Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எலும்புக்கூடுகள் சாட்சி சொல்லும் ஈழம் - தீபச்செல்வன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எலும்புக்கூடுகள் சாட்சி சொல்லும் ஈழம் - தீபச்செல்வன்:-

05 மார்ச் 2014

எலும்புக்கூடுகள் வாக்குமூலங்களுடன் சாட்சியாக கிளம்பும் நிகழ்வுகள் கடந்த முப்பதாண்டுகளாக ஈழத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் ஈழத்து மக்களை அதிர்ச்சி கொள்ள வைத்த இடம் மன்னார் திருக்கேதீச்சரம். மன்னார் மனிதப் புதைக்குழிகளைத் தொடர்ந்து ஈழத் தலைநகர் திருகோணமலையிலும் இறுதிப்போர் நடந்த முல்லைத்தீவிலும் எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. எங்கு மண்ணை தோண்டினாலும் எலும்புக்கூடுகள் கிளப்புமா என்பதுதான் இன்றைய ஈழ நிலத்தின் அச்சம்.

ஈழத்தின் வடக்கில் உள்ள மன்னார் திருக்கேதீஸ்வரம் பல்லவர் காலத்தில் பாடல் பற்ற தலம். சுந்தரரும் சம்பந்தரும் இந்த ஆலயத்தின்மீது பதிகங்களைப் பாடியுள்ளனர். பாடல் பெற்று பிரபலமடைந்த திருக்கேதீச்சரம் இன்று எலும்புக்கூடுகளால் பிரபலமடைந்திருக்கிறது. பள்ளிக்குடா திருக்கேதீச்சரப் பகுதியிலேயே இவ்வாறு எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுகின்றன. இந்த எலும்புக்கூடுகள் யாருடைய என்ற கேள்விதான் ஈழத்தை இப்பொழுது உலுக்கத் தொடங்கியிருக்கிறது.

ஈழத்தில் பல்வேறு காலகட்டத்தில் எலும்புக்கூடுகள் கிளம்புவதால் சர்ச்சைசகள் ஏற்பட்டிருக்கின்றன. கிளிநொச்சியை இலங்கைப் படையினர் கைப்பற்றியிருந்த 1996 – 1998 வரையான காலத்தில் கிளிநொச்சிக்கு போராளிகளின் அறிவித்தலையும் மீறிப் பலர் சென்றிருக்கிறார்கள். அக் கால கட்டத்தில் யாழ் மக்களும் கிளிநொச்சி மக்களும் வன்னியில் இடம்பெயர்ந்து பெருந்துயரை அனுபவித்த கால கட்டம். வறுமையில் வாடிய பல வீட்டுத் தலைவர்கள் தங்கள் சொந்த ஊரான கிளிநொச்சிக்குச் சென்று தங்கள் காணிகளில் உள்ள தேங்காய், மாங்காய் பேர்ற பொருட்களை பறித்து வந்து பிழைப்பு நடத்தினார்கள். சிங்கள இராணுவத்தின் கண்ணுக்கு மண்ணை தூவிவிட்டு பலர் இவ்வாறு பிழைத்தனர்.

சாவோடு விளையாடும் வாழ்க்கை. இலங்கை இராணுவத்தின் கண்களில் பட்டால் அவ்வளவதான். அது ஈழப்போராட்டத்திற்கே நெருக்கடியான காலம். எல்லா வகையிலும் இராணுவத்தினர் புலிகளை முற்றுகையிட்டிருந்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிவரை கைப்பற்றியதுடன் வவுனியாவிலிருந்து மாங்குளம் வரையும் அவர்கள் கைப்பற்றி விட்டார்கள். எல்லோரும் முற்றுகைக்குள் வசித்தோம். இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் செல்பவர்கள் வீடு திரும்பும்வரை அவர்களின் வீட்டார் கண் உறங்காமல் பார்த்துக்கொண்டிருப்பார்கள். இதுவும் ஒரு நெய்தல் நில ஒழுக்கத்திற்கு ஒப்பான இருத்தல். அங்கு கடலுக்குச் செல்வார்கள். இங்கு இராணுவம் ஆக்கிரமித்திருக்கம் அபாய வலயத்திற்கு செல்ல வேண்டும்.

