Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாவகச்சேரியில் ஜனாதிபதி ஆணைக்குழு முன் காணாமற்போனவர்களின் உறவுகள் அளித்த கண்ணீர் சாட்சியங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாவகச்சேரியில் ஜனாதிபதி ஆணைக்குழு முன் காணாமற்போனவர்களின் உறவுகள் அளித்த கண்ணீர் சாட்சியங்கள்! camera_icon.jpeg 

[sunday, 2014-02-16 08:09:38]
missing-witness-160214-150.jpg

அந்த நேரத்தில் நீங்களும் இங்கிருந்தால், காணாமற்போயிருந்திருப்பீர்கள் என்று, நேற்று சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் நடந்த காணாமற்போனவர்கள் தொடர்பாக கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த முதியவர் ஒருவர் விரக்தியுடன் தெரிவித்தார். இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமற்போன இரண்டு பிள்ளைகள் தொடர்பாக சாட்சியமளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் காணாமற்போனோர் தொடர்பில் சாட்சியமளிக்க வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் மனைவி தனது கணவரை, அல்லது தாய் தனது மகன்கள் தொடர்பாக அதிகமாக சாட்சியமளிக்க வந்திருந்தனர். அவர்கள் கண்ணீருடன் அளித்த சாட்சியங்களின் தொகுப்பு-

   கைது செய்ததை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் ஒப்புக்கொண்ட இராணுவம்

போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரிடம் தமது பிள்ளையை பிடித்துச் சென்றதாக ஒப்புக்கொண்ட இராணுவத்தினர் இன்னமும் அவரை விடுதலை செய்யவில்லை என்று மகேசன் அமுத கௌரி கூறினார்.

“கொக்குவில் பகுதியில் நாங்கள் வசித்த போது 2005-12-25ஆம் திகதி எமது மகன் மகேசன் அஜந்தன் (வயது22) அண்மையிலுள்ள கடைக்கு சென்ற போது காணால் போயிருந்தார். சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரிடமும் அந்தக் காலப்பகுதியில் கடமையில் இருந்த போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரிடம் இது தொடர்பில் முறையிட்டிருந்தோம். இராணுவத்தினரிடம் விசாரணை நடத்திய போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவினர் இராணுவத்தினர் அஜந்தனை தாமே பிடித்து வைத்திருப்பதை ஒப்புக் கொண்டிருப்பதாகவும் விரைவில் அவரை தாம் விடுதலை செய்யவுள்ளதாகவும் தமக்கு வாக்குறுதி அளித்ததாக கண்ணீர் மல்க தெரிவித்த அந்தத் தாய், இன்றுவரையில் தனது மகன் விடுதலை செய்யப்படவில்லை என்றும் அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் மன்றாட்டமாக கேட்டுக்கொண்டார். அதேவேளை கொக்குவில் பகுதியில் இராணுவத்தினர் தொடர்ந்தும் விடுத்துவந்த அச்சுறுத்தல் காரணமாகவே தாம் அங்கிருந்து வெளியேறி சாவகச்சேரியில் குடியேறியதாகவும் சாட்சியமளித்தார்.

காணாமற்போனவர் இராணுவ முகாமில் வேலை செய்ததை கண்டுள்ளனர்

காணாமல் போன நபர் ஒருவரை இராணுவத்தினர் இராணுவ முகாம்களின் வேலைகளுக்காக பயன்படுத்திவந்தமை தொடர்பிலான சாட்சியம் ஒன்று இன்று சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் அளிக்கப்பட்டுள்ளது.வாகனச் சாரதியாகச் செயற்பட்ட சாவக்சேரி மட்டுவில் பகுதியைச் சேர்ந்த தம்பையா தர்மராஜன் என்பவர் கடந்த 2006-08-08 அன்று சிற்றூர்தி ஒன்றில் பருத்தித்துறை கனகம்புளியடிப் பகுதிக்கு சென்றிருக்கின்றார். இந்நிலையில் அவர் காணாமல் போயுள்ளதாக அவருடைய மனைவி தெரிவித்துள்ளார்.

