Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோக்கியாவும் கயல்விழியும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நோக்கியாவும் கயல்விழியும்!

நெல்சன் சேவியர்

இந்தக் கதையை நான் என்றுதான் ஆரம்பிக்க வேண்டும் என்று எனக்கும் ஆசை. ஆனால் இந்தக் கதையில் வரும் நான் என்பது என்னைக் குறிக்கும் என்பதாலும் என்னை உங்களுக்கு முன்பே தெரியும் என்பதும்தான் என்னுடைய பிரச்சினை. மேலும் அடுத்து நிறையக் கதைகளை நான் எழுத வேண்டி இருப்பதால்தான் யோசிக்கிறேன். பரவாயில்லை, நான் என்றே சொல்கிறேன். ஏனெனில் இது என்னுடைய கதை. நான்தான் அதை சொல்லியாக வேண்டும். இந்தக் கதை முடிந்ததும் நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பீர்கள் என்பதுதான் கவலை. இப்படிக் கவலைப்பட்டால் நான் எப்படி எழுத்தாளன் ஆக முடியும்?

நான் உங்களுக்குத் தெரிந்த இளைஞன்தான். என்னுடைய வயது ஒரு நல்ல வயதுதான். என்னுடைய பிரச்சினையே நான் காதலிக்காமல் போய்விட்டதுதான். அப்படியென்றால் எனக்குக் காதலி கிடைக்கவில்லை என்பதல்ல பிரச்சினை. நான் காதலித்த பெண்ணை ஒரே மாதத்தில் எனக்கு மனைவியாக்கிவிட்டார்கள் எங்கள் பெற்றோர்கள். அதைக் காதல் என்றுகூட சொல்ல முடியாது. பிடித்திருக்கிறது என்றுதான் சொன்னேன். அவ்வளவுதான். இதனாலயே என் கதை சுவாரசி யமற்ற காதல் கதையாயிற்று. கடைசி வரை சினிமாவில் வருவதுபோலவோ, கல்லூரி நண்பர்களைப் போலவோ எல்லாம் நான் காதலிக்கவே இல்லை. எப்படியெல்லாம் காதலிக்க வேண்டும் என்று நான் திட்டமிட்டு வைத்திருந்தேனோ அதைத் திருமணத்திற்குப் பின்பு என்னால் முயற்சிக்கவே முடியவில்லை. அதற்கு என்னுடைய மனைவி காரணம் அல்ல என்பதும் எனக்குத் தெரியும். உங்களுக்கும் தெரியும் என்றே நினைக்கிறேன்.

என்னுடைய இந்தக் கதை என் காதலைப் பற்றியது அல்ல. என்னைப் பற்றியதும், மீதம் கொஞ்சம் விஷயங்களைப் பற்றியதும்தான். நான் வழக்கமாக அலுவலகத்திற்கு என்னுடைய டூ வீலரில்தான் செல்வேன். எனக்கு வீடு பெரம்பூரில் இருக்கிறது. முகவரி கேட்காதீர்கள். நான் தினமும் மயிலாப்பூர் போக வேண்டும். அங்குதான் நான் வேலை செய்கிறேன். என்ன வேலை என்பதும் நான் சொல்லிக்கொண்டிருக்கிற கதைக்குத் தேவை இல்லாத விசயம். இன்று காலையில் கிளம்பும்போதுதான் தெரிகிறது வண்டி நகராது என்று. உங்களுக்குத் தெரியுமா, எனக்கு என் வண்டியைப் பற்றி ஒன்றும் தெரியாது. பெட்ரோல் போடுவதைத் தவிர நான் வண்டியைப் பற்றி அதிகம் ஆர்வப்படவில்லை. என்னுடைய திருமணத்திற்கு நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு டூ வீலர் வாங்கிக் கொடுத்திருந்தார்கள். மூன்றே மாதத்தில் வண்டி பிரச்சினை பண்ணும் என்று எனக்குத் தெரியவில்லை. தூங்கிக்கொண்டிருந்த என் தம்பியிடம் வண்டியை சர்வீஸ் சென்டரில் கொண்டுபோய் விட சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

