Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் கொலை பெரிய தப்பு- அற்புதம் அம்மாள் நேர்காணல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த நாளில், அற்புதம் அம்மாளைச் சந்திக்க முடியவில்லை; ஓரிரு நாட்கள் கழித்துச் சென்றபோது, வழக்கம்போல, மரண தண்டனைக்கு எதிரான புத்தகங்கள் கனக்கும் தோள்பையுடன் கிளம்பியிருந்தார். “எம் புள்ள மட்டும் இல்லப்பா, இன்னும் நெறையப் புள்ளைங்களைத் தூக்குக் கயித்துப் பிடிக்கு வெளியே இழுத்துக்கிட்டு வர வேண்டியிருக்கு” என்றவர், வழியில் ஒரு பொரி பொட்டலத்தை வாங்குகிறார். “ரொம்ப அசத்தினா தவிர, நான் சாப்பாடு தேடுறதுல்ல; பல நாள் இந்தப் பொரிதான் நமக்குச் சாப்பாடு” என்கிறார் சிரித்துக்கொண்டே. நடந்துகொண்டே பேச ஆரம்பித்தோம்.

 

இந்த நாட்டின் சர்வ வல்லமை பொருந்திய அமைப்பு களோடு 23 வருஷங்கள் போராடி, உங்கள் மகனைத் தூக்குக் கொட்டடியிலிருந்து மீட்டிருக்கிறீர்கள். இந்தப் போராட்டத்துக்கான மனோபலம் எங்கிருந்து உருவானது?

பெரியார்கிட்டே இருந்துதான்பா உருவானுச்சு. நான் பொறந்தது தி.மு.க. குடும்பத்துல. எங்கப்பா டி.ஏ. திருவேங்கடம் கட்சியில எந்தக் கூட்டம், போராட்டம்னாலும் எங்களையும் கூடவே அழைச்சுக்கிட்டுப் போய்டுவார். குறள் ஒப்பிக்கிறது, கூட்டங்கள்ல பேசுறதுனு வாய்ப்புக் கிடைச்சப்பல்லாம் போய்க்கிட்டுதான் இருந்தேன். ஆனா, உண்மையான அரசியலைப் பெரியார்கிட்டேயிருந்துதான் கத்துக்கிட்டேன்.

 

பெரியார் எப்போது அறிமுகமானார்?

 

என்னோட கணவர் குயில்தாசன்கிட்டேயிருந்து. அவர்தான் பெரியாரையும் சுயமரியாதை வாழ்க்கையையும் அறிமுகப்படுத்தினார். மொதமொதல்ல கலந்துக்கிட்ட தி.க. கூட்டத்துலேயே சின்னச் சின்ன விஷயங்கள்கூட ரொம்பப் பிடிச்சுப்போச்சு. தி.மு.க. கூட்டங்கள்லேயும் கலந்துக்கிட்டிருக்கேன்னாலும், கூட்டத்தை அங்கே ஆண்- பெண்ணுனு ரெண்டு வரிசையா பிரிச்சுருப்பாங்க. இங்கே அந்தப் பாகுபாடு கிடையாது. எல்லாரும் சமம்கிறது பதிஞ்சுது. ஒருகாலத்துல எல்லாப் பெண்களையும்போல நகைநட்டு போட்டுக்கிட்டு வெளியே போன நான், பெரியார் பேச்சைக் கேட்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம், இந்தச் சமூகம் பெண்களுக்கு அழகுன்னு கற்பிச்சு வெச்சுருக்குற எல்லாமே கைவிலங்குங்கிறதைப் புரிஞ்சுக்கிட்டு, தாலியே வேணாம்னு முடிவெடுத்தேன். எல்லோரும் எதிர்த்து நின்னாலும் நாம சளைக்கக் கூடாதுங்கிற தைரியத்தையும் அங்கேதான் கத்துக்கிட்டேன். என் பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுத்தேன். கூட்டங்கள், போராட்டங்கள்ல எல்லாம் குடும்பமாவே கலந்துக்கிட்டோம். நானே ரெண்டு தடவை சிறைக்குப் போயிருக்கேன். இயக்கத்தைத் தனியாவும் எங்க குடும்பத்தைத் தனியாவும் நாங்க பார்க்கலை.

 

ராஜீவ் கொலையை இப்போது நினைவுகூர முடியுமா?

