Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கெளரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கெளரி

-இளங்கோ

'ஒரு துரோகிக்கு பாடங் கற்பிக்கும்போது நாங்கள் ஓராயிரம் துரோகிகள் வளர்வதைத் தடுக்கின்றோம்' என்ற குரல் எல்லாவற்றையும் கலைத்துப் போனது.

அதுவரை, சாணி மெழுகிய குசினிக்குள் அம்மா கம்பிக்குழாயால் அடுப்பை ஊதிக்கொண்டிருகக, இவன் கள்ளிச்செடிகளுக்குள் நுழைந்து கோழிகளைத் துரத்திக்கொண்டிருந்தான். அடர்த்தியாய் வளர்ந்திருந்த எக்ஸோராவில் சிறு குருவிகள் வந்து அமர்ந்திருக்க, முற்றத்து மல்லிகைப் பந்தலில் மல்லிகை வாசமும் வந்துகொண்டிருந்தது. திடீரென்று சிவப்பும் வெள்ளையுமான Half Saree அணிந்த பெண், 'ஒரு துரோகிக்கு பாடங்கற்பித்தல்....' என்கின்ற வாக்கியத்தை நடுக்கத்துடன் சொன்ன கணத்தில்தான் அதுவரை இவன் கண்டுகொண்டிருந்த அழகிய ஊர்க்கனவு சட்டென மறைந்து போனது.

அன்று பாடசாலை வலயமட்டத்தில் நடக்கும் தமிழ்த்தினப் போட்டிகள் இவனது பாடசாலையில் நிகழ்ந்து கொண்டிருந்தன. பல்வேறு பாடசாலையைச் சார்ந்தவர்கள் அங்கு வந்து குழுமியிருந்தார்கள். இது தாங்கள் படிக்கும் பாடசாலை என்ற இறுமாப்போடு, மற்றப் பாடசாலை மாணவிகளின் பின்னால், இவனும் இவனது நண்பர்களும் சுழற்றிக் கொண்டு திரிந்தார்கள். என்னதான் ஹீரோத்தனம் காட்டினாலும், நாளை இவர்கள் தங்களிடம் வந்துதானே சேரவேண்டும் என்கின்ற எகத்தாளப் பார்வையோடு இவனது பாடசாலை மாணவிகள் இவர்களின் அலட்டல்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

கெளரி நன்றாக நடனம் ஆடக்கூடியவள். கெளரிக்கு இவன் மீது ஈர்ப்பிருந்ததோ தெரியாது, ஆனால் இவனுக்குக் கெளரி மீது விருப்பிருந்தது. அன்று நடந்த நிகழ்வில் எல்லாப் பாடசாலைகளையும் விஞ்சி நடனத்தில் முதலாவதாய் வந்திருந்தாள். இவனது நண்பர்கள் இதற்கு ட்ரீட் தரச்சொல்லி நச்சரித்துக் கொண்டிருந்தார்கள். இது போதாதென்று இன்னும் கொஞ்சப் பொம்பிளைப் பிள்ளைகள், 'என்ன உம்மடை ஆள் வென்றிருக்கு, எங்களுக்கு ஒன்றுமே இல்லையா?' என்று கேட்டும் உசுப்பினார்கள். தன் காதலை இவ்வுலகிற்கு தெரிவிக்க இதைவிட அரிய தருணம் வராது என்று அறிந்திருந்தாலும், இவனின் கையில் இருந்த காசு நான்கைந்து பேருக்கே கன்ரீனில் தேநீரும் வடையும் வாங்கிக்கொடுக்கத்தான் போதுமாயிருந்தது. ஆகக்குறைந்தது இருபது பேருக்கு வாங்கிக் கொடுத்தால்தான் ஒரு காதல் மகத்தான் காதலாக மாறும். அப்போதுதான் இவனோடு படிக்கும் நண்பனொருவன் நினைவுக்கு வந்தான். அவனது தாயும் தகப்பனும் ஆசிரியர்கள். தகப்பன் இவர்கள் படித்துக்கொண்டிருந்த பாடசாலையிலேயே கணிதம் படிப்பித்துக்கொண்டிருந்தார்.

அவனிடம் போய், 'நாளைக்கு என்னுடையதும் கெளரியினதும் காதல் வெற்றிபெற்று எங்களுக்கு ஆண்குழந்தை பிறந்தால் உன்னுடைய பெயரையே வைக்கின்றேன். ஆனால் நீ இப்ப நான் ட்ரீட் கொடுக்க கொஞ்சக் காசை உன் அப்பாவிடம் வாங்கித்தா' எனக் கெஞ்சினான். 'ஏற்கனவே உன்னோடு திரிந்தே என் பெயர் நாறடிச்சுப் போச்சுது, இதற்குள் உன்ரை பிள்ளைக்கும் என் பெயரை வைச்சு ஏன்டா என்னை சித்திரவதை செய்யப்போகிறாய். நான் காசு அப்பரிட்டை வாங்கித் தாறன், ஆனால் உந்த பெயர் வைக்கின்ற விசர் வேலையை மட்டும் செய்திடாதே' என அவன் எச்சரித்தான்.