அவர் தனது சாட்சியத்தில்,“2006-08-08 அன்று பருத்தித்துறை கனகம்புளியடிக்குச் சென்ற கணவரை மணற்காடு இராணுவ முகாமுக்கு முன்பாக பிற்பகல் 3மணி முதல் மாலை 6 மணிவரையில் தமக்குத் தெரிந்தவர்கள் கண்ணுற்றிருந்ததாக தெரிவித்திருக்கின்றார். அதன் பின்னர் மூன்று மாதம் கழித்து தன்னுடைய உறவினர் ஒருவர் காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கொழும்பு செல்ல முற்பட்ட வேளை தன்னுடைய கணவனான தர்மராஜன் பலாலி இராணுவ முகாமில் வேலை செய்து கொண்டிருப்பதை அவதானித்து தனக்கு தகவல் வழங்கியதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

அதேவேளை அரியாலை இராணுவமுகாமிலும் தன்னுடைய கணவர் வேலை செய்து கொண்டிருப்பதை தமக்குத் தெரிந்தவர்கள் கண்டதாகவும் தன்னுடைய கணவனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழுவினரிடம் குறித்த பெண் மன்றாட்டமாக கேட்டிருக்கின்றார்.

பாதுகாப்பு வலயத்தின் மீது ஷெல் தாக்குதல்

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்பு வலயம் என்று இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்ட பகுதிக்குள்ளும் ஷெல் தாக்குதல் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது. இதில் சாப்பாடு எடுக்கச் சென்ற எனது மகளை காணவில்லை என்று தாய் ஒருவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார்.அவர் மேலும் சாட்சியம் அளிக்கையில், இறுதிக்கட்ட யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவத்தினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலையத்துக்குள் நாங்கள் சென்று இராணுவத்தினரிடம் சரணடைந்தோம். அங்கே சாப்பிட கஞ்சி கொடுக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.

அதனை வாங்குவதற்கு எனது 20 வயதுடைய மகள் போய்விட்டார். சிறிது நேரத்தின் பின்னர் பாதுகாப்பு வலயம் என்று இராணுவத்தினரால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிக்குள்ளும் தொடர்ச்சியாக இராணுவத்தினர் ஷெல் தாக்குதலை நடாத்தினர். அதில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். அதன் போது எனக்கும் காயம் ஏற்பட்டுவிட்டது. அதன் பின்னர் எனது மகளைக் காணவில்லை.எனினும் காயத்துடன் எனது மகளை இராணுவம் வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக பார்த்தவர்கள் தெரிவித்தனர். பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை.நான் எல்லா இடமும் தேடிக் களைத்துப் போய் விட்டேன் என் மகள் குறித்து இன்றுவரை எதுவும் தெரியவில்லை என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

18 வருடங்களாக கணவனைத் தேடும் பெண் இரகசிய சாட்சியம்

1996 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட எனது கணவனைத் தேடி 18 வருடங்களாகத் அலைந்து திரியும் நான் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யவுள்ளேன். ஆகையால் இந்த ஆணைக்குழு முன் சகல விடயங்களையும் தெரிவிக்கமாட்டேன். இதனால் என்னால் சட்ட ரீதியாகச் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகிவிடும்' என சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் சாட்சியமளித்த காணாமற்போன ஒருவரின் மனைவியான பத்மினி ஸ்ரீஸ்கரன் தெரிவித்தார்.இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

