Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இடப்பெயர்வுகள் முற்றுப்புள்ளியல்ல

Featured Replies

,

http://www.madathuvaasal.com/2013/10/blog-post.html

இன்று வேலை முடிக்கும் நேரம் என் மேலதிகாரி என்னிடம் வந்து "நாளைக்கு நான் வேலைக்கு வரமாட்டேன் நாங்கள் இருக்கும் இடங்களைக் காலி செய்யச் சொல்லிவிட்டார்கள் எனவே வேறு இடத்து மாற வேண்டும்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். கடந்த சில நாட்களாக சிட்னியின் பெரும்பாகத்தைத் தாண்டிய புற நகர்ப்பகுதிகளில் பரவலான காட்டுத்தீயின் கொடூரம் பல உடமைகளை நாசப்படுத்தி விட்டது. இன்னும் இன்னும் அதிகமாகும் என்ற முன்னெச்சரிக்கையின் விளைவாக காட்டுத்தீ பரவக்கூடிய அண்மித்த இடங்களில் உள்ள மக்களையும் இடம்பெயரச் சொல்கிறார்கள். எனது மேலதிகாரி ஒரு வெள்ளை இனத்தைச் சேர்ந்த அவுஸ்திரேலியர். நகரத்தித்தின் அடர்த்தி இல்லாத எளிமையான இயற்கை வனப்புள்ள கிராமம் சார்ந்த இடங்களில் பிறந்ததில் இருந்து அகல மறுத்து அங்கேயே வாழும் வெள்ளையர்கள் அதிகம். இரண்டு மணி நேரம் வரை நீண்ட பயணம் செய்து சிட்னியின் பெரும் பாகத்தில் உள்ள நிறுவனங்களுக்கு வேலைக்கு வருபவர்களும் உண்டு. காட்டுதீ அபாயம் ஏற்பட்டவுடனேயே தங்கள் நாய், பூனைக்குட்டி ஈறாக கிடைத்த சொற்ப சொத்துகளுடன் வீடுகளைக் காலி செய்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னர் எண்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையானபோது வீட்டுக்கு முன்னார் கதறி அழுதுகொண்டிருந்தனர். இவ்வளவுக்கும் அவை சாதாரண மரத்துண்டு வீடுகள் தாம், ஆனால் அந்த வீடுகளுக்குள் தாம் பிறந்ததில் இருந்து புதைத்து வைத்த நினைவுகளை நினைத்துத் தான் அழுதுகொண்டிருந்தார்கள். சிலர் அதை வாய்விட்டும் சொல்லி அழுதனர்.

என் பெற்றோர் வேலை நிமித்தம் சில ஆண்டுகள் மலையகத்தில் தங்கி ஆசிரியர்களாகப் பணி புரிந்து நம் சொந்த ஊர் திரும்பிய காலம் என்பது மங்கலான பால்ய நினைவுகளிலேயே தங்கிவிட்டது. 83 ஆம் ஆண்டு கொழும்பிலே இனக்கலவரம் ஏற்பட்ட போது தம் சொந்த வீடுகளில் நிலை கொண்டிருந்தோரின் கண்ணுக்கு முன்னாலேயே அவர்களின் சொத்துக்களைச் சூறையாடிப் பின்னர் அங்கேயே அகோரமாகக் கொன்று குவிக்கப்பட்ட போது எஞ்சித் தப்பியோர்களில் எங்கள் சித்தி குடும்பமும் ஒன்று. அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்குப் போவதென்றால் ஏதோ சீமைக்குப் போகும் உற்சாகம். யாழ்தேவி ரயிலில் ஆறு, அருவி எல்லாம் கண்டுகொண்டு போகலாம், கொழும்பிலே பென்னாம்பெரிய கட்டிடங்களைக் காணலாம் என்ற உற்சாகம் தொற்றிக்கொள்ளும் சின்ன வயதுக் காலம் அது. சித்தி வீட்டுக்கார் அப்போது யாழ்ப்பாணத்துக்கு வந்தது ஒரு புதினமாக இருந்தது. அவர்களைப் போலவே குடும்பம் குடும்பமாக நிறையப் பேர் வந்துகொண்டிருந்தார்கள். செம்பாட்டு மண் அப்பிய காற்சட்டையோடு திரியும் எமக்கு, ஸ்ரைலாக உடுப்புப் போட்டுக்கொண்டு சின்னப்பெடியளும் இங்கிலீஷ் கதைக்கிறதை ஆச்சரியமாகப் பார்ப்பதுண்டு. எங்கட பள்ளிக்கூடத்துக்கும் சில பெடியள் படிக்க வந்தவை. இனிக் கொழும்பு வேண்டாம், யாழ்ப்பாணத்திலேயே இருப்பம் என்று நினைத்த சித்தி குடும்பமும், வீடுகட்ட அறுத்த சீமெந்துக் கல் ஈரம் காயும் முன்பே வெளிக்கிட்டு விட்டார்கள். அப்படித்தான் மீண்டும் கொஞ்சம் பயம் தெளிந்ததும் கொழும்புக்குக் கிளம்பிவிட்டார்கள் அயலில் இருந்த ஒரு சில குடும்பமும். அப்பவும் எனக்கு இந்த இடப்பெயர்வின் தாக்கம் அதிகம் தெரியவில்லை.