எல்லா நண்பர்களையும் கன்ரீனுக்கு அழைத்துச் சென்று கெளரியின் பெயரால் ஒரு விருந்து வைத்தான். கெளரியும் வந்திருந்தாள். ஆனால் அவள் முகத்தை நேருக்கு நேர் சந்திக்கும் தைரியம் இவனுக்கு வரவில்லை. இப்படி இவன் செய்து கொண்டிருப்பது அவளுக்குப் பிடிக்காவிட்டால் பிறகு தாங்கிக்கொள்ளவே முடியாது என்பதால் அவளை ஏறெடுத்துப் பார்ப்பதைத் தவிர்த்துக்கொண்டான். அந்த நேரத்தில் அங்கே வந்த உயர்தரம் படிப்பவர்கள், எதற்கு இந்த ஆர்ப்பாட்டம் என்று கேட்க, 'யாரால், யாருக்கு, எந்தச் சந்தர்ப்பத்தில்...' என தமிழ் இலக்கிய வகுப்பில் கேட்கப்படும் கேள்விக்குப் பதில் சொல்வதுமாதிரி யாரோ காரணத்தைச் சொல்லியிருக்கின்றார்கள். 'பாரடா நாங்கள் இந்த வயதில் கூட ஒரு பெட்டையைப் பிடிக்க முடியவில்லை. இவங்களுக்கு பதினாறு வயதிலே காதல் வேண்டிக் கிடக்கிறது' எனச் சலித்துக்கொண்டு அவர்கள் அவ்விடத்தை விட்டு நீங்கியிருந்தார்கள்.

விருந்து முடிந்து எல்லோரும் விடைபெற்ற போது 'உன்னோடு கொஞ்சம் கதைக்க வேணும், கொத்தனாவத்தைக் கிணற்றடி ஒழுங்கையில் வந்து சந்தி' எனக் கெளரி யாருக்கும் தெரியாமல் சொல்லிவிட்டு நகர்ந்தாள். எத்தனையோ இடங்களிருக்க இவளேன் ஒரு கிணற்றடியில் வந்து தன்னைச் சந்திக்கச் சொல்கிறாள என இவனுக்குக் கொஞ்சம் பதற்றம் வரத் தொடங்கியது. கிணற்றடியில் வைத்து எல்லாவற்றுக்கும் சமாதி கட்டப்போகிறாளாக்குமென நினைத்தபடி 'ஹீரோ' சைக்கிளை உழக்கத் தொடங்கினான்

கெளரி தன் லுமாலா லேடீஸ் சைக்கிளை ஸ்ராண்ட் போட்டு நிறுத்திவிட்டு, அருகிலிருந்த் பலாமரத்தின் இலைகள் காற்றில் அசைந்து அசைந்து கிணற்றுக்குள் விழுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நடனம் ஆடியதாலோ அல்லது சைக்கிள் உழக்கியதாலோ தெரியவில்லை, அவளது underskirt ஐ மீறி முதுகு வேர்த்திருப்பது நன்கு தெரிந்தது. விரல்களில் பூசியிருந்த வர்ணப்பூச்சும், கால்களில் நடனத்திற்காய் அணிந்திருந்த கொலுசும், இன்னமும் முழுமையாய் அகற்றப்படாத முகத்து ஒப்பனையும் இவன் இதுவரை பார்த்திராத புதிய கெளரியைக் காட்டிக்கொண்டிருந்தது.

இவன் வந்ததைக் கண்டதுமே 'நீ இப்படியெல்லாம் செய்வது சரியா?' எனக் கேட்டாள்.

சைக்கிளில் இருந்தபடி நிலத்தில் ஊன்றிய தன் காலைப் பார்ப்பதுபோல இவன் தலையைக் குனிந்தான்.

'எல்லோருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டினால் காதல் வந்துவிடும் என்று நினைக்கிறியா?' மேலும் அவள் தொடர்ந்தாள்

இந்த ஒழுங்கைக்குள் இவள் வரச்சொன்னது தன்னை உருட்டிப் பிரட்டி எடுப்பதற்குத்தான் என்று இப்போது இவனுக்கு நன்கு விளங்கியிருந்தது.

'எங்கள் அப்பாவிற்குத் தெரிந்தால் என்ன செய்வார் என்று தெரியுமா?'

