Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசுக் கட்சி எங்கே நிற்கிறது - கூட்டமைப்பு எங்கே செல்கிறது? விக்னேஸ்வரனின் அரசியல் எதிர்காலம் எவ்வாறு அமையப்போகிறது?? - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சி எங்கே நிற்கிறது - கூட்டமைப்பு எங்கே செல்கிறது? விக்னேஸ்வரனின் அரசியல் எதிர்காலம் எவ்வாறு அமையப்போகிறது?? - யதீந்திரா



முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று ஒரு தமிழ் கருத்துண்டு. வடக்கு மாகாணசபை குறித்து சிந்திக்கும் போது மேற்படி கருத்தே நினைவுக்கு வருகிறது. ஏனெனில், அந்தளவிற்கு குழப்பங்களினதும், உள் முரண்பாடுகளினதும் சாட்சியாக தற்போது வடக்கு மாகாணசபை காட்சியளிக்கின்றது. இத்தகைய குழப்பங்களையும், முரண்பாடுகளையும் கடந்து செல்லவேண்டிய நிலையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் காணப்படுகின்றார். அவரால் அது முடியுமா?

விடுதலைப் புலிகள் தமிழர் அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்பட்ட பின்னர், தமிழ் மக்களின் அரசியலை கையாளும் பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமானது. கூட்டமைப்பு அதன் உருவாக்க நோக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பொறுப்பை கையேற்க நேர்ந்தது. இதனை கூட்டமைப்பின் அதிஸ்டம் என்றும் சொல்லலாம். ஏனெனில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் என்பது அதனை ஒரு தலைமைத்துவ தகுதிநிலைக்கு கொண்டு செல்லும் நோக்கம் கொண்டதல்ல. மாறாக, விடுதலைப்புலிகளின் ஏகத் தலைமைத்துவத்தை ஏற்கச் செய்வதாகவே இருந்தது. அதாவது, விடுதலைப்புலிகள் தமது இராணுவ வெற்றிகளால் கைவசப்படுத்திக் கொண்ட அரசியல் தலைமைத்துவத்தை, ஜனநாயக வெளிக்குள் நியாயப்படுத்தும் ஒரு உக்தியாகவே கூட்டமைப்பைக் கையாண்டனர் அல்லது பிரபாகரன் கையாண்டார். எனவே பயன்படுதல் என்பதைத் தவிர, கூட்டமைப்பிற்கு வேறு எந்த முக்கியத்துவமும் விடுதலைப் புலிகள் காலத்தில் இருந்திருக்கவில்லை. இதனால் அன்றைய கூட்டமைப்பில் 'முரண்பாடு' என்பதற்கான அவசியமும் இருந்திருக்கவில்லை. ஆனால் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கூட்டமைப்பு ஒரு புதிய முகம் கிடைக்கிறது. அதாவது, அதுவரை விடுதலைப் புலிகளால் கையாளப்பட்டு வந்த கூட்டமைப்பு என்னும் பெறுமதியற்ற அமைப்பானது, ஈழத் தமிழர் அரசியலை கையாள வேண்டிய தகுதிநிலைக்கு சடுதியாக உயர்கிறது. இந்த பின்புலத்தில்தான் கூட்டமைப்பு முரண்பாட்டின் களமாகவும் மாறுகின்றது. கூட்டமைப்பைத் தொடர்ந்து துரத்திவரும் மேற்படி முரண்பாட்டை மூன்று கட்டங்களாக நோக்கலாம்.