பஸ்சில் போக வேண்டும் என்றாயிற்று. சென்னையில் இப்போது ஆட்டோவில் மீட்டர் பொருத்திவிட்டாலும் யாரும் மீட்டர் போட்டு ஓட்டுவது போல் தெரியவில்லை. என்னைப் பார்த்தால் பெரம்பூரில் இருந்து மயிலாப்பூர் போக நிச்சயமாக முந்நூறு ரூபாய்க்கு மேல்தான் கேட்பார்கள். என் முகம் அப்படி என்றெல்லாம் சொல்லப் போவதில்லை. ஏனெனில் உங்களிடமும் அவ்வளவுதான் கேட்பார்கள். சென்னையில் பஸ்சில் போவதில் எனக்கும் உங்களுக்கும் பல கஷ்டங்கள் இருக்கிறது. ஆறு ரூபாய் கொடுத்து அயன் பண்ணிய சட்டை தடமே இல்லாமல் கசக்கிப் பிழியப்படும். மற்றவர்களோடு உரசி, உரசியே தொப்பலாய் நனைய வேண்டி வரும். நன்றாக பாலிஷ் போட்ட பாட்டா ஷூ மீது நான்கு அல்லது ஐந்து பேர் ஏறி நின்று தங்கள் பாதங்களைப் பதிப்பார்கள். பின்னால் நம்முடைய பர்சை எடுக்க தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருப்பவனைப் பார்த்து, "என்னடா வேணும் உனக்கு, அதுல ஒன்னும் இல்லடா"ன்னு கத்த வேண்டி வரும். அப்போது தான் ஒருவன் சைனா போன்ல லவுட் ஸ்பீக்கர்ல ஃஎப்.எம் வெச்சு, சகிக்காத பாட்டு ஒண்ணு கேட்டு எல்லார் உயிரையும் வாங்குவான். காதலியை விட்டு ஒரு நிமிடம்கூட பிரியாத காதலன்கள் நம்மை முறைத்துப் பார்த்து தள்ளி நிற்கச் சொல்லுவார்கள். தேர்ந்தெடுத்த பெண்கள் பின்னால் நின்று சில ஆண்களும் சில பெருசுகளும் கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பார்கள். இறங்கும்போது நம்முடைய பெர்ஃயூம், பலருடைய வியர்வை, பாடி ஸ்ப்ரே சங்கமத்தில் வேறு ஏதோ புது வாசனைக்கு மாறி இருக்கும்.

'பஸ் வந்துவிட்டது. 29சிதான். சென்னையின் மிக மோச மான பேருந்து வழித்தடங்களில் அதுவும் ஒன்று என்பது சென்னைவாசிகளுக்குத் தெரியும். பீகார், அஸ்ஸாம் ரயில்களில் பயணிகளின் நிரம்பிவழியும் கும்பலை ஏதேனும் புகைப்படத்தில் பார்த்திருந்தீர்கள் என்றால் அதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். எப்படியோ போராடி பஸ்சில் ஏறி, ஒரு வழியாக கண்டக்டர் நிற்கிற கம்பியை ஒட்டியே ஒரு கம்பியில் பத்திரமாய் சாய்ந்து நின்றுகொண்டேன். ஏதோ ஜென்மபுண்ணியம் அடைந்ததுபோல் இருந்தது எனக்கு. ஐம்பது பைசா பிரச்சினை எதுவும் இல்லாமல் அந்த நடத்துனர் டிக்கெட் கொடுத்துவிட்டார்.

சேத்துப்பட்டு வரை என்னால் மூச்சே விட முடியவில்லை. சேத்துப்பட்டில் சில பெண்களோடு ஒரு இளைஞன் ஏறினான். தலை முடியை நன்றாக வளர்த்து ஃபங்க் விட்டிருந்தான். குல்லா பனியன், சாயம் போன ஜீன்ஸ் போட்டிருந்தான். பஸ்ஸில் ஏறியதில் இருந்தே படபடப்பாகத்தான் இருந்தான். நகர்ந்து வந்து என்னை ஒட்டி நின்றுகொண்டான். பஸ்சில் ஏறியதில் இருந்து நான் என்ன செய்தேன் என்று சொல்ல வில்லையே! கண்டக்டர் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு ஸ்கூல் பெண் என்னை சைட் அடித்துக்கொண்டிருந்ததைத்தான் நான் கவனித்துக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் ஸ்கூல் பெண்கள்தான் என்னை அதிகம் கவனிக்கிறார்கள். இவனுடைய படபடப்பு என்னைக் கவர்ந்தது. முதுகைக் காட்டிக்கொண்டிருந்த அந்த இளைஞன் பாண்ட் பாக்கெட்டில் இருந்து அவன் மொபைலை எடுத்தான். அது ஏதோ நோக்கியாவின் போனியாகாத மாடல். டிஸ்ப்ளே கொஞ்சம் பெரிதாகவே இருந்தது. அப்போது மெசேஜ் டோன் வரவே நானும் ஒரு ஆர்வத்தில் அந்த மொபைலையே பார்த்தேன். பேர் ஏதோ கயல்.விஎம் என்று இருந்தது. மெசேஜ் இது தான். . .

“சதீஷ் சொன்னதுக்கு நான் எப்படிடா ரெஸ்பான்சிபிள் ஆக முடியும்" என்று இருந்தது.

ரெஸ்பான்சிபிள் ஸ்பெல்லிங் வேறு தப்புத் தப்பாய் இருந்தது. இந்த நோக்கியா இளைஞன் புன்னகைத்துக் கொண்டே, மின்னல் வேகத்தில் ரிப்ளை செய்தான்.