நாசமாய்ப் போச்சு, இவளென்னை உண்மையாகவே இரண்டு தட்டுத்தட்டாமல் விடமாட்டாள் போலிருக்கிறது என கொஞ்சம் கலக்கம் இவனுக்குள் எட்டிப் பார்த்தது. யாராவது வாத்திமார் வந்தால் அவர்களுக்காய் சைக்கிளை விட்டு இறங்கி மரியாதை கொடுப்பதுபோல, இப்போது இவன் சைக்கிளை விட்டிறங்கி அடக்கமாய் நின்றான். வாத்திமார் ஏதாவது வெளியில் குழப்படி செய்தால் கூட, வகுப்பறைக்குள் நான்கு சுவருக்குள் வைத்து எவருக்குந் தெரியாமல்தான் இரண்டு சாத்து சாத்துவார்கள். இவள் கதைக்கும் தொனியைப் பார்த்தால் இனி வெளியில் கூட நிம்மதியாய்த் திரியமுடியாது போலிருக்கிறதே என்ற கலக்கந்தான் இவனுக்கு வந்தது.

இப்படிக் கேள்விகள் மேல் கேள்விகளைக் கேட்டுக்கொண்டு அருகில் வந்தவள், இவன் கரத்தைப் பற்றியபடி, 'எனக்கும் உன்னைப் பிடித்திருக்கிறதுதான், ஆனால் இப்படி எல்லோருக்கும் பறைசாற்றிக்கொண்டிருப்பதுதான் காதல் என்று நீ நினைத்துக்கொண்டிருந்தால் என்னிடம் வராதே' எனச் சொல்லிவிட்டு லுமாலாவை எடுத்து உழக்கத் தொடங்கினாள்

இவனுக்கு எதையுமே நம்பமுடியாதிருந்தது. கொஞ்சநேரத்துக்கு முதல் 'உதை கொடுக்காமல் விடமாட்டேன் என அதட்டிக்கொண்டிருந்தவள், இப்போது உன்னைப் பிடித்திருக்கிறது' எனச் சொல்கிறாளே எனப் பித்தம் தலைக்கேறியது. மகிழ்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவளின் சைக்கிள் தரித்து நின்ற இடத்தின் மண்ணை, பழுத்து விழுந்திருந்த பலாவிலையில் எடுத்துச் சுருட்டி காற்சட்டைப் பொக்கற்றுக்குள் கோயில் விபூதி போல பத்திரமாய் வைத்துக்கொண்டான். இந்த மண் எங்களின் சொந்த மண் என்றுதானே இயக்கம் எல்லாம் துவக்குத் தூக்கிப் போராடுகிறது. அதுபோலத்தான் 'இந்த மண் என் காதலி மிதித்த மண்' என நினைத்து சற்று சிலிர்த்தும் கொண்டான்.

கெளரியின் அப்பா ஊரில் மரக்காலையை வைத்திருந்து பலரை அவருக்குத் தெரிந்திருந்தாலும், பன்னாலை வீதிச் சரிவுகளும், பூத்தோட்டம் வெள்ளவாய்க்காலும், விராங்கொடை கல்லொழுங்கைகளும் இவர்களின் காதலை அரவணைத்துப் பாதுகாப்பளித்தது. ஒருநாள் பெருமாக்கடவைப் பிள்ளையார் கோயிலுக்குக் கூட்டிச்சென்று இவனுக்கும் தனக்கும் சேர்த்து கெளரி பூசை செய்வித்தாள். கோயிலின் முன்னே பரந்து விரிந்திருந்த வயல் மனோரதியமாய் இருந்ததென்றால் அவள் அணிந்திருந்த சிவப்பும் வெள்ளையுமான பாவாடையும் தாவணியும் வேறொரு கிறக்கத்தைத் தந்துகொண்டிருந்தது. அவ்வளவு சனமில்லாத மத்தியான வேளையில், கேணிப் படிக்கட்டில் அமர்ந்திருந்த கெளரி இவன் நெற்றியிலிருந்த திருநீற்றைத் திருத்துவதைப் போல தலையை விரல்களால் அளையத் தொடங்கினாள். இவனும் அவள் தாவணி காற்றில் பறக்காது தடுப்பதைப் போன்ற பாவனையில் அவள் இடுப்பை மெல்ல அணைத்தான். 'தீயெனினும் அது நீ தருவாயின் உண்ணத் தயார்' என்ற கிறக்க நிலையிலிருந்த அவள் இவன் தோள் மீது சாயத்தொடங்கினாள். இன்னோர் ஆன்மீகதரிசனததை இருவரும் மெல்ல மெல்லமாய்த் தரிசிக்கத் தொடங்கினர்.

