Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதயன் பத்திரிகையில் வந்த சிறப்பு கட்டுரை - கூட்டமைப்புக்குள் குருவிச்சைகள்

Featured Replies

இதை இங்கு இணைத்துள்ளேன் பிழையாயின் சரியான இடத்துக்கு மாத்துங்கோ.

 

 

 

 

கூட்டமைப்புக்குள் குருவிச்சைகள் 1b7324f1e49d9839185cf9f05b98731e.jpgஇவர்தான் உங்கள் முதலமைச்சர். இவர் தான் வடமாகாணசபையை வழிநடத்திச் செல்லப்போகிறார் என்று விக்னேஸ்வரனைத் தெளிவாக முன்னிறுத்தியே தமது பரப்புரைகளைத் தொடங்கியிருந்தனர்.

 எமது இலட்சியம் பெரிது, எல்லோரும் ஒன்றுபட்டு உழைத்தால்தான் அதனை வென்றெடுக்கலாம் என்ற உணர்வு சாதாரண தமிழ் மக்களுக்கே உண்டு. இந்நிலையில் தமிழர்களைக் காப்பாற்ற உழைக்கப் போகின்றோம் என்று பிதற்றிக் கொண்டு வட மாகாணசபைத் தேர்தலில் நின்று வெற்றிபெற்றவர்களுக்கு இந்த உணர்வு இல்லாமற் போனது எப்படி என்பதுதான் தமிழ் மக்களிடையே இன்று எழுந்துள்ள கேள்வி.

 

மக்கள் ஒன்றுதிரண்டு வாக்களித்தது வீட்டுச் சின்னத்துக்கும், அச்சின்னம் தாங்கி நிற்பவர்களின் இலக்குத் தவறாத உழைப்புக்குமே. இது தவிர தனிப்பட்ட எவருக்கும் அல்ல என்ற உண்மை அவர்களுக்குத் தெரியாமற்போனது எப்படி?
தமிழ்மக்களின் அபிலாஷைகளுக் குப்புறம்பாக நடந்தால் தன்னையே மக்கள் தூக்கியயறிந்து விடுவார்கள். தனக்குத் தரும் மரியாதை, மாலை, அன்பு, ஆதரவு எல்லாம் அவர்களின் நோக்கத்துக்காக உழைக்கும் ஒரு மனிதனாகத் தான் நிற்பதாலேயே என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே பல மேடை களில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இதற்குப் பின்னரும் கூட தமக்குள்ள சிறப்பால்தான் வாக்குகள் கிடைத்தன என்று இவர்கள் எப்படித்தான் நம்பினார்களோ தெரியவில்லை?
 
தடுமாறாத தலைமை
வடமாகாணசபைத் தேர்தல் களத்தில் யார் முதலமைச்சர் ஆவார் என்பது பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வித தடுமாற்றத்தையும் கொண்டிருக்கவில்லை. இவர்தான் உங்கள் முதலமைச்சர். இவர் தான் வடமாகாணசபையை வழிநடத்திச் செல்லப்போகிறார் என்று விக்னேஸ்வரனைத் தெளிவாக முன்னிறுத்தியே தமது பரப்புரைகளைத் தொடங்கியிருந்தனர்.
 
இப்போது கட்சி பற்றியயல்லாம் பேசும் எந்த வேட்பாளரோ அல்லது எந்தத் தலைவரோ தமது  தேர்தல் பரப்புரைகளின் போது நான் ஈழமக்கள் புரட்சிகர முன்னணி சார்பாகப் போட்டியிடுகின்றேன் என்றோ, தமிழீழமக்கள் விடுதலைக்கழகத்தின் சார்பாகப் போட்டியிடுகின்றேன் என்றோ, தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பாகப் போட்டியிடுகின்றேன் என்றோ கூறவில்லை. எந்தத் துண்டுப் பிரசுரத்திலும் தம்மை அவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்ளவும் இல்லை. 
 
