Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாட்டின் தலைவர் குறிப்பிட்ட இனத்தின் தலைவராக செயற்படுவது ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் தலைவர் குறிப்பிட்ட இனத்தின் தலைவராக செயற்படுவது ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும்
 

226_content_p11_h1.jpgவடக்கு, கிழக்கு தமிழ் மக்களை புறம் தள்ளிவிட்டு , பல்லின மக்கள் வாழும் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இன வர்க்கத்தின் தலைவராக ஒரு நாட்டின் தலைவர் செயற்படுவது ஒரு ஜனநாயக நாட்டின் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயற்பாடாகும் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன்  இந்த வரவு  செலவுத் திட்டம்  நாட்டு மக்களின் வாழ்க்கைத் திறன், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதாக அமையவில்லை எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற வரவு  செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில்;  இலங்கையின் வரவு  செலவுத் திட்ட பற்றாக்குறையானது தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணமே   உள்ளது. அதாவது அரசாங்கத்தினது எதிர்பார்த்த வருமானத்தை விட அரசாங்கத்தினது செலவானது மிக உயர்வாகக் காணப்படுகின்றது. இந்நிலையானது   அரசாங்கத்தினது இறைக் கொள்கையின் திட்டமிடலில் காணப்படும் குறைப்பாட்டினையே தெளிவுபடுத்துகின்றது.

இலங்கை சுதந்திரமடைந்த காலப் பகுதியில் இலங்கை தலா வருமானத்தில் ஆசியாவிலே மிக உயர்வான இடத்தினை வகித்து வந்தது. அதாவது ஜப்பான், மலேசியா என்பவற்றுக்கு அடுத்ததாக இலங்கை 3 ஆவது செல்வந்த நாடாக ஆசியாவில் திகழ்ந்தது. இலங்கைக்கு அடுத்த  படியாகவே தென்கொரியா, தாய்லாந்து , இந்தோனேஷியா, சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகள் காணப்பட்டன. இன்று இலங்கையின் துண்டு விழும் தொகை நிலையை வைத்து என்ன என்பதை  சிந்திக்கும் போது இதுவும் ஆசியாவில் ஒரு ஆச்சரிய நாடாகவே காட்டுகின்றது.

பொதுவாக கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்த சூழலாலும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு வாழ் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு உ தவும் வகையில்   உதவிகள் வழங்கும் திட்டம் எதுவும் இவ் வரவு  செலவுத் திட்டத்தில் இல்லை.  வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த கால யுத்தத்தால் இடம்பெயர்ந்த  85,000 இற்கும் மேற்பட்ட  மக்கள் இன்னும் குடியேற்றப்படாத நிலையிலும்  குடியேற்றப்பட்ட மக்களுக்கான வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகள்  முற்று முழுதாக ஏற்படுத்தப்படாத நிலையிலும் இவ் வரவு  செலவுத் திட்டத்தில் மீள்குடியேற்றத்திற்கான எந்த நிதி ஒதுக்கீடும்  இடம்பெறவில்லை. சென்ற  ஆண்டிலும் இதே தவறை இவ் அரசாங்கம் வரவு  செலவுத் திட்டத்தில் காட்டியுள்ளது.

2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2007 ஆம் ஆண்டு வரை  மட்டக்களப்பு   மாவட்டத்தில் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு 13,893 முழுச் சேதம் அடைந்ததற்கான வீடுகள் வழங்கப்பட வேண்டிய நிலையில் இதுவரை 3918 வீடுகளே 14 பிரதேச செயலகப் பிரிவிலும் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 9975 வீடுகள் வழங்கப்பட வேண்டும். இம் மக்கள் இன்னும் சிறு குடிசைகளில் பல துன்பங்களுக்கு மத்தியில்  வாழ்கின்றனர். இவர்களுக்கு வீடு அமைப்பதனால் மூன்றரை இலட்சம், ஒரு வீட்டுக்கு என்ற வகையில் கிட்டத்தட்ட 324 மில்லியன் ரூபா தேவை.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த கிழக்கு மாகாணத்தில் குடியேறிய குடும்பங்களில் கிட்டத்தட்ட 1500 குடும்பங்களுக்கு மேல் நிரந்தர வீட்டு வசதி இன்றி மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.  மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களுக்கு அடிப்படை உதவியாக வழங்கப்படும் 25,000 ரூபா பணமானது வெல்லாவெளிப்  பிரதேசம், வாகரைப் பிரதேசம் ஆகிய இரண்டுக்குமே முற்று முழுதாக வழங்கப்பட்டுள்ளன.  ஆனால், ஏனைய பிரதேசங்களில் மீள்குடியேறிய 29,851  குடும்பங்களுக்கு இன்னும் இவ் உதவி வழங்கப்படவில்லை.  கிட்டத்தட்ட இதற்கு 746 மில்லியன் ரூபா தேவை. அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் சுற்றறிக்கை இந் நிதி வழங்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியும் அரசாங்கம் இது சார்பாக எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

