Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மொழி அழியுமா தழைக்குமா - நம் முன்னே உள்ள சவால்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மொழி அழியுமா தழைக்குமா - நம் முன்னே உள்ள சவால்கள். Tuesday, March 18, 2014
 
 
Sivabalan+Paintings+-+Bull+Fighting.jpg

ஒரு மொழி அதன் தாயகத்தில் வாழ வழியற்றுப் போனால் வேறு எங்கும் நிலைத்திருக்க வாய்ப்பே இல்லை எனலாம். குறிப்பாக உலகம் முழுவதும் பேசப்பட்டு வரும் அனைத்து மொழிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட நிலப்பிரதேசம் தாயகப் பகுதியாக இருக்கின்றது. அந்த மொழி தோன்றி, பரிணமித்து வளர்ச்சி பெற்ற இடமாக அது இருக்கின்றது. இது இயற்கையாக ஏற்பட்ட ஒன்றாகவும் இருக்கின்றது. 

 
அந்த குறிப்பிட்ட பகுதியில் இருந்து மக்கள் புலம்பெயரும் போது தமது தாய்மொழியையும் எடுத்துச் செல்கின்றனர். சில சந்தர்பங்களில் தாம் புலம்பெயரும் புதிய தேசத்தின் அரசியல், பொருளாதாரம் முதலிய காரணங்கள் ஏதுவாய் இருக்குமானால், அந்த மொழி புதிய தேசத்தில் தழைத்தோங்கும் வாய்ப்புண்டு. அதே சமயம் மிகுந்த நெருக்கடிகளைச் சந்திக்கும் என்றால் அம் மொழி வழங்கொழிந்து போய்விடும். 

புதிய தேசத்தில் மட்டுமின்றி பாரம்பரியமாக ஒரு மொழி பேசப்பட்டு வரும் தாயக பகுதிகளில் கூட அரசியல், பொருளாதார சமூக வளர்ச்சிகளுக்கு ஏற்ப ஒரு மொழி தக்க வைக்கப்படவும் இயலும், நிர்மூலமாக்கப்படவும் இயலும். அல்லது தனது தனித்துவத்தை இழந்து புதிய மொழியாக மாற்றம் காணவோ, வேறு மொழிகளோடு கரைந்து காணாமல் போகவோ முடியும். 

 
ஆக ஒரு மொழி நிலைத்திருக்க அதனை பேசக் கூடிய மக்கள் மிக முக்கியம். அந்த மக்கள் குழுமி வாழ ஏதுவான தாய்நிலம் மிக மிக அவசியம். அத்தோடு மட்டுமின்றி, அந்த மொழி பேசும் மக்களின் அரசியல் பொருளாதார ஆதிக்கமும், சமூக வளர்ச்சியும் இன்றியமையாதது. அதாவது ஒரு மொழி தொடர்ந்து வாழ வேண்டும் எனில், அந்த மொழி அதன் தாய்நிலத்தின் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்பட வேண்டும்.

நெகிழ்வுத் தன்மை
 
வரலாற்றை வாசிப்போமானால் பல மொழிகள் காலப் போக்கில் சிதைந்தும், உருமாறியும், அழிந்தும் போயுள்ளன. சில மொழிகள் இன்றளவும் நிலைத்து வருகின்றன. பண்டைய பண்பாடுகளை உருவாக்கிய எகிப்து, சுமேரிய, ரோம மொழிகள் அனைத்தும் அந்தந்த தாய்நிலத்தின் அரசியல் நிர்மூலமாக்கப்பட்ட பின் அழிந்து போய்விட்டன. பேரரசின் மொழிகளாக, மக்களின் மொழிகளாக பண்டைய இந்தியாவின் பிராகிருத மொழி இன்று வழக்கில் கிடையாது. அது சிதைந்து மராத்தியம், சிங்களம், இந்தி, மயிதிலி, வங்காளம் என உருமாறி புதிய மொழிகள் பல பிறந்தன. 
 