 

எப்படிப்பா மறக்க முடியும்? எங்க வாழ்க்கையையே புரட்டிப்போட்ட சம்பவம் இல்லையா அது? ராஜீவ் கொல்லப்பட்ட செய்தி வந்தப்போ எல்லாக் குடும்பங்களையும் போல எங்க குடும்பமும் ஆடிப்போச்சு. அதுவும் ராஜீவோட கோரமான சாவு, அந்தப் படங்களை எல்லாம் பார்த்தப்போ உடைஞ்சுபோயிட்டோம். ஆனா, அப்போ தெரியலையே… அந்தச் சாவுதான் எங்களோட வாழ்க்கையையும் சூறையாடப்போவுதுன்னு.

 

ஈழத் தமிழர் பிரச்சினையில் ராஜீவ் நிலைப்பாட்டையும் அவர் கொல்லப்பட்டதையும்பற்றி உங்கள் கருத்து என்ன?

 

ராஜீவோட அணுகுமுறையை எப்படிப்பா சரின்னு சொல்ல முடியும்? ஈழத் தமிழர்கள் எவ்வளவு பேர் இந்திய அமைதிப்படையால கொல்லப்பட்டாங்க; எவ்வளவு தமிழ்ப் பெண்கள் சீரழிக்கப்பட்டாங்க; ராஜீவோட தவறான முடிவுதானே இதுக்கெல்லாம் காரணம்? அவரு அவங்கம்மா பாதையைப் பின்பற்றியிருக்கலாம்கிறது என்னோட கருத்து. ஆனா, எதுக்காகவும் ஒரு உயிர் கொல்லப்படக் கூடாதுன்னு போராடுற நான் எப்படி ராஜீவ் கொல்லப்பட்டதைச் சரின்னு சொல்வேன்? பெரிய தப்புப்பா.

 

பேரறிவாளன் இந்தக் கொலை வழக்கில் சிக்கியபோது, உங்கள் வீட்டுச் சூழல் எப்படி இருந்தது? அதை நீங்கள் எப்படி உள்வாங்கினீர்கள்?

 

அப்போதான் என் பெரிய பொண்ணு அன்புக்கு மாப்பிள்ளை பார்த்திருந்தோம். சின்ன பொண்ணு அருள் படிச்சுக்கிட்டிருந்தா. அறிவுக்கு அப்போ 19 வயசு. டிப்ளமோ படிச்சிருந்தவன் வேலை செஞ்சுக்கிட்டே இன்ஜினீயரிங் படிக்கிறதுக்கு ஏதுவா சென்னையில பெரியார் திடல்ல தங்கியிருக்கான். ஏன் அங்க தங்கியிருந்தான்னா, அதுதான் அன்னைக்குச் சொந்தக்கார வீடு. இந்த நெலமையிலதான் மே 21-ம் தேதி ராஜீவ் கொல்லப்படுறார். ஜூன் 10-ம் தேதி ராத்திரி 12 மணிக்கு எங்க வீட்டுக் கதவு தட்டப்படுது. “உங்க மகன்கிட்டே சில விவரங்களை விசாரிக்கணும்; ரெண்டு நாள்ல ‘மல்லிகை'க்கு வரச் சொல்லுங்க”னு சொல்லிட்டுப் போனாங்க. படிப்புல ஆகட்டும், பண்புல ஆகட்டும், ரொம்ப உயர்வானவன் அறிவு. நம்ம பக்கம் எந்தத் தப்பும் இல்லையேங்கிற தைரியத்துல நாங்க தயாரானோம். மறுநாள் காலையிலேயே அனுப்பிடுறோம்னு சொல்லிதான் அவனை அழைச்சுக்கிட்டுப்போனாங்க. ஆனா, என் புள்ள இன்னும் வெளியே வரலைய்யா…

 

இந்த வழக்கில் பேரறிவாளன் சிக்கியதற்கான பொறி எது?

 

அன்னைய காலச் சூழல். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவா ஒவ்வொரு தமிழரும் அனுதாபம் காட்டுன நேரம் அது. தமிழ் உணர்வாளர்கள் பலரோட வீட்டையும் போல எங்க வீட்டுலேயும் தம்பி படம் மாட்டியிருந்துச்சு. அறிவு, அவங்க அப்பா ரெண்டு பேரும் ஈழத் தமிழர்களுக்காகக் குரல்கொடுத்தவங்க. கூடவே, நளினியோட தம்பி பாக்கியநாதன், தி.க. கூட்டங்கள் வாயிலா இவங்களுக்கு அறிமுகமாயிருந்தார். இது எல்லாத்தையும் சேர்த்தே அறிவைக் குற்றவாளியா ஜோடிச்சாங்க.