ஒரே சின்னம் வீடு அதற்கே மக்கள் ஆணை
எல்லோரது அடையாளமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவே இருந்தது. அவர்களின் சின்னம் வீடாகவே இருந்தது. மக்கள் ஒருமித்து வாக்களித்தார்கள்: வேட்பாளர்கள் இருபத் தெட்டுப்பேர் அபரிமிதமாக வெற்றி பெற்றார்கள். தலைமை வேட்பாளருக்குத் தனியானதொரு விசேட ஆணையை மக்கள் வழங்கியிருந்தார்கள்.
அதேவேளை தலைமை வேட்பாளர் எந்த வீட்டுப்படியும் ஏறியிறங்கவில்லை. தனது திறமை, நேர்மை, கண்ணியம் என்பவற்றால் மக்களைக் கவர்ந்தார். அவர் நிதானமாகவும், துணிச்சலாகவும் செயற்பட்டுத் தம்மை வழிநடத்துவார் என மக்கள் நம்பி எவரும் நினைத்துப்பார்க்க முடியாத அதிகூடிய விருப்பு வாக்குகளை அவருக்கு அளித்திருந்தார்கள். 
 
மக்கள் நம்பிக்கையை நிறைவேற்றுவாரா விக்கி?
இதன் அர்த்தம், வடமாகாண மக்களின் அபிலாஷைகளை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பையும் தேர்வான அனைத்துப் பிரதிநிதிகளை  வழிநடத்தும் பொறுப்பையும் மக்கள் விக்னேஸ்வரனிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள் என்பதே. இதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. எனவே, மக்களின் நம்பிக்கையை முதல்வர் சரிவர நிறைவேற்ற வேண்டும்.
 
அதேபோல் தெரிவான மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் முதலமைச்சரின் செயற்பாடுகளுக்கு உந்துசக்தியாகச் செயற்பட வேண்டும் என்பதுதான்.
 
சந்திக்கு இழுத்திருக்கக் கூடாது
இந்த நிலையில் சட்டப்படியும் நியாயப்படியும் தனக்கு இசைவான அமைச்சர்களைத் தெரிவுசெய்யும் பொறுப்பு வடமாகாண முதல்வரிடமே இருக்கிறது. தெரிவான உறுப்பி னர்கள், இது தொடர்பான தங்கள் விருப்பங்களையும் அபிப்பிராயங்களையும் அவரிடம் முன்வைக்கலாம். 
 
அதில் தடையேதும் இல்லை. வேண்டுமானால் தமது எண்ணத்துக்கு இசைவான நியாயங்களை வலியுறுத்திப் போராடியும் இருக்கலாம். இதில் யாரும் தவறு காண முடியாது. இது ஜனநாயக உரிமையுங்கூட. ஆனால் இவற்றை அவர்கள் பூட்டிய அறைகளுக்குள்ளேயே பேசித்தீர்த்திருக்க வேண்டும். மக்கள் முன் வரும் போது முதலமைச்சரின் தெரிவை ஏற்றுக்கொண்டவர்களாகவே வந்திருக்க வேண்டும். 
ஒருவேளை முதலமைச்சர் பிழையான அமைச்சுத் தெரிவுகளை மேற்கொண்டுள்ளார் என்ற அபிப்பிராயம் இருப்பினுங்கூட அதனை பொது மக்களிடம் வெளிப்படுத்தாது இருக்கும் பண்பாளர்களாக மக்கள்முன் வர வேண்டும். தொடர்ந்தும் உள்ளுக்குள்ளேயே பேசித்தீர்க்க முயலும் தலைமைத்துவப்பண்பு நிறைந்தவர்களாக நடந்திருக்க வேண்டும். 
 
குருவிச்சைகள்
ஆனால் மக்கள் பிரதிநிகள் சிலர் இவற்றுள் எந்தப் பண்பையும் கொண்டிருக்கவில்லை. யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம் பெற்ற பதவியேற்பு வைபவத்தை இவர்கள் சிறுபிள்ளைகள்போல் புறக்கணித் திருக்கிறார்கள். தாம் வாழ்வதற்குக் காரணமாக இருக்கும் தாய்மரத்துக்கே தீங்கு செய்யும் குருவிச்சைகளாகச் செயற்பட்டிருக்கிறார்கள்.
 
பதவி ஆசையா காரணம்?
எவ்வித பொருத்தமான காரணங்களுமின்றி பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளாமல் விட்டிருக்கிறார்கள். வெளியில் போட்டுடைக்க முடியாத சுயநலக் காரணங்களைத் தொண்டைக்குள்ளேயே வைத்துக்கொண்டு ஆளுக்கொரு காரணத்தை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். தன் தம்பிக்கு அமைச்சுப்பதவி தரவில்லை என்பதற்காக ஒருவர் முரண்பட்டிருக்கிறார்.
 
