Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா: வாக்கெடுப்பின் அரசியல் உள்குத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவா: வாக்கெடுப்பின் அரசியல் உள்குத்து

என். சரவணன்

UNHRC-Vote1-e1396076711576.jpg

அன்றொருநாள்

“அன்பாலன்றி, வெறுப்பை வெறுப்பால் துறக்கும் வழியில்லை” தம்மபதம்

பௌத்த அறநூலான தம்மபதத்தின் இந்த போதனைக்கும் ஜெனிவா பிரேரணைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா…?

சரி வரலாற்றை மீள நினைவுக்கு கொண்டு வாருங்கள். 06.09.1952ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ நகரில் 52 நாடுகள் சமாதான மாநாட்டில் ஒன்று கூடுகின்றனர். இரண்டாம் உலகயுத்தத்தில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான இழப்பீட்டை ஜப்பான் வழங்க வேண்டும் என்கிற தீர்மானத்தை கொண்டு வருகின்றனர். அந்தத் தீர்மானத்தின் மீது உரையாற்றுகிறார் இலங்கை பிரதிநிதியாக கலந்துகொண்ட அன்றைய நிதியமைச்சர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன. அந்த பிரசித்தி பெற்ற உரையின் உள்ளடக்கம் தான் இந்த தம்மபத மேற்கோள்.

ஏற்கனவே, ஹிரோஷிமா, நாகசாகி மீதான அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சால் சின்னாபின்னமான தேசத்தை அப்போதுதான் மீட்டெடுக்கும் பணியை தொடங்கியிருந்த ஜப்பானுக்கு இந்தப் பிரேரணை இன்னொரு அழிவென பதறியது. அந்த நிலையில், ஜே.ஆரின் அந்த உரை இழப்பீடு குறித்த அந்தத் தீர்மானத்தை அந்த மாநாடு கைவிடுவதற்கு முக்கிய காரணமானது.

இத்தனைக்கும் 2ஆம் உலகப்போரில் ஜப்பானால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கையும் உள்ளடங்கும். ஜப்பானிய விமானங்களால் கொழும்பு துறைமுகம், இரத்மலானை விமானத்தளம் (05.04.1942), திருகோணமலை துறைமுகம் (09.04.1942) ஆகியன தாக்கப்பட்டிருந்தன.

ஜப்பான் மீண்டு எழுவதற்கு கைகொடுத்த ஜே.ஆரின் இந்த உரை அந்த நாட்டு மக்களுக்கு வரலாற்று நினைவாக ஆக்கியிருக்கிறார்கள். அந்த சம்பவத்தை அவர்கள் “மறு சுதந்திரம்” (“Re-independence”) என்கிற வார்த்தையால் அழைக்கிறார்கள். ஜே.ஆர். ஜெயவர்தனவுக்காக பல பௌத்த விகாரைகளில் நினைவுத்தூபி எழுப்பியிருக்கிறார்கள். அதில் அவரின் பிரசித்திபெற்ற “அன்பாலன்றி, வெறுப்பை வெறுப்பால் துறக்கும் வழியில்லை” தம்மபதம் என்கிற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

430313_193518410778565_90901582_n.jpg

மிகக்குறுகிய காலத்தில் ஜப்பான் உலகத்தில் ஏனைய வல்லரசுகளுக்கு நிகராக பொருளாதார ரீதியில் வளர்ந்ததும் இலங்கையின் மீது வரலாற்று நன்றிக்காக பல உதவிகளை செய்திருக்கிறது. இன்றும் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளில் முன்னணி நாடாக ஜப்பான் திகழ்கிறது. சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் ஜப்பான் சமாதான தூதுவர்களில் ஒன்றாக பாத்திரமாற்றியிருந்தது.

மீண்டும் இன்றைய நடப்புக்கு வருவோம் ஏறத்தாழ 60 வருடங்களுக்கு முன்னர் ஜப்பான் இருந்த நிலையில் இன்று ஜெனிவாவில் இலங்கையும், இலங்கைக்கு தார்மீக ஆதரவு வழங்கும் இடத்தில் ஜப்பானும் மாறியிருப்பதுதான் காலச்சக்கரம் என்பதா. ஆனால், இதுவரை அப்படித்தான் ஜப்பான் இருந்தது. கடந்த தடவைகளில் இலங்கையை ஆதரித்தும் உரையாற்றியிருந்தது ஆனால், இம்முறை வாக்களிப்பில் கூட அது கலந்துகொள்ளாதது ஏன் என்பது ஆராயத்தக்கது.

