Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்ச்சைக்குரிய வடமாகாண சபைத் தீர்மானம் - நிலாந்தன்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்ச்சைக்குரிய வடமாகாண சபைத் தீர்மானம் - நிலாந்தன்:-

02 பெப்ரவரி 2014

வடக்கு மாகாண சபையில் கூட்டமைப்பு ஒரு சர்ச்சைக்குரிய தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றது. இலங்கைத் தீவில் இடம்பெற்றது இனப்படுகொலையை ஒத்தது என்று அத்தீர்மானத்திற் கூறப்பட்டுள்ளது. இடம்பெற்றது இனப்படுகொலை தான் என்பதை வெளிப்படையாகக் கூறத் தயாரற்ற அத்தீர்மானத்தை ஆதரித்தும் எதிர்த்தும் வாதப்பிரதிவாதங்கள் போய்க் கொண்டிருக்கின்றன.

அதை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்கள், அது ஒரு சமயோசிதமான யதார்ததபூர்வமான தீர்மானம் என்று. மற்றொரு தீர்மானத்தில் போர்க் குற்றம் தொடர்பில் அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றைக்கோரிய கூட்டமைப்பு இத்தீர்மானத்தில் இங்கு இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்பதைக் கூராகக் கூறுவதன் மூலம் அரசாங்கத்தை எதிர் நிலைக்குத் தள்ள – antoganize பண்ண- விரும்பவில்லை என்றும் அவர்கள் விளக்கமளிக்கின்றார்கள்.

கூட்டமைப்பின் செயற்பாட்டு ஒழுக்கத்தைப் பொறுத்தவரை அது அரசாங்கத்துக்கு எதிராக செங்குத்தாகத் திரும்ப முடியாது என்றும், எதிலும் ஒருவித மிதப்போக்கையே கடைப்பிடிக்க முடியும் என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள். கடுந்தீவிர நிலைப்பாட்டை எடுத்தால் கதவுகள் மூடப்பட்டு விடும். கதவுகள் மூடப்பட்டுவிட்டால் பிறகு அங்கே engagement இருக்காது. எனவே, கதவுகளை மூடாது வைத்திருக்கும் ஒரு மித நிலைப்பாட்டின் மூலம் தான் அடுத்தடுத்த கட்டங்களைக் கனிய வைக்க முடியும் என்றும் அவர்கள் விளக்கமளிக்கின்றார்கள்.

இத்தீர்;மானத்தை எதிர்ப்பவர்களும் கூட்டமைப்பை விமர்சிப்பவர்களும் இது ஒரு அப்பட்டமான காட்டிக்கொடுப்பு என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். படுகொலை செய்யப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சி இப்படியொரு தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலம் அரசாங்கத்தைப் பாதுகாத்திருப்பதோடு இன்னொரு புறம் உலகளாவிய தமிழ் லொபியைப் பலவீனப்படுத்தியிருக்கிறது என்றுமவர்கள் விமர்சிக்கிறார்கள்.

போர்க்குற்ற விசாரணை எனப்படுவது தமிழ் மக்களுக்குக் கிடைக்கக்கூடிய நீதியின் ஒரு பகுதி அல்லது நீதியின் தொடக்கம் மட்டுமே என்பது அவர்களுடைய விவாதமாக இருக்கிறது. போர்க்குற்றவாளிகளைத் தண்டிப்பதோடு மட்டும் அனைத்துலக நீதி நின்றுவிடக்கூடாது என்றும் அது தமிழ் மக்களுக்கான உச்சபட்ச தன்னாட்சிக் கட்டமைப்பு ஒன்றை பெறுவதற்கான அடித்தளத்தையும் பலப்படுத்துவதாக அமையும் போதுதான் தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய நீதி அதன் முழுமையைப் பெறும் என்றுமவர்கள் கூறுகிறார்கள். தமிழ் மக்களுக்கு ஒரு உச்சபட்ச தன்னாட்சிக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒரு சட்டபூர்வ அடித்தளம் எனப்படுவது இலங்கைத்தீவில் இனப்படுகொலை நடந்திருக்கிறது என்பதை நிரூபிப்பதிற்தான் தங்கியிருக்கின்றது என்பது அவர்களுடைய வாதமாகும்.

இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக இனப்படுகொலைக்கு உள்ளாகி வந்திருக்கிறார்கள் என்பதையும், தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் ஒரு அரசுக் கட்டமைப்பும், ஆட்சிப் பாரம்பரியமுமே கொழும்பில் தொடர்ச்சியாக நிலவி வந்திருக்கிறது என்பதையும் அனைத்துலக சமூகம் ஏற்றுக் கொள்வதிலிருந்தே தமிழ் மக்களுக்கான நிதி தொடங்குகிறது என்று கூறுமவர்கள், அப்படி இனப்படுகொலை வரலாறு ஒன்று இலங்கைத் தீவில் உண்டு என்பதை உலக சமூகம் ஏற்றுக்கொள்ளும் போதுதான் அத்தகைய இனப்படுகொலை இனிமேலும் நிகழ முடியாதவாறு தமிழர்களைப் பாதுகாக்கும் ஒரு அனைத்துலக ஏற்பாட்டைக் குறித்து சிந்திக்கத் தேவையான ஒரு சட்டபூர்வ அடிததளம் போடப்படும் என்றும் வாதிடுகிறார்கள்.

எனவே, தமிழ் மக்களுக்குக் கிடைக்கக்கூடிய முழுமையான நீதி எனப்படுவது தமிழ் மக்களுக்கான உச்சபட்ச அதிகாரக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கத் தேவையான சர்வதேச அரசியல் சூழல்தான் என்று கூறுமிவர்கள், இதில் போர்க் குற்ற விசாரணை எனப்படுவது அந்த நீதியின் ஒரு பகுதி அல்லது தொடக்கம் மட்டுமே என்றும் சுட்டிக் காட்டுகிறார்கள். போர்க்குற்றவாளிகளைத் தண்டித்துவிட்டு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றைக் குறித்துச் சிந்திக்காது விடுவது என்பது முழுமையான நீதியாகாது என்பது இவர்களுடைய வாதம். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடும் ஏறக்குறைய இதையொத்ததாகவே காணப்படுகிறது.

இத்தகைய ஒரு பின்னணியில் ஏற்கனவே, தமிழ் நாடு சட்டசபையில் இலங்கைத்தீவில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்று கூறும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதையும் இவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். அதோடு அண்மையில் ஜேர்மனியில் கூடிய நிரந்தர மக்கள் தீர்ப்பாயமானது இலங்கைத்தீவில் இடம்பெற்றது இனப்படுகொலையே என்பதை ஏற்றுக் கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டுமிவர்கள், சம்பந்தப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சியானது அதைக் கூறத்தயங்குவது என்பது தமிழ் நாட்டிலும், தமிழ் டயஸ்பொறாவிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழ் லொபியை அர்த்தமிழக்கச் செய்துவிடும் என்றும் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

ஆனால், வடமாகாண சபையின் முதலமைச்சர் கூறுகிறார் இனப்படுகொலை என்ற வார்த்தையைப் பயன்படுத்;துவதில் சட்டச் சிக்கல்கள் உண்டு என்;று. அதோடு, இங்கு இடம்பெற்றது இனப்படுகொலை தான் என்பது நிரூபிக்கப்பட வேண்டும் என்றும். இதைத் தவிர மேற்படி தீர்மானமானது வாக்களித்த மக்களின் உணர்வுகளையே பிரதிபலிப்பதாகவும் அவர் மேலும் கூறியிருக்கிறார்.

இங்கே ஒரு விசயத்தைச் சுட்க்காட்டவேண்டும். இனப்படுகொலை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில் சட்டச் சிக்கல்கள் உண்டு என்று கூறப்படுவது ஒரு விதத்தில் சட்ட நோக்குநிலை தான்.

