Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திராவிட கட்சிகளின் கொள்கை செத்து விட்டது: சீமான் சிறப்பு பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"திராவிட கட்சிகள் நேர்மையற்று கொள்கையற்று செத்து வீழ்ந்து விட்டது" என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆவேசமாக கூறினார்.

புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விகடன் டாட்காமுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டால், அரசுக்கு தரும் ஆதரவு வாபஸ் பெறப்படும் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளாரே?

இது காலங்கடந்தது. ‘இசைப்பிரியாவுக்கு இப்படி நடந்துவிட்டது; இனிமேலும் போகலாமா? இதற்கு மேலும் பொறுத்துக் கொண்டிருக்கலாமா? நாம் தமிழர்கள் தானா? இதற்கு மேலும் இந்தியா போகலாமா? என்று கேட்கிறார். இதைத்தானே நாங்கள், ‘இதற்கு மேலும் இந்த அரசில் பங்கேற்கலாமா?’ என்று அன்று கேட்டோம். இன்று எடுத்திருக்கும் நிலைப்பாட்டை அன்றே நீங்கள் எடுத்திருந்தால், இசைப்பிரியா காப்பாற்றப்பட்டிருக்கலாம். இவ்வளவு பெரிய இழப்பே நேர்ந்திருக்காது. போர் நடக்கும்போது நடந்த தேர்தலில் ஈழப் பிரச்னை பிரச்னையே இல்லை. அது போய் மக்களை சேரவே இல்லை. அதனால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று பேசியவர்கள், இன்று இப்படி பேச வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கென்றால், ஈழத்தில் நடந்த படுகொலை பற்றி மக்களுக்கு ஏற்பட்டுள்ள தெளிவும் அரசியல் விழிப்புணர்வும் தான் காரணம். இன்னும் நான்கு மாதங்களில் ஆட்சி முடியப் போகிறது, தேர்தல் வரப் போகிறது. இந்த நேரத்தில் வெளியேறினால் என்ன? கூட இருந்தால் தான் என்ன?

chidambaram%20%201%2812%29.jpg‘இசைப்பிரியாவை கொலை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்’ என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். மத்திய அமைச்சர்கள் அந்தோணி, ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், நாராயணசாமி ஆகியோர் பிரதமர் காமென்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று அறிக்கை விட்டுள்ளனர். காங்கிரசிலேயே எதிர்ப்பு வலுத்துள்ளதே?

இது சந்தர்ப்பவாதம். இன்றைக்கு ஒரு இசைப்பிரியா உங்களுக்கு தெரிகிறது.  இசைப்பிரியாவைப் போல் பல்லாயிரக்கணக்கான பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி இலங்கை ராணுவம் கொலை செய்திருக்கிறது. அப்போதெல்லாம் கவனம் செலுத்தாதவர்கள், காது கொடுத்து கேட்காதவர்கள், இப்போது பேசுவதெல்லாம் வேடிக்கையானது. போர் நடக்கும்போது போரை நிறுத்துங்கள் என்று இவர்கள் பேசினார்களா? இன்று காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்று, அந்த மக்களுக்காக பேசி உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று இன்று கூறுகிறவர்கள், அன்று போரை நிறுத்துங்கள், பேசி தீர்த்துக் கொள்ளலாமென்று சொல்லவில்லையே? இன்று எல்லாவற்றையும் பேசி பெற முடியும் என்பவர்கள் அன்று போரை நிறுத்த வேண்டியது தானே? இரண்டு இனங்களுக்குள் உள்ள பிரச்னையை பேசி தீர்க்க வேண்டியது தானே? இன்றுள்ள நிலையில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்ள முடியாது. தேர்தல் நெருக்கடிதான் அவர்களை இப்படி பேச வைக்கிறது.

கொளத்தூர் மணியின் கைது செய்யப்பட்டுள்ளாரே?