'1996 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி எங்கள் வீட்டில் வைத்து எனது கணவரைக் கடத்திச் சென்றனர். எனது கணவன் கடத்திச் செல்லப்பட்டு 18 வருடங்கள் கடந்துள்ளன. எனது கணவன் எங்கிருக்கின்றார் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் இங்கு அதனைக் கூறமாட்டேன். அது பின் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யும்போது எனக்குச் சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன. நான் இது வரையிலும் பல விசாரணைகளுக்குச் சென்று வந்துவிட்டேன். என் கணவன் இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. இங்கு சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் வந்திருக்கின்றார்கள். அவர்கள் இருக்கும் போது என்னால் சாட்சியமளிக்க முடியாது' எனத் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த விசாரணைக்குழு ' நீங்கள் விரும்பினால் கொழும்பு வந்து நேரடியாக விசாரணைக்குழு முன்னிலையில் கணவர் தொடர்பான விபரங்களைக்கூற முடியும்' எனத் தெரிவித்தது. அதற்கு பத்மினி கூறுiகையில் 'இது தொடர்பாக நான் எனது சட்டத்தரணியுடன் கலந்தாலோசித்து விட்டே சொல்லவேண்டும். அத்துடன் இதனைத்தவிர வேறுவிடயங்களை நான் இங்குகூற விரும்பவில்லை நான் செல்கின்றேன். என்று சென்று விட்டார்.

இராணுவ அதிகாரி துமிந்தவே கணவரைப் பிடித்துச் சென்றார்

1996 ஆம் இடம்பெற்ற இராணுவச் சுற்றிவளைப்பின் போதே எனது கணவர் மறவன்புலம் பகுதியிலுள்ள எங்கள் வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டு காணாமற்போனார். அவருடன் 56 பேர் அன்றைய தினம் பிடித்துச் செல்லப்பட்டனர்'என்று காணாமற்போன இராமநாதன் அன்னலிங்கம் என்பவரின் மனைவி அன்னலிங்கம் ஜெயகலா தெரிவித்தார்.இவர் தொடர்ந்தும் சாட்சியமளிக்கையில்-

'1996 யூலை மாதம் 19 ஆம் திகதி நாவற்குழு தொடக்கம் தனங்கிளப்பு வரையிலும் இடம்பெற்ற இராணுவச் சுற்றி வளைப்பில் 175 பேர் இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டனர். இந்தச் சுற்றி வளைப்பிற்கு துமிந்த என்ற இராணுவ அதிகாரி தலைமை வகித்திருந்தார். என் கணவர் பிடிக்கப்பட்டு 3 தினங்களில் பின்னர் மறவன்புலம் பகுதியில் அமைந்துள்ள அரிசி ஆலையொன்றில் எனது கணவர் கறுப்புத் துணியினால் கட்டப்பட்டும், அவரது சேட்டினால் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் அவரைக் கண்டேன். தொடர்ந்து பிடிக்கப்பட்ட, 175 பேரில் 56 பேர் காங்கேசன்துறைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் அவர்களின் நிலைமை இன்று வரை தெரியாது என்றார். அதில் என் கணவரும் அடங்குவார்.கடற்றொழில் மற்றும் சீவல் தொழில் ஈடுபட்டு வந்த எனது கணவன் கைது செய்து கொண்டு செல்லப்படும் போது 26 வயது என்றும் தெரிவித்தார்.

அப்போது ஆணைக்குழு அதிகாரிகள் அப்பெண்ணிடம் 'உங்கள் கணவன் விடுதலைப் புலிகளுக்கு மீன்கள் அல்லது 'கள்' கொடுத்தாரா' என்று கேட்டனர். அதற்குப் பதிலளித்த ஜெயகலா 'என் கணவன் அவ்வாறு செய்யவில்லை. பிடிக்கப்பட்டவர்களில் 17 வயது சிறுவன் ஒருவனும் இருக்கின்றான். அவனும் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தவன் என்று கூறுகின்றீர்களா?' என அப் பெண் ஆணைகுழு அதிகாரிகளிடம் அவர் கேள்வியெழுப்பினார்.