கூட்டமைப்பின் உயர் மட்டத்திலிருப்பவர்கள் மூவரும் சட்ட ஒழுக்கத்துக்குரியவர்கள். எனவே, விவகாரங்களை அவர்கள் சட்டக் கண்கொண்டு பார்ப்பது இயல்பானதே. ஆனால், இப்பிராந்தியத்தி;ல் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக உலகில் உள்ள எல்லாச் சக்திமிக்க நாடுகளாலும் வேட்டையாடப்பட்ட ஒரு மக்களின் அரசியலை தனிய ஒரு சட்டப் பிரச்சினையாக மட்டும் சுருக்கிவிட முடியாது. அதைத் தனிய சட்டக் கண்டுகொண்டு மட்டும் பார்க்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டும் சில விமர்சகர்கள் அது அதை விடப் பரந்தகன்ற தளத்தில் சட்ட ஒழுக்கமும் உட்பட பல்வேறு அறிவியல் ஒழுக்கங்களினதும், ஒருங்கிசைந்த கூட்டு ஒழுக்கத்துக்கூடாகவே நோக்கப்படவும், கையாளப்படவும் வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். அதாவது இது ஒரு சட்டப்பிரச்சினை அல்ல அதைவிட ஆழமான பொருளில் இது ஒரு அரசியல் பிரச்சினைதான்.

ஆனால், இதை ஒரு சட்டப் பிரச்சினையாகப் பார்ப்பதோ அல்லது வியாக்கியாணம் செய்வதோ முதலமைச்சரின் தனிப்பட்ட ஒரு கருத்தாக மட்டும் தோன்றவில்லை. பதிலாக இது கட்சி உயர்மட்டத்தின் கொள்கைத் தீர்மானமாகவே தோன்றுகிறது. சில மாதங்களிற்கு முன்பு வவுனியாவில் இடம்பெற்ற கூட்டமைப்பின் பொதுக் குழுக் கூட்டத்தில் சுமந்திரனும் இதே தொனிப்பட உரையாற்றியிருந்ததை இங்கு நினைவு கூரவேண்டும்.

இந்த அடிப்படையிற்தான் இது கூட்டமைப்பின் கொள்கைத் தீர்மானம் என்று கருத வேண்டியிருக்கிறது. இதில் மட்டுமல்ல, இது போன்ற பல விவகாரங்களிலும் அண்மை மாதங்களில் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டைத் துலக்கமாக வெளிக்காட்டி வருகிறது. இது குறிப்பிடத்தக்க ஒரு மாற்றம். மாகாண சபைத் தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றிக்குப் பின்னிருந்து கூட்டமைப்பின் உயர் மட்டத்தினர் தமது கொள்கை முடிவுகளை வெளிப்படையாகவும் திட்டவட்டமாகவும் முன்வைத்து வருகிறார்கள். மாகாண சபைத் தேர்தலுக்கு முன்பு வரை அவர்கள் மத்தியில் காணப்பட்ட ஒரு வித தயக்கம் இப்பொழுது இல்லை. நாட்டுக்குள்ளும், நாட்டுக்கு வெளியிலும் அவர்கள் தமது கொள்கை முடிவுகளை தயக்கமின்றி முன்வைத்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டு, மாகாண சபைத் தேர்தலிற்குப் பின், டயஸ்பொறாவில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய சுமந்திரன், ''நான் சொல்பவற்றிற்கு நீங்கள் கைதட்ட மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்' என்ற தொனிப்படக் கூறிவிட்டு தனது நிலைபபாட்டை தெளிவாக முன்வைத்திருக்கிறார். அங்கு கூடியிருந்தவர்கள் அவருக்குப் பதிலடியாக அவர் அவ்வாறு கூறியதும் பலத்த கரகோஷத்தை எழுப்பியிருக்கிறார்கள். டயஸ்பொறாவில் நிகழ்ந்த இது போன்ற வேறு சந்திப்புகளின் போதும் சுமந்திரன் தனது நிலைப்பாட்டைத் தயக்கமின்றி கறாராக வெளிப்படுத்தியிருக்கிறார்.

அண்மையில், இந்து பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் சம்பந்தனும் அவ்விதமாகவே பதில் கூறியிருக்கிறார். அதாவது, தமிழ் நாட்டிலும் டயஸ்பொறாவிலும் உள்ள தமிழ்த் தேசிய சக்திகளின் கைதட்டல்களுக்காக உரையாற்றவும் செயற்படவும் வேண்டிய தேவை தமக்குக் கிடையாது என்று கூட்டமைப்பின் உயர்பீடம் உறுதியாக நம்பத்தொடங்கிவிட்டது. இதன் தொடர்ச்சியே வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் ஆகும்.