“இல்லடி குட்டிமா, அவன் வேணும்னே நமக்குள்ள இடைஞ்சல் பண்ணிட்டே இருக்கான். நேத்து பார்ட்டில கடுப்பேத்திட்டான். ஈவ்னிங் வந்துருவல்ல. உன்னை. . ." மெசேஜைப் படித்து முடிப்பதற்குள் காலேஜ் ரோட்டில் ஏறிய ஒரு கும்பல் என்னை முன்னுக்குத் தள்ளிவிட, அந்த நோக்கியா இளைஞனுக்கு முன்னால் போய் நிற்க வேண்டியதாயிற்று.

கண்டக்டர் வேற “கொஞ்சம் உள்ள போங்க சார், உள்ள கடல் மாதிரி எடம் இருக்குÓன்னு கத்திட்டு இருந்தார். கடல் மாதிரின்னு சொன்னதும் என்னைச் சுற்றி இருந்த எல்லோரும் அவரைத் திரும்பி முறைத்தார்கள். அந்த இளைஞன் இப்போதும் வேகவேகமாக டைப் செய்து கொண்டே இருந்தான். ரெண்டு ஸ்டாப்புக்குப் பிறகு, ஜெமினியில் கொஞ்சம் கூட்டம் குறையத் தொடங்கியது. நான் மீண்டும் பழைய இடத்துக்கே பெருமூச்சுடன் வந்து சேர்ந்தேன். இப்போதும் டைப்பிங் தொடர்ந்து கொண்டிருந்தது. ஆனால் நடுவில் நிறைய மிஸ்ஸிங்காகி இருக்கும் போல. சப்ஜெக்ட் மாறி இருந்தது.

“எங்கன்னு சொன்னாதான் தெரியுமா?" இவன் அனுப்பிக்கொண்டிருந்தான்.

இட்ஸ் ஓகே டெல் மீ டா!

யூசுவலா குடுக்குறதுதானடி!

இப்போ கேக்கணும் போல இருக்கு சொல்லு. அம் வெயிட்டிங்.

போடி அவிச்சி! ஈவ்னிங் வா நேர்ல சொல்றேன்! சொல்றது என்ன. . .

பக்கத்தில் ஏதோ ஒரு ஸ்மைலி போட்டிருந்தான். அது முத்தம் கொடுப்பதா அல்லது கண் அடிப்பதா என்று சரியாகத் தெரியவில்லை!

அந்தப் பெண் அனுப்பிய பதில் மெசேஜ் ஏதோ கொஞ்சம் நீளமாக இருந்தது.

அதை அவன் படிப்பதற்குள் அவனுக்கு எம்.சி.ஈ. என்று பெயர் கொண்ட ஒரு நம்பரில் இருந்து கால் வர, “சொல்லுங்க பாஸ், தோ வந்துட்டு இருக்கேன்" என்று அவனும் பேசிக் கொண்டே எந்த ஸ்டாப் என்று பார்க்காமலே இறங்கி விட்டான்.

எனக்கு இப்போது என்ன செய்வதென்று தெரிய வில்லை.

லஸ்ஸில் இறங்கி ஆபீஸ் போகும் வரை அவிச்சி என்று அவன் எதைச் சுருக்கிச் சொல்லி இருப்பான் என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். ஒரு வேளை அது ஏதோ கோட் வேர்டாக இருக்குமோ. ஒன்றும் புலப்படவில்லை. இது ஏதோ இதுவரை கேள்விப்படாத வார்த்தையாக இருந்தது.

அலுவலகம் வந்ததும் பக்கத்து கேபின் தன்ராஜிடம் கேட்டேன். “தனம்! அவிச்சிங்குறது பொண்ணுங்க பேரா? இன்னக்கி ஒரு பையன் ஒரு பொண்ணக் கூப்ட்டான்! ஊரு பக்கம் வெப்பாங்களா?Ó

தன்ராஜ், வளசரவாக்கம் பக்கத்தில் அந்தப் பேரில் ஒரு ஸ்கூல் இருப்பதாக சொன்னான். அவனுக்கும் அதற்குமேல் தெரியவில்லை.

இரவு வீடு திரும்பும்போதும் பஸ்தான். கூட்டம் அவ்வளவாக இல்லை. பஸ்சில் எல்லோரும் ஜன்னலோரம் சாய்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள். வீட்டுக்கு வந்தாயிற்று. வண்டி இல்லை. தம்பி சர்வீஸ் சென்டரில் விட்டுவிட்டதாகக் கூறினான். இரவு படுக்கப்போகும் போதும் அதைப் பற்றியேதான் யோசனை. அந்தப் பெயர்தான் முதலில் நினைவுக்கு வந்தது. கயல் என்பது கயல்விழியாகவோ, கயற்கண்ணியாகவோ, கயலரசியாகவோ இருக்கலாம். அதென்ன விஎம் என்று தெரிய வில்லை. கல்லூரி, ஊர் பெயர், ஏதாவது ஐடி ஆபீஸை அது குறிக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. நோக்கியா இளைஞன் முத்தமிடுவதாகச் சொன்ன இடம் எதுவாக இருக்கும் என்று யோசித்தேன். ஸ்பெஷலாக ஒன்றும் தோன்றவில்லை.

