Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் உக்ரெய்ன் நெருக்கடியிலிருந்து கற்றுக் கொள்ளவேண்டியவை - நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் உக்ரெய்ன் நெருக்கடியிலிருந்து கற்றுக் கொள்ளவேண்டியவை - நிலாந்தன்:-

09 மார்ச் 2014

learn_CI.jpg

2008ஆம் ஆண்டு நிகழ்ந்த ஓர் உரையாடல் இது. அப்பொழுது கிளிநொச்சி நகரம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ்தானிருந்தது. அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளருமான ஒரு நண்பரோடு உரையாடிக் கொண்டிருந்தேன். அந்நாட்களில் அனைத்துலக அரசியலில் பேசுபொருளாக மாறியிருந்த ரஷ்ய-ஜோர்ஜிய நெருக்கடி பற்றிய உரையாடல் அது. ரஷ்யாவுக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றி ரஷ்யா ஜோர்ஜியா மீது பலப்பிரயோகத்தை மேற்கொண்டிருப்பது பற்றி உரையாடினோம். உரையாடலின் போக்கில் ஒரு கட்டத்தில் நான் சொன்னேன் ''ஜோர்ஜிய அரசாங்கம் தூரத்தில் இருக்கும் அமெரிக்கப் பேரரசை நம்பி பக்கத்தில் இருக்கும் பிராந்தியப் பேரரரசான ரஷ்யாவைப் பகைத்துக்கொண்டுவிட்டது. ஆனால், இது விசயத்தில் உடனடியானதும், இறுதியுமாகிய முடிவை எடுக்கப்போவது ரஷ்யாதான்' என்று.

நண்பரும் அதை ஏற்றுக்கொண்டார். நான் மேலும் சொன்னேன், ''ஜோர்ஜிய நெருக்கடி இலங்கைக்கும் பொருந்தும். குறிப்பாக, ஈழத் தமிழர்களிற்கும் பொருந்தும். ஏனெனில், ஈழத்தமிழர்கள் இப்பொழுது கூடுதலான பட்சம் மேற்கு நாடுகளை நெருங்கிச் செல்வதுபோலத் தோன்றுகிறது. ஆனால், இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வு என்று வரும்போது தூரத்து மேற்கு நாடுகளை விடவும் பக்கத்துப் பிராந்தியப் பேரரசே இறுதியானதும், உடனடியானதுமாகிய முடிவை எடுக்கும்' என்று.

அதற்கு அந்த நண்பர் கேட்டார், ''உண்மைதான். ஆனால், இந்தியா விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழிக்கவோ அல்லது தோற்கடிக்கவோ முற்படும் ஓர் பின்னணியில் எப்படி இந்தியாவை ஈழத்தமிழர்கள் நம்ப முடியும்' என்று.

நான் அவருக்குச் சொன்னேன், ''ஈழத் தமிழர்கள் யாரையும் நம்பத் தேவையில்லை. யாரையும் நட்பாக்கவும் தேவையில்லை. யாரையும் பகைக்கவும் தேவையில்லை. எல்லாரையும் கையாண்டால் சரி' என்று. ஆனால், நண்பர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. தங்களைத் தோற்கடிக்க முற்படும் ஒரு தரப்பைத் தமிழர்கள் எப்படிக் கையாள முடியும்? என்று திரும்பக் கேட்டார். நான் அதற்குச் சொன்னேன், ''அரசியலில் நட்புச் சக்தி, பகைச் சக்தி என்று எதுவும் கிடையாது. எல்லாமே கையாளப்பட வேண்டிய தரப்புகள் தான்' என்று.

இது நடந்து ஏறக்குறைய ஆறு ஆண்டுகளாகிவிட்டது. இந்த ஆறு ஆண்டு காலத்துள் நிறையத் திருப்பங்கள் ஏற்பட்டுவிட்டன. ஆனால், என்னதான் பெரிய திருப்பங்கள் ஏற்பட்டிருந்தாலும் சக்திமிக்க பிராந்தியப் பேரரசு ஒன்றுக்கு அருகில் இருக்கும் சிறிய நாடுகள் அல்லது சிறிய இனங்களின் தலைவிதியெனப்படுவது அப்படியே மாறாமல்தான் இருக்கிறது. உக்ரைனில் ரஷ்யா தனது படைகளை இறங்கியது அதைத் தான் மறுபடியும் நிரூபித்திருக்கிறது.

