Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டியின் - வீட்டு வைத்தியம் - தெரிந்து கொள்வோம் - பழங்கள்

Featured Replies

vaalai.jpg

 

 

வாழைப்பழம் 

 

வாழைப்பழம் சாப்பிடாதவர்கள் யாரும் இருக்க முடியாது. குழந்தைகள் முதன் முதலாக கடித்து சாப்பிடும் பழம் இந்த வாழைப்பழமாகத்தான் இருக்கும். தமிழர்கள் வகுத்த முக்கனிகளுள் மூன்றாவது கனி இது. எந்த சுபவிழாக்களாக இருந்தாலும், அங்கே முதலிடம் பிடிப்பது வாழைப்பழம்தான்.

 

வாழையில் பல வகைகள் இருந்தாலும், அதன் அனைத்து பாகங்களுமே நமக்கு நிறைய பயன்களை அள்ளித் தருகின்றன.

 

 

ஹோர்மோன்களை ஊக்குவிக்கும் வாழைப்பழம் [வாழைப்பழம்

 

ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன.

 

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹோர்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது. 

 

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது. 

 

நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப்படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. 

 

வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது. 

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. 

 

வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது. 

 

வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக்(Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சுக்ரோஸ்(Sucrose), பிரக்டோஸ்(Fructose) மற்றும் குளுக்கோஸ்(Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும்(Fiber) கொண்டுள்ளது. 

 

இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 1 1/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 

 

வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

 

மூளை வலிமை(Brain Power): வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது மூளைத்திறன் அதிகரித்ததோடு பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 

 

வாழையின் ஒவ்வொரு பாகமுமே மருத்துவ குணங்கள் கொண்டவை. நெஞ்செரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது. 

 

கர்ப்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது. நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும். 

 

இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம். 

 

குடிபோதையை நீக்க சிறந்தது. இதனை மில்க்ஷேக் செய்து தேன் கலந்து பருகினால் வயிற்றைச் சுத்தம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும். 

 

மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சாப்பிடச் சொல்வார்கள். 

 

இதில் சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்தக்காரர்கள் சாப்பிடலாம். குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது. கால்களில் ஆடுசதையில் சட்டென்று பிடித்திழுக்கும். இது பொட்டாசியம் குறைவால் வருகிறது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதைத் தடுக்கலாம்.

 

வாழை இலை பயன்கள்:

 

 

* வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.

 

* தளிரான வாழை இலையை நெருப்பினால் ஏற்பட்ட புண், வெந்நீர் பட்டதால் உண்டான புண் ஆகியவற்றில் வைத்துக் கட்ட அந்த புண்கள் உலர்ந்து விடும். அப்போது, முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்.

 

* புண்களுக்கு துணியில் எண்ணெய் நனைத்து வைத்து கட்டும்போது, அதன் மேல் வாழை இலையையும் வைத்து கட்டி வர, அந்த துணி எண்ணெய் தன்மையுடனேயே இருக்கும். அதனால் புண் விரைவில் ஆறிவிடும்.

 

 

வாழைப்பூ பயன்கள்:

 

 

* வாழைப்பூவில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இந்த பூவை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்றுவலி மற்றும் குடல்புண், ரத்தபேதி, மூல நோய் ஆகியவை குணமாகும்.

 

* கை, கால் எரிச்சலுக்கு வாழைப்பூவை இடித்து, அதில் விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் ஒற்றடமிட்டு கட்டலாம். 

 

* இதன் பூவை இடித்து சாறு பிழிந்து, அதில் சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல், பெரும்பாடு, வயிற்றுக்கடுப்பு போன்றவை நீங்கும்.

 

* வாழைப்பூ சாற்றுடன் கடுக்காய் பொடி சேர்த்து குடிக்க மூல நோய் குணமாகும்.

 

* வாழைப்பூவின் நரம்பை நீக்கிவிட்டு, அதை ஒரு பாத்திரத்தில் இட்டு அவித்து, பின்னர் சாறு பிழிந்து, அந்த சாற்றை குடிக்க சீதபேதி, கழிச்சல் போன்றவை குணமாகும்.

 

* வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். அஜீரணம் இருந்தாலும் தீரும்.

 

 

வாழைத்தண்டு பயன்கள்:

 

 

 

* வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே, இதை நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். மேலும், இது தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும்.

 

* வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு போன்றவை வெளியேறி விடும்.

 

* வாழைத்தண்டை சுட்டு, அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் கலந்து பூசிவர தீப்புண், காயங்கள் ஆறும்.

 

* இதன் தண்டை உலர்த்தி பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும். மேலும், கல்லீரல் வலுவடையும்.

 

* வாழைப்பட்டையை தீயில் வாட்டி சாறு பிழிந்து, அதில் ஓரிரு துளி காதில் விட காது வலி நீங்கும்.

 

 

வாழை பிஞ்சு-காயின் பயன்கள் :

 

* வாழை பிஞ்சினால் ரத்த மூலம், ரத்த கடுப்பு, வயிற்றுப்புண், நீரிழிவு நோய் ஆகியவை குணமாகும்.