விஎம் விரிவாக்கம் குறித்த சிந்தனையிலே விடிந்தும் போனது. வண்டி இன்னும் சர்வீஸில் இருந்து வரவில்லை. நேற்று போலவே அதே பஸ் ஸ்டாப். அதே பஸ். அதே நேரம். அந்த இளைஞன் ஏறிய சேத்துப்பட்டு பஸ் ஸ்டாப்பும் வந்தது. ஏறிய கூட்டத்தில் அவன் இல்லை. எனக்கு என்னமோ உறுத்தலாக இருந்தது. ரெண்டு ஸ்டாப் தள்ளி காலேஜ் ரோடு பஸ் ஸ்டாப்பில் நோக்கியா இளைஞன் மீண்டும் ஏறினான். இன்று ஏதோ இண்டர்வ்யூக்குப் போவது போல ஃபார்மல்ஸில் வந்திருந்தான். நேற்று எட்டு திக்கும் பறந்த அவனது ஃபங்க்க் தலைமுடி இன்று படிய வாரப்பட்டிருந்தது. அவனைப் பார்த்ததில் மனதுக்குள் ஏதோ காதலியைப் பார்த்ததுபோல் மகிழ்ச்சி. என்ன இது, இவனைப் பார்த்து ஏன் இப்படி சந்தோ ஷம்ன்னு தெரியல என என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

இந்த முறை அந்த இளைஞனே எனக்கு முன்னால் வந்து கம்பியின் ஓரமாக நின்று கொண்டான். டிக்கெட் எடுத்தான். பேக்கில் இருந்து வாட்டர்கேன் எடுத்து தண்ணீர் குடித்தான். ஹெட்செட்டைக் காதில் மாட்டி பாட்டு கேட்கிறான். அவன் கேட்கும் யுவன்ஷங்கர் ராஜா பாட்டு பக்கத்தில் நிற்கும் என் காதுகளில் ஒலிக்கிறது. ஆனால் இன்னும் மெசேஜ் பண்ணவில்லை. ஏன் என்று தெரியாமலேயே எனக்கு செம கடுப்பானது. வீட்டில் இருந்து வரும்போதே பேசி இருப்பானோ. அது சரி, இவன் ஏன் பஸ்சில் வருகிறான். இவன் காஸ்ட்யூமுக்கு பஸ்ஸில் பயணம் பொருந்தவே இல்லை. யோசித்துக் கொண்டிருக்கும் போது திடீரென அந்த இளைஞனுக்குக் கால் வந்தது.

“சொல்லு கயல் ! கயல்... நீ பேசுறது கேக்குது.. கயல் விழி கேக்குதா? பஸ்ல இருக்கேன்.இல்ல இன்னும் வண்டி வரல. பின்னாடி டேமேஜ் அதிகம் போல. ரெண்டு நாள் ஆகும்ன்னு சொன்னான்.Ó

சத்தமாகப் பேசுவதை உணர்ந்ததுபோல உடனே பேசுகிற சத்தத்தைக் குறைத்துவிட்டான். அவ்வளவுதான் கேட்க முடிந்தது. அந்தப் பெண்ணேதான். பெயர் கயல்விழிதான். என் யூகம் சரிதான் என எனக்கு நானே சபாஷ் போட்டுக்கொண்டேன். சிரித்து சிரித்துப் பேசுகிறான். பக்கத்தில் இருந்துதான் பேசு கிறான். கவிதை போல் எல்லாம் ஏதோ சொல்கிறான். ஆனால் ஒரு வார்த்தைகூட தெளிவாகவே என் காதில் விழவில்லை. கடைசியில் அந்த நோக்கியாவை அவன் எச்சில் படுத்தினான். கால் கட் ஆனது. மீண்டும் யுவன்ஷங்கர் ராஜா. சரி, இந்தக் கதை அவ்ளோ தான் என்று நான் நினைத்த போது அவனுக்கு மெசேஜ் வந்தது. அந்த இளைஞனுக்கு மெசேஜ் வந்த சத்தம் கேட்கவில்லை போல. என் காதில் கேட்ட மெசேஜ் சவுண்டு அந்த இளைஞனுக்கு ஏன் கேட்கவில்லை என்று தெரியவில்லை.ஹெட்செட்டில் கேட்டிருக்குமே ?

திரும்ப ஏதோ மெசேஜ் வரவே,காதில் மாட்டி இருந்த ஹெட்செட்டைக் கழட்டி விட்டு மெசேஜ் பார்த்தான் அந்த இளைஞன். ஆர்வத்தில் நானும் தலையைக் கொஞ்சம் எட்டிப் பார்த்தேன்.