அமைச்சுப் பதவிகள் தமக்குத் தரப்படவில்லை என்பதால் ஒரு கட்சியின் தலைவரும் இன்னோர் கட்சியின் உறுப்பினர்கள் இருவரும் முரண்பட்டிருக்கிறார்கள். இந்த நால்வரு மாகச் சேர்ந்து தங்கள் வார்த்தைகளை நம்பி ஏமாந்த உறுப்பினர்களையும் சேர்த்துக் கொண்டு பதவியேற்பு நிகழ்வுப் புறக்கணிப்பை நடத்தியிருக்கிறார்கள்.
முதலமைச்சருக்கு உறுதுணையாகச் செயற்படவேண்டும் என்றே மக்கள் எல்லா உறுப்பினர்களுக்கும் ஆணையிட்டிருக்கிறார்கள். மாறாக அமைச்சுப் பதவிக்காக மோது வதற்காக மக்கள் வாக்களிக்க வில்லை.
 
பொது வேட்பாளராக விக்னேஸ்வரனை நிறுத்துவதற்கும் அவரையே முதலமைச்சர் ஆக்குவதற்குமான முடிவை தேர்தலுக்கு முன்னர் எல்லோரும் சேர்ந்துதான் மேற் கொண்டிருந்தார்கள். இந்த முடிவின் மூலம் முதலமைச்சராகத் தேர்வாகும் விக்னேஸ் வரனுக்குக் கட்டுப்பட்டு நடப்போம் என்ற உறுதியையும் வெளிப்படுத்தி இருந்தார்கள். 
எனினும் தேர்தல் நிறைவுற்று கடமைகளைச் செய்ய ஆயத்தமாகும் போதே முதலமைச்சர் மேல் குறை கூறுபவர்களாக இவர்கள் செயற்படத் தொடங்கியுள்ளார்கள். முதலமைச்சரோ தகுதிப் பொருத்தம் பார்த்து தான் நான்கு அமைச்சர்களையும் தேர்வு செய்திருக்கிறார். கட்சி அடிப்படையில் பார்த்தாற்கூட இரண்டு பேர் தமிழரசுக் கட்சியிலிருந்தும் ஒருவர் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியிலிருந்தும் நான் காமவர் தமிழீழ விடுதலை இயக்கத்திலிருந்தும் தெரிவாகியுள்ளனர்.
 
தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பான அமைச்சராக நியமனம் பெற்றவர் பொருத்த மானவர் என்பதை ஏற்று அவ்வியக்கத்தின் தலைவர் செல்லம் அடைக்கலநாதன் பதவியேற்பு நிகழ்வில் பங்குபற்றியிருந்தார். ஆனால் அதே அணியைச்சேர்ந்த சிவாஜி லிங்கமோ, வைத்தியர் குணசீலனோ தமக்கு அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை என்பதற்காகப் புறக்கணிப்புச் செய்திருக்கிறார்கள். 
 
தம்பிக்காக அண்ணன்
ஈழமக்கள் புரட்சிகர முன்னணியைப் பொறுத்தமட்டில் ஒருவர் அமைச்சராக நியமனம் பெற்றிருக்கிறார். ஆனால் அதன் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரனோ தனது தம்பியாருக்கு அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை என்பதால் கொதித்தெழுந்து நிகழ்வைப் புறக்கணித்திருக்கிறார். அதுமட்டுமன்றி தனது கட்சி சார்ந்து அமைச்சுப்பதவி பெற்ற ஐங்கரநேசனுக்கும் தமது கட்சிக்கும் இனிமேல் ஒட்டோ, உறவோ இல்லை என்று அறிக்கைவேறு விட்டிருக்கிறார். 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகத்துக்கும் இதனை கடிதம் மூலம் அறிவித்திருக்கிறார். தனக்குத் தெரியப்படுத்தாது ஐங்கரநேசன் பதவியைப் பெற்றுக்கொண்டார் என்று இவர் சொல்லும் வாதம் பொருத்தமானதாக இல்லை. அவ் வாதத்தை உண்மையயன்று ஏற்றுக்கொண்டாற்கூட அது அவருடைய உட்கட்சிப் பிரச்சினையேயன்றி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரச்சினையோ அல்லது முதலமைச்சரின் பிரச்சினையோ அல்ல. 
 