 

* வாழைக்காயினால் கழிச்சல், உமிழ்நீர் அதிகம் சுரத்தல், வயிறுளைச்சல், உடல் வெப்பம், இருமல் ஆகியவை தணியும். உடலில் ரத்தப் பெருக்கையும், வன்மையையும் இது உண்டாக்கும்.

 

 

வாழைப்பழம் பயன்கள் :

 

 

* வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, பி, பி2, சி மற்றும் சுண்ணாம்புச்சத்து ஆகியவை உள்ளன. உணவை எளிதில் சீரணிக்க செய்யும் வாழைப்பழம் பித்தத்தை நீக்கக்கூடியதும் கூட. மேலும், உடலில் ரத்தத்தை அதிகரிக்கவும் செய்யும். 

 

* தினம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

 

* பெண்கள் அடிக்கடி வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு மாதவிலக்கு சீராக வரும். 

 

* அடிக்கடி வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு குடல் புண்கள் வராது. இருந்தால் ஆறிவிடும். மேலும், தோல் பளபளக்கும்.

 

* வாழைப்பழத்துடன் ஏலக்காய் பொடி சேர்த்து பிசைந்து சாப்பிட பெரும்பாடு குணமாகும்.

 

* வாழைப்பழத்துடன் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர ரத்த மூலம் குணமாகும்.

 

* வாழைப்பழம் அடிக்கடி சாப்பிடுவது அறிவை விருத்தியடையச் செய்யும்.

 

செவ்வாழை குருதியை அதிகரிக்கும். மலை வாழைப்பழம் மலச்சிக்கலை போக்கும். பேயன் வாழைப்பழம் அம்மை நோயை குணமாக்கும். பச்சை வாழை உடம்புக்கு குளிர்ச்சி தரும். நேந்திரம் பழம் சருமத்தை பளபளப்பாக்கும். மொந்தன் வாழை உடல் வறட்சியை போக்கும். நாட்டு வாழைப்பழம் குடல் புண்ணை ஆற்றும்.

 

 

பலாப்பழம் 

 

 

முக்கனிகளில் மாவிற்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றப்படுவது பலா. கேரளாவில் இதை சக்கைப்பழம் என்று அழைப்பார்கள்.

மிகுந்த சுவை கொண்டது பலா என்பதால் அதை உண்ணாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

 

 

மருத்துவ பயன்கள் :

 

 

* பலாப்பழத்தை தேனில் நனைத்து உட்கொண்டுவர மூளை நரம்புகள் வலு பெறும். வாத நோய், பைத்தியம் போன்றவை நீங்கும்.

 

* பலாப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் உள்ளது. இது மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தை தரும். நரம்புகளை உறுதியாக்கும். ரத்தத்தை விருத்தி செய்யும். தொற்றுக் கிருமிகளை அழிக்கும்.

 

* பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக் கூடியது. மேலும் இது, உடல் உஷ்ணத்தை தணிக்கும். பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி ஆகியவற்றையும் குணமாக்கும்.

 

* பலா மரத்தில் இருந்து கிடைக்கும் பாலினை எடுத்து நெறிகட்டிகள், நெடுநாள் உடையாமல் இருக்கும் கட்டிகள் மீது பூசிவர அவை பழுத்து உடையும் அல்லது அமுங்கிவிடும்.

 

* பலா பிஞ்சினை சமைத்து உண்ண பித்தமும், நீர்வேட்கையும் நீங்கும். ஆண்மை அதிகரிக்கும்.

 

* பலா இலைத்தளிரை அரைத்து சிரங்குகளுக்கு பூசிவர அவை குணமாகும்.

 

* பலா மரத்தின் வேலை நன்கு கழுவி உலர்த்தி துண்டு துண்டாய் வெட்டி, ஒன்றிரண்டாய் சிதைத்து நீர்விட்டு காய்ச்ச வேண்டும். அது பாதியாக வற்றியதும் வடிகட்டி குடித்துவர கழிச்சல் குணமாகும்.

 

* பலா மரத்தின் வேரை அரைத்து சொறி, சிரங்குகளுக்கு பூச அவை குணமாகும்.

 

* பலா இலைகளை ஒன்றாக கோர்த்து, அதில் உணவு உட்கொள்வது சிலரது வழக்கம். இவ்வாறு உணவு உட்கொண்டால் பித்தம் அதிகரிக்கும். அதேநேரம், குன்மம் எனப்படும் அல்சர் நோயும், பெருவயிறும் குணமாகும்.

 

 

ஒரு எச்சரிக்கை: பலாப்பழம் மற்றும் பலா பிஞ்சினை அதிக அளவில் பயன்படுத்துவோர் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை : 

 

 

* பலா பிஞ்சினை அதிக அளவில் உண்பதால் செரியாமை, வயிற்றுவலி போன்றவை ஏற்படும். இதை, மிகவும் அளவுக்கு அதிகமாக உண்டால் சொறி, சிரங்கு, கரப்பான், கோழைக்கட்டு, இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும்.