இயக்கங்களின் தலைமறைவுச் செயற்பாட்டை, இவன் தன் காதல் பிடிபட்டுவிடக்கூடாதென்பதற்காய்ப் பரிட்சித்தும் பார்த்தான். இரகசியமாய் சந்திக்கும் இடங்களை அடிக்கடி சுழற்சிமுறையில் மாற்றிக்கொண்டிருந்தான். ஒரு சின்னத் தடயங்கூட ஒரு கெரில்லாப் போராளியைக் காட்டிக்கொடுத்து முழு இயக்கததையும் அழித்துவிடும் சாத்தியமிருப்பதைப் போல, தம் காதலின் தடயங்களை எவரும் கண்டுபிடிக்காதிருப்பதில் கவனமாயிருந்தான். ஒழுங்கைகளில் சந்தித்துக்கொண்டிருந்தாலும் அருகருகில் இவனும் கெளரியும் சைக்கிள்களை நிறுத்துவதில்லை. சந்திக்கும் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டபின், இவன் தன் சைக்கிளை எங்கோ தொலைவில் விட்டு விட்டு வருவதைப் பழக்கமாக்கிக் கொண்டிருந்தான்.

ஊடலில்லாது ஒரு காதல் எப்படி வளரும்? ஊடலின் முடிவில் என்னவோ இன்பங் கிடைக்குமென நீதி நூலில் படித்திருந்தாலும், சந்திப்பதே ஒரு கெரில்லாத்தாக்குதல் போலிருக்கும்போது அதெல்லாம் இப்போது சாத்தியமில்லை என இவன் தன்னைத் தேற்றிக்கொண்டான்.. அன்றொருநாள் ஏதோ ஊடல் வந்து அவளைத் தேற்றவேண்டியிருந்ததால் முதல்நாள் சந்தித்த இடத்திலேயே சந்திக்கவேண்டியதாயிற்று. முதல் நாள் இவர்கள் ஒழுங்கைக்குள் நின்றதை யாரோ றெக்கியெடுத்து கெளரியின் தகப்பனிற்குச் சொல்லியிருக்க வேண்டும். மோட்டார் சைக்கிள் ஒன்று ஒழுங்கைக்குள் இறங்கிற்று எனச் சுதாகரித்து, விலகி நடப்பதற்கு கெளரியின் கலங்கிய கண்கள் இடமளிக்கவில்லை. மோட்டார் சைக்கிளில் வந்தது, கெளரியின் தகப்பன்.. இறுகிய முகத்தோடு, ஆனால் இவர்களைப் பார்த்து எதுவும் சொல்லாது, சைக்கிளின் வேகத்தில் மோட்டார் சைக்கிளை மெதுவாக ஓட்டிக்கொண்டு போனார்.

அடுத்த நாள் பாடசாலைக்கு வந்த கெளரி இவனிடம், 'பின்னேரம் அப்பா உன்னை ஒருக்காய் மரக்காலைப்பக்கமாய் வரட்டாம்' என்றாள். இவனுக்கு ஏதோ பிணச்சாலைக்குப் போவது போன்று நடுக்கம் வந்தது. கெளரியின் தகப்பனைச் சந்திக்கமுன்னர், இவன் தன் நண்பனிடம், 'எனக்கு எதுவும் நடக்கலாம், எது நடந்தாலும் அதற்குப் பொறுப்பு கெளரியின் தகப்பன் தான் என்று இயக்கத்திடம் சொல்லி வை' என்றான். நண்பனோ, 'பதினெட்டு வயதாக முன்னர் என்ன இழவுக்கு உனக்குக் காதல் என்று இயக்கம் கேட்கும், அது பரவாயில்லையா' எனக் குதர்க்கமாய்க் கேட்டான். 'இந்த வயதிலேயே நான் காதலிக்கிறேன் என்று உங்களுக்கெல்லாம் எரிச்சலடா' என இவன் சலித்துக்கொண்டான்.

மரக்காலைக்கு இவன் போனபோது கெளரியின் தகப்பன் பெரிய அரம் வைத்து மரத்தை அரிந்துகொண்டிருந்தார். மரத்திற்குப் பதில் தன் தலை அரியப்படுவதாய் ஒருகணம் நினைத்துப் பார்க்க உடம்பு சில்லிட்டுத் திரும்பியது.

'தம்பி, இந்த வயதில் காதல்தான் முக்கியம் போல இருக்கும். அதிலில்லாது வாழ்வே இல்லாதது போலவும் தெரியும். இதே காதல் இருபத்தாறு வயதிலும் இருந்தால் திரும்பி வாரும். அப்போது யோசிக்கிறேன்' என்று கெளரியின் தகப்பன் உடனேயே விசயத்துக்கு வந்தார்.