வடமாகாண சபையில் கிடைத்த மகத்தான மக்கள ஆணையே அவர்களுக்கு இப்படியொரு துணிச்சல் வரக்காரணம் என்று எடுத்துக்கொள்ளலாமா? அல்லது அவர்களை விமர்சிப்பவர்கள் கூறுவதுபோல இது வெளியிலிருக்கும் எஜமானர்களின் நிகழ்ச்சி நிரலை கூட்டமைப்பு கீழ்ப்படிவோடு பின்பற்றுகிறது என்று எடுத்துக்கொள்ளலாமா?

எதுவாயினும், கூட்டமைப்பின் உயர்பீடம் மாகாண சபைத் தேர்தல் முடிவுகளிற்கு பின் ஒப்பீட்டளவில் வெளிப்படையாகவும், தயக்கமின்றியும் தனது நிகழ்ச்சி நிரலை முன்வைக்கத் தொடங்கியிருக்கிறது. இது அக்கட்சி மீது முன்பு முன்வைக்கப்பட்ட வெளிப்படைத் தன்மையற்ற காய் நகர்த்தல்கள் என்ற ஒரு குற்றச்சாட்டுக்குரிய ஒரு பதிலாக அமைகிறது.

அவர்கள் இப்பொழுது முன்வைக்கும் நிகழ்ச்சி நிரலின்படி வடக்கு-கிழக்கு இணைந்த ஒரு சமஷ்டிக் கட்டமைப்பே அவர்களுடைய இறுதி இலக்கு என்று தெரிகிறது. சரி அதை எப்படி அடைவது? அதற்கான வழிவரைபடம் எது?

கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலான அவர்களுடைய செயற்பாடுகளைத் தொகுத்துப் பார்த்தால் பின்வரும் முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. அதாவது, அவர்கள் தமது இறுதி இலக்கை நோக்கி அரசாங்கத்தை முறிக்காமல் வளைக்க முயற்சிக்கிறார்கள் என்பதே அது.

வடமாகாண சபை நிறைவேற்றிய மேற்படி தீர்மானமும் அத்தகைய முறிக்காமல் வளைக்குமொரு பொறிமுறையின் அடிப்படையிலானதுதான். அது மட்டுமல்ல, போர்க் குற்றம் தொடர்பான அனைத்துலக விசாரணையைக் கோரும் மற்றொரு தீர்மானத்தையும் இந்த விளக்கத்தின் வெளிச்சத்தில் வைத்தே பார்க்க வேணடியிருக்கிறது. அதாவது கூட்டமைப்பின் மாகாண சபைத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டிருப்பதுபோல போரில் ஈடுபட்ட இரு தரப்பினரதும் குற்றச்செயல்களையே அத்தீர்மானம் கருதுவதாக அதை வியாக்கியாணம் செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

இது ஏறக்குறைய ஜெனிவாப் பொறிமுறைக்குக் கிட்ட வருகிறது. ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்தை வழிக்குக் கொண்டுவரும் பொருட்டு மேற்கு நாடுகளும், இந்தியாவும் கைக்கொண்டுவரும் ஒரு பொறிமுறையே இது. அதாவது, கூட்டமைப்பானது மேற்கு நாடுகள் மற்றும் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலையே பெருமளவுக்குப் பிரதிபலிக்க முற்படுகிறது என்று பொருள். நிச்சயமாக தமிழ் நாட்டிலும், தமிழ் டயஸ்பொறாவிலும் உள்ள தீவிர நிலைப்பாட்டாளர்களின் நிகழ்ச்சி நிரலையல்ல.

இவ்விதம் அரசாங்கத்தை முறிக்காமல் வளைப்பதன் மூலம் கூட்டமைப்பானது தனது இறுதி இலக்கான சமஷ்டியைப் பெற முடியுமா?