 

* பலாப்பழத்தை அளவுடன் தான் உண்ண வேண்டும். இதனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் வயிறு மந்தமாகி வயிற்றுவலியையும், வாந்தியையும் உண்டாக்கிவிடும். எனவே, பலாப்பழத்தை தேன் அல்லது நெய்யில் தொட்டே சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டாலே அதன் நற்பலன்களை பெற முடியும்.

 

* பலாப்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டை ஒன்றினை பச்சையாக மென்று தின்றுவிட்டால் சாப்பிட்டது நன்கு சீரணமாகிவிடும்.

 

* குடல்வால் அழற்சி எனப்படும் அப்பண்டிசைட்டிஸ் உள்ளவர்கள் பலாப்பழத்தை அறவே சாப்பிடக் கூடாது.

 

* சிலர் பலாக்கொட்டையை சுட்டு உண்பார்கள். இது சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருந்தாலும் அள்ளுமாந்தம், மலச்சிக்கல், கள் குடிப்பவர்களுக்கு உண்டாவது போன்ற புளியேப்பம், கல் போல் வயிறு கட்டிப்படல், வயிற்றுவலி போன்றவற்றை உண்டாக்கும்.

 

* மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளையும் சாப்பிட்டு சீரணமாகவில்லை என்றால், மந்தம், வயிற்றுவலி, ஏப்பம் ஆகியவை ஏற்படும். இதனை போக்க துவரம்பருப்பை வேக வைத்து வடித்த நீரில் மிளகும், பூண்டும் சேர்த்து ரசம் வைத்து சாப்பிட தகுந்த நிவாரணம் பெறலாம். 

 

 

மாதுளை 

 

 

மாதுளையில் இனிப்பு மாதுளை, புளிப்பு மாதுளை, பூ மாதுளை என்று 3 வகைகள் உள்ளன.

மருத்துவ பயன்கள் :

 

* மாதுளம் பூவை உட்கொண்டால் ரத்த வாந்தி, வயிற்றுக்கடுப்பு, ரத்த மூலம் ஆகியவை குணமாகும். உடல் வெப்பம் தணியும். மேலும், உடலுக்கு வலிமையை தரும் மாதுளம்பூ ரத்தத்தை பெருக்கவும் செய்கிறது.

 

* மாதுளம் பூச்சாறும், அருகம்புல் சாறும் சம அளவு கலந்து குடித்து வர மூக்கில் இருந்து ரத்தம் வடிவது நிற்கும்.

 

* மாதுளம் பூவை இடித்து சாறு பிழிந்து, அதை காய்ச்சி வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து உட்கொண்டு வர தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குணமாகும்.

 

* மாதுளம் பூவை இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வர மலத்துடன் ரத்தம் வருவது நிற்கும்.

 

* மாதுளம் பூ, மாங்கொட்டை, ஓமம் ஆகியவற்றை சம அளவு எடுத்து உலர்த்தி பொடி செய்து சலித்து, மோரில் கலந்து சாப்பிட கழிச்சல் குணமாகும்.

 

* கருப்பை கோளாறுகளை குணப்படுத்தும் தன்மையும் மாதுளம் பூவிற்கு உண்டு. இதன் பூவுடன் சம அளவு வால் மிளகு, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து இடித்து பொடியாக்கி காலை, மாலை இருவேளையும் 4-5 கிராம் அளவு தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு மாதவிலக்கு சீராகும்.

 

* மாதுளம் பூ மொக்கை நன்கு காய வைத்து பொடியாக செய்து இருமல் ஏற்படும்போது சிறிதளவு சாப்பிட இருமல் தணியும்.

 

* மாதுளம் பிஞ்சை குடிநீரில் கலந்து குடிக்க சீதபேதி, கழிச்சல் குணமாகும்.

 

* மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து மணப்பாகு செய்து சாப்பிட்டு வர பித்தம் தணியும். உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். மேலும், சுரத்தையும் குணமாக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் வாந்தியை நிறுத்தக்கூடிய கைகண்ட மருந்தும் இது என்பது கூடுதல் தகவல்.

 

* மாதுளம் பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது ரத்த உற்பத்திக்கும், ரத்தத்தை தூய்மைப்படுத்தவும் உகந்தது. அடிக்கடி மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் பித்த நோய்கள், வறட்டு இருமல், வயிறு, குடல் புண்கள் (அல்சர்) குணமாகும். மேலும், ஈரல், இதயம் வலுவாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.

 

* மாதுளம் பழத்தோலுடன் சிறிதளவு இலவங்கம், இலவங்கப்பட்டை சேர்த்து இடித்து, 4 பங்கு நீர்விட்டு காய்ச்சி, 2 பங்காக அது வற்றியதும் வடிகட்டி குடித்துவர சீதபேதி குணமாகும்.

 

* மாதுளம் பழத்தோலை நெருப்பில் சுட்டு கரியாக்கி, அதனை கோதுமை கஞ்சியுடன் கலந்து சாப்பிட வயிற்றுவலி குணமாகும்.