1987 ஆம் ஆண்டு ஒபரேசன் லிபரேசன் என்று பெயரிட்டு அப்போதைய இலங்கை ராசா ஜெயவர்த்தனா தீவிர இராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட நேரம் அது. "பலாலி றோட்டால ஆமிக்காறன் வாறான் ஓடுங்கோ ஓடுங்கோ என்று" அம்மம்மா வீட்டில் இருந்த எல்லாரையும் எச்சரித்து விட்டு சுதுமலைப் பக்கமாக ஓடத்தொடங்கினார் தருமர் மாமா. அந்த நேரம் இப்படி அடிக்கடி ஓட்டப்பந்தயம் நடக்கும். வடமாராட்சியில் இருந்து அதைத் தாண்டியும் மக்கள் இடம்பெயரத் தொடங்கினர். ஆனால் எங்கட ஊருக்கு ஆமிக்காறரின் கால் பதியும் முன்பே, நெல்லியடியில் கப்டன் மில்லரின் முதலாவது கரும்புலித் தாக்குதலோடு அந்த முழு இராணுவ நடவடிக்கையும் முடங்கிப் போனது.

ஆனால் சில மாதங்களில் இந்திய இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையில் போர் மூண்ட போதுதான் எங்கள் வாழ்வில் இடப்பெயர்வின் வலியை நேரே உணர முடிந்தது. வீட்டில் போட்டது போட்டபடி கிடக்க, எல்லோரும் அண்ணா தொழிலகம் என்ற உள்ளூரில் இயங்கிய தொழிற்சாலையில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தோம். எங்கள் ஊரிலேயே ஒரே ஒரு மாடிக்கட்டிடம் அதுதான். ஆமிக்காறன் அடிக்கிற ஷெல் அந்தக் கட்டிடத்தைப் பாதிக்காது என்ற மூட நம்பிக்கை வேறு. அந்தத் தொழிற்சாலைக்குள்ளேயே நூற்றுக்கணக்கில் குடும்பங்கள் அடைபட்டுக் கிடக்க, இருப்பில் இருந்த அரிசி தான் கஞ்சி போட்டது. ஒரு சுபயோக சுப தினத்தில் ஆமிக்காறர் அடிச்ச ஷெல் நாங்கள் இருந்த கட்டிடத்தையும் பதம் பார்க்க, ஒரு சிலர் காயத்தோடு தப்ப, மிச்சப்பேர் இனி ஆண்டவன் சந்நிதி தான் ஒரே வழி என்று மடத்துவாசல் பிள்ளையாரடி நோக்கி ஓடினர், நாங்கள் உட்பட. தற்காலிக முகாம்களில் இருந்து வீடு பார்க்கப் போவோர் பெரும்பாலும் திரும்பி வரார். அவர்களைத் தேடிச் சென்றவர்கள் பிணத்தோடு வருவர். கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள நெல் உமி எரிக்கும் வளவுக்குள் எரித்து விட்டு குளிப்பதோடு சரி. சிட்னியில் இருக்கும் ஒரு நண்பரின் வாழ்க்கையில் நடந்தது இது. வல்வெட்டித்துறையில் வீடு பார்க்கச் சென்றவர், தனக்கு முன்பே வீடு பார்க்க வந்த அங்கே தனது தமையன் வீட்டு முற்றத்தில் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் காண்கிறார். தூரத்தில் ஆமிக்காறன் வரும் சல சலப்புக் கேட்கிறது. உடனே தன்னுடைய தமையனின் உடம்பில் வழிந்த இரத்ததை உடம்பெல்லாம் தடவிச் செத்தது மாதிரிக் கிடந்து தப்பித்தாராம். இப்படி நிறைய இடப்பெயர்வுக் கதைகள்.