அன்று தம்மபதத்தை போதனை செய்த அதே ஜே.ஆர். 1983ஆம் ஆண்டு இனப்படுகொலைக்கு தலைமை பாத்திரம் ஏற்று நேர்மாறாக இன்னொரு போதனையையும் எச்சரிக்கையாக விடுத்தார். “போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்” என்பதே அவரின் பிந்திய பிரசித்திபெற்ற உரையாகிப்போனது. அந்த உரை இலங்கையை இனப்படுகொலை அரசாக தொடரச்செய்வதற்கு வழிகோலியது உலகறிந்த வரலாறு. அதன் விளைவு இன்றைய ஜெனிவாவில் உலகு திரண்டிருக்கிறது.

ஜெனிவா வாக்கெடுப்பு

ஜெனீவாவில் நடந்து முடிந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் இலங்கைக்கு எதிரான தீர்மானம், அதிகப் படியான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதென்னவோ உண்மைதான். இலங்கைக்கு ஆதரவு அளித்த நாடுகளின் பட்டியல் குறித்து இதுபோன்ற அலசலொன்று தேவைப்படுகிறது. இத்தீர்மானத்தில் ஆதரவாக 23 நாடுகள் வாக்களித்துள்ளதுடன், எதிராக 12 நாடுகள் வாக்களித்தன. 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இந்தியா கூறுவதில் எது சரி

இதில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ஆங்காங்கு சிதறிய தகவல்கள் வெளிவந்த நிலையில் அதனை தொகுத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது

2009, 2012 ஆகிய இரண்டு தடவைகளும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த இந்தியா, இம்முறை வாக்களிப்பில் பங்கேற்காததை இலங்கை அரசை இத்தனை சலசலப்பின் மத்தியிலும் அதிகளவு மகிழ்ச்சியூட்டியிருக்கிறது. இந்தியாவின் இரட்டை நிலைப்பாடு கூர்ந்து கவனிக்கத்தக்கவை.

•தேசநலன் கருதியே இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது. தமிழர்களின் நலன் கருதியே இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்தது – இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் செயலர் சுஜாதாசிங்

•சர்வதேச விசாரணை நடத்துவது இலங்கையின் இறையாண்மையில் அத்துமீறி தலையிடுவது போன்றதாகும். எனவே, ஓட்டெடுப்பில் இந்தியா கலந்துகொள்ளவில்லை. விசாரணை முன்னெடுப்புகளை இந்தியா ஆதரிக்காது – இந்திய பிரதிநிதி திலீப் சின்ஹா

•மனித உரிமை ஆணையம் நேரடியாக தலையிடுவதை நாங்கள் அனுமதிப்போமேயானால் நாளை இந்தியாவிலும் ஏதாவது விடயத்தில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது என தலையிட வாய்ப்புள்ளது. இது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் – இந்திய வணிக மற்றும் தொழில்துறை துணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்

•அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கக்கூடாது என்பது அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவல்ல. அதிகாரிகள் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு இது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும் – மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

•சிதம்பரத்தின் அந்தக் கருத்தை காங்கிரஸ் ஏற்கவில்லை, இது அரசின் முடிவுக்கு எதிரான கருத்து – காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி

•இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக்கூடாது என இந்தியக் குழுவினருக்கு உத்தரவிட்ட பிரதமர் மன்மோகன் சிங்கை வாழ்த்துகிறேன் – சுப்பிரமணியசாமி

இப்படி இந்திய மத்திய அரசில் உள்ள ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள். சிதம்பரம் வெளியிட்ட கருத்தின்படி இந்த தீர்மானம் அமைச்சரவையின் முடிவுக்கு மாறானது எனத் தெரிகிறது. ஆனால், காங்கிரஸின் பேச்சாளரோ, சிதம்பரத்தின் பேச்சு அரசின் கருத்துக்கு மாறானது என்கிறார். ஆக, இது இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் என்பது தெரிகிறது. சரி இதெல்லாம் தெரிந்தது தானே என்கிறீர்களா… அப்படியானால் இம்முறை காங்கிரஸ் வெளியிட்டுள்ள மக்களவை தேர்தல் விஞ்ஞாபனத்தை கொஞ்சம் சரி பாருங்கள்.

“எல்.டி.டி.ஈக்கு எதிரான யுத்தத்தின் இறுதியில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் குறித்து நியாயமானதும், நம்பகமானதுமான விசாரணையை குறிப்பிட்ட கால எல்லைக்குள் நடத்தி முடிப்பதை உறுதிசெய்வதற்காக ஏனைய நாடுகளுடன் இணைந்து அழுத்தம் கொடுப்போம்…”

காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி தமிழக மக்களை எமாற்றுவதற்கானது என்பது இதன் மூலம் தெட்டத்தெளிவு. ஆனால், அவர்களின் துரதிர்ஷ்டம் தேர்தல் காலத்தில் ஜெனீவாவில் தமது உண்மை முகத்தை உறுதிசெய்து தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதி பொய் என்று அம்பலப்பட வேண்டியதாயிற்று. இந்த விஞ்ஞாபனம் குறித்து தமிழக தமிழ் செயற்பாட்டாளர்கள் கவனித்ததாக இதுவரை தெரியவில்லை. இது முழுமையாக அம்பலப்படுத்தப்பட வேண்டிய ஒன்று.