கயலேதான். உம்மா என்று ரொம்ப நீளமாக அனுப்பி இருந்தாள். பார்த்து விட்டு வேகமாக தலையைத் திருப்பி விட்டேன். யாரோ தன்னைப் பார்ப்பது போல உணர்ந்த அந்த இளைஞனும் திரும்பி யாராவது பார்க்கிறார்களா என்று பார்த்தான். பின்னர் அவன் டைப் செய்யத் தொடங்கினான். இப்படி அடுத்தவன் மெசேஜை அவனுக்குத் தெரியாமல் படிக்கிறாயே, உனக்கு வெட்கமாக இல்லையா என்று நீங்கள் நிச்சயம் என்னிடம் கேட்க மாட்டீர்கள். ஏன் தெரியுமா, அதுவும் உங்களுக்கு தெரியும். அது எதற்கு இப்போது ?

உம்மாவிற்குப் பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை. ரெண்டு நிமிடம் கழித்து அவன் பக்கம் திரும்பினேன்..அதற்குள் அவன் ஐந்து ஆறு வரிகள் டைப் செய்துவிட்டான்.

உன் கீழ் உதட்டில் இருக்கிற அந்த மச்சம் தாண்டி உன் அழகு என்று ஏதோ வார்த்தை இருந்தது. அதற்குள் மெசேஜை அனுப்பி விட்டான் பாவி.இப்போது தானே நோக்கியாவை எச்சில் ஆக்கினான்.

அதற்குள் என்ன அவசரம் இவனுக்கு ?

எனக்கும்தான் திருமணம் ஆகி மூன்று மாதம் ஆகிறது. நானெல்லாம் எப்படி நாகரீகமாய் நடந்து கொள்கிறேன். சம்பந்தம் இல்லாமல் இப்போது என்னுடைய மொபைல் அடிக்கிறது. ஏதோ அன்னோன் நம்பர்.கட் செய்ய முயன்று தெரியால் அட்டென்ட் செய்துவிட்டேன்.

"ஹலோ ?"

”மாமா எங்கடா இருக்க? விமல்டா ..நாளக்கி சென்னை வரேன்டா."

"என்னடா திடீர்னு?"

"எல்லாம் நல்ல விஷயம்தான்..கல்யாணம்டா...திருத்தணில.. பொண்ணு. நம்ம ரெட்டை சடை குஞ்சம் தான்."

விமலும் அந்த ரெட்டை சடையும் ஒன்றாகச் சுற்றித் திரிந்தார்கள்.விமல் காதல் தோல்வியில் துவண்டு கிடந்தபோது கீதா தான் அவனைத் தேற்றினாள். கீதாவின் ரெட்டை சடை காலேஜில் ரொம்ப பாப்புலர். அதனாலே அவளுக்கு அதுவே பெயர் ஆனது. இப்போது இந்தக் கதை அவசியம் இல்லை.கீதாவின் கதையைத் தனியாகவே சொல்கிறேன். உரையாடல் அடுத்த மூன்று நிமிடம் வரை நீடித்திருந்தது.ஒரு வழியாக முகவரி கொடுத்து விமலின் போனை கட் செய்தேன்.

கயல் என்ன பதில் அனுப்பி இருந்தாள் என்று தெரிய வில்லை. நிதானமாக எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அந்த இளைஞன் இப்போது வேறு மாதிரி திரும்பி நின்று கொண்டே மெசேஜ் பண்ணிக் கொண்டிருந்தான்.எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து ஒரு வழியாக அந்த இளைஞனுக்குப் பின்னால் வந்து இடம் பிடித்து நின்று கொண்டேன்.

கண்டக்டர் எங்கள் இருவரையும் நீண்ட நேரம் கவனித்துக் கொண்டே இருந்திருப்பார் போல.என்னைப் பார்த்து முறைப்பது போலவே இருந்தது.அவர் பார்வையைத் தவிர்க்க என்னுடைய மொபைலை எடுத்து, எனக்கு வராத மெசேஜைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து யாரும் என்னைப் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு,அந்த நோக்கியாவைப் பார்க்க திரும்ப முயற்சி செய்தேன். பல நிமிடப் போராட்டத்திற்கு பிறகு என் பார்வைக்கும் அது கிட்டியது.இப்போது தலைப்பு வேறு எங்கோ போய்க் கொண்டு இருந்தது.

“உடம்பு முக்கியம்னா அதுக்கு இவ்ளோ பேசணும்ன்னு அவசியம் இல்ல அவிச்சி .அது அன்னக்கி நாம சேலம் போனப்பவே நடந்திருக்கும்.எனக்கு நீ வேணும் கயல். உன் மனசு வேணும்டி.’’

தேர் இஸ் நோ சப்ஸ்டிட்யூட்..

அவன் தொடர்ந்து வேக வேகமாக டைப் செய்து கொண்டிருந்தான்.

அவ்வளவுதான் பார்க்க முடிந்தது.

எப்படி இப்படி இவர்களால் எப்போதும் ஏதாவது பேசிக்கொண்டே இருக்க முடிகிறது என்று தெரியவில்லை. அந்த இளைஞன் முகத்தை நீண்ட நேரம் ரொம்ப சீரியசாகவே வைத்திருந்தான்..எனக்கு அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. ஏதோ சண்டை தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது போல.