மிகப் பழமையான வளர்ச்சி வரலாற்றைக் கொண்ட தமிழ் மொழி கூட இடைக்காலத்தில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார தாக்கத்தினால் தமிழகத்தின் மேற்கு கரைப் பக்கம் மலையாளமாக உருமாறி தனித்த மொழியாக மாற்றம் அடைந்தது. ஏனைய பகுதியில் மட்டும் தமிழாக இன்றளவும் நிலைத்து நிற்கின்றது. அது போக தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழர்கள் குடியேறிய போது தமிழ் அந்தந்த நாடுகளில் நிலைப்பெற்றது. ஆனால் தென்னாப்பிரிக்கா, மொரிசியஸ், றியூனியன், பிஜி, கயானா போன்ற நாடுகளில் அரசியல் சமூக பொருளாதார ஆதரவு ஏதுமில்லாது போனதால் தமிழ் மொழி அழிவுற்றது. அங்குள்ள தமிழர்கள் காலப் போக்கில் அந்தந்த தேசத்து மொழிகளை பயின்று கொண்டனர். 
 
கரை கடந்த தமிழ்

இலங்கையில் 13-ம் நூற்றாண்டு முதலே தமிழ் சிற்றரசர்களின் ஆட்சி நிலவியதால் தமிழ் மொழி அழியாமல் பாதுகாக்கப்பட்டது. அது போக அங்கு இன்றளவும் பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாகவும் இருந்து வருவதால், சிங்கள பகுதிகளில் கூட தமிழ் மொழி வாழும் மொழியாக இருந்து வருகின்றது. இதே போன்றே மலேசியா, பர்மா, சிங்கப்பூரிலும் ஆரம்பம் முதலே தமிழ் பள்ளிகள் நிறுவப்பட்டதோடு அரசு துணையோடு தமிழ் மொழி வாழும் மொழியாக நிலை நிறுத்தப்பட்டது. 

 
ஆனால் 1960-களின் பின் பர்மாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் தமிழ் மொழி வளர்ச்சிக்கு தடை ஏற்பட்டதோடு, தமிழ் மொழியில் கல்வி கற்கும் வாய்ப்பும் அருகி போனது. அதனால் இன்று பர்மாவில் வாழும் இரண்டு லட்சம் தமிழர்களில் பலருக்கும் சரியாக தமிழ் பேசவோ, எழுதவோ, வாசிக்கவோ தெரியவில்லை. 
 
சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாகவும், பள்ளிகளில் கற்கை மொழியாகவும் இருந்து வருகின்றது. அரசின் உதவிகள் பல தமிழ் மொழி வளர்ச்சிக்கு வழங்கப்படுகின்றது. இருந்த போதும் அங்குள்ள கணிசமான தமிழ் பெற்றோர்கள் தமிழை தம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க தவறியதன் மூலமாகவும், தமிழை விட ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தமையாலும் தமிழர்களில் 40 % பேருக்கு தமிழ் எழுதவோ, வாசிக்கவோ தெரியவில்லை. அவர்களது வீடுகளில் ஆங்கிலமே பேச்சு மொழியாக இருக்கின்றது. 
 
உலகில் எங்கும் தமிழ் மொழி வாழ்ந்தாலும் அழிந்தாலும் தாய் தமிழகத்தில் தமிழ் மொழி போற்றி பாதுக்காக்கப்படவில்லை என்றால் காலப் போக்கில் உலக அரங்கில் இருந்து தமிழ் மொழி இறந்த மொழியாக மாறும் பேரவலம் ஏற்படலாம். தமிழகத்தின் பண்டையா காலம் தொட்டே அரசியல் சமூக-பொருளாதார மொழியாகவும் தமிழ் இருந்து வந்திருக்கின்றது. இந்தியாவில் பிராகிருதம், சமற்கிருதம் போன்ற மொழிகள் ஆளுமை செலுத்திய காலங்களில் கூட தமிழகத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வந்தது. இலக்கண, இலக்கிய படைப்புக்கள் தொட்டு கல்வெட்டுக்கள், கலைகள், சமயங்கள், வர்த்தகங்கள் என அனைத்தும் தமிழிலேயே இருந்து வந்தன.
 