பாகிஸ்தான் இந்த பிரேரணையை தடுத்து நிறுத்துவதற்காக கொண்டுவந்த ஒத்திவைப்பு பிரேரணையின்போது 25 நாடுகள் இதனை ஒத்திவைக்கக்கூடாது எனவும், 16 நாடுகள் ஒத்திவைக்கவேண்டும் எனவும், வாக்களித்ததுடன் 6 நாடுகள் வாக்களிப்பை தவிர்த்துக்கொண்டன. 10ஆவது ஏற்பாட்டை நீக்கும்படி கொண்டுவந்த ஏற்பாட்டின்போது நீக்கக்கூடாது என்று 23 நாடுகளும், 14 நாடுகள் நீக்கும்படியும், 10 நாடுகள் வாக்களிப்பதை தவிர்த்தும் கொண்டன.

இந்த இரண்டு பிரேரணையின்போதும் இந்தியா பாகிஸ்தானை ஆதரித்தே வாக்களித்தது என்பது இங்கு முக்கியமாக கவனிக்கத்தக்கது. பாகிஸ்தானோடு அத்தனை முறுகல் இருந்தாலும், இந்த நாட்களில் இதே மனித உரிமை பேரவையில் காஷ்மீர் குறித்து பாகிஸ்தானுடன் கடும் சண்டை இருக்கும் நிலையிலும் இந்த பிரேரணை நிதிபற்றாக்குறை காரணமாக ரத்துசெய்யும்படி பாகிஸ்தான் பிரேரணை முன்வைத்தபோது இந்தியா பாகிஸ்தானின் அந்த குள்ளநரித்தந்திரத்தை ஆதரிக்கவே செய்தது.

மொத்தத்தில் இது இந்திய காங்கிரஸ் அரசு தெட்டத் தெளிவாக எடுத்த முடிவென்றே தெரிகிறது. அவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக பின்னர் வெளியிட்ட அறிக்கைகளிலிருந்து இது உறுதிபட தெரிகிறது.

இலங்கை குறித்த தீர்மானத்தில் இந்தியாவின் நிலை என்பது அதி முக்கியம் வாய்ந்தது என்பது சகல நாடுகளுக்கும் தெரியும். ஒருவேளை இந்தியா இறுதித் தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு எடுப்பதில் உறுதியாக வேலைசெய்திருந்தால் நிலைமை தலைகீழாகவும் ஆகியிருக்குமென்றும் கருதலாம். ஆனால், இந்தியா தமக்கு எதிராகவே இம்முறையும் வாக்களிக்கும் என்று எண்ணியிருந்த இலங்கைக்கு எதிர்பாராதபடி வயிற்றில் பாலை வார்த்தது இந்தியா.

உடனடியாகவே இதற்கு நன்றி தெரிவிக்குமுகமாக மஹிந்த ராஜபக்‌ஷ 98 தமிழக மீனவர்களையும் 23 படகுகளையும் உடனடியாக விடுவிக்கும்படி உத்தவிட்டார்.

இலங்கைக்கு ஆதரவளித்த நாடுகளின் லட்சணம் குறித்து மேலதிகமாக பார்ப்போம். உலகில் ஜனநாயகம் எந்தளவு பேணப்படுகிறது என்பது குறித்து பட்டியலிடப்பட்ட நாடுகளில் இந்த 12 நாடுகளும் எந்த நிலையில் இருக்கின்றன என்று கவனிப்போம். Freedomhouse என்பது அமெரிக்காவில் இருந்து இயங்கும் ஒரு நிறுவனம் என்பதற்காக எளிதாக இந்த அறிக்கையை நிராகரிக்கத் தேவையில்லை.

UN-Today.jpg

மஹிந்த அரசின், இலங்கை வரலாற்றில் எந்த அரசும் செய்யாத அளவுக்கு முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகள், போக்குகள் தொடர்ந்தும் கூட, அரசை இந்தத் தடவை பாதுகாத்த 12 நாடுகளில் 4 நாடுகள் முஸ்லிம் நாடுகள்.

பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, குவைத் ஆகிய நாடுகள் இதற்கு முன்னர் இலங்கையை ஆதரித்த நாடுகளாக இருந்தபோதும் இம்முறை வாக்களிப்பில் கலந்துகொள்வதில் தவிர்த்துக்கொண்டன. இது இலங்கையின் ராஜதந்திர அணுகுமுறையின் தோல்வி என ஜே.வி.பி. குற்றம்சாட்டியிருக்கிறது.