ஒரு ரோபோவைப் போல மெசேஜ் டைப் பண்ணிக் கொண்டிருந்தான்.அதற்குள் வேர்த்துக் கொட்டியதில் அவன் சட்டை எல்லாம் நனைந்து போய் உள்ளே அவன் அணிந்திருந்த சிகப்பு உள் பனியன் பளிச்சென தெரிவதைக் கூடப் பொருட் படுத்தாமல் நோக்கியா மீது கவனமாக இருந்தான். இவ்வளவு பதற்றத்தைப் பார்த்த பிறகு ஏனோ எனக்கு அவன் மொபைலைப் பார்க்கிற ஆசையே போய் விட்டது.

இருந்தாலும் கயலின் காதல் கதையின் தொடர்ச்சி தடை படுவதை விரும்பவில்லை.மீண்டும் எக்கி எக்கிப் பார்த்தேன். சினிமாக்களில் வருவது தான் போல் இவர்கள் காதலிக்கிறார்களா அல்லது இவர்களைப் பார்த்து சினிமாக்காரர்கள் படம் எடுக்கிறார்களா என்று தெரியவில்லை. இன்னும் வசனம் முடிந்தபாடில்லை. இப்போதும் ஒரு வரி என் கண்ணுக்குக் கிடைத்தது.

“அவிச்சி, ஹாஸ்பிட்டல் அடுத்து எப்போ போறடி?’’

ஹாஸ்பிட்டல் போற அளவுக்கு என்னாச்சு ன்னு புரியலையே. எனக்கு அவர்கள் சேலம் போனது போல், அந்தப் பெண் வாந்தி எடுப்பது போல், இருவரும் கடும் வாக்குவாதம் செய்வது போல் எல்லாம் ஒரே ப்ளாக் அண்ட் ஒய்ட் காட்சிகளாக வரிசையாக வந்து போனது. இதனால் நீங்கள் என்னைப் பற்றி எந்த முடிவுக்கு வேண்டுமானாலும் வாருங்கள்.ஒன்று சொல்கிறேன், காலேஜில் படிப்பைத் தவிர நான் எதையுமே நினைத்தது இல்லை. சரி, என்னைப் பற்றி இப்போது விவரித்துக் கொண்டிருந்தால் என்னால் அந்த மெசேஜைப் பார்க்க முடியாமல் போய் விடும்.இந்த ஹாஸ்பிட்டல் மெசேஜ் பார்த்தபிறகு ஏனோ அந்த நோக்கியா இளைஞன் மீது பரிதாபம் போய், இப்போது பொறாமை வந்தது. ஆனால் ஹாஸ்பிட்டல் என்கிற ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு எப்படி இப்படி எல்லாம் யோசிக்கலாம் என என்னுடைய மனசாட்சி, அறம் சார்ந்து ஒரு கேள்வி எழுப்புகிறது.அந்தக் கேள்வி அப்படியே இருக்கட்டும். அந்தவகை கேள்விகளுக்கு எப்போதும் நான் (நாம் ) பதில் அளிப்பதில்லை . நின்றுகொண் டிருந்த அந்த நோக்கியா இளைஞன் காலியான சீட் ஒன்றில் உட்கார்ந்து விட்டான்.

எனக்கு ஐடியா தோன்றியது, கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து பக்கத்தில் போய் நின்று கொண்டேன். அந்த நோக்கியா இளைஞன் நிமிர்ந்து என்னைப் பார்த்தான். இத்தனை நாளில் இப்போது தான் என்னை அருகில் கவனிக்கிறான் போல. என்ன வேணும் என்பது போல் அவன் தலையை அசைத்துக் கேட்கிறான். என்ன சொல்வேன் ? நேற்றில் இருந்து உன்னுடைய மொபைல் மெசேஜ் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றா அவனிடம் சொல்ல முடியும்..உடனே முதுகில் மாட்டி இருந்த என்னுடைய பையைக் கழட்டி அவனிடம் கொடுத்து,” இதை வைத்துக் கொள்ள முடியுமா ? ” என்றேன் . அந்த நோக்கியா பையனும் "அவ்வளவுதானா" என்கிற ரீதியில் வாங்கி மடியில் வைத்துக்கொண்டான். இப்போது என் பை மீது மொபைலை வைத்து திரும்ப மெசேஜ் அனுப்பத் தொடங்கினான். எவ்வளவோ முயன்றும் சரியான பார்வைக்கு மொபைல் படவில்லை. என்னுடைய கடும் முயற்சி காரணமாக ஒரே வரிதான் தெரிந்தது.

“அவிச்சி, லெட்ஸ் டூ ஒன் திங். நான் உங்க அப்பாட்ட வந்து நம்ம கல்யாணம் பத்தி பேசுறேன், யூ ஆர் ஆல் ரைட் நௌவ் ?