ரஷ்யா கிரிமியாவுக்குள் படைகளை நகர்த்தியது சரியா பிழையா என்று விவாதிப்பது இக்கட்டுரையின் நோக்கமல்ல. ஆனாலும் ரஷ்யாவின் பிராந்திய யதார்த்ததத்தைச் சற்று விளங்கிக் கொள்வது இக்கட்டுரையின் மையப் பொருளை மேலும் ஆழமாக விளங்கிக்கொள்ள உதவும் என்பதால் அதைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

கிரிமியாவுக்குள் ரஷ்யா தனது படைகளை நகர்த்தியதற்கு ரஷ்யர்கள் ஆயிரம் காரணங்களைக் கூறலாம். ஆனால், வெளிப்படையாகக் கூறப்படாத சில காரணங்கள் உண்டு. அவற்றுள் முதன்மையானது பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. ரஷ்யாவின் கருங்கடல் கடற்படைப்பிரிவு (black see flect) கிரிமியாவிற்தான் நிலை கொண்டுள்ளது. இதற்கான குத்தகை 2017இல் முடிவடைய இருந்தது. 2009இல் முன்னாள் உக்ரேய்ன் ஜனாதிபதியான yushchenko - யுஷெங்கோ - இந்தக் குத்தகையை நீடிக்கப்போவதில்லை என்று மிரட்டியிருந்தார். ஆனால் தொடர்ந்து வந்த ஆண்டில் பதவியேற்ற yanu kovich – யானுகோவிச் - அந்தக் குத்தகையை 2042 வரை நீடித்திருந்தார். இந்தக் கால நீடிப்பு உக்ரெய்னில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. உக்ரெய்ன் எந்தவேளையும் இந்தக் குத்தகையை ஒரு தலைப்பட்சமாக முறிக்கக் கூடும் என்ற அச்சம் ரஷ்யாவுக்கு எப்பொழுதும் உண்டு. யானுகோவிச் பதவியிலிருந்து அகற்றப்பட்ட பின் இந்தக் குத்தகை உடன்படிக்கை நிச்சயமற்றதாகிவிட்டது. எனவே, தனது கடருங்கடற் கடற்படை அணி நிலைகொள்வதற்குரிய பிரதேசத்தை எப்பொழுதும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவே ரஷ்யா விரும்புகின்றது. அவ்விதம் கிரிமியாவைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதன் மூலம்தான் ரஷ்யா தன்னை வெல்லக் கடினமான ஒரு பிராந்தியப் பேரரசு ஆகக் கட்டியெழுப்பவும் முடியும்.

அப்படி ரஷ்யா தன்னை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய ஒரு கட்டாயத் தேவை அதற்கு உண்டு என்பதை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஏனெனில், குறிப்பாக, கிழக்கு ஐரோப்பாவுக்கும், ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளுக்குமான இயற்கை எரிவாயுவை ரஷ்யா தான் வழங்கி வருகிறது. இயற்கை எரிவாயு பொறுத்து ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள பல நாடுகள் ரஷ்யாவிற்தான் தங்கியிருக்கின்றன. இந்த இயற்கை எரிவாயுவிற்கான விநியோகக் குளாய்கள் உக்ரெய்னிற்கூடாக செல்கின்றன. எனவே, தனது இயற்கை எரிவாயு வர்த்தகத்தைப் பாதுகாப்பதற்கும் உக்ரெய்னின் மீதான பிடியை இறுக்கி வைத்திருக்க வேண்டியதொரு தேவை ரஷ்யாவுக்கு உண்டு.

எது தனது பிராந்தியத்தில் தன்னை கவர்ச்சியாக வைத்திருக்கிறதோ அதை அதாவது இயற்கை எரிவாயுவை பாதுகாப்பதற்கு தனது பிராந்திப் பேரரசு ஸ்தானத்தை மேலும் பலப்படுத்த வேண்டும் என்றும் ரஷ்யா சிந்திக்கிறது. கடந்த நூற்றாண்டில் உலகப் பேரரசுகளில் ஒன்றாயிருந்த ரஷ்யா கெடுபிடிப் போரின் வீழ்ச்சியோடு அந்த ஸ்தானத்தை இழந்துவிட்டது. ஆனால், இயற்கை எரிவாயுவும் உட்பட தனது வளங்களையும் பிராந்தியத்தில் தனக்குள்ள முக்கியத்துவத்தையும் பாதுகாக்கும் விதத்தில் குறைந்தபட்சம் ஒரு சக்திமிக்க பிராந்தியப் பேரரசு என்ற ஸ்தானத்தையாவது கட்டிக்காக்க வேண்டும் என்றும் ரஷ்யா சிந்திக்கின்றது.