 

* மாதுளம் பழச்சாற்றுடன் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து குடித்துவர சளித் தொல்லை தீரும்.

 

* 300 கிராம் அளவு மாதுளம் பூவை இடித்து சாறு பிழிந்து 200 கிராம் நெய்யுடன் சேர்த்து, நீர்வற்றும் வரை காய்ச்சி வைத்துக்கொண்டு, தினமும் இருவேளை 5-10 மில்லி அளவு சாப்பிட்டுவர அனைத்து வகை மூலமும், உடல் உஷ்ணமும் தணியும்.

 

* மாதுளை பிஞ்சை நன்கு அரைத்து தயிரில் கலந்து குடிக்க சீதபேதி குணமாகும்.

 

* மாதுளம் பழச்சாற்றை சிறிது சூடாக்கி, காதில் ஓரிரு துளி விட காதில் சீழ் வடிதல் நிற்கும்.

 

* மாதுளம் பழச்சாற்றுடன் கற்கண்டு சேர்த்து 30 மில்லி அளவு காலையில் குடித்து வர நரம்புகள் வலிமையாகும்.

 

* மாதுளை வேர்ப்பட்டை ஒரு பங்கு, நீர் 20 பங்கு எடுத்து, அதனுடன் சிறிது இலவங்கம் சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடிக்க தட்டைப்புழு வெளியாகும்.

 

* மாதுளையின் விதை நீர்த்துப்போன வெண்ணீரை இறுக்கும். வெள்ளை நோயை குணமாக்கும். இது உடம்பிற்கு ஊட்டத்தை தருவதோடு, ஆண்மையையும் உண்டாக்கும்.

 

* மாதுளை தோலின் பொடி, ஜாதிக்காய் பொடி, மாதுளைப்பட்டைச் சாறு ஆகியவற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர நாட்பட்ட சீதபேதி குணமாகும்.

 

 

* மாதுளம் பழத்தின் சதையுடன் கூடிய விதையை நீக்கி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு வெள்ளைத்துணியில் தடவி, துணியை நன்கு உலர வைக்க வேண்டும். உலர்ந்த பின்னர், அந்த துணியை திரியாக்கி விளக்கெண்ணெய்விட்டு தீபம் ஏற்ற வேண்டும். அதில் வரும் கரியை ஒரு தட்டில் பிடித்து, விளக்கெண்ணெய் விட்டு குழைத்து ஒரு சிமிழில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். இது தான் இயற்கையான கண்மையாகும். இதை கண்களுக்கு மையிட்டால் கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்கும். கண் சம்பந்தமான நோய்கள் நெருங்காது.

 

 

நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள் 

 

 

நெல்லி (Emblica offinalis அல்லது Phyllanthus emblica) யுபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது

 

சித்த மருத்துவத்தில் நெல்லி மரத்தின் அனைத்து ( இலை, பட்டை, வேர், வேர்ப்பட்டை, காய், பழம், காய்ந்த பழம், பூ, விதை ) பாகமும் பயன் உள்ளது.

 

இது இதயத்திற்கு வலிமையை வழங்குகிறது. மற்றும் குடற்புண், இரத்தப்பெருக்கு, நீரிழிவு, கண் நோய் ஆகியவற்றைக் குணமாக்கும்.

 

அதன் காரணமாக கல்ப உருவிலும், வற்றல் உருவிலும், பாகு வடிவத்திலும், களிம்பு வடிவத்திலும் இதைப் பயன்படுத்துவர்.

 

இது தவிர நெல்லிக்காய் தைலம் உச்சந்தலையைக் குளிரச் செய்யும் மற்றும் கருமையான தலைமயிரைத் தரும்.

 

நெல்லியில் உள்ள ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.

 

பித்தத்தைக் குறைத்து உடலிலும் இரத்தத்திலும் தேங்கியுள்ள கொழுப்புகளைஉடைத்து கரைத்து வெளியேற்றும் தன்மை நெல்லிக்கனிக்கு உண்டு.

 

நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால்கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்துவந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.

 

நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரைநோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய்,தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோதேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.

 

இதில் மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான வைட்டமின் 'சி' உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளதாகக் கருதப்படுகின்றது. 

 

 

நெல்லிக்கனியின் சிறப்பு

 

 

1. ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.

 

2. ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது.

 

3. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.

 

4. எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது.இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது.

 

5. இருதய அடைப்பை தடுக்கிறது.

 

6. மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது. 

 

7.நெல்லியை இடித்துச் சாறு பிழிந்து தேன் சேர்த்து சிறிதளவு திப்பிலிப் பொடி கலந்து சாப்பிட்டு வர சுவாச காசம் குணமாகும். 

 

8. உலர் பழத்தைச் சாப்பிட்டு வர கண்பார்வை கூடும். வயிற்றுப்போக்கு நிற்கும்.