அதற்குப் பின் அவன் ஏதோ வேக வேகமாக டைப் செய்துகொண்டே இருந்தான். என்னால் ஒன்றையும் பார்க்க முடியவில்லை.அதற்குள் நான் இறங்க வேண்டிய லஸ் கார்னர் வரவே,என்ன செய்வதென்றே தெரியாமல் பாதி மனதுடன் அந்த நோக்கியா இளைஞனிடமிருந்து பையை வாங்கிக்கொண்டு, தேங்க்ஸ் சொல்லி விட்டு இறங்கி விட்டேன். முடிவு தெரியாத மர்ம நாவலைப் போல ஆனது என்னுடைய நிலை.

அந்த உதட்டுக்கு கீழ் கருப்பு மச்சம் கொண்ட, அவிச்சி என செல்லமாய் அழைக்கப்படுகிற , வி.எம். என்கிற என்னவென்று தெரியாத பெயரைத் தன் இரண்டாம் பாதியாய்க் கொண்ட,எதற்கோ இன்று ஹாஸ்பிட்டல் போகிற அந்த கயல்விழி என்ன ஆனாள், என்ன ஆவாள் என்பதும் தெரியாமல் சிந்தனைத் தவிப்பிலேயே அலுவலகம் வந்து சேர்ந்தேன்.

அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை. வண்டி சர்வீஸ் சென்டரில் இருந்து வந்து விட்டதாக சிவா போன் செய்தான். அப்புறம் அலுவலக அரசியல், பணிச்சுமை என நேரம் ஓடி விட்டது. மாலை பக்கத்து கேபினில் எப்போதும் சும்மாவே உட்கார்ந்திருக்கும் தன்ராஜ் தன் தம்பியின் திருமண ஏற்பாடுகளுக்காக பெரம்பூர் வரை செல்ல இருப்பதாகவும் தானே வீட்டில் ட்ராப் செய்வதாகவும் சொல்ல, சரி என சொல்லி விட்டேன்.

வண்டியில் தன்ராஜுடன் வீட்டுக்கு புறப்பட்டாயிற்று.சாலையில் கடந்து போகும் 29நீ பஸ்சை எல்லாம் எல்லாம் ஏக்கமாகவே பார்த்துக் கொண்டே பயணித்தேன். வீடும் வந்தது. இரவு வந்தது. தூக்கம் வந்தது. நீங்கள் நினைப்பது போல் கனவெல்லாம் வரவில்லை.மறுநாள் வீட்டை விட்டுக் கிளம்பும்போது யோசித்துக் கொண்டே இன்றும் பஸ்ஸில் போய் பார்த்து விடுவது என்ற முடிவோடு கிளம்பினேன் .

“என்னங்க நடந்து போறீங்க? வண்டில போலயா.. வண்டி சரி ஆய்டுச்சுல்ல” என மனைவி கேட்க,

“இல்லை கவி. காலைல ஆபீஸ் வேலையா கொஞ்சம் கிண்டி வரை வெளில போவேண்டி இருக்கு. நம்ம தன்ராஜ் வந்து பிக் அப் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டார்.”

திட்டமிட்டால் கூட இப்படிப் பொய்கள் நமக்கு அமையாது.

கவிதாவுக்கு இந்தப் பொய் போதுமானதாக இருந்தது. 29சி பஸ்ஸில் ஏறிவிட்டேன். கண்டக்டர் என்னை ஒரு மாதிரி பார்த்தார். நான் கேட்காமலே லஸ் கார்னருக்கு டிக்கெட் கொடுத்து விட்டார். என்னுடைய எல்லா சேட்டைகளையும் இவர் கவனித்திருப்பாரோ என்கிற சந்தேகம் வேறு. சேத்துப்பட்டு, காலேஜ் ரோடு,ஜெமினி, ஸ்டெல்லாமாரீஸ், மயிலாப்பூர் எல்லா ஸ்டாப்பும் வந்தது. நோக்கியா பையன் எங்கும் ஏறவில்லை. அவ்வளவுதான், லஸ்ஸில் இறங்கும் வரை அவன் வரவேயில்லை.

பெருமூச்சோடு இறங்கி அலுவலகம் போனேன். அவ்வளவு தான். அன்றாட நிகழ்வுகளில்,நோக்கியா பையனும்,கயலும் கரைந்து போனார்கள்.இந்தக் கதையை யாரிடமாவது சொன்னால் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?

மூன்று மாதம் கழித்து தன்ராஜின் தம்பிக்கு நடந்த கல்யாணத்திற்குப் போய் விட்டு வரும் வழியில், கவிதா காய்கறி வாங்கி வரச் சொன்னது ஞாபகம் வந்தது. பக்கத்தில் இருக்கிற ரிலையன்ஸ் ஃ ப்ரெஷ்ஷில் காய்கறி வாங்க வண்டியை நிறுத்தி னேன். டூ வீலர் பார்க்கிங்கில் ஏதோ சண்டை போடும் சத்தம் கேட்கவே திரும்பிப் பார்த்தேன். "ஐயகோ, என்னால் நம்பவே முடியவில்லை."