 

ஆரம்பத்தில், உங்கள் மகன்தான் வெடிகுண்டைத் தயாரித்தவர் என்று சொன்னார்கள் இல்லையா?

 

அறிவு ஒரு வெடிகுண்டு நிபுணன்னே ஜோடிச்சாங்கப்பா. அந்தப் பொய்யை நம்பவைக்க முடியாததால, அறிவு பேட்டரி வாங்கிக்கொடுத்தான்; அந்த பேட்டரியைப் போட்டுதான் குண்டை வெடிச்சாங்கன்னு கதையை மாத்தினாங்க. உண்மை என்னன்னா, ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை இவங்களால பிடிக்க முடியலை. அதனால, பிடிச்சவங்களையெல்லாம் குற்றவாளியா மாத்தினாங்க. அப்போ அவங்க போடுற ஆட்டத்துக்கு ஏத்த மாதிரி ஒரு சட்டம் இருந்துச்சு. தடா. ஒருத்தரைப் பிடிச்சுட்டுப்போக எந்தக் காரணத்தையும் சொல்ல வேண்டியது இல்லை. என்ன குற்றச்சாட்டை வேணும்னாலும் சுமத்தலாம். அடிச்சுத் துவைச்சு மிரட்டி வாங்குற கையெழுத்துகளை வெச்சு வாக்குமூலம் தயாரிக்கலாம். மூடின அறைக்குள் யாரையும் விடாம விசாரிக்குற எல்லாத்தையும் நீதிமன்றம் ஏத்துக்கும். அப்படி ஏத்துக்கிட்டுதான் உலகத்துல எந்த நாட்டுலேயும் நடக்காத கொடுமையா, 26 பேருக்குத் தூக்கு தண்டனையை விதிச்சுது.

 

பேரறிவாளனுக்கு நீதிமன்றங்களில் மூன்று முறை மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. உச்சக்கட்டமாக, குடியரசுத் தலைவரே கருணை மனுவை நிராகரித்தார். அந்தச் சூழலையெல்லாம் எப்படி எதிர்கொண்டீர்கள்?

 

 

ஒவ்வொரு முறையும் நெஞ்சு வெடிச்சுச் சிதறுற வலியைக் கடந்துதான்பா வந்தேன். அதெல்லாத்தையும்விடப் பெரிய கொடுமை, கருணை மனு நிராகரிக்கப்பட்டதுக்கு அப்புறம் வேலூர் சிறையிலேர்ந்து, ‘செப்டம்பர் 9-ம் தேதி தூக்கிலிடப்படும் உங்கள் மகனின் சவத்தை நீங்கள் பெற்றுச்செல்ல வேண்டும்’னு அனுப்பப்பட்ட கடிதம். ஒரு தாயா, என் நெலமையை அன்னைக்கு நீங்க யோசிச்சுப் பாருங்க... நான் சந்திச்ச அதிர்ச்சிக்கெல்லாம் நான் எப்பவோ செத்துருக்கணும். வீட்டுல ஏற்கெனவே உடம்பும் நைஞ்சு மனுசும் நைஞ்சுபோய் உட்கார்ந்துருக்குற அப்பா; இதுல அம்மா நானும் போய்ட்டா என் புள்ளையோட நெலமை என்னவாகும்? இந்த ஒரே கேள்வியும் வைராக்கியமும்தான் இன்னும் என்னை உசுரோட வெச்சிருக்கு.

 

பேரறிவாளன் விடுதலைக்கான இந்தப் போராட்டத்துக்கு இடையிலேயே சிறைச் சூழல் மாற்றத்துக்காகவும் போராடினீர்கள் அல்லவா?

 