இவன், தன்னைப் போலத்தான் கெளரியின் தகப்பனும் நிறையத் தமிழ்ப் படங்களைப் பார்ப்பார் போல என நினைத்துக்கொண்ட்டான். எனென்றால் இந்த டயலாக்கைத்தான் தமிழ்ப்படங்களில் வரும் கதாநாயகிகளின் தகப்பன்மார் சர்வ சாதாரணமாய்ப் பாவித்துக்கொண்டிருப்பார்கள். . வேண்டுமென்றால் ஒரு பாட்டுக்குத் தன்னையும் கெளரியையும் ஆடவிட்டால், தாங்கள் அடுத்த ஐந்து நிமிடத்திலேயே பத்து வருடங்களுக்கு வளர்ந்துவிட முடியுமே, பிறகு ஒரு பிரச்சினையில்லாது காதலுக்கு சுபம் போட்டுவிடலாமேயென நினைத்தான். அவருக்கு இவன் என்ன யோசிக்கிறான் எனபது விளங்கியதோ என்னவோ....

'இனி இந்த ஒழுங்கைகளுக்குள் ஒளிந்துகொண்டு சந்திக்கிற பழக்கத்தையெல்லாம் விட்டுவிடவேண்டும். சனம் இதையெல்லாம் பார்த்தால் சும்மா கண்டபடிக்கு கதைக்கும். அதெல்லாம் வேண்டாம். இன்னொன்று நாங்களும் நீங்களும் வேற வேற சாதியாக்கள். உங்கடையாக்கள் ஒருபோதும் இதற்குச் சம்மதிக்க மாட்டினம்' என்றொரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

'இயக்கம் இருக்கிறதுதானே. என்ன பிரச்சினை வந்தாலும் அது பார்த்துக்கொள்ளும்' என முதன்முதலாய் இவன் வாயைத் திறந்தான்.

'இயக்கம் இன்னும் பத்து வருசத்திற்கு இருக்கவேண்டுமே' என்றார் கெளரியின் தகப்பன் சற்றுக் கோபத்தோடு.

இயக்கம் பிறகும் இருந்தது. ஆனால் கெளரியின் தகப்பன்தான் உயிரோடு இருக்கவில்லை.

கெளரியின் தகப்பனிடம் அரிந்த மரங்களை ஏற்றியிறக்குவதற்கென ஒரு பெரிய வாகனம் சொந்தமாய் இருந்தது. இயக்கம் ஒருநாள் வாகனத்தைத் தங்கள் தேவைக்குப் பயன்படுத்துவதற்குத் தரச் சொல்லியிருக்கின்றார்கள். கெளரியின் தகப்பன் இயக்கம் அழித்த இன்னொரு இயக்கத்தின் ஆதரவாளராய் இருந்தபடியால் 'அப்பாவிச் சனங்களைச் சாக்கொல்லுறவங்களுக்கு எல்லாம் வாகனத்தைத் தரமுடியாது' என்று கோபத்தோடு திட்டி அனுப்பியிருக்கின்றார். மூன்று நாள் கழித்து விடிகாலையில் இயக்கம் வந்து கெளரியின் தகப்பனைப் பாயோடு சுருட்டியெடுத்துக்கொண்டு போனது. சண்டிலிப்பாயில் இயங்கிக்கொண்டிருந்த ஒரு முகாமிற்குள் வைத்து விசாரணை செய்து முடிவு தெரியவந்தபோது கெளரியின் தகப்பன் உயிரற்ற உடலமாய் திரும்பி கொண்டுவரப்பட்டிருந்தார். செத்தவீட்டிற்கும் சனம், இயக்கம் யார் யாரெல்லாம் வருகிறார்கள் என கண்காணிக்கும் என்ற பயத்தில் அவ்வளவாய் வரவில்லை. இவன் கெளரியிற்காய்ப் போனான், ஆனால் நிறைய நேரம் அங்கே நிற்காது மெதுவாய் நழுவிவந்திருந்தான்.

இனியும் இப்படி இயக்கம் இருக்கின்ற இடத்தில் வாழமுடியாது எனக் கெளரியின் குடும்பத்தினர் இந்தியாவிற்குப் படகில் போவதற்கு ஆயத்தங்களை இரகசியமாய்ச் செய்யத் தொடங்கினர். இதை கெளரி ஒருநாள் ஒழுங்கைக்குள் வைத்துச் சொன்னபோது, இவனால் இங்கே நீ என்னோடு இரு என்றும் சொல்லமுடியவில்லை, அங்கே போயாவது நிம்மதியாக வாழ் என்றும் கூறமுடியவில்லை. மெளனமாய் இருந்தான். காலம் தங்கள் இருவரின் காதலையும் உதறித்தள்ளிவிட்டு வேகவேகமாய் முன்னே சென்றுகொண்டிருப்பது மட்டும் தெரிந்தது.

