Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இசைப்பிரியாவின் காணொளி இலங்கை இனப் படுகொலையின் அடையாளமா? கட்டுரை: செல்வரட்னம் சிறிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுநலவாய மாநாடு கொழும்பில் நடைபெறுவதற்கான ஆயத்தங்கள் தடல்புடலாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆரம்ப நாள் வைபவத்திற்கு மாத்திரம் 50 மில்லியன் செலவாகும் என அதிகாரிகள் அறிவித்திருக்கின்றார்கள். பொதுநலவாய மாநாட்டை நடத்துவதென்பது அதனை நடத்துகின்ற நாட்டுக்கு அரசியல் ரீதியாகக் கிடைக்கின்ற ஓர் உயர்ந்த கௌரவமாகக் கருதப்படுகின்றது. அத்துடன் அந்த நாட்டின் செயற்பாடுகள் ஆட்சி முறை என்பவற்றைப் பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகள் ஏற்றுக் ககொண்டிரு;கின்றன என்றதோர் அங்கீகாரமும் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.

அந்த வகையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திலும், யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின்போதும், சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை அரச படைகள் மோசமான முறையில் மீறியிருந்தன. பயங்கரவாதத்தை ஒழிக்கின்றோம் என்ற போர்வையில் அங்கு ஓர் இனப்படுகொலையே இடம்பெற்றது என்று சர்வதேச அளவில் இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதியான சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று ஐநா மன்றமும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், சர்வதேச நாடுகளும் கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திடம் வலிளூயுறுத்தி வந்திருககின்றன. ஆயினும் அத்தகையதொரு விசாரணை அவசியமில்லை. வேண்டுமானால் உள்ளுரிலேயே அந்த விசாரணைகளை நாங்களே நடத்துவோம் என்று இலங்கையும் விடாப்பிடியாகக் கூறி வந்துள்ளது. அத்துடன் அதற்கான நடவபடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்திருந்தது.

ஆனாலும், அந்த விசாரணைகள் ஆக்கபூர்வமானதாக அமையவில்லை. பக்கார்பற்ற முறையில் நியாயமான முறையில் இடம்பெறவில்லை. இதனால் ஐநாவும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், சர்வதேச நாடுகள் பலவும், மினத உரிமைகள் தொடர்பில் இலங்கையின் அணுகுமுறைகள் குறி;த்து பெரிதும் அதிருப்தியடைந்திருக்கின்றன.

யுத்தம் முடிவடைந்த பின்னரும், நாட்டில் பேச்சுச் சுதந்திரம், ஊடக சுதந்திரம், நீதித்துறையின் சுதந்திரமான செயற்பாடு, அரசியல் சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயகப் பண்புகளைக் கடைப்பிடிப்பதில் தொடர்ந்து நிலவுகின்ற மோசமான நிலைமைகளினால் இலங்கை அரசாங்கத்தின் மீது ஐநா தொடக்கம் அனைத்துத் தரப்பினரும் சலிப்படைந்துள்ளனர். இருப்பினும் இலங்கை அரசாங்கம் தனது போhக்கில் எந்தவிதமான மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்களே என்ற பிடிவாதப் போக்கிலேயே சென்று கொண்டிருக்கின்றது.

அசட்டை செய்யப்பட்டுள்ள அரசியல் தீர்வு

சிறுபான்மையினத்தவராகிய தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே, விடுதலைப்புலிகள் ஆயதமேந்தி மிகத் தீவிரமாகப் போராடினார்கள். ஆனால் அரசாங்கம் அவர்களுடைய செய்பாடுகளைப் பயங்கரவாதச் செயற்பாடுகளாக உலகத்திற்கு எடுத்துக் காட்டியது. அவர்களைப் பயங்கரவாதிகளாக உலக நாடுகளின் முன்னால் நிறுத்தி, இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் பலவற்றையும் வளைத்திழுத்து, அவற்றின் ஆதரவோடு மோசமான யுத்தம் ஒன்றில் விடுதலைப்புலிகளை அரசாங்கம் தோற்கடித்து வெற்றிவாகை சூடியிருக்கின்றது.