வந்தோரும் வளர்த்த மொழி

கிமு மூன்றாம் நூற்றாண்டு தொட்டு வடக்கில் இருந்து வந்த சமண, பௌத்த, இந்து சனாதன மதங்கள் கூட முறையே தத்தமது மதங்களை தமிழிலேயே பரப்பினார்கள். சமணர்கள் ஒரு படி மேல் போய் பலவிதமான இலக்கியங்களையும், இலக்கணங்களையும், காப்பியங்களையும் தமிழிலேயே உருவாக்கியதோடு. ஒவ்வொரு ஊர்களிலும் பள்ளிகளை நிறுவி சமண மதத்தோடு தமிழ் மொழியையும் கற்றுக் கொடுத்தார்கள். தமிழ் இன்றளவும் வாழும் மொழியாக இருப்பதற்கு அவர்களின் பங்கு அதிகம் எனலாம். 

 
கிபி ஏழாம் நூற்றாண்டளவில் எழுந்த பார்ப்பனிய மதம் சார்ந்த பக்தி எழுச்சி காலங்களில் கூட தமிழ் மொழிகளிலேயே இந்து மதத்தை பரப்பியும் உள்ளார்கள். பல சமற்கிருத நூல்கள் தமிழகத்தில் எழுதப்பட்டு ஆளுமை செலுத்திய போதும் தமிழ் கல்வி தடை பெறவில்லை, தமிழ் மொழி வாழும் மொழியாகவே இருந்து வந்துள்ளது. 
 
ஏழாம் நூற்றாண்டளவில் வேறு மொழியை தாய் மொழியாக கொண்டு வடக்கில் இருந்து வந்த பல்லவர்கள் கூட அவர்களுடைய சமற்கிருத மொழியை வளர்த்த அதே சமயம் தமிழ் மொழிக்கான இடத்தை அபகரிக்கவில்லை. இந்த நிலையே பிற்கால சோழர்கள், விஜயநகர பேரரசு, நாயக்க மன்னர்கள் என பிற மொழி ஆதிக்கம் செலுத்தியோர் அரசியலை கைக்குள் வைத்திருந்தும் மக்களின் மொழியான தமிழை அழிக்கவில்லை. மாறாக தமிழ் வளர்ச்சி கண்டே வந்தன.

ஐரோப்பிய வருகையின் போதும், கிறித்தவ, இஸ்லாமிய மதமாற்றத்தின் போதும் கூட தமிழ் மொழி வளர்ச்சி கண்டது. இஸ்லாமிய சமயத்தை தழுவிய தமிழ் குடிகளான முக்குவர், மீனவர், மரக்கலத்தார்கள் கூட தமது தாய்மொழியை விட்டுக் கொடுக்கவில்லை. இதே போல பல ஐரோப்பிய பாதிரிமார்கள் தமிழகம் வந்து தமிழ் கற்று மதமாற்றப் பணிகளில் ஈடுபட்டனர். சிலர் தமிழ் மொழியின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியும் உள்ளனர். குறிப்பாக வீரமாமுனிவர், ஜியு.போப், கால்டுவெல் என தமிழ் மொழியின் எழுத்துக்களை சீரமைத்தும், இலக்கியங்களை மொழி பெயர்த்தும், அச்சில் ஏற்றியும் அரும்பணியாற்றியுள்ளனர். 

 
தமிழகத்தில் குடியேறிய யூதர்கள் கூட ஆரம்பக் காலங்களில் தமிழ் மொழியைக் கற்று வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அஞ்சுவண்ணத்தார் என்றும் அழைக்கப்பட்டனர். 
 
