Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாய் நாற்றம் - காரணிகளும், சிகிச்சைகளும்

Featured Replies

mouth-odour.jpg

 

சிலர் வாய் திறந்தால் பக்கத்தில் இருக்கவே முடியாதபடி வாய் நாறும். ஆனால் அவர்களோ சாதாரணமாக உரையாடுவார்கள். காரணம் அந்த துர்நாற்றமானது அவர்களுக்குத் தெரிவதில்லை. எதிரில் இருப்பவர்களுக்கு மாத்திரம் அந்த துர்நாற்றம் உணர முடியும்.

இந்த துர்நாற்றம் காரணமாக கணவன் மனைவியிடத்தில் பிரச்சனைகளும், சிலருடைய காதலில் முறிவும், நண்பர்களுக்கிடையே வெறுப்பும் ஏற்படுகின்றன. முகம் வைத்து கதைப்பவர்கள் (பெற்றோர், கணவன், மனைவி, பிள்ளைகள் உட்பட) எல்லோருமே அருவருப்பாக முகம் சுளிப்பார்கள். 

இதற்கான காரணத்தை அறிந்து தகுந்த சிகிச்சை பெற்றால் மற்றவர்களுடன் அன்பாக பழக முடிவதுடன் மகிழ்வாகவும் வாழலாம்.

இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். நம் கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாக்கள் (plaque) நம் வாயில் சேர்ந்து கொண்டே இருப்பது, உணவு உண்ட பின் வாயை சரியாகக் கழுவாமல் இருப்பது போன்றவை முக்கிய காரணங்கள். பல்லில் ஏற்படும் சிதைவு, பற்குழிகள் ஈறுகளில் வரும் நோய்கள் போன்றவை மற்ற காரணங்கள். 

வாய் துர்நாற்றமடிப்பது பலருக்கு அவ்வப்பொழுது வந்து போவதாக இருந்தாலும், நிரந்தரமாகவும், மீண்டும் வருவதாக இருப்பதுதான் மற்றவர்களுடன் பேசும்பொழுது அசௌகரியமமான நிலையை ஏற்படுத்துகின்றது. வாய் நாற்றத்திற்கு பல காரணங்கள் இருக்கின்ற போதிலும், அவற்றை இலகுவாகவும் இயற்கையான முறையிலும் தீர்த்துவிடலாம்.

 

வாய்க்குழியை சுத்தமானதாக வைத்திருப்பதே வாய் நாற்றத்தை தவிர்ப்பதற்கான முதற்படியாகும். அதற்கு வாய்க் குழியிலமைந்துள்ள பற்கள், ஈறுகள், நாக்கு ஆகியவற்றைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகின்றது. உணவின் சிறு துண்டுகள் பற்களிடையே தங்குவதால் அதில் பற்றீரியா தாக்க மேற்பட்டு சிதைவடையும் பொழுது துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

தினமும் இரு வேளை பல் துலக்கி சுத்தம் செய்வதோடு, நாவையும் (மென்மையான பல் துலக்கியினால்) வழித்து விட வேண்டும். நாளுக்கு ஒரு தடவையாதல் நாவை வழித்துவிட வேண்டும். ஒவ்வொரு உணவின் பின்பும் பல் துலக்குவது மிகவும் நன்மைபயக்கும். ஆனால் இது நடைமுறைச் சாத்தியம் குறைந்ததாகையால் சாப்பாட்டின் பின் வாய் நிறைய தண்ணீரை எடுத்து நன்றாக அலசி கொப்பளித்துவிடலாம். 

வருடத்திற்கு இரு தடவையாதல், பல் வைத்தியரைக் கொண்டு பற்களை சுத்தம் செய்வதோடு, பற்களின் ஆரோக்கிய நிலையினையும் தெரிந்து கொள்ளவேண்டும். முரசிலிருந்து இரத்தம் வடிவதாக இருந்தால், அது வாய் நாற்றத்திற்கு காரணமாக இருப்பதோடு பற்சூத்தை, பற்களுக்கடியிலான கட்டிக்கும் காரணமாகிறது.

தினமும் முறையாகப் பல் துலக்கவிட்டால் பல்லிடுக்குகள் மற்றும் ஈறுகளுக்கிடையே சிக்கிய உணவுத் துணுக்குகளில் பாக்டீரியாக்கள் பெருகி நாற்றமுள்ள வாயுக்களை வெளிவிடும். நாக்கிலும் பெருமளவு பாக்டீரியாக்கள் காணப்படும் புகைப்பிடித்தல் மற்றும் புகையிலைப் பொருட்கள் மெல்லுதல், வெற்றிலைப் பாக்கு, பான் பராக் பழக்கங்கள், பற்களில் கறை, வாய் துர்நாற்றம் ஏற்படுத்தும். 