அந்த கைது தேவையற்றது. நம் பிள்ளைகள் அந்த அலுவலகம் மூடிக்கிடக்கிற அலுவலகம் மீது வீசி தங்கள் உணர்வுகளை காட்டுகிறார்கள். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்றால், இதைப் போல் அறவழியில் போராடும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஒரு நியாயமான முடிவெடுக்காமல், தொடர்ச்சியாக இளைஞர்களை ஏமாற்றி, அவர்களை வன்முறை பாதைக்கு திசை திருப்புகிற ஆட்சியாளர்கள் மீது என்ன சட்டத்தை பாய்ச்சி தண்டிப்பது? கொளத்தூர் மணியே இந்த செயல் தேவையற்றது, கண்டிக்கத்தக்கது என்று கூறுகிறார். இந்த செயலில் ஈடுபட்ட பிள்ளைகளை கைது செய்த பிறகு, கொளத்தூர் மணியை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? விடிந்த பிறகு கைது செய்யாமல், நள்ளிரவில் பயணத்தில் இருந்தவரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது! தேவையற்றது!

vigneshwaran%20%282%29.jpgவடக்கு மாகாண தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வென்று விக்னேஷ்வரன் முதல்வரானதால், ஈழத் தமிழர் வாழ்வில் எந்தவித மாற்றங்கள் நிகழும்?

மாற்றம் எதுவும் வராது. அதை நம்பி ஏமாறவும், நாங்கள் தயாரில்லை. இது என்னைவிட வாக்களித்த என் மக்களுக்கு நன்றாகத் தெரியும். தேர்தல் முடிந்தவுடனே, இலங்கை உச்ச நீதிமன்றம் நில உரிமை, காவல்துறை உரிமை,  நிதி நிர்வாக உரிமை மூன்றுமே உங்களுக்கு கிடையாதென்று சொல்கிறது. அடிப்படை உரிமையே இல்லாமல் என்ன செய்ய முடியும்? இதில் ஒரே ஒரு லாபம் மட்டுமே உள்ளது. எமது மக்கள் ராணுவமயமாக்கப்பட்ட மண்ணுக்குள் நின்று கொண்டு, உயிரை பணயம் வைத்து துப்பாக்கி முனையில் நடந்த தேர்தலில், நாங்கள் சிங்கள அரசின் அதிகாரத்தின் கீழ், பயங்கரவாத பேரினவாத ஆட்சியின் கீழ், எங்கள் இனத்தையே அழித்த ராஜபக்‌சேவின் கீழ் அடிமையாக வாழ தயாராக இல்லை என்று உலகத்திற்கு காட்டியிருக்கிறார்கள். ராஜபக்‌சே அரசு மற்றும் இந்தியா போன்ற நாடுகள் சொல்வது போல் நாங்கள் தமிழர்களுக்கு வேண்டியதெல்லாம் நன்றாக செய்து கொடுத்துவிட்டோம், மீள் கட்டமைப்பு மிகச் சரியாக நடக்கிறது என்பது உண்மையானால், மக்கள் ராஜபக்‌சேவிற்குத்தானே ஓட்டு போட்டிருக்க வேண்டும்? ஐயா விக்னேஸ்வரனோ இல்லை இன்னொருத்தரோ வந்திருந்தாலும் அதிகாரமற்ற வலிமையற்ற இந்த பதவியை வைத்துக் கொண்டு, ஒன்றும் செய்ய முடியாது. செய்யவும் விடப் போவதில்லை.

தமிழீழத்தை வைத்து அரசியல் கட்சிகள் வியாபாரம் செய்கின்றனவா?