முதலாவது கட்டம், கூட்டமைப்பு எவ்வாறானதொரு அரசியல் பண்புநிலையை தொடர்வது என்னும் கேள்வியில் தொடங்கியது. அதுவரை தாம் பின்பற்றிவந்த விடுதலைப் புலிகளின் சார்புநிலையை தொடர்ந்தும் கைக்கொள்ள முடியாதென்னும் நிலைப்பாட்டை சம்பந்தன் அணியினர் எடுத்தபோது, கூட்டமைப்பில் உடைவு ஏற்பட்டது. அதுவரை கூட்டமைப்பில் ஓர் அங்கத்துவ கட்சியாக இருந்துவந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் விடுதலைப் புலிகளால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்ட செ.கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் போன்றவர்களும் கட்சியிலிருந்து வெளியேறினர். 'தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி' என்னும் புதிய அரசியல் அணி உருப்பெற்றது. தற்போது தங்களை தமிழரசுக் கட்சி ஒத்துக்கிவருவதாக சத்தமிடும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், மேற்படி முரண்பாட்டின்போது சம்பந்தன் அணியுடனேயே கைகோர்த்திருந்தார். கஜேந்திரகுமாரின் வெளியேற்றத்துடன், கூட்டமைப்பானது அரசியல் பண்புநிலையில் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளால் பாதிக்கப்பட்ட கட்சிகளின் கூட்டாகவே காட்சியளித்தது. குறிப்பாக தமிழர் விடுதலைக் கூட்டணி (ஆரம்பத்தில் தமிழரசு கட்சி), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் ஆகிய மூன்று கட்சிகளின் தலைவர்களும் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டவர்களாவர்.

எனவே, விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான கூட்டமைப்பின் அரசியல் முன்னெடுப்பு என்பது, முற்றிலும் தங்களை ஒரு புலிநீக்கம் செய்வதாகவே அமைந்தது. இவ்வாறு புலிகளின் ஆதரவாளர்கள் முற்றிலுமாக அகற்றப்பட்ட சூழலில், விடுதலைப் புலிகளால் வழிநடத்தப்பட்ட கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்காத தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்), தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய இரண்டு கட்சிகளும் புதிதாக கூட்டமைப்பில் இணைந்து கொள்கின்றன. மேற்படி இரண்டு கட்சிகளின் இணைவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது, முற்றிலுமாக கடந்த காலங்களில் ஏதோவொரு வகையில் புலிகளால் பாதிக்கப்பட்டு, ஏதோவொரு வகையில் அரசாங்கங்களுடன் தொடர்பிலிருந்த கட்சிகளின் கூட்டாகவே மாறியது.

இந்த பின்புலத்தில்தான் இரண்டாவது முரண்பாடு வெளிவருகிறது. அது - கூட்டமைப்பை வழிநடத்தும் சாவியை யார் தொடர்ந்தும் வைத்திருப்பது என்பதில் துளிர்விட்டது. இந்த முரண்பாட்டுக் களத்தில் பலர் இருப்பது போன்று தோற்றமளித்தாலும், இது - ஆழத்தில், சம்பந்தனுக்குப் பின்னரான கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை தன்வசப்படுத்திக் கொள்ள வேண்டுமென்னும் சுரேஷ் பிரேமச்சந்திரனின் விருப்புநிலைக்கும், அதனை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்னும் தமிழரசு கட்சியின் காய்நகர்த்தல்களுக்கும் இடையிலான முரண்பாடாகும். ஆரம்பத்தில் இந்த முரண்பாடு, கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்னும் ஒரு கோசமாக வெளிவந்தது. இதன் மூலம் ஏனைய கட்சிகளை ஓரணிப்படுத்தி, தமிழரசு கட்சியை தனிமைப்படுத்த முடியுமென்பதே சுரேசின் திட்டமாக இருந்தது. ஆனால் அது இன்றுவரை நிறைவுபெறவில்லை. ஏன்?

கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்ய வேண்டுமென்னும் சுரேஷின் விரும்பத்துடன் ஏனைய கட்சிகளான, புளொட், டெலோ மற்றும் ரி.யு.எல்.எப் ஆகிய கட்சிகளின் தலைமைக்கு உடன்பாடு இருப்பினும் கூட, சம்பந்தனுக்கு பின்னரான தலைவராக சுரேஸ் பிரேமச்சந்திரனை ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் தயாராக இல்லை. தமக்கிடையிலான முரண்பாடுகள் பற்றி அறிக்கைகளை பிரசவித்த அளவிற்கு, தமிழரசு கட்சிக்கு எதிராக, மேற்படி நான்கு கட்சிகளாலும் இதுவரை ஆக்கபூர்வமாக எதனையும் செய்ய முடியாமைக்கு இதுவே காரணமாகும். ஆனாலும், கூட்டமைப்பில் தமிழரசு கட்சியின் ஆதிக்கத்திற்கு ஒரு கடிவாளமிட வேண்டும் என்னும் தீராத ஆர்வம் ஏனைய கட்சிகளிடம் இருந்து கொண்டே இருக்கிறது.

இத்தகையதொரு பின்னணியில்தான், விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக அரசியலில் பிரவேசித்திருக்கின்றார். விக்னேஸ்வரனின் அரசியல் பிரவேசம், சம்பந்தன், சுமந்திரன் ஆகிய இருவரை தவிர, வேறு எவராலும் இலகுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கவில்லை என்பதை இந்த இடத்தில் குறித்துக் கொள்ளலாம். தமிழரசு கட்சியின் பெரும்பான்மையினரது ஒரே தெரிவு, ஆரம்பத்தில் தமிழரசு கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜாவாகவே இருந்தது. தமிழரசு கட்சியின் மாவட்ட கிளைகளிலிருந்து அறிக்கைகள் வெளிவருமளவிற்கு, விக்னேஸ்வரன் பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்படாத ஒருவராகவே இருந்தார். இதனை தமிழரசு கட்சியினர் தன்னிச்சையாக செய்தனரா அல்லது மாவையின் வேண்டுகோளுக்கு இணங்கச் செய்தனரா என்பதற்குச் சான்றில்லை.

இதிலுள்ள சுவாரசியமான விடயம், தமிழரசு கட்சியினர் மாவைக்கு ஆதரவாக நின்ற போது, அதுவரை அக்கட்சியுடன் கீரியும் பாம்புமாக இருந்த சுரேஸ் பிரேமச்சந்திரனும் அதனை ஆதரித்து நின்றார். ஏனைய கட்சிகளும் மாவை சேனாதிராஜாவிற்கு ஆதரவாகவே கையுயர்த்தி நின்றனர். இதன் மூலம், அந்த சந்தர்ப்பத்தில் சம்பந்தன், சுமந்திரனை தவிர்த்து அனைவராலும் ஏகமனதாக முன்மொழியப்பட்ட ஒரு தலைவராக மாவை சேனாதிராஜாவே காணப்பட்டார். ஆனால் ஒரு கட்டத்துடன் மாவை இந்த ஓட்டப் பந்தயத்திலிருந்து விலகிக் கொண்டார். இதனைக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் சிரேஸ்ட தலைவர் ஒருவரது கூற்றில் சொல்வதானால், 'நாங்கள் எல்லோரும் மாவையுடன் இருந்தோம், ஆனால் மாவை மட்டும், மாவையோடு இருக்கவில்லை'. மாவை விலகிக்கொண்டபோது, விக்னேஸ்வரன் போட்டியின்றி அனைவரதும் தெரிவானார். ஆனால் இறுதி அர்த்தத்தில் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் அனைத்தினதும் ஒருமித்த ஆதரவுடன்தான் அவர் இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார் எனலாம்.

விக்னேஸ்வரன் குறித்து கட்சிகள் என்னவகை முடிவைக் கொண்டிருந்த போதும், அவரது பெயர் வெளித்தெரிந்த நாளிலிருந்து, தமிழ் ஊடகங்கள் அவருக்கு கொடுத்த முக்கியத்துவம் அதீதமானது. குறிப்பாக வடக்கில் விக்னேஸ்வரன் குறித்து ஓர் அலையை எழுப்புவதில் அனைத்து தமிழ் பெரும் பத்திரிகைகளும் பின்நின்றன. இதன் விளைவே வடக்கின் தேர்தல் வரலாற்றில் எவரும் பெற்றிராத விருப்பு வாக்குகளை அவர் பெற முடிந்தது.