காந்தனுக்கு பிறகு சில காதல்கள் தோன்றி மறைந்தன. ஆனால் அவை, கெளரியுடன் ஏற்பட்டதைப் போல எவ்வித ஆன்மீக தரிசனத்தையும் தரவில்லை. இலங்கையில் இனியும் இருக்கமுடியாது என வெளிநாட்டுக்கு வந்தபோது, கொஞ்சக்காலம் எவரும் துணைக்கில்லாதது கஷ்டமாய்த்தானிருந்தது. எல்லாம் போகப்போக பழகிவிடுவது போல, காலம் செல்லச் செல்ல இப்படியே எவரையும் திருமணஞ்செய்யாது தனியே இருக்கலாம் என முடிவெடுத்துக்கொண்டான்..

இலங்கையை விட்டு வந்த பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட தன் பாடசாலை நண்பர்கள் அனைவரினதும் தொடர்புகளை இழந்திருந்தான். இணையம் நண்பர்களை மீளப்பெற உதவும் என்று சிலர் கூறத்தான் முகநூல் கணக்கைத் தொடங்கி. ஒரு நண்பரைத் தேட, இன்னொரு நண்பர் மேலும் மேலுமென சிலந்திவலையைப் போல முகநூல் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என நிறையப் பேரை நண்பர்களாகச் சேர்க்கச் சொல்லி அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தது. இந்தப் பத்து வருடங்களில் நெருக்கமாய்ப் பழகிய நண்பர்கள் சிலரைத் தவிர பலரை மறந்தே விட்டிருந்தான். உலகின் எல்லாத் திசைகளிலும் பரந்திருந்த நண்பர்களைப் பார்க்க அதிசயமாயிருந்தது. ஒரு சிறு தீவுநாட்டில் பிறந்து அதிலும் ஒரு சிறு கிராமத்துப் பாடசாலையில் படித்த தாங்கள் ஒவ்வொருவரும் இப்படி சிதறி வாழ்ந்துகொண்டிருப்பதை நினைக்க, காலத்தைப் போல ஒரு சிறப்பான ஆசிரியர் உலகில் இல்லை போலத்தோன்றியது. இன்னுஞ் சிலர் இவன் வாழும் நகரத்திலே வாழ்ந்துகொண்டிருந்தது தெரிந்தபோது, தான் எவ்வளவு உள்ளொடுங்கிய வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்றேன் என்பதும் காந்தனுக்கு விளங்கியது.

முகநூலில் கண்டுபிடித்த, உள்ளூர் நண்பரொருவன் தன் திருமணத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தான். 'என்ன இவ்வளவு காலமும் திருமணஞ்செய்யாமலா இருந்தாய்' என இவன் கேட்க, மூன்று தங்கச்சிமாருக்கும் கலியாணஞ்செய்வதில் இவ்வளவு காலமும் கழிந்துவிட்டதென்றான். 'என்னடா தமிழ்ப்பட டயலாக் போல நீயும் கதைக்கிறாய்' எனச் சொல்ல மனம் விரும்பினாலும் முன்னொருகாலத்தில் இப்படித்தான் கெளரியின் தகப்பனுக்கு தான் சொல்ல விரும்பியதும், அவர் பின்னர் கொல்லப்பட்டதும் நினைவில் எழ, சொல்ல நினைத்ததை அடக்கிக்கொண்டு, 'நான் உன் திருமணத்திற்கு வருவேன், அழைப்புக்கு நன்றி' என உரையாடலை முடித்துக்கொண்டான்.

நண்பனின் திருமணத்திற்கு இவன் போனபோது ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. இவனுக்குப் பிடித்த ஓர் அரசியல் செயற்பாட்டாளரும் அங்கே வந்திருந்தார். நண்பன் திருமணஞ்செய்யும் பெண்ணின் உறவுக்காரர் போலும். அவரிடம் போய் நீங்கள் எனக்குப் பிடித்த செயற்பாட்டாளர், இப்படி நமக்கு நடந்த மனிதவுரிமை மீறல்களுக்காய் முன்னிற்பது மிகவும் பிடித்தமானது. என்னைப் போன்றவர்க்கெல்லாம் நீங்கள் ஒருவகையில் வழிகாட்டி என இன்னும் ஏதோ ஏதோவெல்லாம் அவரைக் கண்ட மகிழ்ச்சியில் சொல்லிக்கொண்டிருந்தான். அவரும் 'அப்படியா அப்படியா' என மிகுந்த அடக்கத்தோடும், புன்னகையோடும் கேட்டுக்கொண்ட்டிருந்தார். 'அவரது எழுத்தையும் பேச்சையும் போலவே நேரிலும் இவ்வளவு நிதானமாக இருக்கின்றாரே, நிறைகுடங்கள் ஒருபோதும் தளும்புவதில்லை' என இவன் நினைத்துக்கொண்டான்