அது கிரானைட், தாது மணல், ஆற்று மணல் போலில்லையே! அள்ளி வித்து ஆதாயம் பெறுவதற்கு! தமிழீழத்தை இங்குள்ளவர்கள் எப்படி புரிந்து கொள்கிறார்கள் என்பது தான் முக்கியம். அது ஒவ்வொரு தமிழ்மகனின் தலையாய புனிதமான கனவு. அது வியாபாரம் செய்வதற்கு உப்பு, மிளகாயல்ல!  இதை வைத்து தி.மு.க, அ.தி.மு.க, இன்று பேசும் காங்கிரஸ்தான் அரசியல் செய்கின்றன. எங்களைப் போன்ற பிள்ளைகள், மாணவர்கள், சிறு சிறு அமைப்புகள் தொடர்ச்சியாக போராடி மக்கள் மத்தியில் ஓர் எழுச்சி ஏற்படுத்துகிறோம். அந்த எழுச்சியை தங்களுக்காக பயன்படுத்திக்கொள்ள ஒரு டெசோ மாநாடு, ஒரு தீர்மானம்,  ஒரு அறிக்கை விடுவது அவர்களது நிர்பந்தம்; நிலைப்பாடு கிடையாது! இதைத் தான் நீங்கள் அரசியல் சந்தர்ப்பவாதம், பிழைப்பு என்று சொல்லலாம்! ஆட்சி அதிகாரங்களில் இருப்பவர்கள் பேசும்போது அது தெரியவில்லை. அதே கருத்தை நாங்கள் பேசினால், அது குற்றமாகப்படுகிறது. இப்போது பொது நல மாநாடு இலங்கையில் நடைப்பெற கூடாதென்று சட்டசபையில் தீர்மானம் போடுகிறார்கள். அதை வலியுறுத்திதான் மாணவர்களும் மிதிவண்டி பயணம் செய்கிறார்கள். அவர்களை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? இதைப் புரிந்து கொள்ள முடியவில்லையே?  இந்த நெருக்கடிகளைத் தான் நாங்கள் எதிர்கொள்கிறோம். இதில் எங்களுக்கு எந்த லாபமும், வர்த்தகமும், பிழைப்பும் இல்லை.


jaya%206%284%29.jpgநீங்கள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ‘இங்கே இலை மலர்ந்தால் அங்கே ஈழம் மலரும்’ என்று தீவிரமாக பிரச்சாரம் செய்தீர்கள். அதே நிலைப்பாட்டை இன்றும் தொடர்கிறீர்களா?

அன்றைக்கு காங்கிரஸ் போரை நடத்துகிறது. தி.மு.க கண்டும் காணாமல் இருக்கிறது. அ.தி.மு.க, ம.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து நிற்கிறது. அப்போது, அம்மையார் ஜெயலலிதா திருநெல்வேலி கூட்டத்தில் ‘அந்த மக்களுக்கு தனித் தமிழீழம் தவிர வேறென்ன தீர்வு இருக்க முடியும்’ என்று மக்களிடம் கேட்கிறார்கள். அண்ணன் நடேசன், அண்ணன் சூசை, காங்கிரசை வீழ்த்தி ஒரு மாற்றரசு அமையும்போது இந்த போர் தற்காலிக நிறுத்தத்தையாவது பெறும், ஒரு பெருமூச்சு விட்டுக்கொள்வதற்கான இடைவெளியாவது கிடைக்கும் என்று அங்குள்ள போராளிகள் நம்புவதாக கூறுகிறார்கள். அப்போது அம்மையார் மக்களிடம் கூறிய நம்பிக்கைக்குரிய ஆறுதலான வார்த்தைகளால் தான், ‘இங்கே இலை மலர்ந்தால், அங்கே ஈழம் மலரும்’ என்று சொல்கிறோம். அதற்கு பிறகு அந்த நிலைப்பாட்டில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்களா என்று நீங்கள் அவர்களிடம் தான் கேட்க வேண்டும். இந்த விடுதலையை கலைஞர் பெற்றுத் தருவார்கள்,  ஜெயலலிதா பெற்றுத் தருவார்கள், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிற விஜயகாந்த் பெற்றுத் தருவார்கள் என்று நாங்கள் இல்லை. எங்களால் போராடி பெற முடியுமென்ற துணிவில்தான் இந்த செயலை செய்கிறோம். அதனால், தற்போது அந்த நிலைப்பாட்டில் நான் இல்லை. இங்கே ஆட்சி, அதிகாரத்திலுள்ள தலைவர்கள் எங்களுக்காக போராடி பெற்றுத்தர வேண்டாம்; ஆனால் போராடுகிற எங்களை தடுக்காமல், சிதைக்காமல் இருந்தாலே போதும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம், எதிர்பார்க்கிறோம்.

karuna%20200%2837%29.jpgஎம்.ஜி.ஆர் சமாதி முன்பு, மினரல் வாட்டர் பாட்டில், ஸ்மால் பஸ் இவற்றில் இடம் பெற்றுள்ள இலைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