கெடுபிடிப் போரின் முடிவில் காணப்பட்ட நோயாளியான ரஷ்ய இராணுவம் இப்பொழுது இல்லை என்றும் கடந்த தசாப்தங்களில் ரஷ்யா தனது படை பலத்தை ஓரளவுக்குச் சீரமைத்துக் கொண்டுவிட்டது என்பதையும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ரஷ்யா அதன் இழந்த கீர்த்தியை அதாவது உலகப் பேரரசு என்ற ஸ்தானத்தை அண்மை தசாப்தங்களில் பெறுவது கடினம். ஆனால், அது தன்னை ஒரு பிராந்தியப் பேரரசாகக் கட்டியெழுப்புவதில் மெல்ல மெல்ல முன்னேறி வருவதாகவே தோன்றுகிறது. திறந்த சந்தைப் பொருளாதாரத்தை வெற்றிகரமாகக் கையாண்டு சீனா எழுச்சியுற்று வருவது ரஷ்யாவுக்கு ஒரு முன்னுதாரணமாகக் காணப்படுகிறது.

எனவே, பிராந்தியத்தில் தனது ஸ்தானத்தை மேலும் பலமானதாகக் கட்டியெழுப்ப முற்பட்டு வரும் ரஷ்யா நீண்ட எதிர்கால நோக்கில் தனது அயல் நாடுகளை முற்தடுப்பு அரண்களாகக் -buffer zones - கட்டியெழுப்ப முற்பட்டு வருவதை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். உக்ரெய்னில் ரஷ்யா மேற்கொண்டுள்ள படை நடவடிக்கையை 'நம்பமுடியாத ஒரு ஆக்கிரமிப்பு' என்று கூறி அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜோன் கெர்ரி கண்டித்துள்ளார். 'ஒரு நாட்டின் மீது படையெடுப்பது என்பது 19ஆம் நூற்றாண்டில் வேண்டுமானால் சாதாரண விஷயமாக இருந்திருக்கலாம், ஆனால் 21 நூற்றாண்டில் அப்படியொன்றை ஏற்றுக் கொள்ளவே முடியாது' என்றும் அவர் கூறியுள்ளார்.ஆனால் ஒரு பிராந்தியப் பேரரசானது தனது பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் சம்பந்தப்பட்ட நலன்களைப் பாதுகாப்பதற்காக தனது சிறிய அயலவர்களை எப்படிக் கையாள முற்படும் என்பதற்குரிய 21ஆம் நூற்றாண்டின் ஆகப் பிந்திய ஓர் உதாரணமே உக்ரெய்ன் விவகாரம் ஆகும்.

இது விசயத்தில் உக்ரெய்னிலும், ஜோர்ஜியாவிலும் தூரத்துப் பேரரசாகிய அமெரிக்காவை விடவும் பக்கத்துப் பேரரசு ஆகிய ரஷ்யாவே உடனடியானதும், இறுதியானதுமாகிய முடிவுகளை எடுக்கின்றது.

சிறிய இலங்கைத் தீவுக்கும் இது பொருந்தும். சிங்கள மக்களுக்கும் பொருந்தும். தமிழ் மக்களுக்கும் பொருந்தும். அதாவது, இந்தியாவை மீறி இந்தப் பிராந்தியத்திற்குள் யார் நுழைந்தாலும் அதற்கு அடிப்படையிலான வரையறைகள் உண்டு. தயான் ஜெயதிலக கடந்த ஆண்டு டெய்லி மிரர் ஓண்லைன் பத்திரிகைக்கு வழங்கிய ஒரு செவ்வியில் இதை அரசாங்கத்திற்குச் சுட்டிக்காட்டியிருந்தார். சில பத்து கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் இந்தியாவை மீறி சுமாராக நானூறு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள சீனாவால் இலங்கை அரசாங்கத்திற்கு உதவுவது கடினம் என்ற தொனிப்பட அவர் அந்தப் பேட்டியில் சுட்டிக்காட்டியிருந்தார்.

தமிழர்களுக்கும் இது பொருந்தும். ஜெனிவாவை நோக்கி நாட்டின் முழுக் கவனமும் குவித்திருக்கும் இந்;நாட்களில் அதன் மிகச் சரியான பொருளிற் கூறின், புதுடில்லிதான் தமிழர்களிற்கு ஜெனிவா. புதுடில்லி அசையவில்லை என்றால் ஜெனிவாவில் எதுவும் அசையாது. எனவே, புதுடில்லியை எப்படி அசைப்பது என்பதே தமிழ் ராஜிய முயற்சிகளின் இறுதி இலக்காக இருக்க வேண்டும்.