குழப்ப அணியில் சித்தரும் அமைதி பேணும் ஆனந்தியும்
கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் நிற்காத உறுப்பினருக்கும் கட்சி உறுப்பினரைக் கட்டுப்படுத்த முடியாமல் நிற்கும் செயலாளர் நாயகத்துக்குமான பிரச்சினை. புளொட் தலைவர் சித்தார்த்தன் சற்றுத் தெளிந்த மனதுடன் நடந்திருக்கலாம். தன்னைவிட அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற அனந்தி அமைதியாய் இருப்பதை முன்னுதாரணமாகக் கொண்டிருக்கலாம். 
 
அதிகூடிய விருப்புவாக்குகளைப் பெற்ற வேட்பாளர் என்ற வகையிலும் ஒரேயொரு பெண் என்ற வகையிலும் அமைச்சுப் பதவியைக் கேட்டுப் பெறுதற்கான நியாயங்கள் இருந்தும்  முதலமைச்சரின் தெரிவுக்கு அவர் ஒத்துழைத்திருக்கிறார். ஆனால் சித்தார்த் தனோ குழப்பஅணியில் ஒருவராகி விட்டிருந்தார்.
ஊர் மக்களும் தமிழரசுக்கட்சியின் பழைய உறுப்பினர்களும் தர்மலிங்கம் என்ற உன்னத மனிதனின் மகனாகவே அவரைப் பார்க்கிறார்கள். தர்மலிங்கம் ஐயா மக்களுக்காக உழைத்ததை எண்ணி இன்றும் பெருமைப்படுகிறார்கள். சித்தார்த்தன் இவற்றை அனுசரித்து தனது அரசியல் நடவடிக்கைகளை அமைத்துக்கொண்டால் மக்கள் மத்தியில் மேலும் சிறப்புப் பெற வாய்ப்பிருக்கிறது. 
 
அரசியல் உழைக்கும் வழியல்ல
ஒன்பதுபேர் பதவிப்பிரமாண நிகழ்வைப் புறக்கணித்தமை தொடர்பாக முதல்வர் அன்றைய தமது உரையிலேயே கவலைத் தெரிவித்திருக்கிறார். அரசியல் உழைக்கும் வழியன்று: மக்களை நேரிய பாதையில் அர்ப்பணிப்புடன் அழைத்துச்செல்லும் பொறுப் புடையது என்பதைத் தெளிவுபடுத்தியிருந்தார். தமது உறவுகளுக்கு அமைச்சுப்பதவிகள் கொடுக்கப்படவில்லை என்பதற்காக நிகழ்வைப் புறக்கணிப்பது சரியான செயலன்று என்றும் இடித்துரைத்திருந்தார்.
முதல்வரின் திறந்த பேச்சு, முன்வைத்த நியாயங்கள் ஆகியவை மக்களிடம் தெளிவை ஏற்படுத்தியதால் புறக்கணிப்பில் ஈடுபட்டவர்கள் அதில் தொடர்ந்தும் நிற்க முடியாமல் உள்நுழைவதற்கான வழிவகைகளைக்கையாள வேண்டிய நெருக்கடிக்கு உள்ளானார்கள். 
 
மாவையிடம் வேகாத பருப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராசாவிடம் போயிருக்கிறார்கள். நாங்கள் முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்யப்போகிறோம். அதற்கு நீங்கள்தான் தலைமை தாங்க வேண்டும் எனவும் கேட்டிருக்கிறார்கள்.
 
ஆனால் அவரோ தந்தை செல்வாவின் சமாதியின் முன் பதவிப்பிரமாணம் எடுப்பதற்கான விருப்பைத் தலைவர் சம்பந்தன் வெளியிட்டவேளையில் பதவிப் பிரமாணத்தின் போது கூறப்படும் வாக்கியங்கள் தந்தை செல்வாவுக்கு ஏற்புடையனவல்ல, எனவே பொது இடத்தில் சத்தியப் பிரமாணம் செய்வதே சரியானது எனத்தான் தலைவரிடம் தெரிவித்ததை அவர்களிடம் எடுத்துரைத்திருக்கிறார்.
இந்த நிலையில் அவலப்பட்ட மனித ஜீவன்கள் அடங்கிய புனிதமான முள்ளிவாய்க் காலில் சத்தியப்பிரமாண வாக்கியங்களை உச்சரிப்பது அந்த ஆத்மாக்களுக்கு நாம் செய்யும் துரோகம் ஆகாதா என்றும் கேட்டிருக்கிறார். இத்தகைய ஒரு துரோகத்துக்குத் தலைமை தாங்க தன்னால் முடியாது என்றும் மறுத்துரைத்திருக்கிறார்.
 