யுத்த சூழலால் உயிர் இழந்தவர்கள், அங்கங்களை இழந்தவர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகை பல மில்லியன் கணக்கில் இன்று வரை  மட்டக்களப்பு மாவட்டத்தில் வழங்கப்படாமல் உள்ள நிலையில் இவ் வரவு   செலவுத் திட்டத்தில் கடந்த யுத்த சூழலால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் உள்ள 89,000  கணவனை இழந்த பெண்களின் வாழ்வாதாரம் சார்பாகவோ அல்லது 20,000  இற்கும் மேற்பட்ட பெற்றோரை இழந்த பிள்ளைகள்  சார்பாகவோ பல ஆயிரக்கணக்கான உடல் உறுப்புகளை  இழந்த விசேட  தேவைக்குரியவர்கள் சார்பாகவோ இவ் வரவு  செலவுத் திட்டம் எதனையும் வெளிப்படுத்தவில்லை.

பொதுவாக வரவு  செலவுத் திட்டமானது விவசாயிகள் , மீனவர்கள் , உழைக்கும் வர்க்கத்தினர், அரச தனியார் துறையினர் என சகல பகுதி மக்களின் வாழ்க்கைக்கு உதவுவதாக அமையவில்லை.   முதன்மைபடுத்தி எமது வடக்கு, கிழக்கு   மக்கள் பாலங்களையும் பெரும் தெருக்களையும் எதிர்பார்க்க வில்லை.  தங்களது பூர்வீக மண்ணில் சுதந்திரமாகவும் , நிம்மதியாகவும், எதுவித தடையுமின்றி தங்களை தாங்களே ஆட்சி செலுத்தி கொண்டு வாழவே விரும்புகின்றனர்.  அத்தோடு தங்களது காணாமல்போன பறிகொடுத்த உறவுகளையும் சிறைக் கூடங்களில் அடைக்கப்பட்ட உறவுகளையும் தங்களால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகளையும் தங்களிடம் கையளிக்குமாறு கோரி நிற்கின்றனர்.

வடக்கு , கிழக்கு   தமிழ் மக்களை புறம் தள்ளி விட்டு பல்லின மக்கள் வாழும் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இன வர்க்கத்தின் தலைவராக ஒரு நாட்டின் தலைவர் செயற்படுவது ஒரு ஜனநாயக நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயற்பாடாகும்.  இவ் வரவு  செலவுத் திட்டத்தில் கைத் தொழில் சாலைகளை உருவாக்குவது சார்பாகவோ, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தால்  சிதைக்கப்பட்ட கைத் தொழில் சாலைகளை புனரமைப்பது சார்பாகவோ எவ்வித ஒதுக்கீடுகளும் இல்லை.