 

9. நெல்லிச்சாற்றை அருந்தி வர நுரையீரல் பெருக்கம் தீரும். புழுக்களை அழிக்கும்.

 

10. நெல்லியை அரைத்து சிறிதளவு குங்குமப்பூ கலந்து ரோஜா நீருடன் கலந்து குடிக்க தலைவலி, மூலநோய் நீங்கும்.

 

11. நெல்லிச்சாறு உடலிலுள்ள அதிக சர்க்கரையைக் குறைக்கும்.

 

12. நாள்தோறும் ஒரு நெல்லிக்கனி தின்றால் இதயக் கோளாறுகள் நீங்கும். நரம்புத் தளர்ச்சி, இளநரை, தோல் சுருக்கம் போன்றவை குணமாகும்.

 

13. பாலில் சிறிதளவு நெல்லிச்சாறு கலந்து சாப்பிட்டுவர கீல்வாதம், நரம்புத் தளர்ச்சி, மூளைச்சூடு ஆகியவை குணமாகும்.

 

14. நெல்லியை உலர்த்திப் பொடியாக்கி தேய்த்துக் குளிக்க உடலில் சொறி, தோல் சுருக்கம் நீங்கும்.

 

15. உலர் நெல்லியை நீரில் போட்டு ஊறவைத்து இந்நீரில் கண்களைக் கழுவி வர கண்நோய்கள் குணமாகும்.

 

16. நெல்லிப் பொடியுடன் தேன் அல்லது நெய் கலந்து இரவில் சிறிதளவு உண்டுவர கண்பார்வை மங்குதல் மாறும்.

 

17. நெல்லிக்கனியை, எலுமிச்சை இலைகளோடு சேர்த்து அரைத்து பாலில் கலந்து, நரை (ஆரம்பக்கட்ட நரை) முடிகள் மேல் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறிய பின் இளஞ்சூடான நீரில் குளித்து வர நரை மேலும் தோன்றாது.

 

18. நெல்லியை அரைத்து நெற்றியில் பற்றுப் போட சளியுடன் கூடிய தலைபாரம், தலைவலி நீங்கும்.

 

19. நெல்லிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட சளி, தும்மல் நீங்கும்.

 

20. பாலில் நெல்லிப்பொடியைக் கலந்து கொதிக்க வைத்து, சிறிதளவு நெய்விட்டு கலக்கி அருந்திவர கக்குவான் இருமல் குணமாகும்.

 

21. நெல்லிக்காயைத் தின்று வந்தால் பயோரியா நோய், ஸ்கர்வி நோய் நீங்கும். பல் கிருமிகள் அழியும்.

 

22. நெல்லிச்சாறில் சந்தனம் கரைத்து சிறிதளவு உட்கொள்ள குமட்டல், வாந்தி நிற்கும்.

 

23. நெல்லி விதையை ஊறவைத்து அரைத்து, பாலில் கலந்து சாப்பிட மூலநோய் குணமாகும்.

 

24. நெல்லி லேகியம் உண்டு வந்தால் இதயம் வலிமை பெறும். இரத்தக்குழாய் அடைப்பு நீங்கும்.

 

25. நெல்லிச் சாறுடன், வாழைப்பட்டை சாறு கலந்து அருந்த பாம்பு, தேள், வண்டு நஞ்சுகள் இறங்கும்.

 

26. நெல்லிப்பொடி, நெல்லி லேகியம் இவைகள் மதுவால் புண்ணாகிப்போன உள்ளுறுப்புகளைச் சீராக்கும். 

 

 

எலுமிச்சம் பழம் 

 

 

எலுமிச்சையில் செடி எலுமிச்சை, கொடி எலுமிச்சை என இரண்டு வகை உண்டு. நம்மவர்கள் எலுமிச்சையில் செய்யப்பட்ட ஊறுகாய் என்றால் எந்த சாப்பாட்டையும் ஒரு பிடி பிடிப்பார்கள்.

இத்தகைய எலுமிச்சையில் வைட்டமின் சி, சுண்ணாம்புச்சத்து, செம்புச் சத்துகள் காணப்படுகின்றன.

 

மருத்துவ பயன்கள் :

 

* தேள் கொட்டினால், அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷம் இறங்கிவிடும்.

 

* தலைவலிக்கு கடுங்காபியில் (ப்ளாக் காபி) எலுமிச்சையின் சாற்றை கலந்து கொடுத்தால் சட்டென்று குணமாகும்.

 

* நீர் சுருக்கு, பித்த நோய், வெட்டை சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால் தகுந்த நிவாரணம் பெறலாம்.

 

* மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.

 

* கழிச்சலுக்காக மருந்துகள் உட்கொண்டு, அதனால் அடங்காத கழிச்சலும், வாந்தியும் ஏற்பட்டால், சீரகத்தை தேன் விட்டு பொன்னிறமாக வறுத்து, அதனுடன் எலுமிச்சம் பழச்சாற்றையும் சேர்த்து நீர் விட்டு காய்ச்சி உட்கொள்ள கொடுத்தால் உடனே வாந்தியும், கழிச்சலும் நிற்கும்.