தனக்குப் பிடித்த ஒருவரைச் சந்தித்த மகிழ்ச்சியில் மண்டபத்தில் தரப்பட்ட மாம்பழ ஜூஸை உறிஞ்சிக்கொண்டிருந்தவனை நோக்கி, ஒரு பெண் நெருங்கி வந்து 'நீங்கள் காந்தன் தானே?' எனக் கேட்டாள். இவனுக்கு உடனே யாரென்று மட்டுக்கட்ட முடியாதிருந்தது. 'நான் கெளரி, அவ்வளவு கெதியாய் என்னை மறந்துவிட்டீர்களா?' என்றாள். இவனுக்கு ஒருகணம் அதிர்ச்சியாகி, கடந்தகாலம் எல்லாம் சடசடவென்று உள்ளே கடுகதி போல ஓடத்தொடங்கியது. காலம் நல்லாசிரியர் மட்டுமில்லை, சிலவேளைகளில் கோரமான ஒப்பனைக்காரரும் கூட என்று நினைத்துக்கொண்டான். இல்லாவிட்டால் ஒருகாலத்தில் இளமை ததும்பி நின்ற ஒருவரை இப்படியா உருமாற்றியிருக்கும்? இதுதான் ஒருகாலத்தில், தான் மிகவும் நேசித்த கெளரியா என்பதை நம்பக் கடினமாக இவனுக்கு இருந்தது.

இன்னொரு மேசையிலிருந்து 'அம்மா' எனச் சொல்லி ஓடி வந்த இரண்டு பிள்ளைகளை 'இவர்கள் என் குழந்தைகள்' என்றாள். என்ன பெயர்கள் என வினாவியபோது 'மூத்தவளுக்கு பாமினி, இளையவனுக்கு காந்தன்' என்றாள். 'காந்தன்' என்ற தன் பெயரைக் கேட்டதும் மனம் திடுக்குற்று இவனுக்கு அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை. 'ஆண்கள் மட்டுமில்லை, பெண்களும் கூட தம் முதற்காதலை அவ்வளவு எளிதில் மறப்பதில்லை' என எங்கோ வாசித்தது இவனின் நினைவில் எழுந்து மறைந்தது

காந்தனும் கெளரியும் நிறைய பழைய விடயங்களை கதைத்துக்கொண்டிருந்தார்கள். இடைநடுவில் வந்த கணவனுக்கு 'இவர் எங்கள் ஊர்க்காரர்' என மட்டும் சொல்லி காந்தனை அறிமுகப்படுத்தி வைத்தாள். எல்லாவற்றையும் பேசியபோதும் இவர்களின் கடந்தகாலக் காதலையோ அல்லது கெளரியின் தகப்பன் கொல்லப்பட்டதையோ பற்றிக் கதைப்பதை இருவரும் கவனமாகத் தவிர்த்துக்கொண்டிருந்தார்கள். திடீரென்று கெளரி ' முன்பு எல்லாம் கவிதை எழுதிக்கொண்டிருப்பாயே? இப்போதும் எழுதுகிறாயா?' எனக் கேட்டாள். 'இல்லை அப்படி எழுதி எவரையும் இப்போதும் கஸ்டப்படுத்துவதில்லை' எனச் சிரித்தபடி சொன்னான். 'ம்....நீ முன்பு எந்தப் புனைபெயரில் எழுதிக்கொண்டிருந்தாய் என்பதையாவது இப்போது நினைவு வைத்திருக்கின்றாயா... என்னால் அதை ஒருபோதும் மறக்கமுடியாது' என்றாள். எதைக் கடந்துவிட்டு போகவேண்டும் என நினைத்து அது குறித்து உரையாடுவதைத் தவிர்த்துக்கொண்டிருந்தார்களோ அது தன்னியல்பில் வெளி வந்துவிட்டது. இவன் தன் கவிதைகளை 'கெளரி காந்தன்' என்று அவள் பெயரையும் இணைத்து வைத்துத்தான் ஒருகாலத்தில் எழுதிக்கொண்டிருந்தான்.

