Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துயிலுமில்ல தீர்மானங்களும் அரசியல் விவேகமும் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - -வளவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துயிலுமில்ல தீர்மானங்களும் அரசியல் விவேகமும் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - -வளவன்
23 அக்டோபர் 2013


மாவீரர் துயிலும் இல்லங்களை மீளமைப்பது  தொடர்பாக இரு பிரதேச சபைகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பல உடனடி விளைவுகளையும், அதிர்வுகளையும் தோற்றுவித்துள்ளது. வட மாகாண சபைத் தேர்தலின் பின்னர் இராணுவத்தினரைச் சீண்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன எனவும், இதன் மூலம் நாட்டைப் பிளவுபடுத்தும் நிலை ஏற்பட்டால், இராணுவம் அதனைத் தடுக்க, பதிலடி கொடுக்க, எப்போதுமே தயாராக இருக்க வேண்டும் எனவும் இராணுவத் தளபதி கருத்துத் தெரிவித்துள்ளதற்கு ஏறத்தாள சமகாலத்தில் வடக்கு கிழக்கில் படையினரால் இடித்தழிக்கப்பட்டுள்ள மாவீரர் துயிலுமில்லங்களை மீளக்கட்டியெழுப்ப வேண்டுமென்ற தீர்மானங்கள் சாவகச்சேரி மற்றும் கரைச்சி பிரதேசசபைகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தீர்மானங்களை நிறைவேற்றிய பிரதேச சபைகள் மீதும், உறுப்பினர்கள் மீதும் புலனாய்வு பிரிவு விசாரணைகள்; தொடங்கியுள்ள நிலையில் அதற்கு ஆதரவாக கூட்டமைப்பின் ஏனைய உள்ளுராட்சி மன்றங்களிலும் வடக்கு மாகாண சபையிலும் இத்தீர்மானத்தை கொண்வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக சில தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டத்தலைமை இத்தீர்மானத்தை ஆதரிக்கவில்லை என்ற வகையிலான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இத்தீர்மானத்தின் காலப்பொருத்தம், அரசியல் விவேகம், விளைவுகள் தொடர்பாகக் கலந்துரையாடுவதே இப்பத்தியின் நோக்கம்.

போரில் மரணமடைந்தவர்களைப் பூசிக்கும் தமிழர்களின் முறைக்கு அமைய மாவீரர்கள் தெய்வத்துக்குச் சமமானவர்களாக வணங்கப்பட்டனர். இழந்துவிட்ட இலட்சியத்திற்காக தங்களது பிள்ளைகளைப் பறிகொடுத்து நிற்கும் தமிழர்களைப் பொறுத்தவரையில் இந்தத் துயிலுமில்லங்கள் தங்களது அன்புக்குரியவர்களை விதைத்த ஒரு இடமாக மாத்திரம் இருக்கவில்லை. இன்றைய யதார்த்தத்தில் தாங்கள் அடைய நினைந்த இலக்கினை அடையமுடியாமல் மரணித்தவர்களை உறவுகளுக்கும், அடுத்துவரும் தலைமுறைக்கும் நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும், சின்னங்களாகவும் இவை விளங்கியிருக்கும்.

தமிழர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாஷைகளுக்காக களமாடி வித்தானவர்களின் நினைவாலயங்கள் புனிதமாகப் பேணப்பட்டு வந்தமையும், தமிழ் உறவுகள் உணர்வு பூர்வமாக அந்த நினைவாலயங்களுக்குச் சென்று தமது வணக்கங்களை செலுத்தி வந்ததும், இவை அழித்தொழிக்கப்பட்ட நிலையிலான இன்றைய வெறுமையும் தமிழர்களிடம் நிரந்தர மனவடுவைத் தோற்றுவித்திருப்பது நிராகரிக்கப்பட முடியாத யதார்த்தம். இவ்வாறான ஒரு கூட்டுமனவடுவின் வெளிப்பாடாகவும், இழப்புத்துயரின் பொதுமைப்படுத்தப்பட்ட ஒரு குறியீட்டிற்கான அவசியத்தின் அடிப்படையிலும் துயிலுமில்லங்களை மீளக்கட்டியெழுப்ப வேண்டுமென்ற தீர்மானங்கள் தோற்றம் பெறுதல் பார்க்கப்படலாம்.