ஆரம்பத்திலிருந்தே தமிழ் அரசியல் சூழலில் விக்னேஸ்வரன் புதியதொரு அரசியல் கலாச்சாரத்திற்கு வித்திடுவார் என்னும் அபிப்பிராயங்கள் தாராளமாகவே உலவின. இதற்கு அவரது கடந்தகால கறைபடியாத நீதித்துறை வாழ்வும், தனிப்பட்ட வாழ்வியல் நேர்மையுமே காரணமாகும். அவர் முதலமைச்சர் வேட்பாளராக ஏகமனதாக தீர்மானிக்கப்பட்ட பின்னர், இந்துஸ்தான் டைம்ஸ் சஞ்சிகைக்கு வழங்கிய நேர்காணலில், 'என்னளவில் அரசியல் அர்த்தமுடைய ஒன்றல்ல' (Politics has no meaning for me) என்று குறிப்பிட்டிருந்தார். ஒருவேளை விக்னேஸ்வரன் உண்மையிலேயே அவ்வாறு கருதியிருந்திருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு கூறினாலும், அவர் முதல்வராக தெரிவுசெய்யப்பட்ட பின்னர், அவர் விரும்பியோ விரும்பாமலோ அரசியல் செய்யவேண்டிய நிலைக்கு நகர்ந்திருக்கின்றார் என்பதே உண்மை. இனி விரும்பினாலும் விக்னேஸ்வரன் இந்த அரசியலிலிருந்து தப்பிச் செல்ல முடியாது.

விக்னேஸ்வரன் முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் இடம்பெற்ற இரண்டு முக்கிய நிகழ்வுகளின் போது, அவர் கூட்டமைப்பின் முதல்வராக காட்சியளிக்கவில்லை. தனித்தே தெரிகின்றார் அல்லது தனித்து ஒரு கட்சி அடையாளத்தை சுமந்து திரியவேண்டிய நிலைக்குள் முடங்கியிருக்கின்றார். அவர் முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டபோது, கூட்டமைப்பின் ஏகமனதான ஆதரவை பெற முடிந்திருக்கவில்லை. வடமாகாணசபையின் முதலாவது நிகழ்வான உறுப்பினர்கள் பதவியேற்பின் போது, மூன்று கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்த, ஒன்பது உறுப்பினர்கள் பங்குகொண்டிருக்கவில்லை. மேற்படி இரண்டு சம்பவங்களுக்கும் விக்னேஸ்வரன் பதிலளிக்க முற்படும் போதெல்லாம், அரசியல் அர்த்தமற்றது என்னும் அவரது கூற்றை, அவரே பொய்ப்பிக்க நேரிடுகிறது.

நம்பிக்கையுடன் நோக்கப்பட்ட வடமாகாணசபை ஏன் ஆரம்பத்திலேயே கட்சி மோதல்களின் காட்சியறையாக தெரிகிறது? ஆரம்பத்தில் எல்லோராலும் ஏகமனதாக ஆதரிக்கப்பட்ட விக்னேஸ்வரன் ஏன் தற்போது ஒரு ஒத்துழையாமை பிரச்சனையை எதிர்கொண்டிருக்கின்றார்? உண்மையில் இது விக்னேஸ்வரனது பிரச்சனையல்ல. மாறாக, அவர் கூட்டமைப்பின் ஊடாக அரசியலில் பிரவேசித்திருப்பதுதான் பிரச்சினை ஆகும். ஏனெனில், முரண்பாடுகளின் ஆடுகளமாகக் கிடந்த கூட்டமைப்பின் ஊடாக விக்னேஸ்வரன் அரசியலில் பிரவேசித்திருப்பதால், அந்த முரண்பாடுகளை காவித்திரிய வேண்டிய இக்கட்டு நிலைக்கு அவர் தற்போது ஆளாகியிருகின்றார். உத்தரவுகளை போட்ட ஒருவராக மட்டுமே இருந்தவரான விக்னேஸ்வரனுக்கு முன்னால் பலர் இப்போது உத்தரவுகளுடன் இருக்கின்றனர். ஏனெனில், இது அர்த்தமற்ற அரசியல் அல்ல, பலருக்கு பலவகையான அர்த்தங்களை வழங்கியிருக்கின்ற, வழக்கப் போகின்ற அரசியல் ஆகும். விக்னேஸ்வரன் 'இது எனக்கு ஒரு பதவி மட்டுமே' என்று இலகுவாக சொல்லிச் செல்வது போன்று, கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் மற்றவர்களால் அவ்வாறு சொல்லிச் செல்ல முடியாது. ஏனெனில் அவர்களுக்கென்று கட்சியும், அக்கட்சியைச் சார்ந்து பலரும் உண்டு.