சட்டென்று தங்களுக்குள் விழுந்த திரையை விலத்துவதற்கும், அதே விடயத்தைத் தொடர்ந்து கதைப்பதைப் தவிர்ப்பதையும் பொருட்டு, 'இங்கே எனக்குப் பிடித்த ஒருவர் இருக்கிறார். கிட்டத்தட்ட அவர் எனக்கு வாழ்க்கையில் பல விடயங்களில் மானசீகக் குரு போன்றவர். அவரது பேச்சைப் போலவே அவ்வளவு அமைதியானவர், நீயும் சந்திக்கவேண்டும்' என்றான். அப்போதுதான் இதுவரை கெளரியுடன் நீங்கள் எனப் பேசிக்கொண்டிருந்ததில் இருந்து 'நீ'யிற்கு வந்திருந்தது தெரிந்தது. சட்டென்று தான் தன் பதினாறாவது வயதுக்குப் பறந்துபோய்விட்டேன் போலுமென நினைத்துக் கொண்டான்..

கடந்தகாலத்திற்கு மீண்டும் போய் உறைவதைத் தடுக்க அவசரம் அவசரமாக செயற்பாட்டாளர் இருந்த மேசைக்கு கெளரியை இழுத்துச் சென்று அறிமுகப்படுத்தினான். அவர் அதே அமைதியான குரலில் 'ஹலோ' என கெளரிக்குச் சொன்னார். திரும்பி வணக்கம் சொல்வாள் என எதிர்பார்த்த கெளரி ஒன்றையும் சொல்லாது விடுவிடுவென்று அந்த இடத்தை விட்டுப் போயிருந்தாள். ஏன் கெளரி இப்படிச் செய்கிறாள் என்ற வியப்புடன், செயற்பாட்டாளரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு, கெளரியைப் பின் தொடர்ந்தான். திருமண மணடபத்துக்கு வெளியே வந்து நின்ற கெளரி, 'இந்த ஆளால்தான் எங்கடை காதலே அழிந்து போனது. இந்தச் சனியன் பிடித்தவனை ஏன் எனக்கு அறிமுகப்படுத்தினாய்' என்றாள். ஏன் அவர் எங்களின் காதலைக் சிதைத்தவர் எனக் கெளரி சொல்கிறாள் என இவனுக்கு எல்லாமே குழப்பமாயிருந்தது.

'எங்கடை அப்பாவை இயக்கம் படுத்த பாயோடு சுருட்டிக்கொண்டு போனபோது, நான்கு பேர் வந்திருவையென்டு சொன்னனான் அல்லவா? அதற்குப் பொறுப்பாய் இருந்தவர் இந்தாள்தான். நான் இவரின் காலைப் பிடித்து எங்கடை அப்பாவை ஒன்றும் செய்யவேண்டாம் என்று கெஞ்சியபோது இவர் என்ன சொன்னவர் தெரியுமோ?'

இவன் கெளரியின் கண்ணீர் வரத்துடிக்கும் விழிகளை நேருக்கு நேர் பார்த்தான்.

'ஒரு துரோகிக்கு பாடங் கற்பிக்கும்போது நாங்கள் ஓராயிரம் துரோகிகள் வளர்வதைத் தடுக்கின்றோம் என்றவர்.'

இவனால் எதையுமே நம்பமுடியாதிருந்தது. அவரின் எழுத்திலோ பேச்சிலோ அவர் ஒருபோதும் வன்முறையை ஆதரித்து எழுதியதற்கான தடயங்களையே காணமுடியாது. அப்படியான ஒருவர் கடந்தகாலத்தில் ஒரு கொலைகாரனாய் இருந்திருப்பார் என்பது சாத்தியமற்றதெனவே இவன் நம்பினான். காந்தியிற்கு ஊன்றுகோலிற்குப் பதிலாய் அவரின் கையில் ஆயுதத்தைக் கொடுத்திருந்தால் எப்படியிருக்கும்? அப்படியான ஒருவராக அல்லவா கெளரி இவரை உருமாற்ற முயல்கிறாள். ஆனால் சும்மா ஒருவரை எழுந்தமானமாய் கொலைகாரன் எனக் கெளரி குற்றஞ்சாட்டவில்லை என்பதையும் அவளது விழிகள் தெளிவாய்ச் சொல்லியிருந்தது.

தனது சுயத்தை வனைந்துகொண்டிருக்கும் ஒருவரை கொலைகாரன் என ஏற்றுக்கொள்வது தன்னிருப்பையே இல்லாது ஒழித்துவிடும் என அஞ்சினான். அதற்குப் பிறகு கெளரியை மீண்டும் சந்திப்பதை இவன் விரும்பவேயில்லை.

(ஜூலை 2013)

(நன்றி: தீராநதி - பெப்ரவரி, 2014)

http://djthamilan.blogspot.co.uk/2014/02/blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.