நாக்கின் சுவை அறியும் திறன் பாதிக்கப்படும், ஈறு வலி ஏற்படும். வாய் துர்நாற்றமும் நாக்கில் சுவை குறைவும் ஈறு வியாதிகளுக்கு அடையாளம். பற்களில் கொஞ்சம் கொஞ்சமாகப் படியும் மஞ்சள் கறை ஈறுகளை பாதிக்கும். பாக்டீரியாக்கள் வெளிவிடும். அப்படியே கவனியாது விட்டால் ஈறுகளும் தாடை எலும்புகளும் சிதைவடையத் தொடங்கும். 

வாய் மற்றும் பற்குழிகளில் ஈஸ்ட் தொற்று இருந்தாலும் பற்கள் பாதிப்படையும். வாய் துர்நாற்றம் உண்டாகும். வாயில் சுரக்கும் உமிழ்நீர் வாயை எப்போதும் ஈரமாக வைத்துக் கொள்கிறது. பாக்டீரியாக்கள் வெளியிடும் அமிலங்களை சமனப்படுத்தி சுத்தப்படுத்துகிறது. இது வாய்க்குள் சேரும் இறந்த செல்களை சுத்தப்படுத்தும். 

இல்லாவிட்டல் இந்த இறந்த செல்கள் அழுகி துர்நாற்றம் உண்டாக்கும். பல்வேறு மருந்துகள் உட்கொள்வதும், உமிழ் நேர் சுரப்பிக் கோளாறும், வாய்வழியாக அதிகம் சுவாசிப்பதும் வாய் உலர்வை ஏற்படுத்தி துர்நாற்றம் உண்டாக்கும். சுவாசக் குழாய் பாதிப்பு, நிமோனியா, பிராங்கைடிஸ், சைனஸ் பாதிப்பு , நீரிழிவு, எதுக்களிப்பு, ஈரல், மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தலாம். 

 

மருத்துவ ரீதியான காரணங்கள்:

 

தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பியில் பிரச்சனை (Infection) ஏற்பட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.

உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் ஏற்படும் வியாதிகள் ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில் ஒரு சிலருக்கு உணவுப் பையிலிருந்து அமிலமானது மேல்நோக்கி வந்து போகும். இதனாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். இதை ஆங்கிலத்தில் Re-flux என்பார்கள்.

அஜீரணக் கோளாறுகளால் வாய் துர்நாற்றம் ஏற்படும். உணவுக்குழாயில் சென்ற உணவானது நான்கு மணி நேரத்திற்குள் ஜீரணமாகிவிடும். நான்கு மணி நேரத்திற்கு மேலும் ஜீரணமாகாமல் உணவு மண்டலத்திலேயே உணவு தங்கும்போது வயிற்றில் ஏற்படும் புளித்த நாற்றம் வாய் வழியாக வந்து சேரும்.

வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் நிச்சயம் இந்த வாய் துர்நாற்றம் ஏற்படும். அதாவது அல்சர் நோய் உள்ளவர்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள்.

மற்ற காரணங்கள்: புகையிலை, வெற்றிலை, பாக்கு போடுதல், உடலில் நீர்ச்சத்து குறைபாடு.

அவரவர் வாயில் குடியிருக்கும் (Anaerobic gram negative bacteria) நுண் கிருமிகள் பிராணவாயு இல்லாத சூழ் நிலையிலும் பெருகும் தன்மையுள்ளன. 

நுண்கிருமிகள் வெளியேற்றும் கழிவுகளால் துர் நாற்றம் உண்டாகிறது. சாதாரணமாக வாயிலுள்ள நுண்கிருமிகளால் வெளியேறும் கழிவுகளில் ஆவியாகக் கூடிய கந்தக(Sulfur) கூட்டுப் பொருட்கள் உள்ளன. 

அழுகிய முட்டையிலிருந்து வெளியேறும் Hydrogen sulfide துர்நாற்றம் போலவும், குப்பைக் கிடன்கிலிருந்து வரும் Methyl mercaptan துர்நாற்றம் போலவும், கடல் புறங்களிலிருந்து வெளியாகும் Dimethyl sulfide துர்நாற்றம் போலவும் வாயிலுள்ள நுண் கிருமிகளிலிருந்து வெளியேறுகின்றன. இவைகள் Volatile Sulfur Compound (VSC) என்றழைக்கபடுகின்றன.