மேற்குத் தமிழகத்தில் சிதைந்த தமிழ்

கேரளக் கரையில் முதல் வந்திறங்கிய கத்தோலிக்க பாதிரியார்கள் மக்களின் மொழியான தமிழின் ஒரு வழக்கான மலபார் தமிழ் மொழியிலேயே புத்தகங்களை வெளியிட்டனர். 16-ம் நூற்றாண்டளவில் கொல்லம் நகருக்கு அருகே இருக்கும் அம்பலக்காடு என்ற ஊரில் வைத்து தான் முதன்முறையாக தமிழ் மொழியில் தம்பிரான் வணக்கம் என்ற நூலை அச்சிட்டார்கள். ஆக, அந்தக் காலக் கட்டத்தில் கேரளத்தில் தமிழ் மொழியே வழக்கில் இருந்துள்ளது என்பது தெரிய வருகின்றது.

13-ம் நூற்றாண்டில் மாலிக் கபூரின் படை எடுப்பினால் கொங்கணக் கரையில் இஸ்லாமிய ஆட்சியாளர்களின் கை ஓங்கிய நிலையில், அங்கிருந்து தப்பித்து வந்த பிரமாணர்கள் துளுநாட்டுக்குள் வந்து குடியேறினார்கள். துளுநாட்டுக்குள் பிரவேசித்த பிரமாணர்கள் துளு மொழியையும், துளு எழுத்துக்களையும் கற்றுக் கொண்டனர்.

அங்கிருந்து மெல்ல நகர்ந்து நகர்ந்து அவர்கள் சாமூத்திரி மன்னர்கள் ஆட்சி செய்த வட கேரள சமஸ்தானங்களுக்கும் வந்து குடியேறினார்கள். அரசியல் செல்வாக்கு பெற்றிருந்த தமிழ் பேசும் நாயர் சமூகத்தோடு சம்பந்தம் முறையை கைக்கொண்ட இவர்கள், மெல்ல மெல்ல தமிழும் சமற்கிருதமும் கலந்த மணிப்பிரவாள நடையை பிரபலப்படுத்தினார்கள். இதனால் நம்பூதிரிகளின் அரசியல் செல்வாக்கால் தமிழ் மொழி வலிமை இழந்து சமற்கிருத மயமாக்கப்படத் தொடங்கியது. அதன் விளைவாகமலையாளக் கரை வாழ் தமிழர்கள் தமது தாய்மொழியை இழக்கத் தொடங்கினார்கள்.

அதுவும் போக திப்பு சுல்தானின் படை எடுப்பினால் மணிப்பிரவாளத்தை பயன்படுத்திய பல நம்பூதிரிகளும், நாயர்களும் தென் கேரளத்துக்குள் தஞ்சம் அடைந்தனர். இவர்களின் வருகையோடு தமிழ் மொழி சீரும் சிறப்புமாக இருந்த தென் கேரளமும் மொழி மாற்றமடையத் தொடங்கின.

 
அதற்கு வலு சேர்க்கும் விதமாக ஜெர்மானிய பாதிரிமார்கள் பலரும் மலையாண்மை தமிழ் என்ற மக்களின் மொழியை கைவிட்டு, தமது பிரசங்கங்களிலும், பள்ளிகளிலும், அச்சிலும் துளு எழுத்தை மையப்படுத்தி நம்பூதிரிமார்கள் பேசிய மணிபிரவாளத்தை மலையாளம் என்ற பெயரில் பரப்பினார்கள். இந்தக் கொடுஞ்செயலில் முன்னின்று உழைத்தவர்கள் பெஞ்சமின் பெய்லி, ஹெர்மன் குண்டர்ட் போன்ற புரடஸ்டண்டு மதப் பாதிரியார்களே.

18-ம் நூற்றாண்டு வரை பெரும்பாலான கேரள முஸ்லிம்கள், பழங்குடிகள், தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் தமிழின் வழக்கான மலையாளத் தமிழிலேயே பேசி வந்துள்ளனர். ஆனால் அதன் பின் பள்ளிகள், பத்திரிக்கைகள் என அனைத்திலும் மலையாளம் என்ற பெயரில் துளு எழுத்தைக் கொண்ட மணிப்பிரவாளம் நடைமுறைப்படுத்தப் பட்ட பின் தமிழ் முற்றாக மறைந்தே போனது. 