அரசாங்கம் கூறியதென்பதைவிட, அரசியல் மற்றும் இராஜதந்திரம் உள்ளிட்ட வேறு பல காரணங்களுக்காகவும் உலக நாடுகள் பலவும் விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகளாகப் பார்த்து, அந்த அமைப்பைத் தடைசெய்திருந்தன. ஒதுக்கி வைத்திருந்தன. ஆயினும், விடுதலைப்புலிகள் அரசியல் காரணங்களுக்காகவே ஆயதமேந்திப் போராடினார்கள், இலங்கையில் சிறுபான்மையினராகிய தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் பிரச்சினை இருக்கின்றது, அந்த இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் புரையோடிப் போயிருக்கின்றது என்பதை ஐநா தொடக்கம், சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் சர்வதேச நாடுகள் என பல தரப்பட்டவர்களும் நன்கு உணர்ந்திருக்கின்றார்கள்.

எனவே, விடுதலைப்புலிகளைக் கொன்றொழித்து, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ள இலங்கை அரசாங்கம்,  யுத்தத்தின் பின்னர், இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்று அவர்கள் எதிரபார்த்திருந்தார்கள். ஆனால், அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் எந்தவிதமான அக்கறையையும் காட்டவில்லை.

மனித உரிமை மீறல்கள் பற்றிய விடயத்தில் மட்டுமல்லாமல், இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுகின்ற விடயத்திலும் அக்கறையற்றிருப்பதை அவர்கள் நன்கு அறிந்திருக்கின்றார்கள். இந்தப் பின்னணியிலேயே, சுழற்சி முறை நடவடிக்கையின் மூலம், இம்முறை கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதா இல்லையா என்று அவர்களில் பலரும் சிந்திக்கத் தலைப்பட்டிருந்தார்கள். பல நாடுகள் இந்த மாநாடடில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கின்றன. அயல் நாடாகிய பாரத தேசத்தின் பிரதமர் மன்மோகன் சிங் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதா இல்லையா என்று அல்லாடிக் கொண்டிருக்கின்றார். எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியதைப்போல, இந்தியாவில் பலரும், மன்மோகன் சிங் இலங்கை மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்திருக்கின்றார்கள்.

இந்த நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தொலைக்காட்சி அறிவிப்பாளரும், நடிகையுமாகிய இளம் பெண் இசைப்பிரியாவை, இறுதி யுத்தத்தி;ன் போது இலங்கை இராணுவத்தினரால் உயிருடன் பிடித்து இழுத்துச் செல்வதை அப்பட்டமாகக் காட்டுகின்ற தொலைக்காட்சிப் படமும் வெளியாகி சர்வதேச மட்டத்தில் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

இசைப்பிரியா பற்றிய காணொளி

இறுதி யுத்தத்தின்போது இசைப்பிரியா பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டு கிடந்த காட்சிகள் அடங்கிய படங்கள் வெளியாகியிருந்தன. இதற்கு  இராணுவத்தினரே பொறுப்பு என்ற குற்றச்சாட்டு முன்னர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் தொலலக்காட்சி அறிவிப்பாளர் மற்றும் நடிகையாக இருந்தார் என்பதையும் அரசாங்கம் மறுதலித்திருந்தது. அவர், லெப்டினன் கேணல் பதவியில் இருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர் என்றும், சண்டையிலேயே அவர் கொல்லப்பட்டிருந்தார் என்றும் அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால், இப்போது சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டுள்ள காணொளியில், அவர் உயிரோடு இராணுவத்தினரால் பிடித்து இழுத்துச் செல்கின்ற காட்சிகள் அடங்கியிருக்கின்றன.

அது மட்டுமல்லாமல், விடுதலைப்புலிகனின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள்தானே என்று, இசைப்பிரியாவை, சேற்று நிலத்திலிருந்து தூக்கி இழுத்துச் செல்கின்ற இராணுவத்தினர் குற்றம் சுமத்துவதையும், அதனை அவர் மறுப்பதையும் இந்தக் காணொளியின் உரையாடல்; தெரிவித்திருக்கின்றது. இதனால், இராணுவத்தினர் இசைப்பிரியாவை இம்சித்திருப்பார்கள்;, அவரை சித்திரவரைக்கு உள்ளாக்கியிருப்பார்கள், எனவே, அவருடைய இறப்புக்கும், இறப்பின் முன்னர் அவருக்கு நேர்ந்தவற்றிற்கும் அவர்களே காரணம் என்பது தெளிவாகப் புலனாகின்றது என்று மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றார்கள்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்தாலும்கூட, நிராயுதபாணியாக இருக்கின்ற ஒரு பெண்ணை இராணுவத்தினர் கையாள்கின்ற விதம் குறித்தும், ஏற்கனவே வெளியாகியுள்ள அவருடைய இறந்த உடல் மற்றும் அந்த உடலில் தென்பட்டிருந்த அடையாளங்கள் என்பன அவருடைய மரணத்திற்கும், அவருக்கு ஏற்படுத்தப்பட்டதாகக் கருதப்படுகின்ற மோசமான அகௌரவத்திற்கும் இராணுவத்தினரும், இலங்கை அரசாங்கத்தினரும் பதிலும், பொறுப்பும் கூற வேண்டியவர்களாகியிருக்கின்றனர்.