நிச்சயமாக இல்லை என்பதே இலங்கைத்தீவின் குரூரமான இன யதார்த்தமாகும். வெற்றிவாதத்திற்குத் தலைமை தாங்கும் ஒரு அரசாங்கமானது அதன் இயல்பில் ஒரு எல்லைக்குமப்பால் வளையாது. ஏனெனில், வெற்றிவாதம் உள்நாட்டில் கட்டியெழுப்பி வைத்திருக்கும் வீரப்படிமங்கள் நாட்டுக்கு வெளியிலும் அதை ஒரு கட்டத்துக்கும் மேல் வளையவிடாது. எனவே, இந்த அரசாங்கம் ஒரு கட்டம் வரைதான் வளையும். அதற்குமப்பால் முறியக்கூடும். அது அப்படி முறிக்கக்கூடாது என்பதே மேற்கு நாடுகளினுடையதும், இந்தியாவினுடையதும் முன்னெச்சரிக்கை மிக்க கவலையாகும். அப்படி முறியுமிடத்து இப்பொழுது அழகிய இச்சிறுதீவில் சீனாவுக்கும், இந்திய மற்றும் மேற்கு நாடுகளின் கூட்டுக்குமிடையில் நிகழ்ந்து வரும் மறைமுக மோதலானது வெளிப்படையான ஒரு மோதலாக மாறக்கூடும். அதை இயன்றவுக்குத் தவிர்ப்பதற்காகவே முறிக்காமல் வளைக்கும் ஒரு பொறிமுறை கைக்கொள்ளப்பட்டு வருகிறது.

படிப்படியாகச் சோதனைக்குள்ளாகி வந்து இவ்அணுகுமுறையானது இந்த ஆண்டில் ஏறக்குறைய இறுகி நிற்கிறது. இந்த இறுக்கத்தை நீக்குவதென்றால் இலங்கை அரசாங்கத்தின் மீது வலிக்கக்கூடிய அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும். ஆனால், அது அரசாங்கத்தை முறிக்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றே மேற்கு நாடுகள் சிந்தித்து வருகின்றன. இத்தகையதொரு பின்னணியில் அனைத்துலக அரங்கில் சக்திமிக்க நாடுகளால் முன்னெடுக்கப்பட்டு ஏறக்குறைய இறுகி நிற்குமொரு பொறிமுறையை உள்நாட்டில் பிரயோகிப்பதன் மூலம் கூட்டமைப்பு அதன் இறுதி இலக்கை அடைய முடியுமா? கூட்டமைப்பை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள், இது வீட்டுச் சின்னத்தின் கீழான மற்றொரு இணக்க அரசியலே என்று.

கூட்டமைப்பின் உயர் பீடத்திற்கு நெருக்கமானவர்கள் தரும் தகவலின்படி சம்பந்தர்-மகிந்த உடன்படிக்கை ஒன்றே சம்பந்தரின் மனதில் இருப்பதாகக் கூறப்படுகிறது. பண்டா-செல்வா உடன்படிக்கை, ரஜீவ் - ஜே.ஆர். உடன்படிக்கை போல ஒரு உடன்படிக்கை. ஆனால், அரசாங்கமோ தெரிவுக் குழுவுக்கு சம்பந்தரைக் கொண்டு வருவதில்தான் குறியாயிருக்கிறது. பதின் மூன்றாவது திருத்தத்தைத் தாண்டிச் செல்வதற்கு வெற்றிவாதம் இடங்கொடுக்காது. அதிலும் குறிப்பாக, பதின் மூன்றாவது திருத்தத்தை அவர்கள் முடிந்தளவுக்குக் கோறையாக்கவே முயற்சிப்பார்கள். சமஷ்டி அல்லது மகிந்த-சம்பந்தன் உடன்படிக்கை போன்ற வார்த்தைகளுக்கெல்லாம் வெற்றி வாதத்தின் அரசியல் அகராதியில் இடம் கிடையாது.

எனவே, அரசாங்கத்தை முறிக்காமல் வளைக்கலாம் என்பது ஒரு அனைத்துலகக் கனவு. சம்பந்தர் - மகிந்த உடன்படிக்கை எனப்படுவது ஒரு உள்நாட்டுக் கனவு.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/102529/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.