நீங்களும் இங்கிருந்தால் காணாமற்போயிருந்திருப்பீர்கள்- மனம்நொந்த வயோதிபர்

எனது இரண்டு மகன்களும் காணாமற்போன நேரம் நீங்களும் (விசாரணைக்குழுவினர்) இங்கு இருந்திருந்தால் இந்நேரம் காணாமற்போய் காணாமற்போனோர் பட்டியலில் இணைந்திருப்பீர்கள் என்று' தனது இரண்டு பிள்ளைகள் காணாமற்போனமை தொடர்பில் சாட்சியமளித்த சாவகச்சேரியைச் சேர்ந்த முருகன் தெரிவித்தார். அவர் சாட்சியமளிக்கையில்,

'எனக்கு 5 பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்களில் இரண்டு ஆண்பிள்ளைகள் அவர்கள் இருவரும் வயலில் அவர்கள் வேலை செய்து கொண்டிருந்த 1996 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை மீட்க நான் தேடாத இடங்கள் இல்லை. இருந்தும் எனக்கு என் மகன்கள் கிடைக்கவில்லை. நானும் ஒரு கூலி வேலை செய்து பிழைப்பவன் பிழைப்பினைப் பார்ப்பதா? எனது ஏனைய மூன்று பிள்ளைகளையும் பார்ப்பதா அல்லது எனது காணாமற்போன 2 மகன்களைத் தேடுவதா என வினவினார்.

இதன்போது குறுக்கிட்ட ஆணைக்குழுவினர் ' உங்கள் மகன்களை பிடித்துச் சென்ற இராணுவத்தினரை அடையாளங்காட்ட முடியுமா எனக்கேட்டனர். அதற்குப் பதிலளித்த முதியவர் ' போங்கய்யா, என்ர பிள்ளைகள் பிடிக்கப்பட்டு எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன. இன்று வரை என்னால் எவ்வாறு அந்த இராணுவத்திரை ஞாபகம் வைத்திருக்க முடியும். எனக்கும் வயதாகிவிட்டது. இதேமாதிரியாக பல தடவைகள் பல இடங்களில் கேட்டுவிட்டார்கள். நீங்களும் இதேதான் கேட்கின்றீர்கள் இருந்தும் என் பிள்ளைகள் மட்டும் எனக்குக் கிடைக்கவில்லை. ஒன்று மட்டும் சொல்கின்றேன். நீங்கள் மட்டும் அந்த நேரம் இங்கு இருந்திருந்தால் அன்றைக்கு நீங்களும் காணாமற்போயிருப்பீர்கள்' என்றுகூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.

தேவாலயத்தில் அண்ணாவுடன் பிடிக்கப்பட்ட 23 பேரும் எங்கே?

நாவாற்குழியில் 1996 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் 19 ஆம் திகதி துமிந்த என்கிற இராணுவ அதிகாரியின் தலைமையில் நடைபெற்ற சுற்றிவளைப்பின் போது, தேவாலயத்திலிருந்த எனது அண்ணன் மற்றும் மேலும் 23 பேரை இராணுவத்தினர் கொண்டு சென்றனர். ஆதற்கு பின்னர் அவர்கள் தொடர்பில் எந்த தகவல்களும் இல்லை என காணாமற்போன பிரேமதாஸ் ஸ்ராலின் ஜீவாவின் தங்கையான பிரேமதாஸ் ஜுவா சாட்சியமளித்தார்.எனது அண்ணாவை பிடித்துச் செல்லும் போது அவருக்கு 24 வயது. எனது அண்ணனும் தேவாலயத்தில் பிடிபட்ட மற்றவர்களுக்கும் விடுதலைப்புலிகளும் எவ்வித தொடர்பும் இல்லை. எல்லோரையும் நான் நன்கு அறிவேன். இது தொடர்பாக பல அமைப்புக்களிடம் சென்று இது வரையிலும் எனது அண்ணா எனக்கு கிடைக்கவில்லை என்று கண்ணீரினை முற்றுப்புள்ளி ஆக்கி முடித்தார்.

இருவர் இரகசிய சாட்சியம்.