குறிப்பாக கடந்த கால யுத்தத்தால் வடக்கு , கிழக்கு மாகாணத்தில் பல கைத் தொழிற் சாலைகள் அழிக்கப்பட்டுள்ளன. சில புனரமைக்க வேண்டியுள்ளன. குறிப்பாக வட மாகணத்தில்  பரந்தன் இரசாயன கூட்டுத் தாபனம்,  ஆனையிறவு உப்புக் கூட்டுத்தாபனம், வட்டக்கச்சி அரசினர் விவசாய பண்ணை, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை,  நீர்வேலி கண்ணாடித் தொழிற்சாலை ,  நாவற்குழி அன்ரிஸ்   இறால்  கம்பனி,  ஒட்டுச்சுட்டான்  ஒட்டுத் தொழிற்சாலை,  கிளிநொச்சி ஸ் கந்தபுரம் சீனித் தொழிற்சாலை என்பன முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, இவை மீண்டும் உருவாக்கப்பட வேண்டும்.  கிழக்கு மாகாணத்தில் வாழைச்சேனை  தேசிய கடதாசி கம்பனி, கும்புறுமூளை அச்சகம் ,தேவபுரம் அரிசி ஆலை, மண்டூர் ஓட்டுத் தொழிற்சாலை உட்பட்ட பல தொழிற்சாலைகள் புனரமைக்கப்பட வேண்டியுள்ளன. இவைகளை உருவாக்கியும்  புனரமைத்தும் தொழிற்சாலைகளை இயங்கச் செய்தால் இன்று கல்வி ரீதியாக  பட்டம் பெறாமல் உள்ள இளைஞர், யுவதிகள்  கணவனை இழந்த  பெண்கள் தொழில் வாய்ப்பை  பெற்றுத் தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முடியும். ஆனால், இப் பகுதியில் பெரும்பான்மையான  மக்கள் தமிழ் பேசும் இனம் என்பதாலேயே அரசாங்கம் அதில் அக்கறையின்றி செயற்பட்டு வருகின்றது.

வடக்கு, கிழக்குப் பகுதிகளான பெரும்பான்மை   இன மக்கள் ஒரு போதும் வாழாத பகுதிகளிலும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி வருவதுடன், இராணுவத்தின் உதவியுடன் பௌத்த விகாரைகளை தாபித்திருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் இராணுவ முகாம்களில் 23 இற்கும்  மேற்பட்ட பௌத்த விகாரைகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன. இவர்கள் இங்கிருந்து வெளியேறும் போது இப் பகுதி பௌத்த குடியிருப்பாக மாறும் நிலை தோன்றியுள்ளது.

இன்று இவ் வரவு  செலவுத் திட்டத்தில் 20,000 கால் நடைகளை இறக்குமதி செய்வது சார்பாக இவ் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கால்நடை மேய்ச்சல் தரைகள் பலவற்றை தற்போது வெளி மாவட்டங்களில் வசிக்கும்  ஊர் காவற்டையினர்  மற்றும் பெரும்பான்மை இனத்தவர்கள் கைப்பற்றி உள்ளனர். இதனால் 270,000  இற்கும் மேற்பட்ட கால் நடைகளுக்கான மேய்ச்சல்  தரை பாதிப்பால் இன்று கால் நடைப் பண்ணையாளர்களும் , விவசாயம் செய்யும் விவசாயிகளும்  பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிமாவட்ட பெரும்பான்மை இன மக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அத்துமீறி  காணிகளைப் பிடித்து விவசாயத்தில் ஈடுபடுவதற்கு இராணுவத்தினர் பெரும் உதவி புரிந்து வருகின்றனர். கிழக்கு மாகாண சபை , மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் போன்றவற்றின் கவனத்திற்கு கொண்டு வந்தும் இன்று ஒரு நிலையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.  இவ் விடயம் சார்பாக அரசாங்கம் கவனம் செலுத்தி மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் , கால் நடை பண்ணையாளர்களின் தொழில் முயற்சியை பாதுகாக்குமாறு இச் சபையில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

யுத்த காலத்தில் இடம்பெறாத பல  சம்பவங்கள் தற்போது ஆரம்பமாகி உள்ளன. வடக்கு, கிழக்கு பகுதிகளில் முன்பு மக்களை கிறிஸ் மனிதன் மூலம் பயன்முறுத்தினார்கள். ஆனால் தற்போது  இந்து கோயில்களை உடைத்து கொள்ளை  இடுவது, இந்து ஆலயங்கள் இடித்து பௌத்த விகாரை  தாபிப்பது  போன்ற நடவடிக்கை ஆரம்பமாகி உள்ளன.  அண்மையில்  வடக்கு பகுதியில் மாத்திரம் 26 ஆலயங்களில் கொள்ளை இடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