வாயிலிருக்கும் நுண்கிருமிகளால் வெளியேறும் இன்னும் வேறு பல கழிவுகளும் துர் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இறந்த உடலிலிருந்து வெளியேறும் துர்நாற்றம்Cadaverine போலவும், பழுதான இறைச்சியிலிருந்து ஏற்படும் துர்நாற்றம் Putrescine போலவும், மலத்தில் ஏற்படும் துர்நாற்றம் Skatole போலவும், வியர்க்கும் பாதத்திலிருந்து ஏற்படும் துர்நாற்றம் Isovaleric acid போலவும் வாயிலுள்ள நுண் கிருமிகளிலிருந்து வெளியேறுகின்றன.

கிருமிகள் பெருகுவதற்கு தேவையான உணவு நாம் உண்ணும் மீன், இறைச்சி, முட்டை, பால் போன்ற புரத உணவிலிருந்தும், உமிழ் நீர், வாயின் உட்புறத்தில் கழியும் திசுக்களிலிருந்தும் கிடைக்கிறது. வாயை, சாப்பிட்ட ஒவ்வொரு முறையும் நன்றாக கொப்பளிக்காததால் உணவுப் பொருட்கள் வெண்மையான காரையாக பற்களின் இடுக்குகளில், பற்களின் மேல், ஈறுகளுக்கு உட்புறம் மற்றும் நாக்கின் பிற்பகுதியில் மாவு போன்ற வெண் படலமாக படிந்து விடுகிறது. வெண்படிமம் 0.1 – 0.2 மி.மீ அளவில் இருந்தாலும் கிருமிகளுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் பெருகி கழிவுகளை வெளியேற்றுகின்றன.

செயற்கைப் பற்கள் கட்டியிருந்தால், அதற்கும் வாய்க்கு இடையிலும் உணவுப் பொருட்கள் தங்கி கிருமிகள் வளர ஏதுவாகிறது. வாயிலும், நாக்கிலும், பற்களின் இடுக்குகளிலும் உள்ள இடத்தில் குடியேறி கழிவுகளை வெளியேற்றும் கிருமிகளுக்கும், பிற கிருமிகளுக்கும் நிரந்தர போட்டி நடந்து கொண்டேயிருக்கிறது. இக்கிருமிகளும், அதன் கழிவுகளும் எல்லோரின் வாயிலும் இருக்கின்றன. வாயையும், பற்களையும் சுத்தமாக வைத்திருப்பவர்கள் பலருக்கு நாற்றம் இல்லாமல் இருக்கிறது. வாயையும், பற்களையும் சரியாக பராமரிக்காதவர்களுக்கு நாற்றம் மிகுந்து இருக்கிறது.

அடுத்து, வாயின் உட்பகுதியில் ஈறு நோய் (Gum disease – Chronic Periodontitis) பாதிப்புள்ளவர்களுக்கும் வாயில் துர் நாற்றம் ஏற்படலாம். குறிப்பாக நாக்கின் பின் புறத்திற்கு அருகிலுள்ள பற்கள் மற்றும் ஈற்றின் இடைவெளிகளில் உணவுப் பொருட்களின் படிமம் தேங்குகிறது. இந்த இடங்களிலும் நுண் கிருமிகள் தங்கி பற்களைச் சுற்றியுள்ள எலும்புப் பகுதியை அரித்து, பற்களில் குழியை (Periodontal pockets) ஏற்படுத்துகிறது. இந்த குழிகளிலும் மேலும் உணவுப் பொருட்களும், கிருமிகளும் தங்கி, கழிவுப் பொருட்களை உற்பத்தி செய்து வாய் துர் நாற்றத்தை அதிகரிக்கிறது.

சில உணவுகளும் வாய் நாற்றத்திற்கு காரணமாகலாம். உள்ளி, வெங்காயம், புளு சீஸ், காரமான, வாசனைத் திரவியம் சேர்த்த இறைச்சிக் கறிவகைகள், சில வகை மீன்கள், மதுபானங்கள், பியர். வயின், விஸ்கி, கோப்பி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

சில நோய் நிலைக்கான மருந்துகளும், சமிபாட்டுக் குழறுபடிகளும் வாய் நாற்றத்திற்கு காரணமாகலாம்.