சாவகச்சேரியில் இன்று நடைபெற்ற காணாமற்போனவர்கள் தொடர்பான சாட்சியப் பதிவுகளை வழங்க வந்தவர்களில் இருவர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் முன் இரகசிய சாட்சியம் அளித்தனர்.அதன்படி மேல்முறையீட்டு நீதிமன்றில் காணாமல் போனவர் தொடர்பில் ஆட்கொணர்வு முறைப்பாட்டினை பதிவு செய்யவுள்ள நிலையில் பகிரங்கமாக சாட்சியம் அளிப்பதற்கு குறித்த இருவரும் மறுப்புத் தெரிவித்தனர். அத்துடன் குறித்த முறைப்பாட்டில் எதிர்மனுதாரராக சட்டமா அதிபர் திணைக்களத்தை குறிப்பிட வேண்டியுள்ளமையினால், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகள் முன் சாட்சியங்களை வழங்குவதற்கு விருப்பம் தெரிவிக்காமையின் அடிப்படையில் குறித்த பதிவேட்டு அறையில் இருந்து சட்டத்தரணிகள் வெளியேற்றப்பட்டு ஒலி வாங்கிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு ஆணைக்குழுவின் தலைவர் முன்னிலையில் சாட்சியப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

missing-witness1-160214-600.jpg

 

 

missing-witness2-160214-600.jpg

 

 

missing-witness3-160214-600.jpg

 

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=103742&category=TamilNews&language=tamil

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதனோடு இணைந்த ஏனைய செய்திகளையும் ஒன்றாக இணைத்த்தால் ஒரே பார்வையில் பார்க்க கருத்துககள் பதிய வசதியாக இருக்கும் .

 

இந்த இடத்த்தில் எனக்கு தோன்றிய கருத்த்து :
இந்த தனிப்பட்ட உறவுகளை கொண்ட ஒரு செய்தியை BBC தமிழ் சேவை செய்யாதது வருத்தமே . BBC ஆங்கில செய்தியாளர் நிகழ்வு நடத்த இடத்தில் இருந்து ஒரு விவரணம் செய்து அனுப்பி இருந்தார் ஆனால் தமிழ் சேவையில் அப்படியான செய்திகள் இல்லை - முதல் நாள் நிகழ்வை பதிந்து இருந்தார்கள் , இன்றைக்கு ஒலுவில் துறைமுகம் காரள் பிடித்து போகிறது என்று மிக முக்கியமானா சேதியை பதிந்து இருந்றார்கள் .

சனல் 4 செய்ததின் ஒரு 10% த்தை தன்னும் BBC தமிழ் சேவை செய்யவில்லை . அப்படி செய்திருந்தால்- அவர்கள் தமிழர்களுக்காக / எங்களுக்கு சார்பாக  எதுவும் செய்ய வேண்டாம் ,ஆனால்  முக்கியமான நிகழ்வுகள் நிகழும் போது போதிய முன்னுரிமை கொடுத்த்தால் உலக தமிழர்கள் அதற்க்கு என்றும் நன்றியாக இருப்பார்கள்

துரதிஷ்ட வசமாக இன்று BBC தமிழ் சேவை தமிழ்-முஸ்லீம் பிரச்சனைகளை ஊதி பெருக்குவது , யாழ்பாணம் கிளிநொச்சி என்று பிரச்சனைகளை வளர்ப்பது , ராஜீவ் கொலை செய்தி போடுவது ...இலங்கை அரசாங்கத்தின் அறிக்கைகளை பரப்புவது , 4 பேர் (தமிழ்) ஒன்று கூடி ஏதாவது செய்தால் "இதைவிட வன்னியில் உதவி செய்யலாமே" என்று விதண்டாவாதம் கதைப்பது ..., யாராவது காங்கிரஸ் காரர் UK வந்தால் இந்திய -இலங்கை ஒப்பந்தை பற்றி பேசுவது , 13ம் திருந்தம் ..............

 

ஈழத் தமிழர்கள் BBC தமிழ் சேவையிடம் நிறையவே எதிர்பார்க்கிறோம் , அவர்கள் தங்களது காங்கிரஸ் /இந்திய மைய வாதத்த்தை விட்டூ எப்போது வருவார்களோ தெரியவில்லை ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.