அவ்வாறு சென்றவர்கள் திரும்பும்போது அந்த வீடு திருவிழாவைப் போல இருக்கும். அவர்கள் தங்கள் காணி நிலத்திலிருந்து விளைந்தவைகள் எல்லாவற்றையும் கொண்டு வந்திருப்பார்கள். போரின் போது கைவிட்டுவந்த பொருட்களை எல்லாம் கொண்டு வருவார்கள். பொம்மைகளை விட்டுச்சென்ற குழந்தைகளுக்கு அவற்றை எல்லாம் மீட்டுக்கொண்டு வருவார்கள். அதை வைத்து அவர்கள் சில நாட்கள் பசியாறுவார்கள். அவை தீர்ந்த பிறகு மீண்டும் இராணுவ அபாய வலயத்திற்குச் செல்வார்கள். அவ்வாறு சொல்லும் சிலர் திரும்பி வாராத கதைகள் பலவும் உண்டு. அவர்களுக்காக நாளும் பொழுதும் என்று மாதமும் வருடமும் என்று ஆண்டுக்கணக்காக காத்திருந்தவர்களும் உண்டு. இதனாலேயே பல குடும்பங்கள் சரிந்துபோயின.

தங்கள் தந்தை அல்லது தங்கள் கணவன் உயிருடன் இருக்கிறார் என்றும் திரும்பிவருவார் என்றும் அன்று முதல் இன்றுவரை காத்திருப்பவர்களும் இருக்கிறார்கள். விடுதலைப் புலிகள் கிளிநொச்சியைக் கைப்பற்றியபோது காணாமல் போன பலர் எலும்புக்கூடுகளாக மீட்கப்பட்டிருக்கின்றனர். கிணறுகளிலும் மலசல கூடுகங்களிலும் பலர் எலும்புக்கூடுகளாக மீட்கப்பட்டிருந்தனர். ஒன்று இரண்டு என்று ஒரு கட்டத்தில் பல நூற்றுக்கணக்கானவர்களின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. அவை தமிழீழ காவல்துறை நிலையங்களில் வைக்கப்பட்டபோது அதனைத் தேடி பலர் வருவார்கள். தங்கள் கணவன் உயிருடன் உள்ளார் என்று நம்பியிருந்த சிலர் அங்கு எலும்புக்கூடுகளாக தம் கணவரைப் பெறறார்கள். பின்னர் அவர்கள் எலும்புக்கூடுகளின் மனைவி என்றும் எலும்புக்கூடுகளின் பிள்ளைகள் என்றம் சொல்லும்படியான துயரக் காலத்தை அடைந்தார்கள்.

இலங்கை இராணுவத்தினர் மனித உயிர்களுடன் முள்ளிவாய்ககாலில் மட்டும் கொலை புரிந்து விளையாடியவர் அல்ல. எங்கள் போராட்டத்திற்கு எத்தனை வயதோ அத்தனை வயதே இலங்கை அரச படைகளின் கொலை விளையாட்டுக்கும். அவர்கள் அளவில் ஈழ மக்களை கொல்வது என்பது மகிழச்சிகரமான விளையாட்டு. மனித உயிர்கள் எவ்வளவ மகத்ததானவை என்பது பற்றியெல்லாம் அவர்களுக்கு எந்தப் பொருட்டும் இல்லை. ஈழத் தமிழன் என்றால் கொல்லலாம். அதுவும் எப்படியும் கொல்லலாம். இதற்கு ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகள் பலவும் பல விதங்களில் இடம்பெற்றமை சான்று. கிளிநொச்சியில் காணாமல் போனவர்களில் சிலரது தலையை வெட்டி வீடுகளுக்கு அனுப்பிய கதைகளும் உண்டு.

கிளிநொச்சியில் இந்த சம்பவம் நடந்தபோது யாழ்ப்பாணத்தில் இரண்டாயிரம் இளைஞர்களை சிங்கள இராணுவத்தினர் செம்மணியில் கொன்று புதைத்தார்கள். இளைஞர் யுவதிகளை அழித்தால் போராடும் வலுவலுள்ள சமூகம் இல்லாது போகும் அதன் மூலம் ஆக்கிரமித்த யாழ்ப்பாணத்தை எக்காலத்திலும் இழக்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தலாம் என்பதுவே இலங்கை அரச படைகளின் நோக்கம். அன்றைய காலத்தில் காணாமல் போதல் என்பது யாழ்ப்பாணத்தில் பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. அதுவே இளைஞர் யுவதிகளின் உறக்கங்களை கலைத்து மரண களத்தில் வாழும் அபாயத்தை பரிசளித்தது.