 
 
தமிழின் மறுமலர்ச்சியும் பெரும் வீழ்ச்சியும்

ஏன் இவற்றை எல்லாம் சொல்கின்றேன் எனில், ஒரு மொழி நிலைத்திருக்க மக்களின் பயன்பாடு, நிலப்பரப்பு, அரசியல் அதிகாரம், சமூக பொருளாதாரப் பங்கு என்பவை மிக மிக அவசியம். இவற்றில் ஒன்று குறைந்தாலும் மொழி அழிந்து போய்விடக் கூடும். குறிப்பாக தமிழகத்தில் கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழின் வளர்ச்சி குன்றி வருகின்றது. ஆரம்ப கால திராவிட மற்றும் தமிழ் அரசியல் இயக்கங்கள் தமிழ் மொழியின் மறுமலர்ச்சியில் பெரும் பங்காற்றி வந்தன. இந்தி மொழி திணிக்கப்பட்ட போது இந்தி எதிர்ப்பு போராட்டங்களை நிகழ்த்தியதோடு, தமிழ் மொழி மீதான மக்களின் ஆர்வத்தை தூண்டிவிடவும் செய்தன.ஆயிரம் ஆண்டுகால சமற்கிருத கலப்புக்களை நீக்கி தனித்துவமான தமிழ் சொற்களை அறிமுகப்படுத்தியதோடு, தமிழ் மொழி கல்விக்கும், தமிழ் பயன்பாட்டுக்கும் வழி வகுத்தன. 

 
ஆனால் 1970-களில் ஏற்பட்ட திராவிட இயக்க பிரிவினைக்கு பின் திராவிட அரசியல் கட்சிகள் தத்தமது பொருளாதார நலன்களை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படத் தொடங்கின. இதன் விளைவாக 1980-களில் எண்ணற்ற தனியார் பள்ளிகள் முளைத்தன, இவை யாவும் ஆங்கில மொழிக் கல்வியை முக்கியத்துவம் செய்தன. விடுதலைக்கு முன் ஐரோப்பியர்களால் நடத்தப்பட்ட தனியார் கல்வி நிலையங்களை காப்பி செய்து இவை தொடங்கப்பட்டதால் நடுத்தர மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தன. அது போக புதிய பொருளாதாரத்தில் ஆங்கிலத்தின் பங்கு உயர்த்தப்பட்டது. இதன் விளைவாக வேலை வாய்ப்புக்கு உகந்த மொழியாக ஆங்கிலம் உயர்த்தப்பட்டது. 
 
 
1990-களில் ஏற்பட்ட ஊடக வளர்ச்சிக் காலங்களில் பல புதிய தொலைக்காட்சி சேனல்கள் தமிழ்நாட்டில் உருவாகின. இவற்றில் சன் டிவி போன்ற சேனல்கள் திராவிட கட்சிகளை நடத்துவோராலேயே உருவாக்கப்பட்டன. இந்த ஊடகங்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பங்காற்றாமல் மொழிச் சிதைவுக்கு வழிகோலின. வியாபர மயமாக்கப்பட்ட நிகழ்ச்சிகளை வழங்கிய இந்த தொலைக்காட்சி சேனல்கள் அதிகளவு ஆங்கிலக் கலப்புடைய மொழி நடையை பயன்படுத்த தொடங்கின. அதே காலக் கட்டத்தில் பத்திரிக்கைகள், செய்தி தாள்கள் என்பவையும் தொலைக்காட்சி போன்ற புதிய ஊடகத்தினால் ஏற்பட்ட போட்டி நிலையை சரிகட்ட தாமும் தம் பங்குக்கு ஆங்கிலம் கலந்த, கொச்சைத் தமிழ் நடைகளில் எழுதத் தொடங்கினார்கள். இவ்வாறு தனியார் பள்ளிகள், தொலைக்காட்சி சேனல்கள், பத்திரிக்கைகள், சினிமாக்கள் என்பவை ஒரு தலைமுறையினரை கலப்புத் தமிழ் தலைமுறையினராக உருவாக்கியது. இந்த சக்தி வாய்ந்த ஊடகங்கள் தமிழகத்தின் மூலை முடுக்கு எல்லாம் பரவி பாமரர்களின் நாவில் கூட காலம் காலமாக பேசி வந்த தமிழை மறக்கடித்து கலப்பு மொழியை பரப்பின. 
 