 

* எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து குளித்துவர பித்தம், வெறி, உடல் உஷ்ணம் தணியும்.

 

* அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால் எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை (கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சேர்த்து காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர ரத்தக்கட்டு கரையும்.

 

* நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை பழத்தில் துளையிட்டு விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும்.

 

* எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் தீரும். இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த அழுத்தம் குறையும்.

 

* சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள், மருதாணியை அரைத்து, அதை எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால் எரிச்சல் குணமாகும்.

 

* சிறிதளவு எலுமிச்சை இலைகளை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.

 

* எலுமிச்சம் பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி, அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி பிடிக்க நீர்பீனிசம் தீரும்.

 

* சீமையகத்தி எனப்படும் வண்டு கொல்லி இலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் பூசி வர படர்தாமரை குணமாகும்.

 

* சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து, பின் அந்த சாற்றுடன் வெயிலில் காய வைக்கவும். நன்றாக காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம் பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து மீண்டும் வெயிலில் காய வைக்கவும். நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து பொடியாக்கிக் கொள்ளவும். அதில், தேவையான அளவு எடுத்து, அதை ஒரு ஸ்பூன் அளவு தேன் அல்லது தண்ணீரில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டுவர அஜீர்ணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம் சீராகும்.

 

 

பழப் புளி 

 

 

புளியமரத்தை வடமொழியில் ‘திந்திரினி‘ என்று அழைப்பார்கள். வனம் என்பது காடு. புளியமரக்காடுகள் நிறைந்த இடம் ‘திந்திரினிவனம்‘ எனப்படும். தமிழ்நாட்டில் உள்ள திண்டிவனத்திற்கு, அவ்வாறு பெயர் ஏற்படக் காரணம், அங்கு முன்பு ஏராளமாக காணப்பட்ட புளியமரங்கள்தான்.

 

மருத்துவ பயன்கள் :

 

 

* புதிய புளியை பயன்படுத்துவதைவிட பழைய புளியே நல்லது. ‘கோடம்புளி‘ எனப்படும் புளியம்பழம் மிகவும் சிறந்தது. குடல் புண்ணை உண்டாக்காது.

 

* புளியமர இலைகளை நசுக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து மூட்டு வீக்கங்களின் மீது பற்றிட்டு வந்தால் அந்த வீக்கம் விரைவில் மறையும்.

 

* புளியிலை ஒரு பங்கு, வேப்பிலை ஒரு பங்கு எடுத்து நன்றாக இடித்து, 8 பங்கு நீர்விட்டு காய்ச்சி 4 பங்காக வற்றியதும் வடிகட்டி, அதைக்கொண்டு புண்களை கழுவிவர ஆறாத ரணங்கள் ஆறிவிடும்.

 

* புளியிலையை அவித்து, அதே சூட்டோடு சுளுக்கு உள்ள இடத்தில் ஒற்றடம் இட்டு, வைத்து கட்டிவர சுளுக்கு குணமாகும்.

 

* இளம் பச்சை நிறத்தில் இருக்கும் புளியங்கொழுந்து இலைகளை பாசிப்பருப்புடன் சேர்த்து கடைந்து சாப்பிட உடலுக்கு பலம் உண்டாகும்.

 

* புளியங்கொழுந்தை பறித்து பச்சையாக சாப்பிட கண்களைப் பற்றிய நோய்கள், புண்கள் ஆறும்.

 

* புளியம்பூவை நசுக்கி நீர்விட்டு அரைத்து கொதிக்க வைத்து, கண்களை சுற்றி பூசிவர கண் சிகப்பு, கண் வலி ஆகியவை நீங்கும்.

 

* புளியம்பூவை நெய்விட்டு வதக்கி துவையலாக செய்து சாப்பிட்டுவர பித்தம், வாந்தி, வாய்க் கசப்பு ஆகியவை தீரும்.

 

* புளியை குழம்புபோல் கரைத்து, அதனுடன் 2 பங்கு உப்பு சேர்த்து காய்ச்சி கொதிக்க வைத்து, இளம்சூடாக இருக்கும் நேரத்தில் அடிபட்டதால் ஏற்பட்ட வீக்கத்தில் தடவிவர இரண்டொரு வேளையில் அது கரைந்துவிடும்.

 

* புளி, உப்பு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து உள் நாக்கில் தடவிவர அதன் வளர்ச்சி கரையும்.

 

* புளியம்பழம், கரிசலாங்கண்ணி இரண்டையும் அரைத்து நெல்லிக்காய் அளவு 8 நாட்கள் சாப்பிட்டு வர அடிதள்ளல் குணமாகும்.

 

* புளியை தினமும் ரசத்தில் சேர்ப்பதால் மிளகாய், உப்பு, பூண்டு ஆகியவற்றின் வேகத்தை அது கட்டுப்படுத்தும். உணவில் அளவோடு புளியை சேர்த்துவர ஜீரண சக்தி அதிகரிக்கும்.

