த “ஆசியாவை மறுசீராக்கம் செய்தல்” என்ற புதிய செயற்றிட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான அரசியல்வழி பிறந்தது.

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பதாகையின்கீழ் இவ்வரசியல் முன்னெடுக்கப்படுவதாயிற்று. இந்த வலிமைமிகு அரசியல் முன்னெடுப்பில் உலக அரசியல் நலனுக்குப் பாதகமாக இருந்த ஈழவிடுதலைப் போர் தப்பிப்பிழைப்பது இலகுவானதாக இருக்கவில்லை.

சீனாவை முடக்கும் கொள்கைக்கும் இந்தியாவுடனான பங்காளி அரசியலுக்கும் ஈழப்போராட்டம் மேற்குலகுக்குத் தேவையானதாக இருக்கவில்லை. மேலும் இதுவரை மேற்குலகு வளர்த்தெடுத்த கெரில்லா எதிர்ப்புப் போருபாயத்தை மேவி, புலிகள் கெரில்லாப்போர் உபாயங்களை புதிய வடிவங்களில் வளர்த்தெடுத்து வந்தமை உலகிற்கு ஒரு கெட்ட முன்னுதாரணமாகவேறு இருந்தது.

இவற்றையும்விட சீனாவை முடக்குவதற்காக சீனாவிற்கு நட்புக்கரம் நீட்டக்கூடியதும் உலகின் உற்பத்திக்கான எரிசக்தியின் ஊற்றுக்கண்ணாகவும் இருக்கும் வளைகுடாவை தம் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான யுத்தம் மேற்குலகால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த யுத்தம் முழு அளவிலானதாக இல்லாமல் வரையறுக்கப்பட்ட யுத்தத்தின் மூலம் வெற்றி பெறுவதாக அமைக்கவேண்டியது மிகமிக அவசியமானது. எனவே யுத்தத்திற்கான முன்னாயத்தங்களும் சுற்றிவளைப்புகளுமே வரையறுக்கப்பட்ட யுத்தத்திற்குள் வெற்றியைத் தர வல்லன. அத்தகைய ஒரு யுத்தத்திற்கு ஏவுதளமாக அமையக்கூடிய ‘இருதய நிலம்’ என அழைக்கப்படும் ஆப்கானிஸ்தான் ஒரு முஸ்லீம் நாடாக இருப்பதாலும் அதனைச் சூழ முஸ்லீம் நாடுகள் நிலத்தொடர்புடன் இருப்பதாலும் இதற்குப் பிரதியீடாக ஒரு மாற்று நிலத்தையும் தயார்செய்துகொள்வது அவசியமானது. அதற்கான ஒரேயொரு தெரிவாக பொருந்தி அமையக்கூடியது இலங்கைத் தீவே என மேற்குலகு கண்டறிந்தது.

இலங்கைத் தீவில் உறுதியான அரசியலும் தமக்குச் சார்பான அரசாங்கமும் இக்காலத்தில் இருக்கவேண்டியது மேற்குலகினது கட்டாய தேவை. இலங்கையில் கொந்தளிப்பான, உறுதியற்ற அரசியல் மிக ஆபத்தானது. உள்நாட்டு யுத்தம் எப்போதுமே இதற்குத் தடையானது. எனவே இலங்கையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் அதற்கான முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டு புலிகள் யுத்தத்தில் வெற்றிமுகம் கண்டு வருகையில் வேறு மார்க்கத்தை யுத்தத்தின் முடிவுக்கு மேற்குலகு தேடவேண்டியதாயிற்று.

சீனாவை முடக்குவதற்கான மேற்குலகின் முயற்சி, இந்தியாவின் நலன்களையும் பிரதியீடு செய்யக்கூடியது. எனவே இந்தப் பொதுச் செயற்றிட்டத்தில் இவையிரண்டிற்கும் ஒருவகையான இசைவுண்டு. சீனா இந்த அரசியலுக்கு எதிர்நிலையில் நிற்கின்றது.

அனைத்துலக சமூகத்தின் இலங்கைக்கான சமாதான முயற்சியின் பின்னணி அரசியல் இப்படித்தான் இருந்தது. இதன் இலட்சியம் ஆயுதப்போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி, ஐ.தே.க. அரசாங்கத்தை பதவியில் அமர்த்துதல் என அமைந்தது. இதில் முற்றுப்புள்ளி என்பதில் ஈழவிடுதலை அமையவில்லை. ஆனால் யுத்தத்தை முடிக்கும்பொருட்டு ஒரு பொது உடன்பாட்டுக்குள் புலிகளை இழுத்து வருவதில் இச்செயற்றிட்டம் முனைப்புடன் இயங்கியது.

இதைச் சுற்றி அமைந்த மூன்று சக்திகளுக்கு இடையிலான முரணும் இசைவுக்கும் ஏற்ப, இச்சக்திகள் கைக்கொண்ட அணுகுமுறைகள் போரின் அழிவுவரை தமிழர்களை இட்டுவந்தது. இவ்வணுகுமுறைகளின் காரண காரியங்களைத் தெளிவாக தமிழ் பொதுப்புத்திக்கு எட்டச் செய்வது இன்றைய நெருக்கடியில் தமிழர்களின் எதிர்காலத்துக்கு மிகமிக அவசியம்.

தொடரும்..

*இக்கட்டுரையாளர் ஊடகவியலாளர் [கொழும்பிலிருந்து வெளிவந்த North east monthly ஆங்கில இதழில் எழுதியவர்], விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர், முள்ளிவாய்க்கால் இறுதிநாட்கள்வரை வன்னியில் வாழ்ந்தவர், தற்போது புலம்பெயர்ந்து வாழ்கிறார்.


http://www.puthinappalakai.com/view.php?20131015109256

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.