பள்ளிக்கூடம் சென்றவர்களும் தனியார் வகுப்புக்குச் சென்றவர்களும் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளுக்குச்சென்றவர்களும் காணாமல் போனார்கள். எங்கும் யார் வேண்டுமானாலும் காணாமல் போன காலம். இந்தக் காலத்தில்தான் பள்ளி மாணவியான கிரிசாந்தி இலங்கைப் படையினரால் கொண்டு செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரைத் தேடிச்சென்ற தாயாரும் தயாரின் சகோதரனுனும் காணாமல் போனார்கள். இக்காலத்தின் விளைவாக கண்டு பிடிக்கப்பட்டது செம்மணிப் புதைகுழி. அங்கு தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள். காணாமல் போனவர்கள் பலரும் எலும்புக்கூடுகளாக மீட்கப்பட்டார்கள். அந்தக் காலத்தில் காணாமல் போனவர்களில் பலருக்க என்ன நடந்ததது என்று இன்னமும் தெரியாத நிலையும் காணப்படுகிறது.

இவை எல்லாம் சந்திரிகா பண்டார நாயக்கா என்ற அன்றைய சிங்கள ஜனாதிபதியின் போர்க்குற்றங்களாகும். சனல் 4 ஆவணப்படத்தைப் பார்த்தபோது இலங்கைப் படைகள் இழைத்த போர்க்கற்றங்களை கண்டு தனது பிள்ளைகள் அழுததான சந்திரிகா சொல்லியிருந்தார். ஆனால் சந்திரிகாவின் காலத்தில் நடந்த போர்க்குற்றங்கள் ஆதாரங்களுடன் வெளியாகவில்லை. அன்றும் கைபேசி வசதிகள், புகைப்படக்கருவிகள் சாதாரணமானவையாகக் கிடைத்திருந்தால் அவையெல்லாம் வெளிவந்திருக்கும். மகிந்த ராஜபக்சவை வைத்துக்கொண்டு தான் இழைத்த போர்க்குற்றங்களிலிருந்து சந்திரிகா பண்டாரநாயக்கா தப்பிக்கொள்ளப் பார்க்கிறார். சந்திரிக்கா தான் இழைத்த கொடூரப் போர்க்குற்றங்களின் மூலம் ராஜபக்சவுக்கு முன்னோடியாக இருந்திருக்கிறார் என்பதே உண்மை. இப்பொழுது மன்னார் புதைகுழிகள் சந்திரக்காவினதா? ராஜபக்சவினதா? என்பதே எல்லோரிடமும் எழுகின்ற கேள்வி?

இப்போது மன்னார் திருக்கேதீச்சரத்தில் மீட்க மீட்க எலும்புக்கூடுங்கள் கிளம்பிக்கொண்டே இருக்கின்றன. இங்கு மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளுடன் பெண்களின் ஆபரணங்களும் மீட்கப்பட்டுள்ளன. அதனால் பெண்களும் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அத்தோடு குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன. ஆறுவயது மதிக்க தக்க சிறுவன் ஒருவனின் எலும்புக்கூடும் பற்களும் இந்தப் புதைகுழியில் மீட்க்கப்பட்டுள்ளன. ஓன்று இரண்டு என்று இப்பொழுது நாற்பாறை (இக்கட்டுரை எழுதும்வரையில்) தாண்டி விட்டன. கிட்டத்தட்ட நாற்பாறு பேருக்கும் அதிமானவர்களின் மண்டை ஓடுகளும் வேறு பல பாகங்களும் மீட்க்கப்பட்டுள்ளன. இது ஒரு மாபெரும் சவக்குழி எனச் சொல்லப்படுகிறது. எலும்புக்கூடுகள் புதையுண்டிருக்கும் இடத்தின் எல்லை எதுவென்று தெரியாமல் உள்ளது.

ஈழத்தின் இறுதிப்போரில் கொல்லப்பட்ட ஈழமக்களை இலங்கைப் படையினர் புதைத்தபோது சில நாட்களிலேயே எலும்புகள் உக்கக் கூடிய பதார்த்தம் ஒன்றை சீனாவிலிருந்து இறக்குமதி செய்து பாவித்தனர். போர் முடிந்தும் சில வருடங்கள் முள்ளிவாய்க்காலுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆக் காலத்தில் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான மக்களின் எலும்புக்கூடுகளை இலங்கைப் படையினர் தேடித் தேடி அழித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் ஈழ யுத்தம் என்பது சாட்சியங்களற்ற போர் மட்டுமல்ல அது தடயங்களற்ற போரும்கூட. முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் எஞ்சிpயிருந்த எல்லாத் தடயங்களையும் இலங்கைப் படையினர் தேடித்தேடி அழைக்கின்றனர். கொலை செய்யும்போது அதை தடையங்களற்ற வகையில் செய்ய வேண்டும் என்பது இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொலை ஒழுக்கம்.