இந்த சூழலில், விக்னேஸ்வரன் முன்னாலுள்ள தெரிவுகள் என்னவாக இருக்க முடியும்? என்னளவில் 'அரசியல் அர்த்தமுடைய ஒன்றல்ல' என்று அவர் தொடர்ந்தும் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா?

விக்னேஸ்வரன் தலைமை தாங்கப் போகின்ற வடமாகாணசபை எதிர்காலத்தில் மூன்று அணிகளாக பிளவுறுவதற்கான சாத்தியங்களையே கட்டியம் கூறி நிற்கிறது. தமிழரசுக் கட்சி அணியினர் ஒருபுறம், ஏனைய கட்சிகளான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம் மற்றும் செல்வம் அடைக்கலநாதனை தலைவராக ஏற்றுக் கொள்ளாத டெலோ அணியினர் ஆகியோர் ஒரு அதிருப்தியாளர் குழுவாக தொழிற்படுவர். அதற்கான வாய்ப்பே தூக்கலாக காணப்படுகிறது. மூன்றாவது அணி, விடுதலைப் புலிகளது அரசியலின் தொடர்சியாக தங்களை காண்பிக்க முனையலாம். உறுப்பினர் பதவியேற்பு நிகழ்வின் போது, விடுதலைப் புலிகளால் வழிநடத்தப்பட்ட பொங்குதமிழ் நிகழ்வுகளில் அணியப்படும், சிகப்பு-மஞ்சள் கலவையான சாறி ஒன்றை அனந்தி சசிதரன் அணிந்திருந்ததானது தற்செயலான ஒன்றல்ல. வடமாகாணசபையில் புலிகளுக்கான குரலும் இருக்கும் என்பதற்கான கட்டியம் கூறலே அது. ஏலவே விக்னேஸ்வரன் புலம்பெயர் புலி ஆதரவு தரப்பினரால் கடுமையாக எதிர்க்கப்பட்டு வருகின்ற பின்னணியில், வடமாகாணசபைக்கு உள்ளேயே, தங்களுக்கான ஆதரவு சக்திகளை அவர்கள் அணிதிரட்டக் கூடிய ஏதுநிலையே காணப்படுகின்றது. இவற்றை எல்லாம் வெற்றிகரமாக கடந்து சென்றால்தான் விக்னேஸ்வரன் தன்னுடைய புதிய பதவியை ஆக்கபூர்வமாக பயன்படுத்த முடியும். ஆனால் அவரால் இவற்றையெல்லாம் வெற்றிகரமாக கடந்துசெல்ல முடியுமா?