2000-களில் ஏற்பட்ட புதிய பண்பலை வானொலி நிலையங்களின் வருகையும், இணையதள ஊடகங்களின் வருகையும் கலப்புத் தமிழ் முறையை மேலும் துரிதப்படுத்தின. ஆக இன்று அடுத்த தலைமுறையையும் கலப்பு தமிழ் நோக்கி நகர்த்தியது. அதுவும் போக பன்னாட்டு பொருளாதார சூழலும், தொழில்நுட்ப நிறுவனங்களின் வருகையும் ஆங்கிலம் ஒன்றே பொருளாதார வளர்ச்சிக்கான மொழியாக மாற்றியது. இதற்கு துணை போகும் வகையில் தமிழகத்தை ஆட்சி செய்த அரசாங்கங்கள் தொடர்ந்து தமிழ் வழிக் கல்வியை புறக்கணித்ததோடு, அதிகளவிலான தனியார் கல்வி நிறுவனங்கள் வளரவும் துணை நின்றன. இதனால் குறைந்த பொருளாதாரம் கொண்ட மக்களே தரமற்ற தமிழ் வழிக் கல்வியை பயில வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதுவும் ஒருக் கட்டத்தில் தமிழ் மொழிக் கல்வி என்றாலே தரமற்றவை, பொருளாதார லாபம் இல்லாதவை என்ற தோற்றத்தை சமூகத்தில் ஏற்பட வழி வகுத்தது. 
 
தமிழ் வழிக் கல்வி மூடப்பட்டக் கதவு

இந்த நிலையில் தமிழ் மொழி பள்ளிகளையும் மூடிவிட்டு ஆங்கில வழிக்கு மாற்றத் தொடங்கியுள்ளது தமிழக அரசு. தமிழ் வெறும் ஒரு பாடமாக மட்டுமே இன்று பெரும்பாலான பள்ளிகளில் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும் கட்டாய பாடம் இல்லை என்பதால், இன்று தமிழை கற்காமலேயே தமிழகத்தில் பிறந்து வளர்ந்து வாழ முடியும் என்ற துர்பாக்கிய நிலையும் உள்ளது. இன்றும் தமிழ்நாட்டில் தமிழ் (First Language Optional) ஆகத்தான் இருக்கிறது. தமிழுக்குப் பதிலாக, இந்தியையோ, சமற்கிருதத்தையோ, பிரஞ்சையோ எடுத்துப் படித்து தமிழ் வாசமே இல்லாமல் Ph.d வரை படித்துவிட முடியும். இது கிட்டத்தட்ட 15-ம் நூற்றாண்டளவில் கேரளத்தில் ஏற்பட்ட தமிழ் மொழிச் சிதைவுக்கு ஒப்பானதாகவே கருத முடிகின்றது. 

அரசுப் பள்ளிகளிலும் 1-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுடைய பெற்றோர்களில் குறைந்தது 20 பெற்றோர்கள் விரும்பினால் ஆங்கில வழி வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் என்று ஜெயலலிதா அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து சுமார் 3500 ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியில் சுமார் 80,000 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. 2012-13 கல்வி ஆண்டில் 640 பள்ளிகளில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, பல பள்ளிகளில் அனைத்து பெற்றோர்களும் ஆங்கில வழிக் கல்வியையே தேர்வு செய்தனர். அதற்கும் முன்னரே மாகராட்சிப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கி விட்டது.