ஆயரும் மடங்கவில்லை
மன்னார் ஆயரை இவர்கள் அணுகிய போதும் அவரும் அறிவுரைகள் கூறியிருக்கிறார். ஆனால் சிவாஜிலிங்கமோ எல்லாவற்றையும் உதறித்தள்ளிவிட்டு தனியாளாக முள்ளி வாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.
இந்த நிலையில் தமிழர்களின் புனித மண்ணான முள்ளிவாய்க்காலை அவர் தனது   அரசியலுக்காகப் பயன்படுத்தியமையை முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு நிகழ்ந்த மாபெரும் துயரநிகழ்வு என்றே கூறவேண்டும். இப்படியயல்லாம் நடந்துகொள்வது அரசியற் புரட்சி என்று சிலர் கருதலாம். ஆனால் மக்கள் இதனை அரசியல் வறட்சியாகவே பார்க்கிறார்கள். எவ்வாறெனினும்  ஒருவர் தவிர்ந்த ஏனைய அனைத்து உறுப்பினர்களும் ஆங்காங்கே தமது பதவிப் பிரமாணங்களை நிறைவு செய்திருக்கி றார்கள். இந்த ஒன்பது பேரும் ஓரணியில் நின்று இதனைச் செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
 
தனித்தனி நோக்கங்களால் ஓரணி திரள முடியாத 9 பேர்
ஒன்பது பேரும் தனித்தனி நோக்கங்களுக்காக முனையும்போது ஓரணியில் திரள்வது என்பது முடியாத காரியமாகி விட்டது. மூத்த அரசியல்வாதியான சம்பந்தரின் ஆலோசனைப்படிதான் நாங்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளோம் என்று இப் போது அறிக்கைவிடும் சிவசக்தி ஆனந்தன், வீரசிங்கம் மண்டபத்தில் இடம் பெற்ற பதவியேற்பு நிகழ்வுக்கு இவர்களையும் உட்படுத்தி இருப்பாரேயானால் அவரது அறிக்கை பெறுமதியுடையதாக இருந்திருக்கும். 
 
அரசியல் தெளிவானோர் தமிழ் மக்கள்
ஆனால் ஒன்றுமட்டும் உறுதி. அரசியல்வாதிகளைக் காட்டிலும் தமிழ் மக்கள் அரசியல் தெளிவுள்ளவர்களாக இருக்கிறார்கள். புறக்கணித்துச் சென்ற ஒன்பது பேரின் நியாயங்களையும் புரிந்து வைத்திருக்கிறார்கள். எந்தந்த மாவட்டத்திலிருந்து யார், யார் அமைச்சுப் பதவிக்காகத் துடித்தார்கள் என்பதை அந்தந்த மாவட்ட மக்கள் துல் லியமாகக் கணித்து வைத்திருக்கிறார்கள். தாம் பிள்ளையார் பிடிக்க முயலும் வேளையில் சிலர் குரங்குகளாகிக் கொண்டிருக்கிறார்களே என்ற கவலை தமிழ் மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறது.
 
நெறிதவறிச் செயற்படுவோரை தூக்கியயறிவர் தமிழ் மக்கள்
மாகாண அமைச்சுப் பதவிகள், உறுப்பினர் பதவிகள் ஆகியவை தமிழ் மக்களின் போராட்டப் பாதைக்குப் பயன்படும் படிக்கற்களே தவிர, ஒருசிலர் மாகாண அமைச்சர்களாக வேண்டும் அல்லது உறுப்பினர்களாக வேண்டும் என்பதற்காகத் தமிழ் மக்கள் போராடவில்லை என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவான வடக்குக் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
அரசை மகிழ்ச்சிப்படுத்துமாற்போல் அல்லது அரசின் நிகழ்ச்சிநிரலுக்கு இசைந்தாற்போல் யார் செயல்பட முற்பட்டாலும் தமிழ் மக்கள் அவர்களைத் தூக்கி எறிவார்கள் என்பது சர்வ நிச்சயம். பொருந்தாக்காரணங்களுடன் பொது நிகழ்வைப் புறக்கணித்த உறுப்பினர்களும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=1328552229638839

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.