 

இந்நிலைக்குப் பயன்படக் கூடிய சில:

 

பேர்பெறிஸ் பிளஸ் - மூலிகைச் சேர்மானம் - சமிபாட்டை ஊக்குவித்து, உணவுத் தொகுதி கழிவகற்றலை மேம்படுத்துகிறது. பெப்பமின்ற் ஒயில் - 10 துளிகளை 100மி.லீ நீரில் கலந்து வாயை அலசி கொப்பளிக்கப் பயன்படுத்தலாம்.

வி.எம்-75 குறைநிரப்பி வேண்டிய உயிர்ச்சத்துக்களைக் கொண்டிருப்பதனால் (விற்றமின் ‘பி’) நரம்புத் தொகுதிக்கு ஊக்கம் கொடுப்பதாக செயற்படுகிறது.

பயோ குயிநோன் 10 – முரசை வலுப்படுத்துதோடு. இரத்தக் கசிவையும் குறைக்கவல்லது.

 

வாய் துர் நாற்றத்திற்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது?

 

1. நாக்கை சுத்தம் செய்வது மிகவும் முதன்மையானதும் அவசியமானதுமாகும். நாக்கின் முன் பாதி சாப்பிடும் போதும், பேசும் போதும் அடிக்கடி வாயின் மேல்புறத்தில்(Hard palate) உராய்வதால் இயற்கையாகவே சுத்தமாகிறது. ஆனால் நாக்கின் பின் பகுதி மிருதுவான Soft palate ல் உராய்வதால் போதுமான அளவில் சுத்தமாவதில்லை. வாயில் உற்பத்தியாகும் கிருமிகளையும், கந்தக காம்பௌன்ட் கழிவுகளையும் நீக்கக் கூடிய குளோரின் டை ஆக்ஸைடு அல்லது Cetylpyridiniumகுளோரைடு கலந்த பற்பசையைப் பயன்படுத்த வேண்டும். Tooth brush மற்றும் பிளாஸ்டிக் ஸ்பூன் அல்லது Tooth scaraper உபயோகித்து நாக்கின் பின்பகுதியையும், பற்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

2. முறையான இடைவெளியில் பல் மருத்துவரிடம் ஈறு பரிசோதனையும், பற்களை சுத்தம் செய்வதும் மிக அவசியம். பற்களின் நிலைமையும், ஈறு நன்றாக வீக்கமின்றி இருக்கிறதா என்பதையும் பல் மருத்துவரிடம் முறையாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும். பற்களில் காரை படிந்தும், எலும்பு தேய்ந்து பற்குழிகள் ஏற்பட்டிருந்தாலும் தகுந்த சிகிட்சை அளித்து பற்களைக் காப்பாற்றி, துர் நாற்றத்தையும் தவிர்க்க உதவுவார்.

3. புரதச்சத்துள்ள ஆகாரத்தை குறைத்தும், அதே நேரத்தில் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துள்ள உணவைச் சாப்பிட்டு வந்தால், வாயில் நுண் கிருமிகள் வளர வாய்ப்பிருக்காது. இத்துடன் புரதச் சத்துள்ள உணவைச் சாப்பிட்ட போது முறையாக நாக்கின் பின் பகுதியை சுரண்டி வழித்தும், பற்களுக்கு இடையில் சிக்கியுள்ள புரத உணவுத் துகள்களை Floss உபயோகித்து நீக்கியும், வாய் கொப்பளிக்கும் கிருமி நாசினி மருந்து (Chlorhexidine, Povidone 2% Gargle) திரவத்தால் வாய் கொப்பளித்தும் வாய் துர் நாற்றத்தைப் போக்கலாம்

4. வாயில் எப்பொழுதும் ஈரப்பதம் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரவில் தூங்கும் போது உமிழ் நீர் சுரப்பது குறைந்து, தூங்கி எழும் போது காலையிலும், நீண்ட நேரம் பேசினாலும், பேசிய பின்னும் ஈரப்பதமின்றி வாய் உலர்ந்து விடும். வாயில் ஈரப்பதம் இல்லையென்றால் துர் நாற்றம் வீசும். இதை தவிர்க்க தினமும் நிறைய நீர் குடிக்க வேண்டும். இது உமிழ் நீர் சுரக்க உதவி, வாய் ஈரப்பதத்துடன் இருக்கும். அடிக்கடி நல்ல நீர் கொண்டு வாய் கொப்பளிப்பதால் ஈரப்பதத்துடன், வாயிலுள்ள கிருமிகளையும் அதன் கழிவுகளையும் அகற்றலாம். சர்க்கரையில்லாத மிட்டாய்கள் சுவைப்பதாலும் வாயிலுள்ள ஈரப்பதத்தை அதிகமாக்கி துர் நாற்றத்தை போக்கலாம்.