இந்த பின்புலத்தில் நோக்கினால், விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாணசபை என்பது கூட்டமைப்பை துரத்திவரும் உள் முரண்பாட்டின் மூன்றாவது கட்டமாகும். இதிலுள்ள வேறுபாடு என்னவென்றால், இந்த முரண்பாடுகளுக்கு பொறுப்புச் சொல்ல வேண்டிய அவசியமில்லாத, இந்த முரண்பாடுகளுடன் எந்தவகையிலும் தொடர்புற்றிராத ஒருவர், இந்த முரண்பாடுகளுக்கெல்லாம் விளக்கமும், தீர்வும் சொல்ல வேண்டிய நிலைமை தோன்றியிருப்பதுதான். மேற்படி நிலைமையை, விக்னேஸ்வரன் ஒரு கட்சி அரசியல்வாதியாக எதிர்கொள்ளப் போகின்றாரா அல்லது, கூட்டமைப்பின் ஓர் அரசியல் தலைவராக எதிர்கொள்ளப் போகின்றாரா என்பதைப் பொறுத்தே, நிலைமைகளின் ஏற்றமும், இறக்கமும் ஏற்படும். ஏனெனில், விக்னேஸ்வரனிடம் மக்கள் ஒப்படைத்திருக்கும் பொறுப்பானது, அவர் இந்துஸ்தான் டைம்ஸ்சுக்கு சொல்லியிருப்பது போன்று வெறும் ஒரு பதவியல்ல. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தலைமைத்துவம். யானை தன் பலம் அறியாது என்பது போல், விக்னேஸ்வரனும் ஒருவேளை தான் வரித்துக் கொண்டிருக்கும் பொறுப்பின் கனதி அறியாமல் இருக்கின்றாரா? வடக்கு மாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பு பெற்ற அமோக வெற்றியுடன், ஈழத் தமிழர் அரசியல் என்பதன் அடுத்த கட்டமானது முற்றிலும் வடக்கு மாகாணசபையை மையப்படுத்திய ஒன்றாக மாறிவிட்டது. அதனை கையாளும் வரலாற்றுப் பொறுப்பு விக்னேஸ்வரனிடம். இந்த பின்னணியில் பார்த்தால், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அடுத்த நிலைத் தலைவராக விக்னேஸ்வரனே காணப்படுகின்றார்.

இவற்றை அடியொற்றி மேலெழும் கேள்வி, மக்கள் விக்னேஸ்வரனிடம் ஒப்படைத்திருக்கும் வரலாற்றுப் பொறுப்பை விக்னேஸ்வரன், தமிழர் அரசியல் வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை பதித்துக்கொள்வதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வாரா அல்லது, தமிழரசு கட்சி - தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்னும் முரணுக்குள் சிக்கி, இறுதியில் தனது நீதித்துறை வாழ்வின் நற்பெயரையும் சீரழித்துக் கொள்வாரா?

விக்னேஸ்வரன், மாகாணசபை உறுப்பினர்களுக்கான பதவியேற்பு நிகழ்வில் ஆற்றிய உரை, அவர் மக்கள் நலன் மீது கொண்டிருக்கும் தீரா காதலுக்குச் சான்று பகர்கிறது. அவர் தனது அரசியல் வாழ்வில் 'மக்கள் நலன்' என்னும் ஒன்றைத்தவிர, வேறு எதற்கும் முன்னுரிமையளிக்கப் போவதில்லை என்பதை அவ்வுரை கோடிகாட்டுகிறது. மக்கள் நலன் மட்டுமே முன்னுரிமையானால், தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்னும் கட்சிக் கவசங்கள் எதுவும் அவருக்கு தேவைப்படாது. ஏனெனில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் காலத்தில், ஒருவேளை தமிழரசு கட்சியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒரே நேர்கோட்டில் பயணிக்காது போகலாம். இரண்டும் எதை நோக்கி பயணிக்கின்றன என்பதை கண்டுகொள்வதே கடினமாகலாம். அத்தகையதொரு நிலைமையில், அவ்விரு அமைப்புகளும் செல்லும் திசையை வேதனையுடன் உற்றுநோக்கும் ஒருவராக, விக்னேஸ்வரன் தன் அரசியல் நாட்களை கழித்துவிட முடியாது. ஏனெனில் இது விக்னேஸ்வரன் காலம் - இனி அவர் அர்த்தமற்றது என்று சொல்லிய 'அரசியல்' அவருக்கான அர்த்தங்களை எழுதும்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=ba73fc9f-be98-4ab5-92bd-eb876e42a4fb

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.