திராவிட அரசியல் கட்சிகள் மாறி மாறி இப்படி தான் செய்கின்றன. பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டம் கொண்டு வந்த போது, அது தமிழ்நாடு அரசு மதிய உணவு திட்டமாகத் தான் இருந்தது. அவர் முதல்வராக இருந்த போது, சுந்தரம் என்னும் இயக்குனர் அவரிடம், ‘ஐயா! மக்களுக்காக நாம் நிறைய செய்திருக்கிறோம்! அதை செய்தியாக செய்தி பிரிவில் வெளியிடலாம்’ என்று கேட்கிறார். ‘அது எதுக்கு? நம்மதான் செய்யறோமே! செய்யறதுதான் மக்களுக்கு தெரியுமில்ல! அதப் போய் ஏன் செய்தியா வெளியிடணும்னு கேட்கறாங்க. ஆனால் இன்றோ, நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை என்று 200 கோடி செலவு செய்து விளம்பரப்படுத்துகிறார்கள். கலைஞர் முதல்வராக இருந்த போது காப்பீட்டு திட்டத்திற்கு கலைஞர் காப்பீட்டு திட்டம் என்று பெயர் வைப்பது, பொங்கலுக்கு அரிசி போடும்போது அவர் படத்தை போட்டுக் கொள்வது, அம்மையார் வந்தால் அவர் படத்தை போட்டுக் கொள்வது,  திரைப்பட நகரம் திறந்தால் அவர் பெயரையே வைத்துக் கொள்வதென்று இரண்டு அரசுகளும் மாறி மாறித் தானே செய்கிறது? திராவிட அரசியல் கட்சிகள் நேர்மையற்று கொள்கையற்று செத்து வீழ்ந்து விட்டதால், வாக்கை பறிப்பதற்கு இப்படியெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது. தங்களோட செயல்களை நம்பாமல் விளம்பரம், கவர்ச்சியை நம்பத் தொடங்கிவிட்டார்கள். அதனால்தான் அடிக்கடி இரட்டை இலையை போட்டுக் கொள்வதெல்லாம் நடக்கிறது. மக்களுடைய வரிப்பணத்தில் தான் இதையெல்லாம் செய்ய முடிகிறது. தமிழ்நாடு அரசு உணவகம், தமிழ் நாடு அரசு குடிநீர், தமிழ்நாடு அரசு காப்பீட்டு திட்டம் என்றுதானே இருந்திருக்க வேண்டும்? ரெண்டு பேரும் மாறிமாறி இதைத்தான் செய்கிறார்கள். இதில் யாரை குறை சொல்வது?

Modi%20150%2838%29.jpgமோடி அலை பற்றியும் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் எப்படி இருக்குமென்றும் கூறுங்கள்?

குஜராத்தை நன்றாக நிர்வாகம் செய்கிறார் என்று பத்திரிகையாளர்கள் தொடர்ந்து எழுதியதால், மக்கள் மத்தியில் அவரைப் பற்றி ஓர் எதிர்பார்ப்பு இருக்கிறது.  நரேந்திர மோடி தான் என்ன செய்யப் போவேனென்று இதுவரை சொல்லவில்லையே? இன்று தமிழ்நாட்டில் பேசும்போது மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது தவறு, அதனால் தேச ஒருமைப்பாடு போய்விட்டது என்று பேசுகிறார். ஆனால், இவர் 6 வயது பிள்ளையாக இருந்தபோதே தன் வயதொத்த பிள்ளைகளுடன் ஆர்.எஸ்.எஸ் கொடியைப் பிடித்துக் கொண்டு மஹாராஷ்ட்ரா மாநிலத்திலிருந்து குஜராத்தைப் பிரிக்க வேண்டுமென்று போராடியிருக்கிறார். இந்தியாவின் வெளியுறவு கொள்கைகளிலும், பொருளாதார கொள்கைகளிலும் மாற்றம் வராமல் நரேந்திர மோடி, ராகுல் காந்தி என்று எவர் வந்தாலும் எந்த மாற்றமும் என் நாட்டில் விளையப் போவதில்லை. தனியார்மயத்தை தளர்த்துவேன், தாராளமயத்தை தளர்த்துவேன், தற்சார்பு பொருளாதார கொள்கையை கொண்டு வருவேன், மண்ணின் வளம் மக்களுக்கானது என்ற திட்டத்தை கொண்டு வருவேன் என்று சொல்லவில்லையே? இந்த மாற்றத்தையெல்லாம் வைக்காத போது, அது மிகப்பெரிய ஏமாற்றமாகத்தான் முடியும். இந்த நாடாளுமன்ற தேர்தலில் அந்ததந்த மாநில கட்சிகள் தான் பெரியளவுக்கு வெல்லும் என்பதே என் கணிப்பு. என்னை பொறுத்தளவில், காங்கிரஸ், பி.ஜே.பி என்ற இரண்டு தேசிய கட்சிகளே நம் நாட்டுக்கு தேவையில்லை. ஒற்றை கட்சி ஆட்சிமுறையே அழிக்க வேண்டும். ‘மத்தியிலே கூட்டாச்சி, மாநிலத்திலே தன்னாட்சி’ தத்துவத்தை தடுக்கும் இந்த தேசிய கட்சிகளையே ஒழிக்கணும் என்கிறேன். இந்த கட்சிகள் பெரியளவுக்கு வெல்லாது. வெல்லவும் கூடாது. எதிர்காலத்தில் இந்த கட்சிகள் தேயுமேயோழிய வளராது.