 

* மது அருந்தியதால் ஏற்பட்ட வெறி, மயக்கத்திற்கு புளியை கரைத்து உட்கொள்ள கொடுக்க அது குணமாகும்.

 

* புளியையும், சுண்ணாம்பையும் சேர்த்து அரைத்து தேள் கடி விஷத்திற்கு கடி வாயில் வைத்து கட்ட அது குணமாகும்.

 

* புளியங்கொட்டையின் மேல் தோலை பொடித்து சீதக்கழிச்சலுக்கு உட்கொள்ள கொடுக்க அது தீரும். இதனுடன் மாதுளம் பழத்தோலையும் பொடித்து உட்கொள்ள கொடுக்கலாம்.

 

* புளியங்கொட்டையின் மேல் தோலை காய வைத்து தூளாக்கி, 250 & 300 மில்லி கிராம் அளவு தேன் அல்லது சர்க்கரையில் கலந்து காலை, மாலை ஆகிய இருவேளை உட்கொண்டுவர புண்கள், நீர்க்கடுப்பு, வெள்ளை, வெட்டை, கழிச்சல் ஆகியவை குணமாகும்.

 

* புளியங்கொட்டையின் தோல் ஒரு பங்கு, சீரகம் 3 பங்கு, பனங்கற்கண்டு 4 பங்கு ஆகியவற்றை எடுத்து பொடி செய்து, தினமும் 3 வேளை 2 கிராம் அளவு உட்கொண்டு வர நாட்பட்ட கழிச்சல் குணமாகும்.

 

* புளிய மரப்பட்டையையும், சிறிது உப்பையும் ஒரு பாத்திரத்தில் இட்டு எரித்து சாம்பலாக்கி, அதில் 100 - 200 மில்லி கிராம் அளவு தினமும் இருவேளை தேனில் கலந்து சாப்பிட அஜீரணம், வயிற்றுப்புண் ஆகியவை குணமாகும்.

 

* புளியம் பட்டையின் சாம்பலை நீரில் கலக்கி, அது தெளிந்தவுடன், அந்த நீரைக்கொண்டு வாய் கொப்பளித்துவர தொண்டைப்புண் குணமாகும்.

 

* புளியம்பட்டையை பொடி செய்து புண்களின் மீது தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசிவர அந்த புண் ஆறும்.

 

* ஜீரண சக்தியை உண்டாக்கும் புளி மலத்தை இளக்கக் கூடியதும் கூட! என்றாலும், அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி வந்தால் நரை, வயது முதிர்ந்த தோற்றம் போன்றவை விரைவில் ஏற்படும். 

 

பழங்களும் அதன் மருத்துவக் குணங்களும்

 

 

1. கருப்பைக்கு வலிமை தரும் “மாதுளை”

மாதுளை பழம் வாரம் 1 சாப்பிட்டு வர, கருப்பைக் குற்றம் வராது காக்கும். வயிற்றுக் கோளாறு வராது.

 

2. வாய்வுக்கும் “நாரத்தம் பழம்”

நாரத்தம் பழம் சிறிது சாப்பிட்டுவர வாய்வுக் கோளாறு நீங்கி வயிற்று உப்புசம் விலகும்.

 

3. கண்ணொளி தரும் “முந்திரிப் பழம்”

கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர, கண் பார்வைத் துலங்கும்.

 

4. வெண்மேகம் தீர்க்கும் கண்டங் கத்திரிப்பழம்”

கண்டங்கத்திரிப் பழம் 1 பிடி எடுத்து 2 குவளை நீரில் கொதிக்க வைத்துக் குழம்பு வைத்துக் குழம்புப் பதத்தில் தேங்காய் எண்ணை கலந்து பதத்தில் இறக்கி ஆறவைத்து வெண்புள்ளி மீது தேய்த்துவர அவை மறையும்.

 

5. காச நோய்க்குத் “தூதுளம் பழம்”

தூதுளம் பழத்தை அப்படியே 4 அல்லது 5 தினம் சாப்பிடக் காச நோய் தணியும். கபம் விலகும்.

 

06. கபால நரம்புகள் பலம் பெறப் “பலாப்பழம்”

பலாப்பழத்தைத் தேனுடன் கலந்து ஒன்றிரண்டு சாப்பிட்டு வர கபால நரம்புகள் வலிமை பெறும். அதிகம் சாப்பிட்டால் உடலில் சூடு உண்டாகும்.

 

07. பசியைத் துண்டும் “இலந்தைப் பழம்”

பகலுணவுக்குப் பின் இலந்தைப் பழம் சாப்பிட்டு வர, செரிமானம் தூண்டப்பெறும். அக்கினி மந்தம், கபக்கட்டு, பித்தம் விலகும்.

 

08. தாது விருத்தி தரும் “திராட்சை”

உலர்ந்த திராட்சைப் பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தினசரி பாலுடன் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவர மலச்சிக்கல் விலகும். தாது விருத்தி பெறும்.

