Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரு நாட்டு தமிழ் மீனவர்களது பேச்சுவார்த்தை கரை சேருமா? - நக்கீரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

indian-fishermen-200-article-seithy.jpg

எதிர்வரும் சனவரி 20 இல் இலங்கை - இந்திய நாட்டு மீனவர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். இதில் இலங்கை இலங்கைக் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் இராஜித சேனாரத்தின கலந்து கொள்ள இருக்கிறார். நீண்ட காலமாக இந்த இருதரப்புப் பேச்சு வார்த்தை நடைபெற வேண்டும் எனப் பேசப்பட்டு வந்தாலும் இப்போதுதான் அது சாத்தியமாகியுள்ளது. இலங்கையின் கடல் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுகின்றனர். இந்தக் கைதுகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இலங்கைச் சிறைகளில் 271 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குச் சொந்தமான 78 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

  

புத்தாண்டு முதல்நாள் மட்டும் இராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கைக் படையினர் கைது செய்துள்ளனர். புத்தாண்டின் முதல் நாளில் தொழிலுக்குப் போக வேண்டும் என்ற நியதி காரணமாகவே இவர்கள் மீன்பிடிக்கச் சென்றவர்கள் ஆவர். ஒருபுறம் பேச்சுவார்த்தை என்று சொன்னாலும் மறுபுறம் இந்தக் கைது நடவடிக்கை தொடர்கிறது.

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிக்க இந்திய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டு வாரம் ஒரு கடிதம் பிரதமர் மன்மோகன் சிங்கிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார். அதற்கு இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் மன்மோகன் சிங் பதில் கடிதம் எழுதுவார்.

ஆனால் பிரதமர் உறுதியளித்த பின்னரும் தமிழக மீனவர்களது கைதுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. முன்னர் தமிழக மீனவர்கள் மட்டும் சிறை பிடிக்கப்பட்டனர். அண்மைக்காலமாக அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன. சென்ற மாதம் ஒரே வாரத்தில் மட்டும் புதுக்கோட்டை, பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த 74 மீனவர்களும், அவர்களது படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டது.

தமிழக மீனவர்கள் தங்கள் மீது இலங்கைக் கடற்படை தொடுக்கும் தாக்குதல்கள், கைதுகள் போன்றவற்றுக்கு எதிராக ஓயாது போராடி வருகிறார்கள். ஆனால் பலன் கிடைக்கவில்லை.

இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடித்த 32 தமிழக மீனவர்கள் கைதானது குறித்து ஹிந்து பத்திரிகை நிருபர் கேட்ட கேள்விக்கு இலங்கைக் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் இராஜித சேனாரத்ன பதிலளிக்கும் போது "இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் போது இந்திய கடற்படையினால் கைது செய்யப்படுகிறார்கள். அதேபோல் இந்திய மீனவர்கள் சட்ட விரோதமாக இலங்கைக் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்த குற்றத்திற்காக கைது செய்யப்படுகிறார்கள். குற்றமிழைத்தவர்கள் அதன் பலாபலன்களை அனுபவிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.

அவ்வப்போது தமிழக மீனவர்கள் சில வார சிறைவாசத்துக்குப் பின்னர் விடுவிக்கப்படுகிறார்கள். ஆனால் விடுவிக்கப்பட்டவர்கள் கரை சேருமுன் புதிதாக மேலும் பல மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்கிறது.

பெரும்பாலும் இந்தக் கைதுகள் கச்சதீவு, மன்னார் வளைகுடா, கல்பிட்டி, காங்கேசன்துறை, பருத்தித்துறை போன்ற கடற்பகுதியில் இடம்பெறுகிறது. இவை இலங்கையின் கடல் எல்லைக்குள் உட்பட்ட பகுதிகளாகும்.

தமிழக மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லையை மீறவில்லை என்று வாதாடவில்லை. கடல் எல்லையைத் தாண்டுகிறோம் எனத் தெரிந்தே செய்கிறார்கள். கேட்டால் இந்தப் பகுதிக் கடலில் தங்கள் பாட்டன், கொப்பாட்டன் காலத்தில் இருந்து மீன்பிடிப்பதாகவும் இந்தப் பக்கத்தில்தான் மீன்வளம் அதிகமாக இருப்பதாகவும் இங்கு மீன்பிடிக்க முடியாவிட்டால் தாங்கள் தங்கள் குடும்பத்தோடு பட்டினி கிடந்து சாக வேண்டும் என ஒளிவு மறைவின்றிக் கூறுகிறார்கள்.