பாகிஸ்தான் அன்றையதினம் காலை பாலஸ்தீனம் குறித்த விடயத்தில் இஸ்ரேல் குறித்த விடயத்தில் வேறு நிலைப்பாடு எடுத்திருந்தது. அந்த உரை உருக்கமானதாகவும் இருந்தது. இலங்கை விவகாரத்தின்போது நிதிபற்றாக்குறை காரணமாக ஒத்திவைக்கும்படி போராடியது அங்கிருந்த ஏனைய நாடுகளின் கவனத்திற்குள்ளானது.

தேசப்பற்றாளர் என்கிற மந்திரச்சொல்

ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை முற்றாக நிராகரித்து விட்டது. “தீர்மானங்கள் எத்தனையும் நிறைவேற்ற முடியும். நாங்கள் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் விசாரணை எதனையும் நடத்திவிட முடியாது. இதற்கு முன் அப்படி ஏற்றுக்கொள்ளாத நாடுகள் எத்தனையோ இருக்கின்றன. ஒன்றுமே பண்ணமுடியாது…. குழப்பமடையத் தேவையில்லை…” என்கிறார் ஆளுங்கட்சியின் செயாலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த.

அரசைச் சேர்ந்த அனைவருமே இது மேலைத்தேய சதி, என்.ஜீ.ஓ. சதி, புகலிட புலிகளின் சதி, தேசத்துரோகிகளின் சதி, எதிர்கட்சிகளின் சதியென அடுக்கிக்கொண்டே போகின்றனர்.

துரோகி, தேசத்துரோகி என்கிற பதங்கள் கடந்த ஒரு நூற்றாண்டாகவே அதிகளவில் இலங்கையில் பிரயோகப்படுத்திவரும் பதமாக இருந்தாலும், கடந்த மூன்று தசாப்தத்தில் அந்த சொல்லைப்போல பயமுறுத்தும் சொல்லாக வேறொன்றும் இருந்ததில்லை எனலாம். அந்தப் பதத்திற்கு பயந்து பணிந்தவர்களைக் கூட எங்கும் கண்டு வருகிறோம். இலங்கையில் அது ஒரு பயமுறுத்துவதற்கான சொல்லும்தான். அது ஒரு அடிபணிய வைப்பதற்கான சொல்லும்தான்.

இன்றைய மாகாண சபைத் தேர்தல் நேரத்தில் அரசுக்கு அளிக்கப்படும் வாக்கு ஜெனிவா பிரேரணைக்கு எதிரான வாக்கு என்றும், அரசுக்கு எதிராக அளிக்கப்படும் வாக்குகள் தேசத்துரோகமிழைக்கும் வாக்குகள் என்றும் பகிரங்கமாக பிரசாரப்படுத்தப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த கலந்துகொண்ட ஒரு தேர்தல் கூட்டத்தில். “28இல் தோற்கலாம். ஆனால், 29ஆம் திகதி வெல்ல வேண்டும். வென்று 28ஐ தோற்கடிக்கவேண்டும். எங்களை காலனித்துவப்படுத்த முடியாது என்று காட்ட வேண்டும். தாயை விற்பவர்கள்… தாய் நாட்டை விற்பவர்கள்…” என்று பகிரங்கமாக கூறினார். நாடு எக்கேடுகேட்டும் போகட்டும் தேர்தலில் நான் வெற்றி பெறவேண்டும் என்கிறாரா மஹிந்த என சிங்கள விமர்சகர்கள் விமர்சித்திருக்கிறார்கள்.

ஜெனிவா தீர்மானத்துக்கான “ஆதரவு/ எதிர்” என்பது தேசப்பற்றை அளக்கும் அளவுகோலாக ஆக்கப்பட்டிருக்கிறது. அரசை தோற்கடிக்க பிரயத்தனப்படும் சிங்கள அரசியல் கட்சிகளும், தமிழ் மக்களின் அரசியல் தீர்வில் ஓரளவு அக்கறை காட்டும் கட்சிகள் கூட இது விடயத்தில் ஜெனிவா தீர்மானத்திற்கு தாங்கள் எதிர் என்றே காட்ட விளைகிறது. ஜேவிபி உட்பட. விதிவிலக்கான சக்திகளை இங்கு குறிப்பிட வேண்டியதில்லை.

ஆகவேதான், இந்தத் தேர்தல் நேரத்தில் விமல் வீரவன்ச, அனைத்து கட்சிகளும் தமது நிலைப்பாடுகளை பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும் என்று சவால் விடுத்திருந்தார்.

அதேவேளை, “ஏன் நான் ஜெனிவா தீர்மானத்தை ஆதரிக்கிறேன், தேசப்பற்றாளர்கள் ஏன் ஜெனிவா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்” என்று பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் சிறந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். துணிவான ஒருசிலரே இப்படி அரசிற்கு சவால் விடுக்க எஞ்சியிருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

http://maatram.org/?p=774

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.