 

09. பப்பாளிப் பழம்

யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளிப்பழம் தினம் கால் பழம் சாப்பிட்டு வர, வீக்கம் கரையும், உடலுக்கும் வலிமை சேர்க்கும்.

 

10. வாழைப்பழம்

மூளையில் செயல்திறனை ஊக்குவிக்கும் வாழைப்பழம். செவ்வாழை, மலைவாழை மூளையின் ஆற்றலைப் பன்மடங்கு பெருக்கும்.

 

11. வில்வப் பழம்

பாலில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் விலகும். வயிற்றுப் புண் ஆறும். சிறுநீ ரகம்

நன்கு செயல்படும்.

 

12. அரசம் பழம்

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, தரமான அணுக்களை உருவாக்குவதில் அரசம் பழம் முதலிடம் பெறுகிறது.

 

13. சீமை அத்திப்பழம்

மூட்டு வலியைப் போக்கி ஆரத்தச் சோகையை விலக்குவதில் சீமை அத்திப் பழம் சிறப்பாக உதவுகிறது. தினசரி 2 சீமை அத்திப்பழத்தைப் பாலில் போட்டுச் சாப்பிட மூட்டுவலி போகும். இரத்தச் சோகை விலகும்.

 

14. பேரீச்சம் பழம்

இல்லற சுகம் சோர்வின்றி இயங்கத் தினசரி 4 பேரிச்சம் பழத்தை இரவு பாலுடன் சாப்பிடுங்கள். இரத்தச் சோகை விலகும்.

 

15. தர்பூசணிப் பழம்

கோடைக்கால வெப்பத்தைத் தணிவித்து மூலநோய் வராமல் தடுக்கத் தர்பூசணிப் பழத்துடன் சிறிது தேன்கலந்து சாப்பிடலாம்.

 

16. முலாம் பழம்

மலச்சிக்கலை உடைத்து உடலுக்கு உரமளிப்பது முலாம்பழம். உடம்பு 'எடை' போட இதனை அடிக்கடி சாப்பிடலாம்.

 

17. விளாம்பழம்

பித்தம் அதிகமாகிச் சித்தம் தடுமாறுபவர்கள் காம விகாரத்தால் அவதிப்படுவர்கள் விளாம்பழத்தைக் காலை வெறும் வயிற்றில் சிறிது வெல்லம் கலந்து பிசைந்து சாப்பிட, பித்தம் தணியும். காம உணர்வு கட்டுப்படும்.

 

18. அன்னாசிப் பழம்

குடலில் பூச்சி சேருவதை வெளியேற்றிச் சிறு கட்டிகள் இருந்தால் அதனைக் கரைத்துச் சீரணத்தைத் தூண்டுகிறது அன்னாசிப் பழச் சாறு+தேன். மழைக்காலத்தில சாப்பிட்டு வர, தொண்டைக்கட்டு நீங்கும். 

 

19. இளமை தரும் தக்காளி

இரத்தம், குடல் ஆகியவற்றைச் சுத்தம் செய்து இளமை தரும் தக்காளி, மலச்சிக்கலையும் போக்கும்.

 

20. பேதியை (வயிற்றோட்டத்தை) நிறுத்தும் எலுமிச்சம்பழம்எலுமிச்சம் பழச்சாறுடன் சர்க்கரை கலந்து 6 மணிக்கொருமுறை சாப்பிட்டு வர 2 நாளில் பேதி நின்றுவிடும்,

 

21. இன்பம் தரும் இனிப்புக் கமலா

இல்லற இன்பம் செழிக்க, 1 குவளை வெந்நீரில் இனிப்புக் கமலாப் பழத்தைப் போட்டுத்தேன் கலந்து சாப்பிட்டு வர தாதுபலமுண்டாகி, இல்லற இன்பம் செழிக்கும்.

 

22. விக்கலை நிறுத்தும் கொய்யாப் பழம்

கனிந்த கொய்யாப் பழம் சாப்பிட்டு வர விக்கல் வராது. இரைப்பை வலிமை பெறும்.

 

23. தலைக் கனம் குறைக்கும் களாப் பழம்

களாப் பழத்தை உணவுக்குப் பின் சாப்பிட்டு வர, தலையில் ஏறிய நீர் குறைந்து தலைக்கனம் குறையும்.

 

24.மலச்சிக்கலைப் போக்கும் நறுவிலிப் பழம்

நறுவிலிப் பழத்தைத் தினசரியோ அல்லது மலச்சிக்கலின்போதோ சாப்பிட்டு வர மலச்சிக்கல் அற்றுப் போகும்.

 

25. தாகம் தணிக்கும் ஆல்பகோடாப் பழம்

காய்ச்சல் வந்தபின் நாக்கு உருசி மங்கி வறட்சியாகித் தாகம் அதிகரிக்கும். அப்போது, ஆல்பகோடாப் பழம் ஒன்று அல்லது இரண்டை வாயிலிட்டுச் சுவைக்கத் தாகம் தணியும். காய்ச்சல் விலகும்.

 

 
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல இணைப்புகளை தேடி இணைக்கும் அலைமகளுக்கு நன்றிகள் .

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.