இலங்கை மீனவர்கள், குறிப்பாக வட இலங்கைத் தமிழ் மீனவர்களுக்கும் இதுதான் சிக்கல். தங்கள் கடலில் அத்துமீறி நுழைந்து தடைசெய்யப்பட்ட படகுகளையும் வலைகளையும் பயன்படுத்தி தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கிறார்கள். இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வட இலங்கை மீனவர்கள் முறையிடுகிறார்கள். அவ்வப்போது ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்க போராட்டமும் நடத்துகிறார்கள். முப்பது ஆண்டு போர் காரணமாக தென்னிலங்கையோடு ஒப்பிடும் போது வட இலங்கையின் கடற்றொழில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.

கச்சதீவை இலங்கைக்கு கையளிக்கும் உடன்படிக்கை இந்தியா - இலங்கை நாடுகளுக்கு இடையில் யூன் 28, 1974 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. இப்போது 39 ஆண்டுகள் கழிந்துவிட்டன.

1956 இல் இந்திய அரசு, தன் கடல் ஆதிக்க எல்லைக் கோட்டை, 3 கடல் மைல்களிலிருந்து (ஒரு கடல் மைல் என்பது, 1.15 மைல் அல்லது 1.863 கிமீ) 6 கடல் மைல்களாக விரிவுபடுத்தியது. இதே போன்ற போட்டி அறிவிப்பை இலங்கை அரசும் வெளியிட்டது. இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான சிக்கல் வலுவடைந்தது. 1973 இல், அன்றைய பிரதமர் இந்திரா இலங்கை சென்றார். பின், இரு நாடு அதிகாரிகளும் கூடிப் பேசினர். 1974 இல், இலங்கைப் பிரதமர், சிரிமாவோ பண்டாரநாயகா இந்தியா வந்தார். அண்டை நாடுகளுடன் சமாதான சகவாழ்வு என்ற இந்தியாவின் கொள்கை இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் சேதுபதிக்குச் சொந்தமான கச்சதீவு கைமாறக் காரணமாக இருந்தது. 1947 ஆம் ஆண்டு ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம் கொண்டு வரும் வரையில் கச்சதீவு சேதுபதி மன்னர்களின் ஆட்சியில் இருந்தது.

1974 எழுதிய உடன்படிக்கையின் படி தமிழக மீனவர்கள் பரம்பரை பரம்பரையாகத் தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனரோ அந்தந்த உரிமைகளைத் தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று பொதுவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது இந்த உடன்படிக்கையின் 5 ஆவது விதி இந்திய தமிழக மீனவர்கள் கச்சதீவை ஒட்டி மீன் பிடித்துக் கொள்ளலாம், மீன் பிடிக்கும் வலைகளை கச்சதீவில் உலர வைக்கலாம், அங்கு ஒய்வு எடுத்துக்கொள்ளலாம், கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ளலாம் எனும் சலுகைகள் இந்திய மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று எழுதப்பட்டிருந்தது. (Article 5 of the Agreement says 'subject to foregoing, Indian fishermen and pilgrims would be allowed access to Kachatheevu Island for rest, for drying of nets and to offer prayers in the local St. Anthony's Church as hitherto and will not be required by Sri Lanka to obtain travel documents for these purposes.)

ஆனால் 1976 ஆம் ஆண்டு 1974 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட உடன்படிக்கையின் கீழ் தமிழக மீனவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த சலுகைகள் பறிக்கப்பட்டன. இந்திய அரசு கச்சதீவுப் பகுதிக்கு தமிழக மீனவர்கள் செல்லக்கூடாது, மீன்பிடிக்கவும் கூடாது, கச்சதீவு அந்தோனியார் திருவிழாவிற்கு யாத்திரியர்கள் போகக் கூடாது என அறிவித்தது. அப்போது தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.

கச்சதீவு இலங்கைக்கு கையளிக்கப்பட்ட காலத்தில் கலைஞர் கருணாநிதியின் திமுக தான் ஆட்சிக் கட்டிலில் இருந்தது. மத்திய அரசை, குறிப்பாக இந்திரா காந்தியைப் பகைக்க விரும்பாத காரணத்தால் அவர் அனைத்துக் கட்சிகளது மாநாட்டைக் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி தமிழக அரசின் எதிர்ப்பைப் பதிவு செய்துவிட்டு வாழா இருந்துவிட்டார். இந்த அனைத்துக் கட்சி மாநாட்டில் அதிமுக கலந்து கொள்ளவில்லை.

1950 களில் மேற்கு வங்காளத்தில் உள்ள பெருபாரி என்ற பகுதியை அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்குக் கொடுக்க மத்திய அரசு முயன்ற போது அதை மேற்கு வங்க மாநில அரசு எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அப்போதைய மேற்கு வங்க மாநில முதல்வர் பி.சி.ராய் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்படிக்கையை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

மேற்கு வங்க அரசின் அன்றைய முதல்வர் பி.சி. ராய் அவர்களின் துணிச்சலான நடவடிக்கை காரணமாக பெருபாரி பகுதி இன்றும் இந்திய நாட்டின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினை மேற்கோள் காட்டி 1974 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்குத் தொடுத்திருந்தால் கச்சதீவு இன்றும் கூட இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும்.