போர் தொடங்கிய நாட்கள் முதல் மக்கள் நாளும் பொழுதும் கொல்லப்பட்டுக் கொண்டே இருந்தார்கள். இடம்பெயர்ந்து கொண்டே கொல்லப்பட்டவர்களையும் வழிநெடுகவும் மக்கள் புதைத்துக் கொண்டு வந்தார்கள். அவ்வாறு புதைக்கப்பட்ட இடங்களையெல்லாம் இலங்கை அரச படைகள் கைப்பற்றியபோது அவைகளை கிளறி அகற்றியுள்ளார்கள். மண்ணில் என்னவெல்லாம் புதைக்கப்பட்டிருக்கின்ற என்பதை சிங்கள இராணுவம் பல இடங்களில் தோண்டிப் பார்த்திருக்கிறது. பலர் தமது பொருட்களை புதைத்திருக்கிறார்கள். அவைகள் கிண்டி வெளியே எறியப்பட்டுள்ளன. பலர் தமது புகைப்படங்கள் அல்பங்களை புதைத்துள்ளார்கள். அவைகள் கிளறியெடுத்து அழிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த எலும்புக் கூடுகள் யாருடையவை என்று ஈழ மக்கள் பதறத் தொடங்கி விட்டார்கள். சிங்கள அரச படைகளால் கடத்தப்பட்வர்களா? காணாமல் போனவர்களா? சரணடைந்தவர்களா? என்று பலவிதமான கேள்விகளுடன் மக்கள் பதறிக் கொண்டிருக்கிறார்கள். எடுக்கப்பட்டது நாற்பத்தாறு எழும்புக்கூடுகள் என்றபோதும் அந்தச் செய்தி பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் நெஞ்சில் இடியாய் விழுந்திருக்கிறது. ஏதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரலில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போர்க்குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றை கொண்டுவர சில நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இறுதிப்போரில் கொன்ற ஒன்றரை லட்சம் மக்களின் எலும்புக்கூடுகளையும் அழித்த இலங்கை அரசுக்கு தற்பொழுது மீட்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் பெரும் சவாலை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்த எலும்புக்கூடுகள் யாருடையவை? அவர்கள் யாரால் கொல்லப்பட்டார்கள்? என்பவை தொடர்பான விடயங்களை இப்போது சொல்ல முடியாது என்று இலங்கை குறிப்பிடுகிறது. கால அவகாசம் தேவை என்பது இலங்கை அரசின் வழமையான வாய்ச்சொல் ஆகிவிட்டது. முள்ளிவாய்க்கால் படுகொலையை விசாரிக்கவும் தமிழ் மக்களை மீள்குடியேற்றவும் கால அவசகாம் தேவை என்று சொல்வதைப் போலவே இப்பொழுது மன்னார் புதைகுழி விவகாரத்தை கண்டு பிடிக்கவும் தங்களுக்கு கால அவகாசம் தேவை என்று சொல்லுகிறது. இது ஜெனீவா மாநாட்டிலிருந்து தப்பித்துக்கொள்ளும் இலங்கை அரசின் தந்திரமே.

இவை ஈழத் தமிழர்களின் எலும்புக்கூடுகள் என்றே சொல்லப்படுகிறது. இலங்கை அரச படைகளிடம் சரணடைந்தவர்களின் எலும்புக்கூடுகளாக இருக்கலாம் என்று மன்னார் ஆயர் யோசேப்பு குறிப்பிட்டிருக்கிறார். இவை இலங்கை அரச படைகளால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எலும்புக்கூடுகள் என்று ஜே.வி.பி குறிப்பிட்டிருக்கிறது. போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் ஐந்தாயிரம் பேர் இலங்கை அரச படைகளிடம் சரணடைந்தார்கள். சரணடைந்தவர்கள் எங்கே என்று இலங்கை அரசை கேட்டால் காணாமல் போனவர்கள் காணாமல் போனவர்களே என்று சொல்லுகிறது. அவர்களின் எலும்புக்கூடுகளாக இருக்கலாம் என்ற சந்தேகமும் காணப்படுகிறது.