ஆனால், அனைத்துலக தமிழ்லொபி எனப்படுவது அவ்வாறுதான் உள்ளதா? இல்லை. அது பெரிதும் மேற்கை நோக்கியே திரும்பியிருக்கிறது. அல்லது மேற்கில் எடுக்கப்படும் முடிவுகளிற்கு ஆதரவு கொடுக்குமாறு புதுடில்லியை நோக்கி லொபி செய்வதாகவே உள்ளது. அதாவது, தமிழ் லொபியானது புறவளமாக இருக்கிறது. இது இன்று நேற்று ஏற்பட்ட ஒரு வளர்ச்சி அல்ல. இலங்கை - இந்திய உடன்படிக்கைக்கும் முன்பிருந்தே இது தொடங்கியது. விடுதலைப்புலிகள் இயக்கம் ஏனைய இயக்கங்களைத் தோற்கடித்து ஈழத் தமிழ் அரசியலை புலிகள் மைய அரசியலாக மாற்றியபோது இது தொடங்கியது. ரஜீவ் கொலைக் கேஸோடு ஈழத்தமிழர் அரசியலுக்கும் புதுடில்லிக்கும் இடையில் ஒரு சட்டப் பூட்டு உருவாகியது. அதைத் தொடர்ந்து ஒரு துருவ உலக ஒழுங்கின் எழுச்சி மற்றும் சக்திமிக்க தமிழ் டயஸ்பொறாவின் எழுச்சி ஆகிய இரு பிரதான காரணங்களினாலும் தமிழ் லொபியானது அதிகபட்சம் மேற்கை நோக்கி திரும்பிவிட்டது.

ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின் இலங்கை அரசாங்கம் சீனாவை நோக்கிச் சாயச் சாய மேற்கு நாடுகளும் தமிழ் லொபிக்கு அதன் சக்திக்கு மீறிய முக்கியத்துவம் கொடுத்து அதை ஒரு கருவியாகப் பயன்படுத்தத் தொடங்கின. ஜெனிவாவைச் சுற்றி மாயைகள் கட்டியெழுப்பப்பட இதுவும் ஒரு காரணம்தான்.

இந்த இடத்தில் இயல்பாகவே சில கேள்விகள் எழும். மேற்கை நோக்கி அதிகபட்சம் திரும்பியிருக்கும் தமிழ் லொபியை புதுடில்லியை நோக்கித் தளமாற்றம் செய்வது எப்படி? அல்லது அப்படித் தளமாற்றம் செய்ய முடியுமா? முடியும் என்று தமிழர்கள் நம்புவதற்கு மூன்று முககிய காரணங்கள் உண்டு.

முதலாவது இந்தியாவும் அமெரிக்காவும் இப்பொழுது பூகோளப் பங்காளிகள். எனவே, அமெரிக்காவுக்கு அதிகம் அனுகூலமான டயஸ்பொறாத் தமிழ் லொபி எனப்படுவது அதன் பூகோளப் பங்காளியான இந்தியாவுக்கு இடறலானதாக இருக்கப்போவதில்லை.

இரண்டாவது காரணம், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்குப் பின் இந்தியாவுக்கும் ஈழத் தமிழ் அரசியலுக்கும் இடையில் இருந்த சட்டப் பூட்டுத் திறக்கப்பட்டுவிட்டது. எனவே, புதுடில்லியை நோக்கி லொபி செய்யத் தேவையான வாய்ப்புக்கள் முன்னெப்பொழுதையும் விட அதிகரித்து வருகின்றன.

மூன்றாவது, கடந்த ஆண்டு தமிழகம் கொந்தளித்தபோது அது இந்தியாவின் முடிவுகளில் சலனங்களை ஏற்படுத்தியது. இது தமிழ் லொபியிஸ்டுக்களுக்கு நம்பிக்கையூட்டும் ஒரு சமிக்ஞையாகும்.

எனவே, ஒட்டுமொத்தத்த தமிழ் லொபி எனப்படுவது இரு பெரும் பூகோளப் பங்காளிகளையும் நோக்கி ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்படுவதற்கான ஒரு அகப்புறச் சூழல் கனிந்து வருகிறது. இருபெரும் பூகோளப் பங்காளிகளையும் நோக்கிய ஓர் இரட்டை குழல் துப்பாக்கியைப் போல தமிழ் லொபி வடிவமைக்கப்பட வேண்டியிருக்கிறது. அப்படி வடிவமைக்கப்படும் போதுதான் வெளியாருக்காகக் காத்திருக்கும் அரசியலை வெளியாரைக் கையாளும் ஓர் அரசியலாக நிலை மாற்றம் செய்ய முடியும். தமிழர்கள் தமது கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைக்கவும் முடியும்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/104010/language/ta-IN/article.aspx

நல்லாத்தான் இருக்கு. எதுக்கும் பொறுங்கோ  .நம்ம மோடி ஒரு வேளை வந்திட்டா  ஏதாவது  பேசி பார்க்கலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.