மோசமான மனித உரிமை மீறல்

பாலியல் வல்லறவு என்பது சாதாரணமாகவே மிக மோசமான குற்றச்செயலாகக் கருதப்படுகின்றது. உலகில் எவரும், எந்த நாட்டவரும், பாலியல் வல்லுறவை நியாயப்படுத்த முனையமாட்டார்கள். ஏனெனில் இயற்கை நீதியின் படியும், நாடுகளில் உள்ள சட்டம் ஒழுங்குளின்படி, அது ஒரு பாரதூரமான குற்றச் செயலாகும். அந்த வகையில் அதற்குப் பொறுப்பானவர்கள் அல்லது அதனைச் செய்தவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படுகின்றது. இதுவே உலக நியதியாகும்.

இசைப்பிரியாவைப் பொறுத்தமட்டில், நிராயுதபாணியாக, சாதாரண ஒரு பெண்ணாகவே, அவர் இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்படுகின்றார். இந்தச் சம்பவம் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றிருக்கின்றது. விடுதலைப்புலிகளின் தலைவர்கள் மற்றும் தலைமை நிலை தளபதிகள் என முக்கியஸ்தர்கள் பலரும் கொல்லப்பட்ருந்த சூழலில் மிஞ்சியிருந்தவர்களை இராணுவத்தினரிடம் சரணடையுமாறு அரசாங்கம் கோரியிருந்தது. யுத்த களத்தில் அழிவுகளுக்கு மத்தியில் மிஞ்சியிருந்தவர்கள், உயிர் தப்புவதற்காகப் போராடிக்கொண்டிருந்த வேளை அது. விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்திருந்த அனைவருக்கும் பொது மன்னிப்பும் பாதுகாப்பும் வழங்கப்படும். எனவே, அவர்கள் அனைவரும் இராணுவத்தினரிடம் சரணடைய வேண்டும் என்று போர்க்களத்தில் இருந்து வெளியேறிக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் ஒலிபெருக்கி மூலமாக இராணுவத்தினர் அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.

யுத்த களத்தில் வெற்றிபெற்றவர்களிடம் தோல்வியுற்றவர்கள் தாமாகவே சரணடைந்தால்கூட, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களை மனிதாபிமான முறையில் நடத்த வேண்டும் என்பது யுத்த நியதியாகும். இதுவே சர்வதேச மனிதாபிமான நடைமுறையுமாகும். ஆனால், இலங்கையில் பாதுகாப்பளிக்கப்படும், பொது மன்னிப்பு வழங்கப்படும் எனவே இராணுவத்தினரிடம் சரணடையுங்கள் என்று அரசாங்கம் கேட்டுக்கொண்டதற்கமைவாக பலர் படையதிகாரிகளிடம் சரணடைந்திருந்தார்கள். விடுதலைப்புலிகள் அமைப்பில் ஒருநாள் இருந்திருந்தாலும்கூட அவர்களும் சரணடைய வேண்டும் என்பது இராணுவத்தின் உத்தரவாக அப்போது இருந்தது.

இந்தச் சூழ்நிலையில், தொலைக்காட்சியில் அறிவிப்பாளராகவும், நடிகையாகவும் பணியாற்றியிருந்த இசைப்பிரியாவைத் தெரியாதவர்கள் அப்போது இருந்திருக்க முடியாது. இராணுவத்தினரும் அவரை அறிந்திருப்பார்கள். குறிப்பாக இராணுவ புலனாய்வாளர்கள் அவரை நன்கு அடையாளம் கண்டிருப்பார்கள். இத்தகைய ஒரு நிலையில் இசைப்பிரியா இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் மோசமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டுள்ளார். அவர் இறந்ததை அரசாங்கமும் உறுதிப்படுத்தியிருக்கின்றது. இதனால், இசைப்பிரியாவின் மரணமானது, இலங்கையின் மனித மோசமான மனித உரிமைச் செயற்பாட்டில் ஒரு முக்கிய அம்சமாகியிருக்கின்றது. இவருடைய மரணத்திற்கு பதில் சொல்லவேண்டிய கட்டாய நிலைமைக்குள் அரசங்கம் தள்ளப்பட்டிருக்கின்றது.