5. கிருமி கொல்லியான வாய் கொப்பளிக்கும் மருந்தையும் (Mouth wash) பயன்படுத்த வேண்டும். 

 

வாய் கொப்பளிக்கும் மருந்து 

 

1. நுண் கிருமிகளை அழிக்கும் தன்மையது, 

2. வாய் நாற்றம் தரும் கந்தக கூட்டுப் பொருட்களை சமன் செய்வது என இரண்டு வகைப்படும். Listerine, Cetylpyridinium Chloride mouth wash ஆகிய இரண்டும் நுண் கிருமிகளை அழிக்கும் தன்மையுடையது. Zinc ions உள்ள Mouth wash வாயில் நுண் கிருமிகளால் உற்பத்தியாகும் கந்தகம் கலந்த கழிவுப் பொருட்களை சமன் படுத்தும் தன்மையுடையது. 

இரண்டு தன்மையும் உடைய Chlorine dioxide அல்லது Sodium chlorite கலந்த Mouth wash ம் உபயோகிக்கலாம். சில பற்கள் அல்லது முழுவதும் (Full denture) செயற்கை பல் கட்டியிருந்தால், சாப்பிட்ட பின் ஒவ்வொரு முறையும் அவைகளையும் கழற்றி நன்றாக கழுவிய பின் வாயைக் கொப்பளிக்க வேண்டும். 

மிகவும் அரிதாக நுரையீரல் அல்லது இரைப்பையில் ஏற்படும் தொற்றுக் கிருமிகளால் வாய் துர் நாற்றம் ஏற்பட கூடும். பூண்டு சேர்த்து செய்யப்படும் உணவுகளை உண்பதும் ஒரு காரணம். பூண்டு, வெங்காயம் இவைகளை உண்டவுடன் இவற்றில் இருக்கும் மிகக் கடுமையான வாசனை இரத்த ஓட்டத்துடன் கலந்து நுரையீரல் வழியாக மூச்சுக் காற்றுடன் வெளியே வருகிறது. ஆல்கஹால் மற்றும் புகையிலை மெல்லுவதும் கூட வாய் துர் நாற்றம் வர காரணம்.

சில உடல் உபாதைகள் சைனஸ் அல்லது டயாபடிஸ் (வாயிலிருந்து ஒருவித இராசாயன வாசனை வரும் இவர்களுக்கு) இருப்பவர்களும் இந்த வாய் துர் நாற்றத்திற்கு ஆளாகிறார்கள்.

 

எப்படி இந்த துர் நாற்றத்தைத் தவிர்க்கலாம்? 

 

வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்: ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் விளக்கவும். பல் மருத்துவரிடம் சென்று மாதத்திற்கு ஒரு முறை பற்களை floss செய்து கொள்ளவும். 

floss என்பது பிளாஸ்டிக்கினால் ஆன மெல்லிய இழை. இதன் மூலம் பற்களின் நடுவில் ஒட்டிக் கொண்டிருக்கும் உணவுத் துணுக்குகளை நீக்கலாம். வீட்டிலேயே நாமே செய்து கொள்ளலாம். 

அதே போல ஈறு களின் ஓரங்களில் இருக்கும் பாக்டீரியாக்களையும் அகற்றலாம். ஒவ்வொரு முறை சாப்பிட்டப் பிறகும் வாயை நன்றாக கொப்பளிக்கவும்.

நாக்கு வழித்தல்: பற்களை சுத்தம் செய்வது போலவே நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்யாத நாக்கினில் இருக்கும் கிருமிகளும் கூட துர் நாற்றத்தை ஏற்படுத்தும். 

இப்போதெல்லாம் டூத் ப்ரஷிலேயே பின் புறம் நாக்கு வழிக்க வசதியாக டங் கிளீனர் வைத்துள்ளனர். தனியாகக் கிடைக்கும் டங் கிளீனரை உபயோகப் படுத்துவது நல்லது.

◦வாய் உலராமல் பார்த்துக் கொள்ளுங்கள்: வாய் நீண்ட நேரம் நீர் குடிக்காமல் இருந்தால் உலர்ந்து போகும். நம் வாயில் ஊறும் உமிழ் நீர் நம் வாயை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. நாம் சாப்பிடும் போது உணவுத் துணுக்குகள் உமிழ் நீருடன் கலந்து உணவு குழாய்க்குள் செல்லுகிறது. வாயில் கிருமிகள் தங்காவண்ணம் உமிழ் நீர் தடுக்கிறது. 