ஆமாம். வெளியிலேர்ந்து பாக்குற மாதிரி நம்ம விசாரணை அமைப்புகளும் சிறைகளும் அவ்வளவு சாதாரணமான இடம் இல்லப்பா. அதிகாலையிலேயே புறப்பட்டு, பல பஸ்ஸு மாறி நாள் முழுக்கக் கொதிக்குற வெயில்ல காத்திருப்பேன், எதுக்கு? அஞ்சு நிமிஷம் புள்ள முகத்தைப் பார்க்குறதுக்கு. ஈவிரக்கமே இல்லாம துரத்தியடிச்சுடுவாங்க. ஆரம்பக் கட்டத்துல ‘மல்லிகை'க்கு அறிவைப் பார்க்கப் போனப்ப நடந்த சம்பவம் இது. பல நாள் காத்திருந்து அஞ்சு நிமிஷ அனுமதி வாங்குறேன். வயித்துக்கோளாறு. கூட இருந்த பெண் காவலர்கிட்ட சொன்னப்போ வேண்டாவெறுப்பா பக்கத்துல இருந்த ஒரு கழிப்பறையைக் காட்டுனாங்க. கதவைச் சாத்தப்போறேன்; தடுத்துட்டு “தொறந்துவெச்சுக்கிட்டே போ”னு சொன்னாங்க. அப்படியேதான் போனேன், கூனிக்குறுகி. வெளியிலேர்ந்து போற நமக்கே இந்த நெலமைன்னா, உள்ளே இருக்குறவங்க நெலமை எப்படி இருக்கும்? அறிவு எவ்வளவோ சித்திரவதைகளையும் அவமானங்களையும் தாங்கியிருக்கான். தனிமைச் சிறையில, ஒரு சின்ன கொட்டடியில இருக்குற அவனுக்கு எதைத் துணையாக் கொடுக்க முடியும்? அவன் கேக்குற பத்திரிகைகள், புத்தகங்களை எல்லாம் வாங்கிச் சுமந்துக்கிட்டுப் போவேன். அரிதா கிடைக்குற அஞ்சு நிமிஷ சந்திப்பும் எப்படி இருக்கும்னு நெனைக்கிறீங்க? ஒவ்வொரு சிறையிலேயும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஒரு சிறையில குறுக்கே கண்ணாடிச் சுவர் இருக்கும். எதுவும் பேச முடியாது. கேக்காது. எல்லாம் சைகைதான். இன்னொரு சிறையில ரெண்டடி இடைவெளியில ரெண்டு கம்பித் தடுப்பு இருக்கும். ரெண்டு பக்கமும் எல்லாரும் கத்துற கத்துல யாருக்கும் எதுவும் கேக்காது. இதையெல்லாம் எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போனேன். இன்னைக்குக் கொஞ்சமாச்சும் அது மாற்றத்தைக் கொண்டாந்துருக்கு.

 

தொடக்கத்தில் எல்லோருமே உங்களை விட்டு ஒதுங்கியிருப்பார்கள், இல்லையா?

 

நிறையப் பேர் ஒதுங்கிட்டாங்க. ஆனா, சில நல்ல மனுஷங்க அப்போதான் கைகோத்தாங்க. என்னோட பெரிய பொண்ணைப் பார்த்துட்டுப் போயிருந்தாங்கன்னு சொன்னேன் இல்லையா, அந்தச் சம்பந்தம் தட்டிப்போகலை. பேருக்கு ஏத்த மாதிரியே அமைஞ்ச மாப்பிள்ளை ராஜா ‘வழக்கெல்லாம் கிடக்குது’னு சொல்லி என் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார். அறிவு விடுதலைக்காக ரொம்ப நாள் திருமணம் பண்ணிக்க மாட்டேன்னு காத்திருந்த ரெண்டாவது பொண்ணுக்கும் மாப்பிள்ளை தனசேகரன் அப்படித்தான் தேடிவந்தார். இன்னைய வரைக்கும் வழக்குக்காக ஏற்படுற பெருஞ்செலவை என் மகள்களும் மாப்பிள்ளைகளும்தான் பகிர்ந்துக்கிறாங்க.

 

ஏன் அரசியல் கட்சிகள் பகிர்ந்துகொள்ளவில்லையா?

 

 

சில விஷயங்களை எல்லாம் பேச வேணாம்னு நெனைக்கிறேன்பா. அவ்வளவு துரோகங்கள் இருக்கு அறிவு கதையில. ரெண்டு உதாரணங்களை மட்டும் சொல்றேன். எந்த இயக்கத்தை எங்க உயிரா நெனைச்சோமோ, அந்தத் தி.க. என்ன பண்ணுச்சு தெரியுமா? அறிவு கைதுசெய்யப்பட்ட உடனே, இயக்கத்துக்கும் அறிவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைனு அறிவிச்சுச்சு. சீக்கிரமே, பகுத்தறிவுக் கழக மாவட்டப் பொறுப்பாளரா இருந்த என்னோட கணவர் குயில்தாசனையும் ஒதுக்குச்சு. அவசர நிலைக் காலகட்டத்துல, கலைஞர் அரசு கவிழ்க்கப்பட்டப்போ, எதிர்த்துப் போராட நிதி வசூலிச்சுக்கிட்டு, ஊரையே திரட்டிக்கிட்டுப்போய், “தலைவா! நாங்க இருக்கோம் உன்கூட”னு நின்ன குடும்பம் எங்களோடது. ஆனா, அறிவு கைதுசெய்யப்பட்ட பின்னாடி இந்த 23 வருஷத்துல ஒருமுறைகூட அவரைச் சந்திக்க முடியலை. இதையெல்லாம் குற்றச்சாட்டா சொல்லலை. வேதனையாதான் சொல்றேன். இப்படி எவ்வளவோ கதைகளைச் சொல்லலாம். ஆனாலும், நெடுமாறன், நல்லகண்ணு, தியாகு, வைகோ, சீமான் இவங்கல்லாம் பெரிய ஆதரவைத் தந்திருக்காங்க. எல்லாத்துக்கும் மேல இப்போ முதல்வர் அம்மா என் பிள்ளையை மீட்டுத்தர்றேன்னு சொல்லிட்டாங்களே…