பா.ஜ.க.வுடன் மற்ற கட்சிகளை கூட்டிணைக்க தமிழருவி மணியன் பாடுபடுகிறாரே?

மாற்று அரசியலை கட்டணும்னு சொன்னாங்க. தேசிய, திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தான், ஒரு மாற்று அரசியலை உருவாக்க முடியும். ஈழத்தமிழருக்கெதிரான போரை காங்கிரஸ் நடத்தியது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காக ஒரு மாதம் நாடாளுமன்றத்தை முடக்கிப் போட்ட பி.ஜே.பி, ஈழத் தமிழர் படுகொலையை தடுப்பதற்கு ஒரு அரை நாள் கூட நாடாளுமன்றத்தை முடக்கவில்லையே? ஆள்தான் மாறுமே ஒழிய ஆட்சி ஒரு போதும் மாறாது. அதனால்,  தமிழருவி மணியன் அப்படி சொல்வது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது. பி.ஜே.பி.தான் தான் சரியா இருப்பாங்கன்னு சொல்றாரு. காரணம் காங்கிரஸ் ஈழத்தமிழருக்கு செய்த துரோகம்னு சொல்றாரு. சரி, பி.ஜே.பி. என்ன செஞ்சுச்சி? பி.ஜே.பி, தனித்தமிழர் ஈழம் தான் தீர்வு என்று பிரகடனப்படுத்தப்போகிறதா? ஒரே இலங்கை ஒற்றை ஆட்சின்னு தானே அதுவும் சொல்லுது. ஐ.நா.வில் மனித உரிமை ஆணையம் கொண்டு வந்த தீர்மானம் போல நாடாளுமன்றத்திலும் தீர்மானம் கொண்டு வார வேண்டுமென்று மாணவர்கள் போராடுறாங்க. திமுகவும் அதிமுகவும் ஆதரிக்கிறாங்க. காங்கிரஸ் தீர்மானம் கொண்டு வர முயற்சிக்குது. ஆனால், பாரதிய ஜனதா அதை எதிர்க்குது. இந்த கட்சிகளால் எந்த நன்மையும் இல்லை. இருக்க போவதுமில்லை! நரேந்திர மோடி நான் ஒரு இந்து தேசியவாதி என்று சொல்கிறார். இந்த உணர்வுகள் இல்லாதவரால்தான் மதச்சார்பற்ற அரசை வழங்க முடியும். நாங்கள் மதவாதத்தையும் சாதியவாதத்தையும் ஒன்றாகத் தான் பார்க்கிறோம். மதபோதை ஏறினால், இறங்கவே இறங்காது.

தமிழகத்தின் அனைத்து கோரிக்கைகளையும் மத்திய ஆளும் கட்சி நிராகரிக்கும் இன்றைய காலகட்டத்தை நோக்கும் போது, தனித் தமிழ்நாடு தான் எதிர்கால தீர்வா?