கொடிகாமம் வரணியில் உள்ள 300 ஆண்டு பழமை வாய்ந்த கண்ணகி அம்மன் ஆலய சிலை கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பொன்னாலை வரதராஜப் பெருமாள்  கோயிலில் 150 பவுண் நகை கொள்ளை,  வண்ணார் பண்ணை நாச்சிமார் கோயில் தேர் முட்டியில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு  இட்டது  முல்லைத்தீவு மாவட்ட கொக்குலாய், கொக்குத் தொடுவாய் ஆலய  கொள்ளைகள் போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இராணுவ கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தமிழ் மக்களை அடக்குவதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை ஒடுக்க அரசாங்கம் முற்படுகின்றது.  பொதுவாக இன்று 150,000 இற்கும் மேற்பட்ட  இராணுவம் வடக்கு, கிழக்கில்  குவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்தும் எதற்கு  இத் தொகை இராணுவம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாத்திரமே  இராணுவத்தில் இருந்தவர்களையே ஆளுநர்களாக வைத்துள்ளது. இது எதற்காக என இச் சபையை கேட்க விரும்புகின்றேன்.

இன்று 12 ஆயிரம் போராளிகளை இயல்பு வாழ்க்கைக்கு விடுவித்துள்ளதாக கூறும் இவ் அரசாங்கம்  ஏன் அவர்களின் பெயர் விபரங்களை  வெளியிடவில்லை  அதுமட்டுமன்றி, யுத்தம்  முடிந்து 4 வருடங்களுக்குப் பின்பே காணாமல் போனோர் பற்றி விசாரிக்கும் ஆணைக்குழு,  இது சர்வதேசத்தையும் ஐக்கிய நாடுகள் சபையையும் ஏமாற்றும் முயற்சி.

வடக்கு, கிழக்கில்  பெருகியுள்ள கணவனை இழந்த பெண்கள், வறுமைக் கோட்டில் வாழும் பெண்கள் தங்களது அன்றாட வாழ்க்கைக்கு  வேலை தேடும் வறிய குடும்ப தலைவர் , தலைவி வேலை தேடி பணிப் பெண்களாக  வெளிநாட்டுகளுக்கு  செல்கின்றனர்.  இவர்களில் பணிப் பெண்ணாக செல்லும் பலர் வீட்டு எஜமானால் பாலியல் துஷ்பிரயோõகத்துக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கப்படுகின்றனர். அத்தோடு, இவர்களது பிள்ளைகள்  பெற்றோர்களின் கண்காணிப்பில் இன்மையால் பலர் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கும் ஆளாகின்றனர். பிள்ளைகள் பெற்றோரை பிரிந்து உள ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.

2010  தொடக்கம் 2013 வரையான காலப் பகுதியில் தாய் ,தந்தை வெளிநாடு சென்றதால் எமது நாட்டில் 1661 சிறுவர்கள், சிறுவர்  துஷ்பிரயோகத்துக்கு ஆளானதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதற்கக் காரணம் அவர்களுக்கான ஒழுங்கான சுய தொழில் மற்றும் தொழில் ஏற்பாடுகள் எமது நாட்டில் மேற்கொள்ளப்படாமை . இவ்விடயம் தொடர்பாக 2014 ஆம் ஆண்டுக்கான  இவ் வரவு செலவுத் திட்டத்தில் எவ்வித ஏற்பாடுகளும்  அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை.

ஆனால், இராணுவத்திற்கு இவ்வரசாங்கம் மாடி வீடு கட்டுவதில் காட்டும் அக்கறையை  கடந்த யுத்த சூழலால் கணவனை இழந்தும் வறுமையாலும் குடும்பத்தை கட்டியெழுப்ப முடியாது தமது வாழ்வாதாரத்தினை  பற்றி ஏங்கி கொண்டிருக்கும் எம் மக்கள் மீது ஏன் காட்டக் கூடாது ?