போர்க்கால வன்புணர்வென்பது, இனப்படுகொலை - போர்க்குற்றம்

யுத்த காலத்தில் இடம்பெறுகின்ற பாலியல் வல்லுறவும், பாலியல் வன்முறையும் சாதாரண நிகழ்வுகளாகக் கருதிய காலம் மலையேறிவிட்டது. யுத்த வெற்றியின்போது, இராணுவ சிப்பாய்களுக்குக் கிடைத்த வெற்றிக் கிண்ணமாகவே அது காலம் காலமாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால், ருவாண்டா நாட்டின் இனப்படுகொலைகள் தொடர்பாக, ஜீன்போல் அக்காயேசு என்பவருடைய வழக்கில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பொன்றில் பாலியல் ரீதியான தாக்குதாகிய  பாலியல் வன்முறையும், வன்புணர்வும் இனப்படுகொலையின் அம்சமாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்தத் தீர்ப்பானது வரலாற்றுப் பிரசித்தி பெற்றது மட்டுமல்லாமல், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மிக மிக முக்கியமான தீர்ப்பாகக் கருதப்படுகின்றது.

ருவாண்டா இனப்படுகொலைகள் சம்பந்தமான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் எட்டு வருடங்கள் செயற்பட்டிருந்தது. சர்வதேச மனித உரிமைச் செயற்பாட்டாளர்களில் பல வகைகளில் முன்னோடியாகத் திகழ்கின்ற ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவிப்பிள்ளை இந்த நீதிமன்றத்தில் பணியாற்றியிருக்கின்றார். நான்கு வருடங்கள் அதன் தலைமை நீதியதியாகவும் பணியாற்றிய இவர் ஒருவரே ஜீன்போல் அக்காயேசு வழக்கில் ஒரேயொரு பெண் நீதியரசராகப் பங்கேற்றிருந்தார்.

இந்த வழக்கு விசாரணைகள் முடிவடைந்து தீர்ப்பளிக்கப்பட்டதன் பின்னர் அவர் கூறிய வார்த்தைகள் மிகவும் மு:க்கியமானவை. 'நினைவுக்கு எட்டாத காலந் தொடக்கம் வன்புணர்வு என்பது யுத்த அழிவுகள், யுத்தத்தினால் ஏற்படுகின்ற சேதங்களில் ஒன்றாகவே கருதப்பட்டு வந்திருக்கின்றது. ஆனால் இனிமேல் அது ஒரு போர்க்குற்றமாகக் கருதப்படும். எனவே வன்புணர்வென்பது இனிமேலும் யுத்த வெற்றிக் கேடயமல்ல என்ற சமிக்ஞையை வலுவான முறையில் நாங்கள் வெளிப்படுத்த விரும்புகின்றோம்' என அவர் தெரிவித்திருக்கின்றார். இதனடிப்படையில் இசைப்பிரியாவின் மரணம் இலங்கை அரசாங்கத்தை எங்கு கொண்டு நிறுத்த்pயிருக்கின்றது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  

உள்ளுரிலும் நெருக்கடிகள்

இராணுவத்தினரால் இசைப்பிரியா பிடித்துச் செல்லப்படுகின்ற காட்சிகள் அடங்கிய காணொளியானது சர்வதேச மட்டத்தி;ல் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் மனதாபிமானம் கொண்டவர்கள் மத்தியிலும் சர்வதேச நாடுகள் மத்தியிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருப்பதைப் போலவே, உள்ளுரிலும் பல மட்டங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த அதிர்ச்சியின் விளைவாகவே பலதரப்பினரும், இசைப்பிரியாவின் கொலையைக் கண்டித்திருக்கின்றார்கள். நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருக்கின்றார்கள்.