எவ்வாறெனினும் 'நாங்கள் போரின் பின்னரான கால கட்டத்தில் இருக்கின்றோம்.  போரினால் மக்கள் சகலதையும் இழந்த நிலையில் இருப்பதை நாங்கள் கவனத்தில் எடுக்கின்றோம். எம்மக்கள் இப்போது தான் எழுந்து நிற்கப் பழகியிருக்கிறார்கள். அவர்களை ஜனநாயக வழியில் எடுத்துச் செல்ல எம்மாலான சகலதையும் செய்யவேண்டும். அவர்களை மீண்டும் கலவரத்திற்குள் தள்ளக் கூடாது. நாம் வன்முறைக்காலத்தைத் தாண்டி வந்துள்ளோம்' என்று வடமாகாண முதலமைச்சர் பேசிவருகின்ற இவ்வேளையில் இவ்வாறான தீர்மானங்கள் தமிழர்கள் தங்கள் நியாயமான அரசியல் அபிலாஷைகளை - இறுதி இலக்கினை அடைவதற்கான பயணத்தைக் கடினமாக்கிவிடும் என்பதுடன், விரும்பத்தகாத அல்லது எதிர்பார்க்காத உடனடியான, நீண்டகால, எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடவல்லவை. இவ்வாறு குறிப்பிடுவது இவ்வாறான தீர்மானங்கள் தவறானவை என வாதிடுவதாகாது. இப்போது அதற்கான காலப்பொருத்தம் மிகக்குறைவானது என்பதைக் குறிப்பிடுவதற்கே.

தீர்மானத்தின் உடனடி எதிர்விளைவாக தொடர்புடையவர்கள் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன், வன்னிவிளாங்குளம், முழங்காவில், கிளிநொச்சி விசுவமடு, தேராவில், மற்றும்  கனகபுரம் துயிலுமில்ல காணிகளில் ஆயிரக்கணக்கில் படையினர் குவிக்கப்பட்டு பெருமளவு வாகனங்கள் சகிதம் முட்கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அந்தப் பகுதியில் இராணுவத்தினர் நிலைகொள்ள நிரந்தர படைமுகாம்கள் அமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் கிடைக்கும் செய்திகள் விரும்பத்தகாத விளைவுகளின் சமிக்கைகளே.

துயிலுமில்லங்களை இல்லாதொழிப்பது மாவீரர்களைப் புதைத்த மண்ணில் படைத்தளங்களை நிர்மாணிப்பது என்பன மீண்டுமொரு ஆயுதப்போர் உருவாவதற்கான விதையாகவே அமையும் என்பதும், அரசாங்கத்திற்கும் தமிழர்களுக்கும் இடையிலான நிரந்தர இடைவெளியினை உருவாக்கிவிடும் என்பதும் அரசினால் புரிந்துகொள்ளப்படவேண்டியது. ஆனால் மரணமடைந்தவர்களுக்கு மதிப்பளிப்பதுதான் தோற்கடிக்கப்பட்ட மக்களின் மனங்களைத் தொடுவதற்கான முதன்மையான செயற்பாடு - நல்லிணக்கத்திற்குத் தேவையான அடிப்படை அம்சம் என்பதனை அரசு இப்போதும் உணரத்தயாராக இல்லை. துயிலுமில்லங்கள் சிதைக்கப்படுவதன் மூலம் அங்கு விதைக்கப்பட்டவர்களின் நினைவுகளை தமிழ் மக்கள் மனங்களிலிருந்து முழுமையாக அழித்து விடலாம் எனவும் அவற்றை இல்லாதொழிப்பது ஆயுதப்போர் மீண்டும் ஆரம்பிக்காமல் இருப்பதற்கான, அவ்வாறான சிந்தனை முளைவிடுவதைத் தடுப்பதற்கான அடிப்படை எனவும் அரசாங்கம் நம்புகிறது.

இன்று வடக்கிலும் கிழக்கிலும் அத்துமீறல்களும், அடாவடிகளும், நிலஅபகரிப்புக்களும் தொடர்கின்றன. பொலிசாரும் இராணுவத்தினரும் சிங்கள மக்களின் பாதுகாவலர்களாகவே பல சந்தர்ப்பங்களில் தம்மை அடையாளப்படுத்துகின்றனர். இந்நிலையில் படையினரின் இவ்வாறான நடவடிக்கைகளால் தமிழர்கள் அரசின்மீதும், ஆயுதப்படைகளின் மீதும் கொண்டுள்ள வன்மம்; எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம். இதனைவிட மாவீரர்கள் புதைக்கப்பட்ட நிலம் மட்டுமே அவர்களின் நினைவாக எஞ்சியிருந்தது இப்போது அதனை அழித்த படையினர் அதன் மேல் முகாமிடுவார்களாயின் தமிழினம் கொண்டுள்ள வன்மமும் கூட்டுமனவடுவும் மேலும் கடினமடையும்.    