 
ஏற்கனவே தமிழ் மொழியின் எழுத்துக்களை அழித்துவிட்டு ரோமன் எழுத்துக்களில் எழுதலாம் என தமிழ் எழுத்தாளரே அறிவிக்கும் அளவுக்கு சென்று விட்டன. தமிழ் மொழியை பாதுக்காப்பதன் ஊடாக ஓரளவு அரசியல் செய்து வந்த திமு கழகம் போன்ற கட்சியும் தனது சுயநல அரசியலாலும், ஊழல்வாதத்தாலும் வலிமை இழந்து போய்விட்ட நிலையில் அரசியல் மட்டத்தில் தமிழ் மொழிக்கான இடத்தை நிலைநிறுத்தச் செய்யும் குரலும் ஒடுங்கி வருகின்றது. இந்த நிலை தொடருமானால் வரும் தலைமுறைகளில் தமிழ் வெறும் பேச்சு மொழியாக மட்டுமே இருக்கும் அபாயம் உள்ளது. 

தமிழகம் இன்று பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது தான். சமூக, பொருளாதாரத்தில் பல சிறப்புக்களை நாம் பெற்றுள்ளோம் என்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக இலவசக் கல்வி, மதிய உணவுத்திட்டம், பெண்கள் முன்னேற்றம், இட ஒதுக்கீடுகள், பொருளாதார வளர்ச்சி எனப் பல சாதனைகளை நாம் பெற்றுள்ளோம். ஆங்கிலம் மட்டுமல்ல தாய் மொழிக் கல்வியும் மிக அவசியம் ஆகின்றது. அத்தோடு பொருளாதாரச் சந்தையில் நிலைத்து நிற்கவும், வேலை வாய்ப்புக்கள் போன்றவற்றைப் பெறவும் பல மொழிகளைப் பயில வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது.

இன்றையக் காலக்கட்டத்தில் இணைய தளங்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் உந்து சக்தியாக இருந்து வருகின்றன. அதே போல பல இளைஞர்கள் தமிழ் மொழி மீது ஆர்வமுடையவர்களாகவும், தமிழ் மொழியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல உழைத்துக் கொண்டிருப்பவர்களாவும் உள்ளது சாதகமான ஒரு விடயமாகும். 
 
வரும்காலம் மிச்சம் வைத்துள்ளவைகள்

தமிழ் மொழிச் சிதைவுக்கு காரணமாக இருக்கும் தமிழ் ஊடகங்களை எவ்வாறு கட்டுப்படுத்தி வழிக்கு கொண்டு வருவது என்பது குறித்தும், தமிழ் மொழிக்கு மிகப் பெரிய சவாலாக உருமாறி வரும் ஆங்கில வழி தனியார் மற்றும் அரசு கல்வி நிலையங்களை எவ்வாறு மக்களின் பொருளாதார நலன் பாதிக்கப்படாமல் எதிர்கொள்ள போகின்றோம் என்பது குறித்தும் தனிக் கவனம் எடுத்துக் கொள்வது மிக முக்கியமானது.

ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதற்கு அந்த மொழி வழியாக கல்வி கற்பது மட்டுமே உதவுவதில்லை. முதுநிலைப் பட்டப் படிப்பு வரை கூட ஆங்கில வழியில் படித்திருந்தாலும், எளிய ஆங்கில வாக்கியங்களைக் கூட பேச முடியாதவர்கள் பலர் உள்ளனர். ஆங்கிலத்தில் ஒருவர் சரளமாக உரையாட, எளிய ஆங்கில வாக்கியங்களைப் படித்து புரிந்து கொள்ள தேவைப்படுவது தரமான ஆங்கில மொழிக்கல்வியே தவிர எல்லாப் பாடங்களையும் புரியாத மொழியில் பயின்று வரும் பேருக்கான ஆங்கில வழிக் கல்வி அல்ல.

தமிழை மெல்ல மெல்ல அழிக்கும் சதித் திட்டத்துடன் ஆங்கிலவழிக் கல்வியை அரசுப்பள்ளிகளில் திணித்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயராம் ஜெயலலிதா.