கச்சதீவை இலங்கையிடம் இருந்து மீட்கும்வரை இராமநாதபுரம், நாகபட்டினம், வேதாரணியம் போன்ற பகுதிகளில் வாழும் இலட்சக்கணக்கான மீனவர்கள் அந்தப் பகுதியில் மீன்பிடிக்க முடியாது. காரணம் இலங்கையின் கடல் எல்லைக்குள் கச்சதீவு வந்துவிட்டது. கச்சதீவு நெடுந்தீவுக்கு தெற்கே 9 மைல் தொலைவிலும் இராமேஸ்வரத்திற்கு வடகிழக்கே 10 மைல் தொலைவிலும் உள்ள பாக்கு நீரணை என்ற பகுதியில் இருக்கிறது.

1976 ஆம் ஆண்டு எழுதப்பட்ட உடன்படிக்கையைத் தொடர்ந்து 1983 இல் தமிழ்நாடு கடல்வள மீனவர் சட்டம் கொண்டுவரப்பட்டபோது கச்சதீவு எல்லை மாற்றி அமைக்ககப்பட்டது. இன்றைய சிக்கலுக்கு இந்தச் சட்டம் முக்கிய காரணம் ஆகும்.

1976 இல் கச்சதீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமையை அடியோடு இழந்த நாள் முதல் தமிழ்நாட்டு மீனவர்களை சனி பிடித்துக்கொண்டது. 1983 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 13 இல் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தொடக்கிய தாக்குதல் இன்று வரை நீடித்துக் கொண்டிருக்கிறது. அய்நூற்றுக்கும் அதிகமான மீனவர்கள் இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கித் தாக்குதல்களில் பலியாகியுள்ளனர்.

இந்தியாவுக்கு சொந்தமான கச்சதீவை பிரதமர் இந்திரா காந்தி யாரையும் கலந்து கொள்ளாமல், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமல் ஏதோ தனது சீதனம் என்று நினைத்து பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்காவோடு உடன்படிக்கை எழுதிக் கையளித்துவிட்டார். அன்று முதல் தடியைக் கொடுத்து அடிவாங்கின கதைதான்.

தமிழக மீனவர்களுக்கும் இலங்கைத் தமிழ் மீனவர்களுக்கும் இடையில் கடல் எல்லை பற்றி மட்டும் சிக்கல் இல்லை. தமிழக மீனவர்கள் தடை செய்யப்பட்ட கடல் வளத்தை அழிக்கும் இரட்டை மடி, ரோலர் மடி, சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன் பிடிப்பதும் பெரிய சிக்கலாகும். இந்த வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்கும் போது இலங்கை மீனவர்களது கூண்டு வலை, தள்ளு வலைகள் சேதமடைகின்றன.

இப்படியான வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் இராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட சில பகுதிகளில் இரட்டை மடி வலையை மீனவர்கள் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய தமிழக மீன்பிடித்துறை அதிகாரிகள் கையூட்டு வாங்கிக் கொண்டு இந்த வலைகளைப் பயன்படுத்த அனுமதிக்கிறார்கள்.

தமிழக மீனவர்கள் சீலா, வாவல், விளமீன், திருக்கை, இறால் ஆகிய அதிக விலை கொண்ட மீன்களை பிடிக்க எல்லை தாண்டி செல்லும் போது இலங்கை மீனவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஆத்திரமடையும் இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன.

தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் என்.ஜே. போஸ் "தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையில் மீன்பிடிப்பதால், மீன் வளம் அழிவதுடன், பல இலட்சம் மதிப்புள்ள வலைகள் சேதமடைகிறது. இரு ஆண்டுகளுக்கு முன் இலங்கை மீனவர்கள் தெரிவித்த புகாரின் படி, ஓரளவிற்கு இவ்வலை பயன்பாடு தடுக்கப்பட்டது. இந்நிலையில் சில படகுகளின் உரிமையாளர்கள் பேராசையால், இரட்டைமடி வலையில் மீன்பிடிக்க முயற்சிக்கின்றனர். இதனால், இருநாட்டு மீனவர்கள் பேச்சு வார்த்தை தடைபடும் அபாயம் இருக்கிறது. இது தொடர்பாக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.

இந்தப் பின்னணியில் இரு நாட்டு தமிழ் மீனவர்களது பேச்சுவார்த்தை கரை சேருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

 

http://www.seithy.com/breifArticle.php?newsID=100539&category=Article&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.