மொழிவழி தேசிய இனங்களுக்கு தன்னாட்சி உரிமை என்பது மிகவும் முக்கியம். காவிரி, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு, ஈழப் பிரச்னை, மீனவர் பிரச்னை என்று நம்முடைய எந்த கோரிக்கைகளுக்கும் மத்திய அரசு செவி சாய்க்காததை பார்க்கும் போது, தனித் தமிழ்நாடாகத்தான் கடந்த கால் நூற்றாண்டாக கருதுவது தெரிகிறது. ஜெயலலிதா மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது என்கிறார். மற்ற ஒரு நாடு போல்தான் நடத்துகிறது என்பதே நிதர்சனம். அவர்கள்தான் நாடு தனியாக போக வேண்டுமோ, தனியாக போனால்தான் சரியாக இருக்குமோ என்ற எண்ணத்தையும் தூண்டுதலையும் விளைக்கிறார்கள். இவ்வளவு பெரிய இன அழிப்பு ஈழத் தமிழருக்கு நிகழ்ந்திருக்கிறது! இங்கிருந்து மீன் பிடிக்க சென்ற 840 மீனவர்களை கொன்றிருக்கிறது, பல்லாயிரக்கணக்கானவர்களை காயப்படுத்தியிருக்கிறது. இது கேரளாவுக்கோ, ஆந்திராவுக்கோ, கர்நாடகாவுக்கோ நடந்திருந்தால் இந்தியாவுக்கு நட்பு நாடா இலங்கை இருந்திருக்குமா? பாகுபாடின்றி மக்களை பார்க்கிற தலைமை இங்கில்லை. ஆட்சியாளர்கள் இதை நுட்பமாக கவனிக்க வேண்டும். இல்லையென்றால், நீங்கள் கேட்ட கேள்விக்கான விடையை நோக்கித் தான் இந்த இனம் பயணிக்க வேண்டிய தேவை உருவாகிவிடும்.

நாடாளுமன்ற தேர்தலில் ‘நாம் தமிழர்’ கட்சி போட்டியிடுமா? உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

போட்டியிடாது. பி.ஜே.பி, காங்கிரசின் வெளியுறவு கொள்கை, பொருளாதார கொள்கை இரண்டும் ஒன்றே. இரண்டுமே தனியார்மயத்தையும், தாராளமயத்தையும் ஆதரிக்கின்றன். இந்தியாவை விற்றுவிட்டு சீக்கிரம் யார் கல்லா கட்டுகிறார்கள் என்பதே இருவருக்குமான போட்டி. கூடுதலாக மதவாதம் வேறு உள்ளது. மரண தண்டனையே கட்சியின் கொள்கையாக வைத்திருக்கிறது பாரதிய ஜனதா. இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக மண்ணின் வளம் மக்களுக்கானது, தற்சார்பு பொருளாதாரக் கொள்கை, சுதேசி முதலாளிகளை வளர்ப்பது, போன்றவற்றை முன்னிறுத்தி மூன்றாவது அணி அமையுமானால், அதை ஆதரித்து வேலை செய்யலாம். இல்லையென்றால், வேடிக்கை தான் பார்க்க வேண்டும்.

புதுவையின் அரசியலையும், என்.ஆர். காங்கிரசின் ஆட்சியையும் கவனிக்கிறீர்களா?

மத்தியில் ஆளும் காங்கிரசை எதிர்த்து, கட்சி ஆரம்பித்து, தேர்தலில் ஜெயித்து ரங்கசாமி முதல்வர் ஆகிறார். ரங்கசாமிக்கு நல்ல பெயர் கிடைக்காமல் தடுக்க வேண்டுமென்பதற்காக அவர் கேட்கிற நிதியைத் தராமல் வளர்ச்சி திட்டங்களை தடுக்கிறார்கள். இருப்பதை வைத்து அவர் சமாளிக்கிறார். அவரை எப்படி குறை சொல்ல முடியும்? இதுதான் தமிழ்நாட்டிலும் நடக்குது. ஜெயலலிதா காங்கிரசோடு கூட்டணி வைத்து ஆட்சி அமைத்திருந்தால், மம்தா பானர்ஜி கேட்கும் நிதியை தருவது போல, இவர் கேட்கும் நிதியையும் தந்திருப்பர்கள். இதைத்தான் சர்வாதிகார போக்கு என்கிறோம். என்னோடு கூட்டணி வைத்துக் கொண்டு அடிமையாக இருந்தால் நீ கேட்பதை தருவேன் என்று பாரபட்சம் பார்க்கிறார்கள். அதனால் தான் இந்த ஒற்றை கட்சி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டுமென்கிறோம்.

மு.ஜெயராஜ்

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=21163

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.