இந்திய இராணுவ முற்றுகைக்குப் பின்னர் பல இடப்பெயர்வுகளை எங்கட சனம் சந்தித்து விட்டது.

1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தெல்லிப்பழை தாண்டி ஒரு பெரும்பாகமே காடு வளர்த்து விட்ட பூமியாகிவிட்டது. பலாலியில் இருந்து இலங்கை இராணுவத்தின் வலிகாமம் மீதான முற்றுகையில் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தான் அந்தப் பகுதியெல்லாம் கொஞ்சமாக மெல்லத் திறந்து விடப்பட்டது. வீடு எங்கே வீதி எங்கே என்றே தெரியாத அளவுக்கு அடர்ந்த காட்டுப்பகுதியாக அந்த இருபது வருடங்கள் மாற்றிவிட்டிருந்தது இந்த ஊர்களை. இந்த ஊர்களை இருபது வருடங்களுக்கு முன்னர் பார்க்கச் சென்றவர்களில் பலரும் இன்னும் திரும்பவில்லை.

வீடும் காணியும் சடப்பொருட்கள் என்றாலும் அவற்றை உதறித்தள்ளிவிட்டு எங்கட சனத்தால் வரமுடியவில்லை. அந்த வீட்டு வளவில் கொண்டாடிய சொந்தங்களும், உறவுகளும் செத்து மடிந்தாலும் கூட.

தொண்ணூறுகளுக்குப் பின்னரான தீவிர யுத்தத்தில் இப்போது யார் எந்த ஊரில் இருக்கிறார் என்பதை விட நான் சொந்த ஊரில் இருக்கிறேனா என்பதே பெரிய கேள்வி. தொடர்ந்த இடப்பெயர்வுகள் பலரின் ஊரையே மாற்றி வேறோர் ஊரில் சொந்தம் கொண்டாட வைத்து விட்டது. ஆசையாக வீட்டைப் பார்க்கப் போனவர் மாண்டது போக, இன்று அநாதைகளாக இருக்கும் பல வீடுகளுக்கும் சொந்தம் கொண்டாட யாருமே இல்லை. வெளிநாட்டுக்குப் போயிருக்கலாம் அல்லது குடும்பமாகவே செத்துப் போயிருக்கலாம். தெல்லிப்பழை தாண்டி இருபக்கமும் இடிபாடுடைய வீடுகளைப் பார்க்கும் போது, தலை விரி கோலமாக நிற்கும் வாழ்வைத் தொலைத்தவள் நிலையில் தான் இருக்கும்.

ஊருக்கு ஒரு இடப்பெயர்வு என்ற காலம் போய், முழு யாழ்ப்பாணமே இடம்பெயர்ந்த 1995 கள் கடந்து, 2009 ஆம் ஆண்டில் இறுதிக்கட்ட யுத்தம் நடந்து கொண்டிருக்கும் போது மணிக்கொரு ஊராய் அலைந்து உயிரைப் பாதுகாத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது வானொலிக் கலையகத்தில் இருந்து தாயக நடப்புகளை எடுத்து வரும்போது முதல் நாள் பேசியவர் காணாமல் போயிருப்பார், பின்னர் அவர் இறந்த செய்தியை இன்னொருவர் எடுத்து வருவார். உடமைகளோடு இடம்பெயர்ந்த காலம் போய், ஒவ்வொரு ஷெல் அடிக்கும், விமானக் குண்டுவீச்சுக்கும் காணும் பக்கமெல்லாம் ஓடித் தப்ப முடிந்தோர் தப்பினார்கள். அந்த நேரத்தில் இடப்பெயர்வு என்பது நிமிடத்துளிக் கணக்கிலும் மாறிக் கொண்டிருந்தது.

இந்த கால் நூற்றாண்டு கடந்த யுத்தத்தில் இடப்பெயர்வுகளின் வடிவங்கள் வேறு, ஆனால் வலி ஒன்று தான்.

" சிறு நண்டு கடலோரம் படம் ஒன்று கீறும் சிலவேளை அதை வந்து அலை கொண்டு போகும்" -மகாகவி உருத்திரமூர்த்தி

இந்த கால் நூற்றாண்டு கடந்த யுத்தத்தில் இடப்பெயர்வுகளின் வடிவங்கள் வேறு, ஆனால் வலி ஒன்று தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.