இந்த விடயத்தில் உள்ளக விசாரணை வேண்டாம் என்றும் சர்வதேச விசாரணையே தேவை என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருக்கிறது. இலங்கை அரசு கடந்த காலங்களில் செய்த கொலைகளும் விசாரணைகளும் சர்வதேச விசாரணை தேவை என்ற நிலைப்பாட்டை உருவாக்கிவிட்டது. இந்தக் கொலைகளை செய்வனிடமே விசாரணை நடடத்தச் சொல்லி எப்படிக் கேட்பது? சர்வதேச விசாரணை நடத்தினாலே நடந்த கொடுமைக்கு நீதி கிடைக்கும் என்று மன்னார் மாவட்ட ஆயர் சொல்லியிருப்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் நிலைப்பாடாகும்.

எலும்புக்கூடுகள் மீட்க்கப்பட்ட பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருந்த இடம் என்று காட்ட இலங்கை அரசு முயற்கிறது. இந்தப் பகுதி இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே பல வருடங்களாக இருந்துள்ளது. எல்லாவற்றையும் விடுதலைப் புலிகளின் தலைமேல் போடுவதிலேயே சிங்கள அரசு குறியாக இருக்கிறது. காணாமால் போனவர்களையும் புலிகள் கடத்தியதாகவே சிங்கள அரசு சொல்லுகிறது. சனல் 4 காட்டிய ஆவணப்படங்களில் தமிழ் இளைஞர்களை நிர்வாணமாக சுடுவதும் புலிகளே என்று சிங்கள அரசு சொல்லியிருக்கிறது. இலங்கை அரசை நோக்கியே இந்த எலும்புக்கூடுகள் எழும்புகின்றன. வாழ்வுக்காக போரடிய இனத்தை கொன்று புதைத்து கொண்டாடி மகிழுந்து வரும் மகிந்த அரசை நோக்கியே இந்த எலும்புக்கூடுகள் எழுகின்றன. ராஜபக்சேவின் இன அழிப்புப் போரின் சாட்சிகளே இவை. ஏந்தத் தடயங்களுமற்ற எந்த சாட்சிகளுமற்ற போரில் சாட்சிகளாக வரும் இந்த எலும்புக்கூடுகள் எழுந்து வருகின்றன.

புதைகுழி விவகாரத்தை இலங்கை புலனாய்வுப்படை மேற்கொள்ளுகிறது. இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளை திட்டமிட்டு நடத்தியவர்கள் அவர்களே. இப்பொழுது இந்த சவக்குழி விவாகாரத்தை சந்திரிகா பண்டாரநாயக்காமீது போடுவதற்கு ராஜபக்ச அரசு முயல்வதாகச் சொல்லப்படுகிறது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்சேவுக்க போட்டியாக சந்திரிகாவை இறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே இந்தப் புதை குழி விவகாரத்தை சந்திரிகாமீது போட்டு அதன்மூலமும் ஒரு அரசியல் ஆதாயம் தேடுவதே ராஜபக்சவின் நோக்கம். தவிரவும் இதை யார் செய்தார்கள் என்பதை இலங்கை அரசு கண்டு பிடிக்கும் என்று நாம் யாரும் எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் யார் நாட்டை ஆண்டாலும் அவர்களின் சொற்களுக்கு இணங்க இந்தக் கொலைகளை செய்தவர்கள் சிங்களப் படைகளே.

மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தமிழர்களுடையவை என்றும் இந்தப்படுகொலை எந்தக் காலத்தில் நடந்தாலும் சிங்களப்படைகளால் சிங்கள ஜனாதிபதிகளின் கட்டளைக்கு இணங்க செய்யப்பட்டவை என்பது மட்டும் வெளிப்படையானது. சந்திரிக்கா பண்டார நாயக்கா செய்திருக்கலாம். அல்லது மகிந்த ராஜபக்சே செய்திருக்கலாம். யார் இந்தப் படுகொலைப் புதைகுழியைச் செய்தாலும் செய்யப்பட்டதன் நோக்கம் ஒன்றுதான். அது ஈழத் தமிழ் இனத்தை ஒடுக்கும், உரிமையை மறுக்கும் நோக்கோடு செய்யப்பட்டது. யார் இந்த இனக்கொலையை செய்திருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நீதி ஒன்றுதான். இப் படுகொலைகளிலிருந்து ஒடுக்குமுறையிலிருந்து அழிப்பிலிருந்து விடுபட தனி ஈழம் ஒன்றே நீதியும் தீர்வுமாக இருக்கும்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/103866/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.