அரசுடன் இணைந்து செயற்பட்டு வருகின்ற ஈபிடிபியின் செயலாளர் நாயகமும், அமைச்சரவை அந்தஸ்து பெற்றுள்ளவருமாகிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாகூட,
இசைப்பிரியாவின் மரணம் தொடர்பில் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கடிதம் மூலம் கோரியிருக்கின்றார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகனாகிய பாலகன் பாலச்சந்திரன் பால் வடியும் முகத்தோடு, குழந்தைகளுக்கே உரிய வகையில் எந்த வஞ்சகமுமின்றி இராணுவ காவலரண் ஒன்றில் எதையோ சாப்பிட்டுக் கொண்டிருப்பதையும், அதே, உடைகளுடன், அதே முக உணர்வுகளுடன் துப்பாக்கிக் குண்டுகள் உடலில் பாய்ந்திருக்க செத்துக் கிடந்த காட்சிகளைக் கொண்ட படங்களும் வெளியாகி உலகத்தை உலுப்பியிருந்தன. அதற்கு அடுத்ததாக இசைப்பிரயா இராணுவத்தினரால் பிடித்து இழுத்துச் செல்லப்படுகின்ற காணொளியும் மனிதாபிமானம் கொண்டவர்களை உலுப்பியிருக்கின்றது.

பாலகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டு கிடந்ததைப் போன்று சிறுவர்கள், குழந்தைகள் பெண்கள் என பலதரப்பட்டவர்களும் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தின் தாக்குதல்களினால் கொல்லப்பட்டிருந்ததாகக் காணொளி காட்சிகளாக சனல் 4 வெளியிட்டிருந்தது. அவையெல்லாம் ஏற்படுத்தாத அனுதாப உணர்வை இசைப்பிரியா தொடர்பிலான காணொளி அமைச்சர் டக்ளசிடம் ஏற்படுத்திருப்பதைக் காண முடிகின்றது. அதன் விளைவாகவே, இசைப்பிரியாவின் மரணம் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதியிடம அவர் கோரியிருக்கின்றார்.

அரசாங்கத்தின் மறுப்பும் ஜாதிக n1ல உறுமயவின் கோரிக்கையும்

இசைப்பிரியா தொடர்பான காணொளியைப் பொய்யானது என அரசாங்கம் மறுத்துரைத்திருக்கின்றது. அந்தக் காட்சிகள் சோடிக்கப்பட்டவை. அது ஒரு நாடகம் என்றெல்லாம் அரசாங்கத் தரப்பில் வர்ணிக்கப்பட்டிருக்கின்றது. அந்தக் காணொளியில் காணப்படுபவர் இசைப்பிரியாவா என்று கேள்வியும் எழுப்பப்பட்டு நிராகரிக்கப்பட்டிருக்கின்றது. அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளுவதற்காக நேரம் பார்த்து வெளியிடப்பட்ட காணொளி என்றும் அது புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது.

அதேநேரம், ஜாதிக ஹெல உறுமய இந்தக் காணொளி உண்மையாக இருக்குமேயானால் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரியிருக்கின்றது. ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சட்ட ஆலோசகரும், மேல் மாகாண அமைச்சருமாகிய உதய கம்மன்பில இசைப்பிரியாவின் காணொளி தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறியிருக்கின்றார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற ஈபிடிபி, இசைப்பிரியாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கோரியிருக்கின்றாரே என கேட்டபோதே, அவர் இதனைத் தெரிவித்திருக்கின்றார்.

ஜாதிக ஹெல உறுமய என்பது இலங்கையின் பெரும்பான்மை இன தீவிர இனவாதக் கட்சியாகும். தமிழ் மக்களுக்கு எதிராகவும், அவர்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம் தொடர்பாகவும் நேரெதிரான கடும்போக்கு சிந்தனையும், செயற்பாட்டையும் கொண்டது. அந்தக் கட்சியின் சட்ட ஆலோசகரே இசைப்பிரியாவின் மரணம் தொடர்பான தகவல்கள் உண்மையாக இருந்தால் விசாரணை நடத்த வேண்டும் என கேட்டிருப்பது அந்த மரணத்தின் தாக்கம் எத்தகையது என்பது புலனாகின்றது.

மொத்தத்தில் முள்ளிவாய்க்காலில் அநியாயமாகக் கொல்லப்பட்டவர்கள் ஆவி வடிவில் அல்லாமல், காணொளிகளாகவும், புகைப்படங்களாகவும் அவ்வப்போது வெளியில் வந்து இலங்கை அரசாங்கத்தைத் துரத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் காலம் பார்த்து நேரம் பார்த்து வெளிப்படுவதுதான் இதில் முக்கியமாகும். மோசமான மனித உரிமை மீறல்கள் தொhடர்பில் பதில் கூறாமலும், பொறுப்பு சொல்லாமலும் காலம் கடத்திக் கொண்டிருக்கின்ற இலங்கை அரசாங்கத்தை பொதுநலவாய அமைப்பும், அத்ன அங்கத்துவ நாடுகளும் எவ்வாற கையாளப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98595/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.