 

முதல்வரிடம் என்ன பேசினீர்கள்? ஏனையோர் இதைத் தேர்தல் நாடகம் என்றெல்லாம் விமர்சிக்கிறார்களே?

 

அவங்க கூப்பிடலை. நானாத்தான் ஓடினேன், நன்றி சொல்றதுக்காக. அவங்களைப் பார்த்தப்போ அழுகையைத் தாண்டி எதுவும் வரலை. “இவ்ளோ சந்தோஷத்தை என்னால தாங்கிக்கவே முடியலம்மா”னு கதறினேன். “இனி நீங்க அழக் கூடாது. உங்க மகன் சீக்கிரமே வந்துடுவார்”னாங்க. விமர்சிக்கிற வாய்கள் இத்தனை நாள் என்ன பேசுச்சு, என்ன செஞ்சுச்சுனு ஊருக்குத் தெரியும்.

 

முதல்வர் முடிவுக்கு, பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மத்திய அரசின் எதிர்ப்பால், உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது…

 

என்ன வேணா நடக்கட்டும். முதல்வரம்மா சொல்லிட்டாங்க. இனி என் புள்ள வெளியே வர்றதை யாராலும் தடுக்க முடியாது.

 

சரி, பிள்ளை வந்துவிடுவார். அடுத்து என்ன?

 

அவனைப் பத்தி ஆயிரம் கனவு இருக்குப்பா. ஆனா, அதையெல்லாம் தாண்டி செய்ய வேண்டிய கடமை ஒண்ணு இருக்கு. இந்த நாட்டுல மரண தண்டனையை ஒழிக்கணும். என் புள்ள விஷயத்துல, எதிர்பாராதவிதமா நிறைய விஷயங்கள் நடந்துச்சு. வாக்குமூலத்தைப் பதிவுசெஞ்ச சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் பின்னாடி, “நான் கடமையிலிருந்து வழுக்கியிருக்கேன்; வாக்குமூலத்தை பேரறிவாளன் சொன்னபடி முழுசா பதியலை”னு சொன்னார். அதேபோல, மரண தண்டனையை விதிச்ச நீதிபதி கே.டி. தாமஸும் “இவ்வளவு ஆண்டுகள் காத்திருக்கவெச்சு மரண தண்டனை கொடுப்பது சரியில்லை”னு சொன்னார். செங்கொடி மாதிரி ஒரு இளங்குருத்து தன்னை மாய்ச்சுக்கிட்டு உருவாக்கின போராட்டத்தீ இந்த மாநிலமே மரண தண்டனைக்கு எதிரா திரளக் காரணமா இருந்துச்சு. அரசாங்கம் சட்டப்பேரவையில, “மரண தண்டனையை ஆயுள் தண்டனையா குறைக்கணும்”னு தீர்மானம் நிறைவேத்துச்சு. இப்போ முதல்வர் விடுதலை அறிவிப்பையும் வெளியிட்டிருக்காங்க. ஆனா, எல்லாருக்கும் இதெல்லாம் வாய்க்குமா, சாத்தியமா? என் காலத்துக்குள்ள இந்த நாட்டுல மரண தண்டனையை ஒழிக்கணும். அதுக்காகக் கடைசி மூச்சு இருக்குறவரைக்கும் போராடுவேன்.”

 

- கனக்கும் பையை ஒரு தோளிலிருந்து இன்னொரு தோளுக்கு மாற்றுகிறார் அற்புதம் அம்மாள்.

சமஸ், தொடர்புக்கு: samas@kslmedia.in 

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/article5723757.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.