2014 ஆம் ஆண்டு வரவு  செலவுத் திட்டத்தில் பிரிவெனா பாடசாலை கல்வி என்ற ரீதியில் பௌத்தத்திற்கும் பௌத்த குருமார் கல்விக்கும் பெரும் தொகை  நிதியை  வழங்கியுள்ள வேளை இந் நாட்டின் ஏனைய மதங்களாக இந்து, இஸ்லாமிய , கிறிஸ்தவ மத கல்விகளுக்கும் மற்றும் அவர்களது அறக் கல்விகளுக்கும் எதுவும்  ஒதுக்கவில்லை. ஏனெனில் பௌத்த மதத்துக்கு மாத்திரமே  இங்கு தனி  அந்தஸ்து வழங்கப்படுகின்றது. ஏனைய மதங்கள் இவ் வரசாங்கத்தால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. இங்கு மத உரிமைகள் ஒடுக்கப்படுகின்றன.

வன ஜீவராசிகள் ஊடுருவலை தடுக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக இவ்வரவு செலவுத் திட்டம் குறிப்பிட்டுள்ளது. ஆனால்  ஊழியர்களுக்கான கொடுப்பனவு,  வாகன கொள்வனவு  என்பவற்றுக்கே  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வனஜீவராசிகளின் ஊடுருவலை தடுக்க மின்சார வேலி இடுவதற்கும் வேறு வகைகளை கையாளவோ என வனஜீவராசிகள் ஊடுருருவலைத் தடுப்பதற்கோ இந் நிதியில் சுட்டிக்காட்டப்படவில்லை.

அத்தோடு ,  மீன் பிடி தொழில்  சார்பான ஒதுக்கீடுகள் சில இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. இவ் ஒதுக்கீடுகள் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகணங்களான இவ்விரு மாகாணங்களிலும் கூடுதலாக செலவிடப்பட வேண்டும்  . யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாகணம் என்ற வகையில்  கவனிக்கப்பட வேண்டும். காரணம் 1983 ஆம் ஆண்டுக்கு முன்னர்  வட மாகாணமானது  25 சதவீத பங்களிப்பினை இந்நாட்டின் மீன்பிடி உற்பத்தியில் வழங்கியுள்ளது என்பதை குறிப்பிட விரும்புகின்றேன்.

இன்று புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்ட போராளிகள் பலர் இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளுக்கு 7 நாட்களுக்கு ஒரு தடவை உட்படுகின்றனர். இதனால் வெளியில் செல்ல முடியாதவாறும் தொழில் செய்ய முடியாதவாறும்  தடுக்கப்படுகின்றனர். இவர்கள்  உளரீதியான துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.  தமது உயிரை பாதுகாக்கும் வகையில் கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கும் செல்ல முற்பட்டு ஆபத்தான நிலையகளை எதிர்கொள்கின்றனர்.

இந் நிலையி ல் இப்  புனர்வாழ்வு  வழங் கப்பட்டவர்களுக்கான ஒரு நிலையான தொழில் முயற்சித் திட்டத்தை இவ் வரவு  செலவுத் திட்டம் ஏற்படுத்தி அவர்களை சுதந்திரமாகவும், புலனாய்வு ப்பிரிவின்  துன்புறுத்தல் இன்றியும் வாழும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என இச் சபையில் கோரிக்கை விடுக்கின்றேன்.

வரவு  செலவுத் திட்டம் என்பது அரசாங்கம் தனக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கின்ற வருமானங்களையும் அதற்கான வழிமுறைகளையும் தான் எதிர்காலத்தில் மேற்கொள்ள இருக்கும் செலவினங்களையும் முற்கணிப்புச் செய்து நிதி அமைச்சரால் தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாகும்.

ஒரு சிறந்த வரவு  செலவுத் திட்டமானது நாட்டுக்கும் நாட்டு மக்களது பொருளாதாரம் வாழ்க்கைத்திறன்,ö பாருளாதார வளர்ச்சி, பொருளாதார வசதி நிலை போன்றவற்றினை மேம்படுத்தக் கூடிய  நிலையாக அமைய வேண்டும். ஆனால் இவ் வரவு செலவுத் திட்டம் அவ்வாறு அமையவில்லை என்பதை சுட்டிக்காட்டுவதாகவும் அவர் கூறினார்.

  http://www.thinakkural.lk/article.php?article/xjdm1yslcl7283f82798ec8914792wsczb09d23e55679ee26bb26437hdzrm#sthash.htfi2NMZ.dpuf

 
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.