இச்சூழ்நிலையினைக் கருத்திற்கொள்ளாது தமிழத் தலைமைகள் அரசியல் விவேகமற்ற, காலப்பொருத்தமற்ற தீர்மானங்களை எடுப்பதும், அவற்றை நடைமுறைப்படுத்த எத்தனிப்பதும் இன்றைய அரசியல் நகர்வினைத் தேக்கமடையச் செய்துவிடுவதோடு நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் உயர்மட்ட அரசியல் தலைமைகளின் ஆலோசனை, வழிகாட்டல்கள் இன்றி தான்தோன்றித்தனமாக வெறும் சலசலப்புக்காக எடுக்கப்படும் முடிவுகள் தமிழினத்தை மீளமுடியாத அரசியல் இருண்மைக்குள் தள்ளிவிடும் அபாயம் கொண்டவை.

எதிர்வரும் மாதம் அதிகம் உணர்ச்சிபூர்மானது. இந்நிலையில் நிறைவேற்றப்பட்ட இவ்வாறான தீர்மானங்களை நடைமுறைப்படுத்த எத்தனிக்கும் போது அரசின் அடக்குமுறை நிச்சயம் மீண்டெழும் என்பதையும், இத்தகைய எழுச்சிகள் இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்படும் என்பதனையும் எதிர்வுகூற அரசியல்ஞானம் அதிகம் வேண்டியதில்லை. உணர்ச்சிபூர்வமான ஒரு விடயம் தொடர்பிலான  இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர் அவை நடைமுறையில் கைவிடப்படுமாயின் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திற்கெதிரான  அதிக விமர்சனங்களையும், நம்பிக்கையீனத்தையும் மக்களிடம் ஏற்படுத்தும்.

கடந்த காலத்தில் பிரதேசசபைகளின் அரசியல் தலைமைத்துவத்தின் செயற்றிறனின்மை, உள்ளகமுரண்பாடுகள், மக்களை அரசியல் மயப்படுத்துவதிலும், அரசியலை மக்கள் மயப்படுத்துவதிலும் ஏற்பட்ட தோல்வி, உறுப்பினர்களின் அரசகட்சி நோக்கிய தாவல்கள் போன்றவை காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள பிரதேசசபைகள் அதிகம் விமர்சிக்கப்பட்டன. மாகாணசபை இவ்வாறான குறைபாடுகளைத் தவிர்த்து நிதானமான நகர்வுகளைத் திட்டமிடும் இத்தருணத்தில் பிரதேசசபைகளின் அரைவேக்காட்டுத்தனமான இவ்வாறான நடவடிக்கைகள் தமிழர் அரசியலின் செல்திசையின் போக்கினை நிச்சயம் பாதிக்கும். மாகாணசபை தொடர்பான பொருத்தமற்ற ஒரு கருத்துருவாக்கத்தை மக்களிடம் தோற்றுவித்துவிடும். குறிப்பாக மாவீரர் துயிலும் இல்லங்களை மீளமைப்பது  தொடர்பான நடவடிக்கைகளை வடக்கு மாகாணசபை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைவிடுப்பது மாகாணசபை நிர்வாகத்தை மிக இக்கட்டான ஒரு நிலைமைக்குத் தள்ளிவிடும்.   

தமிழ்தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டத்துடனோ, பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுடனோ ஆலோசிக்கப்படாமல் பிரதேச சபைகளில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தென்னிலங்கை இனவாதிகளுக்கும், அரசிற்கும் வாய்ப்பானதாகவும்;, மாகாணசபைக்கான அதிகாரங்கள் தொடர்பில் அரசின் நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்கும் உதவக்கூடும். படையினர் துயிலுமில்லங்களை நிரந்தரமாக ஆக்கிரமித்து அநாகரிகப்படுத்தவும் இது சாதகமாக அமைந்துவிடும்.

கடந்தகால வலிகளும், வேதனைகளும் தமிழரின் தேசிய ஆன்மாவை அதிகம் பாதித்துள்ளது. இப்பாதிப்பினை மேலும் அதிகப்படுத்துவது அவர்கள் போலியான அமைதியைத் தவிர்த்து மாற்று வழிகளைத் தேட ஊக்கப்படுத்திவிடும்.  உண்மையான போராளிகள் எதிரியை ஒரு போதும் அநாவசியமாகச் சீண்டுவதில்லை. அது எதிரிக்கே வாய்ப்பானது. காலம் கனியும் வரை காத்திருத்தலும், அரசியல் விவேகமும் மதிநுட்பமும் கொண்ட சரியான முன்னெடுப்புக்களும் இலட்சியப் பயணத்தை இலகுபடுத்தும். பயணத்தின் முடிவில் புனிதர்கள் நிச்சயம் பூசிக்கப்படுவார்கள். ஏனெனில் அழிக்கப்பட்டவை வெறும் கல்லறைகளல்லவே.

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக  - -வளவன்

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97987/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.