ஆனாலும் இரவு தூங்கும் போது உமிழ் நீர் ஊறுவது குறைகிறது. காலையில் எழுந்திருக்கும் போது மிகக் குறைந்த அளவு உமிழ் நீர் வாயில் இருப்பதால் வாய் உலர்ந்து போகிறது. அதனால் காலையில் வாய் துர் நாற்றம் உண்டாகிறது. இதற்கு வாய் உலராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது சிறிது சிறிது நீர் குடித்துக் கொண்டே இருப்பது நல்லது. காபி, தேநீர் போன்ற பானங்கள் வாயை உலரச் செய்யும். இவைகளைக் குடித்தபின் தண்ணீர் குடிப்பது, வாய் உலர்ந்து போகாமல் தடுக்க உதவும்.

◦சுத்தமான நீரினால் வாயைக் கொப்பளியுங்கள்: சாப்பிட்டு முடித்தவுடன் நிறைய நீரை வாயில் விட்டுக் கொண்டு வாயை மூடிய படியே வாயினுள் எல்லா பக்கங்களிலும் நீரை சுழற்றுங்கள். பிறகு வெளியே கொப்பளித்து விடுங்கள். 

இதனால் பல்லிடுக்குகளில் சிக்கிக் கொண்டுள்ள உணவுத் துணுக்குகள் நீருடன் வெளியே வந்து விடும். பல முறை இதனைச் செய்யுங்கள். காபி, தேநீர் குடித்த பின் வாயைக் கொப்பளிப்பது, அல்லது தண்ணீர் குடிப்பது பற்களின் நிறம் மாறாமல் இருக்கவும், பேசும்போது நாம் குடித்த பானத்தின் வாசனை வராமல் இருக்கவும் உதவும்.

சூயிங் கம்: மூலிகைகளினால் ஆன சூயிங்கம் மெல்லலாம். வாய் துர் நாற்றம் இதனால் போகாது என்றாலும், மற்றவருடன் பேசும் போது நம் வாயை மணக்கச் செய்யும்.

காரட் போன்றவற்றை நன்கு கடித்து சாப்பிடலாம். நொறுக்குத் தீனியாக வேர்கடலை, குறைந்த கொழுப்பு சத்து கொண்ட சீஸ் முதலியவற்றை சாப்பிடலாம். இவை பற்களின் மஞ்சள் கறை படிவதைத் தடுப்பதுடன், வாய் துர் நாற்றத்தைத் தடுக்கவும் உதவும். இவற்றை கடித்து சாப்பிடுவதால் பற்களும் பலமாக ஆகின்றன.

எதை சாப்பிட்டாலும் உடனே வாயை சுத்தம் செய்வது மிக மிக நல்லது. ஒவ்வொரு முறை சாப்பிட்டவுடனேயும் – சிற்றுண்டியோ, சாப்பாடோ, முறுக்கு, ஸ்வீட் போன்ற பலகார வகைகளோ – வாயைக் கொப்பளிப்பதை பழக்கப் படுத்திக் கொள்ளவும். வாய் கொப்பளிக்கக் கூடிய சூழ்நிலை இல்லை என்றால் தண்ணீர் குடித்து வாயை உணவுத் துகள்கள் தங்காமல் பாதுகாத்துக் கொள்ளவும்.

◦கட்டுப் பல் : தினமும் உங்கள் பல் செட்டை சுத்தம் செய்யுங்கள்.

◦டூத் பிரஷ்: 3 அல்லது 4 மாதத்திற்கு ஒருமுறை டூத் பிரஷை மாற்றவும். மிருதுவான பிரஷையே பயன் படுத்தவும்.

இவை எல்லாம் உங்கள் வாய் நாற்றத்தைக் குறைக்க உதவலாம். ஆனாலும் பல் மருத்துவரிடம் சென்று என்ன பிரச்சினை என்பதை அறிந்து வைத்தியம் செய்து கொள்ளுவது நல்லது. அவ்வப்போது பற்களை சுத்தம் செய்து கொண்டு வருவது சாலச் சிறந்தது

 

 

http://www.panippulam.com/index.php?option=com_content&view=article&id=9055:2013-03-08-05-01-31&catid=54:what-ails-you&Itemid=411

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.