அதே நோக்கியா பையன் தான். ஃ பங்க் இல்லை. எடுத்து விட்டிருக்கிறான். மகிழ்ச்சியா பரவசமா என்று தெரியவில்லை. வாட்ச்மேனோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தான். வண்டியோடு வைத்திருந்த தன்னுடைய புது ஹெல்மெட்டைக் காணவில்லை என்பது தான் சண்டையின் மையப் பொருள் போல எனக்குத் தெரிந்தது.ஒரு வழியாக சண்டை எல்லாம் முடிந்து, அவன் வண்டியை பார்க்கிங்கில் இருந்து வெளியே எடுத்தான்.இவ்வளவு நேரம் ஒன்றை நான் கவனிக்கவே இல்லை.

அந்த இளைஞன் பக்கத்தில், எனக்கு சற்றே முதுகைக் காட்டிகொண்டே கிரீன் டாப்பும்,வைட் லெக்கின்ஸும் அணிந்திருந்த ஒரு பெண் போன் பேசிக்கொண்டிருந்தாள். அவளை வந்து வண்டியில் ஏறும்படி நோக்கியா பையன் சைகை காட்ட, அவள் தலையாட்டிக் கொண்டே Ôடூ மினிட்ஸ்Õ என்றாள்.

எனக்கு ஏதோ ஒரு பிரகாஷ்ராஜ் படத்தில் கதாநாயகனுக்கு அத்தனை ஆலாபனைகளும் ஒரு சேரக் காதில் ஒலிக்குமே அது போல இருந்தது. கயல் முகத்தை எப்படியும் பார்த்து விடுவது என்ற முடிவோடு வண்டியை நிறுத்திவிட்டு, அந்த இளைஞனை நோக்கி நடந்தேன்.. என்ன பேசுவது, என்னை யார் எனக் கேட்டால் என்ன சொல்வது,பஸ்ஸில் பார்த்தது அவ னுக்கு நினைவில் இருந்தால் என்ன செய்வது என யோசித்துக்கொண்டே தான் நகர்ந்தேன்.என் கையில் என் வண்டி சாவி இருந்தது.

"சார் இது உங்க சாவியா,கீழ கெடந்தது?!’’ மன்னித்து விடுங்கள், வேறு ஐடியா கைவசம் இல்லை!

அந்தப் பெண்ணைப் பார்த்தேன். நீங்கள் எப்போதாவது ஒரு பெண்ணைப் பார்க்க வேண்டும் என்பதற்காகப் பார்த்திருக்கி றீர்களா. அது மிகவும் கடினமானது. சைட் அடிப்பது, ரசிப்பது பற்றி எல்லாம் நான் சொல்லவில்லை.பார்க்க வேண்டும். அவ்வளவுதான்.பார்க்கவேண்டும், என்பதற்காகப் பார்ப்பது. அப்படித்தான் அந்தப் பெண்ணையும் பார்த்தேன்.

கயல்விழி மிக மாடர்னாக இருந்தாள்.

ஏதோ தவறாகத் தெரிகிறது.

“இல்லை சார், என் சாவி இல்லை. வாட்ச்மேன்ட்ட கேளுங்க.’’

உதட்டைப் பார்த்தேன். இவன் ஏன் நம்மை இப்படிப் பார்க்கிறான் என்று நினைத்தபடி அவள் என்னைப் பார்த்து முறைத்தாள்.

உதட்டின்கீழ் கருப்பு மச்சம் இல்லை.

இவன் ஒருவேளை வேறு யாராவது கூட ஷாப்பிங் வந்திருக்கலாமே !

“கிஸ்ஸி, கம் ஆன், லெட்ஸ் கோ, இப்பவே டென் தர்ட்டி ஆகிடுச்சு” அது கிஸ்ஸி; கே சவுண்ட் அல்ல ஜி சவுண்ட்.

கிஸ்ஸியா, அவிச்சிக்கே இன்னும் எனக்கு அர்த்தம் புரியல. அதுக்குள்ள கிஸ்ஸியா!

அந்தப் பெண்ணும் வண்டியில் ஏறி உட்கார்ந்து அவன் இடுப்பை கெட்டியாகப் பிடித்தாள். அவள் பிடியின் அழுத்தம் என்னுடைய முந்தைய எண்ணத்தை மாற்றியது.

நானும் இந்தக் கால இளைஞன்தானே! எனக்கு ஏன் இதெல்லாம் புரிவதே இல்லை! அவிச்சி, கிஸ்ஸி இதெல்லாம் என்னவென்று அர்த்தம் புரியாமலே அங்கிருந்து மெதுவாக நகர்ந்தேன்.

போன் அலறவே திரும்பிப் பார்த்தேன்.

அந்த இளைஞன் பேண்ட்டில் இருந்து போனை எடுத்து "ஹலோ" என்றான்.

நோக்கியா இப்போது சாம்சங்காக மாறி இருந்தது!

http://www.uyirmmai.com/contentdetails.aspx?cid=6454

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.