முக்கியமாக தமிழக அரசும், தமிழ் மக்களும் தமிழ் மொழியை பொருளாதார வளர்ச்சிக்கு உகந்த மொழியாக மாற்ற முனைய வேண்டும். அவ்வாறான சூழல் ஏற்பட்டால் மட்டுமே தமிழ் மொழி தழைத்தோங்க முடியும். தமிழ் மொழியின் முக்கியத்துவத்தையும் அதனை தமிழகத்தின் அரசியல் பொருளாதார சாதக மொழியாக மாற்றவும் மிகப் பெரிய சவாலை எதிர் நோக்கியுள்ளோம். உலகின் தாய் மொழி கல்வியை பயின்று பொருளாதாரத்தில் வலிமை கொண்ட தேசங்களான பிரான்ஸ், ஜெர்மன், ஜப்பான், இங்கிலாந்து, நோர்வே என பல நாடுகளிடம் இருந்து நாம் பயில வேண்டிய விடயங்கள் நிறையவே உள்ளன. வெறும் தமிழ் பழமையான மொழி, செம்மொழி என வாய் கிழிய பிரச்சாரம் செய்வதை விட தமிழை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பது எவ்வாறு  என்பதையும், தமிழக அரசியலில் தமிழுக்கான உரிமைக் குரலை ஒலிக்கச் செய்வது எவ்வாறு  என்பதையும், தமிழை பொருளாதார லாபமுடைய மொழியாக மாற்றுவது எவ்வாறு என்பதையும் குறித்து நாம் சிந்தித்து ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்.

ஆங்கிலவழியில் படித்தால் அறிவாளியாகலாம்; எங்கு போனாலும் வேலை கிடைக்கும் என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் இயங்கும் அரசு நிறுவனங்கள், பற்பல தொழில்கள் செய்யவும், வர்த்தகங்களில் ஈடுபடவும் தமிழே மிகப் பிரதானமானது. இவற்றில் ஆங்கிலம் அவசியம் கூட கிடையாது. வெறும் 6 சதவீதமே உள்ள தொழில்நுட்ப பணிகளுக்காக அனைவரும் ஆங்கிலத்தில் படித்து ஐடித் துறைக்குள் போக வேண்டும் என்ற நினைப்பு விதைக்கப்பட்டுள்ளது.

நான் முழுக்க முழுக்கத் தமிழ்மொழி வழியிலேயே படித்து – அரசுப் பள்ளிகளிலேயே படித்து உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறேன். அரசாங்க வேலைகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு உண்டு. எனவே உற்சாகமாகத் தாய்மொழியில் படிக்க வையுங்கள், ஆங்கிலத்தின்பின் ஓட வேண்டாம் என துணை வேந்தர் முனைவர் ம. திருமலை கூறுகின்றார். கணிதமேதை ராமானுஜம்,  விஞ்ஞானியும் முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம், உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தலைமை நீதிபதி சதாசிவம் போன்றவர்கள் அரசுப்பள்ளியில் தமிழ் வழியில் படித்து புகழ் பெற்றவர்கள்தானே.

எட்டு கோடி பேர் வாழும் தமிழகத்தின் நிலப்பரப்பையும், மக்கள் தொகையையும் ஒத்த ஜெர்மனில் எவ்வாறு டொய்ச்சு மொழி கல்வி, பொருளாதார, அரசியல் மொழியாக இயங்கி வருகின்றது என்பதை தமிழர்கள் உணர்ந்து அவர்களிடம் இருந்து பாடங்கள் கற்க வேண்டும். ஆனால் தமிழ் மொழியின் அழிவின் மீது ஏறிக் கொண்டு நமது அடையாளங்களை இழப்பது நமது முகத்தை சிதைத்து நமது முகவரியை அழித்துப் போவதற்கு சமமாக இருக்கும் என்பதை மறக்க கூடாது. 

 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.